வரம் வேண்டுமே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 8,581 
 

என்னப்பா ஆறுமுகம்! இந்த வாரமும் ஒம் பையன் சந்துரு, ஊருக்கு வரலையாக்கும்?” என்றவாறு எதிர் சோபாவில் வந்தமர்ந்தார் கந்தசாமி.

“இல்லப்பா” ஆறுமுகத்தின் குரல் உற்சாகமின்றி இருந்தது.

“அது சரி! ஒம் பொண்ணு சீதா வந்திருக்காளா?” என்று ஆறுமுகம் பதில் கேள்வி எழுப்பினார்.

“இல்லை” என்பதை உதட்டை பிதுக்கி சைகையால் கூறினார் கந்தசாமி.

“வீணா எதுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கற? ரெண்டு பேருமே லீவு விட்டாச்சன்னா ஊரப்பாக்க ஓடி வரவங்கவதானே! போன ரெண்டு, மூணு வாரமா வராம இருக்காங்கன்னா, கண்டிப்பா ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும்” என்று நம்பிக்கையோடு கூறும் தன் நண்பனை சிறு குழந்தையைப் போல் பார்த்தார் ஆறுமுகம்.

பேச்சு திசை மாற கந்தசாமி, “ஏப்பா ஆறுமுகம்! உன்னோட வயல்காட்டை ரியல் எஸ்டேட்டுக் காரருக்கு விற்கப் போறதா சொன்னயே! அது உறுதியான முடிவுதானா?” என்று கேள்வி எழுப்ப,

“ஆமாப்பா! அதுலே எந்த மாற்றமும் இல்லே! இந்த சேத்துலே உழலும் பொழப்பு என்னோட முடியனும் தானே பையனைக் கம்புயூட்டர் என்ஜீனயர் ஆக்கிட்டேன்.”

ஆறுமுகத்தின் குரலில் பெருமிதம் தெரிந்தது.

மேற்படி நாட்டுநடப்புகள் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த விட்டுத் தன் பக்கத்து தோட்டத்தை நோக்கி நடந்தார் கந்தசாமி.

இரண்டு பேரும் அடுத்தடுத்த தோட்டத்தில் பால்ய காலம் தொட்டு வசித்து வரும் நண்பர்கள்..அவர்களைப் போலவே சந்துருவும், சீதாவும் நட்புறவுடனும் , கிராமத்திற்கே இயல்பான நல்லொழுக்கத்தோடும் வளர்க்கப் பட்டிருந்தனர். படிப்பு முடிந்த கையோடு ஒரே ஐ.டி.கம்பெனியில் வேலையிலும் சேர்ந்தனர். என்னதான் நுனிநாக்கு ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டு, ‘ஒயிட் காலர் ஜாப்’ பார்த்து, கை நிறைய சம்பளம் வாங்கினாலும், அவர்கள் மனம் என்னவோ தாங்கள் சிறு வயது முதல் பாதம் பதித்து விளையாடி மகிழ்ந்த மண்ணின் சுகத்திற்கு ஏங்கியது. எனவே வாரக் கடைசியில் ஊருக்கு தவறாது வந்து விடுவார்கள். ஆனால் சமீப காலமாக அவர்கள் ஊருக்குப் போகாமல், சென்னையிலேயே ஏதோ ஓர் இடத்திற்குப் போய் வந்தனர்.

சென்னையில் அவரவர் அறையில் தங்கியருந்த ரூம் மேட்ஸ் -க்கும் அவர்கள் போக்கு பரியாதவொன்றாக இருந்தது. அவர்களது கேள்விகளுக்குப் புன்சிரிப்பையே பதிலாக்கினர்..

ஐ.டி.கம்பெனியிலும்- வேலைப் பளுவால் டல்லடித்தக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புதுப் பொலிவோடு வலம் வந்த இவர்கள் இருவரையும் அனைவரும் வியப்புடன் நோக்கினர்.

விஷயம் இது தான். சென்னையில் ஓரிடத்தில் விவசாயம் குறித்து பயிற்சி வகுப்புகள் – அதிலும் குறிப்பாக ஐ.டி. துறையினருக்காகவே வார இறுதியில் நடத்தப் படுவதைக் கேள்விப் பட்டு மகிழ்சியடைந்த இருவரும் தவறாமல் அங்கு போக ஆரம்பித்தனர். இது ஒன்றும் போற்றதக்க ரகசியம் இல்லைதான். ஆனால் இவர்களது இந்த முயற்சி, மற்றவர்களது இகழ்ச்சியால் முளையிலேயே கிள்ளி எறியப் படக் கூடும் என்பதுதான் அவர்களது பிரச்சனையாக இருந்தது.

நவீன விவசாயம், இயற்கை உரம் உபயோகித்தல் மூலம் மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாத்தல், மற்றும் இருப்பில் உள்ள நீரைக் கொண்டு என்னவிதமான பயிரை விளைவிக்கலாம் என்பன போன்ற விவரங்கள் பயிற்சி வகுப்பில் கற்றுக் கொடுக்கப் பட்டது. ‘மத்திய அரசு இணையதள மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கப் போகிறது’ என்ற தகவல் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

ஒரு இனிய நாளில் இருவரும் தங்களின் ராஜினாமாக் கடிதத்தைத் தங்களது நிர்வாக மேலாளரிடம் நீட்டினர்.

கேள்விக் குறியோடு அவர்களை நோக்கினார் நிர்வாக மேலாளர்.

“தப்பாக நினைக்க வேண்டாம் சார்! எங்க வயதை ஒத்த எல்லார் மாதிரியும் நாங்களும் நவீனமானத் தொழில் செய்ய ஆசைப்பட்டுத்தான் இந்தத் துறையிலே ஜாயின் பண்ணிணோம். பாரம்பரியமாக விவசாயம் பார்த்து வந்த எங்களது பெற்றோர், அவர்களது தொழிலுக்கான அங்கீகாரம் கிடைக்காததால் மனம் உளைச்சலில் உள்ளனர். ஆனால் எங்களைப் போன்ற இளைஞர்கள் முயன்றால், நலிந்து வரும் – நம் நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவாயத்தையும், விவாசாய நிலங்களையும் காப்பாற்ற முடியும்- என்ற உண்மை உணர்ந்தே இந்த முடிவை எடுத்து உள்ளோம்” என்ற தொரு நீண்ட விளக்கம் அளித்தான் சந்துரு.

சூழ்ந்து கொண்ட சக ஊழியரின் கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.

அலுவலகத்தில் பிரியா விடை பெற்றுக் கொண்ட சந்துருவும், சீதாவும் பல மாதங்களுக்குப் பிறகு பிறந்த மண்ணில் கால் பதித்தனர்.

தன் மகனும்,மகளும் ஊருக்குள் ‘பஸ் ஸ்டாப்’பில் வந்து இறங்கிய உடனேயே தகவல் அறிந்து அவர்களை வரவேற்க ஓடோடி வந்தனர் ஆறுமுகமும்,கந்தசாமியும்.

பெட்டி,படுக்கையுடன் வந்திறங்கிய மகனிடம்,”கண்ணா! என்ன ‘லாங் லீவ்’ எடுத்திட்டு வந்திட்டியா? என்ன?” என்று ஆறுமுகம். கேட்டார்.

“இல்லப்பா! நாங்க இரண்டு பேருமே வேலையை விட்டுட்டு இங்கேயே விவசாயம் பார்க்கும் முடிவோடுதான் வந்திருக்கோம்” என்று மகனிடமிருந்து வந்த திடமான பதிலில் நிலை குலைந்து போனார் ஆறுமுகம்.

அருகில் இருந்த கந்தசாமி தன் நண்பனின் கையை பற்றி அழுத்தினார். நண்பன் கொடுத்த அந்த அழுத்தம் ஓராயிரம் விஷயங்களைப் புரிய வைத்தது.

கந்தசாமியைப் பொறுத்தவரை அவருக்கு உள்ள ஒரே ஆதங்கம் ‘நம் பாரம்பரிய பூமியைப் பாதுகாக்க முடியமா? அதுவும் நமக்குள்ளதும் ஒரே பெண்ணாய் போனாளே!’ என்பதுதான். ஆனால் தம் பெண்ணின் திறமை மீது எப்போதும் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். பல சமயங்களில் தன் நண்பனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

தன் தந்தையின் மனநிலையைப் புரிந்து கொண்ட சந்தரு அவரை சமாதனப் படுத்தும் வகையில் “அப்பா! நம் நிலத்தை விற்க நீங்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பது எனக்கு வேதனை தரும் விஷயமாக இருந்தது.பச்சை பசேல் என்று இருக்கும் நம் வயலைக் ‘கான்கீரிட் காடா’கப் பார்க்க எனக்குப் பிடிகக வில்லை. எல்லாத்துக்கும் மேலாக என் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் என்பது எனக்குத் தெரியும்” என்றான் கண்கள் பனிக்க.

“எது எப்படியோ நம் பிள்ளைகளின் புதுமையான முடிவு இனி வரவிருக்கும் இளைஞர்கள் முயற்சிக்கு அடிக்கல் நாட்டுவதாக இருக்கட்டும். நம் வாழ்வுடன், நம் கிராம மக்கள் வாழ்வும் செழிக்கப் போவது உறுதி.” என்ற கந்தசாமியை சந்துருவும், சீதாவும் நன்றி ததும்பும் கண்களால் நோக்கினர்.

சிறியவர்களின் துணிவான முடிவுக்கு, புரிதலுடன் துணை நிற்கும் பெரியவர்கள் இருப்பது வரம் தானே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *