“டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக்.
“என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன்.
“மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச் சொல்றேன்டா!” கார்த்திக்.
“நல்லாத் தமிழ்ப்படுத்துறீங்கடா! தமிழைப் ‘படுத்துறீங்க’!”
“நீ எங்கடா இருக்கே?”
“நானும் அதே நடுரோட்லதான் இருக்கேன். ஆனா நான் இருக்கறது பூகிஸ் நூலகத்துக்கிட்ட இருக்கிற நடுரோடு!” மாதவன்.
“நான் இருக்கிறது ‘ரோச்சோர்’கிட்ட உள்ள நடுரோட்டில்! முன்னாலேயே சொல்லித் தொலைச்சிருக்கக் கூடாது? இரு பைக்ல பறந்து வந்திடறேன்!”
“நீ பறந்து வரியோ மிதந்து வரியோ எனக்குத் தெரியாது! இன்னும் பத்து நிமிஷத்தில இங்கே இருக்கே! என் பட்டாம்பூச்சி ஏற்கனவே நூலகத்துக்குள்ள போய்ட்டா!”
“சரி, நீ போய் உன் பட்டாம்பூச்சி பின்னால சுத்திட்டு இரு. நான் வந்த பிறகு நீ சொல்லவேண்டியதைச் சொல்லு!” கார்த்திக்.
மாதவனின் அருகில் சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்த அனைவரின் முகத்திலும், பனிக்கூழ் உருகி ஓடுவதைப்போல வியர்வை வழிந்தோடிக்கொண்டிருந்தது. சிக்னல் ‘பச்சையப்பனை’க் காட்டியதும் மாதவன் துரிதமாக நூலகத்தை நோக்கி நடந்தான். சூரியனே தோற்றுப்போகும் அளவுக்கு அவன் முகத்தில் அவ்வளவு ஒளிப்பிரகாசம்!
இருக்காதா பின்னே! மாதவன் இன்னைக்கு எப்படியாவது கீர்த்தியிடம் அவன் காதலைச் சொல்லணுங்கற முடிவோடுல்ல வந்திருக்கான். சொல்லும்போது ஏடாகூடமா ஏதாவது நடந்துட்டா? அதுக்காகத்தான் கார்த்திக்கைத் துணைக்கு வரச்சொல்லியிருக்கான். நண்பேண்டா!
மாதவனும் கீர்த்தியும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கிறார்கள்.
கீர்த்தி இருபது வயதுக்குரிய அழகோடு, நளினத்தோடு, கொஞ்சம் நாணத்தோடு வளையவரும் பெண். நல்ல படிப்பாளி. ரொம்ப அமைதியானவள். அவளுக்கும் மாதவனின் மேல் விருப்பம் இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படவே, காயா பழமா என்று உறுதிப்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டான் மாதவன்.
நூலகத்தினுள் மாதவனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த கார்த்திக்கிற்கு, அவன் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ‘பக்’ என்று இருந்தது. ‘கீர்த்தின்னா….கிருத்திகாவா…?! என் தங்கச்சிகிட்ட உன் காதலைச் சொல்ல என்னையே துணைக்கு வரச்சொன்னியா?’ அட…ப்பாவி! வந்த ஆத்திரத்தில் வைய்யவேண்டும் போலிருந்தாலும் அது நூலகம் என்பதால் அவனை வெளியே வரச்சொல்வதற்காக அவனின் கைப்பேசிக்குத் தொடர்புகொண்டான் கார்த்திக்.
“கார்த்திக், அவ ஏற்கனவே புத்தகங்கள்லாம் எடுத்துட்டா; இப்போ விட்டா அவளைத் தனியாப் பிடிக்கமுடியாது. நானே போய்ப்பேசிட்டு வரேன்!”
இருதலைக்கொள்ளி எறும்பாய்க் கார்த்திக்!
“கீர்த்தி நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணுமே!”
அவனை உற்றுப் பார்த்தவள், வெளியே வருமாறு சைகை காட்டினாள். ‘ஹட்ச்’ விளம்பர நாய்க்குட்டி போல மாதவன் பின்தொடர்ந்தான்.
“என்ன? என்னைக் காதலிக்கிறியா?” எனச் சட்டென்று விஷயத்திற்கு வந்தாள் கீர்த்தி.
“நான் ரொம்ப சுத்திவளைக்க வேண்டியிருக்குமோன்னு நெனச்சேன். சீக்கிரமே புரிஞ்சிக்கிட்டே. ம்ம்ம்……..நீ…?”
“மாதவ், நமக்கு இன்னும் ரெண்டு வருஷத்தில படிப்பு முடிஞ்சிடும். நல்ல மதிப்பெண்களோட நாம வெளிய வரணும்னா முழுக்கவனத்தோட படிக்கணும். காதல், கவனத்தைச் சிதறடிச்சிடும். உன் காதல் உண்மைன்னா நல்ல மதிப்பெண்களோட வெளியே வா. நான் பதில் சொல்றேன்!”
அர்த்தத்துடன் தலையசைத்தான் மாதவ்!
அவசரத்தில் அழைப்பைத் துண்டிக்க மறந்த மாதவனின் கைப்பேசி அவர்களின் உரையாடலைக் கார்த்திக்கிற்கு ஒலிபரப்பிக்கொண்டிருந்தது.
பெருமையில் தலைநிமிர்ந்தான் கார்த்திக்!
‘என் தங்கச்சிடா!’