அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான்.
காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில் பிரசுரமாகியிருந்ததுதான். ஏற்கனவே அவனது படைப்புகள் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்டு பிரசுரமாகி இருப்பினும், அவனுடைய இந்த பிரத்தியேக சந்தோஷத்திற்கு காரணம், சுமதியுடன் பரிச்சயமான இந்த ஆறு மாதத்தில் பிரசுரமாகும் முதல் கதை என்பதுதான்.
சுமதி….
அவன் வேலை செய்யும் அலுவலக மேலாளரின் ஒரே செல்ல மகள்.
ஆறு மாதங்களுக்கு முன் அகமதாபாத்தில் சிஸ்டம்ஸ் அனலிஸ்டாக சேர்ந்தபோது குஜராத்தியோ, இந்தியோ பேசத்தெரியாமல் தரையில் விழுந்த மீனாக இவன் தவித்தபோது தமிழ் தெரிந்த மேலாளர் சந்தானம்தான் இவனிடம் அன்பும் பரிவும் காட்டி கடைகளுக்கு கூட வந்து குஜராத்தியில் சரளமாகப் பேசி இவனுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தன் வீட்டிற்கும் அழைத்துச் சென்று தன் மனைவியையும், ஒரே மகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
சுமதி, பி.காம். கடைசியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவளின் பூரிப்பான இளமையும், புத்திசாலித்தனமும், சரளமாகப் பேசும் குஜராத்தியும், இந்தியும் அவனை பிரமிக்க வைத்தன. புருவத்தை உயர்த்தி, தோளைக் குலுக்கியபடி அலட்சியமாக அவள் பேசும் போது அதில் ஒரு அதீத கவர்ச்சி இருந்தது.
சென்ற சில மாதங்களாக இவனுடைய பெரும்பாலான சனி, ஞாயிறுகள் சுமதியுடன் அவள் வீட்டில் டெலிவிஷன் பார்ப்பதிலும், செஸ் விளையாடுவதிலும், அரட்டையடிப்பதிலும் கழிந்தன.
சந்தானத்திற்கும், அதைவிட அவர் மனைவிக்கும் இவர்கள் இவ்விதம் நட்புணர்வோடு பழகுவதில் ஒரு வித ஆரோக்கியமான அங்கீகரிப்பும், எதிபார்ப்பும் இருக்கவே செய்தது.
தன கீழ் வேலை செய்யும் இவனது கெட்டிக்காரத்தனமும், முன்னுக்கு வர வேண்டும் என்கிற முனைப்பும், அவனது கொழுத்த ஐந்திலக்க சம்பளமும், குலம் கோத்திரமும், நல்ல குடும்பப் பின்னணியும் – ஏன் இவனையே நம் சுமதிக்கு மணமுடிக்கக் கூடாது – என்கிற ரீதியில் அவர்கள் சிந்தனை இருந்ததை இவன் நன்கு அறிவான். தவிர, இவனுக்கும் சுமதியின் மேல் ஒரு ஆரம்பக் காதல் அரும்பியிருந்தது.
சென்ற வாரத்தில் ஒரு நாள், தான் இதுகாறும் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரமான கதைத் தொகுப்புகளை சுமதியிடமும், அவள் பெற்றோர்களிடமும் இவன் கான்பித்தபோது, சுமதி இவனது கதைகளின் தலைப்புகளை எழுத்துக்கூட்டி மிகவும் மெதுவாகப் படித்தாள். அவளுக்கு பிற மொழிகளில் இருந்த சரளம் தாய்மொழியான தமிழில் இல்லாததைப் பார்க்க இவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.
அதே சமயத்தில் என்ன கதை? அதன் கருத்து யாது? என்பது பற்றி சுமதி தன்னிடம் கேட்காதது ஒரு புறம் ஏமாற்றமாகவும் இருந்தது. இவனது ஏமாற்றத்தை புரிந்துகொண்ட சந்தானம், பதினைந்து ஆண்டுகளாக தான் அகமதாபாத்தில் இருப்பதால் சுமதிக்கு தமிழ் படிக்க வாய்ப்பில்லாததை இவனிடம் விளக்கிச் சொன்னார்.
திருமணத்திற்குப் பின் உங்க மகளை தமிழ் படிக்க வைக்க நானாச்சு என்று இவன் மனதில் எண்ணிக் கொண்டான்.
இவனுடைய எண்ணங்கள் சற்று விரிவானவை, வித்தியாசமானவை.
கல்கி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சுஜாதாவின் எழுத்துக்களில் மிகவும் மனம் லயிப்பவன். அத்துடன் நில்லாமல் தமிழ் இலக்கியத்திற்கென்று ஒரு நல்ல பத்திரிகை தொடங்கி, தனக்கென்று ஒரு தனியிடத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்ற நெருப்பு இவனுள் கனன்று கொண்டேயிருந்தது.
இந்த கம்ப்யூட்டர் படிப்பும், அதைச் சார்ந்த தன்னுடைய வேலையும் எல்லோரும் செய்வதுதான், வெந்ததை தின்றுவிட்டு விதி வந்தால் சாகிற ஜாதியல்ல நான்…அழகாக எழுதும் கலை என்னிடம் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் தன் பெயர் கல்வெட்டாக பதிய வேண்டும் என்கிற ரீதியில் அடிக்கடி நினைக்கையில், கனன்று கொண்டிருக்கும் நெருப்பு இவனுள் ஜ்வாலையாகக் கொழுந்து விட்டு எரியும்.
அலுவலகத்தில் இவனது கதையைப் படித்துப் பார்த்த சந்தானம் இவனைப் பெரிதும் பாராட்டினார். தன வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்தார்.
அன்று மாலையே இவனும் மிக நேர்த்தியாக உடையணிந்துகொண்டு, மிகுந்த எதிர் பார்ப்புகளுடன் சுமதியைப் பார்க்கும் ஆவலில் கதை வெளிவந்த ஆனந்த விகடன் பிரதியை எடுத்துக் கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றான்.
சுமதிக்கு அன்று கல்லூரியில் கலை விழா, எனவே அவள் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகும் என்று திருமதி சந்தானம் சொன்ன போது, சற்று எமாற்றமடைந்தாலும், அவளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
எட்டரை மணிக்கு வீடு திரும்பிய சுமதி இவனைப் பார்த்து “ஹாய்” சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து, கல்லூரி விழாவிற்காக தன் முகத்தில் போடப்பட்டிருந்த ஏராளமான ஒப்பனை சங்கதிகளை ஸ்பாஞ்சினால் துடைத்துக் கொண்டிருந்தாள்.
சுமதியின் தாயார், “சுமி, உனக்குத் தெரியுமா.. நம்ம கண்ணனோட கதை விகடன்ல வந்திருக்கு” என்று கதை பிரசுரமான பக்கங்களை அவளருகில் சென்று விரித்துக் காட்டினாள்.
தலையை பிரஷ்ஷினால் கோதிக் கொண்டிருந்தவள் மிக அலட்சியமாக, “ஹூவ்… மம்மி, ஹூ வில் ரீட் டமில், டோன்ட் இரிடேட் மி” என்று தன் புறங்கையினால் பத்திரிக்கையை தள்ளினாள். பத்திரிகை கீழே விழுந்து பக்கங்கள் காற்றில் பட படத்தன.
கதை பிரசுரமான சந்தோஷம் முற்றிலும் அடிபட்டுப் போய், அவளின் இந்தச் செய்கை இவனைப் பெரிதும் சுட்டது. தன் தாயையே அவள் பழித்தது போல் எண்ணி இவன் மிகவும் குறுகிப் போனான்.
இவளைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள் தன்னால் மட்டுமே தன்னுள் வளர்க்கப்பட்டு… ச்சே ! தன்னில் சரிபாதியாக இவளைத் தான் ஏற்றிருக்கக் கூடிய அபாயத்தை நினைத்து மிகவும் வெட்கிப் போனான்.
தன்னுள் கனன்று கொண்டிருக்கும் தமிழ் சிறுகதை இலக்கியம் என்கிற நெருப்பை இவளால் தூண்டமுடியாது, அட… தூண்ட வேண்டாம், குறைந்தபட்சம் அந்த நெருப்பில் குளிர்காயும் தகுதிகூட இவளுக்கு கிடையாது என்று உணரத் தலைப்பட்ட ஷணத்திலேயே அவளிடமிருந்து இவன் மீண்டான்.