நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 29,780 
 
 

”டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?’

காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால், அடுத்தவனுக்கு இயற்கையிலேயே எழும் மகிழ்ச்சியை அந்த ட்ரிங்… ட்ரிங்… ட்ட்ட்ரிங்ங்… ட்ட்ட்ரிங்ங்… ட்ரிங்… ட்ரிங்… உணர்த்தியது.

எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இத்தனைக்கும் டி.ஆரால் தேடப்படுபவன் நான் அல்ல. என் அருகில் அமர்ந்திருக்கும் ரகு.

‘எதுக்குடா டி.ஆர். என்னையத் தேடுறாப்லயாம்?’ – லேசாகச் செருமிக்கொண்டே கேட்டான் ரகு. அந்த ‘எதுக்குடா?’-வில் லேசான பதற்றமும் ‘என்னைய’ என்பதில் அதிகப் பதற்றமும் நன்றாகவே தெரிந்தது.

‘பேசாம நாமளே நேர்ல போய் என்னா… எவ்வடமுண்டு – கேட்ருவோம் மாப்ள…’ என்று சொல்லும்போதே, அடுத்தவன் பிரச்னை என்றால் எவ்வளவு எளிதாக மாட்டிவிடுகிறோம் என்ற எண்ணம் எனக்குள் ஓடியது.

நானும் உந்தன் உறவை... நாடி வந்த பறவை!

டி.ஆர். கணேசனின் தந்தை பெயர் முத்து. அப்புறம் எப்படி டி.ஆர்.? ‘டி.ராஜேந்தர் மீதான அதீதப் பற்று’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாத ஒன்று அது. ஒருவன் தன் இனிஷியலையே மாற்றி வைத்துக்கொள்கிறான் என்பதைவிடவும் இதர விளக்கங்கள் தேவையற்றவை. ஆனால் கணேசன், தாடி வைத்துக்கொள்ளவில்லை. பளீரென மழித்த முகம். கையை வைத்து திருகித் திருகிக் கூரேற்றிய மீசை. ‘க்ராத்தே மாஸ்டர்’ என ‘க்’கை அழுத்திச் சொல்லவைக்கும் கட்டுடல். அதிகாலை, காலை, மாலை, என மூன்று பிரிவுகளில் கராத்தே வகுப்புகள். இடைப்பட்ட நேரத்தில், பஸ் ஸ்டாண்டில் பஸ் சுற்றிவரும் இடத்தில் வாகாக அமைந்த சாந்தினி சைக்கிள் கடையில், ஜமா சேர்த்து அமர்ந்திருப்பது என டி.ஆர்.கணேசனின் அன்றாடம் அமைதியாகக் கழியும். ஆனால், அவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அமைதியாகக் கழிவதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவே.

சைக்கிள் கடையில், தன் சொந்தச் செலவில் அசெம்ப்ளி செட்டும் ஸ்பீக்கரும் வாங்கி வைத்திருந்தார். ஆம்ப்ளிஃபயர் இத்யாதிகள் எல்லாம் வைத்து, ‘உயிருள்ளவரை உஷா’, ‘ஒரு தாயின் சபதம்’, ‘உறவைக்காத்த கிளி’… என டி.ராஜேந்தர் படப் பாடல்கள் மற்றும் ஒலிச்சித்திரக் கேசட்டுகளை, ஒன்று முடிய மற்றொன்று எனக் கேட்டுக்கொண்டிருப்பார்.

”நல்லா எண்ணிப்பாரு… தலைவன் டைட்டில் பூராம் ஒம்போது எழுத்துலதான் இருக்கும். ‘தாயின் சபதம்’னு வெக்கலாம்ல, ஆனா ‘ஒரு’ன்ற வார்த்தையை நேக்காப் போட்டு ஒம்போது எழுத்தாக்கிருவாப்புல… சும்மா ஒண்ணும் சினிமாவுக்கு வந்துருலடா. தலைவன், எம்.ஏ., தமிழ் தெரியும்ல. அப்பிடியே ரவ ரவையாப் பிரிச்சிருவாப்புல.

‘செம்மாந்த மலர்கள்
அண்ணாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்’ ”

– ஏதோ, தானே எழுதியதுபோல் வரிகளைச் சொல்லிவிட்டு, எதிரில் இருப்பவர்களைப் பார்த்து ”என்னா விழிகள்?” என்பார்.

‘காந்த’ என்று சரியாகச் சொல்லத் தெரியாமல் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். மனநிலையைப் பொறுத்து, லேசாகத் தலையில் தட்டுவதோ, ஓங்கி அடிப்பதோ நிகழும். அடிப்பதற்கான தார்மீகக் காரணமும் சொல்வார்.

‘தமிழ்டா… ஒருத்தன் அனுபவிச்சு உரிச்சுத் தர்றான். அதை ரசிக்கக்கூடத் தெரியலையேடா. உங்களுக்கு எல்லாம் ஈரோயினிய உரசிக்கிட்டு ஜங்கிடி ஜிங்கிடுனு கத்துனாத்தான் பாட்டு’ என்று சொல்லிக்கொண்டே வால்யூமைக் கூட்டிவைப்பார்.

டி.ஆர். நடித்த படத்தின் ஒலிச்சித்திரம் கேட்டுக்கொண்டிருக்கும் நெகிழ்வான பொழுதில் ‘தங்கச்சிக்குப் பொறந்த நாள் வருது. கைல காசு இல்லை. என்னத்தண்ணே வாழ்க்கை…’ என்று எவனாவது பிட்டு போடுவான். சட்டென பரோட்டா, சால்னா என சகலத்தையும் பார்சல் கட்டி கையில் தந்து, கூடவே 50 ரூபாயையும் கொடுத்து, ‘நதியா வளவி வாங்கிக் குடுடா. தங்கச்சிங்கிறது ரொம்ப முக்கியமான ஒறவுடா’ எனும்போது முகம் உணர்ச்சிப்பிழம்பாகக் கனிந்திருக்கும்!

அவருடன் இருக்கும் யாரும் சிகரெட், குடி போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. குறிப்பாக, பெண்களைக் கேலி செய்தல் அறவே கூடாது. அவர்கள் சம்மதம் இல்லாமல் காதல் கீதல் எனப் பின்னால் அலைவது குறித்த பிராது வந்தால், ‘கும்ஹே… கும்ஹே…’ என ‘க்ராத்தே’ அடியில் விட்டுத் திருப்பிவிடுவார். கராத்தே மொழியும் ‘தங்கச்சி’ பாச உணர்வெழுச்சியும் கலப்பதால், அடி ஒவ்வொன்றும் இடி போல விழும்!

நானும் ரகுவும் அவருடைய கராத்தே வகுப்புகள் நடக்கும் கொட்டகைக்குப் போனோம். கீற்றுக்கொட்டகை. மண் தரை. நடுநடுவே மூங்கில் கம்புகள். புரூஸ்லீ, ‘எனக்குள் ஒருவன்’ கமல், கணேசன் ஆகியோரின் ஆக்‌ஷன் படங்களுக்கு நடுவே பளீரெனச் சிரிக்கும் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்த டி.ராஜேந்தரின் புகைப்படம். அதற்குக் கீழ் செங்கல் திண்டில் வைக்கப்பட்டிருந்த மண்பானை. ஊதா நிற பிளாஸ்டிக் டம்ளர் என ஒவ்வொன்றாகப் பார்த்துத் திரும்பினால், ஒரு பெண் நின்றிருந்தாள்.

‘யாருங்க?’

‘டீ.ஆர். அண்ணன…’ என ரகு இழுக்க, அந்தப் பெண் முழித்தாள்.

நான் ‘கணேசன் மாஸ்டர்’ என்றதும் அவள், இதழோரத்தில் முகிழ்த்த சிரிப்பைச் சற்றே கடினப்பட்டு அடக்கிக்கொண்டு, ‘ஒன் நிமிட்’ என்று சொல்லிவிட்டு, சரேலெனப் பின்னால் திரும்பி நடந்ததில், அவள் நீண்ட ஜடை தட்டாமலை சுற்றியது.

நான் நிலைகொள்ளாமல், ‘யார்றா இது புது ஃபிகர்?’ என்றதும் ஏற்கெனவே பயம் கலந்த நிலையில் இருந்த ரகு, ‘சும்மா இர்றா’ என்று பல்லைக் கடித்தான்.

த்ரீ நிமிட்டில் வந்தவள், ‘மாமா, சைக்கிள் கடைல இருக்காம்…’ என்றாள்.

எங்கே இன்னும் ஓரிரண்டு நிமிடங்கள் அங்கே நின்றுவிடுவேனோ என்று பயந்த ரகு, ‘தேங்ஸ்ங்க’ என்று சொல்லிவிட்டு என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

‘ஏண்டா… ஏற்கெனவே நான் தரிசாகிக் கெடக்கிறேன். அவரு எதுக்குத் தேடுறாப்புலனு இப்பப் புரியுது’ என்று சொன்னவனை ஏற – இறங்கப் பார்த்ததும் மெதுவாகச் சொன்னான். ‘ந்தா இப்ப வந்துச்சுல்ல, இது. நேத்து பஸ் ஸ்டாண்டு பக்கம் போயிட்டு இருந்துச்சு. யாரோ புதுசா இருக்கேனு விசில் அடிச்சேன்; திரும்பிப் பார்த்தா. கண் அடிச்சேன் மாப்ள… அவ்வளவுதான். என்னத்தைச் சொன்னாளோ?’ என்றான். ‘கண் அடிக்கிறது ஒரு குத்தமாடா?’ அவன் குரலில் சுயகழிவிரக்கம் வழிந்தோடியது.

‘அய்யய்யோ, இன்னிக்கு, சனிக்கிழமை வேறயேடா, செயின் ஜெயபால் வசனத்தைக் கேப்பாப்புலயே…’ என்று சொன்னதும் சட்டென நின்றவனை, ‘வாடா… ‘என்ன’ன்னு கேப்போம்?’ என்று இழுத்துப்போனேன்.

சைக்கிள் கடை. டி.ஆர்.கணேசன், கண்களை மூடிப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘அவள் விழிகளில் ஒரு பழரசம்,
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்’ என்ற வரிகளுக்கு ஏற்ப அவரின் தலை அசைந்து கொடுத்தது. எதிரில் நிழல் ஆட, கண்களைத் திறந்தார்.

‘என்னடா ரகு, எப்பிடி இருக்கு ஒடம்பு?’ – அமைதியாகக் கேட்டார்.

‘இல்ல மாஸ்டர்…’ ரகு இழுத்தான்.

ஒரு நொடிதான். எப்போது எழுந்தார்? எப்படிக் குத்தினார் எனச் சுதாரிப்பதற்குள், ரகுவின் சில்லுமூக்கு உடைந்து ரத்தம் பொல பொலவெனக் கொட்டியது. ஏற்றிக் கட்டியிருந்த கைலியை, என் கைகள் தானாக இறக்கி விட்டன.

‘இன்னோரு தடவை ரோமியோ வேலை பார்த்த… தொலைச்சுருவேன்.’

‘சாரி மாஸ்டர்.’

”வேலையைத் தேடுங்கடானா, திண்ணையைத் தேச்சுக்கிட்டு பொண்ணுங்களைக் கேலி பண்றீங்களா?’ என அடியை முடிக்கும்போது பின்னணியில் ஒலித்த ‘சலங்கையிட்டாள் மாது…’ பாடலும் முடிந்தது!

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கும் மேலாக கண்ணில் படாமல் ரகு வீட்டுக்குள்ளேயே இருந்தான்.

சில விஷயங்களைப் பற்றி வெகு சிலரிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்ள முடியும். அப்போது அவர்களைப் பார்க்க முடியாமல் போனால், ‘என்னை எவனிடமாவது சொல்லி விடுதலை செய்’ என்பதுபோல் அழுத்தும். மூன்று வாரங்களில் எனக்கு நேர்ந்தது அப்படி அழுத்தியதால், ரகுவைத் தேடி அவன் வீட்டுக்கே போய்விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் மெதுவாக நடந்து பஸ் ஸ்டாண்டுப் பக்கமுள்ள டீக்கடையில் போய் நின்றோம். அப்போது ஒன்றும் கேட்காமல் அவன் மூக்கைப் பார்த்தேன். ‘பரவால்ல மாப்ள. தெருவுல யார்கிட்டயும் சொல்லிறாதடா’ என்றான்.

டீ கிளாஸின் அடியை அங்கிருந்த திண்டில் துடைத்து, சுழற்றியதில் குழிவாகச் சுழன்று ஆறியது. உறிஞ்சிக்கொண்டே அழுத்திக்கொண்டிருந்த விஷயத்தைச் சொன்னேன்.

‘அன்னிக்குப் போனோம்ல… அந்தப் பொண்ண அப்புறம் தியேட்டர்ல பார்த்தேன் மாப்ள. பப்ஸும் முட்டைப் போண்டாவும் வாங்கிட்டு இருந்தேன். ‘எங்களுக்கெல்லாம் இல்லையா?’னு சைகைல கேட்டு சீனைப் போட்டுச்சு…’

ரகு, டீ குடிப்பதை நிறுத்திவிட்டான். ‘யார்ரா? என்னடா சொல்ற?’

அவனை ஆசுவாசப்படுத்தி மெதுவாக விவரித்தேன். ரகுவை, கணேசன் அடித்த சம்பவம் நடந்த மறுநாள் பஸ்ஸில் அவளைப் பார்த்து, படியில் நின்று சாகஸம் செய்து அவளைச் சிரிக்கவைத்தது, பிரதோஷம் அன்று சிவன் கோயில் கூட்டத்தில் தனியாக நிறுத்திப் பேசியது, சைகையில் பேச ஆரம்பித்தது, நீண்ட கூந்தலுக்கு ஏற்ப குஞ்சலம் வாங்கிக்கொடுத்தது… என ஒவ்வொன்றாக விளக்கினேன்.

அவள் பெயர் சேதுமதி என்றதும் ‘ஹுக்கும்’ என்றான்.

‘விசில் அடிச்சதுக்கே மூக்கைப் பேத்துட்டாண்டா… செத்தடி, தீவாளிக்கு வெடிக்கிற வெடி கணக்கா உன்னைய வெடிக்கப் போறான்’ என்றான் ரகு.

‘ம்… செமயா இருந்தாளா… எதையுமே யோசிக்கல. உம் மூக்கைப் பார்க்கப் பார்க்கத்தாண்டா பயமே வருது. டி.ஆரோட அத்தை மகளாம். இன்னும் ரெண்டு வருஷம் நம்மூர்லதான் இருப்பாளாம்.’

‘அப்ப, ரெண்டு வருஷத்துக்கு நீ வேற ஊருக்குப் போயிரு’ என்றான் காலி டீக் கிளாஸை வைத்துக்கொண்டே.

அப்போது பார்த்துதான் சேதுமதி, எங்களைக் கடந்து செம்மண் சந்து பக்கமாகப் போய்க்கொண்டிருந்தாள். கையில் பூக்கூடை. ஒரு நிமிடம் சுதாரித்து, ரகுவைக் கத்தரித்துவிட்டு, (டேலேய், டீக்காசைக் குடுத்துட்டுப் போடா!) ஒத்தக்கல்லு சந்து வழியாகக் குறுக்காக ஓடி, செம்மண் சந்தின் மறுமுனையை நான் அடையவும், அவள் அங்கு வரவும் சரியாக இருந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் சந்தில் இருந்து வெளியேறி கோயில் தெருவுக்குள் நுழைந்திருப்பாள்.

ஏற்கெனவே கைலியைத் தூக்கிக் கட்டி இருந்ததை மறந்து, வெறும் காலை மேல் நோக்கி கைலியை எழுப்பும் பொருட்டு உதைத்ததில் என் பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்திருக்கும் அவளுக்கு.

‘என்ன?’ என்பதுபோல் புருவங்களை மின்னல் வெட்டினாள்.

‘சு…ம்மா. கோயிலுக்கா?’

‘ஆங்… கொளத்துக்கு. இந்தப் பக்கம் வேற எங்ஙன போறதாம்?’

‘எப்பவும் இப்பிடிப் பாவாடை தாவணிலதான் இருப்பீங்களா?

”நாளைக்கி வேணா… கைலி கட்டிட்டு வரட்டுமா?, பொம்பளப்பிள்ள தாவணி போடாம என்னத்தைப் போடுமாம்? கேள்வியப் பாரு…’

ம்ஹும். இவளிடம் சரணாகதி அடைவதே வழி என முடிவெடுத்து அவளையே பார்க்க..

‘லேட் ஆகுது… டென் நிமிட்ல வீட்டுக்குப் போகணும்’ என்றாள்.

சட்டென சந்தின் ஒருபக்கச் சுவற்றில் உரசி நின்று வழிவிட்டேன். கடக்கும்போது, ‘அதான் டென் நிமிட் இருக்குனு சொன்னேன்ல… லூஸு’ என்று சொல்லிச் சிரித்துப் போனாள். போகும்போது அவள் ஜடையைச் சுழற்றி என் முதுகில் அடித்தாள் என்றே நினைக்கிறேன்.

அதன் பிறகு ரகு என்னிடம் தொலைவைப் பராமரித்தான். தனியாக இருக்கும்போது டி.ஆரின் கராத்தே அடிகளுக்குப் பயந்தாலும் அவளைப் பார்க்கும்போதும், அவள் சிரிக்கும்போதும் பயம் விலகிக் காதல் கண்ணைக் கட்டத் தொடங்கியது.

அப்போதுதான் அது நடந்தது.

எனக்கு திருச்சியில் ‘ரெப்பு’ வேலை கிடைத்த தகவலைச் சொல்லி, ஒரு வாரத்தில் மதுரையில் இருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்றும், அது குறித்துப் பேச வேண்டும் என்றதும், ‘யாரும் இல்லை’ என என்னை வீட்டுப்பக்கம் வரச் சொல்லியிருந்தாள்.

கராத்தே குடில்; மண்பானைத் திண்டில் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிரே பிரகாரச் சிலை போல் நின்றிருந்தாள். என் தலைமுடியை ஒருமுறை கோதிவிட்டு, ‘சாருக்கு வேலை கெடச்சுருச்சு, அடுத்து கல்யாணந்தான்’ என்று கண் சிமிட்டினாள். அவள் விரல்கள் தலைமுடியைக் கோதிவிட்டதும், அவ்வளவு அருகில் அவள் நின்றதும், கூந்தலில் இருந்து வந்த தேங்காய் எண்ணெய் வாசமும் கலந்து கிறங்கிப்போய் அவளை அணைக்…

மண்பானை உடைந்து நொறுங்கியது. பத்தடியில் டி.ஆர். நின்றிருக்க, சரேலென ஓடி மறைந்தாள் சேதுமதி.

எங்கு இருந்துதான் எனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. ஒரே ஓட்டம். கட்டாந்தரை, பட்டியக்கல் என எதிர்ப்பட்ட சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து விழுந்து, எழுந்து, வேகமாக வந்த பஸ்ஸை மறித்து ஏறிவிட்டேன்.

கையில் இருந்த 70 காசுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரை போய்விடலாம். அங்கு காம்ப்ளெக்ஸில் டிராவல்ஸ் வைத்திருக்கும் பாலாவிடம் தஞ்சம் புகுந்துகொள்ளலாம்.

பாலாவின் பத்துக்குப் பத்து அலுவலக அறை, அப்போதைய சூழலில் மிகுந்த பாதுகாப்பு உணர்வைத் தந்தது. முதல் நாள் அவனிடம் எதுவும் சொல்லாமல் சமாளித்தாலும் இரவு அங்கேயே நான் தங்கியது அவனுக்கு உறுத்தியதால் நடந்ததைச் சொல்லிவிட்டேன்.

‘என்னடா பங்காளி சொல்ற? பயலுகளைக் கூட்டிப்போய் செதறவிட்ருவமா? ‘ம்’னு மட்டும் சொல்லு… வகுந்துருவோம். சும்மா டி.ஆரு… எம்.ஜி.யாருன்னு ஜிகினா விடுற!’

அவனிடம், ‘ம்’ மட்டும் இல்லை, ‘டேய்… அடிக்கச் சொல்லுடா’ எனக் கதறினாலும், அவனை நம்பி எவனும் வரமாட்டார்கள். ஆனாலும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இந்த நொடி வரை ‘ம்’னு சொல்லுவை மட்டும் அவன் விடவே இல்லை.

டிக்கெட் புக்கிங்களை எழுதுவது, பத்து மணி பஸ்ஸுக்கு ஏழு மணிக்கே திட்டுத்திட்டாகப் பவுடர் அப்பி, மனைவி சகிதம் வந்து, ‘இந்தப் பேக்கை எங்க வெக்க? எப்ப வரும்? இந்த பஸ்ஸா, அந்தா அந்தப் பஸ்ஸா?, காலைல வெள்ளெனப் போயிருவீங்க இல்ல?’ என குடைந்து எடுக்கும் குரூப்புகளைச் சமாளிப்பது போன்ற உதவிகளைச் செய்ததில் அவனுக்கும் மகிழ்ச்சியே.

மூன்று நாட்கள் ஆகிவிட்டன என்பதே பாலா, சொல்லித்தான் தெரிந்தது. ஒரே ஒருமுறை காம்ப்ளெக்ஸ் கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது சேதுமதி சிரிப்பு நினைவுக்கு வந்தது. அந்த நொடியே பக்கத்துக் கடையான ‘கீஷ்டு கானம்’ எனும் கேசட் கடையில் இருந்து வந்த ‘நானும் உந்தன் உறவை…’ அலறல், டி.ஆர்.கணேசனின் ‘குமுஹே’வை நினைவுபடுத்தி, அன்று முழுதும் படுத்தி எடுத்துவிட்டது.

‘ஊரில் என்ன நடக்கிறது?’ என மனம் பாடாய்ப்பட, போன் செய்து தங்கையிடம் விவரம் கேட்கலாம் என்றால், ஒவ்வொரு முறையும், அப்பாவே ரிசீவரை எடுத்து ‘அலோவ்வ்வ்வ்…’ என முழங்க, ‘டொக்… டொக்’ என வைத்துக்கொண்டிருந்தேன்.

ரகுவின் வீட்டுக்குப் போன் செய்தால், அவன் அம்மா எடுத்து, நான் என்று தெரிந்ததும் ‘எடுபட்ட பயலே… உன்னால எங்க ரகுவைப் போட்டு அந்த முண்டப்பய அந்த அடி அடிச்சுக் கையை ஒடச்சுப்புட்டான். நீ எங்கடா தொலஞ்ச?’ டொக். அவ்வளவுதான். நான் அஸ்தமனம் ஆகிவிட்டேன்.

”ஒங்கூட இருந்தவனையே இந்த அடி அடிச்சிருக்கானா? உன்னை ட்டாரா வகுந்துருவான் போலயே மாப்ள, ‘ம்’னு ஒருவார்த்த சொல்லு… நம்ம ஏறிச் செஞ்சுருவோம்.’

பாலாவிடம் பிடித்த விஷயங்களில் ஒன்று, எதிராளி அவனை மதிக்கிறார்களோ இல்லையோ, பேசிக்கொண்டே இருப்பான்.

நடுவில் ஒரே ஒருமுறை அம்மா போனை எடுத்து, ‘ஏண்டா அந்த கே.ஆர்.விஜயாவோ யாரோ, அவன் வந்து வந்து கேட்டுட்டே இருக்கானேடா… நீ ட்ரெய்னிங் முடிச்சுட்டு எப்போத்தான் வருவே?’ என்றாள். பரிதாபமாக இருந்தது, என்னை நினைத்து.

அப்படி இப்படி என ஒரு வாரம் ஆகி இருந்தது.

லேசாக வளர்ந்த தாடியைப் பார்த்துக் கொண்டே பாலா கேட்டான். ‘மாப்ள இன்னும் எத்தனை நாள்டா? எவன்டா அப்பிடிப் பெரிய டி.ஆர்? ‘ம்’னு சொல்லு மாப்ள.’

-சொல்லிவிட்டு கையில் இருக்கும் ரெனால்ட்ஸ் பேனாவைக்கொண்டு மேஜையில் ஒரே தாள லயத்தில் தட்டினான்.

அடுத்தவனுக்குப் பிரச்னை என்றால் தாளம் வந்துவிடும் போலிருக்கிறது.

‘இல்ல மாப்ள. மெதுவாப் போய்க்கிறேன்.’

பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் நேராக உள்ளே வர, பயந்துவிட்டேன்.

‘ ‘உறவைக்காத்த கிளி’ கேசட் இருக்காண்ணே…’ அவர் கேட்டதும் எதுவோ அடிவயிற்றைப் பிடித்துக் கவ்வியது!

‘ஹலோ… கேசட் கடை பக்கத்துல, இது டிராவல்ஸ்…’ என்ற பாலாவைப் பார்த்து ஏதோ முணங்கிக்கொண்டே போனான்.

‘ ‘அரண்டவன் கண்ணுக்கு’ கதையா எவனாச்சும் படத்தைக் கேட்டாலே பம்முறயேடா… இதுல உனக்கெல்லாம் ஜாரி, அதுல லவ்ஸ் வேற’ மீண்டும் ரெனால்ட்ஸ் தாளம்.

அன்று மாலை சூடான பருத்திப் பாலைக் குடித்துக்கொண்டிருக்கும்போது ரகு, என்னை நோக்கி வந்துகொண்டிருந்தான். கையில் மாவுக்கட்டுப் போட்டு தொட்டில் தொங்கவிட்டிருந்தான். ‘அய்யோ பாவம்’ என்று நினைத்தாலும், அவனைப் பார்த்தது இதமாக இருந்தது. அப்போதைய தேவையாகவும் இருந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே இடி போல இறங்கியது. ஆம், ரகுவுக்குப் பின்னால் டி.ஆர். கணேசன் அண்ட் கோ. ரகுதான் அவர்களை என்னை நோக்கி வழிசெலுத்திக்கொண்டிருந்தான்.

ஓடவோ, ஒதுங்கவோ முடியாத இடம். சரி. இன்றோடு முடிந்தோம். எவ்வளவு அடித்தாலும் திருப்பி அடிக்காமல் நின்றால் விட்டுவிடுவார்கள். எப்படியும் வேலை திருச்சியில்தான். அதைச் சொல்லி ஊர்ப்பக்கமே தலை வைத்துப் படுக்காமல் இருந்துவிடலாம் என மனம் நினைத்துக்கொண்டிருக்க… பாலாவோ, ‘அந்தா மீசைய முறுக்கிக்கிட்டே வர்றானே அவந்தான, விடு மாப்ள, ‘ம்’னு சொல்லு வகுந்துருவோம்’ என்றதும் ”வாயை வெச்சுகிட்டு சும்மா இர்றா” என்றேன்.

எங்களைச் சமீபித்து நின்றார்கள்.

‘எங்கல்லாம்டா தேடுறது. நல்லவேளை, சிவக்குமார்தான் உன்னையை இங்ஙன பார்த்ததாச் சொன்னான். அதான் மாஸ்டரைக் கூட்டியாந்தேன்’ என்றான் ரகு. அப்போது அவன் முகம் உலகில் அவனைவிட நல்லவர்கள் யாருமே இருக்க முடியாது என்பது போல இருந்தது.

என் தோளை இறுகப் பற்றிய டி.ஆர்.கணேசன், ஒருமுறை வானத்தைப் பார்த்துவிட்டு என் முகத்தைப் பார்த்தார். பின் மீண்டும் வானத்தைப் பார்த்துக்கொண்டே, ‘சேதுமதிக்கு உன்னையைப் பிடிச்சிருக்காம். அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. நல்லவிதமாப் பார்த்துக்க.’

சொல்லிவிட்டு ஒருமுறை தரையைப் பார்த்தார். அப்போது…

‘பொன்னான மனசே பூவான மனசே
வெக்காத பொண்ணு மேல ஆச’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் சட்டெனத் தன் முடியைச் சிலுப்பி அந்தக் கேசட் கடையைப் பார்த்தார். பின் விறுவிறுவென அந்தக் கடையை நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தார் டி.ஆர்.கணேசன் அண்ணன்.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

1 thought on “நானும் உந்தன் உறவை… நாடி வந்த பறவை!

  1. வணக்கம்.
    இயல்பான கதை,அற்புதம்.
    கேசவன்ஸ்ரீனிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *