கானல்நீர்க் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 10,012 
 

என் பெயர் கதிரேசன். வயது 23. எல்.ஐ.ஸி யின் திருநெல்வேலி ஜங்க்ஷன் பிராஞ்சில் புதிதாகச் சேர்ந்துள்ளேன். சொந்தஊர் மதுரை.

பாளையங்கோட்டையில் ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தினமும் ஆபீஸ் போய்வருகிறேன்.

தண்ணீர் கஷ்டத்தினால் என்னுடைய துணிகள் அனைத்தையும் லாண்டரியில் போட்டுத்தான் வாங்குவேன். நான் தங்கியிருக்கும் பெருமாள்கோவில் தெருவிலேயே ‘அரசன் லாண்டரி’ என்கிற பெயரில் ஒருகடை இருக்கிறது. அங்குதான் என் துணிகளைப் போட்டு வாங்குவேன்.

லாண்ட்ரி கடையின் ஓனர் எப்போதாவதுதான் கடையில் இருப்பார். கொடுவாள் மீசையில் வேதம்புதிது சத்யராஜ் மாதிரி ஆஜானுபாகுவாக காணப்படுவார். கடையை அவர் கொடுக்கும் சம்பளத்திற்கு ஒரு இளம்பெண்தான் எப்போதும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவள் ரொம்ப அழகு. புளி போட்டு வெளக்கின வெங்கலப் பானைமாதிரி எப்போதும் ஒரு தகதகப்பு. நீளமான அழகிய மருளும் கண்கள். சில சமயங்களில் ரப்பர் வளையல்களும், சில நேரங்களில் கண்ணாடி வளையல்களும் அணிந்திருப்பாள். சுறு சுறுப்புடன் காணப்படுவாள்.

நான் கொண்டுபோய்க் கொடுக்கின்ற என்னுடைய அழுக்குத் துணிகளை முதலில் வகை வாரியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, சட்டை, பேன்ட் பாக்கெட்களில் ஏதாவது இருக்கிறதா என்று சோதனையிடுவாள். பின், பில் புத்தகத்தை எடுத்து துணிகளின் எண்ணிக்கையை விவரமாக எழுதிக்கொண்டு பின் அவற்றுக்கான பணத்தை கணக்கிட்டு எழுதி அதன் கீழே டோட்டல் பணம் எவ்வளவு என்பதைப் போட்டு, டெலிவரி செய்யப்படும் தேதியையும் குறிப்பிடுவாள். பிறகு குனிந்திருந்த தலையை நிமிர்த்தமலேயே, “பேர் சொல்லுங்க சார்” என்பாள்.

கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களாகவே நான் அந்த அரசன் லாண்டரியின் ரெகுலர் கஸ்டமர். ஆனாலும் ஒவ்வொருமுறை பில் போடும்போதும் அவள் “பேர் சொல்லுங்க சார்” என்று என் பெயரைக்கேட்டு, பதிலுக்கு நான் என் பெயரைச் சொன்ன பிறகுதான் பில்லில் என் பெயரை எழுதிக் கொடுப்பாள். அவளின் இந்தச் செய்கை எனக்கு மிகுந்த இம்சையாக இருந்தது.

நான்கைந்து மாதங்கள் ஆகியும் கூடவா என் பெயர் அவள் மனதில் பதியவில்லை? கதிரேசன் என்கிற என்னுடைய பெயர் என்ன அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா? என்னால் இதை நம்ப முடியவில்லை.

நான் அந்த லாண்ட்ரியின் ரெகுலர் கஸ்டமர் என்கிற சின்ன அன்னியோன்னியம்கூட அவளுடைய எந்த ஒரு நடைமுறையிலும் தென்படவில்லையே !? ஆனால் எல்லோரிடமுமே அவள் அப்படி நடந்து கொள்வதாகத்தான் தெரிந்தது. தேவைக்குமேல் யாரிடமுமே எந்தப் பேச்சும் அவள் வைத்துக்கொள்வதில்லை.

ரொம்பவும் வறுமையில், அதே சமயம் சற்று அறிவோடும் கொஞ்சம் நாகரீகமாகவும் இருக்கின்ற இளம் பெண்கள், இவளைப்போல எதிலும் சிறிதும் பிடிப்பு இல்லாதது போலத்தான் இருப்பார்கள் என்று நானாக நினைத்துக்கொண்டு சமாதானமடைவேன். .

எனக்கு அவளின் பெயர்கூடத் தெரியாது. ஆனாலும் ஏதோவொரு மிருதுவான சதுக்கம் எனக்குள் அவளுக்காக இருந்தது. நாளடைவில் அவள்மேல் எனக்கு ஒரு அதீத ஈர்ப்பும் காதலும் ஏற்பட்டது நிஜம்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம்….

வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அவள் அழுக்கு மூட்டைகளின் மேல் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு ராஜேஷ்குமார் நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். நான் வந்ததைப் பார்த்ததும் துள்ளி எழுந்தாள்.

நான் என் இரண்டு பேன்ட், இரண்டு சட்டைகளை சலவைக்காக கொடுத்தேன். எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டு “பேர் சொல்லுங்க சார்” என்றாள்.

நான் பேசாமல் நின்றேன். அவளும் தலைகுனிந்தவாறு காத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் “பில்லுல உங்க பேரை எழுத வேண்டாமா…? பேர் சொல்லுங்க” என்றாள்.

“உங்களுக்கு என் பேர் தெரியாதா?”

“……………………..”

“மனசைத் தொட்டுச் சொல்லுங்க…நெஜமாகவே உங்களுக்கு என் பேர் தெரியாதா? கிட்டத்தட்ட ஐந்து மாதமா இந்த லாண்டரியில் துணி போடறேன். அது எப்படி என் பேர் உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் போய்விடும்?”

“……………………….”

“சரி போகட்டும், உங்க பேரென்ன? அதையாவது எனக்கு சொல்லுங்க..” குரலில் குழைவுடன் கேட்டேன். பதிலில்லை.

பின் சற்று அன்புடன், “ஒண்ணு உங்க பேரைச் சொல்லுங்க, இல்லே நான் சொல்லாமலே என்பேரை பில்லுல எழுதுங்க” என்றேன்.

உடனே அவள் வேகமாக பில்லில் எழுதி அதைக் கிழித்து என் கையில் கொடுத்துவிட்டாள்.

இதை எழுத இவ்வளவு அலட்டலா என்கிற நினைப்பில் பில்லைப் பார்த்தவன் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன்.

அதில், ‘சரண்யா’ என்று எழுதியிருந்தாள்.

நான் அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் சந்தோஷம்.

“சரண்யாவா உங்கபேர்?”

“ஆமாம்….” என்றாள் ஒரு சிறு புன்னகையுடன்.

“உங்க மொபைல் நம்பர் குடுங்க”

“எனக்கு மொபைல் கிடையாதுங்க….எங்க முதலாளிக்கு இருக்கு, அதுலதான் போன் பண்ணி என்னைக் கூப்பிடுவாங்க. அவரு நம்பர் தரட்டா?”

‘ரொம்ப முக்கியம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, பில்லை பத்திரமாக மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சந்தோஷத்துடன் ரூமுக்கு வந்தேன்.

ரூமுக்கு வந்து சரண்யா என்று அவள் எழுதியதை சிலமுறை படித்துப் பார்த்துவிட்டு, ‘சரண்யா கதிரேசன்’ என்று பலமுறை சொல்லிப் பார்த்தேன். மனசும் உடம்பும் சிலிர்த்தது.

அப்போது அம்மா மொபைலில் போன் பண்ணி திருநெல்வேலி டவுனில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு வந்திருப்பதாகச் சொன்னாள்.

மாலையே அம்மாவைப் பார்க்க பெரியம்மா வீட்டிற்குச் சென்றேன்.

‘மதுரையிலிருந்து வந்திருக்கும் அம்மாவை ஒருமுறை சரண்யாவைப் பார்த்துவிட ஏற்பாடு செய்தாலென்ன’ என்று நினைத்து “அம்மா, நீ என்னுடைய ரூமுக்கு வந்துட்டுப் போ” என்றேன்.

“மதுரைக்கு போறதுக்குள்ள கண்டிப்பா வரேண்டா கதிர்…” என்றாள்.

அன்று இரவே ரூமில் அமர்ந்து சரண்யாவுக்கு ஒரு நீண்ட காதல் கடிதம் எழுதி, அதை மறுநாள் ஆபீஸ் போகும்போது அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றேன். நேரில் கடிதம் கொடுத்ததால், ஒரு சேப்டிக்காக அதில் என் கையெழுத்தைப் போடவில்லை.

நான்கு நாட்கள் சென்றன….

சனிக்கிழமை மாலை லாண்டரி கடைக்குப் போனேன். அங்கு சரண்யா இல்லை. கொடுவாள் மீசைதான் இருந்தார்.

முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, “கடையில் ஒரு லேடி இருந்தாங்களே, அவங்க இல்லையா?” என்று கேட்டேன்.

“இல்லை சார்… அந்தக் களுதையை சீட்டைக் கிளிச்சி அனுப்பியாச்சு.”

“……………………………?”

“வேலை வெட்டியில்லாத நாலைந்து பசங்க இந்தக் கடையை சுத்தி சுத்தி வருவானுங்க… அதுல ஒரு காவலிப்பய இந்தப் புள்ளைக்கு லவ்லெட்டர் எழுதியிருக்கான். அத இவ ஒரு புத்தகத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருந்தா. அந்தக் கண்றாவியை நான் எடுத்துப் படிச்சேன் சார். அவன் மட்டும் யாருன்னு தெரிஞ்சா மவனே அவன் குஞ்சப் பிதுக்கி நெஞ்ச வகுந்திருவேன் வகுந்து…” கொடுவாள் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டார்.

எனக்கு பேசமுடியாமல் நாக்கு ஒட்டிக்கொண்டது.

“போன சண்டே இவ அவனுக்கு பில்லுல தன்னோட பெயரை எழுதிக் கொடுத்திருக்கா சார். அவன் கண்டிப்பா துணிகளை கலெக்ட் பண்ண கடைக்கு வருவான்….அப்ப காட்டறேன் நான் யாருன்னு.” பில்லின் கார்பன் காப்பியை என்னிடம் நீட்டிக் காண்பித்தார்.

ஒரிஜினல் பில் என் சட்டைப்பையை உறுத்தியது.

அவர்போட்ட சத்தத்தில் நான்கைந்துபேர் கூடிவிட்டனர்.

நான் அங்கிருந்து நைஸாக நழுவி என் ரூமுக்கு சோர்வுடன் வந்தேன்.

என்னுடைய காதல் கானல்நீராகிப் போனதை நினைத்து எனக்குள் துக்கம் பொங்கியது.

துக்கத்தைப் போக்க அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று டவுன்பஸ் பிடித்து பெரியம்மா வீட்டுக்குப் போனேன்.

அம்மா அன்புடன், “ஏல கதிரு நாளைக்கு உன்னோட ரூமுக்கு வரேம்ல” என்றாள்.

நான் அவசரமாக “வேண்டாம்மா…நானே வேற ரூம் தேடிக்கிட்டு இருக்கேன்… நீ புது ரூமுக்கு வா” என்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *