கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,669 
 
 

நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

‘முப்பது ஆண்டுகள்’ என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்றுவிடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துடன் தமிழர்களின் விடுதலைப் போரை அக்குவேறு ஆணி வேறாய் அலசுபவர்கள் ‘முப்பது ஆண்டுக் கால’ சாதனைகளையும் வேதனைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.

அதைவிட முக்கியமானது; இந்த வீரநாயகன் கொல்லப்படும்போது அவனுக்கு முப்பது வயது நிறைந்திருந்தது. ஆகவே மேலும் முப்பது ஆண்டுகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது. அதாவது அறுபது ஆண்டுக் கால வரலாற்றினூடாக நாம் பயணம் செய்யப்போகிறோம். இந்த அழகிய சிறு மரகதத் தீவின் வரலாற்றை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து எழுதுபவர்கள், ‘அறுபது ஆண்டுக் காலம்’ என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஆராய்வார்கள்.

அறுபது ஆண்டுகளுக்குச் சற்று முன்னராக எமக்குச் சுதந்திரம் கிடைத்ததாம். அதுவும் வெள்ளைக்காரன் பாரத மாதாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும்போது பக்கத்திலிருக்கும் இந்தச் சுண்டைக்காய் நாட்டுக்கும் வஞ்சகம் செய்யாமல் அதிலே கொஞ்சம் கிள்ளிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.

எம் வீரநாயகன் பள்ளிக்கூடத்தில் தன் சரித்திர ஆசிரியரைக் கேட்ட ஒரு ‘மோட்டுக் கேள்வியை’ இப்போது உங்களிடம் சொல்ல வேண்டும். சுதந்திரமடைந்த நாட்டில் பிறந்த ஒருவனுக்குக் கேள்வி கேட்பதிலும் அதற்குரிய மிகச் சரியான பதிலைப் பெற்றுக்கொள்வதிலும் உள்ள பற்றுறுதியைத் தெரிந்துகொள்ளும் உரிமையை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

“சேர், அப்ப மற்ற வளமாப் பார்த்தால் இந்தியாவைப் பிடிச்ச படியால்தான் எங்கடை நாட்டையும் வெள்ளைக்காரங்கள் பிடிச்சவங்களோ?’’

இப்போது உள்ள விஷயம் தெரிந்த அரசியல் அறிஞர்கள் போல அப்போது எவரும் இருக்கவில்லை. புவிசார் அரசியல் போன்ற புத்திஜீவித்தனமான பெரிய பெரிய விஷயங்கள் ஒருவருக்கும் புரியாத காலம் அது.

காந்தி சுட்டுக் கொலைசெய்யப்பட்டுச் சரியாகப் பத்து ஆண்டுகள் கழிந்திருந்தன.

‘ரகுபதி ராகவ ராஜாராம்…’ என்னும் உருக்கமான பாடல் ஆகாஷ வாணியில் அடிக்கடி ஒலிபரப்பான காலம்.

நேருவும் இந்திரா பிரியதர்சினியும் எமது நாட்டுக்கு விஜயம் செய்து சில ஆண்டுகள் கழிந்திருந்த காலம்.

இந்தியா என்றாலே எல்லோருக்கும் பக்தி, மரியாதை, ஒரு ‘இது’…

எனினும் நமது வீரநாயகன் சரித்திர ஆசிரியருக்கு அஹிம்சையில் நம்பிக்கை குறைவு என்பதை அந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம் ஐயந்திரிபறப் புரிந்துகொண்டான். அந்தப் புரிதல் அவனை ‘வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும்’ என்ற தர்க்கரீதியான அடுத்த தளத்துக்கு இட்டுச்சென்றது. அப்போது அவனுக்கு வயது பத்து.

அந்தப் புரிதலுக்கு அவனை இட்டுச்சென்றதில் அவனுடன் கூடப்படித்த ஒரு பெண்ணுக்கும் அவளது சிரிப்புக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. நம் வீரநாயகன் சரித்திர ஆசிரியரைக் கேள்வி கேட்ட பொழுதும் அவர் அவனுக்குப் புளியம் மிளாறால் பதிலிறுக்கும் போதும் பதிலுக்கு அவன் அவர் வயிற்றில் தலையால் மோதிவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியே பாய்ந்தபோதும் ‘களுக்’ என அவள் நளினமாகச் சிரித்தாள்.

பெண்கள் எப்போது எதற்குச் சிரிப்பார்கள், எப்போது எதற்கு அழுவார்கள் என்று யாருக்குத்தான் தெரியும்?

இந்த இடத்தில் நமது வீரநாயகனையும், ‘களுக்’ என்று நளினமாகச் சிரித்த அந்தப் பெண்ணையும் முறைப்படி அறிமுகம் செய்துகொள்வது நல்லது.

அவன் பெயர் சிவஞான சோதிலிங்கம். பள்ளிக்கூடத்திலிருந்து சரியாக ஐந்து வீடுகளுக்கு அப்பால் அவனது வீடு இருந்தது. கற்கள் துருத்தித் தெரியும் தார் கரைந்து போயிருக்கிற ரோடு முழங்கைத் திரும்பல் வடிவில் அவனது வீட்டைச் சுற்றிக்கொண்டு போகும். ரோட்டில் போகும் எவருக்கும் அழகான சிமெந்துத் தூண்கள் சில, ஓட்டுக்கூரையை ஏந்துவது தெரியும். சிறிய, இரண்டறைக் கல் வீடு. கொஞ்சம் விசாலமான விறாந்தை, வளவைச் சுற்றி எப்போதும் சிதிலமடைந்திருக்கும் கிடுகு வேலி.

அவளது பெயர் நாகராணி. சிவஞான சோதிலிங்கத்தின் வீட்டிலிருந்து சரியாகப் பதினைந்து வீடுகளுக்கு அப்பால் அவளது குளுமையான வீடு இருந்தது. அவள் வீட்டுக்குப் போவதற்கு மரங்கள் வரிசையாக நிழல் தரும் ஒடுங்கிய ஒழுங்கைக்குள் திரும்ப வேண்டும். பாதங்கள் புதையும்வண்ணம் சொரசொரவென்ற மணல் நிறைந்திருக்கிற அந்த ஒழுங்கையில் எப்போது பார்த்தாலும் இரட்டை வரிகளாக மாட்டுவண்டி போன சுவடு தெரியும். அடுத்தடுத்து அமைந்திருந்த மூன்று பனை ஓலைக் குடிசைகள் சேர்ந்ததுதான் அவளது வீடு. பெரிய வளவின் முற்றம் முழுவதும் நிறைந்திருக்கும் மணல், ஒழுங்காக அழகாகப் பனை ஓலைகளால் அடைக்கப்பட்டிருக்கும் வேலி.

எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஒழுங்கைகள் எல்லாம் தார் ரோட்டில் போய் ஏறுகின்றன. ரோடு மர்மமான வளைவு நெளிவுகளுடன் போய் ஒரு நாற்சந்தியில் கலக்கிறது. அந்த நாற்சந்தியில் பஸ் நிலையம், பஸ் நிலையத்தின் சந்தடியில் காதைப் பொத்திக்கொண்டு கூசி நிற்கும் சின்னஞ்சிறு கடைகள், பஸ் நிலையத்திலிருந்து நான்கு புறமும் புறப்பட்டுப் போகும் தார் ரோடுகளின் இரு மருங்கும் நெருக்கியடித்துக்கொண்டு வரிசை வரிசையாக மேலும் கடைகள், தினமும் கூடும் கலகலப்பான சந்தை, பெற்றோல் ஷெட், அதிகாரப் பரவலாக்கலின் அடையாளச் சின்னங்களான பொலிஸ் நிலையம், தபால் கந்தோர், பட்டின சபைக் கட்டடம், கூட்டுறவுச் சங்கக் கடை, இத்யாதி.

இந்தக் கதைக்கு அவசியம் என்பதால் நாகராணிக்கு இரண்டு தம்பிகள் இருந்தார்கள் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும்.

அவர்களும் அந்தப் பள்ளிக் கூடத்தில்தான் படித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த ஊரில் பிறந்த அனைவரும் படித்த பள்ளிக்கூடம் அது. ஊரவர் எல்லோரது செவிகளிலும் அந்தப் பள்ளிக்கூடத்தின் மணியோசை ஆயுள் முழுக்க நிறைந்திருக்கும். இரும்புத் தண்டவாளத் துண்டு ஒன்றில் சிறிய தடித்த இரும்பு உலக்கையால் ‘கண கண கண’ என்று வெகுதூரத்துக்குக் கேட்கும்வண்ணம் யாராவது ஓங்கி அடிப்பார்கள்.

எல்லா ஊர்களையும் போலவே இந்த ஊரிலும் நிறையக் கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான ஓசை பெருக்கும் காண்டாமணிகள். கோயில் மணி ஓசைகளுக்கும் பள்ளிக்கூட மணியோசைகளுக்கும் இடையே வாழ்க்கை அழகாகவும் அமைதியாகவும் ஓடிச் சென்றுகொண்டிருந்த காலம் அது.

ஒழுங்கைகளில் தோன்றி தார் ரோடு வழியாக ஓடிச் செல்லும் வாழ்க்கை. நாற்சந்தியில் நின்று ஒரு பெருமூச்சு எறிந்துவிட்டு, ஊரைப் பிரிந்து, பஸ் ஏறிக் கொழும்புக்குப் போய்க்கொண்டிருந்த காலம் அது.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த மணியோசைகளுடன் சோதியின் சைக்கிள் மணியின் ஓசையும் சேர்ந்துகொண்டது. பள்ளிக்கூடத்தையும் பெண்களையும் தாண்டிச் செல்லும்போது ‘கிணிங் கிணிங்’ எனத் தவறாமல் மணி அடிப்பது சோதியின் வழக்கம்.

ஆனால் ‘சோதியின் சைக்கிள்’ என்பது அடையாளமும் மரியாதையும் கருதிச் சொல்லப்படும் வார்த்தை. அந்தச் சைக்கிளின் உண்மையான சொந்தக்காரன் யார் என்பது சோதிக்குக்கூடத் தெரியாது. ‘அடோ’ என்று மட்டும் தமிழில் பேசத் தெரிந்த போலிஸ்காரர்களுக்கும் தெரியாது. யாராவது சோதிக்கு எதிராகப் போலிஸில் முறைப்பாடு செய்யத் துணிவார்களா?

சந்தியில் நிற்பாட்டியிருக்கும் எந்தவொரு சைக்கிளையும் கேட்டுக் கேள்வியற்று ஓட்டிச் சென்றுவிடுகிற ‘ஏகப் பிரதிநிதித்துவ’ உரிமையை சோதி பெற்றுக்கொண்டு நிறைய நாட்கள் ஆயிற்று.

அவனது டெரிலீன் சேர்ட்டின் பொக்கெற்றில் எப்போதும் வெளியே தெரியும்படி பண நோட்டுக்கள் இருக்கும். சந்தைக்குத் தமது விளை பொருட்களை விற்க வந்தவர்கள், ரியூட்டரிகளுக்குப் படிக்கவென வந்து சந்தியில் நின்று அரட்டையடித்த மாணவர்கள், வெளியூரிலிருந்து வந்தவர்கள். யாரோ தனியாக அவனிடம் மாட்டிக்கொண்டார்கள் என்பது அதன் பொருள்.

சோதியைப் போல இன்னும் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். அடிக்கடி அவர்களுக்கிடையே சந்தியில் சண்டை நடக்கும். பெரும்பாலும் சோதி வென்றுவிடுவான். ஆனாலும் அவன் தோற்றுப்போன சில சந்தர்ப்பங்களும் உண்டு. அவற்றில் இரண்டு இந்தக் கதைக்கு மிகவும் முக்கியமானவை.

பள்ளிக்கூட வெளிவாசலை ஒட்டினாற்போலச் சற்றுத் தள்ளிப் பொதுத் தண்ணீர்க் குழாய் இருக்கிறது. சோதிக்குக் குளித்து முழுகுவதில் மிகவும் விருப்பம். சண்டை போடாத சமயத்தையும் சாராய வெறி தலைக்கேறாத சந்தர்ப்பங்களையும் தவிர மிகுதி நேரங்களில் எல்லாம் மிகுந்த சுத்தமாகவும் அமைதியாகவும் காணப்படுவான். அவன் எவருடனும் பேசுவது கிடையாது. அவனுக்கு உற்ற நண்பர்கள் என எவரும் இல்லை.

பல நாட்களில் பள்ளிக்கூடம் தொடங்கும் சமயத்தில் அந்தக் குழாயில் இரண்டு வாளிகளை மாறி மாறி வைத்துத் தண்ணீர் நிரப்பித் தலையில் ஊற்றி ஊற்றி நெடுநேரம் முழுகிக்கொண்டிருப்பான். இடையில் சிறு வெள்ளைத் துண்டு. கட்டுமஸ்தான உறுதியான உடல் முழுவதும் மெல்ல வழிகின்ற முத்து முத்தான தண்ணீர்த் திவலைகள், செழுமையான சோப்பு நுரை, நெடுநேரம் பச்சைத் தண்ணீரில் நீராடுவதனால் சிவந்துபோகும் கண்கள், ‘கர்ரர்’ எனக் காறி உமிழும் ஓசை என சோதி கோலாகலமாக நீராடுவான். அழுக்குப் போகவென உடலை அழுத்தித் தேய்ப்பான். ஒரு காலைத் தூக்கி குழாயின் மீது வசதியாக வைத்துக்கொண்டு ஆபாசம் வெளித் தெரியத் தெரியத் தேய்ப்பான். ஆனாலும் பெண் பிள்ளைகள் வரும் சமயம் பார்த்து அவனது கால்களில் அழுக்கு அதிகரித்துவிடுவதுதான் விசித்திரம்!

ஒரு நாள் அவன் தன்னை மறந்து நீராடியபோது ‘சடார்..’ என்று பெல்ட்டினால் ஒரு அடி விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் தொடர்ந்து அடிகள். சோதி வாளிகளைத் தூக்கிக்கொண்டு ஓடியவாறே திரும்பிப் பார்த்தான். கோபத்தால் உடல் முழுவதும் சிவந்து பதற, பாம்பெனக் கையில் பெல்ட் நெளிய, ருத்ர மூர்த்தியாய் இங்க்லீஷ் சேர் நின்றுகொண்டிருந்தார்.

ஆனாலும் மோதலில் ஈடுபட்ட தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் விருந்துபசாரங்களில் ஈடுபடுவதும் வழக்கம் என்ற உலக நியதிப்படி சில நாட்களின் பின்னர், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியில் ஒரு கச்சேரி நடந்தது!

இங்க்லீஷ் சேர் கை தட்டித் தட்டி உற்சாகப்படுத்த, சோதி ஆனந்த நடனம் ஆடினான். ஒரு கையால் சாறனை தொடை தெரிய உயர்த்திப் பிடித்தபடி, கைகளால் தாளலயத்துடன் சொடக்குப் போட்டபடி, பிருஷ்டத்தை நெளித்து நெளித்து ஆடினான். இரண்டு பேருக்கும் கண்மண் தெரியாத வெறி. இறுதியில் இங்க்லீஷ் சேர் தனது சேர்ட்டைக் கழற்றி வானில் வீசிக் கச்சேரியை நிறைவு செய்தார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஊர் இளைஞர்களுக்கு ஆதர்ஸ புருஷர்களாய் விளங்கிய காலம் அது. பள்ளிக்கூடத்துக்கு முன்னே பரந்திருந்த சிறு வயல்வெளியில் ஒரே சமயத்தில் நான்கைந்து குழுக்கள் அக்கம் பக்கமாக, காலையிலிருந்து பொழுது மங்கும்வரை கிரிக்கெட் விளையாடும்.

சோதிக்குப் பொதுக் குழாயில் நீராடும் ‘அடிப்படை உரிமை’ மறுக்கப்பட்ட பின்னர் அவன் வயல்வெளிக்குப் பின்னால் இருந்த தோட்டக் கிணறுகளில் நீராடத் தலைப்பட்டான். நீராடும் நேரத்தையும் மாலை நேரமாக மாற்றியமைத்தான். கிரிக்கெட் விளையாடுபவர்களை அவன் கண்டுகொள்வதே இல்லை. கிறீஸிற்குள் புகுந்து திமிர்த்தனமாக நடந்துபோவான்.

ஒரு நாள் அவன் நீராடித் திரும்புகையில் ஒரு பெரிய மண்ணாங் கட்டி விசையாக வந்து அவன் முதுகில் விழுந்தது.

‘ஆரடா அவன். .?’

எதிரி ஒருவனாக இருந்தால் சோதி பின்வாங்குபவனல்ல. ஆனால் எட்டுப் பத்து கிரிக்கெட் துடுப்புகளும் ஸ்டம்ப்புகளாக பாவனை செய்யப்பட்ட டசின் கணக்கான பொல்லுகளும் ஏந்தியபடி ஏராளமான இளைஞர்கள் அவனை நோக்கி உறுதியாக, ஆனால் மெதுவாக முன்னேறிச் சுற்றி வளைத்துத் தாக்குதல் தொடுக்க ஆயத்தமாவதைக் கண்டான். எதிரி ஆட்பலம், ஆயுத பலம் ஆகியவற்றில் அபரிமித மேலாண்மையுடன், அவனுக்குச் சாதகமான கள முனைகளில் முன்னேறும்போதுதான் வெற்றிகரமாக இழப்புகளின்றிப் பின்வாங்க வேண்டும் என்ற அடிப்படை இராணுவ அறிவுகூட அற்றவனல்ல சோதி…!

எனவே வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி ரோடில் ஏறினான். மாலை வெயில் மஞ்சளாக விழுந்துகொண்டிருந்தது. அப்போது நாகராணி எதிரே வந்து கொண்டிருந்தாள். மஞ்சள் வெயிலில் மினுங்கியபடி தேவதைபோல மெல்ல ஆடி அசைந்து நடந்து வந்து கொண்டிருந்த நாகராணி, இந்தத் தடவையும் அவனைப் பார்த்து ‘களுக்’ என நளினமாகச் சிரித்தாள். அது மட்டுமல்லாமல் பரந்த நெஞ்சு விம்மி விரிய மூச்சு வாங்கிக்கொண்டிருந்த அவனை ஆசை பொங்க ஓரக் கண்ணால் பார்த்தாள்.

அதற்குப் பிறகு ஊரில் வதந்திகள் பலவாறாகப் பல்கிப் பெருகின. சோதி நாகராணி வீட்டு ஒழுங்கைக்குள்ளே அடிக்கடி சைக்கிளில் திரிகிறான் என்றும் அவளது வீட்டுக்கு முன்னால் நடுநிசி வேளைகளிலும் சைக்கிள் மணி கிண்கிணி நாதமெனக் கேட்கின்றதென்றும் அவர்களை ஒன்றாக அங்கே கண்டதாகவும் இங்கே கண்டதாகவும் . . .

உண்மையாகவே ஊரார் அவர்களை ஒன்றாகக் கண்டபோது கண்திருஷ்டி பட்டுவிடும்போல இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சோதி வைத்திருந்த சைக்கிள் புத்தம் புதிதாய்ப் பற்பல அலங்காரங்களுடன் மிளிர்ந்தது. சைக்கிள் பாரில் அவளை ஏற்றிவைத்துக்கொண்டு தங்கரதம் போல ஊர்கோலம் போவதென அவன் மெதுவாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிந்தான். ஆனால் இப்போது சைக்கிள் மணியை அடிப்பது நாகராணிதான்.

‘கிணிங்.. கிணிங்…’

யார் அதிக அழகு, அவனா அல்லது அவளா? என ‘கிணிங்.. கிணிங்..’ என்று சைக்கிள் மணி அடிக்கடி ஊரைக் கேட்டது.

பள்ளிச் சிறுவர்கள் அவர்களது சைக்கிளின் பின்னே ஓடினார்கள். துணிச்சலானவர்கள் சைக்கிளைத் தொடவும் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் ‘கிளுகிளு’ வெனச் சிரிக்கவும் செய்தார்கள்.

கடைசியில் ஒரு நாள் சோதி சிறுவன் ஒருவனைக் காலால் எற்றி உதைத்து விழவைத்தான்.

நாய் வாலை யாராவது நிமிர்த்த முடியுமா?

இன்பம் தந்த சைக்கிள் சவாரிகள் எல்லாம் சில நாட்களில் மறைந்துவிட்டன. நாகராணிக்கு சோதியிடம் அடிமேல் அடிவாங்கி அலுக்க சோதிக்கும் அவளை அடித்து அடித்து அலுத்துப் போய்விட்டது. யாருக்காவது தொடர்ந்து ஒரு பெண்ணை அடித்துக்கொண்டே இருக்க முடியுமா? எனவே நாகராணியின் தம்பிகள் சோதியின் தாக்குதலுக்குத் தோதான இலக்குகள் ஆனார்கள்.

ஆனால் அந்தப் பையன்களுக்கு நேருக்கு நேர் மோதும் பாரம்பரியப் போர் முறைகளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நவீன இரசாயன ஆயுதங்களைப் பாவிக்க முடி வெடுத்தார்கள். பள்ளிக்கூட ஆய்வுக் கூடத்தில் செறிவான நைத்திரிக் அமிலம் பல காலமாக உபயோகிக்கப்படாமல் எதற்கு இருக்கிறதாம்?

குறி பிசகாத பின்னிரவு நேரத் தாக்குதல்.

சோதியை வைத்தியசாலைக்குக் கொண்டுபோனது நாகராணிதான். என்ன இருந்தாலும் கட்டிய கணவனல்லவா? சலவைச் சவர்க்காரத்தின் மணமும் சுவையும் உடைய ஆஸ்பத்திரிச் சோற்றை விழுங்கிக் கொண்டு பல மாத காலம் சோதி படுத்தபடுக்கையாகக் கிடந்தான்.

சோதி வெளியே வந்தபோது ஊர் அவனைக் கண்டு மேலும் பயந்தது. குழந்தைகள் கனவிலும் அவனது கோர முகத்தைக் கண்டு வீரிட்டு அலறினார்கள்.

ஆனால் சோதியும் ஊரைக் கண்டு பயந்தான்.

ஊர் மிகவும் மாறியிருந்தது.

அவனுடன் சண்டைபிடித்தவர்கள் சிலர் சமூக விரோதிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டு, சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் இயக்கங்களில் சேர்ந்து கண்காணாத இடங்களுக்குப் போய்விட்டார்கள்.

அப்படிப் போனவர்களில் ஒருவன்தான் சோதியைக் கொன்றான்.

நாகராணி வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்கு ரோடிலிருந்து திரும்பும் திருப்பத்தில் அவனது முண்டம் கிடந்தது. சற்றுத் தள்ளி மணலில் தனது கோர முகத்தைப் புதைத்த படி தலையும் கிடந்தது. தொடர்ந்து பல மணிநேரத்துக்குக் கொளு கொளுத்த தடித்த இரத்தம் வடிந்து மணலில் கலந்தது. தொடர்ந்து பல நாட்களுக்கு அந்த இடத்தில் ஈக்கள் கணமணவென மொய்த்துக்கொண்டிருந்தன.

மகாபாரதம் நிகழ்த்திய பெரும் குருஷேத்திரத்திற்குக் களப்பலி கொடுக்கப்பட்ட அரவானைப் போல, ஊரின் முதல் நவகண்டமாக சோதியின் தலை கொய்யப்பட்டபோது அவனுக்கு ஏறத்தாழ முப்பது வயதாகியிருந்தது.

அதற்குப் பிறகு முப்பது வருடங்களாக நடந்தவை புதிதாக வேறு ஒன்றுமில்லை. ஏறத்தாழ எல்லாமே இதுவரை கூறியவற்றின் விஸ்வரூபங்கள்தாம் என ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

வரலாற்றில் ஒரு தலைமுறைக் காலத்தைச் சுற்றி முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பிலிருந்து வரும் பஸ்கள் நேரடியாகச் சந்திக்கு வருகின்றன. அதில் வருபவர்களும் பல வருடங்களுக்குப் பின்னரே வருகின்றார்கள்.

சிலர் அதிகாரம் செலுத்தவும் பலர் ஆளப்படவும் அப்படியாக வரும் ஒருவர் கொஞ்சம் துணுக்குற நேரிடலாம்.

அதிகாரப் பரவலாக்கலின் தவிர்க்க முடியாத அடையாளச் சின்னங்கள் எல்லாவற்றுக்கும் காவலாகப் பல காவலரண்கள் இருக்கின்றன. பஸ் நிலையம் கொஞ்சம் கிழடுதட்டிப்போய் இருக்கிறது.

அங்கே சோதியைப் போன்ற பலர் உருவாகிவிட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் வெறியில் நடனமாடவும் கூடும். ஒரே ஒரு வித்தியாசம். இப்போ கைதட்டி உற்சாகப்படுத்துவது ஊரின் ஆசிரியர் ஒருவரல்ல. மாறாக காவலரண்களிலிருந்து சில பைலாப் பாடல்கள் கேட்கக்கூடும்.

சந்தியிலிருந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும் ரோடில் போடப்பட்டிருந்த தார் முழுவதும் வீணே சிந்தப்பட்ட குருதியைப் போல வழிந்து ஓடிவிட்டது. கற்கள் வெளியே தள்ளித் தெரிகின்றன.

ரோடில் செல்லும் பலருக்கு அந்தக் கற்களில் இரத்தம் பல ஆண்டுகளாகப் படிந்திருப்பதான பிரமை தோன்றக்கூடும்.

நாகராணியின் வீட்டுக்குப் போகும் ஒழுங்கையில் சன நடமாட்டமே இல்லை. வேலிகளும் கூரைகளும் இற்றுப்போய்ப் பாறி விழுந்துவிட்ட வீட்டில் ஒரு வயதான பெண் தனக்குத்தானே பேன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனியே அலகையைப் போல வாழ்கிறாள். அவளது தம்பிகள் வெளிநாட்டுக்கு எனப் பயணம் போனார்களாம். பிறகு தொடர்பே இல்லை. என்னவானார்களென யாருக்கும் தெரியாது.

அவளுக்குச் சிலவேளைகளில் சித்தம் கலங்கிவிடும் என்கிறார்கள். அவ்வேளைகளில் தன் காதலனைக் கொன்றவர்களை அவள் மண் அள்ளித் தூற்றுவதாகச் சொல்கிறார்கள்.

வேறு ஏதாவது சொல்ல மறந்துவிட்டேனா?

ஆம், சோதியின் வீடு இருந்த இடத்தில் இப்போ ஒன்றுமே இல்லை. ஒரு சிறிய குப்பை மேடும் சில கற்களும் மட்டுமே இருக்கின்றன. வெடிபொருட்கள் ஏதாவது இருக்கலாம் என்ற அச்சத்தில் எவரும் கிட்ட நெருங்குவதில்லை.

சோதியின் வீடு மட்டுல்ல, பல வீடுகள் அப்படித்தான், சுடலை போல இருக்கின்றன.

அங்கெல்லாம் காற்று மட்டும் மாளாத துயரத்துடன் ஊளையிடுகிறது.

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *