தாவணிக்கனவுகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 22,107 
 
 

அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள் 12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை கலர் ரவிக்கையும் இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை. நெற்றியில் ஒரு மெல்லிய கோடாக திருநீறும் அதன் கீழ் குங்குமம் ஒரு கோடு போலவும் இரட்டை சடை பின்னி அதில் ஒரு நாள் கனகாம்பரமும், ஒரு நாள் செம்பருத்தியும் அணிந்து வரும் அவள் அழகை காண கோடிக்கண் வேண்டும்..

வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து மல்லிகை பூவும் உடன் காதுக்கு பின் ரோஜாப்பூவை சரோஜதேவி ஸ்டைலில் குத்தியிருப்பாள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் டூயட் பாடுவது போல நானும் அவளும் என் அன்றைய கனவில் அவளோடு தான் டூயட் பாடுவோம்.

இரண்டு லாங் சைஸ் நோட்டும் டிபன் பாக்சும் வைத்து இருகைகளால் அதை மார்போடு அனைத்த படி அவள் வருகையில் சைக்கிளில் இரண்டு மூன்று முறை அந்த சாலையில் அவள் கண்ளில் படுவது போல வண்டி ஓட்டுவது ஒரு 3 மாதமாக தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

எனக்கு வேறு

எதுவும் வேண்டாம்

உன் நோட்புக்காக

மட்டும் நான்

இருந்தால் போதுமடி…..

ஒற்றைச்சடையோடு

தலை குணிந்து

ஞானத்தோடு

உன் கால் விரல்கள்

கோலம் போட

ஏங்குகிறேன்

உன்ஓரப்பார்வைக்காக…

இப்படி எல்லாம் அன்றைக்கு கடிதம் எழுதத் தெரியவில்லை. இன்று நினைவுகளோடு எழுதுகிறேன்.

காலில் கொழுசு சத்தம் ஜல் ஜல் என சல சலக்க தோழிகளின் நடுவில் அவள் இருப்பாள் சுற்றிலும் பாதுகவாலர்கள் போல இந்த பக்கம் இரண்டு அந்த பக்கம் இரண்டு என அந்த ஐவர் அணியை காண நாங்கள் சுத்தி சுத்தி வருவோம். அந்த ஐவர் அணிக்கு நாலு பக்கமும் கண்கள் போல எங்கிருந்து வந்தாலும் பார்த்து தகவல் சொல்லிவிடுவார்கள்.

8.20க்கு அவள் வரும் ABT பஸ்ஸைக்காக 8 மணிக்கே தவமாய் தவமிருப்போம். சனிக்கிழமைகளில் அவள் கலர் தாவணி அணிந்து வருவாள் பச்சை நிற பாவடையில் ரோஸ் நிற தாவணியும் என்னவென்று சொல்வது வஞ்சி அவளின் அழகை, எப்படி சொன்னாலும் கடைசியில் அவள் அழகு என்று தான் சொல்லவேண்டும்.

அந்த தேவதைக்கு ஒரு சுபநாளில் காதலை சொல்ல முற்பட்ட போது , எங்கிருந்தோ இடையில் வந்த அப்பா. என்னடா இங்கே ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாயா? அவள் காது பட அழைத்து கொத்தாக அள்ளிப்போனார்.

ஆஹா இந்த தாவணி எனக்கில்லை போல அப்பா அவமானப்படுத்தி விட்டார் என்று எண்ணும் போது தாவணியின் உடன் வந்த சின்ன தாவணி நண்பனுக்கு அப்புறம் என்ன அடைகாத்த கோழி போல நண்பனுடன் ஒட்டி திரிந்தோம். சில நாட்கள் கழித்து எல்லோரும் பாரியூர் கோயிலுக்கு போறோம் நீங்களும் வாங்க அண்ணா என்று நண்பனின் காதலி எங்களை அழைக்க, நண்பனின் காதிலோ புகை. (ஐவர் அணி கூட தனியாக போகவேண்டும் என்பது அவன் நினைப்பு ) எப்படா சனிக்கிழமை வரும் கோயிலுக்கு போவோம் எஎன காத்திருந்தோம் கோயிலுக்கே போகாத எங்களைஅந்த தாவணிக்காக எல்லா கோயில் படியேறவும் காத்திருந்தோம் எங்கள் மூவர் அணி.

சனிக்கிழமை காலை இருப்பதிலேயே ஒசத்தியான சட்டையும், பேண்டும் போட்டுகிட்டு முகத்துக்கு கொஞ்சம் பேரன் லவ்லியும் பான்ஸ் பவுடரும் அப்பி நெற்றியில் சந்தனம், குங்குமம் என்று பக்தி பழமாக நான் மட்டும் வருகிறேன் என்று நினைத்தால் எனக்கு முன்னே நண்பனுகள் வெய்ட்டிங். 9 மணி பேருந்துக்கு 7 மணியில் இருந்தே காத்திருக்கிறோம்.

சைக்கிளை விட்டுவிட்டு பஸ்நிலையத்தில் காத்திருக்கும் போது அவர்களும் ஒவ்வொருவராக வந்து சேர பாரியூர் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பக்கத்தில் இருக்கும் உருளி வரை பேசிக்கொண்டே நடந்தோம் ஏனோ அன்று தாவணி கொஞ்சம் எடுப்பாகவும் மல்லிகையும், அவள் அழகிடம் தோற்று போய் இருந்தது. சரி எப்படியும் இன்று என் காதலை சொல்லிடவேண்டும் என்று முடிவில் நான் இருக்க எனக்கு முன்னே அவள் இதழ்கள் பேசத் துவங்கியது.

இனிமேல் நீங்க என்னைய பார்க்க முடியாது, திங்கள் முதல் நாங்க எல்லாம் விடுதிக்கு செல்கிறோம் அதனால தான் உங்கள வரச்சொன்னோம் சும்மா காதலிக்கிறேன் நீ தான் உலகம் என்று எல்லாம் சுத்திகிட்டு இருக்காம +2 பாஸ்ஆகும் வழியப்பாருங்க..

நாங்களும் பாஸ் ஆகி எல்லாரும் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேருவோம் இதுதான் நம்ம டார்கெட். நீ படிச்சு பாஸ் ஆகி காலேஜ் வரும் வரை இதே போல அப்பவறைக்கும் என் மேல பாசம் இருக்கா உனக்குன்னு பார்ப்போம் எப்பவும் என்னையே நினைக்காமா பாஸ் ஆகற வழிய பாரு என்றாள்.

ஆக உனக்கு என்னை பிடிச்சிருக்கு சொல்லு ஆமா இந்த மரமண்டைக்கு விம் பவுடர் போட்டு விளக்கனுமா. ஊர் நோம்பி போது சும்மா பின்னாடியே சுத்தாதே சரியா..

சரி உனக்கு தீபாவளிக்கு துணி எடுத்து தரணும் என்பது என் ஆவல் சங்ககிரி செட்டியார் கடைக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போய்டுங்க சரியா. உதை வாங்க போற நீ.

நானொல்லாம் அங்க வரமாட்டேங்க நீங்களே எடுத்து காவ்யா கிட்ட கொடுத்து விடுங்க..

சரி உனக்கு நதியா மாடல் சுடிதார் ஒகே தானே ….

நோ நோ நான் எப்பவும் தாவணி தான் அணிவேன் உன் டேஸ்ட்டுக்கு எனக்கு ஒரு தாவணி எடுத்து கொடு அது போதும் எனக்கு, கல்யாணம் ஆகும் வரை தாவணி அப்புறம் சேலை தான் என் சாய்ஸ்.

சரி சரி எடுத்து கொடுத்துவிடுகிறேன் எனறு பல அளவாடளுக்கு பிறகு பிரிந்தோம்.

சிகப்பு கலர் தாவணியும், கருப்பு கலரில் பூப்போட்ட பாவடையோடு ஒரு மியூசிக் கிரிட்டிங்கார்டு வாங்கி தோழியிடம் கொடுத்து அனுப்பினேன் நாட்கள் செல்ல செல்ல கடிதம் மூலம் வளர்ந்தது காதல்.

+2 பரிட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்ததும் கோபி ஆர்ட்சில் சேர வேண்டும் என தீயாக படிச்சோம். விடுதியில் இருந்த வரை நடந்த கடிதப்போக்குவரத்து வீட்டுக்கு வந்ததும் நின்றது.

+2 பரிட்சையில் அவள் மட்டும் பாஸ் எங்களுக்கெல்லாம் எல்லாம் ஊத்திகிச்சு அவள் கல்லூரியில் படிக்கிறாள் என்று கேள்விப்பட எந்த கல்லூரி என்று அறிய பக்கத்து ஊரான அவள் ஊருக்கு சென்று புதிதாக அவள் ஊரில் நண்பர்களை ஏற்படுத்தி அப்புறம் எந்த கல்லூரி என்று கண்டுபிடித்து அவள் இருக்கும் விடுதி எல்லாவற்றையும் கண்டுபிடித்து அவளின் வீட்டு வளையத்தில் இருந்து அவளை பார்க்கவேண்டும் என்பதற்குள் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது அதற்குள் இங்கு பல தாவணிகள் வந்து போய்விட்டது மனதில். நானும் வேலை விசயமாக ஊரைவிட்டு வந்தாச்சு.

கடைசியாக கோபி பாய்ண்டு பாய்ண்ட் பஸ்சில் அவளைப்பார்த்தேன் தாவணியில் ஆனால் பேச இயலவில்லை கூடவே வில்லன்கள் இருப்பதால் கண்களில் மட்டும் மோதின ஆனால் பேச இயலவில்லை என் தாவணி கனவாகவே போய்விட்டாள்…

கடந்த முறை அவள் ஊர் நண்பனை எதாச்சையாக சந்தித்தபோது அவள் எப்படி இருக்காள் என்று விசாரித்தேன் அண்ணே அந்த அக்கா கல்லூரி முடிச்சதும் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கட்டிவெச்சிட்டாங்க. எங்க வீட்ல நான் கூட கல்யாணத்துக்கு போகல எங்கண்ணன்தான் போனோன் என்றான்…

அடப்பாவமே பாவாடையும், தாவணியும், புடவையை மட்டும் காதலித்து அணிந்தவள் இன்று அமெரிக்காவில் எப்படி மாடன் உடையில் இருப்பாளோ அவள் தாவணியும் கனவாகிவிட்டது…..

Print Friendly, PDF & Email

1 thought on “தாவணிக்கனவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *