சக்தி சுழல் நூலகம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 1, 2023
பார்வையிட்டோர்: 6,487 
 
 

சேது வடக்கு மாட வீதியில் சைக்கிளை லாவகமாகத்திருப்பினான். மனம் உற்சாகத்தில் மிதந்தது. உள்ளுக்குள் பிரார்த்தித்துக்கொண்டான்.

“இன்று எப்படியும் பார்த்துரணும்”.

கண்ணுக்குள் பட்டாம்பூச்சியாய் அவள் பறந்து வந்தாள். இன்று அவளுக்காக விகடனை  தனியாக எடுத்து வைத்திருந்தான். வியாழக்கிழமை வந்து விட்டால், வாசலில் வந்து நின்றபடி கேட்பாள்.

“இன்றைய விகடன் இருக்குதுல்ல?”  அப்படிக் கேட்கும்போது, காதோரம் சுருண்டு வளைந்திருக்கும் முடிகள், சோப்பு நுரையோடு ஈரத்தில் ஒட்டிப்போயிருப்பதையே ரசிப்பான் . முகம் கழுவிக்கொண்டிருக்கும்போதே  ஓடி வந்திருக்க வேண்டும்.

“இந்தாங்க..” எதோ புத்தம்புது நாய்க்குட்டியை பைக்குள் இருந்து எடுத்துக்கொடுப்பது போல பதவிசாக எடுத்து நீட்டுவான்.

அப்படி அருகில் நின்று அவள் வாங்கும்போது, மைசூர் சாண்டல் சோப் வாசம் கிறங்கடிக்கும் .

அவனுக்கு எப்போதும் லைப்பாய் சோப் தான் பிடிக்கும். அதுதான் ஆண் மகன்களுக்கான சோப் என்று மனதில் பதிந்துபோய் இருந்தது. அவன் அக்கா மீனாவிற்கு எப்போதுமே மைசூர் சாண்ஆகப்போகிறது் கேட்கும்போதெல்லாம் கேலி செய்வான் “இது ஒரு சோப்புன்னு இதைப்போய் போட்டுட்டு இருக்கே “.

விகடனில் வரும் “தரையில் இறங்கும் விமானங்கள்” படிப்பதற்காகவே அவள் காத்திருக்கிறாள் என்பதை தெரிந்து வைத்திருந்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்!

இந்த சுழலும் நூலகத்தில் வேலைக்குசேரும்போது பிரமநாயகம் அண்ணாச்சி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது

“தம்பி..நமக்கு நூத்தி முப்பது வீடு..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். சிலர் குமுதம் கேட்பாங்க..சிலர் கல்கி,சிலர் விகடன்..கலைமகள் கேட்குற ஆளுக மட்டுமல்ல, மஞ்சரி கேட்குற ஆளுகளும் கூட இருக்கு. மஞ்சரி ன்னு ஒரு பத்திரிக்கை இருக்கு தெரியுமா” என்று ஊடாகவே ஒரு கேள்வியைக் கேட்பார். வேலையில் சேர்ந்தபிறகு தான் மஞ்சரியை பார்த்திருக்கிறான்.

மக்களின் தேவையைப்பார்த்து எந்தெந்த இதழ்களுக்கு டிமாண்ட் அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி அண்ணாச்சி வாங்குவார்.

ஆறு  விகடன்,ஆறு  குமுதம், நாலு கல்கி, நாலு குங்குமம், மூணு சாவி, இரண்டு ராணி, அஞ்சு பேசும்படம்  என்றெல்லாம் முடிவு செய்வார்.

“நம்ம கஸ்டமர் தேவையறிந்து கொடுத்தாலும், திடீர் திடீர்னு அவங்க மனசு மாறுவாங்க..ஜெயகாந்தன் புதுசா விகடன்ல ஒரு தொடர் எழுதுனார்னு வையேன்.. கல்கி வாசிச்சுட்டு இருக்கிறவன் சட்டுன்னு விகடன் கேட்க ஆரம்பிப்பான்..”

இவன் இடையில் குறுக்கிடுவான் “எல்லாருக்கும் தான் எல்லா பத்திரிக்கையும் கொடுப்போம்ல அண்ணாச்சி, பின்ன என்ன..”

அண்ணாச்சி, தனது கையில் இருக்கும் கோல்ட் பிரேம் கண்ணாடியை எடுத்து துடைத்துக்கொண்டே சிரித்தபடி சொல்லுவார் “ஏ ராசா..உனக்கு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ..ஒருத்தருக்கு ஒரு எழுத்தாளர் புடிச்சுப்போயிட்டுன்னா, அவர் தொடர் வர்ற புக்கை, அது வர்ற நாளிலேயே படிக்கணும்னு ஆசைப்படுவாரு..நீ எம்.ஜி.ஆர்.ரசிகன் தானடே ..” என்றார்.

சேது கூச்சத்துடன் தலையசைத்தான்.

“‘பல்லாண்டு வாழ்க’ படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்கு முதல் ஷோ போறேல்ல, அத மாதிரித்தான்..அது ஒரு மாதிரியான கிறுக்குதானே..இப்பம் உனக்குப் புரியுதா”  பிரமநாயகம் அண்ணாச்சி உலக ஞானம் தெரிந்தவர்.

வேலைக்குசேர்ந்த ஒரே மாதத்தில் எல்லா நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டான். இவன் ஊரின் கிழக்கு பகுதிகளுக்கும், தியாகு மேற்கு பகுதிகளுக்கும் நூல்களை வீடு வீடாக கொண்டு செல்வார்கள்.

பங்களா தெரு பச்சை பெயிண்ட் அடித்த வீட்டில் உள்ள ஆச்சி எப்போதும் கல்கி வந்து விட்டதா என்று கேட்பார். பொன்னியின் செல்வன் வாசகி.

அவங்க வீட்டுக்கு எதிர்புறம் உள்ள செல்லையா சார் “ராணி” இதழையும், ராணிமுத்து நாவல்களையும் கேட்பார். அல்லி கேள்வி பதில்களையும் குரங்கு குசலாவையும் ரசித்துப்படிப்பாராம்.

சீனிவாச அக்ரஹாரத்தில் அம்புஜம் மாமிக்கு குமுதம் தான். சாண்டில்யனின் கடல்புறா படித்து விட்டுத்தான் மாமாவிற்கு தோசையே சுடுவார். என்னமா எழுதுறார் பார்த்தியோ என்று புகழ்வார்.

தெற்கு மாடவீதியில் உள்ள சரோஜா அம்மா ரொம்ப பக்குவமானவங்க.

“கல்கி தான் வேணும். ஆனா, அவசரம் எல்லாம் இல்லை..எல்லாரும் வாசிச்சு முடிச்ச பின்னாடி, பழசை பூராவும் இரண்டிரண்டாய் கொடுத்தால் போதும்..எல்லாரும் வந்தியத்தேவன் வேகத்துக்கு ஓட முடியுமா..கல்கியோடு எழுத்தை நின்னு நிதானமாய் ரசிச்சு வாசிக்கணும்..மெதுவாய் தந்தா போதும்..இப்போதைக்கு ‘கல்கண்டு’ இருந்தால் கொடு “

கடவுளே, இப்படி நாலு பேரு அமைஞ்சா போதாதா..சுலபமாய் எல்லோருக்கும் கொடுத்து விடலாமே..சரோஜா அம்மாக்கு கல்கண்டு மட்டுமல்ல, குங்குமத்தையும், சாவியையும்  சேர்த்தே கொடுப்பான் சேது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்கள் என்றாலும், சமயங்களில் விதிகளை மீறுவான். யார் கேட்கப் போகிறார்கள்?

“கிணிங்…கிணிங்..”

சைக்கிள் பெல் சத்தம் கேட்டதும் துள்ளி வருவது தெரிந்தது. அவள் தான். அவன் மனதுள் நினைத்தது போலவே மஞ்சள் நிற தாவணியில் வந்தாள்.

சேது உற்சாகமாய் அதே சமயம் இயல்பாய் எடுத்துக்கொடுப்பதைப்போன்ற பாவனையுடன் , விகடனை எடுத்து நீட்டினான்.

“விகடன் வேணாம். குமுதம் இருந்தா கொடுங்க..”  என்றதும், இவன் சுருங்கிப்போனான்.

“இந்துமதி  தொடரை முடிச்சுட்டாங்களா” இவன் மெதுவாய்க் கேட்டான்.

அவள் பின்தலையில் சீப்பு சொருகி இருந்தது. அது கூட மஞ்சள் நிறம் தான்.

“நீங்க வாசிக்கறது இல்லையோ..நல்லா இருக்கும்..படிங்க..எனக்கு இப்போ எக்ஸாம் நடக்கு..இன்னும் ரெண்டு வாரத்துக்கு விகடனை தொடக்கூடாதாம்..அதான், அம்மாவிற்கு மாத்திரம் குமுதமும், கலைமகளும் கொடுங்க” என்று சலிப்புடன் சொல்வதைக் கேட்டான்.

பேச்சு சலிப்பாய் இருந்தாலும், அவள் கண்கள் துறுதுறுவென சுழன்றதை அவன் கவனித்தான். அவனைப் பார்க்கும் ஆவலில் தான் வேகமாய் வந்தாளோ?  மனம் லேசாய் சொல்லிப்பார்த்துக்கொண்டது.

“ஷேம் பின்ச் ” என்று அவள் லேசாக புன்முறுவல் பூத்தபோது தான், தனது சட்டை நிறத்தைக் கவனித்தான்..அட, மஞ்சள் நிறம் !

கை ஹாண்ட்பாரில் தொங்கிய பைக்குள் நுழைந்து குமுதத்தை தேடினாலும், மனசு கொடிகட்டிப் பறந்தது.

“ரொம்ப சிரமப்பட வேண்டாம்..எது இருக்கோ கொடுங்க..அம்மா, போனவார கல்கி படிக்கலைன்னு சொன்னாங்க..அதுன்னாலும் பரவாயில்லை..”  அவள் சிணுங்கலுடன் சொன்னது போல இருந்தது.

பையினுள் கை துழாவிக்கொண்டிருந்தாலும், அவள் பாவாடையை சற்றே தூக்கி இடுப்பில் சொருகி இருந்ததால், கணுக்கால் இடைவெளியை கண்கள் திருட்டுத்தனமாய் ரசித்தன. கணுக்கால் சரிவில் வெள்ளிக்கொலுசு செல்லமாய் அணைத்துக்கிடந்தது.

தூக்கி இருந்த பாவாடையை அவள் அவசரமாய் இறக்கி விட்டு, சரி செய்தாள்.

சேதுவுக்கு என்னவோ போலிருந்தது. ச்சே..தப்பாய் நினைத்திருப்பாளோ?

கையில் கிடைத்த எதோ ஒரு இதழை எடுத்து நீட்டினான். அவள் உள்ளே போகுமுன், “சைக்கிள்க்கு கிரீஸ் போட்டாச்சு போல..செயின் கவர்ல உரசும் சத்தம் இப்ப கேக்கல ” என்று புன்னகையுடன் கேட்டாள்.

ரெண்டு நாட்களுக்கு முன்பு தான், அவள் மெதுவாய் கிசுகிசுத்தாள் இவனிடம். “தெரு முக்குல திரும்பும்போதே உங்க சைக்கிள் சத்தம் அடுப்பங்கரை வரை கேக்கும்..”.

இவன் காலேஜ் சேரும்போது, அப்பா செகண்ட் ஹாண்டில் வாங்கித்தந்த ஹெர்குலஸ் சைக்கிள் இது. மூணு வருஷம் ஆன நிலையில், ஈனஸ்வரத்தில் முனங்கும். செயின் வேற கவரில் உரசி, வினோத சத்தம் ஒன்றை எழுப்பும். ஓவர்ஆயில் பார்க்கணும் என்று ஒரு மாதமாகவே நினைத்துக்கொண்டிருந்தான். இன்று நம்ம ஆளு வேற கேட்டுட்டாளே..

அன்றே, பிரமநாயகம் அண்ணாச்சியிடம் கொஞ்சம் கை மாற்று வாங்கி,

சைக்கிளை சர்வீஸ் க்கு விட்டு விட்டான். இப்போது வண்டி பூப்போல சிட்டாய் பறக்கிறது.

தன்னை ஒவ்வொரு கணமும் அவள் நோட் பண்ணுகிறாள் என்பதே அவனுக்கு போதுமான சந்தோசம் தருவதாக இருந்தது.

அவள் உள்ளூர் பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பதும், பெயர் ஜெசி என்று முடிகிறது என்பதையும் அரைகுறையாய் தெரிந்து வைத்திருந்தான். முழுப்பெயர் இன்னமும் தெரியவில்லை.

அவளைப் பார்க்கும்போது மனதில் மத்தாப்பு போல வெளிச்சம் பரவுவதை உணர்ந்தான். இது தான் காதலோ? யாரிடமும் சொல்லப்பயந்தான். நெருங்கிய சேக்காளி உமாசங்கரிடம் கூட சொல்லத்துணியவில்லை. மனதுள் கட்டியிருந்த அழகான கூட்டை கலைத்து விடுவானோ என்று தயக்கம்.

அவள் என்ன கிழமையில் என்ன நிற தாவணி அணிவாள் என்பதுவரை இவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.

“இந்த வேலையில உனக்கு பெருசாய் ஒன்னும் வருமானம் வந்துறாது.

சாயந்தரம் காலேஜ் விட்டு வந்தா , ஒரு ஒருமணி நேரத்துல விளையாட்டுப்போல வேலை முடிஞ்சிரும். நாலு மாசம் வேலை பார்த்தேன்னா, உன்னோட எக்ஸாம் பீஸ் கட்டிறலாம்..உங்கப்பாவுக்கு கொஞ்சம் சுமை குறையும்..சமயங்களில் நாய் துரத்தும். கவனமாய் இருக்கணும். புஸ்தகத்தை தூக்கி வீசக்கூடாது..கையில கொடுத்து பழகணும். சிலர் பொறுமையை சோதிப்பாங்க..பொறுமையாய் பதில் சொல்லணும். பொம்பளைப்பிள்ளைக இருக்கும் வீடுகளில் ரொம்பக் கவனமா இருக்கணும்.. நாலு பேரு ஆவலாதி சொல்ற மாதிரி ஆயிரக்கூடாது..” என்று பிரமநாயகம் அண்ணாச்சி மூக்குப்பொடியை போட்டவாரே உபதேசம் சொல்லும்போதெல்லாம் , ம்ம் ம்ம் ன்னு தலையை பூம்பூம் மாடு மாதிரி ஆட்டினான்.

அன்றிரவு தூக்கத்தில் “கனவுகளே, ஆயிரம் கனவுகளே” பாடல் வண்ணமயமாய் வந்து போனது.


“கிணிங்..கிணிங் ..”

சேது , காலை படியில் ஊன்றியபடி உள்ளே பார்த்தான்.

அவளின் அம்மா எட்டிப் பார்ப்பது தெரிந்தது. நாலு வீடு தள்ளி வலது புறம் முத்தையா சார் நின்று கொண்டிருந்தார். அவர் எப்போதும் இப்படித்தான். நாம் வரும் நேரத்தில் வாசலில் ரெடியாக நின்று, ராணிமுத்து இதழுக்காக காத்திருப்பது வழக்கம். மனுஷன் நாவல் படிப்பதில் பைத்தியம் என்று நினைத்து விடாதீர்கள் ! ராணிமுத்து இதழில் முதல் இரண்டு மூன்று பக்கங்களில் “பொது அறிவுப்போட்டி” என்று சில அறிவு சார்ந்த கேள்விகள் கேட்டிருப்பார்கள். அதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆழம் காண முடியாதது எது ? 1. கடலின் ஆழம் 2.பெண்களின் மனம்

பெண்கள் மிகவும் விரும்புவது எது ? 1. தங்க நகை 2.பட்டுப் புடவை

இப்படியான கேள்விகளுக்கு மூளையை கசக்கி கண்டுபிடித்து, அடித்தல் திருத்தல் இன்றி பூர்த்தி செய்து அன்றே அனுப்பி வைப்பார். சரியான விடைக்கு ரூ 100 பரிசுத்தொகை என்றும் போட்டிருப்பார்கள். முத்தையா சார் இதுவரை பரிசு வாங்கினாரா என்று தெரியவில்லை. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல அவரும் தொடர்ந்து முயற்சி செய்கிறார் போல.

“தம்பி..போன வாரத்திற்கு முந்தைய வார குமுதம் இருக்குதா..சுஜாதாவோட ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படிக்கணும்..”

ஜெஸியின் அம்மா வாசலின் நிலைப்படியருகே நின்றவாறு கேட்டார்.

“இருங்க பார்க்கிறேன் ம்மா..” என்றவன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு, பையினுள் தேடினான். தேதி வாரியாக புரட்டினான்.

“இவளை வேற இன்னும் காணோமே ” மனம் வேறு அலைபாய்ந்தது.

சட்டைப்பையில்  இருப்பதை அவளிடம் எப்படிக் கொடுக்க..

நேற்று தான் அது தெரிந்தது.

“மாலைமதி” நாவலை வாங்கி விட்டு, பழைய குமுதத்தை திருப்பித்தரும்போது, வெள்ளை தாவணியில் வந்தவள் ஒயிலாய் ஒரு பார்வை பார்த்தவள் “குமுதத்தையும் கொஞ்சம் புரட்டிப் பாருங்க” என்று சொல்லி விட்டு உள்ளே ஓடினாள்.

நமக்கு குமுதத்தை வாசிக்க எங்க நேரம் இருக்கு என்று சிரித்துக்கொண்டான். ஒருவேளை, அதில் ஏதும் காதல் தொடர் வருதோ அதை வாசிக்கத்தான் சொல்கிறாளோ?  என்னென்னவோ நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தான்.

பாட அசைன்மென்ட் எல்லாம் எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தபோது,

அவளின் வெள்ளைநிற தாவணி நினைவுக்கு வந்தது. என்னதான் தாவணி வெள்ளைநிறமாய் இருந்தாலும், டாலர் தொங்கும் நெஞ்சுப்பகுதியில் ஊதா நிற பிளவுஸ் பின்னணியில் அடர்த்தியாய் நின்று கனம் கூட்டி வெள்ளை நிறத்தை மங்க வைக்கிறது..

அவளின் ஒயிலான புன்னகை என்ன சொல்லுகிறது?

என்ன நினைத்தானோ, அவள் திருப்பித்தந்த குமுதத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். எழுத்தாளர் பாலகுமாரன் சிறுகதை ஏதும் வந்திருக்குமோ? ஒவ்வொரு பக்கமாய் திருப்பினான்.

ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடி..சாண்டில்யனின் கடல்புறா தொடர் …நடிகை ஷோபா தற்கொலை.. கிசுகிசு..அரசு கேள்வி பதில்கள்…

படக்கதை…ம்ஹ்ம்..ஒன்னும் இல்லையே..புரட்டியபடியே வந்தான்..

இறுதிப்பக்கத்தில் மேல்புறம் உள்ள இடைவெளியில், “நாளை எனக்குப் பிறந்த நாள்..ஜெ” என்று பால்பாயிண்ட் பேனாவால் அழகான குண்டு கையெழுத்தில் இருந்த வாசகத்தைப் படித்ததும் பரவசத்தில் துள்ளிக் குதித்தான்..ஜெசி எழுத்தே தான்..எனக்காகவே எழுதியிருக்கா..

நாளைக்கு ஏதாவது ப்ரெசென்ட் பண்ணணுமே..என்ன தர..

சட்டையைப் போட்டபடி வெளியே கிளம்பினான்.

“நல்லவேளை, இந்த இதழை வேற யாருக்கும் கொடுக்கல..நம்ம கண்ணுல தட்டுப்படாமலே போயிருந்திருக்கும்..அவ எதோ சொல்றான்னு உடனே புரட்டிப்பார்க்காமல், இரண்டு மணி நேரம் கழிச்சுப் பார்க்கோமே..சரியான டியூப் லைட் நானு..”

குமார் ஸ்டோர்ஸ் கடையில் நுழைந்து, என்ன கிப்ட் வாங்கலாம் என்று யோசித்தான்.

நல்ல கர்ச்சிப்..சேச்சே..கர்ச்சிப் வாங்கினால் நட்பு முறியுமாமே..வேண்டாம்.

காதில் மாட்டுற மாதிரி ஏதாச்சும்…அது எப்படி அவள் மாட்ட முடியும் ?

வீட்டுல யார் வாங்கித்தந்ததுன்னு கேட்பாங்களே..

பேனா வாங்கித்தரலாமா..?  வேற ஏதும் யோசிப்போமே..

“என்ன சார் வேணும்..கிப்ட் ஐட்டமா, ஆணா, பொண்ணா, என்ன ரேஞ்சுல பார்க்கணும்?”  கடைப்பெண் அருகில் வந்து கேட்டாள்.

“ம்ம்..ஆமா..கிப்ட் தான்..லேடீஸ் க்கு..என்ன இருக்கு..” என்று தடுமாறியவன் “எங்க அக்காவிற்குத்தான்..” என்று சம்பந்தமின்றி உளறினான்.

அவள் புன்னகைத்தாள், “எல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்பதுபோல்.

என்னவெல்லாமோ எடுத்துப்போட்டாள்..எல்லாமே விலை அதிகம்.

நமக்கு இதெல்லாம் கட்டுபிடியாகாது.. தனது கையாலாகாததனத்தை எண்ணி வெட்கமுற்றான். தனக்கு எதற்கு காதல், கத்திரிக்காய் எல்லாம்.

சரி..இருக்கட்டும். அப்புறமாய் பார்க்கலாம் என்று ஒதுக்கி விட்டு,

“ஒரு பைவ் ஸ்டார் சாக்லேட் தாங்களேன்” என்று சொல்லி, ரூபாயை கொடுத்து விட்டு, விறுவிறுவென வெளியே வந்தான்.

கைகளில் பைவ் ஸ்டார் சாக்லேட் மஞ்சள் நிறத்தில் பளபளத்தது.

“அன்பாய் எதைக் கொடுத்தால் என்ன” என்று நினைத்துக்கொண்டான்.

கடைக்குள் இருந்த யுவதி புன்னகைப்பது போலிருந்தது. என்னமும் நினைத்துக் கொள்ளட்டும்..நமக்கு ஏன்டதத்தானே நாம வாங்க முடியும்..

“தம்பி…ரொம்ப சிரமப்பட வேண்டாம்..நாளைக்குக் கொடுப்பா..” ஜெஸியின் அம்மா குரல் அவனை  மீட்டு  வந்தது.

“என்ன புக்கும்மா கேட்டுட்டு இருக்கே..” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் சேது.

பட்டுப் பாவாடை, ரோஸ் நிற தாவணியில் தேவதையாய் மிளிர்ந்தாள் ஜெசி. பிறந்த நாள் டிரஸ் போல.

“நாளைக்கு எடுத்துட்டு வரேன் மா..விகடன் புதுசு வந்திருக்கு..தரவா “

விகடனை எடுத்து நீட்டினான்.

“கொண்டாங்க..” என்று அவள் ஆவலுடன் வாங்கும்போது, “அவசரம் இல்லை தம்பி..நாளை கொண்டு வாங்க..உள்ளே வேலை நிறைய இருக்கு” என்றபடியே ஜெஸியின் அம்மா உள்ளே போக, சேது அவசரமாய் சுற்றுமுற்றும் யாரும் பார்க்கிறார்களா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு, பைவ் ஸ்டார் சாக்லெட்டை எடுத்து நீட்டியபடியே “மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ்” என்றான்.

ஒரு நிமிடம் பதறியவள் “தேங்க்ஸ்..இதெல்லாம் எதுக்கு..” என்று கன்னங்களில் குழி விழ சிரித்தாள். அந்த பத்து வினாடிகளில் உள்ளங்கை வியர்வையில் சாக்லேட் நனைந்தது. அதை வாங்கியவள், சட்டென தனது கைகளில் மறைத்துக் கொண்டாள்.

கள்ளத்தனமாக காதல் செய்யும்போது, யாருமறியாமல் ரகசியமாய் பரிமாறிக்கொள்கிறோம் என்றே எல்லாக் காதலர்களும் காலம் காலமாய் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மாடி வராண்டாவில் சுருட்டு புகைத்துக்கொண்டிருந்த ஆசிர்வாதம் பிள்ளை பார்த்தத்தைக்கூட அறியாமல் இந்த காதல் அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.

ஜெஸியின் அப்பா, ஆசிர்வாதம் பிள்ளை படிக்கட்டுகளில் இறங்கி வந்தார்.


ஜெசி  சுற்றம் சூழ பிறந்த நாள் கேக் வெட்டும்போது, சேது நான்கு தெரு தள்ளி உள்ள தெருவில் யாருக்கோ “கல்கண்டு” கொடுத்துக்கொண்டிருந்தான்.

கேக்கின் முதல் துண்டை ஜெசி, அப்பா ஆசீர்வாதம் பிள்ளைக்குத்தான் ஊட்டினாள். கேக்கின் கிரீம் மீசையில் ஒட்டினாலும், மகள் ஆசையுடன் ஊட்டி விட்ட துண்டை முழுவதுமாக சுவைத்து உண்டார் அவர்.

ஆசிர்வாதம் பிள்ளை ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்தவர். கரடுமுரடான ஆசாமி போல தோற்றம் கொண்டவர் என்றாலும், மிலிட்டரி அனுபவங்கள் குறித்து யாரேனும் கேட்டுவிட்டால் போதும், மனுஷன் உற்சாகமாகிப்போய் நெகிழ்வுடன் பேச ஆரம்பித்து விடுவார்.

அறுபத்திரெண்டு சீனப்போர் சமயத்தில் அவர் இளைஞன். பின்னர் நடந்த பாகிஸ்தான் போரிலும் அனுபவம் உண்டு. வருடம் தவறாமல், மாவட்டத்தலைநகர் சென்று தனது துப்பாக்கி லைசென்ஸை புதுப்பித்து வருவதை தெருவே வேடிக்கை பார்க்கும்.

“மனுஷன் துப்பாக்கில்லாம் வச்சிருக்காரு”.

எல்லோரும் ஜெசியை ஆசிர்வதித்து நெற்றியில் சிலுவையிட்டார்கள்.

ஆசீர்வாதம் பிள்ளை மனைவியை நோக்கி கண் ஜாடை காட்டவும், அவர் உள்ளிருந்து எதோ எடுத்து வந்து கணவரிடம் நீட்டினார்.

மகளை அருகே அழைத்து அவளின் மோதிர விரலில், ஒற்றைக்கல் வைத்த மோதிரத்தை மாட்டினார்.

“தேங்க்ஸ் டாடி..” மகிழ்ச்சிப்பெருக்கில் ஜெஸியின் கண்கள் பளபளத்தன.

“எப்போ வாங்கினீங்க..சொல்லவே இல்ல ..” அவள் அப்பாவையும், அம்மாவையும் மாறி மாறி பார்த்தாள்.

அம்மாவிற்கு, அக்கா ஜெபாவிற்கு, தம்பி ஜெரோமிற்கு கேக் ஊட்டி விடும்போது, அவன் நினைவும் வந்தது. கேக் கொடுக்காம போயிட்டோமே!

அன்றிரவு படுக்கும்போது, போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டு யாருக்கும் தெரியாமல், இளகிப்போயிருந்த பைவ் ஸ்டார் சாக்லெட்டை வாய்க்குள்போட்டு மென்று கொண்டிருந்தாள் ஜெசி.


மறுநாள் –

சேது வழக்கம்போல் காலை ஊன்றி பெல் அடித்தபோது, வாங்குவதற்கு ஜெசி வரவில்லை. அவள் அம்மாவும் கூட தென்படவில்லை.

அரைக்கை பனியனுடன் ஆசீர்வாதம் பிள்ளை வாசலுக்கு வந்தார்.

எந்த பத்திரிக்கையைத்தர என்று ஒருகணம் யோசித்தான் சேது.

கை எதேச்சையாய் உள்ளே போய், கலைமகளை எடுத்தது. அதை எடுத்து நீட்டினான்.

“கலைமகளை” வாங்கியவர், “தம்பி, ஒரு நிமிஷம் உள்ளே வாங்க” என்று அழைத்தார்.

சேதுவிற்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்குள் ஏன் அழைக்கிறார்?

ஒரு கணம் யோசித்தான்.

சும்மா…உள்ளே வாங்க..”  அவர் உள்ளே போய் திரும்பி பார்த்தபடி சொன்னார்.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு உள்ளே சென்றான். கண்கள் அவளைத்தேடின. வீட்டினுள் ஆளரவம் ஏதுமில்லை.

தார்சாவை ஒட்டியிருந்த பக்கத்துக்கு அறைக்குள் அவர் நுழைந்தார்.

இவனும் தயங்கி தயங்கி உள்ளே போனான்.

எஸ் டைப் நாற்காலியில் அவர் அமர்ந்தார். எதிரே இருந்த மடக்கு நாற்காலியில் உட்காரும்படி சைகையில் காண்பித்தார். பார்ப்பதற்கு வரவேற்பு அறை போல இருந்தது. ஆசிர்வாதம் பிள்ளையின் ராணுவ உடுப்பு புகைப்படங்கள் பலவும் மாட்டப்பட்டிருந்தன.

“தம்பி, உன் பேரு என்ன..வீடு எங்க இருக்கு, உன்னோட அப்பா என்ன பண்ராரு ” ஆசிர்வாதம் பிள்ளை மளமளவென கேள்விகளை அடுக்கினார்.

“எதுக்கு சார் கேக்குறீங்க..” வார்த்தைகள் சிதறி சிதறி வெளி வந்தன.

நாம பேசியதை அவள் அப்பாவிடம் ஏதும் சொல்லி விட்டாளோ ..

“தம்பி, நான் மிலிட்டரிகாரன். எதையும் ஸ்ட்ரெயிட்டா பேசீருவேன்.  பிடிச்சுதுன்னா, லவ் சொல்லவோ, சாக்லேட் ஊட்டி விடவோ நாம ஒன்னும் அமெரிக்காவுல வாழல.. இது இந்தியா..தமிழ்நாடு..” என்றவர்,

“நீங்க என்ன ஆளுங்க” என்றார்.

“என்ன சார், என்னென்னமோ கேக்குறீங்க..” சேது கலங்கிப்போனான்.

என்னமோ நடந்துருக்கு…

“நாங்க வேற, நீங்க வேற, தெரியுதுல்ல.. இந்த லவ்வு கிவ்வு ன்னு விளையாடுறதை எல்லாம் விட்டுட்டு பார்க்குற தொழிலை ஒழுங்காய் பாரு..”  ஆசிர்வாதம் பிள்ளையின் வார்த்தைகளில் உஷ்ணம் தெறித்தது.

“சார்.. நான் அப்படிலாம் என்னமும் பண்ண .. நானும் காலேஜ் படிக்கறவன் தான்.. எந்த தப்பும் பண்ணல..”  

சேதுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“காலேஜ் படிச்சா… எல்லாம் ஒண்ணாயிருமா.. இன்னையோட இந்த லைப்ரரி புக்ஸ் போடுறத நிறுத்திருதேன்.. பிரமநாயகம் கடைக்கு வந்து கணக்கை முடிச்சுக்கறேன்.. நாளைப்பின்ன உன்னை இந்த பக்கம் பார்த்தேன்.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.. அவளைப் பார்க்கேன்னு அவ காலேஜ் பக்கம் போயி நின்னே, பேசினேன்னு தெரிஞ்சா… கொஞ்சமும் யோசிக்க மாட்டேன், ஷூட் பண்ணிருவேன்..”

கண்கள் சிவக்க, எழுந்து நின்று கத்தினார் ஆசீர்வாதம் பிள்ளை.

“சார்..என்ன  பேசுறீங்க..நான் அப்டில்லாம் இல்லை… நான் உங்க பொண்ணுட்ட தப்பா எதுவும் பேசல…”

சேதுவிற்கு மனம் கேட்கவில்லை..

அவன் அருகில் வந்தவர் “ஷூட் பண்ணிடுவேன்னு சொன்னது உன்னை இல்ல.. அவளை… மூணு பிள்ளைகளில் ஒன்னு செத்துப்போச்சுன்னு நினைச்சுக்குவேன்..”  மீசை துடிதுடிக்க அவன் சட்டையைப் பிடித்தார்.

“சார்… எங்களுக்குள் எதுவும் கிடையாது.. பிரமநாயகம் அண்ணாச்சியிடம் சொல்லி விட்டு நானே வேலையில் இருந்து நின்னுக்கிறேன்..”  வியர்க்க வியர்க்க வெளியே வந்தான்.

உயிரற்ற பிரேதம் போல சைக்கிளை அழுத்திச்சென்றான்.

“நாங்க வேற, நீங்க வேற.. தெரியுதுல்ல ” அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் விஷம் போல இறங்கின. இன்று ஊதா நிற தாவணியில் இருந்திருப்பாள். அம்மாவோடு வெளியே எங்கேயோ சென்றிருக்க வேண்டும். அல்லது இவரே அவர்களை வெளியே எங்கேயோ அனுப்பி இருக்க வேண்டும். எல்லாம் இந்த பைவ் ஸ்டார் சாக்லெட்டால் வந்த வினை.. எப்படியோ தெரிந்திருக்கிறது அவருக்கு.

மனம் புழுங்கி புழுங்கி அழுதான்.

மிலிட்டரிக்காரன்.. உண்மையிலேயே சுட்டாலும் சுட்டு விடுவான்.. போதும். நாம என்ன காதலிக்கவா செய்தோம் ?

பார்த்தோம்.. சிரித்தோம்..சாக்லேட் கொடுத்தேன்..தின்றாளா என்று கூட தெரியாது.

இரவு முழுவதும் அரட்டிக்கொண்டே இருந்தான்.


“பத்திரிக்கை போடுற பையனை ரெண்டு நாளா காணோமே..என்னாச்சுன்னு தெரியல..” ஜெஸியின் அம்மா சொன்னபோது,

“எதோ ஆக்சிடென்ட் ஆச்சுன்னு யாரோ சொன்னாங்க..பயலுக்கு நல்ல அடின்னாங்க.. பத்திரிக்கை வாங்குனது போதும்.. பாடப் புத்தகத்தை படிங்க”

ஆசிர்வாதம் பிள்ளை சொன்னது மனைவிக்கு என்றாலும், மகளுக்கும் கேட்பது போலவே சொன்னார்.

ஜெஸியின் தலையணை முழுவதும் கண்ணீரால் நனைந்தது.

“இவரு தான் ஆக்சிடெண்ட்டை ஏற்படுத்தியிருப்பாரோ” என்று அழுதாள். என்றோ கொடுத்த “கற்கண்டு ” இதழ் திருப்பி தரப்படாமல் பீரோவின் கீழ் கிடந்ததை எடுத்தாள்.

“சக்தி சுழல்  நூலகம்”  என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தியிருந்தது.

அதை தனது ஆட்காட்டி விரலால் தடவிப் பார்த்தாள்.

“சேது தானே உன்னோட பேரு? அதைத்தாண்டி எதுவும் தெரியாது எனக்கு.. இனி என்னை பார்க்க வராதே, சரியா? இவரு உன்னை கொன்னாலும் கொன்னுருவாரு..”

குமுறி குமுறி அழுதாள்.. மஞ்சள் நிறத்தாவணி சற்றே விலகிக் கிடந்தது.


இதெல்லாம் நடந்து சில  வருடங்கள் கழித்து, தற்செயலாய் தனது நண்பன் வீட்டு டீபாயில் இருந்த கல்யாண பத்திரிக்கை ஒன்றை எடுத்துப்பிரித்தபோது, மணமகள் க்ளாடிஸ் ஜெசி பி.எஸ்சி , D /o கர்னல் ஆசிர்வாதம் பிள்ளை என வாசித்தபோது தான் தெரிந்து கொண்டான், அவளின் முழுப்பெயரை.

மணமகன் பெயரை சேது கவனிக்கவே இல்லை. கவனித்து என்ன ஆகப்போகிறது?

2 thoughts on “சக்தி சுழல் நூலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *