கனவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 3,763 
 
 

அந்தக் கடற்கரையோரத்து நடுத்தர நகரம் . மேற்கே தன்னுடைய பகலைத் தொலைத்துக் கொண்டிருந்தது. கதிரவனின் ஒன்றிரண்டு கிரணங்கள் மட்டுமே இன்னும் விடைபெற்றுப் போக வேண்டியிருந்தது.

ஊரின் வடக்கு ஒதுக்குப்புறத்தில் நாலைந்து பேர் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் திட்டமெல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் திருப்திகரமாக நிறைவு பெற்ற விடும் (என்ற தன்னம்பிக்கை). ஆள் அரவம் எதிர்பார்த்தபடி அதிகமாய் இல்லையென்பதாலும் எப்போதாவது மட்டுமே சில வாகனங்கள் அடுத்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்தன என்பதாலும் அவர்கள் மகிழ்ச்சியுடனேயே இருந்தார்கள் என்பதும் அவர்களின் முகபாவனைகள் மூலம் தெரிந்தன . இருள் கவ்வத் தொடங்கி மேலும், மேலும் அதன் ஆதிக்கம் விரிந்தது. அதில் ஒருவன் மட்டும் வேகமாய் ஒரு சைக்கிளில் ஏறி எங்கோ சென்றான். சிறிது நேரத்தில் ஓர் அம்பாசிடர் அவ்விடமாய் வந்து நின்றது. டிரைவர் இறங்கினார்.

கடல் அலைகளின் இரைச்சல் உக்கிரமாய்க் கேட்கத் துவங்கியது . இன்னும் கூட அவர்கள் பரபரப்படையாமல் அமைதியாகவே இருந்தனர் . ஒருவன் சுகமாக விசிலடித்தபடியே பாடத் தொடங்கினான். அதுவும் அச்சமயத்தில் ரம்மியமாக இருந்தது. அந்தக் குஷியில் அடுத்தவன் பற்ற வைத்த சிகரெட்டை நான்கு பேரும் பகிர்ந்து புகை வளையத்தை வானில் சுழல விட்டனர் . ஒவ்வொருத்தரின் முகமும் மறைய ஆரம்பித்த நேரம். பேச்சுக் குரலில் மட்டுமே இது இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ளக் கூடியதாயிருந்தது. அவர்கள் முன்னே சலங்கை ஒலிக்க அமைதியாக வந்து நின்றாள் ஸாஹிரா பேகம். கையில் சற்றே பெரிய சூட்கேஸ். தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நிற்கிறாளோ? அவள் பக்கத்தில் நின்றதும் அடுத்த வீட்டு ராமசாமி ஆச்சாரி மகள் முத்துலட்சுமி.

உடன் நால்வரும் சுறுசுறுப்பாயினர். சின்னத்துரை ஸாஹிராவின் கையிலிருந்த சூட்கேஸைப் பத்திரமாக வாங்கிக் கொண்டான். டிரைவர் பெருமாள் ஓடோடிப் போய் தனது டாக்ஸியை ஸ்டார்ட் செய்தான் . கூட இருந்த தேவராஜும், ஆறுமுகமும் பாதுகாப்பாய் அங்குமிங்கும் திருட்டு முழியோடு பார்க்க ஆரம்பித்தனர் . ஏனோ இருவருக்கும் இப்போது தங்களையறியாமலேயே கை , கால் உதறியது. ஆனால் சின்னத்துரை படபடப்போ, பயமோ இல்லாமல் செயல் பட்டான்.

‘ஸாஹிரா! கரெக்ட் டயத்துக்கு வந்துட்டியே ! என்று பரவசமாய்ச் சொன்னான் சின்னதுரை.

“சரி தான்! ஆனா இப்போ பேசிக்கிட்டிருக்குறதுக்கு நேரமில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் போனா எல்லாரும் தேட ஆரம்பிச்சுடுவாங்க . அதுக்கு முன்னால போயிடணும். அதோட தொழுதுட்டு வாப்பா வரக் கூடிய நேரமாச்சு . அவங்களுக்கு நான் இல்லாம் எதுவும் நடக்காது. அதனால் சீக்கிரமாகிளம்புங்க!” என்றாள் ஸாஹிரா.

சூட்கேஸ் அம்பாசிடரில் இடம் பிடித்துக் கொண்டது. ஸாஹிராவைப் பின் பக்கமாக ஏறச் சொன்னான் சின்னத்துரை . பக்கத்திலேயே தானும் அமர்ந்து கொண்டான். இருவர் மூச்சும் உரச ஆரம்பித்தது. ஆறுமுகமும், தேவராஜும் முன்னால் ஏறிக் கொண்டனர். பெருமாள் ஆணை கிடைத்ததும் பறக்கத் தயாராயிருந்தான். வெளியே நின்று கொண்டிருந்த முத்துலட்சுமியின் கைகளை ஸாஹிரா பற்றினாள், தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

“போய்ட்டு வர்றேன் லட்சுமி ! உன்னை ஆயுசுள்ள வரைக்கும் நான் மறக்க மாட்டேன்டீ! யாரு எதக் கேட்டாலும் கல்லோ, மரமோன்னு பேசாமயே நின்னு சாதிச்சுடு. என்னை மறந்துட மாட்டீயே?”

“சீச்சி! மறக்கற மாதிரியா காரியம் நடக்குது. போய்ட்டு வா. அல்லா உங்களைக் காப்பாத்தட்டும்!” என்று விடை கூறினாள் முத்துலட்சுமி.

“ம்! புறப்படுங்க!” – ஆணையிட்டாள் ஸாஹிரா.

கார் நகர்ந்தது. இது இருளில் ஒடுங்கிக் கிடந்த சாலையைத் தனது வெளிச்சக் கைகளால் பற்றிப் பிடித்து வேக வேகமாக ஊர்ந்தது. யாரும் பார்க்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட முத்துலட்சுமி அந்த நிமிசமே பறந்தோடினாள். அடுத்த வீட்டில் இன்னும் சில நேரத்தில் நடக்கப் போகும் களேபரத்தை எண்ணிப் பார்த்த அவளுக்கு சற்று சிரிப்பும் கூடவே அச்சமும் சேர்ந்து வந்தது.

மெயின் ரோட்டைக் கடந்து கொண்டிருந்தது கார் . நான்கு பக்கக் கண்ணாடிகளும் உயர்த்தி விடப்பட்டிருந்தன. ஸாஹிரா வாப்பா மொன்னா முகம்மது தனது தொழுகையை

முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதை இவள் உள்ளிருந்தே பார்த்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவர் ‘எல்லோரும் கூடவே இருந்தும் அவர்கள் இல்லவே இல்லாதது தான் ஓர் அனாதை நிலையை அடையப் போகிறாரோ என்பதை எண்ணிப் பார்த்தாள் ஸாஹிரா . தன்னையும் அறியாமலேயே அழ ஆரம்பித்தன அவள் கண்கள். சின்னத்துரையின் கைகளால் அந்தக் கண்ணீர் துடைக்கப்பட்டது. அவள் வாப்பா கடந்து போனதை அவனும் பார்த்தான். அவனுக்கும் ஒரு மாதிரியான எண்ணங்கள். துயரை அகற்ற அவளின் கன்னங்களில் மெல்லவே இதழ்களால் ஒற்றிக் கொண்டான்.

அதே சமயத்தில், வடக்குத் திசையை நோக்கி மைல்களை ஏப்பம் விட்ட வண்ணம் வண்டி பறக்கத் தொடங்கியிருந்தது.

ஒரு மணி நேரமே ஆகியிருந்தது . ஒரு சேரிக்குள் புகுந்த கார் தெருவின் மையத்திலிருந்த ஒரு ஓடு வீட்டின் முன் வந்து நின்றது .அது வந்ததும் அதன் பின்னே குழந்தைகள் எல்லாம் அரக்கப் பரக்க ஓடி வந்தன. ‘ஹே ஹே’ என்று காணாததைக் கண்டதாகக் கூச்சல் இட்டன. தெருவில் திண்ணையில் உட்கார்ந்து பாடு பேசிக்

கொண்டிருந்தவர்களெல்லாம் எழுந்து என்னவோ ஏதோ என்று விழியுருள ஆரம்பித்தனர். சிலர் வீட்டருகேயே வந்தனர். தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பெண்களெல்லாம் அதை அப்புறமாய்க் கவனித்துக் கொள்ளலாம் என்று லீவு விட்டு வந்தனர் . சுற்றிலும் ஒரே கூட்டம். தெரு விளக்குத் தன் பங்குக்கு ஒளியை வீசியது. அவசரம் தாளாமல் சிலர் எட்டிப் பார்த்தனர். எதுவும் தெரியவில்லை .

சின்னத்துரைதான் முதலில் கதவைத் திறந்தான். சூட்கேஸை எடுத்தான். உள்ளே ஒரு பெண் இருக்கிறாள் என்பதை இப்போது எல்லோரும் கண்டு கொள்ள முடிந்தது . அவர்களுக்கோ ஆச்சரியமோ ஆச்சரியம்.

“ஸாஹிரா! வெளியே வா. எல்லாம் நம்ம ஜனங்க தான்!” என்றான் சின்னதுரை.

அவள் கால் வைத்தாள் . அடடா! என்ன அற்புதமாக அவள் கால்கள் பூமியில் பதிந்தன. பதிந்த கால்கள் மேலே நடக்காமல் நின்றன . பெரியவர்களெல்லாம் கூட கண்களை இமைக்க மறந்தனர். நேர்த்தியான அழகு ஒன்று தங்களின் நேரில் வந்ததும் அவர்கள் பட்ட பாடு ஆனந்தம்.

ஒருவர் சொன்னார், “இந்தக் கிளி எப்படிவே சின்னத்துரையக் கொத்திடுச்சு?”

“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதிரும். அதுவா கொத்தியிருக்கா இல்லே இவன் தான் கொத்தியிருக்காணாங்குறதே இனிமே தான் தெரியும் !” என்று முன்னவர் காதில் முணுமுணுத்தார் பின்னவர்.

சின்னத்துரையின் அப்பா பிச்சை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் . வீட்டு வாசலில் நின்று தன் கைகளைக் கிள்ளிப் பார்த்தார். ‘சுரீர் என்றது.

பெருமாள் பின்னால் இறங்கியதும் அந்த ஊரிலுள்ள மற்றவர்கட்கும் ஆச்சரியம். அவன் முன்பு இந்த ஊரில் வசித்தவன் என்பதே காரணம் ஆறுமுகமும், தேவராஜும் அப்பறமாய் இறங்கினர். அவர்களையும் கீழ் மேலாகப் பார்த்தது ஊர்.

“பெருமாளு! என்ன நடந்துச்சு முதல்ல அதச் சொல்லு!” என்று ஓடி வந்து அவர்களை அண்டி நின்று கேட்டார் பிச்சை.

“அவசரப்படாதீங்க! சாவகாசமாய்ச் சொல்லுறேன் . நாம் இப்ப வீட்டுக்குள்ளாரப் போவோம்.” என்றான் பெருமாள்.

உள்ளே வந்தவங்களைப் பாயில் அமரச் சொன்னாள் சின்னத்துரையின் தாய் . ஒன்றுமே விளங்காமல் – அதே சமயத்தில் அந்தப் பெண்ணின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூணே முக்காலடி குடிசைக்குள், வந்தவர்கள் ஒடுங்கினார்கள். ஊர் ஜனம் ஊமை ஜனமாய் வெளியே நின்று கொண்டிருந்தது.

பிச்சை மறுபடியும் படபடப்புடன் கேட்டார் , “ஏடா கூடமா எதுவும் நடந்துடலியே?” என்று.

“அப்படியெல்லாம் ஒண்ணும் நடந்துடலையா . அந்தப் பொண்ணு நம்ப பக்கத்து ஊரு தான். மொத்தமே நாலஞ்சு சாய்புமாறு குடும்பம் தான் அந்த ஊரிலேயே இருக்குது நம்ம சின்னத்துரை முதல்ல இவங்களோட பலசரக்குக் கடையில் தான் வேலை பாத்துக்கிட்டிருந்தான் . சாமான் எடுக்கப் போகவும் வரவுமா இருந்ததுனால் அந்தப் பொண்ணுக்கும், இவனுக்கும் பழக்கம் உண்டாயிடுச்சு. விசயம் ஒரு நாள் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சதும் இவன் கடையிலேர்ந்து விலக்கிட்டாங்க . அப்புறமா இவங்க இரண்டு பேருமே மூணாவது நபரை வச்சிக்கிட்டுத் தான் கடிதத் தொடர்பெல்லாம் நடத்திக்கிட்டாங்க. இன்னும் நாலஞ்சு நாள்ல இவளப் பொண்ணு பாக்குறதுக்காக மாப்ள வூட்டுக்காரங்க வராங்க. இவளும் வாழ்ந்தா சின்னத்துரையோட தான் வாழுவேன்னு பிடிவாதமா நிக்குறா அவதான் தப்பிச்சு வர்றதுக்கு ஐடியா கொடுத்தார். சின்னத்துரையும் சம்மதிச்சதுனாலே அவசரம், அவசரமாதப்பி வந்துட்டாங்க. நானும் என்னோட காருலேயே அவங்களைப் பத்திரமா கொண்டு வந்து சேர்த்துட்டேன். நான்தான் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா சாகிபுமாறுங்க என் குடலைப் பிடுங்கிடுவாங்க. அதனால நானும் சரி, நீங்களும் சரி இனிமே கவனமா இருந்துக்கிடணும் .” என்று பேசி முடித்தான் பெருமாள்.

“பெரிய இடத்து பொல்லாப்பெல்லாம் சம்பாரிச்சுட்டு வந்து நிக்கறீங்களே ; அவங்களுக்குத் தெரிஞ்சா இங்குள்ள நம்ம கதியெல்லாம் என்ன ஆவும்னு யோசிச்சுப் பாத்தீங்களா?”

“இதச் செய்யலேன்னா ஸாஹிராங்குற இந்தப் பொண்ணு செத்துப் போயிடுவா!’

“சாவட்டும் ! சந்தோசமா சாவட்டும் ! அதப்பத்தி நமக்கென்ன? நம்ம உசிருதாய்யா நமக்கு முக்கியம். நாளக்கே இவங்க ஏதாவது எசகுபிசகா நடந்தா நம்ம ஊருக்காரங்க

என்னையக் கொன்னு போட மாட்டாங்களா?”

“அப்படில்லாம் நடக்காதுப்பா! அனாவசியமா பயப்படாதீங்க!” என்று இடைமறித்துச் சொன்னான் சின்னதுரை.

“அடி செருப்பாலே! படுக்காளிப் பயலே – நீ இதுவும் பேசுவே இதுக்கு மேலேயும் பேசுவேலே!” என்று கூறிய படி எழுந்து சின்னத்துரையைப் பிடித்து இழுத்து ஓங்கி, ஓங்கி அடித்தார் பிச்சை.

“ஐயோ! அவர அடிக்காதீங்க!” என்றபடி சின்னத்துரையின் மேல் பற்றிப் படர்ந்தது ஸாஹிராக் கொடி.

***

இரண்டொரு நாளில் சேரி வாழ்க்கையில் தன்னை ஐக்கியப்படுத்த முயன்றாள் ஸாஹிரா . வருவோரும், போவோரும் அவள் அழகைப் பருகத் தவறுவதில்லை. ஆயினும் ஊர்ப்புள்ளிகளில் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தனர் – எந்த நிமிஷமும் எந்த ஆபத்தும் வரலாம்.

தெருவிலுள்ள பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தாள் ஸாஹிரா . ‘சர்ரென்று பக்கத்தில் ஜீப் வந்து நின்றதும் பார்த்தாள். குடத்தைப் போட்டு விட்டு வேகமாய் ஓடினாள். பின்னாலேயே அவளது அண்ணன் உமர் ஜவஹரும் அவன் கூட்டாளிகளான பொன்னையா, சுப்பு, தாஜுதீன், ஜஹாங்கீர், பாபு முதலானோரும் ஓடிவந்தனர். அவள் குடிசைக்குள் சிட்டாய் பறந்து தாழ் போட்டாள். வேகமாய் அந்தக் குடிசையை அடைந்த ஆறு பேரும் கத்தினார்கள், கதவை மடமடவென்று தட்டினார்கள்.

“வம்பை விலைக்கு வாங்கிக் கொண்ட”ஜனங்கள் எல்லாம் சின்னதுரை வீட்டின் முன் குழுமினர். சில பெரியவர்கள் அவர்களை அணுகி, “ஐயா, முதலாளிங்களா! என்ன விசயம்னு சொல்லுங்க!’ என்றனர்.

“என்னய்யா ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவங்க மாதிரி கேக்குறீங்க. ஊருக்குள்ள ஒரு பெண்ணை ஒருத்தன் கடத்திக்கிட்டு வந்திருக்கான். என்ன ஏதுன்னு யாராவது விசாரிச்சீங்களாய்யா?” என்று சீறினான் உமர் ஜவஹர்.

“கேட்டோம்யா கேட்டோம்! அந்தப் பொண்ணு தான் அவனோடு தான் வாழ்வேன்; இல்லேன்னா செத்துப் போயிடுவேன்னு சொல்லிக்கிட்டு ஓடி வந்துடிச்சாம்.”

“ஆமா! அவன் பெரிய சீமா ஊட்டுப் புள்ள. அதனால் தான் அவ அவனவுட்டா வேற நாதியே கிடையாதுன்னு ஓடி வந்திட்டாளாக்கும்?” என்று பாபு எகத்தாளமாய்க் கேட்டான்.

“அவன் கெட்ட கேட்டுக்கு அவனோட ஒருத்தி ஓடி வேற வரளாக்கும் ? நல்லா இருக்குய்யா நீங்க பேசுறது” என்று தாஜீதீனும் களத்தில் இறங்கினான்.

“கோபப்படாதீங்க முதலாளி ! சின்னஞ்சிறுசுக ஏதோ தப்புத் தண்டவா நடந்திடுச்சுங்களா, நீங்க தான் பொறுத்துக்கணும்” என்றார் ஊர்ப் பெரியவர் முத்தன்.

“என்னய்யா சின்னஞ்சிறுசுக? ஒரு பெண்ணையே ராவணன் மாதிரி தூக்கிட்டு வந்திருக்கான். இதாய்ய சின்ன விஷயம்?” என்று கேள்வி கேட்டான் உமர்ஜவஹர்.

“பொறுங்க! அவங்களையே கூப்பிட்டு விசாரிப்போம்” என்றபடி முத்தன் கதவைத் தட்டினார். சின்னத்துரை கதவைத் திறந்தான். அவனுக்குப் பக்கத்தில் பயரேகைகள் கண்களில் ஓட நின்று கொண்டு இருந்தாள் சின்னத்துரையின் தாய். “இந்த நேரம் பாத்து அவரு காட்டுக்குப் போயிட்டாரே!”

“வெளியே வாடா ராஸ்கல்! உன்னை ஒரு கை பாக்குறேன்!” என்று முஷ்டியை ஓங்கினான் உமர்ஜவஹர்.

“முதலாளி நில்லுங்க! அவங்க கிட்டேயும் விசாரிச்சுக்கிடுவோம். ஏம்ப்பா சின்னத்துரை – அந்தப் பொண்ணைக் கடத்திக்கிட்டு வந்துட்டேன்னு இவங்க எல்லாருமா சேர்ந்து சொல்றாங்களே! அது உண்மையா?” என்று வினவினான் முத்தன்.

“இல்லேங்க! அவதான் என்னைக் கூட்டிட்டுப் போன்னு சொன்னா”.

“பொய்யி! பொய்யி! டேய் எவ்வளவு தைரியமா பொய் பேசுறே. உன் நாக்கு அழுகிப் போயிடும்டா!” என்று உறுமினான் உமர் ஜவஹர்.

“வேணும்ணா ஒங்க தங்கச்சிய நீங்களே கேட்டுப் பாருங்க!”

“அந்தச் சிறுக்கிமவள் வெளியே வரச்சொல்லு!”

“ஸாஹிரா! ஒங்க அண்ணன் கூப்புடறாரு. வெளியே வந்து நீயே எல்லாத்தையும் சொல்லு!”

அவள் மெல்ல வந்தாள். மானின் விழிகள் மருண்டோடின. தன்னைச் சுதாரித்துக் கொண்டு தன் கால்களை அழுத்தமாக ஊன்றினாள். பொங்கி வந்த அனைத்து ஆத்திரங்களாலும் உமர் ஜவஹர் அவளை அங்கேயே கொன்று விடவும் சித்தமாயிருந்தான். எனினும் தன்னைக் கண்டு பயந்து அவள் வழிக்கு வந்து விட மாட்டாளோ?

தாஜுதீன் அவள் முன்னால் போய் நின்றான். “இந்தாப் பாரும்மா! ஸாஹிரா! உன்ன யாரும் எதுவும் செய்ய முடியாது. இதுக்குத் தான் நாங்கள்லாம் வந்துட்டோமே ! இன்னாபாரு பாபு , பொன்னையா, சுப்பு, ஜஹாங்கீர்னு எல்லோருமே வந்துருக்கோம். அதனால் நீ பயப்படாம உண்மையைச் சொல்லு . தப்பு தண்டாவா எது நடந்திருந்தாலும் நாங்க மன்னிச்சுடறோம்; வெளியே எதுவுமே பரவாமல் பாத்துக்கிடறோம்.”

“இப்ப நான் என்ன சொல்லணும்?” – ஸாஹிரா.

“சின்னத்துரைதான் என்னைக் கடத்திட்டு வந்தான்னி இவங்க முன்னால் சொல்லிடு”.

“இந்தச் சேரிக்கு நான் தான் சின்னத்துரையைக் கடத்திக்கிட்டு வந்தேன். போதுமா?”

புலிப் போலப் பாய்ந்தான் உமர் ஜவஹர். அடிபட்டுக் கீழே விழுந்த வேகத்தில் ஸாஹிராவின் வாயிலிருந்து ரத்தம் ஒழுகியது. கண்களின் பக்கத்தில் அடிபட்டு வேகமாக வீங்க ஆரம்பித்தது. எனினும் அழாமல் எழுந்திருக்க முயன்றாள் . ஓடோடிப் போய் ஜஹாங்கீர் அவளைத் தூக்க முயன்றான். சின்னத்துரையும் சேர்ந்து தூக்கினான்.

“நாயே! கையை எடுடா. நீ என்னடா அவள தூக்குறது?” என்று மேலும் கோபமாய்க் கத்தினான் உமர்ஜவஹர்.

“நான் தொட்டு தாலி கட்டப் போற பொண்டாட்டி அவ.”

சின்னத்துரை இவ்வாறு சொல்லியதும் உமர் ஜவஹரின் நண்பர்கள் அவனை அடிக்கப் பாய்ந்தார்கள்.

ஆனால் அவ்வாறு அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடா வண்ணம் அங்கு கூடியிருந்த ஜனங்கள் சுற்றி வளைத்தார்கள்.

“எங்க கண்ணு முன்னாலேயே எங்க ஊருக்காரவுங்கள் அடிச்சா நாங்க எப்படி பொறுத்துக் கொள்ளுவோம்” என்று முத்தன் கோபப்பட்டார்.

அப்போது ரவிராஜ் – அந்தச் சேரிப் பள்ளிக்கூடத்து வாத்தியார் – முன் வந்து சமாதானம் செய்தார். “யாரும் கோபப்படாதீங்க – நான் பேசிப் பாக்குறேன்.”

பின்னர் ரவிராஜ் அவர்களைனைவரையும் அழைத்துப் பேசினார். கூடவே முத்தனும் இருந்தார்.

அந்த ஊர் ஜனம் ஆத்திரத்தில் இருக்கின்றதை ஜகாங்கீரும், பாபுவும் நன்கு உணர்ந்தனர். “சரி சார் ! ஸாஹிராகூட நாங்க நினைச்சு வந்த மாதிரி பேசல. அவ விரும்பியே வந்திருக்குறதா தெரியுது. ரெண்டு, மூணு ராத்திரி அவளும் அவனும் அந்தக் குடிசையில் தான் தங்கியிருக்காங்க. அதனால அவங்களுக்குள்ள எதுவும் நடந்திருக்கலாம். பேசாம

சின்னத்துரையை எங்க மதத்துல சேத்துக்கிடறோம். அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுறதுக்கு அந்த ஒண்ணு தான் வழியாத் தெரியுது.”

“டேய் ஜஹாங்கீரு! என் தங்கச்சி தலைவிதியை நீ என்னடா நிர்ணயம் பண்ணுறது? உனக்கு எவண்டா அதிகாரம் தந்தான்? கன்னாபின்னான்னு என்னென்னலாமோ வாய்க்கு வந்த படி பேசுறே! முதல்ல உன் மூளையைச் சலவைக்குப் போடு!”

“உமரு கோபப்படாதே. முதல்ல இவங்க ரெண்டு பேரையும் நம்ம இடத்துக்குக் கூட்டிகிட்டு போகணும். அப்பதான் நாம் நெனச்ச மாதிரி எல்லாக் காரியத்தையும் கச்சிதமா நடத்த முடியும். இதுக்கா வேண்டித்தான் ஜஹாங்கீரு இப்படிப் பேசுறான்னு நான் நெனக்கிறேன்” என்று உமர் ஜவஹரின் காதைக் கடித்தான் பொன்னையா. அது தான் உண்மை போலும் என்று நம்பிய உமர் ஜவஹர் ரவிராஜிடம் கூறினான்.

“இத பாருங்க சார்! நாங்க முதல்லே இவங்க ரெண்டு பேரையும் எங்க வூட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம். அங்க வச்சு சின்னத்துரையை எங்க மதத்துல சேத்துக்கிடறோம். அப்புறம் ஒரு நல்ல நாளா பாத்து முறைப்படி கல்யாணம் நடத்திக்கிடறோம். ஒங்களுக்குச் சம்மதம் தானே!”

ரவிராஜ் வாத்தியார் இதனை அங்கு கூடியிருந்த சின்னத்துரை , ஸாஹிரா மற்றும் அனைவரிடமும் கூறினார். யாரும் ஆட்சேபம் எழுப்பிக் கொள்ளவில்லை.

சின்னத்துரையும், ஸாஹிராவும் சாமான்களை எடுத்துக் கொண்டு ஜீப்பில் ஏறினர். மற்றவர்களும் ஏறிக் கொள்ள வந்த வழியை ஞாபகம் வைத்துத் திரும்பச் சென்றது ஜீப்.

நேராக ஊர் வந்து சேர்ந்த ஜீப் போலீஸ் ஸ்டேஷனின் முன் போய் நின்றது . சின்னத்துரையும், ஸாஹிராவும் உள்ளூர அச்சப்பட்டனர். இத்தனை

நேர மகிழ்ச்சியையும் இந்த ஒரு கனம் துன்பமாக ஆக்கிவிட்டது போல் இருந்தது.

“மம் ! இறங்குங்க” என்று கடுகடுப்பாய்ச் சொன்னான் உமர் ஜவஹர்.

“அண்ணே! வீட்டுக்குப் போக வேண்டாமா?” என்று கேட்டாள் ஸாஹிரா.

“முதல்ல மாமியார் வீடு. அப்புறம் தான் நம்ம வீடு” என்று கேலி செய்தான் உமர் ஜவஹர்.

“ஜவஹர், நாம் பேசி வந்தது என்ன? இப்போ நீ செய்யறது என்ன?” வினவினான் ஜஹாங்கீர்.

“என் நியாயம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம்.. இஷ்டமில்லேன்னா இறங்கிப் போயிடு!”

“ஒரு பொண்ணுக்குத் துரோகம் பண்ணாதேடா?”

“அந்தப் பொண்ணு என் தங்கச்சி தான். உன்னோட வேலை என்னவுண்டோ அதப் பாத்துட்டுப் போ!”

“குட்பை” என்று தன்னைப் பிரித்துக் கொண்டான் ஜஹாங்கீர்.

அதே சமயத்தில் ஜீப்பிலிருந்து இடையிலேயே இறங்கியிருந்த பொன்னையா , ஸாஹிராவின் வாப்பாவை சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து வந்தான்.

ஜீப்பிலிருந்து ஸாஹிராவின் கையைப் பிடித்து இழுத்தான் உமர் ஜவஹர் சின்னத்துரையின் கழுத்தில் கையை வைத்துத் தள்ளினான் சுப்பு. உள்ளே சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரனும் ஒன்றிரண்டு போலீஸ்காரர்களும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர் . “குற்றவாளி” களை அவர் முன்பு கொண்டு போய் நிறுத்தினர். பேச்சை நிறுத்திய பாஸ்கரன் அவர்களின் மீது கவனம் செலுத்தலானார் . ஸாஹிராவின் பேரழகில் அப்படியே ஸ்தம்பித்துப் போனார் பாஸ்கரன். பார்த்த மாத்திரத்திலேயே அவள் ஒரு முஸ்லீம் என்பதைக் கண்டு கொண்டார். அவர் மனதுக்குள் பாராட்டி மகிழ்ந்து கொண்டார்.

உமர் ஜவஹர், சுப்பு, பொன்னையா மூவருக்கும் சம்பவங்களை விவரித்து இவளை அவன் கடத்திப் போனதாக கூறினார்கள். சின்னத்துரையையும், ஸாஹிராவையும் விசாரித்த போது கதையே தலை கீழாக மாறிப் போவதை அறிந்தார். “இருந்து இருந்து இந்தப் பேரழகி இந்தப் பறையனையா காதலிச்சிட்டு ஓடினா” என்று மனத்துக்குள் உஷ்ணப்பட்டுக் கொண்டார். அவள் மீண்டும் சின்னத்துரைக்கு சாதகமாகப் பேசினது அங்கிருந்தவர்களுக்குச் சங்கடமாகவே இருந்தது.

பாஸ்கரன் கேட்டார், “நீங்க என்ன சொல்றீங்க? ரெண்டு பேருமே ஒரே கதை தான் சொல்றாங்க. இதுல நான் என்ன பண்ணணும்னு நீங்களே சொல்லுங்க!”

“சப்-இன்ஸ்பெக்டர் சாரு! அவன் என் மவளக் கடத்திக் கிட்டுப் போயி ஏதோ மருந்து மாயம் பண்ணி தனக்குச் சாதகமாகப் பேச வைச்சிருக்கான்” என்றார் மொன்னா முகம்மது.

“அப்படில்லாம் சொல்லாதீங்க வாப்பா! எனக்கு எந்த மருந்து மாயமும் பண்ணலே!” என்று இடை மறித்தாள் ஸாஹீரா.

“சும்மா இருடி, கழுதே, அனாவசியமா தலையிட்டுப் பேசாதே. அப்படிப் பேசினா தொலைச்சுப் போடுவேன்” – உமர் ஜவஹர்.

“சார் என் மவ ஒண்ணும் அறியாதவ. நீங்க தான் காப்பாத்திக் குடுக்கணும்” என்று பரிதாபமாய்க் கூறினார் அவள் வாப்பா.

“ஒங்க பொண்ணுக்கு வயசு என்னாச்சு?”

உமர் ஜவஹர் மின்னல் வேகத்தில் யோசித்துப் பட்டென்று பதில் சொன்னான் . “வயது பதினாறு தான் ஆவுது சார்”

“அப்படீன்னா இது குற்றமாச்சே. அவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் பண்ணி வைக்க முடியாது, இனி நான் கவனிச்சுக்குறேன்”.

“அப்படியே செஞ்சிடுங்க சார்!” என்று இளித்தான் உமர்ஜவஹர்.

“நீ வீட்டுக்கு வாம்மா. ஒனக்கு வேறே நல்ல இடமா பாத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார் மொன்னா முகம்மது.

“வேண்டாம், வேண்டாம். என்ன இப்படியே உட்டுடுங்க” என்று அவள் மீண்டும் தன் வலுவைக் காட்டி நகர மறுத்த போது அவளைச் சுருட்டி வாரி எடுத்து ஜீப்பில் திணித்தான் உமர் ஜவஹர்.

“இன்ஸ்பெக்டர் சார்! அவளக் காப்பாத்துங்க. அவ இல்லாம என்னால் வாழ முடியாது. எங்கள் ஏமாத்திக் கூட்டிட்டு வந்துட்டாங்க!” என்று கத்தினான் சின்னத்துரை.

“கழுதை! நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு காதல் வேற வாழுதோ?” என்று ஓங்கி ஒரு குத்து விட்டார் பாஸ்கரன். அவன் உள்ளே போய் விழுந்தான்.

(தாமரை – நவம். 85)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *