காதலும் கானல் நீர்தானா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 4,834 
 
 

காதலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ இல்லையோ பரந்தாமனும் சரி, அவன் காதலித்த ரம்யாவும் சரி அதை தெய்வீகமாய் நினைத்தது ஒரு காலம், ஆனால் தற்பொழுது நீங்கள் கேட்டீர்கள் என்றால் அப்பா தப்பித்தேன் என்றுதான் நினைப்பார்கள். ஆம் அவர்கள் இருவருமே அவரவர் பாதையில் போய்க்கொண்டே இருந்தார்கள்

பரந்தாமனுக்கு தகப்பன் கிடையாது, தாய் மட்டுமே, பரந்தாமன் நல்ல உத்தியோகத்தில் வேறு இருக்கிறான். அப்புறம் என்ன? அவன் அம்மா அடிக்கடி அவனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தை எப்ப கல்யாணம் பண்ணிக்க போறே?

அவனுக்கும் கல்யாணம் செய்து கொள்ள ஆசைதான், ஆனால் அவன் உயிருக்குயிராய் நினைத்து காதலித்து கொண்டிருக்கும் ரம்யா வீட்டில் இன்னும் பச்சைக்கொடி காட்ட மறுக்கிறார்கள். பரந்தாமனின் அம்மாவுக்கோ இவர்கள் இப்படி இழுத்தடிப்பதை பார்த்து எரிச்சலோ எரிச்சல்.

மூன்று வருடங்களாக காதலித்து கொண்டிருக்கிறார்கள் பரந்தாமனும், ரம்யாவும். இருவரும் பக்கத்து பக்கத்து அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். ரம்யாவும் நல்ல வேலையில் இருக்கிறாள். இருந்தாலும் அவளை பொருத்தவரை பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொள்வதில் அவ்வளவு ஆர்வமில்லை. அதற்காக பரந்தாமனின் மீது ஆசையில்லை என்று சொல்லவில்லை. அவன் மீதும், ஆசை வைத்திருக்கிறாள். அப்பாவிடம் எப்படி அனுமதி கேட்பது என்கிற தயக்கத்தோடு இவர்களின் காதல் காலம் வேகமாக உருண்டு கொண்டிருக்கிறது.

பரந்தாமன் ரம்யாவிடம் ஒரு முறை நான் வேண்டுமானால் உங்கப்பாவிடம் பேசி பார்க்கட்டுமா? கேட்டவனை அப்படியெல்லாம் கேட்டுடாதீங்க, அப்பா அப்புறம் என்னை தப்பா நினைச்சுக்குவாறு. இந்த வார்த்தை பரந்தாமனுக்கு சர்ரென்று கோபத்தை ஏற்படுத்தியது. இங்க பாரு நீயும் பேச மாட்டே, என்னையும் பேச விட மாட்டேங்கறே? கோபித்து கொண்டான். இவனின் கோபம் ரம்யாவுக்கு சங்கடத்தை உண்டு பண்ணி விட்டது. சரி ஒரு வாரம் டைம் கொடுங்க, நான் சொல்றேன். பரந்தாமனின் முகம் பிரகாசமாயிற்று.

அன்று இரவு அப்பா அவளை அழைக்க இவளுக்கு மனம் பக்கென்றது, ஒரு வேளை நம்மை பற்றி ஏதாவது தெரிந்திருக்குமோ? பதட்டத்துடன் சென்றாள். மகளின் முகத்தை பார்த்தவர் உனக்கு ஒரு ஜாதகம் வந்துருக்கு, பையன் நல்லா படிச்சிருக்கான், இப்ப ஸ்டேட்ஸ்ல இருக்கான், அங்க போய் ஒரு வருசம்தாம் ஆகுது, அவங்கப்பாவுக்கு பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி கூடவே அனுப்பிச்சிடனும்னு ஆசைப்படறாரு. எங்கிட்ட கேட்டாரு. நீ என்ன சொல்றே? ரம்யாவுக்கு ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை, அப்பா..இழுத்தாள்.. நான் இங்க ஒருத்தரை…

என்ன காதலா? அவளை உற்றுப்பார்த்தார், ஆமாப்பா தலையை குனிந்தவாறு தலையை ஆட்டினாள்.சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் சரி என்னை வந்து பாக்க சொல்லு, ரம்யாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தேங்க்ஸ்ப்பா..

மறு நாள் மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை அவனிடம் சொல்ல வேண்டும் என்று விரைந்தாள். ஆனால் பரந்தாமன் வரவில்லை. செல்லில் அவனுக்கு போன் செய்தாள், ரிங் போய்க்கொண்டிருக்கிறது, எடுக்கவே இல்லை. மறு நாளும் அவன் வரவில்லை. இவளுக்கு அவனிடம் சொல்ல வேண்டிய சேதி இப்படி ஆறிப்போவதை விரும்பவே இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் அப்பா அவளை பார்த்த பார்வை வேறு அவளை இம்சைபடுத்தியது. என்னம்மா அந்த பையன் வரவேயில்லை. அவ்வளவுதானா?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு புரியவில்லை.

அம்மா நான் சொல்றதை கேளு. இந்த பையனை பாரு, கண்டிப்பா உனக்கு செட்டாவான், உன் வாழ்க்கையும் மேல் நாட்டுல செட்டிலாகற மாதிரி இருக்கும். நல்லா யோசிச்சுக்கோ.

ரம்யாவின் மனம் சலனப்பட ஆரம்பித்தது.

மறு நாள் பரந்தாமனை பார்த்த பொழுது பல நாள் பட்டினி கிடந்தவன் போல் இருந்தான், இவள் அவனிடம் பார்வையாலே கேள்விக்கணையை தொடுத்தாள். பரந்தாமன் அவளிடம் வந்தவன் அம்மாவுக்கு திடீருன்னு ஸ்ட்ரோக் வந்துடுச்சு, ஆஸ்பிடல்ல சேர்த்துட்டேன், கூட யாருமே இல்லாததுனால இரண்டு நாளா ஹாஸ்பிடல்லயே இருந்தேன். இப்ப கூட பத்து நாள் லீவு போடறதுக்குத்தான் வந்திருக்கேன். நீ உங்கப்பா கிட்டே பேசிகிட்டயா? எங்கம்மாவுக்கு ஏதோ ஒண்ணு ஆகறதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படறாங்க, பாவம் அந்த வருத்தத்திலும் அவனுக்கு அவளை கை பிடித்தால் போதும் என்றிருந்தது.

அவள் அதை பற்றி கண்டு கொள்ளாமல், இப்ப அம்மாவுக்கு எப்படி இருக்கு?

அம்மாவுக்கு உடம்புல ஒரு பக்கம் இனிமேல் வேலை செய்யாதாம், டாக்டர் சொல்லிட்டாரு, அதனால தான் சொல்றேன், நானே உங்கப்பாகிட்டே பேசி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கறேன். நீ எங்க வீட்டுக்கு வந்துட்டயின்னா? அம்மாவுக்கு ஒரு துணையா இருக்கும்.

இனி இவன் அம்மா நோயாளியாகவா? அதுவும் கை கால் வராமல்? நம்மால் பணி விடை எல்லாம் செய்து கொண்டிருக்க முடியுமா? மனது இப்படி எண்ணமிட்டது.

அதை பத்தி அப்புறமா பேசலாம், இப்ப உங்கம்மாவுக்கு நல்லாகறதை பத்தி யோசியுங்க.. பேச்சை மாற்றி விட்டு நான் வர்றேன், இன்னைக்கு அம்மா கோயிலுக்கு போகணும்னு சீக்கிரம் வர சொல்லுச்சு.

பரந்தாமன் சோகத்துடன் தலையசைத்தான்.

அன்று இரவு ரம்யா அப்பாவிடம் பாரின் மாப்பிள்ளைக்கு தலையாட்டினாள்.

இரண்டு வாரம் ஓடியிருந்தது, ரம்யா முகத்தை சோகமாக வைத்து கொண்டு பரந்தாமனிடம் சூழ்நிலைகளை விளக்கி சொல்லி கல்யாண பத்திரிக்கையை கொடுத்தாள். பரந்தாமன் கண்களில் சோகம் தெரிய பத்திரிக்கையை பெற்றுக்கொண்டான்.

அப்புறம் உங்கம்மாவுக்கு? இவள் வருத்தத்துடன் கேட்டாள்

ப்ச்..ப்ச்..உதட்டை பிதுக்கினான், வருத்தப்படாதீங்க சீக்கிரம் சரியாயிடும். எனக்குத்தான் உங்க கூட வாழறதுக்கு கொடுப்பினை இல்லை. பரவாயில்லை, சரி கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும், (மனதுக்குள் வந்து விட போகிறானோ?)விடை பெற்று கொண்டாள்

பரந்தாமன் வீட்டில் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான், அம்மா நீ சரியாத்தான் சொல்லியிருக்கே. அவளுக்கு கல்யாணம் வேற இடத்துல நிச்சயமாயிடுச்சு..

எல்லாம் எனக்கு தெரியுண்டா உங்க காலத்து காதல் எப்படியிருக்கும்னு, அதான் ஒரு ட்ராமா போட்டு பாருன்னு சொன்னேன்.

சரி நாளைக்கு உனக்கு பாத்திருக்கற பொண்ணு வீட்டுக்கு கிளம்பணும், ஒரே பொண்ணு, நல்ல வசதி இருக்குது. பொருத்தம் எல்லாம் பாத்துட்டேன். நாளைக்கு போய் சம்பிரதாயமா பாத்துட்டு வந்துடலாம். நாளைக்கு லீவு போட்டுடு.

சரிம்மா சந்தோசத்துடன் சொன்னவன், நானும் கூட ஆழமாக காதலிக்கவில்லையோ என்று தன்னையும் கேட்டுக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *