இளவரசி காதல்
தன்னோட ஒரே மகன்… வருங்கால பட்டத்து இளவரசனாகப் போறவன்… ஒரு ஏழைப் பொண்ணை கல்யாணம் முடிச்சுக்கிட ஆசைப்படுறான்னு கேள்விப்பட்டதும் மன்னர் மகேந்திரர் திகிலடிச்சுப் போய்ட்டாரு. மகன் பிரபுவைப் பத்தியும், அவன் கல்யாணத்தை எப்பிடியெல்லாம் நடத்தணும்கிறதைப் பத்தியும் ஏகப்பட்ட கனவு கண்டிருந்தாரு. அவனுக்குப் பொண்ணு எடுக்க பெரிய பெரிய நாடுகளோட இளவரசிகளையெல்லாம் மனசுக்குள்ள நினைச்சு வெச்சிருந்தாரு. ஆனா, எல்லாமே பொய்யாப் போயிடுச்சேனு மனசொடிஞ்சு போய்ட்டாரு.
‘மகனோட காதல் பொய்யா இருக்கக் கூடாதா’ங்கற நப்பாசையில தன்னோட அந்தரங்க வேலைக்காரனை கூப்பிட்டு இதைப் பத்தி விசாரிச்சாரு. ஆனா, வேலைக்காரன் தெளிவா சொல்லிட்டான்.
‘‘அரசே! அந்தப் பொண்ணோட பேரு மரகதம். அவளோட அப்பா, நகை செய்ற தொழிலாளி. அதுல சரியான வரும்படி இல்லைங்கறதால அந்தப் பொண்ணு மலைக்கு தரகு அறுக்கப் போறா’’னு அவன் சொல்லவும், ராசா கொதிச்சுப் போய்ட்டாரு. ‘இப்பவே போயி அந்த மரகதத்தோட தலையை சீவிடணும்’னு துடிச்சாரு. ஆனா, அப்பிடிச் செஞ்சுபுட்டா மகனுக்கு ஆத்திரம்தான அதிகமாகும்னு நெனைச்சி, உலைப்பானை மாதிரி கொதிச்சுக் கெடக்கற மனசை குளிர வைக்குறதுக்காக அருவிக்குக் குளிக்கப் போனாரு.
மலையிலருந்து வேகமா வர்ற அருவி, பாறையில விழுந்து செதறுற அழகைப் பார்த்துப் பூரிச்ச ராசாவுக்கு, திடீர்னு ஒரு யோசனை வந்தது. உடனே அவரு மரகதத்தோட அப்பா பசுபதியை வரவழைச்சாரு. அவரு வந்ததும் ‘‘நீ எப்படி பண்ணுவியோ தெரியாது. இன்னிக்கு பொழுது சாயறதுக்குள்ள பாறையில தெறிச்சி விழற தண்ணி யில ஒரு மாலை செஞ்சு கொண்டு வரணும். அப்படி வரலேன்னா உங்க குடும்பத்துல இருக்கற எல்லாரோட தலையையும் வெட்டிருவேன்’’னு அதிகாரமா சொல்லவும், மரகதத்தோட அய்யா அரண்டு போய்ட்டாரு.
‘தண்ணியில நகை செய்றதா? இது ஆகுற காரியமா? ஆனாலும், முடியாதுனு சொல்ல முடியாதே. இது ராஜாவோட ஆக்கினை (கட்டளை). அவர் சொன்னபடி நாம செய்யலைனா, நம்ம குடும்பத்துல இருக்கற எல்லாரையும் கொன்னு போட்டுருவாரே. அவரு கையால சாவுறதைவிட நம்மளே பொண்டாட்டி புள்ளையோட தற்கொலை செஞ்சிக்கிடுவோம்’னு முடிவெடுத்து, வீட்டு உத்தரத்துல கயித்தைக் கட்டித் தொங்க விட்டாரு, பசுபதி. சரியா கயித்துக்குள்ள தலையை கொடுக்குற நேரம், அவரோட பொண்டாட்டி லட்சுமி ஓடியாந்து காலைப் பிடிச்சுக்கிட்டா.
பசுபதி தன்னோட காலை அவகிட்டருந்து விடுவிச்சுக்கிட்டு, ‘‘இந்தா பாரு லச்சுமி, சாவுறதுக்கு ஒனக்கு பயமா இருந்தா என்னைய சாக விடு. நானு ராசா கையால சாக விரும்பல’’னு சொன்னதும், லட்சுமி விக்கி விக்கி அழுதா.
‘‘என்ன இப்படி பேசுதீரு. உம்ம சாவக் கொடுத்துட்டு நானு உசுரோட இருப்பேன்னா நெனைக்கீரு. அப்படி ஒரு வாழ்க்க எனக்கு வேணாம். ஆனா, நம்ம ரெண்டு பேரும் சாவுறதுக்கு முன்னால மலைக்கு தரவு அறுக்கப் போன நம்ம மக வந்துரட்டும். அவ முகத்தை கடைசியா ஒருக்கா பார்த்துட்டு செத்துப் போவோம்’’னதும், பசுபதி சமாதானமாகி, கயித்துக்குள்ள கொடுத்திருந்த தலையை விடுவிச்சாரு.
பொழுது மேற்க சாய்ஞ்சுடுச்சு. இன்னும் மரகதம் வரல. ‘மக இப்ப வந்துருவா, இன்னும் செத்த சென்னு வந்துருவா’னு வழியைப் பார்த்துப் பார்த்து பசுபதிக்கும், லட்சுமிக்கும் கண்ணே பூத்துடுச்சு. ‘‘சரி. இனிமேயும் மவளுக்காக காத்திருக்கதுல அருத்தமில்ல. வா செத்துப் போவோம்’’னு ரெண்டு பேரும் கயித்துக்குள்ள கழுத்தை கொடுக்கப் போறப்போ, மரகதம் வந்துட்டா.
கயிறும் கழுத்துமா நிக்கிற ஆத்தா அய்யாவைப் பார்த்து மெரண்டு போன மரகதம் பாய்ஞ்சு வந்து அவங்களைக் கட்டிக்கிட்டா. ‘‘எய்யா, என்ன நடந்துச்சு? எதுக்காவ இப்படி வந்து கொலயா (தற்கொலை) சாவப் போறீக?’’னு மரகதம் அழுகையோட கேட்டதும், ராசாவோட ஆணையைப் பத்திச் சொன்னாரு, பசுபதி.
அய்யா சொன்னதைக் கேட்டதும் ‘‘ப்பூ… இதுக்குத்தானா சாவப் போறீங்க. நானு போயி ராசாகிட்ட பேசிட்டு வாரேன்’’னு புறப்பட்டவளை தடுத்தாரு பசுபதி.
‘‘வேணாம் மரகதம். ஏழைங்களுக்கு எப்பவுமே பணக்காரங்களோட சவகாசமே இருக்கக் கூடாது. அதுலயும் இவரு ஊராளுற ராசா. நீ அவசரப்பட்டு ராசா கிட்ட சொல்லப் போறேன்னு போயி எங்களுக்கு முன்னால உன் உசுர விட்டுராத. ஏற்கனவே உம் மேல ராசா கடுப்புல இருக்காரு’’னு கெஞ்ச, ‘‘அதெல்லாம் ஒண்ணும் ஆவாதுய்யா. ராசாவும் மனுசருதானே! நீரு பேசாம இரும்’’னு சொன்னவ நேரா அரண்மனைக்கு வந்தா.
அங்க இருந்த வேலைக்காரன்கிட்ட ராசாவைப் பார்க்கணும்னு சொல்ல, அவன் அவளை ராசாகிட்ட கூட்டிக்கிட்டுப் போனான்.
மரகதம் ராசாவை கையெடுத்துக் கும்பிட்டா. பெறவு, ‘‘அரசே! நீங்க கேட்ட மாதிரி தெறிச்சி விழற தண்ணியில அழகா நகை செய்யலாம். ஆனா அதுக்கு சில நெளுவு, சுளுவு, சம்பிரதாயமெல்லாம் இருக்கு’’னு சொன்னா.
‘‘என்ன சம்பிரதாயம்?’’னாரு ராசா.
‘‘தண்ணியில மால செஞ்சு போட்டுக்க யாரு ஆசைப்படுறாகளோ, அவுகதேன் தெறிச்சி விழற தண்ணிய உருக்குலையாம தன் கையால அப்பிடியே எடுத்துத் தரணும். அப்பதேன் அதை வெச்சு ஒரு நல்ல அழகான மாலையா செய்யமுடியும். யாருக்கு அந்த மாலையை போட்டு அழகு பார்க்க விரும்புறீங்களோ அவங்களை அருவிக்கு அனுப்பி வையுங்க. எங்கய்யா நகை செய்றதுக்காக அங்கே காத்திருக்கார்’’னு சொன்னதும் ராசா தெகைச்சுப் போய்ட்டாரு.
‘மகன் விரும்பின பொண்ணு ஏழைனு பார்த்த நான் அவளோட புத்திசாலித்தனத்தை பார்க்க மறந்துட்டனே’னு நினைச்சப்ப, ராசாவோட மனசு நெகிழ்ந்து போச்சு.
‘ஒரு நாட்டுக்கு அரசியா வர்றதுக்கு இன்னொரு ராஜாவோட மகதான் வேணும்கிறதில்ல… அறிவுள்ள பொண்ணா இருந்தா போதும்’னு நினைச்சவரு, இளவரசனுக்கும், மரகதத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குண்டான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாரு.
– பெப்ரவரி 2006