சொல்லாத காதல் செல்லாது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 4,713 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கவிதா நாளை மறுநாள், திருச்சிக்கிளைக்கு மாற்றலாகி போகிறாள். நான் அவள் மேல் கொண்டுள்ள அன்பை இந்த இரண்டு வருடங்களாக எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது.

அவள் அலுவலகம் முடிந்து போகும் போது எப்படியாவது வெளிப்படுத்தி விட வேண்டும்” என்று நினைத்துக் கொண்ட கணேசன் பைலை எடுத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்த மேஜைக்கருகில் வந்து “என்ன கவிதா, திருச்சிக்குப் போன பிறகு எங்களையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்வீர்களா” என்று கேட்டான்.

“இந்த அலுவலகத்தில் வேலை செய்த ஒவ்வொரு நாட்களும் ஒரு சுவையான அனுபவம் கணேசன். எனக்கு வேலை சொல்லித் தந்த இந்த ஆபீஸையும் இங்குள்ளவர்களையும் அவ்வளவு எளிதில் என்னால் மறந்து விட முடியுமா?” என்றவள் பியூன் வந்து “மானேஜர் உங்களைக் கூப்பிடுகிறார்” என்றதும் எழுந்து மானேஜர் அறைக்குச் சென்றாள்.

கவிதா ஆபீஸில் வேலை முடிந்ததும் பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியதும், கணேசன் அவளைப் பின் தொடர்ந்தான்.

எப்படியாவது இன்று கவிதாவிடம் சொல்லி விட வேண்டும். எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டே வருவதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது.

அருகில் ஒரு பூக்காரி, ரோஜாப்பூக்கள் விற்றுக் கொண்டிருக்க, ‘இதில் ஒன்று வாங்கி கவிதாவிடம் கொடுத்து ஆரம்பிக்கலாமே’ என்று எண்ணியவாறு பணம் கொடுத்து ஒரு பூங்கொத்து வாங்கிக் கொண்டுத் திரும்ப, தன் வீட்டிற்கு போக வேண்டிய பஸ் வந்தது. ‘கவிதாவிடம் நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம். போய் விடுவோமா’ என்று நினைக்குமுன் பஸ் கிளம்பிப் போய் விட்டது.

அவன் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கவிதாவின் அருகில் நிற்க, “என்ன கணேசன் பூவெல்லாம் வாங்கிய மாதிரி இருக்கிறது. யாருக்காக வாங்கிக் கொண்டு போகிறீர்கள்?” என்று கேட்டாள் கவிதா.

“அது… அது… வந்து… என் தங்கை சுதா கொஞ்ச நாளாக ரோஜாப்பூ வாங்கி வா அண்ணா என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இங்கே ரோஜாப்பூவை பார்த்ததும் வாங்கி விட்டேன்” என்றான் உண்மையைச் சொல்ல முடியாமல் திணறியவாறு.

“உங்கள் வீடு போகும் பஸ் வந்ததே. அதிலே போகவில்லையா? யாருக்காகவாவது காத்து நிற்கிறீர்களா?”

“அது… அதெல்லாம் ஒன்றுமில்லை. பூவாங்கி விட்டுத் திரும்பும் போது பஸ் வந்ததைக் கவனிக்கவில்லை. அடுத்த பஸ் வந்ததும் போகலாமே என்று நின்று கொண்டிருக்கிறேன்”.

“நீங்கள் திருச்சிக் கிளைக்கு மாற்றல் வாங்கி வருவீர்களா?” அவனை நேரடியாக பார்க்காமல் கேட்டாள் கவிதா.

“திருச்சிக்கா…எதற்கு?” என்று அவன் சொல்வதற்குள் பஸ் வந்து விட “சரி! நான் வருகிறேன் பஸ் வந்து விட்டது” என்று சொல்லியவாறு கவிதா கிளம்பினாள்.

அவள் ஏறி ஜன்னலில் உட்கார, பஸ்ஸின் அருகில் வந்து “கவிதா! நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றான். “என்ன கணேசன்?” என்று திரும்பினாள் “அது வந்து…” என்று கணேசன் ஆரம்பிப்பதற்குள் பஸ் கிளம்பி விட்டது. விக்கித்துப் போய் நின்றான்.

மறுநாள், ஆபீஸில் வேலை மும்முரத்தில் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க, “என்ன கணேசன் ஏதோ சொல்ல வந்தீர்கள். அதற்குள் பஸ் கிளம்பி விட்டது, என்ன விஷ்யம் சொல்ல வந்தீர்கள்?” என்று கேட்டாள் கவிதா.

“அது.. அது… நீங்கள் திருச்சிக்கு என்றைக்கு கிளம்புகிறீர்கள் என்று கேட்கத்தான் நினைத்தேன்” என்றான் கணேசன்.

“ஓ! அப்படியா? நானும் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று நினைத்தேன். அது சரி. நான் திருச்சிக்கு நாளை மறுநாள் கிளம்புகிறேன். அன்று இரயில்வே ஸ்டேஷன் வந்து என்னை வழியனுப்ப வருவீர்களா?”

“கண்டிப்பாக வருகிறேன்” என்றான் கணேசன்.

ரயிலில் கவிதா ஏறி உட்கார்ந்திருக்க, ஜன்னலுக்கு வெளியே நின்ற கணேசன் அவளோடு அரசியல் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள்ளே “கவிதாவிடம் இப்போதாவது சொல்லி விடலாமா” என்று யோசித்துக் கொண்டிருக்கையில் “என்ன கணேசன் யோசனையில் இருக்கிற மாதிரி தெரிகிறது?” என்று கேட்டாள் கவிதா.

“அது… ஒன்றுமில்லை”

“ஒன்று சொல்லட்டுமா கணேசன்”

“என்ன கவிதா?”

“யாரையாவது விரும்புகிறீர்களா?”

“யூ மின் லவ்”

“ஆமாம்”

“அப்படி ஒன்றுமில்லையே!”

“உண்மையாக?”

“ஆமாம் கவிதா!”

“ஏன் பொய் சொல்கிறீர்கள் கணேசன்? நீங்கள் என்னை விரும்புகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கணேசன் சொல்லாமலே பொத்தி வைக்கும் காதல் வளராது கருகிப் போகும். நீங்கள் எப்படியாவது என் மேல் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துவீர்கள் என்று மிகவும் ஆவலாக இருந்தேன். சொல்லாதக் காதல் செல்லாது கணேசன்.

ஒரு பெண்ணிடம் மென்மையாக ஒரு காதலை வெளிப்படுத்தக் கூட பயப்படும் உங்களை நான் என் வாழ்வில் ஏற்றுக் கொள்ளவே தயங்குகிறேன். இன்றோடு உங்கள் மீது வைத்திருந்த அன்பு, உங்களை பற்றிய எண்ணங்கள், ஞாபகங்களை இங்கேயே உதறி விட்டுப் போகிறேன்” என்று சொல்லி முடிக்கவும் ரயில் கிளம்பியது.

“வருகிறேன் கணேசன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு கையாட்டினாள் கவிதா.

டாடா சொல்லக் கூட உணர்வில்லாமல் சிலையாகி நின்று கொண்டிருந்தான் கணேசன்.

– 01.04.2001, தினபூமி – ஞாயிறுபூமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *