மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஏனே அம்மாவின் ஞாபகம் வந்தது. வெகு விரைவில் ஒரு முறை சென்று வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்து அலுவலகத்திற்குக் கிளம்பினான். மூர்த்தி 5′ 6” உயரம், மாநிறம், தெளிந்த முகம், பார்த்தவுடன் யாருக்கும் பிடித்துப் போகும் குணம் உடையவன்.
அலுவலகத்திற்குச் செல்லும் எண்ணமே அவனுக்குத் தேனாய் இனித்தது. காரணம் ”மஞ்சு”. வேலைக்குச் சேர்ந்த அன்று மஞ்சுவைப் பார்த்த கணத்தில் அவளுடன் பரிச்சயமாக வேண்டும், அவளைப் பற்றி அறிய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கேற்றாற்போல் அவளும் அவன் குழுவிலேயே வேலை செய்பவள்.
அவர்கள் குழு பத்து பேர் கொண்ட ஒரு software develpment group, வேலை நிமித்தமாக இருவரும் அடிக்கடி சந்திக்கவும் பேசிக் கொள்ளவும் நேர்ந்தது. மஞ்சு 5′ 4” உயரத்தில், கோதுமை வறுத்த நிறத்தில் மெலிந்த தேகம் உடையவள். அவளின் நேர் கொண்ட பார்வையும் செய்யும் வேலையில் அவள் காட்டும் ஆர்வமும் அவனை வெகுவாக ஈர்த்தது.
ஒரு வருட காலமாகப் பேசிப் பழகினாலும் அவள் தமிழ் பேசுபவள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அறிய இயலாமல் இருந்தான். அவள் அதிகம் பேசுவதில்லை; கேட்ட கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் பதில் கூறுவாள். கூடி நின்று மற்ற பெண்களுடன் அரட்டை அடித்தோ அல்லது அதிர்ந்து சிரித்தோ அவன் பார்த்ததேயில்லை.
இவை அனைத்துமே மஞ்சுவின் மேல் ஈர்ப்பாக வளர்ந்து, பின்பு காதலாக மாறியது. ஆனால் அவளிடம் எப்படித் தன் காதலை வெளிப்படுத்துவது என்று தயங்கினான். தன் நண்பன் கணேஷிடம் கூறலாமா என்று யோசித்தான். பின்பு வேண்டாம் அவளிடமே முதலில் கூறலாம் என்று முடிவு செய்தான். இன்று அவளிடம் இதுகுறித்துப் பேசி விடுவது என்ற ஒரு முடிவோடு அவள் அறை நோக்கிச் சென்றான்.
லஞ்ச் டைமில் எல்லோரும் cafeteria சென்ற சமயத்தில் அவள் மட்டும் தன் அறையில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டே தான் கொண்டு கொண்டு வந்திருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
இதுதான் தக்க சமயம் என்று நினைத்து ”மஞ்சு ஒரு நிமிடம் உன்னிடம் தனியாகப் பேசலாமா?”
கண்களில் கேள்விக் குறியோடு ஏறிட்ட மஞ்சுவை நோக்கி ”நான் வந்து” என்று தடுமாறினான் மூர்த்தி.
”ஒரு வருஷமாக உன்னைப் பார்த்ததிலிருந்து உன்னிடம் என் மனதைப் பறி கொடுத்து விட்டேன். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படறேன். நீ உன் முடிவை உடனே சொல்ல வேண்டாம். யோசிச்சு மெதுவா சொன்னா போதும்” என்று ஒரே மூச்சில் சொல்லிவிட்டு பதிலுக்காக அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் முகம் மாறியிருந்தது. சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. பிறகு மெதுவாக அவள் பேச ஆரம்பித்தாள்.
”நான் இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை மூர்த்தி. இந்தியாவிலிருந்து வந்து ஒரு வருடத்திற்குள் இத்தனை மாற்றமா? நம்மூர் கலாச்சாரம், பண்பாடு எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? உங்க காதலைச் சொல்றதுக்கு முன்னாடி நான் யாரு, எப்படிப்பட்டவள், கல்யாணம் ஆனவளா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்னு உங்களுகூகுத் தோணவேயில்லையா? I am Sorry!!! எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி. இனிமேலும் இது மாதிரி பைத்தியக்காரத்தனமா நடந்துக்காதீங்க” என்று படபடவென்று பொரிந்து விட்டு எழுந்து வெளியேறினாள்.
மூர்த்தி வெட்கத்தினாலும், அதிர்ச்சியினாலும் தலைகுனிந்து நின்றான்.
அங்கு வந்த கணேஷ் அவனிடம் ”நடந்ததை நானும் என் அறையிலிருந்து கேட்டுக் கிட்டுத்தானிருந்தேன். நீ ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாமேடா? அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாயிடிச்சின்னு சொல்லியிருப்பேனேடா” என்றான்.
”விடுடா… எனக்கு என்ன வருத்தம்னா அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை, அதுக்கு அறிகுறியா அவ கழுத்துல தாலியையோ, நெத்தியிலே பொட்டையோ, காலிலே மெட்டியையோ ஒரு முறைகூட பார்ககலை. எனக்குக் கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துச் சொன்ன அவ தன்னோட கலாச்சாரத்தை மறந்துட்டா. அமெரிக்க வந்து நான் மாறிட்டேன்னு சொல்ற அவ எவ்வளவு மாறியிருக்கா பார்த்தியா” என்று வருத்தத்துடன் கூறினான்.
அந்தப் பக்கமாக தன் கைப்பையை எடுக்க வந்த மஞ்சு அவன் கூறியதைக் கேட்டு விக்கித்து நின்றாள்.
– ஜூலை 2003
Good