காதலும் கருப்பையாவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 1, 2024
பார்வையிட்டோர்: 1,875 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

புதிதாக எழுத ஆசைகொண்ட ஒரு வாலிபர், பரம் உற்சாகத்தோடு, லார்டு நார்த்கிளிப் என்ற கீர்த்தி வாய்ந்த பத்திரிகை முதலாளியிடம் வந்தார். “ஆரம்ப எழுத்தாளனுக்கு வேண்டிய முக்கியமான யோக்கியதை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். 

”கொஞ்சம் பசி வேண்டும்” என்றார் நார்த் கிளிப். 

மைக்கேல் ஆர்லன் என்பவரிடம் ஒரு பெண் வந்து, தான் எழுத்தாளியாகப் போவதாகவும், எழுதத் தொடங்குவது எப்படி என்றும் கேட்டாள். 

“இடது பக்கத்திலிருந்து ஆரம்பித்து வலது பக்கமாக எழுதிக்கொண்டு போகவேண்டும்” என்றார் மைக்கேல் ஆர்லன். 

நார்த்கிளிப், மைக்கேல் ஆர்லன் போன்ற பிரசித்தி பெற்றவர்களின் வரிசையில் என்னையும் சேர்த்து வைத்துவிடவேண்டு மென்பதற்காக எனது நண்பர் ஒருவர் ஒருநாள் திடீரென்று, “எழுத்தாளர் ஆவது எப்படி? நீங்கள் எப்படி எழுத்தாளரானீர்கள்?” என்று று ஒரு பிரபலமான கேள்வியை என்னிடம் போட்டார். நானும் பிரசித்தி பெற்றவர்கள் ‘பளிச் பளிச்’ சென்று சொல்லும் ‘பட்டாஸ் வெடி’ பதில் போல சொல்ல வேண்டுமென்று எண்ணி, “அதற்குக் காதலும் வேண்டும் அதை உண்டாக்க ஒரு கருப்பையாவும் வேண்டும்” என்றேன். 

“அதென்ன ‘காதலும் கருப்பையாவும்’ சொல்லுங்கள் கேட்கலாம்” என்றார். 

” சரி” என்று நானும் சொல்ல ஆரம்பித்தேன், 


கருப்பையா என்ற ஒரு இளைஞன் என் வீட்டுப் பசுக்களைப் பால் கறப்பதற்குத் தினமும் வருவான். அவனுக்கு மாதச்சம்பளம் கொடுத்து வைத்திருந்தோம். இப்படி அனேக வீடுகளில் பால் கறந்து கொடுப்பதே அவனது தொழில். ‘கல கல’ வென்றிருப்பான். ரொம்பவும் சுரு சுருப்பான பையன். நல்ல கருப்பு நிறம். வயது 15 இருக்கும். எழுதப் படிக்கத் தெரியாது. ஆயினும் கதர் கட்டிக்கொண்டு காங்கிரஸ் காரர்களுடன் தான் எப்பொழுதும் இருப்பான். பொதுக்கூட்டங்கள் என்றால் கருப்பையா இல்லாமல் நடக்காது. வெகு உற்சாகமாகப் பொது வேலைகளில் ஈடுபடுவான். போலீஸ்காரர்களைக் கண்டால் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டான். “என்ன அண்ணாச்சி” என்று அவர்களுடன் நட்புக் கொண்டாடிவிடுவான். நல்ல தைரியசாலி. 

என்னுடைய சொற்பொழிவு என்றால் அவனுக்கு கற்கண்டுதான். அதனால் என்னுடன் அதிகமாகப் பழகுவான். 

ஒரு சமயம் நான் ஆங்கில அரசாங்கத்தின் மீது துவேஷம் உண்டாகும்படி பேசினேன் என்று என்னைக் கைதிசெய்து போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்’பிலே பத்து தினங்கள் வைத்திருந்தார்கள். சாப்பாடு மட்டும் வீட்டிலிருந்து கொண்டுவர அனுமதி கொடுத்தார்கள். 

கருப்பையா தைரியசாலியாகையால் வீட்டிலிருந்தவர்கள் அவனையே எனக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். அவனும் மிக்க மகிழ்ச்சியுடன் தினமும் எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து போட்டான். ஒரு நாள் கொஞ்சம் நேரம் கழித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தான். 

“ஏண்டா, இவ்வளவு நேரம் சாப்பாடு கொண்டு வர?” என்று கேட்டேன். 

“வழியில் தங்களுக்கு ஒரு கடிதம்…..”

“அதென்னடா கடிதம்?” 

“ஸார்! கோபித்துக் கொள்ளமாட்டீர்களே ?”

“ஏன் கோபித்துக்கொள்ளுகிறேன்,கடிதத்தைக் கொடு பார்க்கலாம்!” என்றேன். 

கருப்பையா சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். யாராவது போலீஸ்காரர்கள் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் அவனுக்கு. ஆனால் அங்கு காவலிருந்த ‘437’ விழித்த கண் விழித்தபடி தூங்குவது எப்படி என்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஆகையால் தைரியத்துடன் கருப்பையா தன் மடியில் சுருட்டி வைத்திருந்த கடிதத்தை மெதுவாக எடுத்து என்னிடம் கொடுத்தான். 

தேசபக்தியின் காரணமாகச் சிறைப்பட்டிருக்கும் வீர இளைஞர் அவர்களுக்கு நமஸ்காரம். 

முன்பின் தெரியாத ஒரு இளம்பெண் தங்களுக்கு கடிதம் எழுதுவதுபற்றித் தாங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் தங்களுக்குத்தான் என்னைத் தெரியாதே ஒழிய எனக்குத் தங்களை வெகு நன்றாகத் தெரியும். 

தங்களுடைய சொற்பொழிவு நடைபெறும் இடங்களுக்கு நான் வரத் தவறுவதேயில்லை. தங்களுடைய ஹாஸ்ய மொழிகளும், வீர உரைகளும் என் மனதில் நன்றாகப் பதிந்து போயிருக்கின்றன. என்ன அழகாகப் பேசுகிறீர்கள்! தங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 

தாங்கள் சில தினங்களுக்கு முன் ஜவாஹர் மைதானத்தில் செய்த பிரசங்கத்தை அடியாள் கேட்கும்படியான பாக்கியம் கிடைத்தது. தங்களுடைய அற்புதமான உரைகளுக்கு மத்தியில் தாங்கள்,”வீரப் பெண்களே, வெளியில் வாருங்கள்; வீழ்ந்த நாட்டை மீட்க வாருங்கள்” என்று, அன்று பாரத நாட்டுப் பெண்கள் அனைவரையும் கூவி அழைத்தீர்கள். அன்றே என் மனதில் பெரும் கிளர்ச்சி உண்டாயிற்று. அன்றிலிருந்து “நாமும் ஏன் தேசசேவை செய்யக் கூடாது?” என்ற எண்ணம் எனது உள்ளத்தில் சுற்றிச் சுற்றி வட்ட மிட்டு வருகிறது. ஆனால் தங்களுக்குத் தெரியும், நமது சமூகத்தில் ஒரு பெண் தன் இச்சைப்படி ஒன்றும் செய்ய முடியாதென்று! ஆனாலும் என் உள்ளத்தில் ஒரு வித ஆர்வத்தைக் கிளப்பிவிட்டிருக்கும் தாங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அதன்படி நடக்க நான் சித்தமாக யிருக்கிறேன். தயவு செய்து அடியாளிடம் கருணை கூர்ந்து பதில் எழுத வேண்டுகிறேன். 

என்றுமுங்கள்,
சுந்தரி. 

குறிப்பு :- பதில் எழுதுவதற்கு இத்துடன் வெள்ளைத் தாள் ஒன்றும் இணைத்திருக்கிறேன். பேனா கருப்பையா விடமிருக்கிறது. 


கடிதத்தைப் படித்து முடித்ததும், நானும் ஒரு முறை சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேன். கருப்பையா என் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பாவம், படிப்பில்லாதவன்! ‘ஏதாவது கோபித்துக் கொள்ளப் போகிறேனோ!’ என்ற கவலைவேறு அவனுக்கு. 

மறுமுறையும் அக்கடிதத்தைத் திருப்பிப் படித்தேன். பின்னர் அதை மடித்துப் பத்திரப் படுத்திக்கொண்டு, புன்சிரிப்புடன் கருப்பையாவைப் பார்த்தேன். எனக்கு கோபமில்லை என்று கண்டு கொண்ட அவன் குதூகலம் அடைந்தான். 

“சுந்தரி என்ன ஸார், எழுதியிருக்குது?” என்று கேட்டான். 

“உனக்குச் சுந்தரியை நன்றாகத் தெரியுமோ?” என்று நான் அவனைக் கேட்டேன். 

“அவங்க வீட்டிலேயும் நான் தானே பால் கறக்கிறேன்!” என்றான். 

அவனிடம் சுந்தரி தன் கடிதத்தில் எழுதியிருந்ததைக் கூறினேன். அவன் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் தோன்றியது. ஒருவேளை அவன் காதல், கீதலை எதிர்பார்த்தானோ, என்னவோ? 

நான் அதைக் கவனிக்காதவன்போல், “பதில் எழுதித் தருகிறேன், கொடுக்கிறாயா?” என்று கேட்டேன். 

“ஒ, அதைவிட வேறு எனக்கு என்ன வேலை? ஜோராக எழுதுங்கள்!” என்று எனக்கு உற்சாகமூட்டி, மடியில் வைத்திருந்த பேனாவையும் கொடுத்தான். 

நான் நீண்ட கடிதம் எழுத விரும்பவில்லை. ஏனெனில் எனக்கு அப்பொழுது அதிகம் எழுதத் தெரியாது, ஆகவே வெகு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தேன். 

அன்புள்ள சுந்தரிக்கு, கடிதம் கிடைத்தது; மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உன்னுடைய தேசபக்தியைக் கண்டு மிகவும் பெருமை அடைகிறேன். என்னுடைய யோசனைப்படி நீ நடப்பதற்கு எவ்வளவோ தைரியம் வேண்டும்; பெரிய தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆகவே இன்னும் நன்றாக யோசித்து எழுதவும். 

அன்பன்
……………


மறு நாள் சுந்தரியிடமிருந்து பதில் வரவில்லை. யோசித்துப் பதில் அனுப்புவதாக கருப்பையாவிடம் சொல்லி அனுப்பியிருந்தாள். 

“ஒருவேளை என்யோசனைப்படி சுந்தரியும் தைரியமாக வெளியில் தேச சேவை செய்யக் கிளம்பிவிட்டால் அவளுடைய பிற்கால வாழ்வு எப்படியாகுமோ என்னவோ” என்று என் நெஞ்சம் கொதிக்கத் தொடங்கியது. ‘நான் கொடுக்கும் ஊக்கத்தின் காரணமாக, ஒரு இளம் பெண்ணின் வாழ்வே அஸ்தமித்து விடுமோ?’ என்று சிந்திக்கத் தொடங்கினேன். வானத்தில் மேகங்கள் வந்து குவிவதுபோல என்மனம் எண்ணங்களினால் நிரம்பியது. 

ஆனால் அடிமை நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு வீராங்கனையாக வரும் சுந்தரியை வேண்டாம் என்று சொல்லவும் மனமில்லை. “நாம் நல்ல எண்ணத்துடன் தான் காரியம் செய்கிறோம். நீரில் கழுவி எடுத்த அரிசி போன்று நமது இதயம் சுத்தமாகத்தான் இருக் கிறது. ஆகையால் அவளால் வருகின்ற எந்தத் துன்பத்தையும் எதிர்த்து நின்று, அவளுக்கு வேண்டிய உதவி செய்து, சமூகத்தின் கோணல் கண்களுக்குப் பயப்படாமல் வேலை செய்ய வேண்டியதுதான் என்று முடிவு கட்டினேன். 


அன்று இரவு எட்டுமணி இருக்கும். ”நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம்” என்று கூறி ‘லாக்-அப்’பைத் திறந்து விட்டார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். 

நான் ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிவிட்டேன். “என்ன வேடிக்கை ஸார், இது!” என்ற வார்த்தைகள் என்னை அறியாமலே வெளியே வந்தன. 

“ஒன்றும் வேடிக்கையில்லை; பின்னால் மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து ‘சம்மன்’ வரும்போது வரலாம். தற்சமயம் வீட்டிற்குப் போங்கள்!” 

அவ்வளவுதான்; ஒரே ஓட்டமாக வீட்டை நோக்கி ஓடினேன். 

விடுதலை பெற்றவனின் உணர்ச்சியை, விடுதலை பெற்றவன் தானே அனுபவிக்க முடியும்? 


மறு தினம் கருப்பையா என் வீட்டிற்கு வந்தான். சுந்தரியின் பதில் கடிதமும் கொண்டு வந்து கொடுத்தான். அதில் எடுத்தவுடன், “அன்பே!” என்று ஆரம்பித்திருந்ததைக் கண்டதும் எனக்கு உண்டான ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. வியப்புடன் கடிதத்தை மேலே படித்தேன். 

தங்களுடைய அருமைக் கடிதம் கிடைத்தது. தாங்கள் எந்த யோசனை சொன்னாலும், அதனால் என்ன ஆபத்து வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்கு மட்டும் தங்கள் இதயத்தில் என்றும் ஓர் இடம் இருக்கவேண்டும். உங்களுடைய பதிலை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன். 

சுந்தரி, 


மேற்படி கடிதத்தைப் படித்து முடிக்கும் வரையில் எனக்கு ஒரே மயக்கமாக இருந்தது. உள்ளத்தில் ஒருவிதமான குளு குளுப்பு உண்டாயிற்று. ஏதோ பெரிய சம்பத்துக் கிடைத்து விட்டதுபோல் பெருமிதம் கொண்டேன். புதிய வேகம் உண்டாயிற்று. சுந்தரிக்கு தேசத்தின்மீது ஏற்பட்ட காதல் திடீரென்று என்மீது ஏற்பட்டுவிடும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு என்மீது உண்டான ‘அளவற்ற காதலை’ கொஞ்சமும் குறைந்து விடாமல் வளர்க்க வேண்டு மென்ற ஆர்வம் அதிகப்பட்டது. ஆகவே என் ஆசைகளையும், அன்பையும், காதலையும் எழுத்தின் மூலம் கடிதத்தில் கொட்டி, அவளை உற்சாகப் படுத்த எண்ணங் கொண்டேன். அதற்காக ‘காதற் கடிதங்கள்’ என்ற ஒரு புத்தகத்தைக் கூடப்படித்து முடித்தேன். நாவல்களில் காதலன் காதலிகள் எப்படிக் கடிதம் எழுதிக் கொள்ளுகிறார்கள் என்பதையும் ஆராய்ந்தேன். சுந்தரிக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் ‘சொற் சித்திரங்களாக’ அமைய வேண்டுமென்று வெகு பாடுபட்டேன். காதல்வேகம் சாமான்யமானதா? ‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம், காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே’ என்று மகாகவி பாரதியார் தெரியாமலா சொல்லியிருக்கிறார்? சுந்தரியின் காதல் என்னைப் பம்பரமாகச் சுற்ற வைத்துவிட்டது. எல்லாம் கடிதம் மூலம்தான். ‘விரைவில்’ நேரில் சந்திப்ப தாகவும் எழுதியிருந்தாள். அவளுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தால் என் பேனா தமிழில் உள்ள அத்தனை அமுத வாசகங்களையும் அள்ளி வீச ஆரம்பித்தது. எனக்கே என் கடிதங்களைப் படிக்கும் போது ஆச்சரிய முண்டாயிற்று! “நாமா இப்படித் தமிழ் எழுதுகிறோம்” என்று வியப்படைந்தேன். கடிதம் என்றால் ஒன்று இரண்டு பக்கம் அல்ல. சுமார் இருபது பக்கத்திற்குக் குறைந்தால் எனக்கும் திருப்தி இருக்காது, சுந்தரிக்கும் திருப்தி உண்டாகாது. 

அவளும் எனக்குச் சளைத்தவளாக இல்லை. ஆகா, அவள் எழுத்துக்கள் என் ஒவ்வொரு அங்கத்தையும் புளகாங்கித மடையச் செய்தது. ஒரு கடிதத்தில் “என் ஆருயிரே!” என்று ஆரம்பித்து உயிரை விட்டிருப்பாள். மற்றொரு கடிதத்தில் “என் செல்வமே!” என்று கொஞ்சியிருப்பாள். வேறொரு கடிதத்தில் “என் கட்டிக் கரும்பே!” என்று இனிக்க இனிக்க எழுதியிருப்பாள். இப்படி யெல்லாம் அவள் எழுத எழுத, நானும் அதற்குத் தகுந்தாற் போல இலக்கியங்களிலிருக்கும் உவமைகளையும், வானத்தி லிருக்கும் சந்திரனையும், பூமியிலிருக்கும் மலர் வகைகளையும், நீரிலிருக்கும் தாமரையையும் கடிதத்தில் கொண்டு வந்து சேர்த்து, சுந்தரியை அழகுவசனங்களால் ஆராதனை செய்து, கற்பனையின் எல்லை யெல்லாம் கடந்து கவிதை மழையே பெய்து சுந்தரியின் இதயத்தைக் குளிர்வித்தேன். இப்படி எங்கள் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. எல்லாம் கருப்பையாவின் மூலம் அடிக்கடி கைமாறிக் கொண்டிருந்த கடிதங்களின் வாயிலாகத்தான்! 

ஒரு நாள் பகல் மூன்று மணி இருக்கும். வழக்கம் போல் கருப்பையா சுந்தரியிடமிருந்து ஒரு கடிதம் கொண்டு வந்தான். கடிதமும் வழக்கத்திற்கு விரோதமாக வெகு சுருக்கமாக இருந்தது. அதில், 

என் அன்பிற்குரிய செல்வமே ! 

எனக்கு ஒரு அவசரத் தேவையை முன்னிட்டு ரூ 250 வேண்டியிருக்கிறது. தங்கள் பொற்கரத்தால் கருப்பையாவிடம் கொடுத்தனுப்பும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். கருப்பையா ரொம்பவும் நம்பிக்கையானவன்; ஒன்றும் யோசிக்க வேண்டாம், விபரம் பின்னர் எழுதுகிறேன். தங்கள் அன்பிற்கு அடிமையான, 

சுந்தரி. 

என்று எழுதியிருந்தது. உடனே என்னுள் ளத்தில் மகிழ்ச்சி இறகு கட்டிக்கொண்டு பறந்து, உல்லாசக் குதி குதித்தது. நம்முடைய காதலிக்கு நாம் உதவி செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைவிட உலகில் வேறு என்ன மகிழ்ச்சியிருக்கிறது? ஆகவே உடனே ரூ 250 எடுத்துக் கருப்பையாவிடம் கொடுத்து, ‘ஓடு, ஓடு! ரொம்ப அவசரம் போலிருக்கிறது!’ என்று சொல்லி விரட்டி விட்டேன். 

மறுபடியும் ஒரு வாரம் நானும் சுந்தரியும் காதல் கடிதங்கள் எழுதிக் குவித்தோம். இப்பொழுதெல்லாம் தமிழ் எனக்குத் தண்ணீர்பட்ட பாடாகப் போய்விட்டது. பேனாவை எடுத்து விட்டால் “பிரமாதம், பிரமாதம்” என்று சொல்லும்படி கற்பனைகளும் கதைகளும் கற்கண்டுத் தமிழாகவே உதிர்ந்தன? பிறகு ஒரு நாள் மறுபடியும் அவசரத் தேவையை முன்னிட்டு ரூ.100 கேட்டு சுந்தரி எழுதியிருந்தாள். அதைப் பார்த்தவுடன் காதல் மயக்கத்தில் ‘கிர்’ என்று சுற்றிக்கொண்டிருந்த என் தலையில், ஒரு கல் ‘நச்’சென்று விழுந்தது. “சுந்தரி நல்ல பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பெண்; இவளுக்குப் பணம் தேவையாக இருந்தால் வீட்டில் கொடுப்பார்களே! அடிக்கடி ஏன் நம்மைக் கேட்க வேண்டும்? அவளிடம் ரூபாய் இல்லாமலா இருக்கும். இதைச் சோதனை செய்துவிட வேண்டும்” என்று எண்ணி, என்னிடம் தற்சமயம் ரூபாய் இல்லை யென்றும், அதற்காக வருந்துவதாகவும் எழுதிவிட்டேன். 

அந்தக் கடிதம் எழுதிய மறுதினம் சென்னைக்கு ஒரு அவசர வேலையாகப் புறப்பட்டு வந்துவிட்டேன். வந்த இரண்டு தினங்களில் சுந்தரிக்கு ஞாபகமாக ஒரு கடிதம் எழுதி, கருப்பையா விலாசத்திற்கு அனுப்பி வைத்தேன். 

என்ன ஆச்சரியம்! அந்தக் கடிதத்திற்கு பதில் சுந்தரி அளவிலாத கோபத்துடன், அவளை நான் ரொம்பவும் ஏமாற்றி, மனதைக் கலைத்து, வஞ் சனை செய்து விட்டதாகவும், அவள் வாழ்க்கையைக் கெடுத்துவிட்ட சண்டாளன் என்றும் ஏக வசனமாக எழுதியிருந்தாள். 

அடடா ! அன்பையே பிழிந்து எழுதிய அந்தக் கடிதங்கள் எங்கே, இப்படி வசவுகளைப் பொழிந்திருக்கிற இந்தக் கடிதமெங்கே? 


சில நாட்களுக்குப் பிறகு, சென்னையில் வேலை முடிந்ததும் ஊருக்குப்போய் சேர்ந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார்; அவரைப் பார்க்கப்போனேன். 

“இதெல்லாம் தங்கள் கடிதங்கள் தானே?” என்று ஒரு கடிதக் கட்டைத் தூக்கி என் முன்னே போட்டார். 

என் உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்து விட்டது. கால்கள் ‘தட தட’ வென்று ஆட ஆரம்பித்தது. 

ஆம்; அதே கடிதங்கள்! அத்தனையும் நான் சுந்தரிக்கு எழுதிய கடிதங்கள் தான்! 

‘நம்முடைய குட்டு இப்படி சந்தி சிரிக்க வெளிப்பட்டு விட்டதே’ என்று அவமானத்தினால் உள்ளம் நிலை தடுமாறியது, ‘இதனால் என்ன நேருமோ?’ என்ற பயம் வேறு உண்டாயிற்று. ஆனால் சமாளித்துக் கொண்டு “இதெல்லாம் எப்படி உங்களிடம் வந்தது?” என்று உளரிக் கொண்டே கேட்டேன். 

நண்பர் பலமாகச் சிரித்தார். என்னுடைய நிலைமை அவருக்குச் சிரிப்பை உண்டாக்கியது போலும்! என்ன கேவலம்! நண்பர் முதுகில் ஒரு தட்டுத் தட்டிக் கொடுத்தார். “ஒன்றும் பயப்படாதீர்கள். ஆபத்து ஒன்றுமில்லை, ஏமார்ந்துதான் போய் விட்டீர்கள்” என்றார். 

எனக்குக் கொஞ்சம் உயிர் வந்தது. “என்ன ஏமார்ந்து போய்விட்டேன்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். 

“வேறு ஒன்றுமில்லை, தங்கள் சுவை ததும்பும் காதல் கடிதங்களுக்கு அன்பு சொட்டச் சொட்ட பதில் எழுதியது ஸ்ரீமதி சுந்தரி அல்ல” என்றார் “என்ன என்ன!” என்று வியப்பினால் கூவினேன். “நண்பரே, அவைகளை எழுதியது என் தம்பிதான்” என்று சொல்லிவிட்டு மேலும் கூறினார்:- “கருப்பையா என்னுடைய வீட்டிலும் பால் கறக்கிறான். அவனுடைய பெட்டி, படுக்கை முதலியவைகள் இங்கே தான் இருந்தன. அவனும், என் தம்பியும் அதோ அந்த அறையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி ஏதோ எழுதிக் கொண்டிருப்பார்கள். என்னமோ எழுதுகிறார்கள் என்று நான் அவர்களைக் கவனிப்பதில்லை. ஒரு நாள் கருப்பையா நிறையப் பணம் வைத்திருப்பதைப் பார்த்தேன். அப்பொழுதும் ‘நமக்கென்ன? நமக்கென்ன?’ என்று சும்மா இருந்துவிட்டேன் மற்றொரு நாள் இந்தக் கடிதக்கட்டு கருப்பையாவின் பெட்டிக் கருகில் கிடந்தது. பிரித்துச் சில கடிதங்களைப் படித்துப் பார்த்ததும், கருப்பையாவைக் கூப்பிட்டு “இந்தக் கடிதங்களெல்லாம் ஏது?”. என்று அதட்டிக் கேட்டேன். அவன் பயந்து போய், இந்தக் கடிதங்களெல்லாம் நீங்கள் தான் எழுதினீர்களென்றும், அவன் என் தம்பியைக் கொண்டு தங்களுக்குப் பதில் கடிதங்கள் எழுதியதாகவும் சொன்னான். அந்தக்ஷணமே அவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டோம்!” என்றார். 

“ஹா ! சுந்தரி,நீ வெறும் கற்பனைச் சுந்தரிதானா?” என்று என் வாய் முணுமுணுத்தது. 

என் நண்பர், “உங்களுக்கு எவ்வளவு ரூபாய் நஷ்டம்?” என்றார். 

“எனக்கு ஒன்றும் நஷ்டமேயில்லை” என்றேன்

“ஏன் ஸார் பொய் சொல்லுகிறீர்கள், நீங்கள் தான் ரூ.250 கொடுத்தது கடிதத்தில் இருக்கிறதே” என்றார். 

உடனே நான் பளிச் சென்று, “ஆமாம் ரூ.250 கொடுத்தது வாஸ்தவம் தான். ஆனால் எனக்கு அது ஒன்றும் நஷ்டமில்லை. அதற்குப் பதில் நான் பெரிய லாபம் அடைந்திருக்கிறேன்” என்றேன். 

“அது எப்படி?” என்றார் அவர். 

“எப்படியா? இப்பொழுது நான் ஒரு பெரிய எழுத்தாளனாகிவிட்டேன் அல்லவா? அது ஒரு பெரிய லாபம் இல்லையா ? கருப்பையாவும் அவன் கிருஷ்டித்த காதலும் இல்லாவிட்டால், நான் எழுத்தாளனாகியிருக்க முடியுமா? இப்பொழுது சொல்லுங்கள் லாபமா நஷ்டமா?” என்றேன். 

“லாபம்தான்” என்று அவரும் ஆமோதித்தார் 


“நார்க்கிளிப், மைக்கேல் ஆர்லன் போன்றவர்களைவிட “எழுத்தாளராவது எப்படி?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு நீங்கள் ரொம்ப ரொம்பத் தகுதியுடையவர்தான்” என்று என்னை மெச்சிக் கொண்டார். இதுவரை கதை கேட்டுக் கொண்டிருந்த எனது இனிய நண்பர்.

– சீனத்துச் சிங்காரி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 1950, தமிழ்ப் பண்ணை லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *