சொல்ல மறந்த கவிதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 17,110 
 
 

சேத்துப்பட்டி பழமையின் விழுதுகளை நாகரீகம் விழுங்கிவிடாமல் விழித்துக்கொண்டு பாதுகாக்கும் ஒரு கிராமம். காலம் காலமாய் அந்தக் கிராமத்தில் வாழும் ஜனங்கள் வேறுபாடான ஒரு கலாச்சாரத்துக்குள்ளே, வாழ்க்கை நடைபழகிக் கொண்டிருப்பதால் அவர்களுக்குள் எப்போதும் சமத்துவம் என்பது விலக்கப்பட்ட விஷயம். அதனால் தான் அன்று அந்த நிகழ்வு நடந்தது.

அந்தக் காலம்@ ஆற்றுவெளியில் அவர்கள்…

சுஜா!
நீ
காற்றாகப் பிறந்தால் – நான்
மழைத்துளியாய்ப் பிறப்பேன்
நீ மண்ணாகப் பிறந்தால்- நான்
விதையாகப் பிறப்பேன்.
ஆனால்
நீ
பெண்ணாகப் பிறந்தால் மட்டும் – நான்
உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்
என்று அவளுக்கு அவன் சொல்லிக் கொண்டு வந்த கவிதையின் முடிவில் ஒரு கண்ணீர்த்துளி ஆற்று மண்ணில் ஊன்றியிருந்தவள் கையில் விழுந்தது.

“சுஜா என்ன இது” என்றான் திருமுருகன்,

“புரியலையா” என்றபடி அவன் தோளில் பதித்திருந்த முகத்தை எடுத்தாள் சுஜாதா.

“ஆமாம். இது என் கவிதைக்குத் தண்டனையா? தட்சணையா? யான்னு புரியல சுஜா”.

“இது தட்சணைதான் திரு. சந்தோஷ தட்சணை. இந்த ஒலகத்துல பொண்ணா பொறந்துட்டேன்னு என்ன பெத்தவங்களே ஒதுக்கி வைச்சப்ப இந்த பிறவியே வேணாம்னு நெனச்சேன். ஆனா இன்னக்கி ஒனக்காகவே ஒவ்வொரு பிறவியிலும் பெண்ணாகவே பிறக்கணும்னு நினைக்கிறேன். அதுதான் அந்த ஒரு துளி கண்ணீரோட முழு அர்த்தம். இந்த தண்டனை போதுமா! உங்க அடுத்த பிறவிக்கு”. என்றாள்.

“ம்…போதும் ஆனா இது அடுத்த பிறவிக்குத்தானே இந்தப் பிறவிக்கு இல்லையா சுஜா?” என்றான் மெல்லிய புன்னகையோடு கேட்டான் திருமுருகன்.

“ம்ஹ{ம்..முடியாது” என்று முகம்சிவந்து எழமுயன்றாள். “முடியும்” என்று அவள் கையைப்பற்றியிழுத்தான்.

சிரித்தால் விழும் அவளின் ஒற்றைக் கன்னக் குழிகள். அழகான அல்லி விழிகளுக்குள், அடர்ந்த கூந்தலுக்குள்@ அடிக்கடி அவன்மனம் தொலைந்து போவது உண்டு. அதை எப்போதாவது சப்தமிடும்போது ஒட்டிக்கொள்ளும் உதடுகளின்மீது தேடுவது வழக்கம். அப்போது அவன் தேடிக்கொண்டிருந்தான். அவள் அவன் இதயத்துடிப்பின் சத்தத்தையும், நெஞ்சத்தின் கதகதப்பையும் நெருக்கமாயுணர்ந்து கொண்டிருந்தாள். அது இருவரும் மறந்த ஒரு தருணம். ஆனால் அந்தத்தருணம் தான் அவர்களின் சிறகை முறிக்கப்போகிறது என்பதை உணராமல் போனார்கள். ஆற்றின் சலசலப்பைக்கூட அவர்களின் காதுகள் நிராகரித்திருத்த அந்த வேளையில்தான் மொக்கையனும், விருமாண்டியும் ஆற்றுவெளிக்கு வந்தார்;கள்.

“ஏல மொக்க யாரோ மறவுல இருக்குற சத்தம் கேக்குதுடா” என்றான் விருமாண்டி. அந்தச்சத்தம் மொக்கையனுக்கும் கேட்க, சந்தேகத்தோடு இருவரும் ஆளுயரம் வளர்ந்த ஆற்று நாணலை விலக்கிப் பார்த்தார்கள். அங்கே பார்த்த காட்சி மொக்கையனுக்கு எதிர்பாhராத அதிர்ச்சி. வேறுஜாதிக்காரன் கூட தன் உறவுக்காரப் பொண்ணு இருப்பதைப் பார்த்த அவன் கண்கள் சிவந்தன. வேகமாய் இடுப்பில் இருந்த அருவாளை அவன் உருவகையில் அதைத் தடுத்தபடி சத்தமில்லாது அங்கிருந்து கூட்டிவந்தான் விருமாண்டி.

“ஏண்டா தடுத்தே” என்றான் மொக்கையன்.

“எலே…மொக்க..சாராய ஊரலுக்கு எடம் பாக்க வந்த நம்மளுக்கு ஊரவே ரெண்டாக்குற விசயம் கெடச்சிருக்குடா, இத மொதல்ல ஊர் தலைவருகிட்ட சொல்லிட்டு பெறகு எதாயிருந்தாலும் செய்யலாம்” என்றான் விருமாண்டி. அவன் அப்படி கூறியபோதுதான் தன் தலைவர் ஞாபகம் வந்து தலையசைத்தான் மொக்கையன்.

அடுத்த சிலமணி நேரத்தில் அந்தக்காட்சி செய்தியாய் ஊர்த் தலைவர் மருதையன் காதில் விழுந்தது@ அவர் இரத்தம் சூடேறியது@ மீசை துடிதுடித்தது.

ஊhத்தலைவர் மருதையனுக்கு வேற்று ஜாதிக்காரன் காற்றுக் கூட தன் ஜாதிக்காரன் மேலே வீசக்கூடாதுன்னு நெனக்கிற மனசு. அதற்கு எப்பவுமே உதவுற கொள்ளிக்குச்சிதான் மொக்கயன். கெடச்ச விஷயத்தை சும்மா விடுவாரா பத்த வச்சாரு. ஆனா உண்மையைப் பொறட்டிப் போட்டு வச்சாரு.

“டேய்… வேற்று சாதிக்காரன் நம்ம பொண்ணு கையைப்புடுச்சு இழுத்துட்டாண்டா@” என்று மருதையன் சொல்லிக் கொடுத்தபடி மொக்கையன், வதந்தியைப்பரப்பி விட அடுத்த சில வினாடிகளில்….
அந்தக் கிராமத்தின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை ஜாதித்தீ பற்றிக் கொண்டது. அந்த கிராமமே இரண்டுபட்டுப்போனது. ஆங்காங்கே இரத்தச் சிதறல்கள், அரங்கேறியது@ முடிவாக அந்தக் கலவரத்தைத் தடுக்கச்சில பெரியோர்கள் தலையிட்டுச் சமாதானம் பேசப் பேச மெல்ல மெல்ல அந்தக் கலவர பூமியில் அமைதி திரும்பியது. ஆனால் அவர்கள் வீட்டில்…

“வேணாகண்ணு அந்தப் பொண்ணு, அவ ஒன்ன நெசமா விரும்பியிருந்தாலும், அவள ஒன்னோட சேர்ந்து வாழவிடமாட்டானுக” என்றாள் செல்லாயி.

என் உசுரு தானே போகும் போனா போகட்டும்மா! என்றான் திருமுருகன்.

“சொல்றத மொதல்ல கேளு முருகா! நீ நல்லாயிருப்ப ஒனக்கு நல்ல பொண்ணா நாங்க பார்த்துக் கண்ணாலம் கட்டிவைக்கிறோம்.”

“அது மட்டும் என்னால் முடியாதும்மா. உடலுக்கு உசுரும்@ உணர்வும் முக்கியம்.” என்றான்.

ஏண்டி அவங்கிட்ட வெட்டியா பேசிக்கிட்டருக்க இன்னிக்கு ஊர்ல பாதிபய அடிபட்டுக் கெடக்குறான்னா அதுக்கு இவன்தான் காரணம். முடிவா அவளை மறக்கச் சொல்லு. இல்லேன்னா இந்த வீட்டவிட்டு வெளியே போகச் சொல்லு! என்று அவர்களுக்குள் நடந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமுருகனின் அப்பா, சின்னக்கருப்பன்.
சில நிமிடங்களில் அந்த வீடெங்கிலும் அமைதி நிலவிது.

அந்த வீட்டில் கடைசியாகச் சந்தித்துக் கொண்ட நிமிடங்கள் முறிந்து எழுந்தபோது மனதில் ஒரு முடிவு இருந்தது. அது அந்த கிராமத்தை விட்டு வெறியேறுவது என்ற ஒரே முடிவு.

ஒரு புறம் திருமுருகன் கிராமத்தை விட்டு வெளியேறத் தயாராக, மறுபுறம் அவள் எதற்கும் தயாராகாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
“ஏண்டி ஒன்ன தண்ணியெடுக்;க அனுப்பிச்சா தாலிகட்ட ஆள பிடிச்சிட்டா வந்திருக்க” என்று பல்லக் கடித்துக் கொண்டு அவளை அடிக்க வந்த மாயாண்டியை இடை தடுத்தான் மருதையன்.

“ஏல மாயி இதுக்குத்தான் பொண்ணுகள காலகாலத்துல கரசேத்து விட்ரணுங்கிறது இல்லைன்னா இப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டே மாயாண்டியிடமிருந்து நகர்ந்து வந்து மொக்கையன் மீது கைவைத்து அழுத்தினான். மருதையனும், மொக்கையனும் அதற்கேற்ப வளைந்து நெளிந்து அவரைப் பார்த்துச் சிரிக்க மருதையன் சொல்ல வந்த அர்த்தம் மாயாண்டிக்குப் புரிந்தது.

“ஐயா நாளைக்கே எம் பொண்ணுக்கும், மொக்கையனுக்கும் ஒங்க தலமைல கல்யாணம்ங்க” என்ற மாயாண்டி தன் அவசர முடிவைச் சொல்ல அதிர்ந்து போனார்கள் சுஜாதாவும் அவள் அம்மா வேலம்மாளும்.

“ஏங்க கொஞ்சம் பொறுத்து யோசிக்கலாமே” என்றாள் வேலம்மாள்.

“இந்தக் கழுதய நான் நம்ப முடியாதுடி. நாளைக்கு என் சாதிகாரன் முன்னால நான் தலைகுனிஞசு நிக்க முடியாது.” என்று சாதி மந்தமேறிய நாக்கில் சொல்லிவிட்டுப் போனார்.

மருதையனுக்கும், மொக்கையனுக்கும் தன் சாதியை உயர்த்திப் பிடித்து விட்டதுபோல் ஒரு சிறிய தற்பெருமை மனதுக்குள் தாண்டவமாடியது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது அப்போது அவள் எடுத்துவிட்ட முடிவு…
அந்தக்கிராமத்தை விட்டும், அவளைவிட்டும் தூரமாகும் சோகத்தை மெல்ல மெல்ல திருமுருகனின் பாதச்சத்தம் சொல்லிக்கொண்டே வந்தது. நெஞ்சமெங்கும் அவளின் நினைவுகள் துளித்துளியாய் நிரம்பிக்கொண்டு நடக்கையில்.

திடீரென்று…

“நில்லுங்கள் திரு” என்றது ஒரு குரல்.

சட்டென்று திரும்பிப் பார்த்தான் திருமுருகன்.

“சுஜா நீயா” என்று திகைத்தான். மறு நிமிடமே அவளை உற்றுப்பார்த்தான். முத்துமுத்தான வேர்வை அவள் நெற்றியெங்கும் தொற்றிக்கொண்டு நின்றது. ஓடி வந்த வேகத்தில் மூச்சு மேலும் கீழுமாய் வேகமாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“நீங்க என்னை நேசித்தது நிஜமா திரு?” என்றாள். அந்தக் கேள்வியக் கேட்டபோது அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் விழிகளில் மட்டும் ஏமாற்றமும்;, கோபமும் கலந்து இருந்தது.

“இதிலென்ன சந்தேகம் சுஜா” என்றான் திரு.

“அப்ப நீங்க என்ன நேசிச்சதும் என்மேல் உயிரை வெச்சிருக்கிறேன்னு சொன்னதும் நிஜம்”.

“ஆமாம்:.

உயிரை விட்டு உடல் மட்டும் போனால் அதற்குப் பெயர் பிணம் திரு. அப்ப நீங்க பிணமா? என்றாள்.

திருமுருகன் மௌனமானான். சில வினாடிகளுக்குப் பிறகு…

“நீ வாழனும்னா அதற்கும் நான் தயார் சுஜா” என்றான் திருமுருகன்.

“அது முடிவல்ல திரு. நீங்க வாழனும் அதுவும் என் கூட வாழனும்”.

“அத இந்தச் சமுதாயம் ஒத்துக்காது சுஜா”

“முடிந்தவரை போராடுவோம் திரு” என்றாள் சுஜா.

அவள் பேசப் பேச அவன் முடிவு தளர்ந்து கொண்டே வந்தது. முடிவில் நாளை மேட்டுப்பாறை முருகன் கோயிலில் திருமணமென்று அவர்களுக்குள் ஒரு நிச்சயதார்த்தம் முதல் சமாதானத்துக்குள் நடந்து முடிந்தது.

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய விஷயம் மெல்ல ஊருக்குள் இரண்டாம் ஜாமத்தில் கிசுகிசுத்தது. மூன்றாம் ஜாமத்தில் சலசலத்தது. நான்காம் ஜாமத்தில் கலகலத்து ஊர்க்கூட்டம் கூடியது.

“ஐயா நீங்க பார்த்து எது செஞ்சாலும் சம்மதங்க.” என்று அவமானத்தின் வேர்கள் பரவியிருந்த முகத்தோடு சொன்னார்கள், மாயாண்டியும் வேலம்மாளும்.

‘வலுத்தவன் சொல் சபையேறும்@ இழைத்தவன் சொல் எடுபடாதென்பது சின்னக்கருப்பனுக்குத் தெரியும். அதனால் தலைகுனிந்து மட்டும் நின்றான். அவர் அருகிலே கலங்கிய விழிகளோடு நின்றிருந்தாள் செல்லாயி.

“ஐயா இதுகல ரெண்டுல ஒண்ணு பர்த்திரணும்ங்க” என்று கூட்டத்திலிருந்து முந்திக்கொண்டு சொன்னான் மொக்கையன்.

“அதத்தாண்டா மொக்க நானும் யோசிக்கிறேன்.” என்று மொக்கையனைப் பார்த்து மீசையை முறுக்கினார் மருதையன்.

மருதையனுடைய சமிக்கை பாஷையெல்லாம் மொக்கையனுக்கு அத்துப்படி. அவருகிட்ட வேலை பார்த்த போது அவன் கத்துக்கிட்ட பாடம் அது. அவர் சொன்ன அர்த்தம் புரிந்து, ஆட்களைத் திட்டிக்கொண்டு, அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான்.

அந்தக் காற்றுக்குத் தானே தெரியும் அந்த உன்னதக் காதலர்கள், தன்னையும், காற்றையும் சுவாசித்து வாழ்ந்தது.

காற்று “ஓ” என்று அலறியபடியே வீசிக்கொண்டிருந்தது.

“ஏலேய்… அவங்கல எங்க பார்த்தாலும், அவன மட்டும் தீர்த்துக்கட்டிட்டு, அவள மட்டும் இழுத்துட்டு வந்திருங்கடா” என்று மொக்கயன் சொல்ல எட்டு திசையிலும் ஆட்கள் பறந்தனர். ஆனால்; கடைசியில் அவர்களை காணவில்லைங்கிற செய்தி மட்டும் வந்து சேர்ந்தது.

ஏற்கனவே மொக்கையனுக்கு அவளால் நேர்ந்த ஏமாற்றம் மனதுக்குள் வெந்து கொண்டிருந்தது. இதில் அவர்களைக் பார்க்கிற செய்தி மேலும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உண்டு பண்ணியது. சில வினாடிகள் யோசனையில் ஆழ்ந்தபடி நின்றிருந்தான். பிறகு தன் ஆட்களைப் பார்த்து ஆவேசத்தோடு..

அவளைக் கூட்டிட்டு அவன் ஊருக்குள்ளே ஒழிஞ்சிருக்கலேன்னா தாலிகட்டத்தாண்டா போயிருக்கணும். ஊரச் சுத்தியுள்ள ஒரு கோயில் விடாம தேடுங்;கடா, என்று சொல்லிவிட்டு ஆட்களோடு கிளம்பினான் மொக்கையன்.

புது மணமகன் திருமுருகன், புது மணமகள் சுஜாதா. மந்திரங்களும் மேள தாளங்களும் முழங்காமல் பெட்டிக் கடையில் வாங்கிய மஞ்சள் கயிற்றில், ஒரு மஞ்சள் கிழங்கை முடிந்து மங்களகரமாய்த் திருமணம் முடிந்தது.

அவர்கள் கண்களுக்குள் ஆயிரம் கனவுகள். புதுமண வாழ்வில் புகப்போகும் மகிழ்ச்சி மனமெங்கும் நிரம்பியிருந்தது. இன்னும் சொல்ல முடியாத எத்தனை எத்தனையோ உணர்வுகளோடு, இருவரும் இறங்கிவர…

அவர்களின் எதிரில் மொக்கையனும், அவனது ஆட்களும் நின்றிருந்தார்கள். திடுக்கிட்டு அவர்கள் கால்கள் அதிர்ச்சியால் நின்றது.

“மொக்க நான் சொல்ற…” என்று திருமுருகன் ஏதோ சொல்ல வர அதற்குள் ஆத்திரத்தோடு அவன் கையில் இருந்த அருவாளை அவன் மீது வீசினான். ஆனால் அந்த அருவா இடைமறித்த சுஜாதாவின் நெஞ்சைப் பிளந்து இறங்கியது. அவள் வலியால் தளர்ந்தாள். திருமுருகன் மீது சரிந்தாள்.

மெல்ல மூடியிருந்த விழிகளைத் திறந்தாள். அவளை அவன் தன் மடியில் தாங்கியிருப்பதை அவள் உணர்ந்தாள். அதே சமயம் தன் உயிர் பிரியப் போவதையும் உணர்ந்திருந்தாள். அப்பொழுது…

“திரு நான் உங்களுக்கு ஒரு கவிதை சொல்லட்டுமா?” என்றாள். வலியில் கலந்த மெல்லிய புன்னகையோடு.

திருமுருகனின் இமைகளின் சுவற்றில் கண்ணீர் தேங்கியிருக்க, செய்வது அறியாமல் “சொல்” என்றான்.

“திரு
நீ காற்றாகப் பிறந்தால் – நான்
சருகாகப் பிறப்பேன்
நீ
ஆறாகப் பிறந்தால் – நான்
மழைத்துளியாய்ப் பிறப்பேன்
நீ
மண்ணாகப் பிறந்தால் – நான்
விதையாகப் பிறப்பேன்
ஆனால்
நாம்
மனிதராய் மட்டும் இந்த உலகத்தில்
பிறக்க்..க்க..க”

என்று அவள் சொல்லிக்கொண்டு வந்த கவிதை முடியும் முன்பே அவள் மூர்ச்சையானாள்.

ஆனால்…

“டேய்; மொக்க ஒங்களால எங்க உடலதாண்டா பிரிக்க முடியும் உசுர இல்ல” என்ற போது அவன் குரலில் கோபம் தழும்பவில்லை. சோகம் தழும்பி இருந்தது.

“எலா முருகா வேணாமுடா” என்று மொக்கையனும் அவன் ஆட்களும் பின்னால் நகர்ந்தார்கள்.

சீச்சீ… அவ ரத்தம் பட்ட இந்த அருவாள்ல ஒங்க ரத்தம் பட்டா அது அவளுக்கு அசிங்கமுடா… உசுரோட இருந்து போராடலாம்னு நெனச்சோம். ஆனா உசுர எடுத்துட்டீங்களேடா, என்ற விரக்த்தியோடு வார்த்தைகளை முடித்த மறுநிமிடமே கையில் இருந்த அருவாளை தன் கழுத்தில் வைத்து அழுத்தினான் திருமுருகன்.

அவன் ரத்தம் பீறிட்டது. சரிந்தான்@ துடித்தான்@ அதே இடத்தில் அவனும் மூர்ச்சையானான்.

அந்தக் காட்சியைப் பார்த்;த மொக்கையனும் அவன் ஆட்களும் உறைந்து போனார்கள்.

அவர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்த கிராமத்து ஜனங்கள் அழுகையையும் அனுதாபத்தையும் அலை அலையாய் வீசினார்கள். ஆனால் மருதையன் மட்டும் அவர்களின் சடலத்தை எப்படிப் பிரித்து சுடுகாட்டுக்கு எடுத்துப் போவது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.

நடந்து முடிந்த நிகழ்வின் அரிச்சுவடு அறியாமலே…
ஜாதிப் பிரிவினைச் சொல்லை – அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வர்.
நீதிப் பிரிவினைகள் செய்வார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

என்று அந்தக் கிராமத்தில் அருகிலிருந்த பள்ளி ஆசிரியர் சொல்லிக் கொடுக்க, அதைக் குழந்தைகள் வழிமொழியும் சப்தத்ததைக் காற்று சுமந்து கொண்டு அந்தக் கிராமம் எங்கும் வீசியது யார் காதிலாவது விழுந்து மனதில் பதியாதா என்ற ஏக்கத்தோடு…
இன்னும் அந்தக் காற்று வீசிக்கொண்டேதான் இருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *