காதல் களம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 21,622 
 

அறம் என்கிற அறச்செல்வன், திவ்யா இருவரும் காதலர்கள். அறம் பொறியியல் நான்காம் ஆண்டிற்குள் நுழையும் போது திவ்யா அந்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்.

திருப்போரூர் முருகன் கோயிலில் தான் இருவருக்கும் முதல் சந்திப்பு ஆனது. அந்த பொழுது வினோதமாகவும் இருந்தது. பிரசித்திப் பெற்ற அந்தக் கோயிலில் எப்போதும் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். அன்று கூட்டத்தின் நடுவே திவ்யா அவனை மிகவும் கவர்ந்தாள்.

சாதாரணமாக சுரிதார் அணியும் பெண்கள் சிலர் துப்பட்டாவை மார்பக மறைப்புக்கு போட்டுக் கொள்வார்கள். பலர் கழுத்துக்கு போட்டுக் கொண்டு மார்பகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள். சிலரை பிடிக்கும் அளவிற்கு பலரை காணும் போது அவனுக்கு எரிச்சலாக இருக்கும். திவ்யாவும் எரிச்சல் ஊட்டும் வகையில் தான் இருந்தாள்.

தன் மனம் கவர்ந்த ஒருத்தி அப்படி இருப்பதில் அவனுக்குள் நெருடலை உண்டு பண்ணியது. ஏனெனில் வக்கர புத்திக் கொண்ட சில ஆண்களின் தவறான பார்வைக்கும் செயலுக்கும் இதுவும் ஒரு காரணம் என்று நினைப்பான். உண்மையும் அது தானே.

அவள் சிரித்தபடி பேசிக்கொண்டு நடந்து வரும் அழகை இவன் ரசித்துக் கொண்டு இருக்கையில், அவளை பார்த்த காம ரசிகர்கள் இரண்டு பேர் அவளின் மார்பை வர்ணித்து கிண்டல் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அதனை பொறுக்காத அறம் திவ்யாவின் முன் வழி மறித்து நின்றான்.

முன் பின் அறிந்திடாத ஒருவன் தன் முன்னால் வந்து நின்றதும் திவ்யா பயந்து மிரண்டுப் போனாள்.

அலையுடன் போட்டியிடும் கூந்தல் நெளிவு, பளிச்சிடும் பொன்னிற குடை ஜிமிக்கி, எப்படீய்ய்..என்று கேட்காமல் கேட்கும் நீண்ட நெளிந்த புருவம், புருவத்தின் அரவணைப்பில் அகண்ட கண்கள், பௌர்ணமியை புறந்தள்ளும் வட்ட முகம், புடைத்த கூரிய நாசி, முத்தமிட தூண்டும் அழகிய அதரங்கள், நூலிடையில் சிக்கிய மெலிந்த தேகம், மாராப்பினை வலியுறுத்தும் திரட்சியான மார்பு, ஆஹா என்ன ஒரு அற்புதமான வடிவமைப்பு. . இவளை படைத்திட்ட பிரம்மனுக்கு இங்கே ஒரு கோயில் கட்டலாமே. . அறச்செல்வன் மதிமயங்கி நின்றான்.

அவனின் குறுகுறுத்த பார்வை அவளுக்கு சங்கடத்தை உருவாக்க. . லேசான பயத்துடன் வழி விடுங்கள் என்றாள். கிண்டலடித்து மகிழ்ந்து கொண்டிருந்தவர்களை காட்டி, அவர்கள் உன்னை கேலி பேசுகிறார்கள் என்றான்.

ஏன்.,? எதற்கு.,! என்று அவள் கேட்டப் போது, ஷாலை மார்புக்கு போடாமல் கழுத்துக்கு போட்டால் அப்படித்தான் பேசுவார்கள் என்றவன், நான் ஹெல்ப் பண்ணவா என்று கேட்டு கையை நீட்ட, அவள் சட்டென அவன் கையை தட்டிவிட்டு, ஷாலை கீழே இழுத்து விட்டு ‘அதை ‘ மூடிக்கொண்டாள்.

அடுத்த சந்திப்பு. . விடுமுறை கால பொழுது போக்கு இடமான முட்டுக்காடு படகு குழாமில் எதிர்பாராமல் நடந்தது. அப்பொழுது திவ்யா ஷாலை விசிறி மடிப்பில் நேர்த்தியாக மார்பு மீது படர விட்டிருந்ததை பார்த்த போது அவனுக்கு அவள் மீதான ஈடுபாடு இன்னும் அதிகமானது.

டிரஸ் போட்டுக் கொள்வது பெண்களின் உரிமை, சுதந்திரம். . அதில் குறுக்கிடக் கூடாது, அதுவே ஆண்களுக்கு உறுத்தலாகவும், பருவ உணர்வை தூண்டும் வகையில் இருந்தால் திருத்திக் கொள்வதில் தவறில்லை என்று தான் அன்றைக்கு கொஞ்சம் அநாகரிகமாக நடந்து கொண்டேன் என்று மன்னிப்பு கேட்கும் பாணியில் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது. மேலும் அவள் அதை திருத்திக் கொண்டதை சூசகமாக பாராட்டி பேசும் போது, திவ்யா நெகிழ்ந்து, மகிழ்ந்து பரவசமானாள்.

தன் அழகில் அக்கறை செலுத்துவது அல்லாமல், கற்பின் காவலனாக இருக்கும் ‘அறத்தை’ மிகவும் நேசித்தாள்.

அவனின் வசீகர தோற்றம், குறு குறுத்த பார்வை, ஐ லவ் யூ என்று சொல்லத் துடிக்கும் உதடுகள், காதோர கிருதா, மீசை எல்லாமே திவ்யாவுக்கு பிடித்து இருந்தது.

பரஸ்பரம் நட்பாகி, அது காதலாக திருப்போரூர் கோயில், கேளம்பாக்கம் மார்கெட், பார்க், படூர் யுனிவர்சிட்டி வளாகம், முட்டுக்காடு, கோவளம், மாமல்லபுரம் என்று திக்கெட்டும் பரவி படர்ந்தது.

இதே காலக்கட்டத்தில் தான் அன்பரசன் திவ்யாவை பார்த்து, அவள் மீது காதல் கொண்டான். அவளை உயிருக்கு உயிராக நேசித்தான். அவள் இல்லையேல் தனக்கு வாழ்க்கை இல்லை, உயிர் இல்லை என்று கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக அவள் பின்னால் சுற்றினான்.

திவ்யா, அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் திட்டித் தீர்ப்பதில் முனைப்பாக இருந்தாள். மனம் தளராமல் தொடர்ந்து அவள் மனதில் இடம் பிடிக்க முயற்சி பண்ணிக் கொண்டு இருக்கிறான்.

அறச்செல்வனும், திவ்யாவும் ஒரு முறை மாமல்லபுரம் சென்றிருந்த போது பேச்சு வாக்கில் திவ்யா, அன்பரசனை பற்றி சொன்னாள். அப்போது அவன் . . .

அவனை உனக்குப் பிடித்திருந்தால் சொல்லு, அவன் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வரலாம். . .

இப்போ அவனை விட, உன்னை பார்க்கிற போது தான் எனக்கு இன்னும் எரிச்சலா வருது. நான் இங்க வந்திருப்பது எப்படியாவது அவனுக்கு மூக்கில வேர்த்திருக்கும், என்னை ஃபாலோ பண்ணி வந்தாலும் வந்திருப்பான்.

பானி பூரிக்கு ஃபிஷ் கிரேவி நல்ல காமினேஷன், சூப்பரா இருக்கும் சாப்பிடலாமா.,?

லூசா நீ..! என்ன நினைச்சுகிட்டு இருக்கே உம் மனசில,? வில்லன் ஒருத்தன் முளைச்சிருக்கானே, அவனை அடிச்சு, உதைச்சு, தும்சம் பண்ணி ஹீரோ வேலை பார்க்காமல் காமெடி பண்றே. . .,

அவன் யாரு.,? சரி விடு, அவன் எவனாவது இருந்திட்டுப் போகட்டும். அவன் உன்னை ஃபாலோ பண்றதை விட, நீ அவனை நினைச்சுகிட்டு இருக்கிறது தான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த அளவில் அவன் என்னை டார்ச்சர் பண்றான் தெரியுமா.,? மன உளைச்சலுக்கு ஆளாகி தவிக்கிறேன்.

உன்னருகில் நான் இருக்கிற போது தேவை இல்லாமல் பதட்டப் படாதே என்று சமாதானம் செய்தான்.

அடுத்த முறை காதலர்கள் இருவரும் சந்தித்த போது. ..

ஒருவனை காதலிக்கனும் என்றாலும், கல்யாணம் செய்துக்கனும் என்றாலும், அந்த ஒருவன் நிறமில்லையாயினும் அன்பானவனா, அழகானவனா இருக்கனும், சம்பாத்தியம் இல்லையாயினும் திறமைசாலியா இருக்கனுமின்னு தான் எந்த பொண்ணும் ஆசைப்படுவாள். அந்த அன்பரசனைப் பார்த்து அப்படி எந்த ஒரு பொண்ணும் ஆசைப்படக் கூடாது என்றாள் திவ்யா.

அவளின் மென்மையான அழகு முகம் கடினமாகி கடும் சொற்களை உதிர்க்கும் என்று அறச்செல்வன் எதிர்ப்பார்க்கவில்லை.

நாம, நம்ம சந்தோஷங்களை ஷேர் பண்ணிக்க இங்க வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் ஏன் இந்த எரிச்சல்., நீ. . கொஞ்சம் அமைதியாக இரு, உனக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

எனக்கு உபத்திரவமா இருக்கு, நாலா வழியிலும் தொல்லை கொடுக்கிறான். நான் அவன் காதலை ஏற்க மறுத்தால் என் மீது ஆசிட் ஊத்தி அழகை நாசப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறான்.

நான் இன்னொருத்தரை விரும்புறேன், அவரைத் தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு நீ.. சொல்லிடு, அவன் தானா ஒதுங்கிடுவான்.

சொல்லாமல் இருப்பேனா, சொன்னதற்கு என்ன சொல்றான் தெரியுமா. . எனக்கு கிடைக்காததை வேற எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன், அவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவனையும் சேர்த்து ரெண்டு பேரையும் வெட்டி பொலி போட்டுட்டு ஜெயிலுக்கு போவேனே ஒழிய உங்களை சேர்ந்து வாழ விட மாட்டேன் என்று பல்லைக் கடிக்கிறான்.

திவ்யா. . . ஒரு முகமா காதலிக்கிறவன் எல்லோரும் பேசற டயலாக் தான் இது, அந்த உதாருக்கெல்லாம் பயந்து நாமே நம்ம வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது. இரு. . அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

எப்போ.,? அவன், என் முகத்தில ஆசிட்டை ஊத்தி மூஞ்சி மொகரை எல்லாம் வெந்து கறிசட்டியான பிறகா.,? எங்க போனாலும் விடாமல் துரத்துறான். ஹீரோயிசம் பண்ற நெனப்புல ரௌடிகளை ஃபாலோ பண்ண விட்டு செண்டிமென்ட் கிரியேட் பண்றான், நாளுக்கு நாள் அவன் ரோதனை தாங்க முடியலை தெரியுமா.,?

ஊரு உலகத்தில நடக்கிறதை நினைச்சு நீ. . பயப்படுகிறாய். ., நீயும் நானும் உயிருக்கு உயிரா நேசிக்கிறோம், கல்யாணம் பண்ணிக்கப் போறோம், கணவனா உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளப் போறேன், நீ ஏன் வீணா பயப்படுறே.,? தைரியமா இரு. நமக்கு கல்யாணம் ஆகி விட்டால் அவன் உன்னை விட்டு விலகிடுவான்.

அவன் மகா முரடனாக இருப்பான் போலிருக்கு, அவனை பத்தி எத்தனை முறை சொல்லி இருக்கேன். நீ கொஞ்சமும் சட்டை பண்ணாமல் அலட்சியமாக இருக்கே., எனக்கு ஏதாவது ஒண்ணு ஆனால் தான் அந்தக் கஷ்டம் உனக்குத் தெரிய வரும்.

போலீஸில கம்ப்ளையண்ட் பண்ணினால் ஈவ் டீசிங்க்ல உள்ள பிடிச்சு போட்டுறுவாங்க, போலீஸ் அடி வாங்கினால் அடங்கி விடுவான்.

உனக்கு அவனைப் பற்றி தெரியாது. அவன் அதற்கெல்லாம் மசியறவன் கிடையாது. போலீசுக்கு போனா மட்டும் ஆயுளுக்கும் உள்ள பிடிச்சு போட்டுறுவாங்களா என்ன.,? அடிப்பட்ட பாம்பும் காலை சுற்றின பாம்பும் கடிக்காமல் விடாது. வெறி கொண்ட மிருகத்தை விட்டு வைத்தால் என்றைக்கா இருந்தாலும் ஆபத்து தான். நான் நிம்மதியாக இருக்கனுமின்னா, அவன் செத்து ஒழியனும். நீ அவனை கொன்னுடு அறம்.

என்ன பேச்சு பேசறே. . நீ.! என்னமோ பட்டாணி வாங்கி கொரிக்கிற மாதிரி அவனை கொன்னுடு என்கிறே., ஏன் பார்க், பீச், கோயில், குளமெல்லாம் சுத்தி வர்றது போதாதென்று ஜெயிலுக்குப் போய் களி திண்ணுகிட்டு கிட. .என்கிறாயா.,? அப்படி எல்லாம் ஒண்ணும் பண்ணமுடியாது.

நீ ஏன் அவனைக் கண்டு பயப்படுகிறாய்.,?

இதற்கு பேரு பயமில்லை பண்பு. பண்பு கெட்டால் சுயமரியாதையும், சுய ஒழுக்கமும் கெட்டுப் போகும். சட்ட விரோத குற்றத்துக்கு தண்டனை உண்டு தெரியுமா.,?

நான் உனக்கு வேணுமா வேண்டாமா.,?

என்னோட இமேஜ், டேமேஜ் ஆகிறாற் போல நான் எதையும் செய்ய மாட்டேன். ஒருத்தனுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் செய்யக் கூடாது என்று இருப்பவன் நான். அன்பரசன் உனக்கு கெட்டவனா, ஒரு அயோக்கியனா தெரியலாம், அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அவன் ஒரு உத்தமனாக இருக்கலாம் புரிந்துக் கொள்.

என் அழகு கெடாமல் இருக்கனுமின்னா, அவன் கண்ணு மண்ணு தெரியாமல் தவிக்கனும். நீ அவனை கொல்ல வேண்டாம், அவன் பார்க்கிற வேலைக்கு உலை வை, அவன் முகத்தை கத்தியால் கன்னா பின்னான்னு கீறி நாசப்படுத்து. என்னை மட்டுமல்ல, அவன் வேற எந்த பொண்ணையும் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.

அறச்செல்வன் யோசித்தான். தீர்வு காண வேண்டிய விஷயத்துக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், கால தாமதம் செய்தால் விஷயம் விபரீதமாயிடும், என்று முடிவெடுத்து, அவ்வளவு தானே, அந்த அன்பரசன் இனி உனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க என்ன செய்யனுமோ அதை நான் செய்யறேன், நீ தாறுமாறா யோசிக்கிறதை விட்டுவிட்டு நல்ல பொண்ணா லட்சணமா காலேஜுக்கு போயிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன.

அன்பரசன் அறைக் கதவை லேசாக தட்ட அது திறந்து கொண்டது. தயக்கத்துடன் உள்ளே தலையை நீட்டி, நான் உள்ளே வரலாமா என்று குரல் கொடுத்தான்.

குரல் கேட்டு நிமிர்ந்த அறச்செல்வன் அவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

என்னடா மச்சி கோவமா.,? ம். . . இருக்கும், இல்லாமலேயா முகத்தை திருப்பிக் கொள்வாய்.,?

நீ எதற்காக இங்கு வந்தாய் . .? உன்னிடம் பேச எனக்குப் பிடிக்கலை, இங்கிருந்து போய் விடு.

சாரிடா மச்சி., திவ்யா விஷயத்தில் கொஞ்சம் ஓவரா நடந்து கொள்ள வேண்டியதாயிற்று. ஏன் எதற்கு என்று அப்புறம் சொல்றேன் என்ற அன்பரசன் கட்டிலில் ஒரு ஓரமாக உட்கார்ந்தான்.

நானே உன்னை சந்திக்க வேண்டும், சந்தித்து எச்சரிக்கை செய்யலாம் என்று இருந்தேன் . . ஈகோ. . தடுத்துடிச்சு.

நீ எப்படி இருக்கே.,? வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு. .?

ம். . எல்லாம் சரியாத்தான் போயிட்டு இருக்கு என்றான் வேண்டா வெறுப்பாக.

அம்மா எப்படி இருக்காங்க.,?

ம். . நல்லா இருக்காங்க, அவங்க நச்சரிப்பு தான் தாங்க்ல,

வெளி வட்டார பழக்க வழக்கமெல்லாம் ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்குல்ல.,?.,!

நீ எதை பத்தி கேட்கிறே.,?

எதைப் பற்றின்னு நான் சொல்லனுமா..,? உனக்கு தெரியாதா.,? என்று கண்சிமிட்டிக் கேட்டான்.

திவ்யால. . . த்தான் பிரச்சினை.

அதிலென்ன பிரச்சினை.,? அவ உன்னை தீவிரமா லவ் பண்றா, நீயும் அவ இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்று ஆகி விட்டாய். நல்லதொரு சந்தர்ப்பத்தில் வீட்டில் சொல்லி கல்யாணத்தை முடித்துக் கொள்ள வேண்டியது தானே.,! அம்மாவின் ஆசையும் நிறைவேறும்.

அதெல்லாம் சரிதான் நீ கொடுக்கிற டார்ச்சர் தாங்காமல், உன்னை உண்டு இல்லைன்னு பண்ணச் சொல்றா., நான் என்ன பண்ணட்டும்.

இதைக் கேட்ட அன்பரசன் சிரித்தான்.

நான் சீரியசா பேசுறேன், நீ சிரிக்கிறே. . .

சரி நிறுத்திக்கிறேன். ., வந்தவுடன் என்னை எச்சரிக்கை செய்யலாம் என்று இருந்தேன் என்றாயே அது என்ன.,? அதைச் சொல்லு.

அவ பேர்ல இருக்கிற ஆசையால உன்னை கொலை செய்யத் தோணுது. உம் பேர்ல இருக்கிற பாசத்தால அவளை விட்டு ஒதுங்கிடலாமுன்னு தோணுது.

புரியுது., இப்ப நீ இருக்கிற தர்ம சங்கடத்தில் உன்னால் எதையும் உருப்படியாக செய்ய முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. நான் என் தோல்வியை ஏற்றுக் கொண்டு ஒதுங்கி விடுகிறேன்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை, உனக்கு இடைஞ்சலா, உன் காதலுக்கு நான் குறுக்கே வந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு என்னை வாட்டி வதைக்குது. . வருத்தம் தெரிவித்தான் அறம்.

நீ எதை நினைத்தும் வருத்தப் படாதே, ஆசை பட்டதை அடைய வேண்டும் என்கிற வெறி. . அதான் கடைசி வரைக்கும் போராடி பார்க்கலாம் என்று களத்தில் இறங்கினேன். சரிப்பட்டு வரலை.

காதல் ஒன்றும் போர்க்களமில்லை.

புரியுது. அதைப் பற்றி பேசத்தான் நான் வந்தேன். உனக்கு ஞாபகம் இருக்கா., ஒரு வருஷம் இருக்குமா.,? இல்ல கொஞ்சம் கூடுதலாக பதினைந்து பதினாறு மாசமிருக்கும், நாம ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கிற போது நீ விரும்புற பொண்ணும் நான் விரும்புற பொண்ணும் ஒண்ணுதான், அது திவ்யா தான் என்று தெரிய வந்த போது இரண்டு பேருக்குமே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. . அன்பரசன் இப்படி சொன்னதும்.,

இருந்தாலும் இரண்டு பேருக்குமே ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டு கொடுத்து ஒதுங்கி கொள்ளும் மனோபாவம் மற்றவருக்கு இல்லை என்றான் அறம்.

உண்மைதான். நீயா நானா என்கிற போட்டியில் மோகமும், சபலமும் பின்னிப் பிணைந்து அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தது. நாம் இருவரும் விரும்புறோம், அவள் யாரை(?) விரும்புறாளோ அதுபடி நடக்கட்டும். சம்பந்தப்படாத மற்றொருவர் தாமாக விலகிக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு பிரிந்தோம். இப்போ நான் விலகி கொள்ளும் வேளை வந்து விட்டது.

இல்லடா மச்சி அ. . அது. . . வ. .ந். .து, அது. . ., அறச்செல்வன் பேச முடியாமல் தடுமாறினான்.

நீ சமாதானப் படுத்தி பேச ஒன்றுமில்லை அறம், எப்போ அவள் மனசில நான் இல்லை என்று தெரிந்து விட்டதோ நான் கண்ணியமாக ஒதுங்கி கொள்வது தான் உத்தமம். என்னால் இனி திவ்யாவுக்கு எந்த தொந்தரவும் வராது. உனக்கும் எந்த இடைஞ்சலும் இருக்காது.

எச்சிலை கூட்டி விழுங்கினான் அறம்.

. . . ஆனால் எனக்கு மட்டும் தெரியும், அவள் என்னை நேசிக்க மாட்டாள் என்று.

எதனால் அப்படி சொல்றே.,? .,!

ஏன்னா. . உன் அளவுக்கு எனக்கு பர்சனாலிட்டி இல்லையே. . எப்படி நேசிப்பாள்.,?

அப்படி மட்டும் முடிவு எடுத்திடாதே, குணமும் பண்பும் தான் ஒரு காதலனை அடையாளப் படுத்தும். பெரும்பாலும் பெண்கள் அளவுக்கு ஆண்கள் அழகாக இருப்பதில்லை. இருந்தாலும் இருபாலருக்குமிடையே காதல் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பேச வேண்டும் என்பதற்காக நீ பிலாசபி பேசாதே. . .

இல்லை நான் பிலாசபி பேசலை. பிராக்ட்டிக்கலா உண்மையைத் தான் சொல்றேன். நான் பழக ஆரம்பிக்கும் முன் வேறு யாரோ ஒருவன் அவள் மனதில் இடம் பெற்றிருந்தால், அப்போது உன் நிலை தான் எனக்கும் ஏற்பட்டிருக்கும். அப்படி அவள் மனசில யாரும் இல்லை என்று தெரிந்த பிறகு நான் உனக்காக விட்டு கொடுத்திருக்கலாம். . என்று இப்போ தோணுது.

யேய்., ச்சீ. . என்ன பேச்சு இதெல்லாம், நீ சந்தோஷமாக இருக்கிறாய் இல்ல., அது போதும்டா எனக்கு.

இல்லடா நட்பு ஆழமானது, லைஃப்ல கடைசி வரைக்கும் இருக்கும். ஒரு பெண்ணின் காதலுக்காக நண்பர்கள் சண்டையிட்டு பிரிந்து செல்வது ஏற்கக்கூடாதது ஒன்று.

நட்புக்காக. அவளை விட்டு உன்னால் இருக்க முடியும். அதே சமயம் உன்னை விட்டு அவளால் இருக்க முடியாது. ஆசைப் பட்டவள் கிடைக்கலையே என்று மனம் வெறுத்து சாவதை விட, எனக்கென இருப்பவளை நேசித்து வாழ கற்றுக் கொள்ளலாம், எந்த ஒரு விரக்திக்கும் ஆளாகாமல் நாமிருவரும் நிரந்தரமாக பிரிந்து விடலாம். என்ன சரியா.,?

அதற்கு நாம ஏன்டா பிரிந்து இருக்கனும்.? இப்போ ஏற்பட்ட இந்த பிரிவே மனதை பிசைந்து வேதனையை தருது. . இனிமேலும் பிரிந்து இருக்க வேண்டுமா.,?

அது காலத்தின் கட்டாயம். காதலுக்காக இல்லையாயினும் திவ்யாவுக்காக, அவளுடைய நிம்மதிக்காக நான் உன்னை விட்டு பிரிந்து தான் இருக்கனும். நாமிருவரும் நண்பர்கள் என்று அவளுக்குத் தெரியாது. தெரியாமலேயே இருக்கட்டும். நடந்து முடிந்த காதல் கலாட்டாக்களுக்கு உன்னை வைத்துக் கொண்டே அவளிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கி விடுகிறேன். . குட் பை. .சொன்ன அன்பரசன் அவனின் பதிலை எதிர்பாராமல் எழுந்து சென்றான்.

ஒரு வாரம் கழித்து . . பூங்காவில் ஒரு நாள் . . .

என்ன நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி ஒரு சிந்தனை.,?

ஒண்ணுமில்லை, வா. . உட்காரு என்றான் அறச்செல்வன்.

திவ்யா அவனருகில் உட்கார்ந்துக் கொண்டே ஒண்ணுமில்லை என்றாலே அதுல ஆயிரம் கதைகள் இருக்கும். சொல்லு என்ன பிரச்சினை.,? என்று கேட்டாள்.

நீ எதுக்காக என்னை காதலிச்சே. .

என்ன கேள்வி இது.,?

அது அப்படித்தான். பதில் சொல்லு.

நீ ஆக்டிவ்வா இருக்க, ம். .ஸ்மார்ட்டா இருக்க. . அப்புறம் கியூட்டா இருக்க, அதுக்கப்புறம் டிரிம்மா அழகா எனக்கு பிடித்த மாதிரி இருக்க. .

கிட்ட தட்ட நீ சொன்ன எல்லாத்துக்கும் அர்த்தம் ஒண்ணுதான். வேற. . வேற . .

உன் ஆட்டிடியுட் . . அதான்பா கேரக்டர் செமைய்யா இருக்கு. நிதானமா யோசிக்கிறே, எல்லாவற்றையும் நேர்த்தியா ஹேண்டில் பண்றே . .ம். . அப்புறம். . . யோசித்தவள் சொல்லவா என்று கேட்டாள்.

ம் . . . சொல்லு.

நீ நிறைய தீனி வாங்கித் தர, ஐஸ்கிரீம் ஆர்டர் பண்றே, என்னோட மொபைலுக்கு காசு போடறே, கோவளம், மகாபலிபுரம்ன்னு இழுத்துகிட்டுப் போறே, மொக்கையா கடலை போடுறே, அதனால இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்ன சரியா சொல்றேனா.,?

ம். ..

வருத்தமான விஷயம் ஒண்ணு இருக்கு. . என்ற திவ்யா கண்ணுக்கு எட்டிய வரையில் சுற்றிலும் பார்த்தாள், அன்பரசன் தென்படலை.

அது என்ன.,?

அந்த பொறுக்கி விஷயத்தில் நீ அலட்சியம் காட்டுறது தான் எனக்கு பிடிக்கலை என்றவளின் முகம் இறுகியது.

ஓ . . அதுவா.,? அந்த பிரச்சினை சால்வ்வாயிடுச்சு. நீ அந்த அன்பரசனை பற்றி கவலைப் படவேண்டாம். நீ வேணுமின்னா பாரேன் அடுத்த முறை அவன் உன்னை பார்க்கிற போது சாஷ்டாங்கமாய் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கப் போகிறான்.

எனக்கு நம்பிக்கை வரலை, என்னை சமாதானம் செய்வதற்காக நீ பொய் சொல்றே என்ற திவ்யா அன்பரசன் வரவை எதிர்ப்பார்த்தாள். கூடவே தம் கைப்பையை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். உள்ளே ஆசிட் நிறைந்த முட்டை ஒன்று பத்திரமாக இருந்தது.

சொன்னால் நம்பு, நான் அவனை கடுமையாகப் பேசி கண்மூடித் தனமாக அடித்து விட்டேன். அவன் இன்னேரம் இந்த ஊரை விட்டு ஓடிப் போயிருப்பான் என்று பொயுரைத்தான்.

அவள் பதிலுரைக்காமல் இருக்கவே அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவள் பர பரப்பாய் இருப்பதை உணர்ந்து இவள் ஏன் திடீரென மாறி விட்டாள் என்று யோசித்தான்.

உன்னை எல்லாம் நம்பமுடியாது, அவனுக்கு நானே ஒரு முடிவு கட்டுறேன் என்றால் பல்லைக் கடித்துக்கொண்டே.

அதெற்கெல்லாம் அவசியம் இருக்காது, நீ இரு நான் போய் ஐஸ்கிரீம் வாங்கிவர்றேன் என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள நடமாடும் பார்லருக்கு சென்றான். அப்போது தொலைவில் அன்பரசன் வந்துக் கொண்டிருந்தான்.

தெரியும்டா நீ வருவேன்னு, வாடா உனக்காகத் தான் காத்திருக்கிறேன், என் மூஞ்சிலேயா ஆசிட் ஊத்துறேன் என்றாய், நான் ஊத்துறேன்டா உம் மூஞ்சிலே என்று கருவினாள்.

அறச்செல்வன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு திரும்பினான். அன்பரசன் திவ்யாவை நோக்கி முன்னேறினான். பொறுமை தாளாத. அவள் அவனை எதிர்க் கொண்டு ஆவேசத்துடன் ஓடினாள். திவ்யா தன் பேக்கிலிருந்து முட்டையை எடுத்தப்படி அன்பரசனை எதிர்க்கத் துணிந்தவளை கண்டு பதறிய அறச்செல்வன், ஏய் திவ்யா நில்லு நில்லு என்று கத்தியபடி ஓடிவந்து அன்பரசனை மறைத்து நிற்க, திவ்யா வீசிய ஆசிட் முட்டை அறச்செல்வன் முகத்தில் மோதி உடைந்து முகமெல்லாம் ஆசிட் தெறித்தது.

அன்பரசன் துடித்துப் போனான்.

இதனை எதிர்ப்பார்க்காத திவ்யா அதிர்ச்சியானாள்.

அறச்செல்வன் முகம் வெந்து எரிச்சல் தாங்காமல் முகத்தை மூடிக் கொண்டு தரையில் விழுந்து புரண்டு துடித்தான்.

அடிப்பாவி, பாதகி, கொலைக்காரி நீ எல்லாம் ஒரு பொண்ணா என்று திட்டிய அன்பரசன், வலி வேதனையில் துடிக்கும் நண்பனை அவசர அவசரமாக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றான்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போது அன்பரசன், திவ்யா மீது உள்ள கோபத்தாலும் ஆத்திரத்தாலும், அவளை அருகில் இருக்க இடம் கொடுக்க வில்லை. சிகிச்சை முடிந்து பதினோராம் நாளில் வீடு திரும்பினான் அறச்செல்வன்.

தன் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் நிலை குலைந்து போனான். முகம், கழுத்து, கைகள் ஆசிட்டால் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் கருகி விகாரமாக காட்சி தந்தது. தாடி மீசைகள் செம்பட்டை கலருக்கு மாறி இருந்தது. கன்னங்கள் இரண்டும் தனலில் இட்ட ஆமணக்கு இலை போல தோல் சுருங்கி கறுத்து தடித்து இருந்தன. கண் இமைகளும் அழகான புருவமும் தீய்ந்து பொலிவிழந்து காணப்பட்டன. புருவத்தின் புண்ணில் தோல் உரிந்து செவ்வானம் நிறத்தில் பார்த்ததும் கண்கள் கண்ணீரை கொட்டியது. வீணாய் போன முகத்தோற்றத்தால் அவனின் கம்பீரமும் நிமிர்ந்த நெஞ்சும், நேர் கொண்ட பார்வையும் தொலைந்து போயிருந்தது. தேஜஸ்சான உடற்கட்டு இலவம் பஞ்சு மூட்டையாய் வலிமை இழந்திருந்தது. மன வேதனைக்கு ஆளான அவன் தன்னை தானே வெறுத்தான்.

இரண்டு நாள் கழித்து. . .

அறச்செல்வன், உயிர் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தான். விஷம் வயிற்றுக்குள் இறங்கி எரிச்சலை உண்டு பண்ணியது. நண்பன் அன்பரசனையும், திவ்யாவையும் வீட்டுக்கு வரச்சொல்லி மொபைலில் பேசினான். அடுத்த சிறிது நேரத்தில் திவ்யா வந்தாள். வந்தவள். . .

அறச்செல்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டு, என்னை மன்னித்து விடு அறம், ஒரு பாவமும் அறியாத உனக்கு என்னால் இப்படி ஒரு கேடு ஏற்பட்டுப் போச்சு என்று சொல்லி கதறி அழுதாள்.

அழாதே திவ்யா. . எல்லாம் விதி. என்ன நடக்கனுமோ அது நடந்திருக்கு என்றான். உடல் முழுக்க திசுக்களில் எரிச்சல் உண்டாகி, கண், காது, மூக்கு, வாய், மலத்துவாரம் வழியாக உஷ்ணக்காற்று வெளியேறியது.

இல்ல அறம், என்னால் என்னுடைய முட்டாள் தனத்தால் விளைந்த வினை இது. பாரு உன் முகமெல்லாம் எப்படி விகாரமாயிடுச்சு., எனக்கு மன்னிப்பே கிடையாது. நான் எங்கே போய் இதற்கு பிராயச்சித்தம் தேடுவேன்., என்று புலம்பினாள்.

நான் சொல்வதை கேட்பாயா திவ்யா.,? இருமிக் கொண்டே கேட்டான்.

சொல்லு அறம்., நான் என்ன செய்யனும்.,?

நீ என்னை மறந்து விடு. இனி நான் உனக்கு பொருத்தமானவன் கிடையாது. நம்மை பார்க்கும் உலகம் கேலி செய்து பேசும். என் அம்மாவால் உனக்கு காலத்துக்கும் அவச்சொல் உண்டாகி அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். அது உனக்கும் சங்கடம் எனக்கும் சங்கடம்.

விஷத்தின் உக்கிரம் தாங்காமல் குடல்கள் புரட்டி எடுத்து கடுமையான வலி ஏற்படவே பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான். அப்போது அன்பரசன் எப்படி இருக்கே என்று விசாரித்துக் கொண்டே வந்தான்.

அப்படி சொல்லாதே அறம். நீ இல்லை என்றால் நான் இல்லை. அன்பரசன் உன் நண்பன் என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் கண்டிப்பாக இதை நான் செய்திருக்க மாட்டேன். நீயாவது இவனை உன் நண்பன் என்று சொல்லி இருக்கலாம்.

நீ செய்த கொடுமைக்கு எங்கே போய் பிராயச்சித்தம் தேடுவேன் என்று ஆதங்கம் கொண்டாயில்ல, நீ இவனை கல்யாணம் பண்ணிக்கொள் . . எல்லாம் சரியாயிடும். வயிற்று புரட்டல் குமட்டலாக மாறி வெளியேற துடித்துக் கொண்டிருந்தது. வாயை மூடிக்கொண்டு விழுங்கினான்.

ஏய். . என்ன பேச்சு பேசறே. . நீ.! என்று கேட்டான் அன்பரசன்.

நான் சரியாத்தான் பேசறேன். திவ்யா இவன் ரொம்ப ரொம்ப நல்லவன். உனக்காக உன்னை அடைய வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் . . . சொன்னவன் மேற்கொண்டு பேச முடியாமல் இருமினான். வாய் வழியாக ரத்தம் சிதறலாக வெளியே வந்து விழுந்தது.

பதறிய அன்பரசன் ஏன்டா ரத்த வாந்தி எடுக்கிறே. . என்ன காரியம் பண்ணித் தொலைச்சே . . என்று கேட்டான்.

அவனை கையமர்த்திய, அறம். . . மீண்டும் திவ்யாவிடம் உன்னை அடைய வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் இவன் உன் கிட்ட கொஞ்சம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டான். மற்றபடி இவன் என்னை விட சிறந்த நெறியாளன். நீ விரும்பும் காதலனை விட உன்னை விரும்பும் காதலனுடன் வாழ பழகிக்கொள். வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றவன் அவளின் கையைப் பிடித்து அன்பரசன் கையில் ஒப்படைத்து விட்டு ரத்தவாந்தியுடன் நண்பனின் தோளில் சாய்ந்தான்.

அறச்செல்வன், சிரித்த முகமாக உயிர் துறந்தான்.

( முற்றும். )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *