பாண்டிச்சேரியில் மதுபானம் மற்றும் நடன வசதி கொண்ட நட்சத்திர ஹோட்டலில் நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அன்றைய செலவில் ஐந்து பைசாவைக் கூட நான் கொடுக்கப் போவதில்லை. நண்பர்கள் அப்படி என்னிடம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்கள் எல்லோரும் என் கல்லூரி நண்பர்கள். என்றாவது ஒரு சனிக்கிழமை ‘மச்சி இன்னைக்கு ஈவினிங் பார்ட்டிடா’ என்பார்கள். முன்பெல்லாம் அவர்கள் அப்படி அழைக்கும்போது மறுப்பேதும் சொல்லாமல் ஓடிவிடுவேன். ஆனால் இப்போதுதான் நான் சினிமாவில் உதவி இயக்குனாராக வேலைக்கு சேர்ந்திருப்பதால் என்னால் முன்பு மாதிரி கூப்பிட்டவுடன் ஓடிவிட முடியாது. நான் வேலைக்குச் சேர்ந்திருக்கும் புதுமுக இயக்குனர் எப்போது அழைப்பார் எப்போது விடுவார் என்றே தெரியாது. நண்பர் ஒருவர் அவரிடம் அறிமுகபடுத்திவைத்து வேலைக்குச் சேர்த்துவிட்டார். என்னுடைய விஷுவல் கம்யூனிகேசன் படிப்பும் ஸ்டைலான ஆங்கிலமும், அவரிடமே சிகரெட் வாங்கி புகைப்பிடித்த பாசாங்கற்ற குணமும் பிடித்துப்போனதாக இயக்குனர் என் நண்பரிடம் சொல்லி இருக்கிறார். என்னுடைய இதே குணத்தால் ஒரு பெரிய இயக்குனர் என்னை வேலைக்கு சேர்க்க முடியாது என்று சொன்னது தனிக்கதை. இத்தனைக்கும் அவரிடம் நான் சிகரெட் கூட கேட்கவில்லை. அந்த பெரிய இயக்குனர் ஆபிஸுக்கு இரண்டு மூன்று தடவை போனேன். அப்போதெல்லாம் அவர் அலுவலகத்தில் இல்லை. முதல் தடவை போனபோது ஆபிஸ் பாய் அடிக்காத குறையாய் அவர் இல்லை என்று கடுமையான முகத்தோடு பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் துரத்திவிட்டான். முதலில் எனக்கு ‘இதென்னடா நான்சென்ஸ்’ என்று எரிச்சலாகவும் அசூசையாகவும் இருந்தது. எனக்கு இயக்குனராக ஆசை. அதற்கு பெரிய இயக்குனரிடம் வேலை பார்த்தால்தான் சாத்தியம் என்பதால் வேலை தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் பேசியதால் சில இடங்களில் வேலை இல்லை என்பதை மரியாதையாகச் சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள். சில இடங்களில் மெடிக்கல் ரெப்பை பார்ப்பதுபோல் விநோதமாக பார்த்தார்கள். ஆகமொத்தம் வாய்ப்பு இல்லை. விண்ணப்பம் போடாமல் வாசலில் கதியே என்று கிடந்து வேலை தேடுவது சினிமாவில் மட்டும்தான் நடக்கும். பின்பு சினிமாவில் இருக்கும் சில நண்பர்கள் “இப்படி போய் அவங்ககிட்ட ஆங்கிலத்தில பேசுனா எப்படி வேலை குடுப்பாங்க.இங்கே பாதி இயக்குனருக்கு ஆங்கிலம் தெரியாது. அவஅவன் நல்ல சட்டை போட்டுட்டு போயே வேலை தேடமாட்டான். நீயி என்னாடானா ஜீன்ஸ்,ஸ்டைலான டீ.சர்ட்,ஷு, ஆங்கிலம் இப்படி போய் நின்னா எப்படி வேலை தருவான். அதனால என்ன பண்ற ஆங்கிலத்தை குப்பையில போடு, சாதாரண செக்டு சர்ட் ஒரு அழுக்கு ஜீன்ஸ் போட்டுக்க, ரெண்டு நாளா சாப்பிடாதவன் மாதிரி முகத்தை வச்சுட்டு வேலையத் தேடு’ என்றார்கள். அவர்கள் ஆலோசனைப்படியே நடந்தேன். தேவை இருந்தால் மட்டுமே ஆங்கிலத்தை பயன்படுத்தினேன்.
இரண்டாவது தடவையாக அந்த பெரிய இயக்குனரை பார்க்கப்போனேன். அவருடைய அப்பா இருந்தார். “ஐய்யா வெளியே போயிருக்காங்க. ஐய்யா நாளைக்குதான் வருவாங்க. ஐய்யாவை நாளைக்கு பார்க்கலாம்”. எத்தனை ஐய்யா! அப்பதான் மற்றவர்களுக்கும் மகன் மேல் மரியாதை வரும் என்பதால் அப்படி அழைக்கிறாராம். மூன்றாவது தடவை போனபோது அந்த பெரிய இயக்குனர் வரவேற்பரையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். சிலநேரங்களில் இயக்குனர்கள் இப்படி இயல்பாக உலாத்துவதும் உண்டு. என் அதிர்ஷ்டம் அவரை வெகு சீக்கிரம் பார்த்துவிட்டேன். வணக்கம் சொன்னவுடனே ‘என்ன’ என்றார் மிகப்பெரிய அதிகாரத் தோரணையில். நான் விசயத்தை சொன்னதும் ‘என்ன படிச்சிருக்க’ என்றார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழிறங்கி பவ்யமாக(எல்லாம் நண்பர்களின் டிரெயினிங்) விஷுவல் கம்யூனிகேசன் என்றேன். அவர் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு, அப்போது அவர் முகம் மிகவும் கோரமாக இருந்தது. ‘இலக்கியத்தில என்ன படிச்சிருக்க’ என்றார். இலக்கியங்கிற வார்த்தையை தவிர எனக்கு ஒன்னும் தெரியாது. கொஞ்சம் நேரம் கேனப்பயல் மாதிரி முழித்துவிட்டு, ‘நிறைய வெளிநாட்டுப்படம் ஆங்கிலப்படம் பார்ப்பேன் சார்’ என்றேன் சிறிது நம்பிக்கையுடன். அப்புறம் அவர் ஆரம்பித்தார் ‘யோவ் உங்கள மாதிரி ஆட்கள் சினிமாவுக்கு வர்றதாலதாயா சினிமா கெட்டு கெடக்கு. ஆங்கிலப்படத்தை உருவி அப்படியே படம் எடுக்கிறது. ஒரு படம் வேலை செஞ்சதும் பெரிய நடிகனுக்கு கதை சொல்லி மசாலா படம் எடுக்கிறது. சினிமாவை வணிகமாக்கி கெடுத்திட்டாங்க. அந்த வரிசையில நீயூம் சேரப்போறியா. போ போ..போய் ஜெயகாந்தன்,புதுமைபித்தன்,சுந்தரராமசாமி,கோணங்கி இவங்களெல்லாம் படி அப்புறம் உதவி இயக்குனர் வேலை தேடு’. “அடப்பாவிங்களா கவுத்துபுட்டாங்களே விஷுவல் கம்யூனிகேசன் படிச்சா ஈஸியா வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்கே.அப்ப இவங்களெல்லாம் படிக்கனுமா” என்று எனக்கு அலுப்பாகிவிட்டது. அப்புறம் கொஞ்சநாள் புதுமைபித்தனோடும், சுந்தரராமசாமியோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன்.
“பார்ட்டி,கேர்ள் ப்ரண்ட்ஸ், ஜாலியான சினிமா, கிதாருன்னு சுத்திக்கொண்டிருந்தவன். பனி படர்ந்த பாரிஸ் வீதியிலே பாக்கெட்டுல கையைவிட்டுட்டு ஏகாந்தமாக நடந்து போற மாதிரி கனவு கண்டேனே எல்லாம் கனவாகவே போய்விடுமோ. கேன்ஸ், பெர்லின் திரைப்படவிழாவுக்கெல்லாம் போக முடியாதோ” என்ற பயத்தில் மூலையில் உட்கார்ந்து பரிட்சைக்கு படிப்பதுபோல் இலக்கியம் படித்தேன். அந்த நாள்களில் சில நேரங்களில் தமிழ் படிக்கும் மாணவனைப்போல என்னை உணர்வேன். ஆனால் ஒரு விசயம் அதிசயமாக நடந்தது. சில எழுத்தாளர்கள், புத்தங்கள் நிஜமாகவே எனக்கு பிடித்து போய்விட்டன. ஜி.நாகராஜன், கோபி கிருஷ்ணன் படித்துவிட்டு கொஞ்சநாள் பைத்தியமாக சுத்தினேன். கோபி கிருஷ்ணன் இறந்து போனது, வாழ்வில் அவருடைய வறுமை, மனப்பிறழ்வு இதையெல்லாம் கேள்விபட்டதும் இன்னும் அவர் நெருக்கமாகிவிட்டார். ஆல்பர் காம்யூவில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டேன். எப்போதாவது தலைதூக்கும் குற்ற உணர்ச்சி அந்நியனை படித்ததும் விலகியது. அப்படியே ஏதாவது கதை கிடைத்து ஸ்கிரிப்ட் எழுதிவிடலாம் என்றதால் மனம் போன போக்கில் குற்றங்களுக்கான பின்னணியை ஆராயத் தொடங்கினேன். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கைகூடாது என்பதால் மீண்டும் படம் பார்ப்பது,புத்தகம் படிப்பதில் கவனம் செலுத்தினேன். புத்தங்கள் எனக்கு வேறொரு வாழ்க்கையை தெரியபடுத்திக்கொண்டிருந்தன. படிப்பதை மிக முக்கியமான வேலையைச் செய்வதைப் போல் உணர்ந்தேன். எனக்குள் இருந்த நவீன நாகரீகப்பையன் ஒழிந்து ஓடிக்கொண்டிருந்தான். அப்போதுதான் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்தேன். படித்து முடித்ததும் எனக்குள் அடியாழத்தில் பதுங்கிக் கிடந்த குற்ற உணர்ச்சி மேலெலும்பி வந்தது. முதலில் அது என்னவென்று தெரியவில்லை. உள்ளுக்குள்ளே உருத்திக் கொண்டே இருந்தது. இனம் காண முடியவில்லை. தூங்கவே பயபட்டேன். என்னவென்று தெரியாமலே இப்படி வேதனையாக இருக்கிறதே அதைத் தெரிந்து கொண்டால் நினைக்கவே பயங்கரமாக இருந்தது. கொஞ்சநாள் கடும் யோசனைக்குப்பின்னே மிகப்பிரயத்தனப்பட்டு குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொண்டு வேலையைத் தேடிக்கொண்டிருந்தேன்.
பாலியல் விசயங்களை நவினமாக படம் எடுத்த இயக்குனர் ஆபிஸுக்கு தினமும் வாய்ப்பு தேடி போய்க்கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியிலிருந்து பார்த்த அவர் என்னை மேலே வரச்சொன்னார். என்னைப்பற்றி அக்கறையோடு விசாரித்தார். என்னிடம் கலகலப்பாகவே பேசிக்கொண்டிருந்தார். ‘எதில வந்தே’ என்றார். ‘பஸ்ல சார்’ என்றேன். ‘பைக் இல்லையா’ என்றார். ‘இல்ல’ என்றேன். பைக்கை வீட்டில் வைத்திருந்தேன்.அதுவும் நண்பர்களின் ஆலோசனைதான். ‘நானும் உன்னை மாதிரிதான் உதவி இயக்குனரா வேலை தேடுற காலகட்டத்தில பைசா இல்லாமத்தான் அலைஞ்சிருக்கேன். ஆனாலும் கார்ல போய்தான் வாய்ப்புத் தேடுவேன். எப்படி’ என்றார். ‘எப்படி’ என்று அவர் கேட்கும்போது குழந்தைகளிடம் மேஜிஸ்யன் கேட்பதைப்போல் முகத்தை வைத்திருந்தார்.அவர் முகபாவம் எனக்கு சிரிப்பை வரவைத்தாலும் அடக்கிக்கொண்டு. தெரியவில்லை என்பதை ஒரு புன்னகையாக வெளிப்படுத்தினேன். பின்பு அவரே சொல்ல ஆரம்பித்தார் ‘லிப்ட் கேட்டு கார்ல போய்தான் இயக்குனர்கள் ஆபிஸ் வாசல்ல இறங்குவேன்’ என்றார். “நமக்கெல்லாம் பைக்கில லிப்ட் தரமாட்டாங்க இவர் கார்ல போயிருக்கார் பெரிய விசயம்தான்” என்று நினைத்துக்கொண்டேன். ‘கெத்தா போனாதான் சினிமா காரனுங்க மதிப்பானுங்க. என்னைக்கும் என் ஸ்ர்டுல ஒரு சின்ன கசங்கல் கூட இருக்காது’ என்றார். எனக்கு உண்மையாகவே குழப்பமாகத்தான் இருந்தது. அன்றைக்கு இன்னும் அழுக்கான சட்டையும் பேண்ட்டும் தாடி வேற வைத்திருந்தேன். பரதேசி மாதிரிதான் அவருக்கு தெரிந்திருக்கும். அப்ப கண்டிப்பாக வேலை கொடுக்கமாட்டார் என்று தெரிந்தது. அவரோடு சேர்ந்து என்னைச் சாப்பிடச் சொன்னார். உண்மையாகவே நான் சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர் என்னிடம் காட்டும் இரக்கத்தை துண்டிக்க விரும்பவில்லை. ஒருவேளை பாவம் பார்த்து வேலை கொடுக்கலாம் என்று அமைதியாக இருந்தேன். வேலை கிடைக்குமா இல்லையா என்பது மட்டும்தான் அப்போது என் கேள்வியாக இருந்தது. கடைசியாக அந்த இயக்குனர் ‘தம்பி எங்கிட்ட பத்துபேரு வேலை பார்க்கிறாங்க.இப்ப உன்னை வேலைக்கு சேக்க முடியாது அடுத்த படத்தில எவனாவது வெளியே போவான், அப்படியே கம்யூனிகேசன்லே இரு அடுத்த படத்தில சேர்த்துக்கிறேன்’ என்றவர் ஒரு உதவி இயக்குனரை அழைத்து பைக்கில் என்னை பஸ் ஸ்டாப்பில் விட்டுவரச் சொன்னார். “வானத்தில வீடு கட்டுனாலும் கட்டிலாம் ஆனால் சினிமாவில சேர முடியாது போல” என்று நினைத்துக்கொண்டு போனேன்.
புதுமுக இயக்குனர் உண்மையாகவே என்னிடம் திறமை இருப்பதாக நம்பினார். ஆங்கிலம், இலக்கியம், வெளிநாட்டுப் படங்கள் என்று இண்டெல்ஷுவலாகவே பேசிக்கொண்டிருப்பார். சில நேரங்களில் விதண்டவாதமாகவே எதிர்வாதம் வைத்துக்கொண்டிருப்பார். ஆனாலும் அவர் உணர்வுபூர்வமாக சில விசயங்களை அணுகியதால் அவரோடு கொஞ்சம் எனக்கு இணக்கமாக இருந்தது. மிகுந்த கடமை உணர்வோடு இரவு பகல் பாராது அவரோடு கதை டிஸ்கஸனில் இருந்தேன். அவர் ஒருநாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பிடுபவராக இருந்தார். சிகரெட் டீ மட்டும் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை. முதலில் அது எனக்கு கடினமாக இருந்தது பின்பு அவருடைய பழக்கத்திற்கு ஏற்ப பழகிக் கொண்டேன். அவரிடம் வேலை பார்த்த மற்ற உதவி இயக்குனர்களும் அப்படியே ஆகிப்போனார்கள். சில நேரங்களில் அது எனக்கு அயர்ச்சியூட்டுவதாக இருக்கும். அப்போதுதான் நண்பர்கள் என்னை பாண்டிச்சேரிக்கு பார்ட்டிக்கு அழைத்துப்போனார்கள்.
அறையெங்கும் உற்சாகம் பொங்கி வழிந்தது. டி.ஜே சிரித்த முகத்துடன் இசையை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தான். ஜாக்,ராப், என்று எல்லாவற்றிலிருந்தும் உற்சாகம் பொங்கும் துள்ளல் இசையை ஒலிபரப்பச் செய்தான். இசையில் எங்கும் தொய்வு ஏற்படாமல் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை அவன் பாடல்களை மாற்றிய விதத்தைப் பார்த்தபோது ஒரு இசைக்கலைஞனைப் போலவே தோன்றினான்.
நண்பர்கள் நாங்கள் நான்கு பேரும் ஒரு டேபிளில் உட்கார்ந்திருந்தோம். தறிகெட்டு தொடர்பின்றி ஓடிக்கொண்டிருந்தது எங்கள் பேச்சு. நண்பர்கள் போதையின் களிப்பை முழுவதுமாக உணர்ந்துகொண்டிருந்தார்கள்…
நடன அரங்கில் ஆண்களும் பெண்களும் இசைக்கேற்ப பின்னிப்பிணைந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். இசையில் கரைந்து வெறித்தனமாக ஆடிக்கொண்டிருந்த பெண் லாவண்யாவைப்போல் இருந்தாள். குட்டை முடி, சின்ன டீ சர்ட், இடுப்பு தெரியும் பேண்ட் அவளாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து, நண்பர்களோடு பேச்சில் கவனம் செலுத்தினேன். இருந்தும் ஏதோ உந்த மீண்டும் அவளைப் பார்க்கத்தொடங்கினேன். இப்போது அவள் நடன அரங்கிலிருந்து டேபிளுக்கு வந்தாள். ஆண்களும் பெண்களும் ஐந்தாறு பேருக்கு மேல் அந்த டேபிளில் இருந்தார்கள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாக என்னைப் பார்த்தவள் உற்சாகத்தோடு ஒரு பெரிய ஹாய் சொல்லி என்னருகே வந்தாள். லாவண்யாவேதான் இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு மாறிபோயிருக்கிறாள். என்னால் அவளோடு இயல்பாக பேச முடியவில்லை. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு வலியை உணர்ந்துகொண்டிருந்தேன். அவள் கடகடவென்று பேசிக்கொண்டிருந்தாள். மிக சந்தோசமானப் பெண்ணைப்போலத் தோன்றினாள்.
கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும்போது அவளை முதல் முறையாகச் சந்தித்தேன்…சுருள் சுருளான என் முடி எப்போதும் நண்பர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது. நகரத்தின் நாகரீகம், ஸ்டைல், பரப்பரப்பில் என்னை முழுமையாக்கி கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் கல்லூரியில் படிக்க நகரத்திற்கு வந்தேன். நான் பிறந்தது கிராமம் என்றாலும் அப்பா என்னை சிறுநகரத்தில் இருக்கும் ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைத்தார். சிறு வயதிலிருந்த ஆங்கிலத்தின் மீதும் நகரத்தின் மீதும் நாட்டம் அதிகமாகிருந்தது. பள்ளி இறுதி நாள்களில் எல்லாம் ஊரில் இருப்பதை அபத்தமாக நினைத்தேன். அதுவும் என்னைச் சுற்றியிருந்த நண்பர்கள் ரசித்த சினிமாக்கள் இன்னும் துக்கமாக இருந்தது. ஆங்கிலப்படங்களை பார்க்க ஏங்கினேன். சென்னைக்கு வந்த புதிதில் சத்யம் சினிமா தியேட்டரில்தான் குடியாய்க் கிடந்தேன். கொஞ்ச நாள் தமிழ்படம் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. நான் படித்த கல்லூரியிலும் நாகரீக வாசம் அதிகமாக இருந்தது. பக்கத்தில் நடமாடும் உண்மையான மனிதர்களை, உலகத்தைவிட்டு வேறொரு உலகத்தில் வாழ்ந்த காலம் அது. சனிக்கிழமையானால் பார்ட்டி கொடிகட்டி பறந்தது. ஊரிலிருந்து படிப்பு,விடுதிக்கென்று தேவையான பணம் வந்தது. பார்ட்டி செலவுகளை பணக்கார நண்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். சீக்ரெட் பார்ட்டி அப்போது எங்களிடையே பிரபலமாக இருந்தது. மாதத்திற்கு ஒரு முறை ஈ.ஸி.ஆர் ரோடு, பாண்டிச்சேரியில் ஒரு ஃபார்ம் ஹவுஸை நண்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். அங்கே பெண் தோழிகளோடு ஆஜராகிவிடுவோம். பெண் தோழிகளும் குடிப்பார்கள். சில பெண்கள் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு குடிப்பார்கள். ஆனால் யாரும் பெண்களிடம் வரம்புமீறி நடப்பதில்லை.மனம் விரும்பினால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் செய்பவர்களாகவே அந்தப் பெண்கள் இருந்தார்கள்.
அந்த சமயத்தில்தான் எங்கள் கல்லூரியின் இசைக்குழு நண்பர்கள் ஸ்பென்சர் ப்ளாசாவில் கே.எல் என்ற சேட்டிலைட் ரேடியோ நிறுவனத்திற்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலம் நடத்திக்கொண்டிருந்தார்கள். 4 மணியிலிருந்து 6 மணி வரை நிகச்சி நடக்கும். ஆங்கிலப்பாடல்களை எங்கள் இசைக்குழு இசைத்து பாடுவார்கள். இசையை ரசிக்க தெரியுமே தவிர எனக்கு பாடவும் தெரியாது எந்த இசைக்கருவியையும் இசைக்கத் தெரியாது. ஆனால் என்னுடைய சுருள் முடியின் ஸ்டைலுக்காக என்னை தங்கள் குழுவில் இடம்பெறச் செய்தார்கள் நண்பர்கள். என் கையில் கிதாரை கொடுத்து ‘கீழே இருக்கும் ஸ்டிங்கை மட்டும் லேசாக இழுத்துக்கொண்டிரு’ என்று சொல்லி என்னை அமரவைத்துவிட்டார்கள். நானும் பெரிய கிதார் இசைக் கலைஞனைப் போல் நாணை மீட்டிக்கொண்டிருந்தேன். கிதாரில் நான் எழுப்பும் சத்தம் மற்ற இசைக்கருவிகளுக்கு நடுவே அமுங்கிப் போய்விடும். சொல்லப்போனால் சில சமயம் என்விரல்களால் கிதாரின் நாணைத் தொடாமலே வெறும் பாவனையோடு அசைத்துக் கொண்டிருந்தேன். அங்கு நான் இசைச் கலைஞன் இல்லை. காட்சி பொருளாகத்தான் இருந்தேன்.
எங்களை இசையை ஒரு நூறுபேராவது ரசித்துக்கொண்டிருப்பார்கள். அந்த சின்ன ஹால் கூட்டத்தால் நிரம்பி வழியும். கிதாரை வாசிக்கும் முழுபாவனையில் பார்வையாளர்களின் கண்களை நேரடியாகப் பார்ப்பேன். அப்படியான ஒரு பொழுதில் லாவண்யாவும் என்னைக் கூர்ந்து பார்த்ததை பார்த்துவிட்டேன். பின்பு எங்கள் இருவரின் கண்களும் அடிக்கடி சந்தித்துக்கொண்டன.
அன்று நிகழ்ச்சி முடிந்ததும் லாவண்யா என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டு ஒரு சின்ன நோட்டை நீட்டினாள். நானும் மிகப்பந்தாவோடு நோட்டை வாங்கி ஆட்டோகிராஃப் போட்டேன். அதை பார்த்த நண்பர்கள் ஒரே பேய்க்கூச்சல் போட்டு கலாட்டா செய்தார்கள். லாவண்யா அந்தக் கலாட்டைவை ரசித்தபடி காதைப்பொத்திக்கொண்டு என்னிடம் பேசினாள். நான் ஸ்டைலாக இருப்பதாகச் சொல்லி நான் கிதார் வாசிப்பது பொருத்தமாக இருக்கிறது என்றாள். கட்டுப்பெட்டியாக ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து வந்திருந்த அவள் என்னை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. நண்பர்கள் மச்சான் ‘கன்னி மச்சம்டா’ என்று கூப்பாடு போட்டார்கள். அது சந்தோசமாக இருந்ததால் நானும் அந்தப் பெண்ணை ஒரு மூலையில் ஓரங்கட்டி பேச ஆரம்பித்தேன். அவள் ‘நீங்கள் எப்படி அவ்வளவு அழகா கிதார் வாசிகிறீங்க’ என்றதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மேலே எழும்பாத இசைக்கு ஒரு ரசிகை வேறு! அதுவும் என்னிடம் ‘கிதார் நல்லா வாசிக்கிறீங்க’ என்று சொன்ன முதல் ஆளு வேறு அதனால் அவளைத் தவிர்க்க முடியாமல் “எதாவது சாப்பிடலாமா” என்றேன். சரி என்று கொஞ்சம் வெட்கத்துடனே தலையாட்டினாள். பின்பு அவளே சொன்னாள் ‘லாஸ்ட் டூ மன்த்ஸா உங்கள பார்த்திட்டிருக்கேன். பேச ஆசையா இருக்கும் ஆனால் பயத்தில விட்டுடுவேன். இன்னைக்குத்தான் கொஞ்சம் தைரியமாகி உங்ககிட்ட பேசினேன்’ என்றாள். நான் சிரித்தபடி அவளுக்கும் எனக்குமாக கோக், பீட்ஸா வாங்கினேன். அன்று சனிக்கிழமையாக இருந்ததால் இளம் பெண்களும் ஆண்களுமாக ஸ்பென்சர் நிரம்பி வழிந்தது. ஒரு மூலையில் நின்றபடி சாப்பிட்டோம். அவளைப்பற்றி விசாரித்தேன் சொந்த ஊர் சேலம் என்றாள். இங்கே விடுதியில் தங்கி,பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகச் சொன்னாள். அவள் குடும்பம் ஓரளவு வசதியான குடும்பமாம். அவளும் என்னைப்போல் நகரத்தின்பால் ஈர்ப்பு கொண்டுதான் இங்கே வந்திருக்கிறாள். ஆனால் தோழிகள் அவ்வளவாக இல்லை. அவள் நகரத்தின் எல்லா அடுக்குகளையும் திறந்து பார்க்கும் ஆர்வத்தோடு இருந்தாள். கொஞ்ச நேரம் அவளோடு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டோம். அவள் எனக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் அப்படியே அவளை மறந்துவிட்டேன். ஆனால் அவள் எனக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாள். என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னாள். நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன் என்று பதில் அனுப்பினேன். அடுத்த சனிக்கிழமை ஸ்பென்சரில் பார்த்ததும் ஓடிவந்து பேசினாள். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன் உற்சாகமாக கைகுலுக்கிக் கொண்டாள். அவளுள் ஒரு புத்துணர்ச்சியும் எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆவலும் இருந்தது. நானும் அவளோடு நட்போடு பேச ஆரம்பித்தேன். அப்படியே நட்பு தொடர்ந்தது. மணிக்கணக்காக என்னோடு போனில் பேச ஆரபித்தாள். சில நேரம் செல்போனில் விடிய விடிய குறுஞ்செய்திகளை பறிமாறிக்கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தேன். அதை லாவண்யாவிடம் சொல்லவில்லை. நான் காதலிக்கும் பெண் அடக்கமான பெண். என்னோடவே அதிகம் வெளியே வரமாட்டாள். வாரத்திற்கு ஒரு நாள் ஒரு காபி ஷாப்பில் சந்திப்போம். பின் போனில் பேசிக்கொள்வோம். அதுவும் அதிகமான உரையாடல் கிடையாது. என் காதலி அவளைப்போலவே என்னையும் அடக்கமான பையனாக நினைத்துக்கொண்டிருந்தாள். என்னுடைய பார்ட்டி கலாச்சாரமெல்லாம் அவளுக்கு தெரியாது. என் காதலியைவிட லாவண்யாவிடம்தான் அதிகமாக பேசினேன். சந்தித்தேன். ‘எப்படியெல்லாம் பேசுறே’ என்று வியந்து போய் லாவண்யா என்னைப்பார்ப்பாள். அவளை வீழ்த்தும்விதமாக பேசிக்கொண்டிருப்பேன். ஒரு முறை அவளிடம் ‘லேடிஸ் சைக்காலஜி சிம்பிள்’ என்றேன். ‘எப்படி?’ என்றாள் வியப்பாக. ‘உனக்கு பிடிச்ச பாட்டு, படம் சொல்லட்டுமா’ ‘சொல்லு பார்ப்போம்’ ‘உனக்கு மெளனராகம் பிடிக்கும். அதுல வர்ற கார்த்திக் கேரக்டர் ரொம்ப பிடிக்குமே’(90 சதவீதம் பெண்களுக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கும் என்று தெரியாத அப்பாவி அவள்)
‘அய்யோ எப்படிடா’ என்று துள்ளிக்குதித்தாள். ‘மின்சாரக்கனவு படத்தில வர்ற வெண்ணிலவே பாட்டு பிடிக்குமே’ ஆமாம் என்று கண்களை விரித்து ‘சிநேகிதனே’ பாட்டை விட்டுட்டியே என்றாள். ‘அடுத்து வருவேன்ல’ என்று அந்த பாட்டு ‘the most erotic song’ என்றேன். ‘அது ரொமாண்டிக் சாங்க்தானே ஏன் எரோடிக்குனு சொல்ற’ என்றாள். ‘நைட் போய் மறுபடியும் கேட்டுட்டுச் சொல்லு அது எரோடிக்னு புரியும்’ என்றேன். ‘ஏய் இப்பவே சொல்லுடா என்றவள் என் கண்களைப்’ பார்த்தாள். நான் குறும்பாக சிரித்ததும் ‘சரி நானே கேட்டுக்கிறேன்’ என்றாள். அன்றிரவு “மலர்களில் மலர்வாய்” அந்த வரிதானே என்று குறுஞ்செய்தி அனுப்பி, உண்மையாவே எரோட்டிக்தான் என்றாள்.
கல்லூரியை முடித்துவிட்டு வேலை தேடத் தொடங்கினேன். அப்போதும் அவள் என்னோடு சுற்றிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளுக்கு ஆண்நண்பர்கள் யாரும் இல்லை என்று சொல்லி வருத்தப்பட்டாள். ‘இப்படி இருந்தா எப்படி கிடைப்பாங்க ஃபாய்ஃபிரண்ட்ஸ். ‘ஸ்டைலா மாறனும்’ என்றேன். அன்று நானும் உன்னோடு சனிக்கிழமை பார்ட்டிக்கு வாறேன் என்றாள். ‘இந்த சுடிதாரோடா?’ என்று சிரித்துவிட்டேன்.அவள் முகம் சுருங்கியது. ‘என்னைப்பார்த்தா கட்டுப்பெட்டி மாதிரியா தெரியுது’ என்றாள். ஆமாம் என்றேன். ‘என்ன செய்ய’ என்றாள் அப்பாவியாக. ‘முதல்ல நீ ட்ரெஸ் ஸ்டைலே மாத்து.மாடர்ன் டிரெஸ் போடு’ என்றேன். ‘நீயே எடுத்துக்குடுக்கிறீயா இதுக்கு முன்னாடியே நான் அப்படியெல்லாம் டிரெஸ் வாங்கினதே இல்ல’ என்றாள். அப்போதே கடைக்குச் சென்று அவளுக்கான ஒரு முக்கால் பேண்ட்டும் டி சர்ட்டும் வாங்கினோம். அதை அங்கேயே அணிந்து கொண்டு வந்தாள். உடை மாறியதும் ஆளே மாறிப்போனாள். ‘இப்ப என்னை கூட்டிட்டு போவியா’ என்றாள் சிரித்தபடி.
ஹோட்டலின் மதுபான விடுதியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். என்னுடைய நண்பர்களும் தோழிகளும் அங்கே உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். இவள் அந்த இடத்திற்கு அந்நியமானவளைப் போலவே அமர்ந்திருந்தாள் அவளின் கைகள் மட்டும் இடை தெறிந்த டீ சர்ட்டை இறக்கி விட்டுக்கொண்டிருந்தது. குடிக்கிறீயா என்றேன் தயக்கத்தோடு அவள் லேசான சிரிப்போடு ஒன்னும் ஆகாதா? என்றாள். இல்ல ‘கொஞ்சமா குடி’ என்றேன். ஆனால் அதிகம் வாசனை இல்லாத கசக்காத ட்ரிங் கிடைக்குமா என்றாள். ஆப்பிள் ரெட்வைன் அவளுக்கு ஆர்டர் செய்தேன். ஒன்னும் ஆகாதே என்றபடி முதல் சிப்பை விழுங்கினாள். அவள் முதல் சிப்பை விழுங்கிய விதம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. தயக்கம் சந்தோசம் சுதந்திரம் எல்லாமே அவள் முகத்தில் தெரிந்தது. கனவு உலகத்தை எட்டிப்பார்க்கும் குழந்தையாக முதல் சிப்பை விழுங்கினாள். அவள் அந்த கசப்பை எதிர்பார்த்திருக்கமாட்டாள் போல பார்ட்டி முடியும் வரையில் ஒரு பெக்கை கையில் வைத்து குடித்துக்கொண்டிருந்தாள்.
டிஸ்கொதேயில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக் ஆடிக்கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘போய் ஆடுறியா’ என்றேன். ‘என்னது? முன் பின் தெரியாதவங்ககூட இப்படி வெட்கமில்லாமல் கட்டிப்பிடிச்சு ஆடுறதா சீ’ என்றாள். ‘சில்வியா ப்ளாத் படிச்சிருக்கியா நீ’ என்றேன் ‘யார் அவங்க’ என்றாள் அப்பாவியாக ‘அவங்க ஒரு கவிஞர் அவங்களைப்பத்தி சொல்லம்னா அரை நாள் வேணும் ஆனால் அவங்க சொன்ன ஒரு விசயத்தை சொல்றேன் கேட்டுக்க, ‘’Dance is the nearest happiness to the intercourse’’ னு சொல்லியிருக்காங்க தெரியுமா? சோ யூ என்ஜாய் டான்ஸ்’ என்றேன். ‘யார் வேணுன்னாலும் என்ன வேணுன்னாலும் சொல்லிட்டு போகட்டும் நான் ஆடலப்பா’ என்று அமர்ந்திருந்தாள்.
நான் அன்று அவளிடம் மெஸ்மரிசம் பண்ணுவது மாதிரிதான் நிறைய விசயங்களைப் பேசினேன். ‘சந்தோசத்துக்காக நீ செய்யுற ஒவ்வொரு செயலும் மூளைக்குத்தான் போகும். ஆனால் இசையோடு நீ இணையும் போது சந்தோசம் இதயத்துக்கு போகும். தொலைந்து போவதுதான் புனிதம். அது இசையாகவோ, போதையாகவோ,காமமாகவோ இருக்கலாம்’. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘எனக்கு சுத்தி நடக்கிறது எதுவும் தெரியல நீமட்டும்தான் தெரியுற. எவ்வளவு அறிவா அழகா பேசுற நாள் முழுக்க உன்கூடவே இருக்கனும் அதுதான் என் ஆசை’ என்றாள்.
அவளை பத்திரமாக விடுதியில் விட்டுவிட்டு நான் கிளம்பினேன். நான் அவள்மேல் அதிக அன்பும் அக்கறையும் வைத்திருப்பதாக மெசேஜ் அனுப்பினாள். ‘பாவம்டா அந்தப் பொண்ணு. நான் வேற பொண்ணை காதலிக்கிறேனு உண்மையை சொல்லுடா’ என்று நண்பர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள். பதிலுக்கு நான் அவர்களிடம் ‘போங்கடா நான் இல்லன்னா வேற எவனாவது அவளை கரெக்ட் பண்ணுவான். அது நானா இருந்துட்டு போறேன். போங்கடா நானென்னா அவளை ரேப் பண்ணவா பேறேன். ஜாலியா கொஞ்சநாள் அவளோட சுத்துவேன் அவ்வளவுதான்’ என்று அவர்களின் வாயை அடைத்தேன்.
லாவண்யா என்னோடு நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளைப்போல நான் அவளை விரும்பவில்லை. உண்மையில் அவள் மேல் மிகப்பெரிதான அக்கறையும் இல்லை. எல்லோரையும் போல அவளிடம் நட்பாக பழகினேன். பின்பு வந்த நாள்களில் அவளை நான் சுடிதரோடு பார்க்கவில்லை. அவள் ஸ்டைலும் உடையும் மாறிப்போனது ஆனால் உள்ளுக்குள் அன்பான பெண்ணாகவே இருந்தாள்.
நண்பன் ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாட ஈ.ஸி.ஆர் ரோட்டில் பார்ம் ஹவுஸ் ஒன்றில் சீக்ரெட் பார்ட்டி ஏற்பாடானது அதைப்பற்றி அவளிடம் நான் சொல்லவில்லை. நண்பன் அவளை அழைத்திருக்கிறான். அவள் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டாள். ‘ஹோட்டல் மாதிரி இல்லை. நடுராத்திரி ஆயிடும் அங்கேயே தங்கனும் அதனாலே வேணாம்னு நினைத்தேன்’ என்றேன். ‘வேற கேர்ல்ஸ் யாரும் வரமாட்டாங்களா’ என்றாள். ‘வருவாங்க’ என்றேன் ‘அப்புறம் ஏன் என்னை மட்டும் வேணாங்கிற இன்னும் நான் உனக்கு கட்டுப்பெட்டியாவே தெரியுறேனா’ என்றாள். ‘அப்படியெல்லாம் நினைக்கல வா’ என்றேன்.
முன்பு மாதிரி இல்லை அவள் நிறைய குடிக்கப் பழகியிருந்தாள். போதை ஏறியதும் ஆளாளுக்கு அறையில் போய் ஒதுங்கிக்கொண்டார்கள். நானும் அவளும் ஒரு அறைக்குச் சென்றோம். எனக்கும் அன்று போதையில் கொஞ்சம் தலையை வலிப்பதுபோல் இருந்தது. கட்டிலில் அப்படியே விழுந்தேன். அவள் என்னருகில் வந்து படுத்தாள். பின்பு என் காதருகில் வந்து ‘டேக் மீ டா’ என்றாள். அவளை அப்படியே தலையோடு சேர்த்து அணைத்துக்கொண்டேன். பேசாமல் படுத்திருந்தேன். திரும்பவும் ‘டேக் மீ டா’ என்றாள். ‘இங்க பாரு லாவண்யா இப்ப நீ நிறைய குடிச்சிருக்கே நானும் நிறைய குடிச்சிருக்கேன். எனக்கும் செக்ஸ் வச்சுகலான்னுதான் தோணுது. ஆனாலும் மனசுக்கு சரியாபடலை. போதை தெளிஞ்சதுக்கு அப்புறமும் இது தப்பில்லனு உனக்கு தோனுச்சுனா அதுக்கப்புறம் வச்சுக்கலாம்.இப்ப தூங்கு’ என்றேன். ‘சரி’ என்று அவள் என்னருகில் படுத்துத் தூங்கினாள். காலையில் எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தோம். அவளிடம் ‘இப்ப உனக்கு செக்ஸ் வச்சுகிட்டா தப்பில்லனு தோணுதா’ என்றேன். ‘இல்ல’ என்றாள். ‘இனிமேல் குடிச்சிட்டு இந்த மாதிரி யோசிக்காதே’ என்று சொன்னேன். அவள் மிக அன்போடு என்னைப்பார்த்தாள். அந்த பார்வையை ஒன்றிரண்டு கணங்களுக்கு மேல் சந்திக்காமல் பார்வையை விலக்கிக்கொண்டு அவளை அங்கிருந்து அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
ஒரு நாள் முக்கியமான விசயம் பேச வேண்டுமென்று நேரில் வரச்சொல்லி என்னைக் காதலிப்பதாகச் சொன்னாள். நான் அப்படியெல்லாம் அவளிடம் பழகவில்லை என்றேன். அப்போதுதான் அவளிடம் ஏற்கனவே நான் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். ஆனால் அவள் அதை நம்பவில்லை. ‘பொய் சொல்லாதடா என்னைப் பிடிக்கலன்னா பிடிக்கலன்னு சொல்லு எனக்குத் தெரியும் நீ யாரையும் காதலிக்கல. பார்ட்டிக்கு வராம டிரிங் பண்ணாம, செக்ஸ் வச்சுக்கலாம்னு உன்னைக் கூப்பிடாம இருந்திருந்தா என்னை லவ் பண்ணியிருப்பியிலே. இப்ப நான் உனக்கு கேவலமான பொண்ணாத் தெரியுறேன்ல. நான் உன்னை பார்த்த நாளிலிருந்தே உன் மேல எனக்கு க்ரஷ்தாண்டா. நான் எப்பவும் உன்னை லவ் பண்றதா நெனைச்சுட்டுதான் உன்கூட வந்தேன்’ என்றாள். எனக்கு சங்கடமாக இருந்தது. எனக்காகத்தான் எல்லாவற்றையும் செய்ததைப்போல் அவள் சொன்னாள். ஸ்டைலாக இல்லாட்டி அவளை வேண்டாமென்று சொல்லிவிடுவேனோ என்றுதான் அவள் அப்படிமாறியதாகச் சொன்னாள். அதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ‘ஐ லைக் யூ. பட் ஐ லவ் சம் அதர் கேர்ள்’ என்றேன்.
அவள் நம்பாமல் மறுமடியும் மறுபடியும் காதலிப்பதாகச் சொன்னாள். நான் அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன். விடாமல் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள். பதிலும் அனுப்பவில்லை போனையும் எடுக்கவில்லை. அவளைச் சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொண்டேன். ஒரு நிலைக்கு மேல் போன் நம்பரையே மாற்றிவிட்டேன். அவள் என் நண்பர்களிடம் என் போன் நம்பரைக் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறாள். என் நம்பரை அவளிடம் கொடுக்க கூடாது என்று எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தேன். ‘ஆரம்பத்திலே சொன்னோம்லடா பாவம்டா அந்தப்பொண்ணு’ என்று நண்பர்கள் என்னைத்திட்டினார்கள். பின்பு அப்படியே அவள் தொடர்பு விட்டுப்போனது.
ஒரு வருடத்திற்கு பிறகு பாண்டிச்சேரி பார்ட்டியில் சந்தித்தேன் அப்போது அவளைச்சுற்றி வேறொரு குரூப் இருந்தது. தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். என் அறைக்கு அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ராத்திரி அங்கே பார்ட்டி நடப்பதாகவும் காலையில் சந்திக்கலாம என்று சொல்லிவிட்டுப் போனாள். ராத்திரி ஒரு மணி இருக்கும் பலமான கதவு தட்டல். கதவை திறந்தால் லாவண்யா அலங்கோலமாக நின்று கொண்டிருக்கிறாள். வேகமாக அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். அவள் முகமெல்லாம் வீங்கித் தடித்திருந்தது, மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பார்ட்டி முடிந்ததும் கூட வந்து ஒருத்தன் அவளை செக்ஸுக்கு அழைத்திருக்கிறான். அவள் மறுத்ததும் அடித்து பலாத்காரம் செய்ய ஓடி வந்திருக்கிறாள். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய பனியன் எல்லாம் சாப்பாடெல்லாம் கொட்டி அழுக்காக இருந்தது. குடிபோதை, உடல் காயம் பார்க்க சகிக்க முடியாத கோலத்தில் இருந்தாள். எனக்கு முதல் முறையாக அந்த மாதிரியான வாழ்க்கைமுறை பிடிக்காமல் போனது. அருவருப்பாக இருந்தது. நானும் அவள் இப்படி ஆக ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறேன். அவளை கட்டிலில் படுக்க வைத்தேன். என் நண்பர்கள் கீழே படுத்துக்கொண்டார்கள்.
ஹோட்டல் வராண்டாவில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவன்தான் என்றாள் லாவண்யா. நான் வெளியே வந்து பார்த்தேன். அவன் ‘ஹேய் பிட்ச். ஐ வில் கேட்ச் யூ’ என்று சலம்பியபடி தேடிக்கொண்டிருந்தான். பிரச்னை வேண்டாமென்று நான் அறைக்குள் வந்துவிட்டேன். நான் தூங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று அதிகாலை ஐந்து மணிக்கு அவளை எழுப்பி வா கிளம்பலாம் என்றேன். பகலில் அவளை வெளியே அழைத்து போக முடியாதபடி அவள் காயம்பட்டிருந்தாள். போலீஸுக்கும் போக முடியாத சூழ்நிலை. அவள் முகத்தில் காய்ந்து போயிருந்த ரத்தக் கறையை ஈரத்துணியால் துடைத்துவிட்டேன்.அப்போதும் அவள் அரைப் போதையில் இருந்தாள். யாருக்கும் தெரியாமல் அவளை அங்கிருந்து காரில் அழைத்துக்கொண்டு என் நண்பர்களோடு கிளம்பினேன். நான் என் நண்பன் அவள் மூவரும் பின்னால் அமர்ந்திருந்தோம். ஒரு நண்பன் காரை ஓட்டி வந்தான். இரு நண்பர்கள் முன் சீட்டில் ஒருவர் மடியில் ஒருவர் உர்கார்ந்துவந்தார்கள். அவள் என் தோளில் சாய்ந்தபடி வந்தாள். அவளால் உட்காரக்கூட முடியவில்லை. சிறிது நேரத்தில் அவள் தோழியிடமிருந்து போன். போதை தெளிந்து இப்போதுதான் அவளைத் தேடி இருக்கிறார்கள். அழுதபடி ராத்திரி நடந்த விசயத்தை சொல்லி “குடிச்சா எல்லாத்தையும் செஞ்சிடுவேனு அவன் நெனைச்சானாடி” என்றாள். பின்பு ஃபோனை அணைத்துவிட்டு என்னைப்பார்த்தாள். ‘ஏன் லாவண்யா இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸோட வந்தே. இந்த மாதிரி தப்பெல்லாம் இனிமேல் பண்ணாதே’ என்றேன். அவள் என்னை கூர்ந்து பார்த்தபடி ‘என் வாழ்க்கையிலேயே செஞ்ச ஒரே தப்பு உன்னை பார்த்ததுதாண்டா’ என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். நான் அமைதியாக அவள் சொன்னது பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப்போல் இருந்தேன். அவளை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துபோய் டாக்டரிடம் காட்டிவிட்டு அப்படியே விடுதிக்கு கொண்டுபோய் விட்டுவிட்டேன். அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிய அவள் செல்போனுக்கு அழைத்தால் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பலமுறை தொடர்புகொண்டும் ஃபோன் அணைக்கப்பட்டே இருந்தது. விடுதிக்குச் சென்று விசாரித்தால் அவள் ஊருக்கு சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவளை தொடர்பு கொள்ள வழியில்லாததால் அப்படியே விட்டுவிட்டேன். இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
இப்போது வரை அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் அப்படி ஆவதற்கு நான்தான் காரணமோ என்ற குற்ற உணர்வு மட்டும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அவளும் அப்படி நினைத்துதான் என் தொடர்பிலிருந்து விலகிப்போயிருக்கலாம். எங்களுக்கென்று பொதுவான நண்பர்கள் யாரும் இல்லாததால் அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறியமுடியவில்லை. அவள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் இருப்பாள் என்றே தோன்றியது. உயர்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாள். ஆனால் இன்னொரு பக்கம் அவள் வாழ்க்கை தறிகெட்டு சீரழிந்து போயிருக்குமோ? பார்ட்டி, நண்பர்கள் என்று விடுபடமுடியாமல் போயிருப்பாளோ ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற பயம். என்னுடைய ஏளனம்தான் அவளை இப்படியெல்லாம் செய்ய வைத்ததோ ஏதோதோ நினைவு அவள் பாலியல்தொழிலாளியாகக்கூட மாறியிருப்பாளோ என்று நினைத்தேன். அப்படி நினைக்கவே பயங்கரமாக இருந்தது. குற்ற உணர்ச்சி கனவில் கருமை நிறத்தில் வந்து கொன்றது. கனவில் பாசிபடிந்த கிணற்றில் வழுக்கி விழுந்து செத்தேன், மலை உச்சியிலிருந்து குதித்தேன், பாலைவனத்தில் தண்ணீரில்லாமல் காய்ந்து வெப்பத்தில் உயிர் பிரிந்தது. எல்லாக் கனவிலும் நான் செத்துக்கொண்டே இருந்தேன். ஒன்றும் இல்லை அவள் என்னோடு பேசக்கூட வேண்டாம். நல்லா இருக்கிறாள் என்று தெரிந்தால்கூடபோதும்….அதுவரை என்னால் குற்ற உணர்ச்சியிலிருந்து மீளமுடியாதுதான்.
(ஜனவரி 2011 உயிரெழுத்து இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை)
சந்திரா:http://katrilalayumsiraku.blogspot.com