ஆத்தா….!!!
கண்ணம்மா கொரலே சரியில்ல..
எப்பவும் சிரிச்சுகிட்டே வார கண்ணம்மாவா இது..?
“எங்கண்ணு…எஞ்சாமி…!
ஏம்புள்ள.. கண்ண கசக்கிட்டு ஓடியாராப்புல…என்ன வெசயம்.?
கண்ணம்மா பதில் ஏதுங் கூறாம ஆத்தா மடியில தொப்புன்னு விழுகுறா..
விசிச்சு, விசிச்சு அழுகுற சத்தம் மட்டும் கேக்குது..
“ஏ..புள்ள..எந்திரி… சொல்லு கண்ணு… என்ன நடந்துபோட்டுதுன்னு இப்படி அழுகுறவ..?
வெவரமா சொன்னாத்தானே வெளங்கும்…!
கண்ணம்மா மொகத்த நிமித்தி பாக்குறா கண்ணாத்தா…!!
கண்ணெல்லாம் செவசெவன்னு…மொகமெல்லாம் வீங்கி….!
விசுக்குனு எழந்தவ…
“ஆத்தா…அந்த கொடுமைய நான் என்னன்னு சொல்ல..
கண்ணாலத்துக்கு தேதி குறிச்சிட்டாரு எங்கையன்..வர தை மாசம் பத்தாம் தேதி….”
“ஏம்புள்ள…ஆயா.அப்பன்னு இருந்தா பிள்ளைக்கு கண்ணாலம் கட்டி பாக்க மாட்டாங்களா…??இதில என்ன அதிசயத்த கண்டுபிட்ட..??”
“மாப்பிள யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி கேக்க மாட்ட ஆத்தா..?
“அதையும் சொல்லிப் போட்டு அழுவியாம்…”
“எம் மாமா மவன் கொமாரு.. !!!”
“வெள்ளியங்கிரி மவன் கொமாரா..??ஊரரிஞ்ச களவாணிப்பயலாச்சே..!!”
“இப்பம் சொல்லு ஆத்தா ..நாண்டுகிட்டு சாகலாம்னு தோணுது..
பொன்னரளி வெதயிருக்கு… ஒரு மொழம் கயிறிருக்கு…
ஊர்ல இல்லாத கேணியா…கொளமா?? “
“நல்லா இருக்கு கண்ணு நீ பேசறது….உன்ற உசிரு உனக்கு அம்புட்டு எளப்பமா போயிருச்சா…??
தவமா தவமிருந்து பெத்த பிள்ள நீ..எவனோ ஒரு கூறுகெட்ட வெளங்காப்பயலுக்காக உன்ற உசிர விட்டிடுவியா….நிறுத்து பிள்ள!!!
நீ அந்தப் பயல கண்ணாலம் முடிக்கணும்னு புத்தியிருக்கிற மனுசன் எவனும் சொல்லமாட்டான்.
எங்க அமுச்சி ஒரு பாட்டு பாடும்..கேளு…
“ஆக்கவாணாம் அரிக்கவாணாம் அறிவிருந்தால் போதுமடி….
கண்ணடிக்கிற பயலைக்கண்டால்
கண்ணெடுத்துப் பாக்காதடி..
காவாலிப் பயலைக்கண்டால்
காலாட்டிக்கிட்டு நிக்காதடி ……
நெத்தியிலே பொட்டுவைச்சு
நெருங்கிநின்னு பேசாதேடி
புருவத்திலே மையைவச்சு
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி …
வெத்திலபாக்குப் போட்டுகிட்டு
வெறும்பயலப் பாக்காதடி
புகையிலையைப் போட்டுக்கிட்டு
பொடிப்பயலைப் பாக்கதடி …
வாறவனையும் போறவனையும்
வழிமறிச்சுப் பேசாதேடி –
சந்தைக்குப்போற சனங்களைநீ
சாடைப் பேச்சுப் பேசாதேடி ………”
கேட்டியில்ல….பிள்ள…!
இதுல ஒன்ற தப்பு ஏது பிள்ள ?
ஆமா… நான் ஒண்ணு கேட்டா உண்மைய சொல்லிப்போடணும்..
சத்தியம் பண்ணு…!!”
“ஆயி…அப்பன் மேல் சத்தியம்….கேளு ஆத்தா….!!!”
“உன்ற மனசுக்குள்ள யாராச்சும்….???”
கண்ணம்மா மொகம் செம்பருத்தி பூவாட்டம் செவந்து போச்சு….!!!”
கண்ணம்மாவுக்கு தங்கராசு மேல இஷ்டம் இருக்காப்ல..!!!
தங்கராசுன்னா ஊர் சனம் அம்புட்டும் கையெடுத்து கும்புடும்…
இளவயசு…ஆனா வயசுக்கு மீறின அறிவு….
“ஏங்கண்ணு… அவனுக்கு உம்மேல…!!”
“கதையக் கேளு ஆத்தா….
நம்ப கார்மேக கவுண்டர் தோட்டத்தில வேல பாத்துட்டு திரும்பினேன்… வழியில மொட்ட கெணறு ஒண்ணு இருக்குதில்ல…பாக்காம அதில விழுந்திட்டேன் ஆத்தா….
அம்மாதான் என்னிய தண்ணியில கண்டம்னு நீச்சல் கத்துக்கிட விடலியே…
“ஆஆஆன்னு பெருங்குரலெடுத்து கத்திபுட்டேன்….
தங்கராசு அக்கட்டால வந்திருக்கும் போல….
விசுக்குன்னு குதிச்சு என்ன அப்பிடியே குண்டுகட்டா தூக்கி ….
மேல சொல்ல வெக்கமா இருக்குது ஆத்தா…!!
அப்பவே கண்ணாலம் முடிஞ்ச மாதிரி தோணிப்போச்சு….!
கட்டுனா அவனத்தான் கட்டுவேன் ஆத்தா…!
ஆனா அவம்பேரச் சொன்னாலே அப்பா அரிவாளத் தூக்கிடுவாரே..!”
‘ஏண்டி… பள்ளப்பயதான் கெடச்சானா… இரண்டு பேரையும் வெட்டிப்போட்டுத்தான் மறு சோலின்னு”கெடந்து குதிப்பாரே…
ஆத்தா நானு ஒண்ணு கேக்குறேன்….என்னிய மொதமொத தொட்டவன் அவந்தான்..கட்டப் போறவனும் அவந்தான்..!
நானு இப்பம் உசிரோட இருக்கேன்னா அதுக்கு காரணம் அந்த தங்க மனுசன்தானே…அப்ப எங்க போச்சுது இந்த பாழாப்போன சாதி …கீதியெல்லாம்….“
“கண்ணம்மா…. புரிஞ்சு போச்சு பிள்ள…உன்ற கதான் என்ற கதயும்.
முழுசும் கேட்டுபோட்டு அப்புறம் சொல்லு உம்முடிவ….
கண்ணாத்தா கதய கேப்பமா..?
***
பொள்ளாச்சி……
ஊருன்னா அதில்ல ஊரு…’பொழில் வைச்சி’ அப்பிடின்னு ஒரு காலத்துல கூப்பிடுவாங்களாம்…
சோழருங்க காலத்தில ‘முடிகொண்ட சோழநல்லூர்’ அப்பிடின்னு பேராமில்ல….
அதுல’கெணத்துகடவு’ ன்னு ஊரு..அக்கட்டால மூணு கிலோமீட்டர் நடந்தீங்கன்னா ‘ கல்லா காட்டு புதூர்…
அங்க பொறந்தவதான் நம்ம ‘சின்னக்கண்ணு’…இப்பம் ‘கண்ணாத்தா’…
அப்பா கனகசபாபதி ஊர்கவுண்டர். அம்மா பொன்னாத்தா..!
பத்து வருசம் பிள்ளையில்லாம ஊரு தெய்வம் கவகாளியம்மன நேந்துகிட்டு பொறந்த ஒரே ஒரு வாரிசு….
அவ பேச்சுக்கு மறுபேச்சு கெடையாது…
வடக்கே பாத்த வீடு..அரண்மன கணக்கா….தெம்புறம் அடுப்பு…பத்து பேரு நின்னு சமைக்கலாம்…
வடபுரம் சலதாரை…
சமையலுக்கு நாலு ஆளு….
ஆக்காத சோறில்ல.திங்காத பணியாரமில்ல……
சோளக்களி..சோள சோறு..சாமசோறு.வரகு..
கொள்ளு..நரிப்பயறு துவையல்…
கொள்ளுப் புட்டு… அதிரசம்..லட்டு.முறுக்கு..
ஆத்தாளும் அப்பனும் சோடி போட்டு வந்தாங்கன்னா ஊரு சனம் அம்புட்டும் கையெடுத்து கும்பிடும்…
அம்மிணி ஆளானதுமே மாப்பிள பாக்க ஆரம்பிச்சிட்டாங்க….
நான்.நீன்னு போட்டி போட்டுத்தான் வரிசையில நின்னாங்க…
சரவணன்…பொன்னாத்தா வகையில தூரத்து சொந்தம்…
கோயமுத்தூர்ல பெரிய மில்லு…வெல்லமண்டி..தோப்பு தொரவு….!!
ஆனா சின்னக்கண்ணு மனசில வேற படமில்ல ஓடிட்டு இருக்கு…
சின்னக்கண்ணு பத்தாவது வரைக்கும் படிச்சவ….கெணத்துகடவு பள்ளிக்கோடத்திலதான் படிச்சவ…
அவளுக்கு பாடம் சொல்லிக் குடுத்தவந்தான் இளங்கோ..
இளங்கோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காப்ல… !
அவுங்க சாதியிலே இத்தன படிப்பு படிச்ச மொத ஆளு…!
சின்னக்கண்ணு ஒண்ணாப்புலிருந்தே வகுப்புல மொத ஆளா நிப்பா..!
இளங்கோவுக்கு மொத நாளே அவள பிடிச்சு போச்சு…!
இளங்கோ மேல கொஞ்சம் கொஞ்சமா ஆச வச்சவ அப்புறம் அவனில்லாம அவ உசிரில்லன்னு புரிஞ்சு கிட்டா..!
இளங்கோ திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கான்..
“இது நமக்கு ஒத்து வராது கண்ணு…. இரண்டு உசிரில ஒண்ண எடுத்துப் போட்டுத்தான் ஊர் சனம் அடங்குமின்னு..”
அம்மணி பிடிச்ச பிடியில இருக்கா…
பெரியவுக சேந்து ஒரு நாள் குறிச்சு கவகாளியம்மனுக்கு பூப்போட்டு பாக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க..
அலங்காரம் பண்ணிகிட்டு சொலிக்கிறா காளியம்மா…
மணி சத்தம் மனச அப்பிடியே உருக்குது…
தெர வெலகுது…
“அம்மா…தாயே…உத்தரவு குடும்மா”
எல்லாரும் விழுந்து கும்பிடுறாங்க.
பூசாரி நெடுநேரம் நிக்கிறாரு..
உம்ஹூம…பூ விழுந்தாத்தானே. சனத்துக்கு ஒண்ணும் வெளங்கல…
சரவணனப் பெத்தவங்க ஒரே குறியா நிக்குறாங்க.. கட்டுனா சின்னக்கண்ணுவத்தான் கட்டணுமின்னு…
ஒரே ஒரு ஆளுக்கு மட்டும் காளியம்மன அப்பிடியே தொட்டு கும்புடணம்போல இருந்திச்சு..
ஆனா பொன்னாத்தா விடலயே..
“ஏதும் சாமி குத்தம் இருக்குமோ… பூசாரி ஐயா..??? பரிகாரம் ஏதும் இருக்குதா….??”
இருக்கும்மா….வாழ மரத்துக்கு தாலி கட்டி வெட்டி புட்டு வாங்க. மறுக்க ஒரு மொற பூப்போட்டு பாப்பம்…’
பூசாரி சொன்னபடி செஞ்சு முடிச்சு பூப்போட்டு பாத்தச்சு…
இந்த மொற அந்த காளியாத்தா கண்ணம்மாவ கைவிட்டு போட்டாளே…!
வெள்ளப்பூ….!!!!!!
சரவணனுக்கு ஒரே கொண்டாட்டம்.. சின்னக் கண்ணு மேல எப்பவுமே ஒரு கண்ணு வச்சவன்தானே…
சின்னக் கண்ணு நெலமைய யோசிச்சு பாருங்க…
“பச்சை ரயிலேஏறி
பழனிமலை போயிறங்கி.
பந்து பந்தா பூவெடுத்து
பழனி மலை ஆண்டவருக்கு
படிப்படியாக பூச பண்ணி
பத்தில் ஒரு தெய்வம் ..
பக்கம் வந்து நிக்கலியே
செவப்பு ரயிலேறி
சென்னிமலை போயிறங்கி
செண்டு செண்டா பூவெடுத்து
சென்னிமலை ஆண்டவருக்கு.
எடுத்தெடுத்து பூச பண்ணி
எட்டில் ஒரு தெய்வம்…
எதுக்க வந்து நிக்கலையே..!”
தேம்பி தேம்பி அழுகுறா..
யாரும் காணாம இளங்கோவப் போயி பாக்குறா..
“நானு என்ன சொன்னாலும் கேப்பியா…”
“என்ன மாமா இப்படி கேட்டுபுட்டீங்க…ஒடற ரயில்லேயிருந்து குதின்னு சொல்லுங்க…. குதிச்சு காட்டுவா இந்த சின்னக்கண்ணு….
செஞ்சுபுட்டாளே…!
மீதிக் கதய கேட்டாத்தான் ஒங்களுக்கு வெளங்கும்…
****
ஊர் முச்சூடும் ஊர்கவுண்டர் வீட்டு கல்யாணப் பேச்சில்ல அடிபடுது..
பொன்னாத்தாளுக்கு காலு தரையில பாவுல..
உப்பு ஜவுளி எடுக்க நாள் குறிச்சாச்சு..
மாப்பிள்ள வீடும் பொண்ணு வீடும் கெளம்பிட்டாங்க…
“என்ன பிள்ள மசமசன்னு நிக்குற.கழுத்தில கையில ஒண்ணுத்தையும் காணம்.என்னிய எல்லோரும் எளக்காரமா பாக்கமாட்டாங்க..?”
பல்லக் கடிச்சுகிட்டே நகையெல்லாம் எடுத்து பூட்டுறா சின்னக் கண்ணு….
சின்னக் கண்ணு மனசு நழுவி நழுவி எங்கியோ போவுது…
பெரிய கட வீதி..பட்டு ஜவுளி கடை..!?
பொம்ளைங்க நாலு பேரு சேந்தா கேக்கணுமா…?
“இது நல்லாருக்கு…சுகுணா நீ இத எடுத்துக்க கண்ணு….’
“அப்பத்தாளுக்கு இத தனியா எடுத்து வச்சிடுங்க…’
“சோதி..உனக்கு இது எடுப்பா இருக்கும் பிள்ள…பச்ச கலருல செவப்பு பார்டரு…!!”
பொம்பளைங்க கண்ணெல்லாம் சவுளி மேலதான்…
ஆம்பளையாளுங்க மொத்தமும் ரூம்பு போட்டு சீட்டும் , பேச்சும், சிரிப்பும்…
“கல்யாணப் பொண்ணுக்கு சீல எடுத்து வையுங்க ஆத்தா…!”
“சின்னக்கண்ணு..பக்கத்தில வந்து உக்காரு பிள்ள.’யாருக்கு வந்த விருந்தோன்னு’ எங்கிட்டு போயி உக்காந்திருக்க.???
கல்யாணம் எங்களுக்கில்ல… உனக்குத்தான்…”
ஒரே சிரிப்பு…
மாமியார்காரி ஆச ஆசயா கூப்பிடுறா..
“சின்னக்கண்ணு..எஞ்சாமி. சின்னக்கண்ணு..எங்கிட்டு போயிட்டவுக…?
“அப்புச்சி..அவ பாத்ரூம் போகணும்னு சொல்லிப் போட்டு அக்கட்டால போனா..இப்பத்தான் நாபகம் வருது….”
பொக்குனு போயிடிச்சு மாமாயிர்காரிக்கு…
“என்ன பிள்ளை…கூறு கெட்டத்தனமா இல்ல இருக்கு. கல்யாணப் பொண்ணு.கழுத்து நெறய நகைங்க .. யாராச்சும் கூடப்போகமாட்டாம…!!”
விசுக்குன்னு எழுந்தவதான்.
“அத்தே…இத பத்திரமா வச்சுக்கன்ன சொல்லிட்டுவேற போச்சு….”
கர்ச்சீப்புல மூட்ட கட்டி…என்னத்த குடுத்தா..?
பொன்னாத்தா தொறந்து பாக்குறா..மின்னுது கழுத்தில கைல போட்ட நகைங்க…
ஒரு நிமிஷம் ஈரக்கொலையெல்லாம் நடுங்கி, ஆடிப்போய்ட்டா ஆத்தாகாரி…
அவளுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு..
‘ஐய்யோ…எம்மவளே. எஞ்சாமி !? சதி பண்ணிபுட்டியே…!
மயங்கி சாஞ்சவள தாங்கி பிடிக்கிறாங்க..
பாத்ரூமுக்கு போன சின்னக் கண்ணு எல்லாத்து கண்ணிலையும் மண்ணத்தூவிப்போட்டு வெளியில காத்துகிட்டு நிக்கிற இளங்கோ கையைப் பிடிச்சுகிட்டு அழவுறா…
அப்படியே அவள கட்டி அணச்சுகிட்டு இளங்கோ சொல்றான்…
“கண்ணு…என்னிய நம்பி கட்டின துணியோட வந்திட்ட.. கடைசி வரை கண்கலங்க விடமாடேன்..எல்லாரும் வரதுக்கு முன்ன இந்த ஊர விட்டு ஓடணும்..தயாராக இருக்கியா…?
“ஆமா மாமா….!!!”
அழுகையும் சிரிப்புமா அவன் கைய கெட்டியா பிடிச்சவதான்…
நின்னுகிட்டு இருந்த ரயில்ல ஏறிட்டாங்க..எங்க போகுது , என்ன விவரம் ஒண்ணும் பாக்கல..
உடனே கெளம்பிட்டுது…
காலியாத்தான் இருந்திச்சு…
ஏதோ பழனிக்கு போகுதுன்னு பேசிக்கிட்டாங்க..!
கொஞ்சம் தூரம்கூட போவல ..கசமுசன்னு பேச்சு…
வண்டியில போலீஸாம்.. கூட நாலைஞ்சு ஆம்பளைங்க…யாரோ தப்பிச்சு போறாங்களாம்.
காதுல விழுந்ததுமே இளங்கோவுக்கு புரிஞ்சிடிச்சு..யாரோ துப்பு குடுத்திட்டாங்க..
“கண்ணு..அன்னைக்கு நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் குடுத்த ..நியாபகம் இருக்குதா..???
எனக்காக ஒடுற ரயில்லேயிருந்து குதிப்பேனிட்டு…”
“ஆமா..மாமா.. இப்பவும் அதுல மாத்தம் இல்ல மாமா…”
“ரயிலு கொஞ்சம் ஸ்பீடு கொறையும்போது நானு ஒண்ணு.ரெண்டு…மூணுன்னு சொல்லுவேன்..எங்கையப் பிடிச்சுகிட்டு குதிக்கணும்..”
ஏன்..எதுன்னெல்லாம கேக்கலியே சின்னக்கண்ணு…!?
“வெவரமெல்லாம் உசிரோட இருந்தா சொல்லுறேன்…”
“சர்த்தான் மாமா…நானு ரெடி…”
***
ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா போயி விழுந்தோம்..
எனக்கு கால் எலும்பு முறிஞ்சிருக்கும்போல..பொது பொதுன்னு வீங்கிருச்சு..
மாமனுக்கு கொஞ்சம் சிராய்ப்பு தான்….சில்லு மூக்கு ஒடஞ்சு ரத்தமா கொட்டுது..
தூக்க மாட்டாம என்னிய தூக்கிட்டு மெயின் ரோட்டுக்கு நடக்குறாரு மாமா.
பழனி அக்கட்டால இருவது கிலோமீட்டர் தூரம்னு யாரோ சொன்னாங்க…
பழனி பஸ் ரெடியா நின்னுகிட்டு இருந்திச்சு…போயி ஒரு ரூம்பு போட்டோம்..
“மூணு நாளு ரெஸ்ட் எடுப்பம் கண்ணு…”
மாமா டாக்டர் கிட்ட கூட்டி போச்சு..அடிஒண்ணும் பெரிசா இல்ல…
நல்ல முகூர்த்த நாளு பாத்து பழனியாண்டவர் முன்ன வச்சு தாலி கட்டினாரு இளங்கோ…
பத்து வருசம் பத்து நிமிசமாவுல்ல ஓடிப்போச்சு…
மூணு வருசம் மாமனும் நானும் செய்யாத சோலியில்ல.. பாக்காத செரமமில்ல….
கா வவுத்து, அர வவுத்து கஞ்சி குடிச்சாலும் மாமன் என்னிய ராணி மாதிரி பாத்துகிட்டாரு….
கொஞ்சம் நிமிந்துட்டோம்.
இளங்கோ பெரிய படிப்பெல்லாம் படிச்சாரு..
சென்னப்பட்டணத்தில வீடு பாத்து என்னியையும் பிள்ளைங்களையும் குடி வச்சாரு..
ஆங்..சொல்ல மறந்துபுட்டேன்..மாகாலச்சுமியாட்டம் மூணு பிள்ளைங்க..
மாமனுக்கு ரெண்டு வருசத்துக்கு வெளிநாட்டுல படிப்பு..
எனக்கும் பிள்ளைங்களுக்கும் தொணைக்கு ஒரு ஆளப் போட்டுட்டு மாமா வெளிநாடு போனாரு..
மறுக்க பணமும் பதவிசுமா கோயமுத்தூர் போனோம்…
பெரிய கம்பெனி…பழமெல்லாம் பதப்படுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பற வேல…!
என்ன ‘ ஆ’ ன்னு பாக்குற…!
பொள்ளாச்சி போயி ஆயி அப்பன பாக்குறோம்..
கூட ஒரு ஆளு சனமில்லாம அனாத மாதிரி கெடக்குறாங்கா…
கட்டி புடிச்சு அழுவுறா ஆத்தா..
கூட கூப்பிட்டு வச்சுகிட்டோம்…
ஊரு சனம் வாயப் பொளந்திச்சு..!
“எளங்கோவுக்கு வந்து வாழ்வப் பாத்தீகளா…? எங்காவது படவே பேசுறாங்க…கேக்க கேக்க இனிக்குது…
எல்லா பிள்ளைங்களுக்கும் ஊருகூட்டி மூணு நாள் விருந்தோட கல்யாணம்…
இவரும் போய்ச் சேந்ததுட்டாரு..மாப்பிள்ளைங்க பேக்ட்ரிய பாத்துகிடுறாங்க…
நானு பொள்ளாச்சிக்கு திரும்பிட்டேன்…!! பொறந்த ஊரு மண்ணுலதான் உசிரு போவணும்னு ஒரு வீராப்பு….
கண்ணம்மா…ஏம்புள்ள…இப்பம் சொல்லு…உனக்கு அந்த தகிரியம் இருக்கா சொல்லு பிள்ள…?”
“ஆத்தா… நீதான் எங்கண்ண தொறந்து வச்ச சாமி….”
கண்ணம்மா ஆத்தாள கட்டி பிடிச்சு அழுகுறா..
மூணு நாள் கழிச்சு கண்ணம்மா வாரா…கூட தங்கராசு….!!!
கால்ல விழுந்து கும்புடறாங்க….
“ஆத்தா.. எங்களுக்கு ஒரு வழியக் காட்டிபுட்ட… எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணு ஆத்தா…!”
ஒரு வாரம் போயிருக்கும்..
மூச்சு வாங்க ஓடியாரா பக்கத்து வீட்டு ராசாத்தி..
“ஆத்தா..விசயம் தெரியுமா…கண்ணம்மாவ மூணு நாளா காங்கலியாம்…தங்கராசுவையும் காணமாமில்லே…சேதி கேட்டு பொக்குனு போயிடிச்சு ஆத்தா…ஓடிப்போயிட்டாப்ல…அழுத்தகாரி…!”
ஒரு வாரத்துக்கு ஊரு சனம் அடங்கல….அழுகுறாங்க…பொலம்புறாங்க….
ஆனா கண்ணாத்தா மட்டும் வாயி செவக்க வெத்தலய மென்னு கிட்டு பொக்கவாயத் தொறந்து சிரிக்கிறா…!