ஓட்ரா வண்டியை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 68,791 
 

இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை’ என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு வட்டவடிவ தொப்பி. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத மனிதர் இளைய கண்ணன்.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது அவருக்கு பிடிக்கும். வேகமாக செல்லும்போது முகத்தில் அறையும் சில்லென்ற காற்றுக்காக மட்டுமல்ல, இருசக்கர வாகனங்களில் செல்லும் சகப்பயணிய்களான நாகரிகமங்கைகளை கலைப்பார்வையோடு காணவும் அவருக்கு இந்த விருப்பமிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓட்டுனர் உரிமம் வாங்கியிருந்தாலும், அரசு சட்டம் போடுவதற்கு முன்பே விலையுயர்ந்த ஹெல்மெட் வாங்கி விட்டார் என்றாலும், சைக்கிள் தவிர்த்து வேறெதுவும் ஓட்டத் தெரியாது என்பது அவரது அந்தரங்க சோகம்.

பொல்லாதவன் பட தனுஷ் போல நகரில் இருக்கும் எல்லா இருசக்கர வாகன விற்பனை நிலையங்களுக்கும் சென்று புதியதாக வந்திருக்கும் வண்டி எது, எவ்வளவு விலை, எந்த வண்டியில் எவ்வளவு எரிபொருள் சேமிக்க முடியும் என எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பார். நகரின் அனைத்து இருசக்கர வாகன விற்பனை நிலைய மேலாளர்களுக்கும் இவரை தெரியும். எப்படியும் வண்டி வாங்கப் போவதில்லை, வாங்கினாலும் ஓட்டத் தெரியாது, ஆனாலும் இறைவனை கேள்வி கேட்ட தருமி மாதிரி எதையாவது மாதாமாதம் புதியதாக கேட்டு கடுப்பேத்திக் கொண்டேயிருக்கிறார் என்பதால் நகரிலும், புறநகரிலும் இருக்கும் இருசக்கர வாகன விற்பனை நிலையங்கள் அனைத்திலும் ‘இளைய கண்ணனுக்கு இங்கேவர அனுமதியில்லை!’ என்று டிஜிட்டலில் பலகை வைத்திருக்கிறார்கள்.

இளைய கண்ணன் அப்படியும் விடுவதாக இல்லை. தன் அடிப்பொடிகள் யாரையாவது வைத்து ‘கடைசியாக வந்த இருசக்கர வாகனம் எது? எவ்வளவு விலை? என்னென்ன புதிய வசதிகள்’ என்று கேட்டுத் தெரிந்துவைத்துக் கொள்கிறார். இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூட தங்கள் வாகனங்களை பற்றி இளையகண்ணனுக்கு தெரிந்த அளவுக்கு தெரியாது.

தன்னை இளைஞனாக காட்டிக்கொள்ள அவர் செய்யும் இன்னொரு உபாயம் சுவாரஸ்யமானது. அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர்களாகவே இருப்பது போல பார்த்துக் கொள்வார். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வாசல்களிலும், டீக்கடை பெஞ்சுகளில் “ஹேய் மாம்ஸ், ஹாய் மச்சிஸ்!” என்று பேசிக்கொண்டு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த வாலிபன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்திக் கொள்வார்.

இருசக்கர வாகனம் வைத்திருக்கும் இளைஞன் எவனாவது மாட்டினால் போதும், முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு நகர்வலம் வருவார். வண்டி ஓட்டுபவன் மனம் சோர்ந்துப் போய் அந்த வண்டியை விற்றுவிட்டு சைக்கிள் வாங்கிவிடலாமா என்று யோசிப்பான். வண்டியில் போகும்போது இருபக்கமும் பார்த்தவாறே வருவார். ஏதாவது பெண்கள் இருசக்கர வாகனங்களில் வந்துவிட்டால் போதும் தலைவர் குஷியாகி விடுவார். “மாப்புள்ளே, பேக் வியூல அசத்தலா இருக்கு. அந்த புள்ளை முகத்தை பார்க்கணும். வேகமா ஓட்ரா வண்டியை” என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி ஆணையிடுவார். இவரது கதறல் முன்னால் போகும் புள்ளைக்கே கேட்டுவிடும். வயதானவர் என்பதால் இவரை திட்டாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞனை “பொறுக்கி!” என்று அந்த புள்ளை திட்டிவிட்டு, காறி உமிழ்ந்துவிட்டுப் போகும்.

“இப்பவெல்லாம் எல்லாப் பொண்ணுங்களும் ஹெல்மெட் போட்டு முகத்தை மூடிக்குது. இல்லேன்னா துணியை எடுத்து தாலிபான் மாதிரி மறைச்சிக்குதுங்க…” என்று அவ்வப்போது வருத்தப்படுவார்.

என்னுடைய போதாத நேரம், ஒருநாள் இளையகண்ணனிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

“மாப்புள்ளே மவுண்ட்ரோடு போடா!”

“என்னண்ணே அங்கே ஏதாவது வேலையா?”

“சும்மா ஜாலியா போலாம்டா. நெறைய புள்ளைங்க ஸ்பென்சர்ஸ் வருவாங்க ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே டைம்பாஸ் பண்ணலாம். அப்படியே ஈவ்னிங் பீச்சுக்கு போயிட்டோம்னா இன்னைக்கு பொழுது நல்லபடியா போகும்”

“அண்ணே எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லைண்ணே” என்று முனகிக்கொண்டே வண்டியை கிளப்பினேன்.

மதிய நேரம் என்பதால் அனல்காற்று முகத்தில் அறைந்தது. ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் வியர்வை வழிந்து நசநசத்தது. பில்லியனில் உட்கார்ந்திருந்த அண்ணனோ சாலையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். “என்னாச்சி இன்னைக்கு சன் டிவியில் ஏதாவது விஜய் படமா? பொண்ணுங்க அவ்வளவா காணோமே?”

தலையெழுத்தே என்று முணுமுணுத்துக் கொண்டு மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தேன். எப்போதும் சிகப்பு நிற விளக்கு எரியும் நந்தனம் சிக்னலில் நிற்கவேண்டியதாயிற்று. என் வண்டிக்கு நான்கைந்து வண்டிகள் முன்பாக ஒரு கருப்புப்புடவை ஸ்கூட்டரில் ஒயிலாக அமர்ந்திருந்தது. அண்ணன் எப்படியோ எட்டிப் பார்த்துவிட்டார். “மாப்புள்ளே அந்த கருப்புப் புடவையை ஃபாலோ பண்ணுடா! செம கிளாமரா தெரியுது” என்றார்.

பச்சை சிக்னல் கிடைத்ததுமே நானும் வண்டியை விரட்ட ஆரம்பித்தேன். ம்ஹூம், புயல் வேகத்தில் சென்ற கருப்புப் புடவையை தாண்டுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அடுத்த சிக்னல்.. அடுத்த சிக்னல்.. என்று இரண்டு மூன்று சிக்னல்களை தாண்டிதான் தேனாம்பேட்டையில் பிடிக்கமுடிந்தது. அண்ணன் கருப்புப் புடவையை பார்க்க வசதியாக சிக்னல் எல்லைக்கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தினேன். இருபதடி தூரத்தில் நின்றிருந்த போக்குவரத்துக் காவலர், இந்த வண்டியை மடக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

முகத்தை பவுடர் போட்ட கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டு தலையை ஸ்டைலாக, என்னவோ விருப்பமேயில்லாமல் திருப்புபவர்போல திருப்பி கருப்புப் புடவையை கண்டவர், “டேய், வண்டியை ஓட்ரா!” என்றார்.

“என்னாச்சிண்ணே! சிக்னல் இன்னும் விழலை? எப்படி போவமுடியும்?”

“எப்படியாவது போடா. ஃபைன் வேணும்னா நான் கட்டிக்கறேன். அந்த கருப்புப்புடவை வேற யாருமில்லே. உன்னோட அண்ணிதான்! வீட்டுலே பார்த்து சலிச்ச முகத்தை தான் இங்கேயும் பார்க்கணுமா? என்னை பார்த்துடப் போறா. சீக்கிரம் விடு”

பாவம். லென்சு மாமா மாதிரி வீட்டில் என்ன ரீல் விட்டுவிட்டு ஊர் சுற்ற வந்தாரோ என்று எண்ணிக்கொண்டே ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *