நிரஞ்சன் அவன் மொபைலை எடுத்து அந்த எஸ்.எம்.எஸ்ஸை மறுபடி திறந்து பார்த்தான். “உன்னை உடனே பாக்கணும் போல இருக்கு” என்றொரு வாசகம். அதற்கடுத்த எஸ்.எம்.எஸ்-ஸை படித்தான். அதே வாசகம். அடுத்ததும் அதற்கடுத்ததும் அதே. இதே மாதிரி பதினைந்து இருபது. எல்லாம் வேறு வேறு தினங்களில் அவனுக்கு அனிதா அனுப்பிய செய்திகள்.
உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு. அந்த வாசகம் அவன் மண்டைக்குள் ஒரு காட்டு வண்டின் அதீத ரீங்காரம்போல இப்போது கேட்க ஆரம்பித்தது. ஏற்கெனவே கொஞ்சமாய்க் குடித்திருந்த போதையில் அவனுக்கு மனது பிசைய ஆரம்பித்து கண்ணிமைகளில் சட்டென துளிகள் தளும்பி நிற்க ஒரு விம்மலுக்கான தருணமாய் வெடித்து நின்றது.
பாட்டிலில் மீதியிருந்த விஸ்கியை ஒரே மடக்கில் குடித்துக் காலிசெய்தான். அப்படியே கண்களை மூடி சுவற்றில் சாய்ந்துகொண்டான். அவன் கன்னங்கள் வழியே கண்ணீர் கரகரவென்று மெளனமாய் வழிய லேசாய் உடல் குலுங்கி ஒரு தேம்பல் புறப்பட்டது.
சிவா ஹாலில் சண்டே இண்டியன் படித்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் நிரஞ்சன் மேலேயே இருந்தது. அவன் இப்போதெல்லாம் தனியாகக் குடிக்க ஆரம்பித்துவிட்டான். சிவாவுக்குக் கவலையாக இருந்தது. போதை அதிகமானால் என்ன செய்வான் என்று அவனுக்குத் தெரியும். அவன் நினைத்த மாதிரியே நிரஞ்சன் தள்ளாட்டத்துடன் எழுந்து அறை மூலையிலிருக்கும் பீரோவின் இரு கதவுகளையும் அகலமாய்த் திறந்தான். அதில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ஏராளமான புடவைகளை சுழலும் கண்களுடன் பார்த்தான். அப்புறம் உள் லாக்கரிலிருந்து அந்த தாலிச் செயினை எடுத்துப் பார்த்தான். எல்லாமே அனிதாவுக்காக வாங்கிச் சேகரித்தது. பிறகு பீரோவிலிருந்து புடவைகளை கலைத்து உருவி மூலைக்கொன்றாய் வெறியுடன் வீச ஆரம்பித்தான்.
“டேய் நிரஞ்சா!” என்று பதட்டமாய் ஹாலிலிருந்து குரல் கொடுத்தான் சிவா!
நிரஞ்சன் அந்த தாலிச் செயினை மார்போடு வைத்து அழுத்தி அணைத்து வைத்துக் கொண்டான். அப்போது அவனிடமிருந்து தாங்க முடியாததோர் கதறல் வெளிப்பட்டு அப்படியே பீரோவின் கீழே சரிந்து படுத்தான். இப்போது அவன் உடல் ரொம்பக் குலுங்கியது.
“டாமிட்” என்றான் சிவா. அவனுக்கு சர்ரென்று ஒரு கோபம் தலைக்கேறியது. இவனுக்கு எத்தனை எடுத்துச் சொல்லியும் புரியாதா? இன்னும் எத்தனை நாளைக்கு அனிதா அனிதா என்று உருகிக் கொண்டிருப்பான். ஒரு பத்துப் பதினைந்து எஸ்.எம்.எஸ்-களை மொபைலில் வைத்துக் கொண்டு அதை அழிக்காமல் திரும்பத்திரும்ப பைத்தியம் போல் படித்துக் கொண்டு குடித்து அழுது தினம் கதறி…
அவன் தற்கொலை மாதிரி எதுவும் முடிவுக்குப் போய்விடுவானோ என்ற பயம் மட்டும் சிவாவுக்கு அடிக்கடி எழுந்து பயமுறுத்தியது. இரண்டு மூன்று முறை நடு இரவில் எழுந்து அவன் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் விபரீதமாய் எதுவும் செய்கிறானா என்று கண்காணித்தான். அறை நண்பனாய் இருக்கிற பாவத்துக்கு இதெல்லாம் செய்து தொலைக்க வேண்டியிருந்தது.
“ஏண்டா இப்டி இருக்க? ப்ளடி இடியட். பி பிராக்டிகல்” என்று ஒரு நாள் சிவா உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினான். அன்றைக்கு அவனை ஓங்கி அறைந்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது.
சிவா தரையில் முதுகு காட்டிக் கொண்டு படுத்திருந்த நிரஞ்சனின் மேல் ஒரு சில நிமிடங்கள் பார்வையை வெறித்தான். அவன் சாப்பிடாமல் அப்படியே தூங்கினாலும் தூங்கிவிடுவான். அவன் இப்போதெல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுவதுகூட இல்லை.
புத்தகத்தை வைத்துவிட்டு அவன் மெல்ல யோசனையுடன் எழுந்தான். சட்டையை அணிந்து கொண்டு கதவை லேசாக சாத்தி வைத்துவிட்டு வெளியே வந்தான். ’சோ’ என்று மரங்களை பலமாய் அசைத்துக் காற்று வீசியது. ஒரு சின்ன தூறல் மழையை எதிர்பார்க்கலாம் என்று தோன்றியது. ரோடு திருப்பத்தில் திரும்பி ஆச்சி மெஸ்ஸைப் பார்த்து நடந்தான். யோசனை பூராவும் நிரஞ்சனையும் அனிதாவையும் சுற்றி அவன் மூளையில் அடர்ந்து படர்ந்தது.
முட்டாள்கள்!
அனிதா முன்பு கோயமுத்தூரில்தான் இருந்தாள். நிரஞ்சனும் அவளும் எப்படி எங்கே சந்தித்துக் கொண்டு காதல் வலையில் விழுந்து தொலைத்தார்கள் என்ற விவரங்களை ஒரு மலைச்சிகரமேறி உலகை வென்ற சிலாகிப்புடன் ஒரு நாள் நிரஞ்சன் சொன்னான். அது ஒரு சுமாரான ஓடாத சினிமாவின் பிசுத்துப் போன திரைக்கதை மாதிரிதான் தெரிந்தது சிவாவுக்கு. அவனுக்கு இந்த மாதிரி புறாக்கள் சிறகடிக்கிற, சிலீர் என்று அலைகள் எழும்பி ஆர்ப்பரிக்கிற, பூக்கள் மந்தகாசமாய் சிலுப்பிக் கொள்கிற, பட்டாம்பூச்சிகள் படபடக்கிற காதல்களில் சிறிதும் சுவாரஸ்யமோ நம்பிக்கையோ இல்லாமலிருந்தது. ஓரமாய் நின்று பார்த்தோமா, ரசித்தோமா, கிடைத்த சந்தர்ப்பங்களில் கிளர்ச்சியுடன் கடலை போட்டு முடிந்தால் தொட்டுப்பார்த்து… என்று போய்க் கொண்டிருக்கவேண்டியதுதான் என்பது அவன் கட்சி. நினைந்துருகிக் கவிதையெழுதி, கைகோர்த்துப் படம் பார்த்து, பூங்காக்களில் தோள் சாய்ந்தமர்ந்து புற்களைக் கிள்ளிக்கொண்டிருப்பது அவனைப் பொறுத்த வரையில் நேரவிரயம். ‘ஹைலி இடியாட்டிக்’.
நிரஞ்சன் இதையெல்லாம் செய்து கொண்டு கால் தரையில் படாமல் மிதந்து கொண்டிருந்தான் என்று தெரியும். செல்போனை எடுத்துக் காதில் வைத்தான் என்றால் அவளுடன் நான்கு மணிநேரம் தொடர்ந்து பேசுவான். தினம் காலை 6 மணியிலிருந்து அவனுக்கு அவளிடமிருந்து எஸ்.எம்.எஸ்கள் வர ஆரம்பித்துவிடும். அசட்டுப் பிசட்டாக பரஸ்பரம் எதையாவது அனுப்பிக்கொண்டு இரவு ஒரு மணிக்குத் தூங்கப் போவது வரை மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான். அறைக்குள் குசுகுசுவென்று நடந்து நடந்து பேசுவான்.
இந்தக் காதல் துள்ளலும் கிளு கிளுப்பும் உருகலுமாய் கிடந்த அவர்களின் தினங்கள் திடீரென்று ஒரு நாள் முடிவுக்கு வந்தது. ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரைக் கையில் எடுத்துக் கொண்டு அனிதாவின் அப்பா சென்னைக்கு குடி புக லாரி பிடித்தார். கண்ணீர் மல்க அனிதா விடைபெற்றுக் கொண்டாள். “மிஸ் யூ வெரி மச் டியர். கொஞ்ச நாள் பொறு. வீட்டில் சொல்லி எல்லோரும் ஒத்துக் கொண்டதும் நம் கல்யாணம். டோண்ட் எவர் ஃபர்கெட் மி. லவ் யூ சோ மச். உம்ம்ம்மா.” என்று செய்தி அனுப்பினாள். நிரஞ்சன் இந்தப் பிரிவை ஜீரணிக்க இயலாமல் உறைந்து போய்க் கிடந்தான். “லைஃப் இஸ் லைக் தட். பி பிராக்டிகல் மேன்.” என்று வழக்கமாய் இரைந்தான் சிவா. நிரஞ்சனுக்கு அன்றிரவு சோகமின்றித் தூங்க ஒரு குவாட்டர் தேவைப்பட்டது.
பிறகு திடீரென்று ஒரு நாள் அவளிடமிருந்து வந்த எஸ். எம். எஸ்ஸை சிவாவிடம் காட்டினான். “உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு”
ஒரு நிமிடம் யோசித்து மறு நிமிடமே முடிவு செய்தான். ‘நான் சென்னைக்குப் போய் அனிதாவைப் பார்க்கப் போறேன்’ என்று சடுதியில் இரண்டு நாள் உடைகளை ட்ராவல் பேகில் திணித்துக் கொண்டு ஏதோ ஒரு பஸ்ஸில் கிளம்பினான். இரண்டு நாள் கழித்து நிரம்பி வழிந்த உற்சாகத்துடன் திரும்பிவந்தான். மொபைலில் அவளுடன் மெரீனா பீச்சில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டினாள். இரண்டு மெகா பிக்ஸல்களில் மலர்ந்து சிரிக்கும் ஆதர்ச காதலர்கள். “கூடிய சீக்கிரம் அவ அப்பா அம்மாகிட்ட சொல்லி எப்பாடு பட்டாவது ஓகே வாங்கிருவேன்னு சொல்லியிருக்கா. ஆனா அவ அம்மாவை கன்வின்ஸ் பண்றதுதான் கஷ்டம்கிறா!” என்றான் ஒரு இரண்டு சதவிகிதக் கவலையுடன்.
ஒரு மாதம் கூட ஆகவில்லை. மறுபடி அவளிடமிருந்து செய்தி வந்தது. ‘உன்னப் பாக்கணும் போல இருக்கு’. நிரஞ்சன் மறுபடியும் பஸ்ஸோ ட்ரெயினோ பிடித்தான். இப்படி மறுபடி மறுபடி இரண்டு வாரங்களுக்கொருமுறை இந்த “உன்னப் பாக்கணும்போல..” செய்திகள் வருவதும் அவன் ட்ராவல் பேகை தூக்கிக் கொண்டு சென்னைக்கும் கோவைக்கும் அலைவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. அப்படியாக அவன் ஒரு பத்துப் பதினைந்து தடவைகள் போய் வந்தும் விட்டான்.
‘இது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் நண்பா!. நீ பேசாமல் சென்னையிலேயே வேலை தேடி செட்டில் ஆகிக் கொள்வது உத்தமம். அது உனக்கும் அனிதாவுக்கும் ஏன் எனக்கும்கூட நல்லது’ என்று அவனிடம் சொன்னான் சிவா.
போறாக்குறைக்கு ராகவேந்திரா எம்போரியத்துக்கு சிவாவை அழைத்துச் சென்று அவளுக்கு அடிக்கடி எல்லா ரகத்திலும் புடவைகள் வாங்கிக் கொண்டு அதையெல்லாம் அறை மூலை பீரோவில் அடுக்க ஆரம்பித்தான். திருமணத்திற்குப் பிறகு ஒரு நாள் சஸ்பென்ஸாக அவளுக்கு அதையெல்லாம் காட்டவேண்டுமாம். உச்சபட்சமாக ஆலுக்காஸூக்குப் போய் ஒரு தாலிச் சரடு ஒன்றையும் வாங்கி வைத்துக் கொண்டான். அம்மாக்களும் அப்பாக்களும் அவர்கள் காதலை அங்கீகரித்து அவர்கள் தலைகளை ஆட்டுவது மட்டும்தான் பாக்கி. மற்றபடி நிரஞ்சன் அவன் மண வாழ்க்கைக்கான தயார் நிலையில் இருந்தான்.
கொஞ்ச நாட்களில் அனிதாவிடமிருந்து மொபைல் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் சோகங்களைத் தாங்கி வந்ததைக் கவலையுடன் சொன்னான் நிரஞ்சன். அவள் அப்பா அம்மாவிடம் தெரிவித்துவிட்டாளாம். அப்பா செய்தியின் உக்கிரத்தில் தளர்ந்துபோய்க் கிடக்கிறார். அம்மா பத்ரகாளி மாதிரி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறாள். காதல் கீதல் என்று ஏடாகூடாமாய் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருந்தால் நிச்சயம் என் பிணத்தைத்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்று உறுமலாய் சொல்லிவிட்டாளாம் அவள் அம்மா. இனிமேல் வேலை மண்ணாங்கட்டிக்கெல்லாம் போகவேண்டாம் என்றும் தடா போட்டுவிட்டார்களாம்.
‘எனக்கு பயமாயிருக்கிறது. என்ன செய்வது?. எனக்கு உன்ன உடனே பாக்கணும்போல இருக்கே! என்று அனிதா வரிசையாய் செய்தியனுப்பிக் கொண்டிருக்க நிரஞ்சன் உறக்கம் கெட்டு அலைந்தான். நடுராத்திரி திடீரென்று எழுந்து பீரோவைத் திறந்து பார்க்க ஆரம்பித்தான். திடீரென்று கிளம்பி சென்னை போனான். வழக்கம்போல் பீச்சோ, பார்க்கோ, தியேட்டரோ என்றில்லாமல் வளசரவாக்கத்தில் அவள் வசிக்கும் தெருவில் தூரத்திலிருந்து அனிதா அவள் வீட்டு மொட்டை மாடியில் நிற்பதைப் பார்த்து ஃபோனில் பேசிவிட்டு திரும்பிவந்தான். “இப்ப என்னடா செய்யறது சிவா?” என்றான் கலவரமடைந்த குரலில்.
அவனுக்கு இடுக்கண் களைய உடுக்கையாய் ஆலோசனைகள் எதுவும் என் கைவசம் இல்லையென்றான் சிவா. அப்படியே இருந்தாலும் கொடுப்பதாயில்லை. “இதெல்லாம் இப்படித்தான் முடியுமென்று முன்பே தெரியும்டா. இந்த லவ் புண்ணாக்குச் செண்டிமெண்ட் எல்லாம் உதறித் தள்ளு. பேசாமல் அந்தப் புடவைகளை சஹாய விலைக்கு விற்றுவிட்டு..” என்று முடிக்குமுன் சிவாவைக் கன்னத்தில் அறைந்தான் நிரஞ்சன். சிவா திகைத்து நின்றுவிட்டான்.
அப்புறம் ஒருநாள் இரவு அனிதா நிரஞ்சனுக்கு தொலைபேசினாள். பேசும்போது அவன் ரொம்பவும் பதட்டம் அடைந்திருந்தான். “என்ன அனிதா சொல்றே..” நீயா இப்படிப் பேசறே..” “அப்ப அவ்ளோதானா” என்கிற வாக்கியங்கள் காதில் விழுந்தன. பேசி முடித்தபின் பாலிவினைல் சேரை ஆத்திரமாய் எட்டி உதைத்தான். பிரமை பிடித்தது போல மொபைலையே வெறித்துப்பார்த்தவாறு நின்றிருந்தான். சிவா கலவரமடைந்து என்ன நிலவரம் என்று லேசாய் விசாரித்ததில் தழுதழுப்பாக விஷயத்தைச் சொன்னான். அனிதாவின் அப்பா இறுதியாக மிகப் பெரிதாக “நோ” சொல்லிவிட்டாராம். அம்மாவின் தற்கொலை மிரட்டல் தொடர்கிறதாம். “ஸோ இது நடக்காது… அவளை மறந்துடறதுதான் ஒரே வழின்னு சொல்றா..”
அப்புறம் அவளிடமிருந்து ஃபோன் மற்றும் எஸ்.எம்.எஸ்கள் வருவது சுத்தமாய் நின்று போனது. இவன் கூப்பிட முயற்சித்தபோது அவள் செல் நம்பரை மாற்றியிருந்தாள். அதிர்ச்சியில் பித்துப் பிடித்தவனைப் போலத் திரிந்த நிரஞ்சன் கடைசியில் ஆறுதல் தேடி பாட்டிலைப் பிடித்தான்.
மெஸ்ஸிலிருந்து பரோட்டா குருமா வாங்கிக் கொண்டு தூறலில் நனைந்து திரும்பிவந்தபோது நிரஞ்சன் இறைந்து கிடந்த புடவைகளுக்கிடையே கொஞ்சமாய்த் தெளிந்து உடகார்ந்து மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்தான். சிவா கொடுத்த பரோட்டா பொட்டலத்தைப் பிரித்து மெளனமாய் சாப்பிட்டான். “சிகரெட் இருக்கா..” என்று கேட்டு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான். பிறகு சிவாவை ஒரு மிகப் பெரிய கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்துக் கேட்டான்.
“ஸாரிடா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேன் இல்ல?” என்றான். கொஞ்சம் நிறுத்தி விழுங்கிவிட்டு “நாம ஒரேயொருதடவை போய் அனிதாவை எப்படியாவது பார்த்து பேசிட்டு வந்துரலாமா? ப்ளீஸ்!” கேட்கும் போது அவன் கண்கள் கெஞ்சலாய்ப் பனித்திருந்தது. சிவா அவனது முகத்தை ஊடுருவிப் பார்த்தான். குடித்ததினாலும் அழுததினாலும் அவன் முகம் வெகுவாகக் களைத்திருந்தது.
“யோசிக்கலாம்.. நீ தூங்கி ரெஸ்ட் எடு.. காலைல பேசலாம்.” என்றான் சிவா.
அவன் தூங்கியபின் அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. மனதளவில் இத்தனை கஷ்டப்படுகிற அவனுக்கு ஏன் ஒரு சின்ன ஆறுதலைக்கூடத் தன்னால் தர முடியவில்லை என்று யோசித்தான். அவனுக்கு முதன் முதலாக நிரஞ்சன் மேல் அதீதமாக ஒரு பரிதாபம் எழுவதையும், அவன் மனதின் ஏதோ ஒரு கோடியில் ஒரு சின்ன வலியையும் உணர்ந்தான். அவனுக்குள் சின்னதாக ஒரு இனம் புரியாத குற்ற உணர்வு எழுந்தது.
“டாமிட். பி பிராக்டிகல்” என்று தன் கன்னத்தில் ஒரு முறை அறைந்து கொண்டான்.
– தமிழோவியம்.காம் – ஆகஸ்டு 2009