“ இன்னக்கி எப்படியாவது லவ்வ சொல்லிடனும். நம்ம ராசிக்கு இன்னக்கி வெற்றி. கண்டிப்பா வெற்றி தான் “ இப்படி காலண்டர்ல வெற்றி சுபம்லாம் பாத்துட்டு முச்சந்தில நிக்கறது போன ஆறு மாசத்துல பன்னெண்டாவது தடவ. இத முச்சந்தினும் சொல்லிட முடியாது. காலேஜ் கேம்பஸ் தான். Y மாதிரி ஓரு பக்கம் லேடீஸ் ஹாஸ்டல். ஒரு பக்கம் காலேஜ். இன்னொரு பக்கம் வெளிய போற வழி. வெளிய போற வழினா மெயின் கேட் கிடையாது. அதுக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளி போகணும். இது ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் போற சுத்து கேட். ஆனா எல்லோரும் இத தான் மெயின் கேட்டா யூஸ் பண்றோம்.
இந்த இடத்துல நின்னு வெயிட் பண்றதுக்கும் காரணம் இருக்கு. எப்படியும் காலேஜ் முடிச்சிட்டு ஹாஸ்டல் போறதானாலும் சரி இல்ல வெளிய கடைக்கு போறதானாலும் சரி இந்த வழியாதான் போயாகனும். அதான் இங்கயே டெண்ட போட்டுட்டேன். அது மட்டும் இல்லாம நா அவள முதமுதலா பாத்ததும் இங்க தான்.
செகண்ட் இயர் பசங்க இங்க நின்னுகிட்டு போற வர்ற பர்ஸ்ட் இயர் பொண்ணுங்கள ராகிங் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அதுலயும் அந்த ரமேஷ் இருக்கானே. எப்பா!! எமகாதகன். பர்ஸ்ட் இயர்ல என்னலாம் அனுபவிச்சனோ எல்லாத்தையும் அவங்க ஜூனியர்ஸ செய்ய சொல்லுவான். யாராவது மீறி கேட்டா “ போன வருஷம் நீங்க பண்ணீங்களே. நாங்க செய்யலையா? இப்ப மட்டும் என்ன சப்போர்ட்டு? உங்க வேலைய போயி பாருங்க. தேவையில்லாம இயர் ப்ராப்ளம் வரும்” பான். பொதுவா எல்லோருமே அப்படி தான். சீனியர் ஆன இளம் ரத்தம் கொதிக்கும். அந்த கொதிப்புல இப்படி பண்ணுவாங்க. அந்த கொதிப்பு அடங்க ஆறு மாசம் ஆகும். ஒரு சில ஹிட்லர்கெல்லாம் வருஷம் போனாலும் அடங்காது. இந்த பர்ஸ்ட் இயர் பசங்கள காப்பத்தறதே எங்கள மாதிரி தர்ட் இயரோட வேலை. அதனால தான் எப்பவுமே பர்ஸ்ட் இயரும், தர்ட் இயரும் பிரண்ட்ஸா இருப்பாங்க. செகண்ட் இயரும், பைனல் இயரும் பிரண்ட்ஸா இருப்பாங்க. எதிரிக்கு எதிரி நண்பன்கிற பாலிசி.
காலையில காலேஜ்க்கு வந்து ரெண்டு அவர் அட்டனன்ஸ் போட்டாச்சு. அப்டியே செட்டியார் கடையிலும் அட்டனன்ஸ் போட்டு வந்துடலாம்னு போயிகிட்டு இருந்தேன். அப்போ தான்
“ உம் பேரு என்ன? “ இது ரமேஷ்
“ கவிதா சார் “
எங்க காலேஜ்ல சீனியர எப்பவுமே சார் போட்டு தான் கூப்பிடனும். அண்ணானோ, பேரு சொல்லியோ கூப்பிட கூடாது. இது எழுதப்படாத விதி
“என்ன ஊரு ?”
“ சென்னை சார் “
“ சென்னைனா என்ன ஊரு? பஸ் ஸ்டாண்டுக்கு கீழவே குடி இருக்கீங்களா ?”
“ பூந்தமல்லி சார் “
“ அதான, மருவத்துர்ல இருக்கறவ கூட சென்னைனு பீத்திகிராளுவோ “
“ டேய், தம்பி “ அவன நா தம்பின்னு தான் கூப்டுவேன். அவன் என்ன பாக்கும்போது ரெண்டு விரல V மாதிரி நீட்டி உதட்டு மேல வச்சி எடுத்தேன். இந்த சைகை எல்லா காலேஜ் பசங்களுக்கும் புரியும்
“ இன்னக்கி உங்களுக்கு நேரம் நல்லா இருக்கு போங்கடி. எப்படியும் இங்க தான இருப்பீங்க. பாத்துக்கறேன் “
அவ்வளவு தான். அவங்க ரிலீஸ் ஆயிட்டாங்க. எனக்கு எப்பவும் மணிக்கு ஒரு தடவையாவது கடைக்கு போயி தம் போடணும். ஒரு கம்பெனிக்கு இவனா கூப்டேன். நா எதோ அவள காப்பாத்த வந்த கண்ணனு நெனச்சிட்டா போல. அதுல இருந்து எப்ப எங்க பாத்தாலும் தலைய குனிஞ்சிகிட்டு ஒரு சிரிப்பு. எனக்கும் அது புடிச்சிருந்துச்சு. நம்ம பதினாலு வருஷ படிப்பு வாழ்க்கையில நம்மளையும் பாத்து ஒருத்தி சிரிக்கிறானா பெருமையா இருக்காதா? பதிலுக்கு நானும் சிரிச்சு வச்சேன்.
இது போதாதா எரியற கொள்ளியில எண்ணைய ஊத்த. அப்படி தான் ஊத்துனான் கணேசன். திருநெல்வேலி பையன். அதாவது திருநெல்வேலில இருந்து நாலு மணி நேரம் பஸ்ல போயிட்டு அப்புறம் ஒரு மணி நேரம் நடந்து போன இவங்க ஊரு வரும். பூந்தமல்லி எப்படி சென்னை ஆச்சோ அந்த மாதிரி இவரு திருநெல்வேலி. ஆரம்பம் காலம் தொட்டே என் ரூம் மேட். குளோஸ் பிரண்ட்.
“ என்ன மாப்ள, சிக்கிடுச்சு போல “
“ என்ன சிக்கிடுச்சு, அது ஏதோ லூசு மாறி சிரிச்சுட்டு போவுது, நீ வேற “
“ லூசு தான் கரெக்ட்டா உன்ன மட்டும் பாத்து சிரிக்குதாக்கும். எல்லாம் தெரியும. உன்ன நம்பி இருக்கு மச்சான் கை விட்டுடாத“
“ யார்றா இவன் ஒருத்தன். மச்சி, காலேஜ் வந்தோமா ரெண்டு அவர் அட்டனன்ஸ் குடுதோமா, போயி குடிச்சோமானு இருக்கணும். போயி தியாகு, டிங்கா(லிங்கராஜ) வர சொல்லு. அரியூர் கேட் போலாம்” அதான் நாங்க ரெகுலரா போற டாஸ்மாக். அங்க போனாலும் கம்னு குடிக்க மாட்டாங்க. குடிச்சுட்டு இதையே தான் பேசுவாங்க. அதுவும் மூணு பேரு சேந்தா வேற டாபிக் கூட மாத்த மாட்டங்க. புடிக்கலன்னு சொன்னாலும் அந்த பேச்சு கேட்க எனக்கு புடிச்சிருந்துச்சு. எனக்கு அந்த பொண்ண புடிச்சுருந்துச்சா, இல்ல என்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுதுன்னு புடிச்சுதானு தெரியல. இவங்க பேச பேச என் மனுசு முழுக்க அவ நிரந்சிருந்தா. அவ மட்டும் தான்
ஒரு நாள் கனேசன்கிட்ட எனக்கு அந்த பொண்ண புடிச்ருக்குடா, எப்புடி சொல்றதுன்னு தெரியலன்னு சொன்னேன். அவன் தான் இந்த இடத்துல நின்னு சொல்லுனு ஐடியா குடுத்தான். அதான் நின்னுகிட்டு இருக்கேன். எப்பவும் ஒரு மணிக்கு சாப்ட வருவா. அந்த நேரம் சொல்லிட வேண்டியது தான். செட்டியார் கடைல மூணு பேரும் வெயிட்டிங். வெற்றினாலும், தோல்வினாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல அரியூர் கேட் தான். இதோ வந்துட்டா. என் கவிதா. ஆஹா..அவள் பெயர் மட்டும் இல்லை. நடையும் கவிதை தான். இத அப்டியே சொல்லிடலாமா? கிட்ட வந்துட்டாளே. எனக்கு ஏன் பாக்கு போட்டு தண்ணி குடிக்காத மாதிரி தொண்ட அடைக்குது. கை கால் எல்லாம் நடுக்கம். உள்ளங்கால்ல இருந்து உயிர் நாடி வரைக்கும் கூசுது. முகமெல்லாம் வேர்க்குது. எப்படியாவது சொல்லிடுறா, டேய்… அவ ஹாஸ்டலுக்கே போயிட்டா. கொஞ்ச நேரத்துல நடந்ததெல்லாம் கனவு மாதிரி ஆயிடுச்சு. ச்சே.
“ என்ன மச்சான், இன்னைக்கும் ஊத்திகிச்சா “ டிங்கா
“ ஆமா, இவன் ஒரு ஆளுன்னு இவன் இடியாவ போயி கேட்ட பாரு, நான் குடுக்கரண்டா ஐடியா “ தியாகு.
அவன் குடுத்த ஐடியாவுல சின்ன கரெக்சன் பண்ணி குடுப்பான். எதுக்கும் கேட்டு பாப்போம்.
“ மச்சி, நம்ம கிளாஸ்ல ரவி இருக்கானே தெரியும்ல “
“ ஆமா, குருவி ரவி “
குருவினதும் அவன விஜய் மாதிரி இருப்பான்னு நினைக்காதீங்க. அவனுக்கு மொட்ட அடிச்சா அவன் மொத்த தலையும் குருவி தல சைஸ் தான் வரும்.
“ அவன் பிரண்டோட தங்கச்சி தான்டா அவ “
“ ஏய் “
“ சரி, அவங்க, அவங்கிட்ட ஹெல்ப் கேட்கலாம் மச்சி “
“ அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்டலாம் எப்படிடா மச்சான் கேட்கறது? “
“ நமக்கு காரியம் ஆகணும் மச்சி, அவ்ளோ தான். உன்ன என்ன அவன் கூட குடும்பமா நடத்த சொல்றேன். சும்மா மச்சானு ரெண்டு தடவ கூப்ட போற. அவ்ளோ தான. செட் ஆனதும் கழட்டி விட்டுடு “
கசப்பு மருந்துனாலும் உடம்பு சரியில்லனா குடிக்கரதில்லயா, அப்படி அவன் கூட பேச ஆரமிச்சேன். அவனும் நல்ல நல்ல யோசனை சொல்றான். அவங்க வீட்ட பத்தி, ஆளுங்கள பத்தி, குறிப்பா அவ ஸ்கூல் பத்தி…கேட்க கேட்க அவ மேல எனக்கு இன்னும் லவ் அதிகமாயிட்டே போகுது.
ஒரு சனி ஞாயிறுல நானும் ரவி கூட கிளம்பி அவங்க வீட்டுக்கு போனேன். அப்படியே அவ வீட்டையும் பாக்கலாமேனு. மத்தவங்களுக்கு அது வீடு. எனக்கு என் தேவதை இருக்கும் கோவில், கவிதை தொகுப்பு உள்ள நூலகம். லீவு முடிஞ்சி காலேஜ் வரும் போது நா, ரவி, அதிசயமாக கவிதா. அவள எப்பவும் வேலை வெட்டி இல்லாத அவ பெரிய அண்ணன் தான் வந்து விட்டுட்டு வருவான். இந்த தடவ தனியா வந்துருந்தா. அவ அப்பா ரவிய பாத்து பேசிட்டு போனாரு. என்ன பெருசா சொல்லிட போறாரு. பொண்ண பத்திரமா கூப்டு போனு தான். மாமன் நா இருக்கும் போது ஏன் இவன் கிட்ட வந்து சொலிட்டு போறான். இருக்கட்டும். ஓ கே ஆனதும் முதல்ல இவன கழட்டி விடனும்.
நாலு மணி நேரம் பயணம். எனக்கு பஸ்ல அவ மட்டும் தான் தெரிஞ்சா. அவளையே பாத்துகிட்டே பயணம் முடிஞ்சுது. நாலு மணி என்ன நாப்பது மணி நேரம் கூட அவள பாத்துகிட்டே இருக்கலாம். அப்டி முகத்துல ஆயிரம் சேட்டைகள் பண்ணுவா. அது மட்டுமில்லாம குருவி கிட்ட நமக்கு பேச விசயமும் இல்ல. அதான்
பயணம் முடிந்தது. நேர ஒரு ஜூஸ் கடைக்கு மூணு பேரும் போனோம். நா மனசுல தைரியத்த வர வச்சிக்கிட்டு
“ காலேஜ் எல்லாம் புடிச்சிருக்கா “
“ புடிச்சிருக்கு சார் “ அவள்
சில சம்பிரதாய கேள்விகள கேட்டு, என்ன பேசறதுன்னு தெரியல. விசயமும் இல்ல. சரி ஆரமிப்போம்.
“ என்ன புடிச்சிருக்கா “
அவள் மிரண்டு போயி என்னையும் குருவியையும் மாறி மாறி பார்த்தாள். நா அவளுக்கு பேச இடமே குடுக்கல.
“ எனக்கு உன்ன ரொம்ப புடிச்ருக்கு. உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆச படறேன். உன் கூட சந்தோசமா வாழனும். யோசிச்சு சொல்லு ” னு சொல்லிட்டு வேகமா கெளம்பிட்டேன்.
எப்படியும் அவனுக்கு செம டோஸ் விழுந்துருக்கும். ரெண்டு நாள் கழிச்சு போனா “ எனக்கு லவெல்லாம் புடிக்காது “ங்கறா. அடுத்த அட்டெம்ப்ட் “ எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க “ ஒரு வாரம் கழிச்சு “ எங்க வீட்ல முறையா கேளுங்க, அவங்களுக்கு ஓகேனா, எனக்கும் ஓகே. என்னால வீட்ட விட்டு வர முடியாது “ என்ற நிபந்தனையுடன் தீர்மானம் நிறைவானது.
எல்லா வாரமும் நானே அவள கொண்டு போயி ஊருக்கு கூப்டு போயி விடறது. மறுபடி கூப்டு வர்றது. எல்லாம் நான் தான். இரவு நேர பேருந்து பயணம் எனக்கானது. இரவு முழுவதும் என் தோள் மீது சாய்ந்து பேசிக்கொண்டே இருப்பா. அவ வளத்த நாய் செத்தது, சமஞ்சது, சமைச்சது, அண்ணனோட லவ்வுக்கு தூது போனது, எல்லாம் சொல்லிக்கிட்டு வருவா. நா வெறும் உம் மட்டும் தான்.
அவ அண்ணன் கல்யாணத்துக்கு கூப்டா. மச்சான்கர முறைல போயி தான ஆகணும். என்னக்கி இருந்தாலும் அவன் தான என் மச்சான். கடன உடன வாங்கி அர பவுன்ல ஒரு மோதிரம் எடுத்துகிட்டு போனேன். என்ன யாருனே தெரியலனாலும் மோதிரத்துக்கு எல்லோரும் போஸ் குடுத்தோம். மாப்பிள்ளை பக்கத்துல நா, பொண்ணு பக்கத்துல அவ. அங்க தான் சனி வேல செஞ்சது. சுற்றமும் நட்பும் சூழ இருந்த அவங்க அப்பகிட்ட போயி
“ உங்க பொண்ணும் நானும் ரெண்டு வருசமா லவ் பண்றோம். எனக்கு உங்க பொண்ண கட்டி குடுங்க “னு சொன்னது தான். சாப்ட கூட இல்ல. அப்டியே பஸ் ஏத்தி விட்டுட்டாங்க. அர பவுன் நஷ்டம். அப்புறம் அவ காலேஜ்க்கும் வரலன்னு ரமேஷ் சொன்னான்.
குருவியவும் காண்டக்ட் பண்ண முடியல. நானும் அவ ஊருக்கு போயி தேடி பாத்துட்டேன். பிரண்ட்ஸ்கிட்ட விசாரிசிட்டேன். ரெண்டு வருஷம் ஓடி போயிடுச்சு.
மனசுல அவளையும் மூளைல இன்னக்கி என்ன வொர்க்லாம் பெண்டிங்னு யோசிச்சிகிட்டே சீட்ல உக்காந்து பிசிய ஆன் பன்னேன். ரிசப்ஷன்ல இருந்து கால்.
“ சார் உங்களுக்கு கொரியர் வந்துருக்கு “
இது ஒன்னும் புதுசு இல்ல. மாசத்துக்கு ரெண்டு கிரடிட் கார்ட் பில், அக்கவுன்ட் ஸ்டேட்மெண்ட், தவிர்க்க முடியாத சில கம்பெனிசேல்ஸ் கார்டு வரும்.
“ சார், இதுல எல்லாம் கொஞ்சம் சயின் பண்ணுங்க, மொத்தம் நாலு கவர்”
“ ஓகே, எனக்கு ரெண்டு கால் வரும், எனக்கு டிவேர்ட் பண்ணுங்க”
“ சார், உங்களுக்கு ஒரு இன்விட்டேஷன் வந்துருக்கு”
முதன் முதலா கம்பெனி அட்ரஸ்க்கு இன்விடஷன் வந்துருக்கு. கையெழுத்து போட்டு வாங்கி பாத்தேன். நல்ல மாடல். திறந்து பார்த்தேன். மணமகன் : ரவிகுமார் மணமகள் : கவிதா.
good start …… mr.writer. i appricieate the style wrote the story . there some sentence y can make short conversastion, its even better u can input the boys sign laungages as well .. overr all , கலகிடிங்க , வினோத் குமார் .வாழ்த்துக்கள் .
முதல் கதையென்றே நம்பமுடியவில்லை. எழுத்து நடையில் ஒரு நேர்த்தியும் கதையில் ஒரு தெளிவும் உள்ளது. மேலும் தொடர வாழ்த்துகள்.
மக்களே..ப்ப்பா .இப்டி ஒரு எழுத்தாளன் தமிழ் நாட்ல இத்தினி நாளா எங்கப்பா இருந்தான்…அவன உடாதின்கப்பா
அடுத்த படைப்புக்காக ஏங்கி காத்திருக்கும் வாசகர்களில் ஒருவன்
IF YOU COMPLETE BA PLS DONT READ THE , LKG , UKG , BOOKS THERE IS NO RULES IN THE TERMS OF LEARNING , IF YOU BOOKER , JUS READ IT ,AND EXPLORE YOUR THOUGHT AND GIVE FEED BACK . IF DONT LIKE JUS IGNORE , BECAUSE UR STILL UR READER ,
அய்யோயோ …இன்னாடா பாவிங்களா.. .செம கதைப்பா.. புது எழுத்தாளரா இருக்காரு…ஆனா பின்றாரு…அதுவும் தமிழு என் தமிழ் மாதிரியே சூப்பரா இருக்குது…
வாழ்த்துக்கள் நண்பர் வினோத்.