காதல் சொல்லப் போறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 8,268 
 
 

அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில் தனியார் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான்.

அஸ்வின் கல்லூரியின் முதலாமாண்டு காலடி எடுத்து வைத்த அன்றே, காதல் தேவதை பிரியாவை கண்டு கொண்டான், அவளைப் பார்த்த அந்த நொடியில் இருந்தே அவள்தான் தனக்கு, அவளைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று முடிவு செய்துக் கொண்டான்.

கல்லூரிக்கு தினமும் சென்றது அவளை பார்க்காமல் தன் வகுப்பிற்குச் செல்லமாட்டான், அவளை ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் அவனுக்கு சாப்பாடு தூக்கம் எதுவுமில்லை, அவளை மீண்டும் பார்த்த பிறகுதான் தன் நிலைக்கே வருவான்.

இப்படி இருப்பவன் இதுவரை தன் காதலை பிரியாவிடம் சொல்லவே இல்லை, அவளிடம் சென்று ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது, அவளைப் பார்ப்பதோடு சரி, தன்னை ஒருவன் பார்க்கிறான் என்றே அவளுக்கும் தெரியாது, இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டுமென்று செல்வான், தைரியமில்லாமல் திரும்பி வந்துவிடுவான்.

ஒரு முறை இப்படித்தான் பேசியே தீருவேன் என்று தன் மனதில் சபதம் எடுத்துக் கொண்டு, மனதை திடமாக்கிக் கொண்டு அவள் அருகில் சென்றான். “பிரியா” என்று அழைக்க சத்தம் வரவில்லை, என்ன என்று அவனையே ஒரு முறைப் பார்த்தான், முதலில் அவன் கை ஆட தொடங்கியது அப்படியே ஒவ்வொரு உறுப்பாக ஆடிக் கொண்டிருக்க, எங்கிருந்து சத்தம் வரும் என்று திரும்பி வந்து விட்டான், ஒவ்வொரு முறையும் முயற்சி எடுத்து எடுத்து இரண்டு வருடங்களை கடத்திவிட்டான்.

மூன்றாம் வருடம் கடைசி செமஸ்டர் தொடங்க இன்னும் பதினைந்து நாட்களே இருந்தது. செமஸ்டர் தொடங்கிவிட்டால் அவளைப் பார்க்க முடியாது, அதனால் நாளை எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்து, இரவு உறங்கச் சென்றான்.

காலை மணி ஐந்து என்று கடிகாரத்தில் மணியடிக்க, அஸ்வின் கடிகாரத்தை ஊமையாக்கிவிட்டு வேகமாக எழுந்து, கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டு, பல்துலக்கி முடித்து குளியலறைக்குள் சென்றான்.

குளித்து முடித்து வெளியே வந்ததும் சிவப்பு வண்ணதில் கோடு போட்ட வேட்டியை எடுத்து கட்டிக் கொண்டு, அதற்கேற்றாற் போல் சிவப்பு சட்டையும் அணிந்து கொண்டு, வீட்டை விடு வெளியேறி தெருக் கோடியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றான்.

பிள்ளையாரப்பா இன்று எப்படியாவது பிரியாவிடம் என் காதலை சொல்லிவிட வேண்டும், அதற்கு நீர்தானப்பா என் கூட இருந்து எனக்கு தைரியம் கொடுக்கனும், என்று மனதார வேண்டிக் கொண்டான், சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டிற்குள் சென்றது வேட்டியை மாற்றி, கறுப்பு நிறத்தில் நீளக் கால் சட்டையை மாட்டிக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். தன் மனதில் சாப்பிவிட்டுச் செல்லலாம், அப்போதுதான் உடம்பு தெம்பாக இருக்குமென்று நினைத்துக் கொண்டு, “அம்மா டிபன் ரெடியா எடுத்து வையுங்கள்” என்றான்.

தன் அம்மா தட்டில் வைத்த இட்லியை நிதானமாக சாப்பிட்டு முடித்ததும், பூஜை அறைக்குச் சென்றான், பூஜையறையில் இருந்த அனைத்து சாமிகளையும் வேண்டிக் கொண்டு வெளியில் வந்தான்.
சட்டைப் பையை தடவிப் பார்த்துக் கொண்டான், ரோஜா பூ வாங்க பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து,

“அம்மா போய்விட்டு வருகிறேன்” என்றான்

“எங்கடா போறே” என்றான் அவன் அண்ணன் ஜெகன்.

போச்சு எல்லாம் போச்சு போகும் போதே எங்கே போற என்று கேட்கிறானே, “கல்லூரிக்குதான் எதுக்குடா கேட்கிறே” என்றான் மனதில் திட்டிக் கொண்டே கேட்டான்.

“கல்லூரிக்கா” என்று அவனை தலையிலிருந்து கால் வரை பார்த்தான்.

“என்னடா எதுக்கு கேட்டே, அப்படிப் பார்க்கிறே”

“ம்ம் நீ முதலில் அங்கே பாரு” என்றான், அஸ்வினும் திரும்பி பார்க்க,

கொரொனா தொற்று நோய் பரவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் பதினைந்து நாட்கள் விடுமுறை என்று தொலைக் காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *