தப்புத் தாளங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 10,905 
 

காலை ஆறு மணி.

எனக்கு மாயா மொபைலில் போன் செய்தாள்.

எடுத்தேன்.

“குட் மார்னிங் மாயா… உடனே வரட்டுமா?”

“விளையாடாதே பாஸ்கர். நான் சரியில்லை”.

“ஹேய் வாட் ஹாப்பண்ட்?”

“ராத்திரியெல்லாம் ஒரே வாந்தி.”

“என்னத்தை சாப்பிட்டாய்?”

“எதையும் சாப்பிடலை.”

“அப்ப எதுக்கு வாந்தி?”

“உன்னால யூகிக்க முடியலையா பாஸ்கர்?”

“முடியலை.”

“நீ அப்பாவாகப் போகிறாய்… நான் அம்மாவாகப் போகிறேன்.”

நான் ஷாக்காகி படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தேன்.

“நேற்று நான் தூங்கவே இல்லை. எனக்குப் பயமாய் இருக்கிறது..”

“இனி என்னாலும் தூங்க முடியாது.”

எனக்கு அன்றைய காலை கசந்தது. வயிற்றைப் பிசைந்தது.

“எங்கிருந்து பேசுகிறாய் மாயா?”

“ஹாஸ்டலில் இருந்து.”

“சரி. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?”

“எனக்கு உடனே உன்னைப் பார்க்கணும்.”

“சரி ஹாஸ்டலுக்கு இப்பவே வரேன்.”

பல் தேய்த்துவிட்டு, கார் காரேஜ் வந்தேன். அங்கிருந்த நான்கு கார்களில் சிறிய காரை உசுப்பிக் கிளப்பினேன். அடையாறிலிருந்து டி.நகரிலுள்ள அவள் ஹாஸ்டலுக்கு சென்றேன்.

மாயா காத்திருந்தாள்.

என்னைப் பார்த்ததும் பதட்டத்துடன் பொருமினாள்.

அந்த நிலைமையை எனக்கு எதிர்நோக்கத் தெரியவில்லை. முதல் அனுபவம்.

மாயா ரொம்ப வெகுளி. கவனமாக இருக்கத் தெரியவில்லை… அவளுக்கு பதினெட்டு வயது. பி.ஈ முதலாம் ஆண்டு சென்னையின் ஒரு பிரபல கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பெற்றோர்கள் வசிப்பது திருச்சியில்.

நான் பிகாம் படித்துவிட்டு, வேலை இல்லாமல் அப்பா சேர்த்து வைத்த பணத்தில் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். மாயாவை இரட்டைச் சடை, தாவணியில் ஒரு விழாவில் பார்த்தவுடன் சொக்கிப்போனேன். கடந்த ஒரு வருடமாகத்தான் அவள் எனக்குப் பழக்கம்.

ஆசையுடன் அவளை இரண்டு முறைகள் முயங்கியதில் இந்த விபரீதம் ஏற்பட்டுவிட்டது.

“என்ன ஆகும்? குழந்தை பிறந்துவிடுமா பாஸ்கர்…” .கண்களில் நீர் மல்க கேட்டாள். உடனே அவளை ஹாஸ்டலில் இருந்து என் காரில் வெளியே அழைத்து வந்தேன்.

“உன்னால்தான் எல்லாம், எவ்வளவு வாந்தி எடுத்தேன் தெரியுமா?”

“வேறு பாரிடமும் இதைச் சொன்னாயா?”

“இந்த அசிங்கத்தை யாரிடம் நான் சொல்ல? இதிலிருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடு பாஸ்கர். வெளியில் தெரிந்தால் நான் செத்துப் போய்விடுவேன்.”

“பயப்படாதே மாயா…. உடனே ஒரு டாக்டரிடம் போவோம்.”

“ஆண் டாக்டரிடமா? நான் வரமாட்டேன்.”

“சரி, ஒரு நல்ல லேடி டாக்டரிடம் போவோம்.”

“என்ன செய்தீர்கள் இப்படி ஆச்சு என்று அவள் கேட்பாளே!”

“கேட்க மாட்டாள்…அவளுக்கே தெரியும்.”

“அவள் என்ன கேட்பாள்?”

“என்ன கேட்டாலும், இப்ப நாம கல்யாணம் செய்துக்க முடியாது. அபார்ஷன் பண்ணிக் கொள்ளவேண்டும் என்று சொல்லலாம்.”

“லேடி டாக்டர், வேறு யார்கிட்டயாவது நம்மைப்பத்தி சொல்வாளா?”

“சொல்ல மாட்டாள் மாயா. இது அவ புரொபஷன்.”

“எவ்வளவு செலவாகும் பாஸ்கர்?”

“எவ்வளவு ஆனாலும் அதைப்பற்றி நீ கவலைப்படாதே. அதெல்லாம் என்னுடைய பொறுப்பு.”

அவளை என் வீட்டிற்கு அழைத்துப் போனேன். அம்மாவும் அப்பாவும் சிங்கப்பூர் போயிருந்தார்கள். ஒரே தங்கை காலேஜ் டூர் போயிருந்தாள்.

“வயிறு பசிக்கிறது பாஸ்கர். ஒருநாளும் இப்படி எனக்குப் பசித்ததே இல்லை.” புதிய பயத்துடன் சொன்னாள்.

சமையல்காரரிடம் இரண்டு பிரேக்பாஸ்ட் சொல்லிவிட்டு, சென்னை டெலிபோன் டைரக்டரியைப் புரட்டி லேடி டாக்டர்களைத் தேடினேன்.

மயிலை டாக்டர் சுகன்யாவிடம் போவது என்று முடிவுசெய்தோம்.

பிரேக்பாஸ்ட் முடித்துவிட்டு காலை ஒன்பரைக்கு டாக்டர் சுகன்யாவை பார்க்கச் சென்றோம்.

டாக்டருக்காக நீண்ட பெஞ்சில் பல தாய்மார்கள் வயிற்றைத் தள்ளிக்கொண்டு காத்திருந்தார்கள்.

அரைமணிநேரம் காத்திருத்தலுக்குப் பிறகு உள்ளே சென்றோம்.

டாக்டர் சுகன்யா வயதானவளாக இருந்தாள். கண்ணியமாக காணப்பட்டாள். எங்களை அன்புடன் வரவேற்றாள். நாற்காலிகளில் முதுகு படாமல் அமர்ந்தோம். “சொல் மாயா” என்றேன். மாயா என்னிடம் ‘நீயே சொல் பாஸ்கர்” என்றாள். என்னைக் கிள்ளினாள்.

நான் வெட்கத்துடன், “டாக்டர் என் பெயர் பாஸ்கர். இவள் மாயா. நாங்கள் தம்பதிகள் இல்லை. ஆனால் நாங்கள் அப்பா அம்மா ஆகிவிடுவோம் போலிருக்கிறது. நீங்கள்தான் இவளுக்கு ரகசியமாக அபார்ஷன் செய்து எங்களை ரட்சிக்க வேண்டும்.” என்றேன்.

இதைச் சொல்வதற்குள் எனக்கு வியர்த்துவிட்டது.

“உனக்கு வயசு என்னம்மா?”

“எய்ட்டீன்.”

“உனக்கு என்னப்பா வயசு?”

“ட்வெண்டி.”

“உன்வீடு எங்க பாப்பா?”

“இவள் ஹாஸ்டலில் இருக்கிறாள் டாக்டர். பி.ஈ.படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா, அம்மா திருச்சியில் இருக்கிறார்கள்.

“நீ?”

“நான் மெட்ராஸ்தான். வீடு அடையாறில்.”

“ஓஹோ… வெளியூரிலிருந்து படிக்க வந்த பெண்ணை இப்படி ஆக்கிவிட்டாய்!”

“அவளும் சம்மதித்தாள் டாக்டர்.”

“முட்டாள் மாதிரிப் பேசாதே.”

நான் பதில்பேசாது தலை குனிந்தேன்.

“ஏம்மா கொழந்தே, ஊரிலிருந்து அம்மா அப்பா உன்னை நம்பிப் படிக்க அனுப்பினால், நீ இப்படி அபார்ஷன் பண்ணிக்கொள்ள எவனோ ஒரு பையனுடன் வந்து உட்கார்ந்திருக்கிறாய்… இதெல்லாம் உன் அம்மா அப்பாவிற்கு தெரிந்தால் எப்படி இருக்கும் அவர்களுக்கு. யோசித்துப்பார்.”

மாயா விம்மி விம்மி அழுதாள். நான் இறுகிப் போயிருந்தேன்.

“ஏம்பா, உனக்குத் தங்கை இருக்கிறாளா?”

“இருக்கிறாள் டாக்டர்.”

“நாளைக்கு இதேமாதிரி உன் தங்கையும் ஒருத்தனுடன் என்னிடமே அபார்ஷன் பண்ணிக்கொள்ள வந்தாள் என்று வைத்துக்கொள்…”

“ஸாரி டாக்டர். வி லவ் ஈச் அதர்.”

“ஸோ வாட்?”

“இவள் படித்து முடிந்ததும் நாங்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறோம்.”

“அந்த விளையாட்டையும் படித்து முடிந்தபின் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.”

“ஸாரி டாக்டர். நாங்கள் ஒரு ஜாலிக்காக பண்ணோம்.”

“ஓ ஐ ஸி… இப்ப தெரிந்து விட்டதல்லவா, இதெல்லாம் ஜாலியில்லை என்று!”

டாக்டர், மாயாவை திரைக்குப்பின்னால் அழைத்துச் சென்றாள். பின்பு வெளியே வந்து வாஷ்பேஸினில் தன் கைகளை சோப் போட்டுக் கழுவினாள்.

மாயா தன் ஜீன்ஸ் ஜிப்பை சரி செய்தபடி திரைக்கு வெளியே வந்தாள்.

டாக்டர் சில வினாடிகள் யோசித்தாள். பிறகு என்னிடம், “குழந்தை நல்லா பார்ம் ஆயிருக்கு… டாக்டர் மதுசூதனன் என்பவருக்கு லெட்டர் தருகிறேன். அவரிடம் போய்ச் செய்து கொள்ளுங்கள். நத்திங் டு வொரி.” என்றாள்.

இதைக் கேட்டதும் மாயா பயத்துடன் என்னைத் தொட்டாள்.

“டாக்டர் நீங்களே இதைச் செய்ய முடியாதா? எனக்கு ஆண் டாக்டர் என்றாலே பயம்…”

“ஒரு ஆணிடம்தானே படுத்துக்கொண்டாய்? அப்ப மட்டும் பயமில்லையா?” சிரித்தாள்.

“ப்ளீஸ் டாக்டர்…நீங்களே எப்படியாவது….”

“திஸ் இஸ் நாட் மை ஜாப். மை ஜாப் இஸ் டு என்ஷ்யூர் நார்மல் டெலிவரி.”

ஒரு லெட்டர் எழுதி அதை ஒரு கவரில் போட்டு டாக்டர் மதுசூதனுக்கு கொடுத்தாள்..

“தாங்க்யூ டாக்டர்.”

பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பும்போது மாயாவிடம் “இனிமேல் இந்தமாதிரி தப்பெல்லாம் செய்யாமல் ஒழுங்காகப் படித்து முடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு கும்மாளம் அடி. ஆல் த பெஸ்ட்.” என்றாள்.

டாக்டர் மதுசூதனிடம் உடனே சென்றோம். அவரைப் பார்த்தாலே வில்லன் மாதிரி ஏராளமான மீசையுடன் கரடு முரடாக இருந்தார்.

நாளையே பண்ணிவிடலாம் என்றும், ஒரு லட்ச ரூபாய் செலவாகும் என்றார். பணத்துடன் வரச் சொன்னார்.

அவரைப்பற்றி விசாரித்ததில் அவர் ஒரு க்வாக் என்று தெரிந்து கொண்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒழுங்கான டாக்டர்கள் திருமணம் ஆகாத பெண்களுக்கு அபார்ஷன் செய்ய மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

பணத்திற்காக அலைந்தேன். எவரும் என்னை நம்பி அவ்வளவு பெரிய தொகை தரத் தாயாரில்லை. என் மோதிரம், செயினை அடகு வைத்து, மிச்சத்தை வீட்டில் திருடி ஒருவழியாக பணத்தை புரட்டிக் கொண்டுபோய் அந்த மதுசூதனனிடம் கொடுத்தேன்.

அதன்பிறகு, ஒரு வழியாக மாயாவை தைரியப்படுத்தி மதுசூதனனிடம் அழைத்துச்சென்று ஒப்படைத்தேன்.

அவர் செய்த அபார்ஷனில் எதுவோ தப்பாகி விட்டது. அதனால் மாயாவுக்கு அல்குல் அழற்சி ஏற்பட்டு ஏராளமாக உதிரப்போக்கு ஏற்பட்டது. ஒருவாரம் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு ஹோட்டலில் தங்க வைத்தேன்.

என்ன முயன்றும், அகன்ற மேகம்போல் பரவிய ரத்தப் பெருக்கில் நினைவு வராமலே என் மாயா இறந்து விட்டாள்…

மாயாவின் அம்மா அப்பா ஓடிவந்து கதறி அழுதனர்.

போலீஸ் கேஸாகி ஒரு வருடம் ஜெயிலில் இருந்தேன். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அசிங்கமாக கேவலப்பட்டேன்.

உடம்பின் முக்கியப் பிரதேசங்களின் சூட்சுமம் பதினெட்டு வயது வரையிலும் தெரிந்திராத என் காதல் சிறுமி மாயாவதி இன்று எனக்கு ஓர் கனத்த நினைவு மட்டும்தான்…

Print Friendly, PDF & Email

1 thought on “தப்புத் தாளங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *