கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,630 
 
 

கல்யாணத்திற்குப் பின் எனக்குப் பிடித்தமான, நினைவில் நீங்காமல் நிற்கும் இடங்களாக இருப்பது மூன்று. ஒன்று, என் கணவர் உடம்பெல்லாம் நெகுநெகுவென எண்ணை பூசிக்கொண்டு, உச்சி வெயிலில் வழுக்கி விழுந்த இடமான மொட்டை மாடி. இரண்டாவது, அதே கணவர் வலது கை கட்டை விரலை கத்தியில் அறுத்துக்கொண்டு அடுப்பங்கரை ஏகலைவனாக ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற சமையற்கட்டு. மூன்றாவது, கல்யாண சரிகைப் பட்டு வேட்டி முழுவதும் ரங்கோலிப் பவுடர் பூசிக்கொண்டு முகமெல்லாம் சாயத்தோடு அவர் நின்ற எங்கள் வீட்டு முன் வாசல்.

புருசன் வழுக்கி விழுவது, விரலை கத்தியால் வெட்டிக்கொள்வது, முகத்தில் கரி பூசிக்கொள்வது போன்றவற்றிற்காக ஒரு பெண் வருத்தப்படாமல் அதை நெஞ்சில் நிற்கும் நீங்காத நினைவுகளாக கொண்டாடுகிறாள் என்றால் அங்கே புருசன் மனைவிக்குள் ஏதோ விபரீதம் என்று பலர் நினைப்பார்கள். அது அப்பட்டமான தப்பு என்கிறேன் நான். எதற்காக அந்த இடங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன என்று அறிவதற்கு முன் சில முன்கதைச் சுருக்கங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

எனக்கு கி.பி. 32-ம் ஆண்டு கல்யாணமாயிற்று. (அடேங்கப்பா! அப்பவேவா?) ஆச்சர்யம் வேண்டாம். கி.பி. என்றால் கிஷான் பிறந்த பிறகு என்று அர்த்தம்; நான் ஆயிரம் வருசத்துக் கிழவி என்று அர்த்தமல்ல. கிஷான் என் காதல் கணவர். எனக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகளும், குழந்தைகளுக்கு மத்தியில் இரண்டரை வருட இடைவெளியும், கடைசி குழந்தைக்கு வயசு ஏழுமாதமும் ஆகிறது என்றால் எனக்கு கல்யாணமாகி எவ்வளவு நாளாகிறது என்று தெரிந்து கொள்ளவும் என்று சொல்லி நான் யாரையும் குழப்பமாட்டேன். காரணம் எனக்கு எதிலும் எளிமையும், நேர்மையும், புரியும்படி பேசுவதும் பிடிக்கும். (என்னே சொல்வதில் எளிமை!)

காதலில் மூன்று வகை இருக்கக்கூடும் என்று நம்புபவள் நான். அதனால் காதலிப்பவர்களும் மூன்று வகையாக இருப்பார்கள். முதல் வகை: கல்யாணத்திற்கு முன் காதலிப்பவர்கள். (பின்னாளில் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் விரக்தியாய் பிரிநது வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். அல்லது வேறு வேறு ஆட்களை கல்யாணம் செய்துகொண்டு பழசை மறந்து சந்தோசமாகவும் இருப்பார்கள்.) இரண்டாவது வகை: கல்யாணம் செய்துகொண்ட பின் காதலிப்பவர்கள். (சிலர் கண்ணே மணியே என்றும் வேறு சிலர் கத்தி, பூரிக்கட்டை போன்ற உப ஆயுதங்களைக் கொண்டும் காதலிப்பார்கள்) மூன்றாமவர்கள் ‘உங்களுக்கு கல்யாணம்’ என்று பேசி முடித்து பாதுகாப்பாய் தகவல் சொன்ன பிறகு கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் காதலிப்பவர்கள். நாங்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள்.

என்னை பெண் பார்ப்பதற்காக வந்து என்னையே குறுகுறுப்பாகப் பார்த்துக்கொண்டு, சுவையாக நான் போட்டுத் தந்த வெதுவெதுப்பான காபியை குடித்த கிஷான், காபியா இல்லை காபி கொடுத்தவளா என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் பொத்தம் பொதுவாக ‘வெரி நைஸ்’ என்று சம்மதம் சொன்னார். அதன் பிறகு ஒரு முழு வருசம் எங்களுக்கு கல்யாணமே ஆகவில்லை. பிறகு ஆயிற்று என்பது வேறு விசயம். ஆனால் அந்த ஒரு ஆண்டில் நாங்கள் நிறைய காதலித்தோம். வீட்டுக்குத் தெரிந்து சுற்றினால் கல்யாண ஜோடி; தெரியாமல் சுற்றினால் காதல் ஜோடி என்று திருட்டுத்தனமாயும் திருடாத்தனமாயும் வெகு ஜோராக காதலித்தோம்.

கல்யாணம் முடிந்த எட்டாம் நாள் பத்து சண்டையாவது புருசனோடு போடவேண்டும் என்ற பொதுப்புத்தி எனக்கு கிடையாது, என் புருசனுக்கும் கிடையாது. அதனால் யுத்தம் செய்யாத ஆதர்ச தம்பதிகளாய் நாங்கள் இருந்தோம். இது போன்ற ‘சண்டையில்லா புருசன் பொண்டாட்டி’ ஊருக்காகாது என்று நினைத்தோ என்னவோ விதி எனக்கொரு கருப்பு பெண்மணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. பவுனம்மாள் என்ற அந்த பெண் என் வீட்டிற்கு துவைக்கவும் பாத்திரம் கழுவவும் வந்து போனாள்.

அவள் தினமும் காலையில் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்து பாத்திரங்களை பரபரவென தேய்த்துவிட்டு, துணிகளை துவைத்துக் கொடுத்துவிட்டு ஒன்பது மணிக்குள்ளாக இரண்டு தம்ளர் டீ குடித்துவிட்டுப் போவாள். (அவளுக்கு காபி பிடிக்காது. கேட்டால் அவள் புருசனுக்கும் பிடிக்காதாம்.) அவள் வந்து போவதில் எந்த சிக்கலும் கிடையாது. ஆனால், அவள் தலையில் தினமும் வைத்துக்கொண்டு வந்த கமகமக்கும் ஜாதி மல்லிப் பூவின் வாசனை வழியாகத்தான் விதி வந்தது.

நாங்கள் இருக்கும் தெருவில் பூக்கடையென்ற ஒன்று கிடையாது. ஆள்வைத்துத் தேடினாலும் சாக்கடைதான் இருக்கும். அவளோ வெயிலானாலும், மழையானாலும், குளிரானாலும், பனியானாலும்- எந்த நாளாக இருந்தாலும் தலையில் மணக்க பூவோடு வருவது ஆச்சரியமாக இருந்தது. எனக்கே பொறுக்காமல்தான் அவளிடம் கேட்டேன், “இத்தனை காலையில கடைவீதிக்குப் போய் பூ வாங்கி வெச்கிகிட்டு வரீயே… எத்தனை மணிக்கு பவுனம்மா நீ எழுந்திரிப்பே?” என்று. என் போறாத காலம்.

பவுனம்மா சிரித்துக்கொண்டே, “நானா வாங்கி வெச்சிகிடறேன். என் வீட்டுக்காரர் வாங்கியாருவாரு. அவரு வர ராத்தரி ஆயிடும். எவ்ளோ லேட்டா வந்தாலும் சார் பூ மட்டும் மறக்காம வாங்கிட்டு வருவாரு. உங்க ஐயா வாங்கித் தராறே அப்படி.” என்றாள்.

எங்க அய்யா என்னைக்கு பூ வாங்கித் தந்தார்? நான் யோசித்துப் பார்க்கிறேன். என் கிஷான் கல்யாணமாகி ஒன்பது மாத்தில் ஒரு நாள்கூட பூ வாங்கித் தரவில்லை என்பது அன்றுதான் எனக்கு உறைத்தது.

நான் கேட்டேன். “உனக்கு என்ன வயசாவுது பவுனம்மா?”

“நாப்பது வயசும்மா.”

“கல்யாணமாகி?”

“பதினைஞ்சி வருசம்.”

“இத்தனை வருசமாவா பூ வாங்கி தராரு?” (ஆஹா! இதான் பொறாமை!)

“ஆமாம்.” என்றாள் வெட்கத்தோடு.

இத்தனை வருடமாகியும் அவளுக்கு வெட்கம் வருகிறது. இப்பொழுதும்கூட அவள் புருசனுக்கும் அவளுக்கும் மாறாத காதல் இருக்கிறது. அதனால்தானே தினமும் மறக்காமல் பூவோடு வருகிறான். அவளிடம் பொறாமை மாறாமல் கேட்டேன், “இன்னும் உன் புருசனுக்கு உன்கிட்டெ செம ரொமான்ஸ் இல்ல பவுனம்மா?”

அவள் சலிப்பாக, “ரொமான்ஜும் இல்ல ஒண்ணுமில்லம்மா. காலையில சாப்பிடும்போது எதுனா கேட்டுகிட்டே அவரு திம்பாரு. நான் எதுனா சொல்லிகிட்டே சாப்பாடு போடுவேன். ஒரு வேகத்தில சாப்பிடற எச்சக் கையால கன்னத்தில சப்புனு ஒரு அறை கொடுப்பாரு. பழைய சோறு முகமெல்லாம் இருக்கும். சாயிந்தரம் வரும்போது அதை சமாதானப்படுத்த பூவோட வருவாரு.”

“தினம் பூ வெச்சிகிட்டு வரீயே…!”

“தினமும்தாம்மா அந்த மனுசன் அடிப்பான்.”

எனக்கு எச்சில் கையில் அடிபடும் அந்த சமாச்சாரம் மறந்து போனது. ஒருத்தன் தன் மனைவியை காதலிக்கிறான் என்றால் நிச்சயம் பூவோடு வரவேண்டும் இல்லையா? இதை எப்படி செய்யாமல் விட்டார் என் அருமை காதல் கணவன். இத்தனைக்கும் நான் ஏழு மாத கர்பிணியாக வேறு இருந்தேன். பூ என்ன, ஒரு பூந்தோட்டமே இல்லையா தந்திருக்க வேண்டும். தினம் இல்லையென்றாலும் இருபத்தி நாலு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஒரு முழம் பூ வாங்கித் தரவில்லை என்றால் கணவனின் அன்பை நான் சந்தேகப்படாமல் இருக்க முடியுமா?

அன்று இரவு நான் அவரிடம் சரியாக பேச்சுக் கொடுக்காமல் சாப்பாடு போட்டேன். பாதி சாப்பாட்டில் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு, “ஏன் ஹோட்டல் சர்வர் மாதிரி முகத்தை வெச்சிகிட்டு சாப்பாடு போடறே! உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார்.

“ஆமா, சர்வர்தான். அவனுக்குத் தானே பூ வாங்கித் தரத் தேவையில்லை…” என்று என் வழக்கமான பாணியில் புரியும்படி பிரச்சனையை சொன்னேன்.

கிஷானுக்கு விளங்கவில்லை. “என்னாச்சி உனக்கு?”

“கல்யாணத்துக்குப் பிறகு நீங்க கடைசியா எப்ப பூ வாங்கி குடுத்தீங்க?”

படிக்காத கேள்விக்கு பதில் எழுத யோசிப்பது போல யோசித்துவிட்டு, “ம்… தெரியலையே… எப்போ?” என்று கேட்கிறார்.

முகரையைப் பார், முகரையை. வாங்கித் தந்திருந்தால்தானே கடைசி நாள் சொல்ல. ஒரு நாளும் இல்லை என்பதை ஒப்புரவாக சொல்லிவிட்டு கண்ணில் இரண்டு சொட்டுக்கும் குறைச்சாலான அளவுக்கு அழ ஆரம்பித்தேன். நான் நினைத்தது சரிதான். என் மேல் பிரியமில்லாத கிஷான் இத்தனை நாள் பிரியமானவன் போல நடித்திருக்கிறான். ஒரு குழந்தை வேறு வயிற்றில். ‘அம்மா நான் மோசம் போயிட்டேன்மா!’ என்று அம்மா வீட்டுக்கு ஓடலாமா என்று தோன்றும் அளவுக்கு எனக்கு துக்கம் வந்துவிட்டது.

“ஏய் அருணா! என்னாச்சி உனக்கு? எனக்கு இருக்கிற வொர்க் டென்ஷன்ல பூவெல்லாம் வாங்கிட்டு வர முடியுமா? கடவுளே…! பூவுலதான் புருசனோட அன்பிருக்குன்னு நம்புறியா நீ? அதுவுமில்லாம எனக்கு பூ வாங்கி கையில எடுத்துட்டு வர கூச்சமா இருக்கு.” என்று ஒரு அரை மணிநேரம் என்னை தேற்றோ தேற்று என்று தேற்றி காதல் இருப்பதை நம்பவைக்க முயன்றார். கல்யாணம் பேசி முடித்து கல்யாணம் ஆகாமல் சுற்றிய அந்த ஒரு வருட வாழ்க்கையை யோசித்துப் பார்க்கச் சொன்னார்.

உண்மைதான். நாங்கள் அந்த ஒரு வருடத்தில் சந்தோஷ காதலர்கள்தான். தினம் ராட்சச கோன் ஐஸ்கிரீம்களை தின்று கிரீம்களாய் உருகினோம். தனிமையில் உட்கார்ந்து அர்த்தமற்றுப் பேசினோம். தீபாவளி, பொங்கல், புதுவருடம், பழைய வருடம், காதலர் தினம், அம்மா தினம், ஆன்ட்டி தினம் என்று எது வந்தாலும் மாறி மாறி வாழ்த்தட்டை அனுப்பி காதல் போர் புரிந்தோம். விவஸ்தையில்லாமல் எதற்கெல்லாமோ சிரித்து அசடு வழிந்தோம். பூ வாங்கிவர கூச்சமாக இருப்பதாய் (அதுவும் மனைவிக்கு!) சொன்ன இந்த கிஷான் அன்றைக்கு அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து ஒரு ரோஜாப் பூவை, லைலாவுக்கு மஜ்னு தருவது போல் ஒற்றைக் கால் முட்டியிட்டு தந்ததை நான் மறக்கவில்லை. அதை சொன்னதும் கிஷான் கிறுக்குத்தன சிரிப்போடு, “ஆமா… ஆமா! அப்ப தோணிச்சி…” என்றான்.

“ம், இப்ப தோணாது. ஏன்னா உங்களுக்கு இப்ப பாசம் கிடையாது.”

“ஐயா கடவுளே… அதா அர்த்தம்? உன் மேல இன்னும் அதே காதல் இருக்குடா.”

“ஐயோ, இருக்கான்டா! பொய்யீ… என் நினைப்பே கிடையாது உங்களுக்கு. எங்க, என் மேல நெஜமாவே காதல் இருந்தா என்னோட பர்த் டே என்னைக்கு சொல்லுங்க.”

அவர் திருதிருவென விழித்தார். எனக்கு அப்பட்டமாக தெரிந்துவிட்டது. ஒருத்தியை காதலிப்பவனுக்கு ஒருத்தியின் பிறந்த நாள் மறந்தே போகாது. மறக்கிறான் என்றால் அங்கே காதல் புஸ்சென்றுதானே அர்த்தம். அவனுடைய பர்த் டேவைக் கேட்டால் மறக்காமல் சொல்கிறான்.

“உங்க பொறந்த நாள் மறக்கல. எனது மறந்துடுச்சி… இதுக்கு என்ன அர்த்தம்?”

“ஏய் அருணா… ஒரு தேதிய மறந்துட்டா கட்டின பொண்டாட்டிய மறந்துட்டான்னு அர்த்தமில்ல. சரி, இப்படி பேசுவோம். உன் அம்மா மேல உனக்கு ரொம்ப பாசம்தானே. எங்க, உங்க அம்மாவோட வெட்டிங் டே சொல்லு பாப்போம்”

“உங்கள மாதிரி நான் பாசம் கெட்ட பொண்ணு கிடையாது. மே பத்தொன்பது.”

“குட். அம்மா மேல பாசம்தான். சரி, உங்க அப்பாவோட வெட்டிங் டே சொல்லு பாப்போம்.”

நான் யோசித்துப் பின் புரிந்து, “கிறுக்குப் பையா! அதும் மே பத்தொன்பதுதான். ரெண்டு பேருக்கும் வேற வேற நாளா வரும்.” என்றேன்.

அவர் என் தலையை கோதிவிட்டபடி, “அதான்டா கண்ணு நானும் சொல்லறேன். எப்படி உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வெட்டிங் டே ஒண்ணோ அப்படிதான் நம்ம பர்த் டேவும். ரெண்டு பேருக்கும் ஒண்ணுதான். ஊர் உலகத்துக்கு தெரியட்டும்னு டமாரமடிச்சி மனைவிய காதலிக்கிறவன் கிடையாது நான். உண்மையா காதலிக்கிறவன்.”

ஏமாற்றுப் பேர்வழிகள், வழிசல் பேர்வழிகள், ஜொல்லர்கள் சாதாரண கட்டு கட்ட மாட்டார்கள், சப்பைக் கட்டு – சதுரக்கட்டு கட்டுவார்கள். இதற்கு கிஷான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனாலும் முன்போல காதல் கிஷானிடம் கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. கல்யாணத்திற்குப் பின் ராட்சச கோன் ஐஸ்கிரீம் கிடையாது. பூ கிடையாது. வெள்ளிக் கிழமை கோயில் குளம் போவது கிடையாது. ஊர் அறியாமல் உள்ளே காதலிக்கிறாராம். நான் மனசு உடைந்து போனேன்.

“ஊருக்கு தெரியும், நீங்க பொண்டாட்டிய நேசிக்காத ஆளுன்னு” என்று நான் தினம் சத்தமாய் பொரிந்து தள்ளினேன். கிஷான் துக்கமான முகத்தோடு பரிதாபமாக திரிந்துகொண்டிருந்தான்.

மேற்படி பெரும் கவலையில் நான் உடம்பு இளைக்க, என் வயிற்றில் குழந்தை பருக்க காலம் இப்படியே போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் அதிகாலையில் வீட்டு வாசலில் தொபீர் என்று ஆள் விழும் சத்தம் கேட்டது. பக்கத்தில் புருசனைக் காணோம். நான் குடுத்த குடும்பப் பிரச்சினையில் மடியில் இருந்து குதித்துவிட்டாரா? காதலை நிரூபிக்க இந்த அசட்டு வழிதான் தெரிந்ததா மனுசனுக்கு? நான் பதறியடித்து மெதுவாகப் போய்ப் பார்த்தேன். (நிறைமாத கர்பிணியால் புருசன் மாடியிலிருந்து விழுந்தாலும் வேகமாக ஓடிப்போய் பார்க்க முடியாது.) வெளியே அரை வெளிச்சத்தில் என் புருசன் பட்டு வேட்டி சகிதமாய் (கல்யாணத்திற்கு எடுத்தது) தலையில் கை வைத்தபடி நின்றிருந்தார். பக்கத்தில் எவர்சில்வர் குடம் சப்பையாக ஒடுங்கி விழுந்திருந்தது. அவர் முகமெல்லாம் சாயம். பட்டு வேட்டியெல்லாம் ரங்கோலித்தனமான வர்ணம். என்ன ஆகியிருக்கும்?

வாசலில் பெரிய அளவுக்கு வண்ணக் கோலம் போடப்பட்டிருந்தது. அதன் அழகை நான் ரசிக்கிறேன். பக்கத்திலேயே ‘அருமை மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று எழுதியிருக்கிறது? கடவுளே… என் கிஷானா இந்த கோலம் போட்டது. மார்பில் கைவைத்து அதிசயமாய் என் கிஷானை சிணுக்கமான கோபத்தோடு பார்க்கிறேன்.

விடிந்ததும் வழியில் போகும் தெரிந்த தெரியாதவர்களெல்லாம் படியேறி வந்து எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. இப்படியா மானத்தை வாங்குவார் இந்த மனுசன். கிஷானோ கொஞ்சமும் வெட்கப்படாமல், வந்து வாழ்த்து சொல்பவர்களிடமெல்லாம், “ஆமா சார், ஆமா. அந்த கோலத்தை நான்தான் போட்டேன். ஏன்னா ஐ லவ் மை வொய்ப்” என்கிறார்.

“ஒரு பொண்ணு மாதிரி இப்படியா தெருவ பரப்பி கோலம் போடுவீங்க? என் மானம் போச்சி” என்கிறேன் நான்.

“நீதானே சொன்ன நாலு பேருக்கு தெரிய மனைவிய காதலிக்கணுன்னு அதான் காதலிச்சிப் பாத்தேன்” என்று குறும்பாய் அவன் சிரித்த அந்த நாளும், வண்ணக் கோலமாய் ஜொலித்த அந்த வாசலையும் எப்படி மறக்க முடியும் என்னால்.

அதே சந்தோசத்தோடு கணவன் நினைவாகவே உருகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன் நான்.

மீண்டும் பழைய ஆதர்ஷ தம்பதிகளாக ஒரு குழந்தையோடு நாங்கள் சந்தோசமாக குடும்பம் நடத்தினோம். இரண்டாவது விதியின் விளையாட்டு கிஷானின் அக்கா ரூபத்திலே வந்தது. சும்மா ஒரு வாரம் லீவுக்காக என்று விருந்துக்கு வந்த கிஷானின் அக்கா என்னையும் குழந்தையையும் பாசத்தோடு நடத்தியது உண்மை. ஆனால் கிஷானிடம் மட்டும் ‘வள் வள்’ளென்று கத்தியதும் நான் கேட்டேன், “சின்ன வயசில இருந்தே அக்கா தம்பிக்குள்ள இப்படித்தான் சண்டையா?” என்று.

“அதெல்லாம் இல்ல. கிஷானுக்கு இந்த வீட்டுல சர்க்கரை, உப்பு எங்க இருக்குன்னு தெரியுமா, சொல்லு. வந்து நாலு நாளாச்சி. அவன் சமையக்கட்டுக்கு சாப்பிடத் தவிர வேற வேலைக்கு வந்து நான் பாக்கல. இது ரொம்ப பேட் ஹேபிட். என்னோட வீட்டுக்கு வந்து பாரேன். அவர் என்னமா சுழண்டு சமைக்கிறார்ங்கறத. சமைச்சிப் போடறத திங்கறதுதான் புருசன் புத்தியா? தேன் ஒழுக பேசறது, சிரிச்சி மயக்கிறது, சிலப்பல நகை நட்டுங்கள வாங்கித் தரதால ஒருத்தனை நல்ல புருசன்னு நான் ஒத்துக்க மாட்டேன். ஒரு அன்பான புருசன் அடுப்படியில மனைவிக்கு ஒத்தாசையா இருப்பான். அவன் ஒரு நாளாவது உனக்கு காய் வெட்டித் தந்திருக்கானா?” (பத்தவெச்சிட்டியே பரட்டச்சி, பத்த வெச்சிட்டியே…)

எனக்குப் புரிந்தது. இத்தனை நாள் தித்திக்கும் வார்த்தைகளால் என்னை ஏமாற்றியிருக்கிறான் கிஷான். ஒரு பெண் குடும்பத்தின் முழு பாரத்தையும் சுமக்கும்போது சும்மா தள்ளி நின்று கண்ணே மணியே என்பவன் உண்மையாகவே மனைவியை நேசிக்கவில்லை என்று எனக்கு உரைத்தது. மனைவியின் ஒரு வேலையையும் பங்கிட்டுக் கொள்ளாதவன் எத்தனை தித்திக்க பேசினாலும் அது காதலாகாது என்று புரிந்ததும் அவன் ஒரு பொய்யன் என்று உணர்ந்தேன்.

அன்று நான் சமைத்த சாப்பாட்டில் ஒன்றில் உப்பு அதிகம், இன்னொன்றில் காரம் அதிகம். அவன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு “இன்னைக்கு சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சி. ஆனா அதை சிங்க்ல கொட்டியிருந்தா இன்னும் ரொம்ப நல்லா இருந்திருக்கும்” என்றார்.

“குத்தம் மட்டும் சொல்லுங்க. ஒரு நாள் எனக்கு அடுப்படியில உதவி செஞ்சிருப்பிங்களா? கொஞ்சி பேசிட்டா ஆச்சா? மனுசனுக்கு பாசமிருந்தா ஒரு ஒத்தாசை செய்ய மனசிருக்கும்?”

“ஒத்தாசையா? எதுமாதிரி? எனக்கு சமைக்கத் தெரியாதே கண்ணு… உனக்காக நான் கழுத்து அறுத்துக்கவா? உயிர குடுக்கவா? கையை வெட்டிக்கவா சொல்லு செய்யறேன். சமைக்க சொல்லாதே கண்ணு, அது எனக்குத் தெரியாது” என்றார்.

“நான் மட்டும் என்ன பொறக்கும்போதே கரண்டியோடவா பொறந்தேன். நானே காய் வாங்கி, நானே நறுக்கி, நானே மளிகை வாங்கி, நானே சமைச்சி… நான் ஒரு கிரைண்டர், ஸ்டவ், மிக்சியாத்தான் இருக்கேன் இந்த வீட்டுல.”

அதன்பிறகு பழைய விரக்தியும், சோர்வும், துக்கமுமாக கிஷான் உலாத்திக்கொண்டிருந்தார். உயிரைத் தருவேன் கையை அறுத்துக்கொள்வேன் என்று ஒரு பேச்சுக்கு சொல்கிறார் என்று நான் நினைத்தால் ஒரு நாள் நிஜமாகவே கையை அறுத்துக்கொண்டு சமையற்கட்டில் நின்றிருந்தார். நான் அதிர்ந்து போனேன். காதலை வாயால் சொல்ல முடியாமல் கையால் செய்து விட்டாரா? விரலில் நிறைய ரத்தம், அதைவிட அதிகமாய் பொங்கல், பூரி, வடை, கேசரி என்று வித விதமான சமையல். ஒருநாள் சமைக்கச் சொன்னதற்கு பூதம் போல இத்தனையா சமைப்பார், நான் தூங்கி எழுவதற்குள்! கைக்கு மருந்து போடும்போது நான் நெகிழ்ந்து சொன்னேன் “சும்மா ஒரு ஒத்தாசை செய்யத்தானே சொன்னேன். ரெண்டு பேருக்கு இத்தனை சமைக்கணுமா. கையில வேற காயம்.”

“இன்னும் நான் காதலிக்கிறேன்னு நீ நம்பனும் அருணா. உனக்குத்தான் காதல் இல்ல. இவ்வளவு சமைச்சது தெரியுதே ஏன் சமைச்சேன்னு தெரியுமா?”

“தெரியாதே…”

“ஏன்னா, இன்னைக்குத்தான் கிஷான்னு ஒரு காதல் கிறுக்கணும் அருணான்னு ஒரு காதல் கிறுக்கியும் கல்யாணம் கட்டிகிட்ட நாள். உனக்கு மறக்கும் அது. ஆனா கிஷான் மறக்க மாட்டான்.”

நான் நிஜமாகவே வெட்கப்பட்டேன். சண்டை மும்முரத்தில் மறந்து போனேன்.

“சாரிப்பா… ஐயாம் வெரி சாரி…” என்றேன்.

“நானும்தான் சாரி… அருணா. இவ்வளவும் நான் சமைக்கல. ஹோட்டல்ல வாங்கிட்டு வந்து உனக்குத் தெரியாம பாத்திரத்தில போட்டு வெச்சேன். பார்சல் பிரிக்கிறப்ப கத்தி பட்டு வெட்டிக்கிச்சி. நான்தான் சொன்னேனே எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு. சத்தியமா சொல்லறேன் அருணா, ஹோட்டல்ல சாப்பாடு வாங்கித் தந்தாலும் புருசன் புருசன்தான், நம்பு. வேணுன்னா இனிமே நான் சமைக்கக் கத்துக்கிறேன். எனக்கு சொல்லித்தர மாசம் எவ்வளவு கேப்பே..” என்று குறும்புத்தனமாய் பொடி வைத்துப் பேசி, வாய் குவித்து கொஞ்சுகிறார்.

அழவா, சிரிக்கவா என்று புரியாத குழப்பத்தோடு அவன் கல்யாண நாளுக்கென்று எடுத்துத் தந்த புது உடை போட்டுக் கொண்டு திகைத்து நின்ற அந்த சமையற்கட்டை நான் எப்படி மறப்பேன்.

அந்த நினைப்போடும் கணவன் மீது சுரந்த அருவி அருவியான காதலோடும் நான் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பெற்றேன்.

அதன் பிறகு அன்பை பரிசோதிக்காத ஆதர்ஷ தம்பதிகளாக வாழத்தான் விரும்பினேன். ஆனால் விதி என் மாமியார் வேஷத்தோடு வீட்டுக்குள் வந்தது. என் மாமியார் என் குழந்தையை குளிப்பாட்டி விடவும், சாம்பிராணி புகை போடவும்தான் வந்திருக்கிறார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் என் கணவருக்கும் புகை போடுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. மாமியார் வந்து போன மறுநாளே கிஷான் என்னிடம் கேட்டார், “சனி நீராடுன்னு யார் சொன்னது தெரியுமா, அருணா?”

நான் குழப்பமாக, “என்ன இன்னைக்கு தமிழ் அருவி ஒழுகுது. அவ்வையாருன்னு நினைக்கிறேன்.”

“இல்ல அருணா. சொன்னது என் அம்மா. கல்யாணம் ஆனவன் கட்டை பிரம்மச்சாரி மாதிரி காக்கை குளியல் குளிச்சா அவனோட மனைவிக்கு புருசன்மேல அக்கறை இல்லேன்னு அர்த்தமாம். எங்க ஊரு வழக்கம் இது. சனிக்கிழமை நல்லா எண்ணை தேச்சிவிட்டு, வெயில்ல நின்னு உடம்பு காய்ஞ்ச பிறகு மனைவி முதுகு தேய்ச்சி விட குளிக்கணுமாம் ஒரு புருசன்.”

அடக் கருமமே. கண்கெட்ட காலத்தில் இரண்டு பிள்ளை பெற்ற கிஷானுக்கு ஏன் இப்படி புத்தி போகிறது. “என்ன சார்… நான் என்ன பட்டிக்காட்டு பொண்ணா? புருசன் முதுகு தேச்சி விட?”

சார் என்றதும் கிஷானுக்கு கோபம் பொத்துக்கொண்டது. “நான் என்ன ஊதுவத்தி ரெப்ரசன்டேட்டிவா? சார், மோர்னு சொல்லறே. அவனவனுக்கு ஆண்டவன் கை கொடுத்திருக்கான். அவன் அவன் முதுகை அவனே தேச்சிப்பான். அவன் அவன் தலைக்கு அவனே எண்ணையும் வெச்சிப்பான். போ, போ… குடும்பத்தில புருசன் மட்டும் ரொமான்ஸ் காட்டினா போதாது. பொண்டாட்டிக்கும் அது வேணும்” என்று சொல்லிவிட்டு மொட்டை மாடிக்கு அரை லிட்டர் நல்லெண்ணையோடு போன என் கோபக்கார கிஷான் உடம்பெல்லாம் நெகுநெகுக்க எண்ணை பூசிக்கொண்டு, உச்சி வெயிலில் விவரம் புரியாமல் வழுக்கிவிழுந்த கதை சிரிக்கும்படியானது கிடையாது.

விழுந்து காலில் அடிபட்டுக்கொண்டு ஒரு மாதம் படுக்கையில் பாத்ரும் போகவும் முடியாமல் அவஸ்தைப்பட்டு வலியில் துடித்த போது நான் அழுத அழுகை செய்த வேலை அவருக்கு ஆயிரம் ஆயிரம் காதல் நிஜங்களை சொல்லியிருக்கும். அதன் பிறகு கிஷான் மேல் இருக்கும் என் காதலை நிருபிக்க ஒரு லிட்டர் நல்லெண்ணையோடு நான் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் அவர்தான் ‘ஆளை விடு சாமி!’ என்று ஓட்டமெடுக்கிறார்.

இருபத்தி நாலு மணிநேரமும் வீசிக்கொண்டிருக்க காதல் ஒன்றும் காற்று கிடையாது, மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்க காதல் ஒன்றும் அருவி கிடையாது. அது நெருப்பு. உரசும்போதுதான் காதலின் ஒளி தெரியும் என்பதை நாங்கள் அன்புக்காக ஒருவரை ஒருவர் உரசிப் பார்த்தபொழுதெல்லாம் கண்டு கொண்டோம். ஆனாலும் அன்பை சீண்டிப் பார்ப்பதற்கு எப்பொழுதும் எங்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது.

வைர மோதிரம் கண்டெடுத்ததைப் போல ஒரு நாள் தன் மீசையின் முதல் நரைமுடியை காட்டி கிஷான், “ச்சோ, நரைச்சிப் போச்சே… அருணா!” என்று பரிதாபமாய் சொன்னபோது, “வயசானா நரைக்கும், கிழவா…” என்று நான் சொல்ல, “அப்படியா கிழவி?” என்று அவர் பொய் ஆச்சர்யத்தோடு கேட்க, அந்த கணத்தில் எங்களுக்கு புரிந்து போனது, எங்களுக்கு வயது கூடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் காதலும் கூடிக் கொண்டிருக்கிறது என்று.

Print Friendly, PDF & Email

2 thoughts on “கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்

  1. அடடா கதை பெயருக்கு ஏற்றார் போல கதையும் கிறுக்குத்தனமான நிறைந்த காதலாக இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *