(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கென்யா ஏர்போர்ட்டில் இறங்கியதும் தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து கோட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான் ராமகிருஷ்ணன்.
சென்னையிலிருந்து லண்டன் வந்து அங்கிருந்து கென்யா ஏர்வேஸில் கென்யா ஏர்போர்ட் வந்து சேர ஏறக்குறைய பனிரெண்டு மணி நேரமாகி விட்டது. பயணக் களைப்பு ஒரு பக்கம். தமிழக உணவையே சாப்பிட்டு பழகியவனுக்கு விமானத்தில் கொடுத்த ஏதோ வஸ்துகள் ஒத்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்ததில் பசி மயக்கம் ஒரு பக்கம்.
இருந்தாலும் தன்னையே உற்சாகப் படுத்திக் கொண்டு விமான நிலைய்த்திற்கு வெளியே வந்த போது அவ்வளவு அழகிய வெளிர் நிற ஆப்பிரிக்க அழகி தன்னை வரவேற்க வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை ராமகிருஷ்ணன்.
லிண்டா தன் கையில் ‘ராமகிருஷ்ணன் இந்தியா’ என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை உயர்த்தி பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அருகில் வந்து ஒரு கனம் அழகைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டு “ஐயம் ராமகிருஷ்ணன்” என்றான்.
“ஹாய் கிளாட்டு மீட் யூ, ஐ ம் லிண்டா” என்று கைகுலுக்கினாள். கைகள் பஞ்சு போலிருந்தது.
“நான் ஹியூமன் ரிசர்ச் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ். நீங்கள் எங்கள் கம்பெனிக்கு வருவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றாள் நுனி நாக்கு ஆங்கிலத்தில்.
“தாங்க் யூ” என்று ராமகிருஷ்ணன் சூட்கேஸை அவள் வாங்கி டிரைவரிடம் கொடுத்துவிட்டு காருக்கு வழி காட்டினாள்.
கார் வழுக்கிக் கொண்டு செல்ல அருகிலிருந்த லிண்டாவின்- அழகில் பசி மயக்கம், விமானக் களைப்பு எல்லாம் பறந்து போக ஊரிலிருந்த மனைவி சாவித்ரி மானசீகமாக கரண்டியைக் காட்டினாள்.
ராமகிருஷ்ணன் சிரித்துக் கொண்ட போது “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை” என்றான்.
“எத்தனை மாதங்கள் எங்கள் ஊரில் தங்குவீர்கள்” என்று கேட்டாள் லிண்டா.
“ஆறு மாதக் காண்ட்ராக்ட். அதற்குள் உங்கள் கம்பெனியினரால் போடப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் எவ்வளவு குரூட் ஆயில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு டாட்டா காட்ட வேண்டும்”.
“அழகாகப் பேசுகிறீர்கள்”
“அதற்கும் சேர்த்து தானே டாலர்கள் தருகிறீர்கள்”
அழகாக சிரித்தாள் லிண்டா.
“உங்களுக்குத் தனியாக ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே தங்கிக் கொள்ளலாம். உணவு நீங்கள் விரும்பினால் சமைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் ஹோட்டலில் சாப்பிட்டால் செலவை கம்பெனி ஏற்றுக் கொள்ளலாம்”
“உங்கள் ஹோட்டல் உணவு எனக்கு ஒத்துக் கொள்ளுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது”
“ஏன்”
“விமானத்தில் கொடுத்த உணவே ஒத்துக்கொள்ளவில்லை”
“ஓ… ஸாரி… உங்களுக்கு விரும்பியதை நீங்களே சமைத்துக் கொள்ளலாமே”
“சமைக்கத் தெரியாமல் போனதே எனக்குள் வருத்தமாக இருக்கிறது இப்போது”
“வேண்டுமானா நான் சமைத்து தரட்டுமா?”
“சே….சே…..! இந்தக் கம்பெனியின் பெரிய அதிகாரி நீங்கள். ஆமாம் லிண்டா உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?”
“உங்கள் புகழ்ச்சிக்கு நன்றி. நான் அவ்வளவு இளமையாகத் தெரிகிறேனா?” என்று கன்னங்களில் செம்மைபடர வெட்கப் பட்டவள், “எல்லாம் ஆகி ஒரு பையன் கூட இருக்கிறான். ஹாஸ்டலில் தங்குகிறான்”.
“என்ன, விட்டேற்றியாகச் சொல்கிறீர்கள்?”
“திருமணமான அடுத்த வருடமே விவாகரத்தும் ஆகி விட்டது. பெரிய பாப்பாடகன் என்று மனதை பறிகொடுத்தேன். காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டான். எனக்கு வலிகள் ஏற்படுத்தி குரூரமாக சந்தோசப்படுவான். தாங்க முடியவில்லை” அவள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள, “ஸாரி, நான் ஏதாவது தவறாக கேட்டிருந்தால் மன்னித்திக் கொள்ளுங்கள்” என்றான் ராமகிருஷ்ணன்.
கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் இறங்கி லக்கேஜ்கனை எடுத்து வைத்து அவனுக்கு காபி கலந்து கொடுத்துவிட்டு கிளம்பினாள்.
மறுநாள் கம்பெனியில் சர்வே ரிப்போர்ட் கொடுத்தபோது, உள்ளே வந்த லிண்டா “எப்படி இருக்கிறது கென்யா?” என்று கேட்டாள்.
“நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கிறது”
“ஏன் ஒரே பஞ்சம் பட்டினி கூட்டங்களை எதிர்பார்த்தீர்களா? உலக நாடுகளுக்கிடையே கென்யா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா பற்றியே ஒரு தாழ்வான அபிப்பிராயம் இருக்கிறது. சாப்பாடு எப்படி?”
“ரசிக்கவில்லை”
“நான் இன்று இரவு உங்களுக்கு சமைத்து தருகிறேன்”
“நீங்களா?”
“நான் நன்றாக சமைப்பேன்”
“ஓ.கே.!”
சாயங்காலம் லிண்டா வந்து உடை மாற்றி காபி கலந்துகொண்டு வந்தபோது ஒரு கணம் ராமகிருஷ்ணன் திணறிப் போனான். உடலின் முக்கால்வாசியும் வெளியே தெரியும்படி இரவு உடை உடுத்திக் கொண்டு காபி தந்தாள்.
“இந்த உடை எப்படி இருக்கிறது ராம்”
“நன்றாக….” அவனால் முடிக்க முடியாமல், மறுபக்கம் திரும்பிக் கொண்டான்.
“இரவு உணவிற்கு என்ன தயாரிக்கட்டும். உள்ளூர் இட்லி, தோசை கூட செய்வேன்”
“எது வேண்டுமானாலும் செய்யுங்கள்”
“சரி”
இரவு உணவு முடிந்தபிறகு, “நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேனே, என் வீட்டிலும் நான் தனிமையாகத்தான் இருக்கிறேன்” என்று அவனுடைய சம்மதம் கூட கேட்டுக் கொள்ளாமல் ஒரு அறையில் கதவுகளைத் திறந்து போட்டுக் கொண்டு தூங்கப் போய்விட்டாள்.
“நாளையிலிருந்து இவளை எப்படியும் தவிர்க்க வேண்டும்” என முணுமுணுத்துக் கொண்டு தூங்கப் போனான் ராமகிருஷ்ணன்.
“என்ன ராம், ஏதாவது கேட்டீர்களா?” உள்ளேயிருந்து சப்தம் வந்தது.
“நோ, நத்திங்”
ஏறக்குறைய புறப்படுகிற தினம் வரை லிண்டாவைத் தவிர்த்து விட்டதால் ஒரு ஏக்கமும் நிம்மதியும் இருந்தது.
புறப்படுவதற்கான முதல் நாள் வீட்டிற்கு வந்த விண்டா, நேராக ஓடி வந்து ராமகிருஷ்ணனின் கையை பிடித்துக் கொண்டு, “‘ஐ லவ் யூ’ ராம். ஏன் என்னை தவிர்க்கிறீர்கள்?” என்றாள் அழுகையும் கெஞ்சலுமாக.
“நான் ஏற்கனவே திருமணமானவன் லிண்டா”
“அதற்கும் காதலிப்பதற்கும் என்ன சம்பந்தம் ராம்”
“திருமணமான பிறகு மனைவியை மட்டும் தான் காதலிக்க வேண்டும் பெண்ணே”
“என்னையும் மணந்து கொள்ளேன்”
“அது நான் மனைவிக்குச் செய்யும் துரோகம்”
“என்னை உனக்குப் பிடிக்க வில்லை அப்படித்தானே?”
“சின்னப்பிள்ளை மாதிரி பேசுகிறீர்கள்”
“என் ஞாபகமாக இந்தப் பரிசையாவது எடுத்துக் கொள்வீர்களா…?”
தங்கத்தினால் செய்த ஒரு தாஜ்மஹால். அதிலே கோபுரங்களிலே வைரம் பதித்திருந்தது.
“லிண்டா இது மிக அதிகமான விலையுயர்ந்த பொருள்”
“ஆமாம் ஐம்பதாயிரம் டாலர் கொடுத்து வாங்கினேன்”.
“உங்கள் வாழ்க்கைக்கு இன்னும் நிறைய பணம் தேவையிருக்கிறது”
“என் வேலை எனக்கு உணவளிக்கும்”
“சரி கொடுங்கள்” என்ற ராமகிருஷ்ணனின் கையில் தாஜ்மஹாலை கொடுத்து அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் இதழ்களில் ‘பச்சக்’ என அழுத்த முத்தமிட்டவள், “நான் வாழ்நாளில் மறக்க முடியாத நபர் நீங்கள் மட்டும்தான் ராம். நாளை ஏர்போர்ட் வரை உங்கள் கூட வந்து வழியனுப்புகிறேன். சம்மதம்தானே” என்றாள்.
ஒரு கணம் தயங்கிய ராமகிருஷ்ணன் “இந்த மாதிரி என்னை சோதனைக்குள்ளாக்குகிற எந்த செயலும் செய்யாமல் இருந்தால் ஓ.கே.” என்றான்.
“தாங்க்ஸ் ராம்” என அவன் எதிர்பாராமல் திரும்பவும் அவனை கண்ணீரோடு முத்தமிட்டு கிளம்பினாள் லிண்டா.
ஞாபகத்தலிருக்கப் போவது லிண்டா கொடுத்த தங்கத் தாஜ்மஹாலா அல்லது அவள் திரும்பத் திரும்ப தந்த இன்ப அசத்தல்களா என புரியாமல் தவித்தான் ராமகிருஷ்ணன்.
– பிப்ரவரி 2002, மும்பை துடிப்பு