“ஏ ஆதி எங்கே போய் தொலைஞ்ச?” கனகம் எரிச்சலோடு வீட்டு வாசலில் நின்று கத்தினாள்.
முனைஞ்சி மூச்சு வாங்க ஓடி வந்து ” சிம்ஸ் பார்க்கில் பழக் கண்காட்சி பார்த்துட்டு வாரோம். ஆதி அதோ வர்றா”
கனகம் “சும்மா சொல்றா போலன்னு நெனச்சேன். பய புள்ள போயிட்டு வந்துட்டாளா?”
ஆதிரா வீட்டு நடையில் வந்து உட்கார்ந்தாள். கனகம் அவள்
மண்டையில் தட்டி “வயசுப் புள்ள இப்படி சுத்திக்கிட்டு திரிஞ்சா என்னடி அர்த்தம்?”
ஆதிரா “வயசுப் புள்ளைன்னா நம்ம இஷ்டப்படி இருக்கப்படாதா? நீ கட்டுப்பாடு போடப் போட அதை மீறணும்னு ஒரு ஆசை வருது.”
கனகம் “வரும். கொழுப்பு அதிகமா இருந்தா ஆசை வரும். உன் அக்கா, தம்பி எல்லாரும் சொன்னா கேப்பாங்க. நீ மட்டும் தான் அடங்கா குதிரையாட்டம் அலையற. உன்னை அடக்க ஒரு வழியிருக்கு.”
ஆதிரா “எனக்கு கல்யாணம் பண்ணப் போறீயா?”
“ஆசைதான். இப்பதான் உன் அக்காவை கட்டிக் கொடுத்து நிமிரலை. அதுக்குள்ள உன் கல்யாணமா? நான் சொல்ல வந்தது அது இல்லே. தேயிலை எஸ்டேட்டில் உன்னை வேலையில் மாட்டிவிடணும்.”
ஆதிரா “நான் டிகிரி படிச்சிருக்கேன் அதுக்கு ஏத்த வேலைன்னாதான் போவேன். நீ சொன்னதுக்காக எல்லாம் நான் போக முடியாது.”
இரவு கனகம் தன் கணவர் பாலுவிடம் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
ஆதிராவும் அவள் தம்பி ரகுவும் உள் ரூமில் பாயில் படுத்திருந்தனர். ரகு எட்டு படிக்கிறான். ஆதிரா என்றால் அவனுக்கு உயிர்.
கனகம் ” இன்னிக்கு உங்க மக சிம்ஸ் பார்க்கிற்கு போயி பழக் கண்காட்சி பார்த்துட்டு வந்துருக்கா.”
“நல்லாருந்துதாமா?”
“இவ போக்கு நல்லாயில்லேன்னு சொல்றேன்.”
“ஏன் அப்படி சொல்றே?”
“வயசுப் பொண்ணு சின்ன பசங்க கூட சேர்ந்து ஊர் சுத்தறது நல்லாவா இருக்கு? ஊரும் கெட்டு கெடக்கு. உங்க தேயிலை ஃபாக்ட்ரியில ஏதாவது வேலை வாங்கி கொடுங்க. அப்பதான் அடங்குவா. ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கிறவரை வேலைக்கு போயிட்டு வரட்டும்.”
“தேயிலை பேக்கேஜிங்கில் வேலை இருக்குன்னு மானேஜர் சொன்னாரு கேட்கிறேன்.”
கனகம் “இந்த மகாராணி டிகிரி படிச்சிருக்கிறதாலே ஆபீஸ்குள்ளதான் வேலை பார்ப்பாளாம்.”
பாலு சிரித்து “இதுல கண்டீஷன் வேறயா? பார்ப்போம்.” என்று சாப்பிட்டு முடித்தார்.
மறுநாள் காலை பாலு எழுந்து குளித்து முடித்து ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த போது ஆதிரா தண்ணீர் குடத்துடன் உள்ளே நுழைந்தாள்.
கனகம் “தெரு முனையில பைப்புல தண்ணி புடிச்சுட்டு வர இவ்வளவு நேரமா?”
ஆதிரா அங்கிருந்த கேரட்டை எடுத்து கடித்தபடி ” அங்க போயி பாரு எவ்வளவு ஜனம் நிற்கிறாங்கன்னு. போன உடனே புடிச்சுட்டு வர நம்ம தாத்தா வீட்டு குழாயா?”
கனகம் ” இப்படித் தான் எதுக்கு எடுத்தாலும் வியாக்கியானம் பேசறே. பொம்பளை புள்ளையா லட்சணமா இரு.”
ஆதிரா “என்னை ஆம்பளை மாதிரி தைரியமா வளத்துட்டு இப்ப அடக்க ஒடுக்கமா இருன்னா என்ன அர்த்தம்? அன்னிக்கு முனைஞ்சி வீடு நீ பிடிச்சப்ப நான்தான் வீட்டுக்குள்ள ஓடி புள்ளைங்கள தூக்கிட்டு வந்தேன்.எத்தனை ஆம்பளைங்க நின்னாங்க நான்தானே போனேன். அப்ப என்னை எல்லாரும் பாராட்டி பேசும்போது ஈன்னு சிரிச்சுகிட்டு எம் மக எம்மகன்னு சொன்னே.”
பாலு சிரித்தபடி சாப்பிட அமர்ந்தார். கனகம் “மக பேசறது கேட்டு அத்தனை பூரிப்பா?! அவ வாயை அடக்கி வையுங்க. போற இடத்துல வாயாடி அடங்காப் பிடாரின்னு பேரு எடுத்தா நம்ம மானம் போயிடும்.”
ஆதிரா “நல்லவங்களுக்கு நல்லவ நான். தப்புன்னு மனசுல பட்டால் சட்டுன்னு சொல்லுவேன். அது யாராக இருந்தாலும் சரிதான். அதுக்கு வாயாடி அடங்காபிடாரின்னு பேர் கிடைச்சா பரவாயில்லை.”
கனகம் “பாத்தீங்களா பாத்தீங்களா சொன்னா எதையும் கேட்கிறதில்லே. எதிர்வாதம் பேசியே பொழுது போகுது. சீக்கிரம் உங்க எஸ்டேட்டில் ஒரு வேலையை வாங்கி கொடுங்க. சம்பளம் கிடைக்குமேன்னு சொல்லலை. ஒருநாள் பொழுது இவளுக்கு வேலை வேலைன்னு போனால்தான் வாயை மூடுவா.”
பாலு “வேலைக்குப் போறீயாடா?”
ஆதிரா “போறேம்பா. ஆனா எஸ்டேட் ஆபீஸில்தான் வேலை பார்ப்பேன். ஃபாக்ட்ரியில் வேலை பார்க்கமாட்டேன். ஐ யாம் பி.காம்.”
பாலு சாப்பிட்டு கையைக் கழுவியபடி “மானேஜரிடம் கேட்கிறேன்.” என்று ஆபீஸிற்குப் புறப்பட்டார்.
பார்வே டீ எஸ்டேட் . பெரிய பெரிய மெட்டல் எழுத்துக்கள் ஒளிர்ந்தது. பெரிய ஹால் இரு பக்கமும் டேபிள்களில் கம்ப்யூட்டர் , ஃபைல்கள் ரிவால்விங் சேர்களில் ஆபீஸ் ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். Managing Director என்ற பித்தளை எழுத்து பொருத்திய மரக் கதவை தள்ளித் திறந்து உள்ளே போனால் அரை வட்டமான பெரிய டேபிள் அதில் ஃபைல்கள், கம்ப்யூட்டர், கலர் கலராய் டெலிபோன்கள். குஷன் வைத்த பெரிய ரிவால்விங் சேர். அதில் சாய்ந்து உட்கார்ந்து தன் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான் தீபக். அவன் பின்னே மார்பிள் சுவற்றில் பார்த்தசாரதியின் மார்பு வரை உள்ள படம் சந்தன மாலையில் தொங்கியது. ஏஸி அறையெங்கும் குளிரை மெலிதாக பரப்பிக் கொண்டிருந்தது.பார்த்தசாரதியிலுள்ள பார் என்ற சொல்லும் வேதவல்லி பெயரிலிருந்து வே என்ற எழுத்தும் ஒன்று சேர்ந்துதான் பார்வே என்று டீ எஸ்டேட்டிற்கு பெயரானது.
“மே ஐ கமின் ஸார்” எனக் கதவைத் தட்டி நின்ற மானேஜர் சுந்தரத்தை “எஸ் கமின்” தீபக். சுந்தரம் சஃபாரி டிரஸில், தங்க ஃபிரேம் மூக்கு கண்ணாடி, தூக்கி வாரிய கேசம், நெற்றியில் புருவங்களுக்கு இடையே குங்குமப் பொட்டு. வலது கையில் தங்க பிரேஸ்லெட் இடது கையில் தங்க முலாம் பூசப்பட்ட வாட்ச் வலது கை மோதிர விரலில் நவரத்தின கற்கள் பதித்த மோதிரம். பெர்ஃப்யூம் அறை முழுதும் பரவ வந்தவரை “டேக் யுவர் சீட்” தீபக் “தேங்க்யூ ஸார். குட்மார்னிங்” அமர்ந்தார்.
தீபக் புன்னகையுடன் “குட்மார்னிங்.”
“உங்க ஃபாரின் டிரிப் எல்லாம் முடிஞ்சதா ஸார். படிப்பு முடியுதுன்னு அம்மா சொன்னாங்க.”
தீபக் புன்னகையுடன் “எஸ் முடிஞ்சாச்சு. ஆபீஸிலும் பொறுப்பை ஒப்புக் கொண்டாச்சு. எப்படி இருக்கு நம்ம பிஸினெஸ்?”
மானேஜர் சிரித்து” நல்லாருக்கு பிஸினெஸ்.”
தீபக் “ஆனா புரடக்சனுக்கும் டெலிவரி குவாண்டிட்டிக்கும் ஏதோ மிஸ்டேக் இருக்காமே. அம்மா உங்ககிட்ட பேசினதுக்கு நீங்க சரியா பதில் சொல்லலைன்னு சொன்னாங்களே.”
மானேஜர் “ஆமா. இதில் உங்க மாமா தலையிட்டுருக்காங்க. நான் என்ன பண்ண முடியும்? நான் என்ன கேட்டாலும் நான் பாத்துப்பேன். நீங்க உங்க வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டாரு.”
தீபக் “ஓகே அவுட்லெட் ஸ்டோரில் அக்கவுண்ட்ஸ் சரியா இருக்கா?”
“அதுவும் உங்க மாமா பையன் ஷாம்தான் பார்த்துக்கிறாரு.”
“உடனே அவுட்லெட் ஸ்டோருக்கு அக்கவுண்ட் தெரிஞ்ச ஏஜுடு பர்ஸனை அப்பாயிண்ட் பண்ணுங்க. கூடவே ஸ்டோரை மானேஜ் பண்ண ஆள் அப்பாயிண்ட் பண்ணுங்க. ஷாம் வெதரிங் ப்ராஸஸை கவனிக்கட்டும். இதை ஆர்டரா அடிச்சு கொண்டு வரச் சொல்லுங்க.”
சுந்தரம் முகத்தில் மகிழ்ச்சியோடு “அதிரடி முடிவு. உடனே பண்ணச் சொல்றேன் அப்பிடியே ஒரு விஷயம்” என்றார் பணிவாக.
தீபக் நிமிர்ந்து பார்த்து “என் நல்ல நண்பர் சிவகுரு. ரிட்டையர்டு போஸ்ட்மாஸ்டர். நாணயமான மனுஷன். ஒரு முறை அவரை வரச் சொல்றேன். பாருங்க. உங்களுக்கு ஓகேன்னா அவரை ஸ்டோர் அக்கவுண்டண்டாக நியமிக்கலாம்.”
தீபக் “நாளைக்கு வரச் சொல்லுங்க.”
“தேங்க்யூ. இப்ப ஆபீஸில் நுழைந்த போது நம்ம ஃபாக்ட்ரி சுபர்வைசர் பாலு வந்தார். அவர் மகள் பி.காம் படிச்சிருக்காம். அவளுக்கு ஏதாவது வேலை ஆபீஸில் இருக்கான்னு கேட்டார். அந்தப் பெண்ணை ஸ்டோர் மானேஜ் பண்ண போட்டிலாமா?”
தீபக் “எனக்கு பெண்கள் மேல் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் கிடையாது. வேற ஆள் கிடைக்கிற வரைக்கும் வேணும் என்றால் யூஸ் பண்ணிக்கலாம்.”
மானேஜர் “நாளைக்கு ரெண்டு பேரையும் வரச் சொல்லட்டுமா?”
தீபக்கின் போன் ஒலிக்க அதை எடுத்து ஆன் பண்ணி படி “வரச் சொல்லுங்க” என்று போனை காதில் வைத்தான். மானேஜர் சைகையில் உத்தரவு வாங்க தீபக் தலையாட்டி போகலாம் என்று விடை கொடுத்தான்.
– தொடரும்…