கனிகின்ற பருவத்தில்

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 16,529 
 
 

காத்திருத்தல் என்பது அவனைப் பொறுத்தவரை பொறுக்கமுடியாத விஷயம். ஆனால் சில வேளைகளில் மனதைச் சோதிப்பதுபோல, தவிர்க்க முடியாத காத்திருத்தல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. அப்பொழுதெல்லாம் தனது அப்போதைய தேவையை மறந்து இயற்கையோடு ஒன்றிப்போய் மனதை இதப்படுத்திக்கொள்வான்.

மதியம் கொழும்பிலிருந்து கிளம்புகிற புகையிரதம், மழை காரணத்தினாற்போலும் வழக்கத்தைவிடத் தாமதமாகவே அனுராதபுரம் வந்து சேர்ந்தது. அதுவரை காத்திருந்தவர்கள் சொற்பநேர இடத்துக்காக முண்டியடித்து இடித்துக்கொண்டு ஏறினார்கள். அந்த அமளி முடிந்தபிறகு அவன் ஏறினான். இருக்க இடமில்லாததால் நின்றான். வெளியே மழை பெய்து கொண்டிருந்தாலும் சனவெக்கையில் வியர்க்கத்தொடங்கியது. வடக்கிலிருந்து கொழும்பு செல்கிற புகையிரதமும் தாமதமாகவே வருகிறதாம். ஷகுறோசிங்|கிற்காக இது காத்திருக்கவேண்டும். வியர்வையையும் சனவெக்கையையும் சகித்துக்கொள்கிற ஆற்றலில்லாதவனாய் இறங்கி மேடைக்கு வந்தான்.

மழையைக் கண்டு சுவரோரமக ஒதுங்கியிருக்கிய மனிதர்களின் அடக்கத்தையும், ரெயினிலிருந்து குதித்து தண்ணீர் எடுப்பதற்காக போத்தலோடு ஓடுகிற சிலரையும் பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர் தற்செயலாகத் திரும்பிய பொழுது புகையிரதத்துள்ளிருந்து அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.

ஓர் அழகிய ரோசாமலரைப்போல அவளது முகம் தோற்றமளித்தது. அவன் கவனிப்பதைக் கண்டதும் அவள் பார்வையைத் திருப்பினாள். அவளது தடுமாற்றத்திலிருந்து அவள் தன்னைச் சற்று நேரமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறாள் என நினைத்தான். எதற்காக அப்படிப் பார்த்திருக்க வேண்டும் என எண்ணியபொழுது ஒருவேளை மீண்டும் பார்ப்பாளோ என்ற சபலமும் தோன்றியது. அவள் திரும்பவும் பார்த்தாள். தான் இன்னும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரகசியத்தை அவள் அறியக்கூடாது என அவசரமாக வேறு பக்கம் திரும்பினான்.

மழையில் நனைந்துகொண்டு நிற்கிற செம்மறியாட்டைப் போல புகையிரதம் சூடு சுரணையில்லாமல் நிற்கிறது. மழைநீர் கூரையிலிருந்து வழிந்து ரெயிலின் மேல் விழுந்து சிறிய பூச்சிகளைப் போலத் தெறித்துப் பறக்கிறது. பூட்டப்பட்ட கண்ணாடியில் முத்துமணிகளாக உருள்கிறது…. தூரத்தே உரத்துப் பெய்துகொண்டு ஒரே புகைமூட்டமாகத் தெரிகிறது. ஆவியாக மேலே செல்கிற நீர் ஒரு ஷ~வரை|த் திறந்துவிட விழுகிற தூறல்களாகக் கொட்டும் அழகை வியப்பவன்போல் வானத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அப்படி நின்றபோதும், அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பாள் என அவனது மனது கற்பனை செய்தது. அந்த எதிர்பார்ப்போடு திரும்பினான். ஆனால் அவள் பார்க்காமலே இருந்தாள். தன்னோடு இருப்பவர்களோடு கதைத்து எதற்காகவோ சிரித்தவாறு ஒருமுறை திரும்பினாள். அந்தக் கணமே அவனுக்கு ஏமாற்றத்தை அளித்து மறுபக்கம் திரும்பினாள். தன்னைப் பார்ப்பதற்காகவே திரும்பிய அவள், கூச்சத்தினாற்தான் பார்வையை மீட்டிருக்கக்கூடும் என அவன் நினைத்தான். அதற்குப் பிறகு நெடுநேரமாகவே அவள் பார்க்கவில்லை. ஆனால் நெற்றியில் விழுகிற கேசங்களை ஒதுக்கி, தன்னை அழகுபடுத்துகிற முயற்சியில் அவள் கூச்சத்தோடு ஈடுபட்டிருந்தாள். தனது பார்வையைத் தரிசித்த பின்னர்தான் அவளிடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என அவன் திருப்தியடைந்தான். அந்தப் பெட்டியிலேயே தனது பயணப் பையை வைத்துவிட்டு இறங்கியதை நினைக்க இப்பொழுது மகிழச்சியேற்பட்டது. இனி, யாழ்ப்பாணம் போகும்வரை பார்த்துக்கொண்டே போகலாம்!

அவள் நெடுநேரமாகப் பார்க்காமலிருப்பதால் கர்வக்காரியாக இருப்பாளோ என எண்ணினான். அல்லது.. தானே வீணாக எதையாவது கற்பனைசெய்து மனதை அலட்டிக்கொள்கிறேனோ என்ற சமசியமும் தோன்றியது. அவசரமாக உள்ளே ஏறி.. அவளது முகத்தைப் பார்த்து ஒரு பதில் அறிந்துவிடவேண்டுமென்ற துடிப்பும் ஏற்பட்டது. அவள் இனிப் பார்ப்பாளோ அல்லது பார்க்காமலே விட்டுவிடுவாளோ எனக் குழப்பமடைந்தான். பார்க்கவே மாட்டாள் என்ற இழப்பை மனது ஏற்க மறுத்தது.

காங்கேசன் துறையிலிருந்து வருகிற புகையிரதம் இன்னும் சில நிமிடங்களில் மேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டபொழுது ஷஅப்பாடா| எனப் பெரிய நிம்மதி தோன்றியது அவனுக்கு. இனி இந்தப் புகையிரதமும் புறப்படும். உள்ளே ஏறி அவளது முகத்துக்கு நேரே நின்றுகொண்டான்.

அவள் தன்னைக் கள்ளமாகப் பார்ப்பதைக் கவனித்தான். அந்தக் கள்ளமும், அழகும், அவளது நாணமும் அவன் முன்னர் கண்டிராத விஷயங்கள்! தனது மனசை அசைக்கிறமாதிரி இப்படியொரு சக்தி ஒரு சாதாரண பெண்ணிடம் இருக்கிறதே என ஆச்சரியப்பட்டான். மற்றவர்களின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டு அவனும் அடிக்கடி அவளைப் பார்த்தான். சொல்லிவைத்ததுபோல சந்திக்கிற கணங்களில் ஒரு பரவசம் தோன்றியது.

அவளுக்குப் பக்கத்தில் ஓர் இளைஞன் இருந்தான். அவளது சகோதரனாக இருக்கலாம். முன் இருக்கையில் அவளது பாட்டியும் இரு சிறுவர்களும் இருந்தனர். பாட்டி, எதற்காகவோ அவளை ஷசாந்தா! என அழைத்தாள். அவளது பெயர் அவனை மிகவும் கவர்ந்தது. அவளைப் போலவே அமைதியான பெயர். ஷசாந்தா| என மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிப் பார்த்தான். ஒரு வீட்டில் அவளோடு வாழ்க்கை நடத்துவது போலவும்.. அலுவலகம் முடிந்து களைப்பாக வருகிற தன்னை அன்பாக எதிர்பார்த்திருப்பதுபோலவும் கற்பனை வளர்ந்தது. ஷஓ எனது மனைவி சாந்தா!| என இதயம் நிறைவு கொள்ள, அவன் விழித்திருந்த நிலையிலேயே அந்த இன்பக் கனவில் மூழ்கிப் போனான். அப்படியே அவளது கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குப் போவதாக அந்தக் கனவு சுபமடைந்தது….

சே! இதென்ன விசர்க்கதை? கல்யாணம் என்றால் சும்மாவா? அவனுக்கு இப்பொழுது என்ன வயதாகிறது? இருபத்தைந்து வயசு, ஒரு வயசா? இந்த வயசிலேயே ஒருத்தியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனால் அப்பா பொல்லு தூக்கிக்கொண்டு வரமாட்டாரா?

அவனுக்கு அக்கா ஒருத்தியும் இருக்கிறாள்.. இருபத்தொன்பது வயசில். அவளும் உத்தியோகம் பார்க்கிறாள். குடும்ப நிலையைச் சீர் செய்வதற்கு அக்காவும் உழைக்க வேண்டியிருக்கிறது. அப்பாவும் கஷ்டப்பட்டு உழைத்தவர்தான். தன் குழந்தைகளை கபடமில்லாமல் வளர்த்தெடுப்பதற்கு அவரது கஷ்டமான உழைப்பும் போதவில்லை. போதாதற்கு கடன், கடன், கடன், பின்னர் அன்றாடச் செலவுகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டே ஈடு வைத்த வீடு வளவை மீட்க முயன்றால்….. ப்ளஸ் வட்டி, வட்டி, வட்டி. அவரது சக்திக்கு அப்பாலே சென்றது கடன்சுமை. பிள்ளையை உத்தியோகத்துக்கு அனுப்பினார். மன வேதனைப்பட்டுக்கொண்டே அனுப்பினார். அவள் குடும்பப் பாரத்தை ஓரளவாவது குறைத்து, தனக்கு அடுத்து வருபவளின் கையில் ஒப்படைத்து ஒதுங்குவதானால் இன்னும் ஐந்தாறு வருடங்களாவது செல்லவேண்டும்.

அதற்குப் பிறகு, ஷஅழகும் நற்குணமும், பொருந்திய முப்பத்தைந்து வயது நிரம்பிய அரசாங்க உத்தியோகத்தில் மாதம் எண்ணூறு ரூபாய் வருமானம் பெறும் பெண்ணுக்கு மணமகன் தேவை. மணமகன் குடிப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும்| என ஒரு விளம்பரம். சீதன விவரத்தை அறிந்தோ, அறியாமலோ குறிப்பிடாமல் விடுவது விரும்பத்தக்கது. பிறகு தொடர்பு கொள்பவர்களோடு பேரம் பேசிப் பார்க்கலாம்.

ஆனால் அவளை மணக்க வரப்போகிறவனுக்கு அவளது சரித்திரத்தில் அக்கறை ஏற்பட்டுவிடும். அவள் பிறந்து வளர்ந்து போய் வந்த இடங்களிலெல்லாம் புலனாய்வு செய்து – அங்கெல்லாம் மற்றவர்களின் வாழ்க்கையில் குழி பறிக்கவென்று நாலுபேர் இருக்காமலா போய்விடுவார்கள்? அற்லீஸ்ட், அவள் தன்னைப் பார்த்து சிரிப்பதில்லை, கதைப்பதில்லை என்ற மனக்குறையோடு ஒருவன் அவளது அலுவலகத்தில் இல்லாமலா போய்விடுவான்?

ஆக, இந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்வதற்கு வருகிறவன் இப்பொழுது அதற்குத் தயாராயில்லை. இவர்களுக்கு ஒருத்தி சொந்தமாகத் தேவைப்படும்பொழுது அழகும் நற்குணமும் நிறைந்தவளாகத் தேவைப்படுகிறது! தாங்கள் வழியில் கைவிட்டு வந்த ஒருத்தி யாரையோ கைப்பிடிக்கப் போவதைப்போல தங்களையும் இன்னொருத்தி பற்றிக்கொண்டு விடுவாள் என்ற பயமோ? ஏன், நிர்ணயிக்கிற விலையிலே தீர்க்கப்படுவதை மனது ஒப்புக்கொள்ளவில்லை.

முள்ளில் நடப்பதுபோல எவ்வளவு அவதானமாகப் பெண்கள் வாழ்கிறார்கள்! ஒருவனைப் பார்த்து வஞ்சகமில்லாமற் சிரித்துப் பழகிய (குற்றத்)திற்காகவே அவ் வாழ்க்கை பறிபோய்விடுகிறது. அவளது எதிர்பார்ப்புகளெல்லாம் ஏமாற்றமாகிவிட ஷமணமகன் குடிப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும்| என்பதைத் ஷதவிர்த்துவிட்டு தாரமிழந்தவரும் விண்ணப்பிக்கலாம்| என்பதைப் புகுத்தி இன்னொரு விளம்பரம்! இது, அவள் தந்தைக்கோ, தாய்க்கோ தாங்கள் கண்மூடுவதற்கு முன் அவளது (திரு)மணத்தைப் பார்த்துவிட வேண்டுமென ஆசையேற்பட்டதனால்; வந்த வினை.

அவர்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவள் இனி யாராவது ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டியாகவேண்டும். அவள் இவ்வளவு காலமும் தன் வாழ்வில் கட்டிக் காத்துவந்த இலட்சியக் கனவுகளைச் சிதைத்து எப்படியாவது இருக்கிற ஒருவனுக்கு இனித் தன் வாழ்வை அடிமைப்படுத்தவேண்டும். அவள் உழைப்பவள், படித்தவள், அழகி, பண்பானவள் என்ற காரணங்களுக்காகவாவது விட்டுக்கொடுப்பானா – வரப்போகிற தியாகி?

அவளது இரக்கமான தந்தை ஒன்றுக்கு விழியில்லாமல் இன்னொரு கடனை (அற வட்டியில்) படப்போகிறார். அந்தக் குடும்பத்தில் இந்தக் கதை தொடரும்.

இப்படி ஓர் அப்பாவி அக்காவின் வாழ்க்கை மாத்திரமா பழகிப்போகிறது என அவன் நினைத்துப் பார்க்காத நாட்களே இல்லை. தனது வாழ்க்கைக் காலத்தில் அவன் சென்றுவந்த இடங்களில்.. பழகிய குடும்பங்களில்.. அலுவலகத்தில் எல்லாம் காணநேர்ந்த பெருமூச்சோடு நிச்சயமற்ற வாழ்க்கை வாழும் பெண்களைப் பற்றித் தனித்தனியே வௌ;வேறு நேரங்களில் சிந்தித்துப் பார்த்திருக்கிறான். பெண்களின் வாழ்க்கைக்கு இப்படி ஒரு சமூகநியதி ஏற்பட்டுவிட்டதை எண்ணும்பொழுது மனிதர்கள் மீது பொல்லாத வெறுப்புத் தோன்றும். பிறகு, யார் மீது குறிப்பாகக் கோபப்படுவது என்று தெரியாமற் குழப்பமடைவான். இந்த நியதிகளையெல்லாம் உடைத்தெறிந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் நியாயமான வாழ்க்கையை எப்படி உறுதி செய்துகொள்ளலாம் என நீண்ட நேரமாகப் பல நாட்கள் சிந்தித்து ஒரு தீர்வும் புத்திக்கு எட்டாமல் போகவே தன் மீதும் சினங்கொண்டிருக்கிறான். தன்னைச் சார்ந்த ஆண் வர்க்கத்தின் இந்த முறைகேடான செயல் அவர்களுக்குப் பெருமையையல்ல பெரிய தலைகுனிவையே ஏற்படுத்தியிருக்கிறது எனப் பொருமிக்கொள்வான்.

இதற்கெல்லாம் பிராயச்சித்தமாக தானே ஒருத்தியை கையைப் பிடித்துக்கொண்டு போவது ஒரு தீர்வாக இருக்கமுடியுமா எனச் சிந்தித்திருக்கிறான். அதை ஒரு வழிகாட்டலாகக் கருதிக்கொண்டு எத்தனைபேர் வருவதற்குத் துணிவார்கள்? ஷஎவளோ ஒருத்தியைக் கிளப்பிக்கொண்டு ஓடிவிட்டான்| என்றுதானே வாய்கிழியக் கதைக்கப்போகிறார்கள். அப்படி ஒருத்திக்கு வாழ்வளிப்பது…. (இல்லை…. ஒருத்தியிடம் வாழ்வு பெறுவது என்பதே சரி) அவனைப் பொறுத்தவரை தான் சுயநலங்கொண்டு செய்யப் போகிற ஒரு செய்கையாகவே பட்டது. பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள.. தன்னை விடுவித்துக் கொண்டு மனதைச் சமாதானப்படுத்தி வாழத்தானா நானும் விரும்புகிறேன்? அப்படியானால் என்னதான் செய்வது? இந்தக் கேள்வியைப் பலமுறை தன்னிடமே கேட்டுப் பார்த்துவிட்டான். தன் நண்பர்களிடமெல்லாம் இவ்வி~யத்தை விவாதித்துப் பார்த்தும் இருக்கிறான். சுமாரானவர்களெல்லாம் முகஸ்த்துதிக்காக எதையாவது சார்பாகக் கதைத்துவிட்டு.. தான் இல்லாத இடத்தில் ஷஅவனுக்கு விசர்| எனச் செல்லி விட்டுப்போகிற துரோகத்தனத்தையும் எண்ணிப் பலமுறை மனம் வெதும்பியிருக்கிறான்.

ஆனால்.. தான் ஒரு விசர்த்தனமான முடிவைத்தான் எடுத்திருக்கிறேன் என்பது மனதை ஆக்கிரமிக்கும் பொழுது அவனிடத்தில் ஒரு புன்னகையும் வைராக்கிமும் தோன்றும், தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் பிரமச்சாரியாகவே இருப்பது என்பது அவனது முடிவு. ஆண்வர்க்கத்தின் சுயநலத்திற்காக அவன் இப்படித் தன்னை வாட்டுவதற்கு ரெடி!

வவுனியா புகையிரத நிலையத்தில் ஒருவர் இறங்கியதால் சாந்தா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் இருக்கையில் ஓர் இடம் கிடைத்தது. இனி அவளைப் பார்க்கவேகூடாது என்ற தீர்மானத்துடன் அவ்விடத்தில் அமர்ந்துகொண்டான் அவன்.

அவளை மறப்பதற்காக சிறுவர்களின் துடினமான விளையாட்டுக்களில் கவனத்தைச் செலத்தினான். கண், அவளுக்குப் பக்கத்தில் இருக்கின்ற இளைஞனை மேயச் சென்றது.

அந்த இளைஞன் மௌனமாக இருந்தான். புகையிரதத்தின் குலுக்கத்தோடு…. அவனது உடல் அவளோடு ஸ்பரிசிக்கிறதா? அல்லது அது தற்செயலாகத்தான் சம்பவிக்கிறதா என இவன் தலையைப் போட்டு உடைத்தான். அவனை அவளது சகோதரனாக இருக்கும் எனக் கருதியிருந்த அவனுக்கு ஷஅப்படி இருக்க முடியாதோ?| என்ற சந்தேகமும் தோன்றியது. அவன் வேறு யாரோவாக இருக்குமானால்.. அவள் அனுமதிக்கின்ற ஸ்பரிசத்தை இவனது மனது தாங்கிக்கொள்ள முடியாமல் துணுக்குற்றது. அல்லது அவர்கள் அறியாமலே நிகழ்கிற ஒரு தற்செயல் நிகழ்வுக்கு ஒன்றுமேயில்லாத ஒரு வி~யத்துக்கு.. தானே விரசமாகக் கற்பனை செய்வதாக எண்ணினான். இதற்காக.. அவன் தன்னை நினைத்து வெட்கமுமடைந்தான். ஒரு பெண்ணைச் சந்தேகிக்கிற.. குறைபடுகிற வர்க்கத்தைத்தானே தானும் சேர்ந்திருக்கிறேன் என எண்ணிக் குறுகிப்போனான்.

மிகக் கவனமாக அவளோடு தனது கால்கள் தட்டுப்படாமல் ஒதுக்கமாக இருந்தான். ஆரம்பத்திலிருந்தே இவ்வி~யத்தில் கண்ணும் கருத்துமாகத்தான் இருந்தான். ஒரு தற்செயலான நிகழ்வுக்கேனும் அவள் தன்னை மட்டமாகக் கணித்துவிடக.கூடாது என்ற பயம் மனசிலிருந்தது.

ரெயில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது விளையாட்டிற்கு அவள் கவனிக்கும்படியாக அவன் சிரித்தான். அவளைக் கவரவேண்டுமென்பதற்காக தேவையில்லாத நேரங்களிலும் சிரிக்க வேண்டியிருந்தது. அவனுக்கு அவளோடு கதைக்கவேண்டும் போலவுமிருந்தது.

பாட்டியோடு முதலிற் கதைத்து.. சிறுவர்களோடு கதைத்து.. அவர்களிடம் ஒரு நட்புறவை ஏற்படுத்தினான். ரொபி விற்கிற சிறுவன் வந்தபொழுது வேண்டி சிறுவர்களுக்குக் கொடுத்து அவளிடமும் (வேண்டுவாளோ.. மாட்டாளோ?) நீட்டியபொழுது அவள் ஷவெடுக்|கென மறுபக்கம் திரும்பினாள். ஷஎன்ன பெண் இவள்?| அவளது அலட்சியமான புறக்கணிப்பு இதயத்தை சூடாக வருத்தியது. வாழ்க்கையில் பெரிய விரக்தி அடைந்துவிட்ட ஒருவனைப்போல அவன் மனது சோர்வடைந்தது. நெடுநேரம் அவளைப் பார்க்காமலிருக்கிற வைராக்கியமும் ஏற்பட்டது. பிறகு அவளது பக்கம் திரும்ப.. அப்பொழுதெல்லாம் அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தான். அவளது பார்வை தனது செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்பதாக அவன் கருதிக்கொண்டான். அதையெல்லாம் அலட்சியமாகப் புறக்கணித்துக்கொண்டே மறுபக்கமாகத் திரும்பினான். தனது அலட்சியம் அவளிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்துக்கொண்டு பார்க்கிறபொழுது.. ஷஎன்னை மன்னித்துவிடுங்கள் என அவள் மன்றாட்டமாகக் கேட்பதுபோலிருந்தது. அந்தப் பார்வை அவன் மனதை அசைத்தது. அவள்பால் அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது. அதற்கு மேலும் அவளை வருத்த விரும்பாமல் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தான்.

அவள் சிரிக்காமல் இருந்தாள். ஆனால் கோபப்படாமல் அந்தச் சிரிப்புக்குப் பதிலாகத் தலையைக் குனிந்தாள். அது அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் திரும்பவும் தன்னைப் பார்க்கும்பொழுது கதைக்கவேண்டும் என நினைத்துக் கொண்டான். அவள் நிமிர்ந்தாள். அவனது மனசு படபடப்படைந்தது. கதைக்க வேண்டும் என்று சுலபமாக நினைத்தாயிற்று! என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது? ‘நீங்கள்…. படிக்…. கிறீங்களா? அல்லது படிச்சு முடிஞ்சு வீட்டிலே….. அம்மாவுக்கு உதவியாக….?”

‘உங்களுக்கேன் அதெல்லாம்?” என்றாள் அவள். அவன் அதிர்ந்துபோனான். அவளது தோற்றத்திலும் பெயரிலும் லயித்துப் போயிருந்தவனுக்கு இந்த எதிர்மாறான செய்கை அதிர்ச்சியை அளித்தது. பின்னர் அவளைப் பார்ப்பதையும் பிடிவாதமாய்த் தவிர்த்துக்கொண்டான்.

இந்த மடத்தனமான மனசு ஒன்றும் நடக்காததுபோல திரும்பவும் அவளையே அசைபோடுகிறதே என அலுத்துக்கொண்டான். சரியான கர்வக்காரியாக இருப்பாளோ? இல்லை, அவள் நடந்துகொண்ட விதம்தான் சரி. பெண்கள் இப்படி இருந்தாற்தான் இந்த உலகத்தில் தப்பிப் பிழைக்கலாம். என்ன இருந்தாலும் அவள் தன்னைப் புறக்கணித்ததில் கவலையும், தன்னையும் மட்டமாகக் கருதியிருப்பாளோ என எண்ணியபொழுது வெட்க உணர்வும் மேலிட்டது.

கொடிகாமம் புகையிரத நிலையத்தில் அவர்கள் இறங்கப் போவதை அறிந்ததும் சிறிது துடிப்படைந்தான். சனநெரிசலோடு பயணப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு இறங்குவது சிரமமாகையால் அவர்களை முதலில் இறங்குமாறும் தான் யன்னலூடு பெட்டியைத் தருவதாகவும் பாட்டியிடம் கூறினான். அதை அவளுக்கும் கேட்கக்கூடியதாகத்தான் சொன்னான். ஆனால் அவள் எதுவுமே கேட்காதவள்போல தனது பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கினாள். தனது கட்டுப்பாட்டை மீறி அவளிடம் மனதைப் பறிகொடுத்த பலவீனத்தை நினைக்க தன்மீது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

கீழே இறங்கிவந்த அவள்.. யன்னலின் ஊடாக அவனை அழைத்தாள்! உள்ளே இருக்கும் இன்னொரு பெட்டியைக் காட்டி அதை எடுத்துத் தருமாறு கேட்டாள். அவன் அதை நம்பமுடியாதவனாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை உண்மையிலேயே புறக்கணித்திருந்தால் அவள் இப்படி வலிந்து கதைத்திருக்கமாட்டாள் என்ற சந்தோ~ம் தோன்றியது. அந்தப் பெட்டியை எடுத்து ஆதரவோடு அவளைப் பார்த்தவாறு கொடுத்தான். ஒரு நேர்மையான ஆணுக்குரிய பெருமிதம் தோன்றியது… அவளது கண்கள் தன்னிடம் கலந்துகொள்வதை உணர்ந்தான்.

புகையிரதம் கிளம்பியது. புகையிரதம் ஓடத் தொடங்கியதும் அவள் அவனைப் பார்த்தவாறு கையை அசைத்தாள். கண்ணிலிருந்து மறைகின்றவரை அவள் அப்படியே நின்றாள். அவனுக்கு அடக்கமுடியாத சோகம் பொங்கிக்கொண்டு வந்தது. ஷஇவ்வளவு தானா?|

மனது அமைதி குலைந்து தவித்தது. சற்று நேரம் இயற்கை வசப்பட்டுப்போன குற்றத்திற்காக அன்றைய இரவின் உறக்கம் பறிபோய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

(வீரகேசரியில் பிரசுரமானது.. 1979)

Print Friendly, PDF & Email

2 thoughts on “கனிகின்ற பருவத்தில்

 1. Dear Writer,

  It remembers Shahrukh Khan and Manisha Koirala in Dil Se – Hindhi movie directed by our Mani Ratnam

  Regards……
  Kannan
  7061901800

  1. Dear Kannan, This Story was written and published in the year of 1979. If possible let me know when was that movie ‘Dil Se’ released. Thank you..!
   – Sutharaj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *