(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“றைற்”
கண்டக்டர் கனகு குரல் கொடுத்துவிட்டு லாவகமாக பஸ்ஸில் தாவி ஏறிக்கொண்டான். மூச்சுக்கூட விடமுடியாமல் பிரயாணிகளை நெருக்கியடைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட பலாலி பஸ், நிறைமாதக் கர்ப்பிணியாய் அசையத் தொடங்கியபோது, உள்ளே வீசிய காற்று சனங்களுக்குச் சற்று இதமாகத்தான் இருந்தது.
உரும்பராய் வரைக்குந்தான் இந்த நெருக்கடி, பின்னர் குறைந்துவிடுமென்பது கனகுவிற்கு நன்றாகத் தெரியும்.
பஸ்ஸின் குலுக்கங்களையும், சரிவுகளையும் சமாளிக்க முடியாமல் கிழவி ஒருத்தி தள்ளாடிக் கொண்டிருந்தாள். கூனல் விழுந்து விட்ட அவளுக்கு மேலேயிருக்கும் கைப்பிடி எட்டாததினாலோ என்னவோ பக்கத்திலிருந்த சீற்றில் கெட்டியாகப் பற்றிக்கொண்டு விழுந்துவிடாமல் இருக்க முயற்சித்தாள்.
கனகுவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
அவள் நின்ற இடத்திற்குப் பக்கத்திலிருந்த சீற்றில் அமர்ந்திருந்த வாலிபன் கிழவியின் நிலைமையைக் கண்டு கொஞ்சங்கூடக் கவலைப்படாதவனாய் அநாயாசமாகச் சிகரட்டை ஊதித்தள்ளியபடி இருந்தான். அவ்வாலிபன் எழுந்து கிழவிக்கு இடங்கொடுக்க மாட்டானா எனக் கனகுவின் உள்ளம் ஏங்கியது. ஆனாலும் அவ்வாலிபனைக் கிழவிக்கு இடம் கொடுக்கும்படி கூறுவதற்குக் கனகுவிடம் துணிவில்லை; அதிகாரமும் கிடையாது.
‘நான் கொடுத்தது காசில்லையா?’ என்று அவ்வாலிபன் துள்ளியெழுந்தால் என்ன பதிலைத்தான் சொல்வது? பஸ் என்ன அவனது சொந்தமா, அதுதான் பொதுச் சொத்தாயிற்றே!
கிழவியின் அவஸ்தையைக் காணச் சகிக்காமல் கனகு தனது பார்வையை வெளியே திருப்பினான்.
பஸ் வின்ஸர் சந்தியில் திரும்பிய வேகத்தில் யாரோ பெண்மணி ஒரு வயோதிபர்மேல் மோதியிருக்கவேண்டும்.
“இந்தப் பெண்டுகளுக்கு இப்ப போக்கு வரத்து மெத்திப்போச்சு, நாகரிகம் மெத்தி உவளவை படுகிறபாடு… பஸுவிலுமெல்லே போகேலாமைக் கிடக்கு….”
வயோதிபர் கூறியதைப் பிரயாணிகள் சிலர் ஹாஸ்யமாக நினைத்துச் சிரித்தார்கள்.
ஆரியகுளம் நெருங்கியபோது ஆவலோடு கனகு வெளியே எட்டிப்பார்த்தான். அவன் எதிர்பார்த்தபடியே கமலா அவள் தான் அவனது சிந்தனையில் நர்த்தனமாடும் அந்தச் சிங்காரி நின்றாள். அவளோடு யாரோ சில பிரயாணிகள்……
பஸ் நின்றதும் அவளைக் கவனியாதவன் போலக் கனகு தனது வேலையில் முனைகிறான்.
“பெரியவர் எவ்விடம்?”
“பலாலி.”
“ஆச்சி எங்கையெணை?”
“புன்னாலைக்கட்டுவன் பிள்ளையார் கோயிலடி.”
“அடுத்தாள்?”
“…………….. ”
அவனுடைய கேள்வி அநாதரவாய் நின்றபொழுது அவன் நிமிர்ந்தான்.
கமலா அவனைப் பார்த்துக் கணீரென்று சிரித்தாள். தினமுந்தானே அதே பஸ்ஸில் அவள் பிரயாணம் செய்கிறாள். அவள் போகவேண்டிய இடமும் கனகுவிற்கு நன்றாகத் தெரியும். பின்பும் கேட்டால்….. கனகுவின் விஷமத்தனத்தைக் கண்டபோது கமலாவிற்குச் சிரிப்புத்தான் வந்தது.
அவளது உள்ளத்தை நிரப்பி ஒலித்த அந்தச் சிரிப்புக்குப் பதிலாய் அவனும் சிரித்துவிட்டு ‘டிக்கற்’றைக் கிழித்துக் கொடுத்தான்.
பஸ்ஸிற்குள் இருந்தபடியே கமலாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சில இளம் உள்ளங்கள் ஏமாற்றமடைந்தன. அந்த அழகி எங்கே போவதற்கு ‘டிக்கெற்’ பெறுகிறாள் என்றறியவல்லவா அவர்கள் காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
பஸ் புறப்பட்டது.
கையில் இருந்த பென்சிலைக் காதில் செருகிவிட்டு, கமலா கொடுத்த ஐந்து ரூபா நோட்டுக்கு மிகுதிப்பணத்தை எடுத்தான் கனகு. விரல்களிடையே அடுக்காக மடித்து வைத்திருந்த நோட்டுகளில் நான்கைக் கொடுத்தபின், சில்லறை எண்பது சதத்தை எடுப்பதற்காகத் தானணிந்திருந்த காக்கிச் சட்டைக்குள் கையைவிட்டு லாவகமாகக் சுழற்றியபொழுது கலீரென்ற ஓசை கிளம்பியது. வேறு யாராவது அப்படி நோட்டாகக் கொடுத்திருந்தால் அவர்கள்மேல் துள்ளி விழுந்திருப்பான் கனகு. நெருக்கடியான நேரத்தில் பணத்தைச் சில்லறையாக மாற்றிக் கொடுப்பதில் இருக்கும் கஷ்டம் அவனுக்கல்லவா தெரியும்.
இவ்வளவு நேரமும், தான் இருந்த இடத்தைக் கிழவிக்குக் கொடுக்காத வாலிபன் இப்போது எழுந்து கமலாவிற்கு இடத்தைக் கொடுத்துவிட்டு அவளைப் பார்த்து இளித்தான்.
கமலா அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் ‘ஜம்’மென்று அந்த இடத்தில் அமர்ந்துகொண்டாள். சை! ‘தாங்ஸ்’ என்று ஒரு வார்த்தையாவது கூறி அவனைப் பார்த்துப் பல்லைக் காட்ட வேண்டாமா?
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாரோ கிழவர் கனகுவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்; கனகுவும் சிரித்தான்.
வெளியே வீசிய காற்றில் கனகுவின் உடைகள் படபடவென்று அடித்தபோது அவன் சற்று உள்ளே நுழைந்து, தனது சலவை மடிப்புக் குலையாத காக்கிச் சட்டையை இழுத்துச் சரி செய்துகொண்டான்.
இப்போதெல்லாம் அவன் மடிப்புக் குலையாத சட்டைதான் போடுவான். ஒருநாள் போட்ட உடுப்பை மறுநாள் போடவே மாட்டான். சில்லறைகளின் பாரத்தில் தொய்ந்துபோன சட்டைப்பையைப் பார்க்கும்போது எவ்வளவு கேவலமாக இருக்குமென்பது அவனுக்கல்லவா தெரியும்.
சனி, ஞாயிறுகளில் மட்டும் அவன் உடைகளில் அதிகம் கவனஞ் செலுத்துவது கிடையாது. அப்படியென்றால் அந்த நாட்களில் கமலா பஸ்ஸில் பிரயாணஞ் செய்வதில்லையென்று அர்த்தம் !
சிறிது காலத்திற்குள் அவனுடைய தோற்றத்தில் எவ்வளவு மாற்றம்! அவனுடைய பகீரதப் பிரயத்தனத்திற்கும் அடங்காமல் பன்றிமுள்ளாய்க் குத்திட்டு நின்ற கேசங்களில்கூட அலையலையாகச் சில சுருள்கள்! குண்டூசித் தலையளவில் அவன் வைத்திருக்கும் சந்தனப்பொட்டு அவனுடைய வதனத்திற்கு எடுப்பாகத்தான் இருக்கிறது!
சில நாட்களாக டிரைவர் தம்புவும் கனகுவின் மாற்றத்தைக் கண்டு அடிக்கடி அவனைக் கேலிசெய்கிறான்.
பலாலி லைனில் ஒன்பது மணி பஸ் என்றால் எந்தக் கண்டக்டருக்கும் தலைவேதனைதான். அப்பப்பா ! அந்தக் ‘கிறவுட்டை’ ஏற்றி இறக்குவதென்றால் சாமானியமான காரியமா? அதே ‘ரேணில்’வேலை செய்யாமல் ‘டைம் கீப்பரி’டம் தப்பிக்கொள்வதில் கண்டக்டர்களிடையே போட்டி.
அதே ஒன்பது மணி‘ரேணை’த் தனக்குத் தரவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கும் கனகுவைப் பார்க்கும்போது,‘டைம்கீப்பரி’ன் கண்கள் எட்டாவது அதிசயத்தைக் காண்பது போல் விரிவதில் வியப்பில்லைத்தான்.
ஒன்பது மணி பஸ்ஸிலே தான் ஒய்யாரி கமலா வருவாள் என்பது மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!
கமலா அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் சொக்கிப்போவான். அச்சிரிப்பொலி அவனது மென்னுணர்வுகளைத் தட்டியெழுப்பி அவனைச் சிறிது சிறிதாக மேலே தூக்கிச்சென்று, அவன் என்றுமே கண்டிராத இன்ப புரிக்கல்லவா கொண்டு செல்லுகிறது.
முதலில் கமலா அவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனொன்றும் வித்தியாசமாக எண்ணவில்லைத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் சிரித்தபோது அச்சிரிப்பில் அவன் மயங்கத் தொடங்கினான். அவளின் சிரிப்பைக் காணாத நாட்களில் அவனிடத்திலும் சிரிப்பு மறைந்துபோகுமளவிற்கு வந்துவிட்ட பிறகு……. இதைத்தான் காதல் என்பார்களா!
கமலாவோடு கதைக்கவேண்டுமென்று அவன் துடித்தான். ஆனால் எப்படிக் கதைப்பது? அதுவும் மற்றப் பிரயாணிகளின் முன்னால்…..
பல வேளைகளில் அவனைக் கைவிட்டுவிடும் அவனது மூளை அன்றுமட்டும் அப்படியொன்றும் ‘மக்கர்’ பண்ணிவிடவில்லை.
அவள் கொடுத்த பணத்திற்கு மிகுதியைக் கொடுக்கும் போது வேண்டுமென்றே ஐம்பது சதத்தைக் குறைத்துக் கொடுத்தான் கனகு. அப்போது கமலா அதை அவனிடம் கேட்பாளல்லவா? இப்படித்தான் கதைப்பதற்குச் சந்தர்ப்பங்களை உண்டாக்க வேண்டும்.
கமலா பணத்தை எண்ணி பார்த்துவிட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். வாயைத் திறந்துதான் கேட்கட்டுமேயென்று மௌனமாக இருந்தான் கனகு.
ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஒன்றுமே நடக்கவில்லை. கமலா பணத்தைக் கேட்காமலே இறங்கவேண்டிய இடத்தில் இறங்கிப் போய்விட்டாள்.
கனகுவிற்குப் பெரிய ஏமாற்றமாயிருந்தது. கமலா ஏன் மிகுதிப் பணத்தைக் கேட்கவில்லை; ஒருவேளை குறைத்துக் கொடுத்ததைக் கவனிக்கவில்லையோ…… சீ! என்ன முட்டாள்தனமான எண்ணம். அவள் மிகுதிச் சில்லறையை எண்ணிய பொழுது அவன் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். ஒருவேளை அப்பணத்தைக் கேட்பதற்கு அவளுக்கு வெட்கமாக இருந்திருக்குமோ? அல்லது நான்தான் எடுத்துக் கொண்டேன் என்பதற்காகப் பேசாமல் இருந்திருப்பாளோ…. அப்படித்தான் இருக்கவேண்டும்.
ஒருவேளை அவள் தவறாக எண்ணிவிட்டால்….. நான் பணத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டேன் என்று நினைத்துவிட்டால்….. சே! அப்படியெல்லாம் இருக்காது. கமலா அப்படி எண்ணவே மாட்டாள். அப்படியானால் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பாளா? ஒருவேளை ஏளனச் சிரிப்பாக இருந்து விட்டால்…..
கனகு சிந்தனையைச் சிக்காக்கிக் கொண்டிருந்தான். அன்று முழுவதும் எந்தவேலையும் ஓடவில்லை. இரவு நித்திரையும் வரமறுத்தது.
அடுத்தநாள் எப்படியும் மிகுதிச் சில்லறையைக் கொடுக்கும் போது அவளது ஐம்பது சதத்தையும் சேர்த்துக் கொடுத்து விடவேண்டும். அவள் அதைப் பற்றிக் கேட்கும்போது தற்செயலாகத் தவறு நடந்துவிட்டது என்று கூற வேண்டும். எப்படியோ கதைப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் சரிதான்.
அடுத்தநாள் கமலா பஸ்ஸில் ஏறியபொழுது ‘டிக்கட்டு’க்கு வேண்டிய பணத்தைச் சில்லறையாகவே கொடுத்தாள்.
கனகுவின் உள்ளத்தில் ‘சுரீர்’ என்று தைத்தது. நோட்டாகக் கொடுத்தால் பணத்தை எடுத்துக்கொண்டு விடுவேன். என்பதற்காகச் சில்லறையாகவே கொடுக்கிறாளா? கனகு சமாளித்துக்கொண்டு அசடுவழியச் சிரித்தான். ‘டிக்கட்’டைக் கொடுக்கும்போது ஐம்பது சதத்தையும் சேர்த்துக் கொடுக்க அவன் தவறவில்லை.
பணத்தைப் பெற்றுக்கொண்டவள், ஏன் எதற்காக? என்று ஒரு வார்த்தையாவது கேட்கவேண்டாமா? பேசாமல் போய் இடத்தில் உட்கார்ந்துவிட்டாள்.
அவளின் விஷமத்தனத்தை நினைத்தபோது கனகுவிற்கு கோபந்தான் வந்தது. ஆனாலும் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லையே!
கமலா அழகி, படித்தவள், பணக்காரி அவளின் சிரிப்பிற்காக எத்தனையோ உள்ளங்கள் ஏங்கும். அப்படி இருக்கும்போது அவள்மட்டும் ஏன் என்னிடம் …… இதுதான் காதலுக்குக் கண்ணில்லை யென்பார்களோ…… கனகுவின் உள்ளத்தில் இன்ப மயமான சிந்தனைகள்.
ஏன் கனகு மட்டும் குறைந்தவனா ? அழகாகத்தான் இருக்கிறான். ஏன் படித்தும் இருக்கிறான். எஸ். எஸ். சீ. பாஸ் பண்ணியவன், ஏதேதோ வேலைகளுக்கெல்லாம் அலைந்தும் கிடைக்காததால் கண்டக்டராக அமர்ந்துகொண்டால்….. இந்த வேலைதான் குறைந்ததா?
அப்படியென்று யாராவது எண்ணினாலும் அவனது உணர்ச்சிகளை அணைபோட்டு விடமுடியுமா? உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை – பணக்காரன், சாதிப் பிரச்சினைகள் இவையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? அதுதான் எல்லாவற்றையும் கடந்ததொன்றாயிற்றே!
கமலா பஸ்ஸிற்குள் ஏறிவிட்டால் கனகுவின் வாயில் ஆங்கிலம் விளையாடுவதுமுண்டு. அப்போதெல்லாம் கமலா கவனிக்கிறாளா என்பதையும் அவன் கடைக்கண்ணால் பார்த்துக் கொள்வான். அப்போது கமலாவின் கண்களில் தென்படும் ஆர்வத்தைக் காணும்போது கனகுவின் முகத்தில் தோன்றும் பெருமையைக் கணக்கிடமுடியாது.
தனக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதை கமலா அறிந்தபோது எப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பாள் எனக் கனகு கற்பனை செய்து பார்த்துக்கொள்வான்.
அன்று கமலா பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவனது காலடியில் புத்தகமொன்று ‘தொப்’பென்று விழுந்தது.
கமலாவின் கையிலிருந்து நழுவியதை அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவள் வைத்திருந்த புத்தகங்களில் வேறொன்றும் தவறாமல் ஒன்றுமட்டும் எப்படி அவனது காலடியில் விழும்!
கமலா திரும்பிக்கூடப் பார்க்காமல் போகிறாளே! ஒரு வேளை விழுந்ததை அவள் கவனிக்கவில்லையா ? அல்லது வேண்டுமென்றே நழுவ விட்டுச் செல்கிறாளா?
அவளைக் கூப்பிட்டுப் புத்தகத்தைக் கொடுக்கலாமா? அல்லது…. முடிவிற்கு வரமுன்பே பஸ் புறப்பட்டுவிட்டதே.
புத்தகத்தை அவன் கையில் எடுத்தான். ‘காதலிப்பது எப்படி?’ – புத்தகத்தின் பெயரை வாசித்தபோது புருவங்களை உயர்த்தி இதழ்களைக் கூட்டிச் சிரித்தான் கனகு.
ஒரே நொடியில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் உதயமாகின. கமலா வேண்டுமென்றே புத்தகத்தை நழுவவிட்டிருக்கிறாள் என்பது கனகுவிற்குச் சொல்லியா தெரிய வேண்டும்.
கமலா கெட்டிக்காரிதான்! எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்கிறாள்! என்னிடம் இருக்கும் தயக்கங்கூட அவளிடம் இல்லையே.
பெண்கள் எப்பொழுதுமே காதல் விஷயங்களில் சற்று முன்னோடிகள்தான். காதலிப்பதெப்படி என்றல்லவா எனக்குக் கற்றுத்தருகிறாள் கமலா.
அன்றிரவு ஒரே மூச்சில் புத்தகத்தை வாசித்துமுடித்தான் கனகு. முக்கியமான பகுதிகளில் கமலா அடையாளங்கள்கூடத் தீட்டியிருக்கிறாளே!
எவ்வளவோ விஷயங்கள் அவனுக்குப் புதிதாகப் புரிந்தன.
மறுநாள் கமலா பஸ்ஸில் ஏறியதும் அவளிடம் புத்தகத்தைக் கொடுத்தான் கனகு. “இதை நேற்றுத் தவறவிட்டு விட்டீர்கள்”
“ஓ” இதழ்களை அவள் குவித்துவிட்டு நாணமாய் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
கனகு ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தான். அப்பப்பா! அந்தச் சிரிப்பிலேதான் எவ்வளவு கவர்ச்சி!
இனிப் பொறுக்கவே முடியாது. கமலாவோடு எதையெல்லாமோ கதைக்கவேண்டுமென்று அவன் உள்ளம் துடித்தது. கமலாவின் ஒவ்வொரு புன்னகையும் அத்துடிப்பின் வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தன. இந்தப் பாழும் உள்ளத்திற்கு ஏன் இவ்வளவு துடிப்பு? ஏன் இவ்வளவு வேகம்? ஏன் இவ்வளவு உணர்ச்சி? எதையுமே கட்டுப்படுத்த முடியவில்லையே…..
கனகு பஸ் நிலையத்தில் நின்றான். அதிகாலையில் பெய்யத் தொடங்கிய மழை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. முன்பு புறப்பட வேண்டிய பஸ் அரைமணி நேரம் தாமதித்துப் புறப்பட்ட தாலோ அல்லது மழையின் காரணமாகவோ ஏனோ ஒன்பது மணி பஸ்ஸில் வழக்கம்போல் நெருக்கடியில்லை. ஆறோ ஏழு பிரயாணிகள் மட்டுந்தான்.
கமலா வழக்கம்போல் இந்த பஸ்ஸிலேதான் வருவாள். பிரயாணிகளும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இன்றுதான் கதைப்பதற்கு சரியான சந்தர்ப்பம்.
எப்படிக் கதையைத் தொடங்குவது? எப்படி உள்ளத்தின் உணர்ச்சிகளை அவளுக்கு எடுத்துக் கூறுவது? என்றெல்லாம் கனகுவின் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது.
பஸ் ஆரியகுளம் சந்தியில் திரும்பி நின்றது. அங்கே….. கமலா நின்றாள். அவளுடன் யாரோ ஒரு வாலிபன்! இருவரும் தம்மை மறந்தநிலையில் ஒருவருள் ஒருவராய்க் குடைக்குள் ஒதுங்கியிருந்தனர்.
‘பளீ’ரென்று வெட்டிய மின்னல் – இடி – ‘சோ’ என்ற பேய்க்காற்றின் இரைச்சல்…. மழை பலக்கிறது.
கனகு கஷ்டப்பட்டுத் தன்னைச் சமாளித்துக்கொள்ள முனைந்தான்.
“எவ்விடம்?”
“உரும்பராய்….. இரண்டு டிக்கட்” கமலாவின் குரல் கணீரென்று ஒலிக்கிறது.
அவள் கொடுத்த நோட்டுக்குச் சில்லறையைக் கொடுத்தபோது சரியாக எண்ணிக் கொடுத்தான் கனகு.
கமலா வழக்கம்போல் இன்றும் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள்.
கனகுவின் கன்னத்தில் ‘பொட்’டென்று இரண்டு சூடான துளிகள் விழுந்தன.
அவை மழைத்துளிகளல்ல என்பது அவனுக்கு மட்டுந்தான் தெரியும்.
வெள்ளத்தை வாரியிறைத்துக் கொண்டு பஸ் புறப்பட்ட போது நீரில் அழகாகத் தோன்றியிருந்த குமிழியொன்று ‘பட்’டென்று உடைந்து சிதைந்தது.
கனகு வேதனையோடு வேறுபக்கம் பார்வையைத் திருப்பினான்.
பிரயாணிகளில் யாரோ அடுத்த சந்தியில் இறங்குவதற்காக எழுந்தார்கள். கண்டக்டர் கனகு இயந்திரமாகத் தனது கடமையில் ஆழ்கிறான்.
“ஹோல்டோன்.”
– வீரகேசரி 1965.
– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.
வனக்கம்,
சிறுகதை சிறப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏனோ மனதில் நிலைக்கவில்லை.
கதையின் போக்கும், மொழி கலப்பும் காரனங்களாய் இருக்குமென நினைக்கிறேன்.
கதையின் ஓட்டத்தில் சற்று தொய்வுகள் இருப்பதை போல உணர்கிறேன்.
கதையின் முடிவில் தெளிவில்லாது போலும் உணர்கிறேன்.
ஆனாலும் கதை வாசிக்க இயல்பாய் உள்ளது.
பாராட்டுக்கள், மீண்டும் சிறந்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்.
வாழ்த்துக்களுடன்..
பாபு..