குடைக்குள் மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 18,810 
 
 

மீனலோட்சனி…………………..

இந்த பெயரை உச்சரிக்க நினைக்கும் போதே, குடை தாண்டி ஒரு மழை என்னை நனைக்கத் தொடங்குகிறது..

மீனா……….

மீனா என்று அழைத்தால் அவளுக்கு பிடிக்காது….. மீனலோட்சனி என்று முழு பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்பது அவளின் மழையின் ஆளுமை….

கடற்கரையில் மழையோடு நிற்பதென்பது அலையோடு துளியாவது. பட்டுத் தெறிக்கும் மழையெல்லாம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெள்ளிக் கம்பிகளின் குட்டித் தம்பியென, ஒரு சாயலில் தலை சாய்க்கும், வித்தை விதைக்கிறது. பூத்தூவும் மழையில் நானும், ஆர்ப்பரிக்கும் கடலும், அழகிய அலையும் ஒரு நேர்க்கோட்டு சிந்தனையில், சட சடவென, குளிருக்கு நடுங்கும் குடையுடன், விரியும் கண்களில் வெண்மேகத் துளிகளின் ரீங்காரத்தை கண்களால் நிரப்பிக் கொண்டு காணாமல் போய்க் கொண்டிருந்தோம்…..

மேகத்தை பிழிவதை உணர முடியும் தருணம். எங்கு பார்க்கினும், எங்கெங்கு பார்க்கினும் மழையே…… மழைதான் வெளியின் அர்த்தமோ..!

எனது அர்த்தங்கள் கண் நிரம்பிய குளங்களானது ….மழையோடு, அவளோடு இருந்த நாட்கள், கனவோடு விடிந்த பூக்கள்…. இரும்பு பூக்களை இனம் மாற்றும் வித்தை இந்த மழைக்கு தெரிந்திருக்கிறது.

சர்ர்ரென …. ஒரு புது வீணை மீட்டலாய், முதல் துளியை விரட்டிக் கொண்டே விழும் துளிகளெல்லாம் புதுத் துளிகள்தான் என்பாள்,கண்கள் விரிந்த மீனலோட்சனி. மழை மீது அவளுக்கு காதல். அவள் மீது எனக்கு காதல். என் மீது மழைக்கு காதல். அது ஒரு தொடர் சிந்தனை. எத்தனை யோசித்தாலும் புத்தனைப் புரியாததைப் போல, மழையின் தொடர்பற்ற தொடர்புகள் நினைவுகளைக் கிளறுவதில் சல்லடை தாண்டிய சில் ஊசிகள்….

ஒரு பெரு மழை நாளில்தான் இதே இடத்தில் தன் காதலைக் கூறினாள் மீனலோட்சனி… உள்ளங்கையில் பிடித்த மழைத் துளிகளை தீர்த்தம் போல முகத்தில் தெளித்தாள் . நொடிகளில்,முகம் திருப்பி திரும்புவதற்குள், மழையோடு நீ இருந்தால், மனமெல்லாம் சுகமே என்றாள். குடை சாய்த்து, அவளைக் காணுகையில் மழைப் பெண்ணாய் கண்கள் விரிய நின்றாள். ஏதோ, இந்த மழையே அவளுக்காக பெய்வது போல் ஒரு கர்வம் அந்த மொட்டு கண்களில் கண் மை கரையச் செய்து கொண்டிருந்தது…மழைத் துளிகளால் நெய்யப்பட்டவள் போலொரு தோற்றம். முன் நெற்றியில் அரை நெற்றியை கூந்தலால் மறைத்திருந்தாள். மிச்சத்தை மழை போல் துளிகளாக்கி, அரை வட்ட நிலாவாய் நனையச் செய்திருந்தாள்.

நினைவுகளின் கூடாரமாய், என்னைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தது அவளின் மழைத் துளிகள். வானக் கண்ணில் நானொரு இறக்கை விரிந்த காகமாய் தெரியலாம். குடையின் படபடப்பு, நடுங்குவதாய் கூட உணரச் செய்யலாம். நின்று, நிதானமாய் மழைக்குள் மழை பார்ப்பது, சிந்தனைகளை நிறமாற்றிக் கொண்டிருந்தது. வெற்றிடத்தின் வியர்வைத் துளிகள் செவ்வக வடிவில் குறிப்பிட்ட இடைவெளியில் கடல், கரையை, வெளியை, பகலை நிறைத்துக் கொண்டேயிருந்தது… மீனலோட்சனியின் அரவணைப்புகள் பெரும்பாலும் மழை நாளில் அதிகமாகும். அத்துமீறும் பெண்மையை, உணர்வது, ஆண்மையின் தவம். என் தவங்களை வரமாக்கிய போதனைகளின் துளிகளை, இந்த மழையே, காலம் காலமாய் கொண்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன், உணர்கிறேன்…. காது முழுக்க ஒரே விதமான பேரிசை, மழையின் சிரிப்பு அல்லது…. சிலிர்ப்பு. அது கத்திச் சொல்லும் காதலை கடல் அறிந்ததோ இல்லையோ நான் அறிவேன். மழையோடு தீர்ந்தவள் என் மீனலோட்சனி…மழை இல்லாத ஊரில் அவள் இறந்து விடுவாள். அவள் அப்படித்தான்….முன் பின் போய் வந்த எண்ணங்களை மழை என்னும் திரைக்கதையாய் ஓட செய்கிறவள் மீனலோட்சனி. காதலோடு இருக்க கல்யாணம் எதற்கு என்று அவள் கேட்ட நாளில் ஒரு மிதமான மழை வந்து கொண்டிருந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. அணைத்துக் கொண்டேன். இன்னொன்றும் கூறினாள். அன்று பெரு மழை நாள். “மனித பிறவியில் குழந்தை பெற்றுக் கொண்டே தீர வேண்டுமா? இந்த பூமியில் சந்ததிகளை விட்டுச் செல்லத்தான் வேண்டுமா?” என்றாள். இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன்….

பாலம் பாலமாய் வெடித்துக் கிடக்கும் மண்ணைக் கண்டால், கண்களில் பெருமழை சிந்துவாள். அவளைப் புரிந்து கொள்வது சிரமம் என்றெல்லாம் இல்லை…. சுலபமாக புரிந்து கொள்ளலாம், மழையை புரிந்து கொள்வது போல….குழந்தைகளுக்கு பதிலாக, நாங்கள் மரம் வளர்த்தோம்…. மரம் சொன்ன கதைகள் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருக்கும்….எங்களிடம் மரங்கள் பேசின…. அவளிடம் நிறைய ரகசியங்கள் சொல்வதாக கூறுவாள்….வயதாக, வயதாக தலைமுடியில் கருப்பு மை அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றிய எண்ணத்தில் வெள்ளை அடித்தாள். ஐம்பது வயது தோற்றம், ஐம்பது வயதில் அப்படித்தான் இருக்கிறது…. இருக்கட்டும் என்றாள். . பால் போன்ற தலைமுடியில், ஒரு வித அனுபவம் பரிசுத்தமாகிறது…… அவளை சுலபமாக உணர்ந்து கொள்ளும் தருணங்களை இந்த மழை எனக்கு துளி துளியாய் சொல்லித் தந்திருக்கிறது……

சொன்னால் நம்புவதற்கு சிரமம் தான். மழை மேல் சத்தியமாய் நாங்கள் ஒரு முறை கூட சண்டை போட்டது கிடையாது. கருத்து முரண்பாடுகளை கூட, இடம் மாற்றி யோசித்து புரிந்து கொள்வோம்…ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முத்தங்களாவது பரிமாறிக் கொள்வோம். காதலை காமத்தில் உணர்ந்து கொண்டேயிருப்போம். காமத்தை காதலில் புரிந்து கொண்டேயிருப்போம். மழை விடாத நாட்களில் மையிருட்டின் புயலை அவளிடம் உணர்ந்திருக்கிறேன்…. நிலவில் மழை வேண்டும் என்று வேண்டுவாள், மழையில் நடக்கும் நிலவாக. மெல்லிய தீண்டல்களின் பரிணாமமே, மழைத்துளியின் தொடுதல் என்பாள். விரல் கோர்த்துக் கொண்டு வீதி தாண்டும் வேளையில், குழியில் சேர்ந்திருக்கும் மழை நீரில் சடாரென எட்டிக் குதித்து சிரிப்பாள்…

சிறுவயதில் ஒரு மழைநாளில், வீடே அதிர அதிர சிரித்த கதை ஒன்றைக் கூறுவாள். ‘அ ‘ வை பெரியதாக எழுதிவிட்டு, அது தான் ” ஆ ” என்று சொன்னதாக, அதற்கு பின்னால் பனி மூட்டமாய் ஒளிந்து கிடந்த மழலையின் புரிதல், சிரிப்பாய் வெளிப்பட்டதை நினைவு கூறுவாள். நான் சிரிக்கின்றேன். இப்போதும் சிரிக்கத் தூண்டும் செயல் அது…. அதுவும் அவள் கூறும் போது, அது இன்னும் சுவையாக மாறும், அதிகாலை மழை போல… என்னால், கடலில் கடலாகும் மழையை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. இந்த மழை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்கிறது… அது கடலுக்கு புரிகிறது. அதையே, வேறு மாதிரி கரை புரிந்து கொள்கிறது….வெளியின் புரிதல் வினோதம். அது பல நேரங்களில் ஜன்னலையும், கதவையும் அடைத்து விடுகிறது….

என் குடை, காற்றிலும், தட்… தட்… தட்…. என படும் துளிகளிலும் தலையாட்டி கதை கேட்டுக் கொண்டிருக்கிறது. தீரா தனிமைக்குள் சுதந்திரமாய், தன் ஆடைகளை கலைகிறது இந்த மழை. நிர்வாண மழையில் கற்புக்கு வேலையில்லை…. உயிர் கரைதலை உணர்த்தும் இம் மழை கணங்களில் மாறிக் கொண்டேயிருக்கும் புகைப்படம். மீனலோட்சனியின் பல புகைப்படங்களில் சிறையாகி நிற்கும், மழைக் கம்பிகள், புகைப்படத்தின் காலங்கள்….மழையில் மழை நனைவதாக அவள் எழுதிய கவிதைகள் இன்னும் காயவில்லை என் நினைவு பாலையில். சிலபோது, மழையேறி, வான் வெளியில் மேகமாகிவிடும் மண்துகள்களின் மின்மினி அவள். அவளாக இருப்பது அழகு…. அவளோடு இருப்பது பேரழகு…. நான் பேரழகன் என்பாள்… இந்த முப்பது வருடங்களில் அவளின்றி கடல் கண்டது இதுவே முதல் முறை. இப்போது கடலாகவும் அவள் மாறிவிட்டதாக, அவளாகிய மழை சொல்லும் ரகசியம், என் தனிமையின் ஆழமாய் மணலுக்குள் ஆழப் பதிந்த என் பாதச் சுவடுகளை நனைக்கிறது…..

எனக்குள் ஒரு வித கரைதல். நான் அழுது விடக் கூடாது. அழுவது அவளுக்கு பிடிக்காது. கண்ணீருக்கும் அழுகைக்கும் சம்பந்தம் இல்லை என்பது அவளின் மழைப்பாட்டு. கண்ணீரைத் துடைத்து, பின்னாலேயே பயணித்தது குடை தாண்டிய மழை…சட்டென நினைவு வருகிறது. அவளுக்கு குடை பிடிக்காது…. என்னால் இனி இந்த குடையைப் பிடிக்க முடியாது…. காய்ச்சல் தந்து விடும் என்பதால் வேறு வழியின்றி, பிடித்துக் கொள் என்பாள். வந்தாலும் பரவாயில்லை என்று குடை மறப்பேன் நான். இதோ இன்றும் குடையை காற்றின் கைகளில் தவழ விட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்…

சாலையெங்கும் மழைத் துளிகளின் தலைவிரி கோலம். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிய மனித கூட்டம், மழையை வெறித்த கண்களோடு , ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது….மரமற்ற சாலை, இனி ஒரு மழைக்காக எத்தனை காலம் காத்திருக்குமோ….? சாலையின் இருபக்கமும் வளைந்து இதழ்கள் தீண்டி நிற்கும் இலைகளோடு, மரங்கள் இருந்த காலத்தில், மீனலோட்சனி பச்சைக் கண்காரியாய் சிறகு விரித்து, மழையாக சிதறிக் கொண்டிருந்தாள் . இன்று சாலை மட்டுமே இருக்கிறது…

காயாத சாலையில், உஷ்ணம், வெண் புகையாய் வெளியேறிக் கொண்டிருந்தது…திரும்பி பார்த்தேன்…. மழை நிறைந்த பெருவானமாய் கடல், பிரபஞ்சம் நனைத்துக் கொண்டிருந்தது….

திறந்து கிடந்த வீட்டுக்குள் சாரல் துளிகள் சல்லடை துளைத்த துளி மீன்களாய் சிதறிக் கொண்டிருந்தது…வாசல் தாண்டி வீட்டுக்குள் நுழைந்த என் மீனலோட்சனி, உள்ளங்கையில் ஒளித்து வைத்திருந்த, மழைத்துளிகளை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப் படத்தில் தெளித்தாள்….அவளுக்கு மரணமும் வாழ்வும் ஒன்று தான்….அவளின் புன்னகை ஒரு பெரு மழையை தேக்கி வைத்திருந்தது….

வாசலில் நனைந்து கொண்டிருந்தது, நான் கடற்கரையில் மழையோடு விட்ட குடை……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *