(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் தூங்கப்போவதற்கு முன் என்னைக் கட்டிக்கொண்டுப் படுத்து இருந்தவள், விடியற்காலையில் அடுத்த அறையில் இருந்த சோஃபாவில் சுருட்டிக்கொண்டுப் படுத்திருந்தாள். எனக்கு இது புதிதில்லை. இரவில் இந்தக் கட்டிலில் படுக்கும் பெண்கள், விடியலில் அடுத்த அறையில்தான் விழிப்பார்கள்.
அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினேன். படுத்தோம் எழுந்தோம் என்றில்லாமல், என் வீட்டிற்கு வருபவர்களை, அவர்கள் ஒரு நாள் இருந்தாலும், ஒரு வாரம் இருந்தாலும் இளவரசிக்களைப் போலக் கவனித்துக் கொள்வேன்.
பெண்கள் உறங்கும்பொழுதும் கூட தேவதைகளாகத்தான் தெரிகிறார்கள். தேவதையாய் உறங்கிக் கொண்டிருந்தவள் எழுந்தபின் பத்ரகாளியைப்போல என்னை முறைத்தாள். வெடுக்கென காப்பி கோப்பையை பிடுங்கிக் கொண்டவள்,
“கார்த்தி, உன்னிடம் இருக்கிற ஒரே பிரச்சினை, மனுஷியை ஒழுங்காகத் தூங்கவிட மாட்டாய்”
“அதற்காகத்தானே இரவை ஒன்றாகக் கழித்தோம்”
“நான் அதை சொல்லவில்லை, உன் குறட்டையை சொன்னேன், போனதடவையே, இனிமேல் உன்னிடம் வரவேக்கூடாதுன்னு நினைத்தேன், திரும்ப தவறு செய்துவிட்டேன்”
இவள் மட்டும் இல்லை, ஒவ்வொரு வார இறுதி தோழிகளும் சொல்லும் ஒரே பல்லவி இதுதான். தமிழ்நாட்டில் இருந்தவரை குறட்டை விடுவேனா இல்லையா எனத் தெரியாது.
ஒரு வேளை “புள்ள அசந்து தூங்கிட்டான்” என என் அம்மா சொன்னது குறட்டையை வைத்துதானோ !!
சுவீடனில் அறை நண்பன், என் குறட்டையப் பற்றி சொன்ன பொழுது நம்பவே இல்லை. ஒரு நாள் கைபேசியில் ஒளிஒலியும் காட்டிய பின்னர்தான் நம்பினேன். புல்லட்டில் ஆரம்பித்து, புல்லட் ரயில் கணக்காய் குறட்டை சத்தம் களை கட்டி இருந்தது. குறட்டையை குறை சொல்லிய நண்பர் ஒரே வாரத்தில் அறையை காலி செய்தார்.
அதன் பின் வந்தவர்கள் எல்லாம், குடியும் குடிசார்ந்தும் நண்பர்கள் அமைவதைப்போல குறட்டை சார்ந்த நண்பர்களாகவே அமைந்தார்கள். என்னளவிற்கு இல்லை என்றாலும் சுமாராக டிவிஎஸ் 50 அளவிலாவது வண்டியை ஓட்டிகொண்டிருந்தார்கள். பொதுவாக குறட்டையை நிறுத்துவது எளிது, ஒரு பக்க மூக்கின் மடலை லேசாக மூடி, சில வினாடிகள் வைத்திருந்தால், குறட்டை நின்று விடும். நான் அடுத்தவரின் குறட்டையை நிறுத்தக் கண்டுபிடித்த நுட்பம் அது.
“குறட்டை விடுபவர்கள் புத்திசாலிகள், நம்பகமானவர்கள். எல்லா வெற்றியாளர்களும் அற்புதமாக குறட்டை விடுபவர்கள், அலெக்ஸாண்டர் கூட குறட்டை விட்டுத்தான் தூங்குவாராம் !! படுக்கையில் வீரியமானவர்கள்” என்று நான் சொல்லும் கதைகளை நம்பினாலும்
“என் தூக்கம் போகின்றதே கார்த்தி, உனது குறட்டை மட்டும் இல்லாவிடில், என் மூட்டை முடிச்சுகளுடன் வந்து, உன் காலடியில் கிடப்பேன்”
என்று சொல்லியபடி தனது உடுப்புகளைத் தேடி எடுத்துக்கொண்டு போன வாரம் வந்தவளைப்போல நேற்றிரவு வந்தவளும் கிளம்பிப் போனாள். நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்பொழுது, என் குறட்டையே எனக்குக் கேட்டு, தூக்கம் கலையும். அப்படி இருக்கும்பொழுது முழுக்குறட்டையை கேட்கும் பெண்களும் பாவம் தான்.
ஓரிரவுத் தோழமைகளை எனக்குத் தொடர எப்பொழுதும் விருப்பமிலாததால், குறட்டை காரணமாக சொல்லப்பட்டதை சாதகமாகத்தான் எடுத்துக்கொண்டேன். எனக்கு நெடுங்கால நட்பும் தேவையில்லை, திருமணமும் தேவையில்லை. பெண்களுக்கு நம்மை பிடித்துவிட்டால் மடத்தை அடைய சாம பேத தான தண்ட அத்தனை முறைகளையும் பயன்படுத்தி எடுத்துக்கொள்வார்கள். ஒதுங்கி இருத்தலே நலம் என தாமரை இலைத் தண்ணீர் போல இருக்கின்றேன்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடும் பணிச்சுமை இருந்ததால், மதுவும் மாதுவும் அன்றி நகர்ந்தது. அலுவலகத்தில் கேத்தரீனா என்ற பெண் புதிதாக வந்து இருந்தாள். பெண் என்றாலே வசீகரம் தான். எனவே வசீகரமாக இருந்தாள் எனச் சொல்லத் தேவை இல்லை. நான் அவளைப் பார்க்காத சமயங்களில் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெறும் வெள்ளைத் தோல்கள் இருக்கும் இடத்தில் மாநிறம் கொஞ்சம் அதிகமாகவே ஈர்க்கப்படும்தான்.
சிலர் வாழ்க்கையில் வரும்பொழுது, பொழுது போக்கிற்காக செய்யும் சில விசயங்களை மறந்துவிடுவோம். கேத்தரீனாவைப் பற்றி அடிக்கடி யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்கள் ஒரு பெண்ணைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள் என்றாலே காதல் என்று அர்த்தம். வெள்ளியிரவு அலுவலகம் முடிந்துப் போகையில் மாலை என்ன செய்யப்போகிறாய் எனக் கேட்டாள்.
குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கப்போகின்றேன் என்பதை சொல்லாமல், கௌரவமாய் பழைய கிரிக்கெட் வீடியோக்களைப் பார்க்கப்போகின்றேன் என்று பொய் சொன்னேன்.
“எங்கேனும் போய் சாப்பிடுவோமா “ எனக் கேட்டாள்.
சாப்பிட்டோம், குடித்தோம், நடமாடினோம், மீண்டும் குடித்தோம். வழக்கமாக மூன்றாவது சுற்றிலேயே, வீட்டுக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிடுவேன். இவளை அப்படி செய்ய மனது வரவில்லை. ரசித்துக் கொண்டிருக்கத் தோன்றியது. காமம் சாரா காதல் அழகாக இருந்தது. அவளை வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், உதட்டைக் குவித்து முத்தம் தர வந்தவளுக்கு கன்னத்தைக் கொடுத்துவிட்டு, வாஞ்சையா தலையைக் கோதி வழியனுப்பி வீட்டிற்கு வந்தேன். மண்வாசனை, மழைச்சாரல் கொடுக்கும் உணர்வுகளை, கடும்பனியிலும் அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
அடுத்த வாரம் கோழிக்கறியும் சோறும் சாப்பிட என் வீட்டிற்கு வந்தாள், எதுவானாலும் காமம் சாரா காதலை மட்டுமேத் தரவேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். வழக்கம்போல் ஏதாவது நடந்து, குறட்டையால் இவளைத் தொலைத்து விடக்கூடது என இருந்தேன்.
“ச்சிக்ஸ் அண்ட் சிக்கன் மேக் மை லைஃப் மோர் இண்டரஸ்டிங்” என்றதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்.
தமிழ்த்திரைப்படம் ஒன்றை ஒன்றாகப்பார்த்தோம். கிரிக்கெட் பற்றி விளக்கினேன். ராமச்சந்திர குகாவின் புத்தகங்கள் ஒன்றைப் படிக்கக் கேட்டாள்.
“கார்த்தி, நீ மட்டும் கொஞ்சம் ஐரோப்பிய நிறத்துடன் இருந்தால் என் தந்தையின் சாயலில் இருப்பாய்” என்றாள்.
அடடா இதுதான் காரணமோ !! தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய பெண்களுக்கும் அவரவர் தந்தைகள்தான் நாயகர்கள் போல….
அவள் சொல்லி முடித்ததும், நானே முத்தமிட்டேன். டாஸ் போடாமலேயே ஆட்டம் ஆரம்பித்தது. கிரிக்கெட்டில்தான் டிரா அசுவராசியமானது.ஆனால் இங்கு சமநிலைதான் முக்கியம். விடியலில் கழுத்தைக் கட்டியபடி நெஞ்சில் சாய்ந்து, யாரோ மூக்கின் ஒருப்பக்கத்தை மூடிவிடுவதைப்போல இருந்தது.
“என் குறட்டை உன்னைத் தொந்தரவு செய்யவில்லையா” என்றேன்.
“உன் பார்வையைப்போல, பாவனையைப்போல உன் குறட்டையும் கூட என் அப்பாவைப்போல !!! “
“ம்ம்ம்”
“அவரின் குறட்டை பக்கத்துவீட்டிற்கு கூட கேட்கும், என் அம்மா எங்களை விட்டுப் போனதற்கு காரணங்களில் அப்பாவின் குறட்டையும் ஒன்று, அவரை விட உன் குறட்டை கொஞ்சம் குறைவுதான்”
“ம்ம்ம்”
“இப்படி ஒரு பக்கம் மூக்கின் மடலை மூடினால், குறட்டை நிற்கும்”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
நான் சொன்ன ஒவ்வொரு ம்ம்ம் ற்கும் ஒரு முத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். இனி குறட்டையைப் பற்றியும் கும்மாளங்களைப் பற்றியும் நான் யோசிக்கவேண்டியதில்லை.
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.