கண்டு கொண்டேன் காதலை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 7,826 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

மாமியார் என்ற பந்தா இல்லாமல் பழகிய கனகலட்சுமியிடம் சாருமதிக்கு பெருமளவு இயல்பாகவே பேசிப் பழக முடிந்தது. 

மோனகத்தரத்துடைய தாயாருக்குச் செலவைப் பற்றிய கவலை கிடையாது, என்று சின்னவளுக்குத் தெரியும் ஆனால் ‘உனக்கு இது நன்றாக இருக்கும், இது உன் அழகைத் தூக்கிக் காட்டும்’ என்று நகை துணிமணிகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிய விதம் அவளுக்கு வியப்பளித்தது. 

வருங்கால மருமகளின் பார்வையைக் கவனித்துவிட்டு “என்னம்மா அப்படி என்ன ஆச்சரியம்?” என்று கனகலட்சுமி நேராகக் கேட்டுவிட, வெளிப்படையாகவே சாருமதியும் தன் மனதைச் சொன்னாள். 

“என்னைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. நான் கெட்டவளாக, பணத்துக்காக உங்கள் மகனை மயக்கியவளாக… இன்னும் எப்படிப் பட்டவளாகவும் இருக்கலாம். ஆனால், தயக்கமே இல்லாமல் என்னை ஏற்றதோடு, பிரியமாகவும் இருக்கிறீர்களே, எப்படி அத்தை?” என்று கேட்டாள்.

“கண்ணன்… என் பையன். அப்படி ஏமாறக் கூடியவன் அல்ல, சாருமதி. அதனால், நீ கெட்டவளாக இருக்க முடியாது என்பது, எங்களுக்கு நிச்சயம். அத்தோடு… உனக்கு. அவனைப் பற்றித் தெரியும் என்று சொன்னான்…”

முகம் லேசாகக் கன்ற ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள் சாருமதி. “அ…அதனால்தான். அப்படிப் பழகிய எவளோ ஒருத்தி பிடித்து விட்டாளோ என்று நீங்கள் நீங்கள் நினைப்பீர்களோ என்று…” என்று சாருமதி தடுமாறினாள். 

அவளது கையைப் பற்றி, லேசாகத் தட்டிக் கொடுத்தாள் பெரியவள், “இல்லையம்மா, மோகனசுந்தரம் என் பிள்ளை என்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு மன உறுதி அதிகம், அந்த மாதிரியெல்லாம் லேசில் மயங்கிவிட மாட்டான். இதை எப்படிச் சொல்வது… தம்பி, நிர்வாகப் படிப்புக்காக வெளிநாடு சென்றான், சாருமதி. அங்கே அவன் படிப்பை நன்றாக முடித்தான்தான். ஆனால், பசிக்கு உணவு போல, அவர்களது இந்தப் பழக்கத்தையும் பிடித்துக் கொண்டு விட்டான். 

“நம் நாட்டுப் பழக்கம், பண்பாடு, கலாச்சாரம்,, எந்தப் பேச்சும் அவனிடம் எடுபடவில்லை. 

“நம் நாட்டுக் கலாச்சாரமா? அப்படி ஒன்று, இன்னும் இங்கே இருக்கிறதா? என்று சிரிப்பான்” என்று வருத்தத்தோடு தெரிவித்தாள். 

“திருமணம் ஆகும்வரை இதைப் பெரிதாக நினைக்க முடியாது. மணமான பின்னும் பார்வை அலைந்தால், அதுதான் பிழை என்று சொல்வான். தப்பு என்று தெரிந்து ஒளித்து மறைக்கிறவனைத் திருத்தலாம். ஆனால் என்னமோ வேறு மாதிரி வளர்ந்து இவ்வளவு விட்டதால், எங்களால் இந்த சித்தாந்தத்தை ஏற்க முடியவில்லை. தொழிலை நீ பார், என்று சொந்த கிராமித்துக்குக் கிளம்பிவிட்டோம். அதனால்தான், அவனுக்கு திருமணம் என்றதும், எங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி! நீங்கள் இருவரும் ரொம்ப காலம் சந்தோஷமாக வாழுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு!” என்று நிம்மதியோடு கூறி முடித்தாள் அன்னை.

பிரிவது பற்றித் தன்னிடம் சொன்ளதை, மோகனசுந்தரம் தாயிடம் கூறவில்லை என்று, சாருமதிக்குப் புரிந்தது. 

வேண்டும் என்று மறைத்தானோ, இப்போது தேவையில்லை என்று கூறாமல் விடுத்தானோ? 

எப்படியோ, மாமியார் நிம்மதியுடனேயே இருக்கட்டும் என்று எண்ணினாள், சாருமதியும்.

சாருபாலாவைப் பற்றிய பேச்சு ஒரே ஒரு தரம் எழுந்தது. 

“திருமணத்தின் பின், அவளுக்குத் தனியாக இருப்பது கஷ்டமாக இருக்கக் கூடும். அதனால் சில நாட்கள் எங்களோடு கிராமத்துக்குக் கூட்டிப் போகலாம் என்று பார்க்கிறேன்” என்ற தாயாரிடம் “கூடவே கூடாது” என்று, மோகனசுந்தரம் ஒரேடியாக மறுத்துவிட்டான்.

“அவளுக்குத் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளத் தெரிய வேண்டும் அம்மா. அது, தனியாக இருந்தால்தான் வரும். ஒருதரம், இன்னோர் இடம் இருக்கிறது என்று ஆகிவிட்டால், அப்புறம், அவளது சிறுபிள்ளைத்தனம் போகவே, போகாது. அதனால், உங்கள் அபுைப் பெருக்கை சற்று அடக்கியே வையுங்கள்” என்று அவள் கேலி போலக் கண்டிப்புடன் கூற, அதற்குமேல், கனகலட்சுமி அந்தப் பேச்சை எடுக்கவில்லை, 

ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஆனாலும், எந்த விதத்திலும் அவன், சாருபாலாவை உள்ளே விடுவதாக இல்லை என்பது, சாருமதிக்கு வருத்தமாகவே இருந்தது. 

சின்னப் பெண், பாவம் என்று இளகவே மாட்டேன் என்கிறானே!

ஆனால், இந்த அளவு அவள் சுதந்திரமாக வாழ்வதே பெரிய சலுகைதான் என்று தனக்கே அறிவுறுத்திக்கொண்டு, அமைதியடைய முயன்றாள், அந்தத் தமக்கை.

முதலில் சில தினங்கள், காலையும், மாலையும் சேர்ந்திருக்கும். நேரம் முழுதும் பாலா, அவமானம், கால்வலி என்று ஓயாது குறை பாடியது வேறு, அவள் இழுத்துப் பிடித்து வைத்திருந்த அமைதியை, ஓட ஓடத்தான் விரட்டியடித்தது.

ஆனால், ஒருநாள் பொறுக்க முடியாமல் “இப்போது வேறு என்னதான் செய்வது? எங்காவது கண் காணாத தூரம் ஓடிப்போய், நாலு வீடுகளில் பாத்திரம் துலக்கிப் பிழைப்போமா?” என்று தமக்கை கேட்டுவிட, “என்ன உளறுகிறாய்? பாத்திரம், துலக்கினால், என் நகம் உடைந்துவிடாதா? அதைக் கூட யோசிக்கத் தெரியாமல் என்ன பேச்சு இது?” என்று அப்போதைக்கு சுத்தினாலும், அதன்பின், ஒருவாறு பாலாவின் வாய் அடங்கிப் போனது. 

அக்கா ஒன்றும் ஆசைப்பட்டுக் கல்யாணம் செய்யவில்லை. ஒரேடியாக விரட்டினால், உதறினாலும், உதறிவிடுவாள் என்று, அவள் மனதில் பட்டிருக்கும் போல.

திருமணமும் நல்லபடியாக நடந்தேறியது. 

தகப்பனார் சுந்தரம் சென்னையில் இருந்து, தொழிலைக்கவனித்துக் கொள்ள மணமக்கள் இருவரும் ஒருவாரம் தேனிலவு சென்று வந்தார்கள்.

இது போன்ற ஏதோ ஒரு காரணத்துக்காக அல்லாமல், சாதாரணமாகத் திருமணம் செய்தவர்களும், இதைவிட ஒன்றும் அதிக சந்தோஷமாக இருந்துவிட முடியாது என்று, சாருமதிக்குத் தோன்றியது.

கிட்டத்தட்ட தேனிலவு முழுமைக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் ‘சாரு’ ‘சுந்தர்’ ஆகவே இருந்தார்கள்.

தேனிலவு முடிந்து மணமக்கள் திரும்பி வந்ததும், பொறுப்பை ஒப்புவித்துவிட்டும் பெரியவர்கள் நிம்மதியோடு கிராமத்திற்குச் சென்றார்கள். 

வந்ததும் தங்கையைப் பார்க்கப் போன தமக்கையிடம், சாருபாலா, தன வழக்கமான ‘ஞைஞை’ யைத் தொடங்கினாள். 

அவளுக்குப் பதிலாகப் பில் போட வந்தவன், அவளை ஏளனமாகப் பார்க்கிறாளாம், வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை எடுத்துக் கொடுத்து, வேண்டாததைத் திரும்பவும் அடுக்கி வைக்குமுன்,கால் வலி உயிர் போகிறதாம். கொஞ்ச உட்காருமுன் ‘சூபர்வைசர்’ திட்டுகிறாளாம்.

இந்தக் கொடுமையை மறப்பதற்காகச் சற்று வெளியே போய் வரலாம் என்றால், கையில் காசே இல்லையாம். 

மனவேதனை தாங்காமல், சீக்கிரமே செத்தாலும், செத்து விடுவாளாம்! 

முகம் வாடி வந்த மனைவியைப் பார்த்த மோகளசுந்தரம், அவளது வெளிநடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினான். 

இப்போது சமூகத்தில் சாருமதியின் நிலைமை வேறு. முன்போல, ஆட்டோ ரிக்ஷா பஸ்சில் பயணம் செய்வது கூடாது என்றான். அதேசமயம், சாருபாலாவின் வேலை நேரத்தில் தவிர மற்ற சமயங்களில், மனைவிக்குக் கார் அல்லது காரோட்டி கிடைக்காமலும் பார்த்துக் கொண்டான். 

புத்தி கட்டையான ஒருத்தி என்றால், நம் ராசி அப்படி, தேவையான சமயத்தில் கார் சர்வீசுக்குப் போகும். அல்லது டிரைவர் வேறே எங்காவது போய்விடுவார் என்று தன் விதியை நொந்து கொள்வாள். 

ஆனால், இரண்டு மூன்று முறை கவனித்துவிட்டு, சாருமதி, கணவனிடமே நேராகச் சென்று “ஏன் இப்படி?” என்று விசாரித்தாள். 

அவனும் சாக்குப் போக்கு சொல்லாமல், நேரடியாகவே பதில் சொன்னான் “என்மதி கெட்டிக்காரி, சீக்கிரமே கண்டு பிடித்து விடுவாள் என்று, எனக்குத் தெரியும்!” என்று புன்னகை காட்டிப் பாராட்டியவன் தொடர்ந்து “இன்னும் அதற்கான காரணத்தையும் சேர்த்து, முழுதாகவே ஊகித்திருக்கலாம். ஆனால், அதற்குள் பாச மேகம் வந்து, எண் முழுமதியைப் படுதா போட்டு மூடிவிட்டதே! ச்சுச்சு!” என்று வருத்தப்பட்டான். 

அவன் சொன்ன விதம் மனதைக் குளிர்விக்க “நான் அடிக்கடிப் போனால், தன் காலில் நிற்கப் பாலாவுக்குத் தோன்றாது எனகிறீர்கள்”, என்றாள். 

“மேகம் விலகி மதியின் பூாண உதயம்” என்று அவளை அருகிழுத்து அவன் அணைக்க, மற்ற பேச்சு அடங்கிப் போனது. 

இரண்டு நாட்கள் சாருமதி வீட்டைச் சற்றி வந்தாள். 

ஆனால் நன்கு கிரீஸ் தடவிய இயந்திரம் போல வீட்டில எல்லாமே, ஏற்கனயே ஒழுங்காக நடத்தப்பட்டு வந்ததால், வீட்டு நிரவாகத்தில் சாருமதி செய்ய எதுவுமில்லை. தானாகவே சிறப்பாக நடக்கும் ஒன்றில், தேவையற்றுத் தலையிட்டு குழப்பம் செய்ய விருப்பம் இல்லாமல் சத்தமற்று ஒதுங்கிப் போனாள் அவள். 

ஆனால், சிறு வயதில் இருந்து, நோயாளித் தாயாருக்கு உதவியாகவும், தங்கையின் பலவேறு தேவைகளைக் கவனித்தும், கூடவே தன் வேலைகளைச் செய்தும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு. பழகியிருந்தவளால, சும்மா சோம்பியிருக்க முடியவில்லை. 

எவ்வளவு நேரம் தோட்டத்தில் நடப்பது? எவ்வளவு நேரம் டிவி பார்ப்பது? 

பழையபடி வேலை செய்வதை, மோகனசுந்தரம் முதலிலேயே மறுத்துவிட்டான்.

அவளாகப் போகாவிட்டாலும், தங்கை தேடி வந்து ஏதாவது பிரச்சினை கிளப்புவாள் என்று கணவர் நினைப்பது தெரிந்து, அவளும் அதை வலியுறுத்தவில்லை. 

ஆனால் ஒன்றுமே செய்யாமல் இருப்பது பெரிய கொடுமையாகத் தோன்ற, கணவனிடம் சென்று. “என்னால் இப்படி நாள் முழுவதும் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. பழைய வேலை கூடாது என்றால், வேறே ஏதாவது வேலை வேண்டும்” என்றாள் எரிச்சலோடு. 

யோசனையோடு பார்த்தாலும் “ஈஸி., ஈஸி.. சாருமதி. உனக்குப் பொழுது போகவில்லை. அதுதானே? அதற்கு வெளியே போய் வேலை செய்தால்தான் திரும் என்று இல்லையே! வீட்டில் இருந்தே கூட, எனக்காக ஒரு பெரிய வேலையை நீ செய்ய முடியும், உண்மையில், அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக் கொண்டால், எனக்கு ஒரு பெரிய தலைவலி தீரும்” என்று எளிதாகப் பேசினான் மோகனன். 

“என்ன வேலை?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் மனைவி.

ஒப்புக்காக ஏதே வேலையைத் தலையில் கட்டி, கணவன் தட்டிக் கழிக்க முயற்சிக்கிறான் என்பது அவளுக்கு. மற்றபடி அவன் சொல்லுகிற அளவு முக்கியமான வேலை என்றால், இத்தனை ஆண்டுகளில், அதற்காக ஓர் ஆளை அவன நியமிக்காமலா இருந்திருப்பான் என்பது. அவளது கேள்வி.

“இது வெளி ஆட்களிடம் கொடுக்கக்கூடியது அல்ல, சாருமதி. என தனிப்பட்ட தபால்களைப் பிரித்தப்படித்து தேவையானதைச் செய்ய வேண்டும். அம்மா அப்பா இங்கே இருந்தவரை அம்மாவிடம் இந்த பொறுப்பை கொடுத்திருந்தேன். திடீரென்று ‘நீயே பார்த்துக் கொள்’ என்று கிராமத்துக்குக்  கிளம்பிப் போய்விட்டார்கள். மற்ற வேலையாட்களுக்கு இடையே, இதைப் பார்க்க முடியாமல், மலை போலச் சேர்ந்துவிடும். அப்புறம் அவசர அவசரமாகச் செய்யும் போது. முக்கியமான சிலது விட்டுப் போய்விடுவதும் உண்டு, உரிய காலத்தில் செயல்பட முடியாமல் தட்டிப் போவதும் உண்டு. இந்த பொறுப்பை நீ ஏற்றுக் கொண்டால், இனி அது போன்ற பிரச்சினைகள் நேராது” என்றான் அவன் சீரியசாக. 

இன்னமும், சாருமதிக்குக் கணவன் பேச்சில் முழு நம்பிக்கை வரவில்லைதான். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல, இன்னும் வலுவான காரணம் வேண்டும் என்பதோடு, சும்மா இருப்பதற்கு, இப்போதைக்கு, இந்த வேலையைத் தொடங்கலாமே என்று எண்ணி ஒப்புக் கொண்டாள். 

ஆனால், மெய்யாகவே நிறையத் தபால் சேர்ந்துதான் இருந்தது.

வீட்டில் இருந்த அவனது அலுவல் அறை மேஜையில் பல அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்த தபால் உறைகளைக் கண்டதும், “ஈமெயிலும், எஸ்எம்எஸ்சும் சேர்ந்து, கடிதம் எழுதும் பழக்கமே அழிந்து போயிற்று என்று நினைத்தேனே! உங்களுக்கு இத்தனை வந்திருக்கிறதே!” என்று சாருமதி ஆச்சரியப்பட்டாள். 

“இவற்றில் சில, பிறர் அறியக் கூடாதவைகளாக இருக்கும், சில எழுத்துக் காப்பி வைத்துக் கொள்ள வேண்டியவைகள். சிலது, படித்துவிட்டுக் கிழித்துப் போட வேண்டியவை…. நேராகக் குப்பைத் தொட்டிக்குள் செல்ல வேண்டியதுகளும் இருக்கும். பிரித்துப் படித்து, அதற்கு உரிய மரியாதை செய்ய வேண்டும். நீயாக செய்ய முடிந்ததைச் செய். சந்தேகமாக இருப்பதை என்னிடம் கேட்டுக்கொள்” என்று கூறி, அந்த அறையின் சாவியை, அவளிடம் கொடுத்தான் மோகனசுந்தரம் “எப்போதும், அதையைப் பூட்டியே வை” என்றான். 

“ரொம்பப் பத்திரமாக பாதுகாக்கப்பட இங்கே என்ன….?” என்றவாறு, பார்வையை ஓடவிட்டபோது, சுவரில் பதிக்கப்பட்டிருந்த அலமாரிகள் கண்ணில் பட்டன, “இவைகளில் என்ன இருக்கின்றன?” என்று ஆர்வத்துடன் கேட்டுவிட்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாள். “சாரி, சாரி! உங்கள் தாத்தா காலத்து வீடு என்றீர்கள். அறையில் ஏசி இருந்தாலும், ஜன்னல்களே இல்லை. பழைய காலத்துப் பொக்கிஷ அறையோ என்று… சாரி, நான் கேட்டிருக்கக் கூடாது” என்று சாருமதி மறுபடியும் வருத்தம் தெரிவித்தாள். 

அருகில் வந்து, அவளது தோளைப் பற்றினான் மோகனன் “இத்தனை ‘சாரி’ எதற்கு ? நீ என் மனைவி, சாரு. அறிந்து கொள்ளும் உரிமை உனக்கு உண்டு. நீ சொன்னது போல, இது பொக்கிஷ அறையாகத்தான் இருந்தது. தாத்தா பாங்க்கை நம்பியது இல்லை. எல்லாப் பணத்தையும் இங்கேதான் வைத்திருந்தார். அப்பா பார்க்கும்போது, எல்லாம் பாங்கிற்குப் போய்விட்டது. ஆனால் அப்பாவும். அவரைத் தொடர்ந்து நானும் இதை, அலுவல் அறையாகப் பயன்படுத்துகிறோம். சில முக்கியமான பத்திரங்கள், பிறர் அறிய வேண்டாத கணக்குகள் எல்லாம் இங்கே அலமாரியுள் இருக்கும்” என்று விரலால் மனைவியின் கன்னத்தில் கோலமிட்டவாறே விளக்கினான். 

வழக்கம்போல, அவனது அருகாமை உற்சாகத்தைத் தர, “அட்டா! இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே! நானும் இந்தப் பொக்கிஷ அறையில், பல லட்சம் ரூபாய் பணம் இருக்கும். எடுத்துப் போய் ஜாலியாக வேட்டு விடலாம் என்று ஆசையாக நினைத்தால், கணக்குப் புத்தகமும், கடிதங்களும்தான் இருப்பதாகச் சொல்லி மோசம் பண்ணி விட்டீர்களே! அச்சச்சோ!” என்று சிரித்தாள், 

“சரி. மனைவிக்கு ஒரேடியாக ஏமாற்றம் வேண்டாம். இன்னொன்று தெரிந்துகொள், ஞாயிறன்று பாங்க் விடுமுறை அல்லவா? அதனால் அன்று முழுவதும் சனிக்கிழமை வசூல் தொகை இங்கேதான் இருக்கும். கிட்டத்தட்ட இருபது லட்சத்தைத் தொடும், அலமாரிச் சாவி கூட மேஜையின் இழுப்பறைக்குள்தான் இருக்கும்! என்ன செய்யப் போவதாக உத்தேசம்?” என்று, அவளது இரு காதுகளையும் வருடினான் கணவன். 

குறுகுறுப்பு தாங்காமல் தலையை இழுத்துக்கொண்டு “எல்லா ரகசியங்களையும் சொல்லிவிட்டீர்களே! சும்மா விடுவேனா? ஒரு சனியன்று இரவில், எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு கம்பி நீட்டி விட மாட்டேனா?” என்று கெத்தாகப் பதில் சொன்னாள் மனைவி.

“கிழித்தாய்! மாமனார், எப்படி மகளை வளர்த்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும், இன்னும் நாலு நாள் விற்பனைப் பணத்தையும் சேர்த்து உள்ளே வைத்தாலும், ஒரு பைசா குறையாதாக்கும்” என்று பெருமையோடு கூறி, அவளை அருகிழுத்து, நெற்றியில் முத்தமிட்டான் அவன். 

“பாலாவும் என் அப்பாவுடைய மகள்தான். அவளும் அப்படித்தான்’ என்று தன்னையறியாமல் வாயில் வந்தது, சாருமதிக்கு. 

அவன் பதில் சொல்லாமல், அவளது விரல்களோடு விளையாடத் தொடங்கவும், “மெய்யாகத்தான் சொல்லுகிறேன், சுந்தர். பாலாவும் உரிமையற்ற பணத்தைத் தொட மாட்டாள்” என்று மீண்டும் உரைத்தாள். “இதை நீங்கள் நம்ப வேண்டும்” 

“அவளாகத் திருட மாட்டாள். ஆனால், அவளுடைய நண்பர் குழாம் தவறானது. அவர்களோடு சேர்ந்து, எதுவும் செய்வாள் என்பது, என் அபிப்பிராயம்” என்றான் மோகனசுந்தரம். 

ஒத்துக் கொள்ள மனமற்று, ஆனால், ஒரேடியாக மறுத்துப் பேசவும் முடியாமல் நின்ற மனைவியைப் பார்த்து லேசாகத் தலையசைத்தான் அவன், “பன்றியுடன் சேர்ந்த கன்று பற்றிப் பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். சாருமதி, நான் அதைத் திருப்பிச் சொன்னேன். அவ்வளவுதான். வா. வேலையைப் பார்ப்போம். மாதிரிக்குச் சிலதை என்ன செய்வது என்று காட்டிவிட்டேன் என்றால், அப்புறமாக நீயே பார்த்துக் கொள்ளலாம்” என்று அவளைக் கைப்பிடித்து, மேஜைக்கு அழைத்துச் சென்றான். 

அந்த நேரத்து இனிமை கலைந்தது. சாருமதிக்கு வருத்தமே என்றாலும், பாலாவை அவன் நல்ல விதமாக ஒத்துக் கொள்ளவே மாட்டான் போலிருக்கிறதே என்பதுதான் அதிக வருத்தத்தைத் தருவதாக இருந்தது. 

ஆனால், அந்தப் பேச்சு முடிந்தது என்பது போல, அவன் அடுத்த விஷயத்தை தொடங்கிய பிறகு, பிடிவாதமாகத் தங்கையைப் பற்றிப் பேச, அவளுக்குத் தைரியம் வரவில்லை. 

அதற்கான அடிப்படையான உரிமை, அவளுக்கு என்றேனும் கிடைக்குமா? 

ஏதேதோ உரிமைகள் இருப்பதாகக் கூறும் கணவன், இந்த உரிமையைத் தரக் காணோமே! அல்லது, அவரவர் உரிமையை, அவரவர்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமோ? 

ஆனால் தொடர்ந்து பேசி, அவன் ‘வாயை மூடு’ என்று விட்டால், அதை, அவளால் தாங்க முடியாதே! 

எனவே அவளாகவே வாயை மூடிக்கொண்டு, அவன் சொன்னதைச் செய்யலானாள். 

மோகனசுந்தரத்தின் சொந்தக் கடிதங்களைப் படிக்கப் படிக்க, அவனிடம், சாருமதிக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. 

அவனது வருமானங்களில் கணிசமான ஒரு பகுதியை, மோகனசுந்தரம், பல்வேறு தருமங்களுக்குக் கொடுத்து வந்தான் என்பதை அறிய, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

பண விஷயத்தில் அவனது கண்டிப்பு எல்லோரும் அறிந்ததே! தொழிலில், ஐந்து பத்து ரூபாய்க்குக்கூட கணக்குப் பார்க்கிறவன், தேவைப்பட்டவர்களுக்கு, ஆயிரம், லட்சம் என்று அள்ளிக் கொடுத்திருக்கிறான். அதிலும் பெரும்பகுதி, படிக்கும் பிள்ளைகளது உதவிக்குச் சென்றது. 

அவளது வியப்பைக் கவனித்துவிட்டு, “நாட்டின் வருங்காலம் சிறக்க, நம்மாலான உதவி!” என்றான் மோகனன். 

பயனடைந்த பிள்ளைகளின் பெற்றோரின் கடிதங்களைப் படிக்கையில், சாருமதியின் மனம் குளிர்ந்தது. 

மனைவியின் மலர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு “எல்லாமே என் ஐடியா என்று எண்ணிவிடாதே, சாருமதி. அப்பா தொடங்கியது வருமானத்துக்கு ஏற்றவாறு, நான் விரிவுபடுத்தி இருக்கிறேன்” என்றாள் மோகனசுந்தரம். 

அவன் அப்படிச் சொன்னது கூட, அவளுக்கு மகிழ்ச்சியையே அளித்தது. 

நன்றி தெரிவிக்கும் கடிதங்களுக்கு ‘கடிதம் கிடைத்தது’ என்று குறிப்பு மட்டும் போதும் என்றான்.

தேவை என்று பணம் கேட்டு வந்தவைகளுக்கு, எவ்வளவு என்ன என்ற விவரங்களைக் குறித்து வைக்கச் சொன்னான். 

இன்னும் பெரிய அடுக்காகச் சேர்ந்தது. ஏதேதோ அறக்கட்டளைகள் என்ற பெயரில், அல்லது சொந்த கஷ்டத்தைச் சொல்லிப் பணம் கேட்டு வந்த கடிதங்கள், கொடுக்கிறான் என்று தெரிந்ததும், பிடுங்க வந்தவையோ என்று, சாருமதிக்கே தோன்றியது. அதையே, அவனும் சொன்னான். 

“இவைகளை மிகவும் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும், சாருமதி. தொண்ணூறு சதவீதம் பொய்யானவையாக இருந்தாலும், ஒன்றிரண்டு உண்மையானவைகளாகவும் இருக்கக்கூடும். விசாரித்து அறிந்து, செயல்பட வேண்டும். அடுத்து….” என்று கணவன் சொல்வதைக் கவனத்துடன் கேட்டவாறே இன்னொரு கடிதத்தைப் பிரித்துப் படித்த சாருமதியின் முகம் கன்றிச் சிவந்தது.

இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சியும், வினாடிக்கு வினாடி கணவன் மேல் வளர்ந்த மதிப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட, கையில் இருந்த கடிதத்தை அருவருப்புடன் உற்று நோக்கினாள் அவள். 

வெட்கமே இல்லாமல், இப்படியெல்லாம் கூட எழுதுவார்களா, என்ன? 

மகனுக்கு உதவியாக, இந்த வேலையைச் செய்து கொண்டிருந்த மாமியார், அதைச் செய்ய மறுத்து, ஊருக்கே போய்விட்ட காரணமும் இப்போது அவளுக்குப் புரிந்தது. 

அத்தியாயம்-8

சற்று நேரமாக, மனைவியிடமிருந்து சத்தத்தையே காணாது போகவே, அவளைத் திருப்பிப் பார்த்த மோகனசுந்தரத்துக்கு விஷயம் உடனே புரிந்து போயிற்று. 

தாயிடம் ஏற்கனவே அனுபவித்ததுதானே? 

லேசாகத் தோளைக் குலுக்கி “ஓ! அந்த மாதிரிக் கடிதமா? கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடாமல் என்ன அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று எந்த விதச் சஞ்சலமும் இல்லாமல் கேட்டான். 

“அழகு பார்ப்பதற்கு, இதில் என்ன ஓவியமா வரைந்திருக்கிறது? உள்ளார்ந்த உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி எழுதியிருக்கிறார்களே. பத்திரப்படுத்தி வைத்து அவ்வப்போது படித்து ரசிப்பிர்களோ என்றுதான் தூரப் போடவில்லை” என்றாள் அவள், எரிச்சலை மறையாது காட்டி.

“அப்பா! என்ன சூடு! ஏன் இவ்வளவு கோபம்?” என்று கேட்டான். 

ஏன் கோபமா? 

கணவனோடு காதல் செய்தது பற்றி, ஒருத்தி ரசித்து ரசித்து எழுதுகிறாள். அவன் மனைவிக்குக் கோபம் வராதாமா? விட்டால், அந்த மற்றவளின் கண்ணையே நோண்டி எடுத்துவிடும் ஆவேசம் வருமே!

எண்ணியதைச் சொல்லுமுன், மோகனனே மறுபடியும் பேசினான். “ஏன் மதி. எப்போதோ நனைந்தது, நானும் ஒன்றும், அதை மறைத்து ஏமாற்றியது கிடையாது. அப்புறம் என்ன கோபம்?” என்று வினவினான் 

உண்மைதான். தெரிந்துதான் மணந்திருக்கிறாள். இருவரும் நேராகவே பேசியிருக்கிறார்கள். அவனுடைய
தாயாரும் சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம், அகசியாக உணர்ந்தும் இருக்கிறாள். 

ஆனால், அப்போதெல்லாம் அவ்வளவேதான்! 

அத்தோடு, அதற்கும் எனக்கும் ஒன்றுமில்லை என்று ஒதுக்கியும் இருக்கிறாள். 

அப்புறம்? இப்போது மட்டும் என்ன கோபம்? 

ஆனால், கடிதத்தில் கண்டது போன்ற நெருக்கத்தில் கணவனோடு இன்னொருத்தி இருந்தாள் என்கிற எண்ணமே, நெருப்பாய் எரிகிறதே! ஏன்? ஏன்? 

அவனது ‘மதி’ என்ற அழைப்பு நிதானப்படுத்த, பதில் சொல்லுமுன் சாருமதி யோசித்தாள். யோசிக்கும்போதே, நெஞ்சு படபடத்தது. 

ஊகூம்! அவளது கொதிப்பு, அதன் காரணம் பற்றிய அவளது ஊகம் எதையும் இப்போது அவனிடம் கூறுவது சரியில்லை. 

எனவே, தலையை லேசாகச் சிலுப்பி, “உங்கள் புது நாகரீகத்துக்கு, இது புரியாது. ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்று அதிலேயே வளர்ந்த எனக்கு, இதுபோல ஒருத்தி குறுக்கிடுவது, அநாகரீகமாக.. அருவருப்பாக இருக்கிறது. வந்து… எல்லாமே. இந்த விதமாகத்தானே, பிரிக்க வேண்டும்? நான் அப்புறமாக வந்து பார்த்துக் கொள்ளுகிறேன். இ… இப்போது தலையை லேசாக முணுமுணு என்கிறது. அதனால், கொஞ்சம் வெளிக் காற்றில் நிற்கப் போகிறேன்” என்று எழுந்து சென்றாள். 

நல்லவேளையாக, அவனும் அவளை நிறுத்த முயற்சிக்கவில்லை!

மேஜை மீது அவள் வைத்து விட்டுப்போயிருந்த சாவியை மட்டும் அப்புறமாக, அவளிடம் கொண்டுபோய் கொடுத்தான். “தலைவலி பரவாயில்லையா?” என்று நெற்றியில் இதமான ஒரு வருடலோடு. 

காரணம் புரியாமல், கண்களில் நீர் மல்க, அதன் மறைக்கும் முயற்சியாக, அவன தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.

நெஞ்சின் ஒரு மூலையில், ஏதோ உருட்டிப் புரட்டிக்கொண்டே இருந்தபோதும், அதைப் பற்றிய யோசனையைச் சாருமதி பிடிவாதமாகத் தள்ளி வைத்தாள்.

அது, தனியே இருந்து யோசிக்க வோண்டியது. இவன் குறிக்கிடக் கூடிய இடத்திலோ, வேளையிலோ செய்யக்கூடியது அல்ல!

முக்கியமாக அவன் அருகில் இருக்கையில் கூடவே கூடாது!

ஏற்கனவே, “இன்னமும் தலைவலி முழுதாக விடவில்லையா? முகம் தெளியவில்லையே, மாத்திரை ஏதாவது போட்டுக் கொள்கிறாயா?”. என்று கேட்டாயிற்று. 

இன்னும் முழுதாக அந்த யோசனையில் ஆழந்தால், கணவனிடம் நன்றாக மாட்டிக் கொள்வது நிச்சயம், அவனுக்குப் பதில் சொல்லி முடியாது. 

ஒருவாறு மறுநாள் காலையில், மோகனசுந்தரம் அலுவலைப் பார்க்க கிளம்பும்வரை சாருமதி எப்படியோ சமாளித்தாள். 

மனதைக் கட்டுப்படுத்துவது, பெரிய பெரிய ஞானிகளுக்குக் கூட முடியாதது. ஆனாலும், மனம் தறி கெட்டு ஓடும்போது, டீபாய்க்கு க்ரோஷே பின்னலில் கவர் போடலாமா, ஷாண்டிலியரில் எத்தனை பல்புகள் இருக்கின்றன என்று வேண்டாத விஷயங்களை யோசித்து, குரங்கு மனதை வேறு வழிக்குத் திருப்பினாள். 

அப்போதும் கூட, “பேசாமல் படுத்துத் தூங்கும்மா. சோர்ந்தாற் போலவேதான் தெரிகிறாய். எதற்கும் டாக்டரைப் பார்த்துவிட்டு வருகிறாயா?” என்று கேட்டுவிட்டு, அவள் படுத்து ஓய்வெடுப்பதாக ஒத்துக்கொண்ட பிறகுதான், அவன் கிளம்பிச் சென்றான். 

கணவன் சொன்னதையே தொடர்ந்து “சற்று சோர்வாக இருப்பதால் ஓய்வெடுக்கப் போகிறேன். யாருக்காகவும் எதற்காகவும் எழுப்ப வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். 

அவ்வளவு நேரமும் கடைப்பிடித்த கட்டுப்பாட்டையும், கவனத்தையும் விட்டு இயல்பாக இருக்கத் தொடங்கியவளுக்கு முதலில் முட்டிக்கொண்டு வந்தது கண்ணீர்தான். 

ஏனெனில் யோசித்து முடிவு சொல்வதற்கு, அவளுக்கு அவசியமே இருக்கவில்லை. 

‘மஞ்சள் கயிறு மாஜிக்’ என்று பெரியவர்கள் சொல்வது போல, மோகனசுந்தரம், அவள் மனதில் எப்போதோ குடிபேறி இருந்தான்.

மற்றபடி, அந்த முகமறியாத பெண்ணின் கண்ணை நோண்டும் அளவு ஆத்திரம், அவளுக்கு வந்தே இராது! 

கணவனின் இந்தப் பழக்கம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்லதான். தந்தை வளர்த்த விதத்துக்கு, இப்படி ஒரு கணவனா என்று வருத்தமே பட்டிருக்கிறாள். எப்படியோ, தங்கை கேவலப்படாமல், தானும் அசிங்கப்படாமல் பாலாவைக் காப்பாற்ற ஒரு வழிகிடைத்தாகக் கருதி, சந்தோவுப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று, தன்னையே ஆறுதல் படுத்திக் கொண்டும் இருக்கிறாள்.

இதெல்லாம் திருமணத்துக்கு முன், திருமணத்தின் போதும் அப்படித்தான். 

ஆனால், இத்தகைய எண்ணங்கள் எல்லாம். தேனிலவின்போதே காணாமல் போயிருந்ததை, அவள் கவனிக்கவே இல்லை! 

வெறும் ஆண் பெண் உறவால் மட்டும், அந்த மாற்றம் நடக்கவில்லை என்பது, அவளுக்கு நிச்சயம். அவனது பேச்சு, நடத்தை, தோற்றம்…. 

முகம் சுளிக்க வைக்காத ஜோக்குகள், அவனது இதம் நாடிச் செயல் படும் கனிவு, கம்பீரமான நடை, உடை பாவனைகள்… எது, அவளைக் கவர்ந்து இழுக்காதது? நினைத்து நினைத்து மகிழ்வாளே! 

அவன் அயர்ந்து தூங்கும்போது கூட, நிதானமாக அவன் மூச்சு விடுவதைப் பார்த்தபடி நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருப்பதே, சுகமாக இருக்குமே! 

இதெல்லாம், கணவனிடம் கொண்டுவிட்ட உயிர் நேசத்தின் அறிகுறிகளே என்று, அவளுக்கு இப்போதல்லவா தெரிகிறது? 

ஆனால், இந்த நேசத்தின் எதிர்காலம் என்ன என்று யோசிக்கும்போதுதான், அவளுக்குப் பகீரென்றது. 

மோகனசுந்தரத்தைப் பொறுத்த அளவில், திருமணம் என்பது, புரிய முடியாத உறவு அல்ல. 

அப்படிப் பிரியும்போது, அவள் பணம் இல்லாமல் கஷ்டப்பட நேராது என்று அவளிடமே கூடச் சொல்லியிருக்கிறான்!. 

அதாவது காதல், நேசம் என்பதெல்லாம் சாருமதிக்கு மட்டும்தான். அவனுக்கு அவள் பத்தோடு பதினொன்றுதான்.

கடித்தான் எழுதிய அந்தப் பெண்ணைப் போல இன்னொருத்தி.

என்னதான் வலித்தாலும் உண்மை பொய்யாகாதே? 

இதுபோலக் காதலும் கனிவுமாக அந்தப் பெண்ணிடமும் மோகனன் நடந்து கொண்டதால்தானே, அந்த உறவை ரசித்தது பற்றி விரிவாக எழுதி, இன்னொரு தடவை மனுப் போட்டு வைத்திருக்கிறாள்!

எழுதிய கையை ஒடித்து…

உள்ளங்கையில் ‘சுருக்’கென வலித்த பிறகுதான்,நகம் பதியும் அளவுக்குக் கையை முஷ்டியாக அழுந்த மூடியிருப்பதையே, சாருமதி உணர்த்தாள். 

அவ்வளவு தூரம் தன்னை மறந்த  ஆத்திரம்!

ஆனால் ‘மதி’யாய் யோசித்தவளுக்கு, காதலால் வந்த சீற்றம் மட்டுமில்லாமல், இதில் வேறொன்றும் இருப்பது புரிந்தது. 

கணவனின் அன்பு அவளுக்கே என்ற உறுதி இருக்குமானால். ஏதோ பழைய கதை என்று, அந்தப் பெண்ணின் கடிதத்தை அவளால் அலட்சியப்படுத்தி இருக்க முடியும். 

அவனது ஆர்வம் தீர்ந்த பிறகு, சாருமதியின் அன்பும் அந்தப் பெண்ணின் கடிதத்தைப் போல குப்பைக் கூடைக்குத்தான் லாயக்கு. இதை மாற்ற, அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற கையால் ஆகாத தவிப்புதான் அவளை, இவ்வளவு பாதித்திருக்கிறது!

இப்போது, எல்லாம் புரிந்து போயிற்று! 

ஆனால், எதனால் வந்தது என்று தெரிந்ததால் மட்டுமே வலி தீர்ந்து விடுமா? கவலையும் அப்படித்தான். 

என்ன செய்வது? அவளது தலைவிதி அப்படி வாங்கி வந்த வரம்…

இப்படியே மனதை உளப்பிக் கொண்டிருந்த சாருமதி சட்டென எழுந்தாள். 

இப்படியே தனியே கிடந்து மனதைப் போட்டுக் கசக்கிக் கொண்டு இருப்பது மடத்தனம். தன்னிரக்கம் கொள்வது அவளுக்கு உள்ள தைரியத்தையும் கெடுத்துவிடும். 

அதைவிட, ஏதாவது… எதையாவது செய்யலாம். 

இப்படி நினைத்துதான், எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு, பக்கவாட்டில் பந்தல் கட்டிப் படர விட்டிருந்த ஜாதிப்பூவின் மொட்டுக்களைப் பறித்து வந்து, அவள் தொடுக்கத் தொடங்கியது. 

ஆனால் பாதிப் பூக்களைத் தொடுக்கு முன்பாகவே, கைகள் தன்னியல்பாகச் சரம் கட்டத் தொடங்கிவிட, மனது பிரச்சினைக்குத் திரும்பிவிட்டது. 

இந்தப் பிரச்சினைக்கு விடிவே கிடையாதா? 

இன்றைய தன் மன நிலையை மோகனசுந்தரத்திடம் சொல்லலாமா என்று எழுந்த யோசனை, தோன்றிய கணமே மறைந்தது. 

ஒன்று, அவனது பணத்துக்காக இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பதாக நினைப்பான். அல்லது, அந்தக் கடிதக்காரி போல ஆகிவிட்டாள் என்று எண்ணுவான். எந்த விதமாகக் கருதினாலும், கேவலமே. 

பேசாமல், தலையில் இடி விழும் நேரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். 

அது எப்போது… 

மயிலிறகால் வருடுவது போல, ஒரு வெண்ணிறக் கைக்குட்டை கன்னத்தில் மென்மையாகப் படவும், சாருமதி திகைத்துத் திரும்பிப் பார்த்தாள். 

அவளுடைய கணவனேதான்! எப்போது வந்தான்? 

எதற்காக அழுதாய் என்று கேட்டால் என்ன சொல்வது?

அறிந்த மொழிகளில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மறந்தவளாக, அவள் மலங்க விழிக்கையில், மோகனசுந்தரம், அந்தக் கேள்வியைக் கேட்கவே இல்லை. 

அலுவலகம் பற்றி ஏதோ சொன்ணான் “உன் இடத்துக்கு வந்த வினிதாவுக்கும் முத்துக்கிருஷ்ணன் சாருக்கும் ஒத்தே போகாது போலத் தெரிகிறது, சாருமதி தளத்து நிர்வாகியுடைய செயலாளர் என்றால், கொம்பு முளைத்த மாதிரி நினைத்துக்கொண்டு, கீழே உள்ளவர்களை அதிவாரம் செய்கிறாளாம்! இன்றைக்கு விற்பனைப் பெண் ஒருத்தியைக் குடிப்பதற்காக ஃபில்ட்ரில் தண்ணீர் பிடித்துவர, வேலை நேரத்தில் அனுப்பி இருக்கிறாள்…” 

இவ்வளவு நேரத்தில் சமாளித்துக்கொண்ட் சாருமதிக்கு இயல்பாக பேச முடிந்தது. 

“ஐயோ, அங்கிளுக்கு அது பிடிக்கவே பிடிக்காதே! சும்மாவே, தன் வேலையைத் தானே செய்ய வேண்டும் என்பார்! அதுவும் வேலை நேரத்தில் போய்… நன்றாக வாங்கிக் கட்டினாளா?” என்று விவரம் கேட்டாள்.

புன்னகை செய்து “வாங்கிக் கட்டியது, அவரிடம் மட்டுமல்ல மதி” என்றபடி, அவள் அருகே அமர்ந்தான் மோகனன். வாடிக்கையாளரைப் பாராமல் எங்கே போகிறாய் என்று. சூபர்வைசர் விற்பனைப் பெண்ணைத் திட்ட, அவள் விவரம் கூறவும், அவன் நேரே போய், வனிதாவை நன்றாக டோஸ் விட்டிருக்கிறான். தர வரிசைப்படி எனக்குக் கீழே உள்ளவன், என்னை அதட்டுவதா, அவனை ‘சஸ்பென்ட்’ பண்ண வேண்டும் என்று, முத்துகிருஷ்ணன் சாரிடம் வனிதா ஆடினாளாம். அவருக்கு வந்த கோபத்தில், நன்றாகத் திட்டி அனுப்பிவிட்டு, அவளை வேறே தளத்துக்கு மாற்ற முடியுமா என்று என்னிடம் கேட்டார்! எல்லா தளத்திலும், இதையேதானே, செய்வாள்? பயிற்சிக் காலம் ஒரு மாதத்தில் சரியாகவில்லை என்றால், அனுப்பி விடும்படி கூறிவிட்டு, நான் இங்கே வந்தேன்…”

இப்போது கேட்கப் போகிறான் என்று அவள் மீண்டும் பதிலைத் தேடும்போது, “வரிக் குறைப்புக்காக, ஒரு புதுக் கார் வாங்கினால் நல்லது என்று ஆடிட்டர் சொன்னார். உனக்கு நீலம்தானே, அதிகம் பிடித்த நிறம்? அதனால், நீலத்தில் ஒன்று எடுத்து வந்தேன். டிரைவரை வீட்டில் விட்டுப் போகிறேன். புதுக்காரை எடுத்து, உன் தங்கையைப் போய்ப் பார்த்துவிட்டு வா. இன்று… அவளுக்கு ஓய்வு நாள்தானே?” என்று அவனாகக் கூறினான்.

பாலாவை நினைத்து அழுததாக நினைத்துவிட்டான்! 

மனைவி விழுங்கியிருப்பது கடப்பாரை என்று அறியாலை, செரிமானத்துக்குச் சுக்கு கஷாயம் தருகிறான்! 

கணவனின் கனிவு இன்னமும் நெஞ்சைக் கசக்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில், சாருமதி அசைவற்று அமர்ந்திருந்தாள். 

அவளது கையைப் பற்றி ஒருதரம் அழுத்திவிட்டு எழுத்தவன் “காரில் ஒரு ‘டிரைவ்’ போய்விட்டு வந்தால், தலைவலி போனாலும் போய்விடும் நேற்றிலிருந்து, தொல்லை செய்கிறதே!” என்று கூறி, மனைவியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

கணவனின் முகத்தில் இருந்த குறுஞ்சிரிப்பும் இந்தப் பேச்சும் சேர்த்து, சாருமதிக்குச் சுருக்கென்றது.

நேற்றிலிருந்து அவள் சரியாக இல்லை என்பதற்காக வீட்டுக் கொடுக்கிறானாமா? 

அவள் பேசாமல் இருக்கவும் “என்னடா, கிளம்புகிறாயா?’ என்று கேட்டான் அவன். 

மறுப்பாகத் தலையசைத்தாள் மனைவி. 

அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்து “ஏன்?” என்று வினவினான் மோகனன். 

“அழுது காரியம் சாதிக்க எனக்கு விருப்பம் இல்லை” என்றாள் பதிலாக. 

அவளை எழுப்பி நிறுத்தி “நீ நினைப்பது தவறு. அழாததாலதான் காரியம் நடந்திருக்கிறது. தைரியமாகப் போய்வா” என்று விட்டுப் போனான் அவன். 

அப்படியென்றால்? 

உண்மைக் காரணம், மோகனசுந்தாத்துக்குத் தெரியாது என்பது நிச்சயம்!. 

தங்கைக்காசு ஏங்கினாலும். அதற்காக அவனைத் தொணதொணத்துத் தொல்லை செய்யவோ, அழுது ஆர்ப்பாட்டம் செய்யவோ இல்லாமல், மௌனக் கண்ணீர் வடிக்கிறாள் என்று எண்ணிவிட்டான். 

அதற்காகத்தான் இந்த இளக்கம் போல! 

அதுவும் நல்லதுதான். இந்த மாதிரி எண்ணிக் கொண்டிருக்கிற வரையும், மோகனசுந்தரம், உண்மைக் காரணத்தை ஊகிக்கவே போவதில்லை! 

அந்த மட்டும் ஒரு பெரிய கவலை விட்டது! 

சுற்று இலகுவான மனதுடன், பாலாவைப் பார்க்கப்போனால், இரு மடங்குக் கனத்தை அவள் நெஞ்சிலே ஏற்றி வைத்தாள், சின்னவள், அந்த அளவுக்குப் புலம்பித் தீர்த்துவிட்டாள். 

பணம்! பணம்! பணம்! 

திருப்பித் திருப்பி, பணத்தைப் பற்றி மட்டும்தான் பேசினாள். 

கையில் காசே கிடையாதாம். ஒரு பர்கர், பீட்சா, கேஎஃப்சி, எதற்கும் வழியில்லையாம். விடுதியில் கொடுக்கிறதை மட்டும் சாப்பிட்டு வாழ்கிறாளாம். பிச்சைக்காரி வீடுகளில் போடுகிற பிச்சை என்னவானாலும் அதையே உண்டு பிழைக்கிற மாதிரி, அவமானமாக இருக்கிறதாம். 

“என்ன வித்தியாசம், வீடு வீடாகப் போய்க் கையேந்தவில்லை. அவ்வளவுதான்” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சின்னவள். 

மேஜை மேல் கண்டபடி கிடந்த பொருட்களை ஒதுக்கிவிட்டுக் கையில் இருந்த பையை வைத்தாள் சாருமதி.

உட்காருவதற்கான ஒரு சிறிய இடம் கூட இல்லாமல், மேலும் கீழுமாக இறைந்து கிடந்த பொருட்களை பார்த்துவிட்டு “அப்படிக் கையேந்துகிறவள் கூட, இருக்கும் இடத்தை, இதை விடச் சுத்தமாக வைத்திருப்பாள்” என்று வறண்ட குரலில் கூறிவிட்டு, கட்டிலிலும், கீழேயுமாக கிடந்த துணிகளை எடுத்து மடிக்கத் தொடங்கினாள், பெரியவள். 

“இதையெல்லாம் அவ்வப்போது மடித்து வைப்பதற்கென்ன பாலா? குப்பை மேடு மாதிரி, இதில் எப்படித்தான் படுத்துத் தூங்குகிறாயோ?” என்று தமக்கையின் கேள்வியில், சாருபாலா கொதித்துப் போனாள். 

“ஆகா, கேட்க மாட்டாயா. பின்னே? உனக்கென்ன மகராணி? சலவைக்குத் துணியை எடுத்துப் போக ஒருத்தி, சலவை ஆனதைக் கொண்டு வந்து அடுக்க ஓர் ஆள்! கேட்டதை சமையல் செய்து கொடுக்க இரண்டுபேர். அதைப் பரிமாற, சாப்பிட்ட பிறகு சுத்தம் பண்ண… இப்படி எடுப்பாரும் பிடிப்பாருமாக வேலையாட்களை ஆட்டிப் படைக்கிறவளுக்கு இல்லாதவர்கள் கஷ்டம் எப்படித் தெரியும்? நீ இதுவும் கேட்பாய், இன்னமும் நிறையவே கேட்பாய்! தினு கூட அதைத்தான் சொன்னான், புருஷன் வீட்டு சுகபோகத்தில் மூழ்கி, உன் அக்கா, உன்னை மறந்தே போய்விட்டாளா என்று, அன்றைக் வருத்தப்பட்டான்! யோசித்துப் பார்த்தால், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!” என்று பொரிந்து கொட்டினாள். 

மறந்துவிட்டாளா? ஒருவர் மூட்டிக் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்வதா. இது போல இச்சகம் பேசுகிறவர்கள்தான் உண்மை விரோதிகள் என்று தெரியாமல்… என்ன பைத்தியக்காரத்தனமான பெண் இவள்! 

சொல்லப்போனால், இவளுக்காக இல்லாவிட்டால், இப்படி ஒரு பிரச்சினையான வாழ்வே, சாருமதிக்கு நேர்ந்திராதே! 

ஆனால், தன் பெரும் பிரச்சினை பற்றிப் பேச முடியாமல், “ரொம்பக் குறைப்பட்டு கொள்ளாதே, பாலா, நானும் இங்கே இருந்து இதே உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தவள்தான். எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்” என்றாள் சற்று அழுத்தமான குரலில். 

“உன் பிச்சைக்காரப் புத்திக்கு அப்படித்தான் தோன்றும், இருந்திருந்து, உனக்குப் போய் காரும் பங்களாவுமாக, இப்படியொரு ராஜ வாழ்வு கிடைத்திருக்கிறதே! கொஞ்சம் கூட உபயோகமே இல்லாமல் இவ்வளவு பணத்தை அமுக்கி வைத்துக்கொண்டு, எனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாய் பார்! வெறும் பழங்கள். சை!” என்று மேசை மேல் இருந்த பழங்கள் அடங்கிய பையை எடுத்துத் தரையில் விசிறியடித்தாள். 

தரையில் உருண்டேடிய பழங்களைப் பார்க்கையில் சாருமதிக்கு மனம் நொந்தது. 

தங்கைக்குப் பணமாக ஒரு பத்து ரூபாய்கூடக் கொடுக்கக் கூடாது என்பது மோகனசுந்தரத்தின் நிபந்தனை. ஒத்துக்கொண்டதை, மீற முடியாது. ஆனாலும், ஏதோ தன்னால் ஆனது என்று, உயர்வகை ஆப்பிள், மாதுளை, திராட்சை என்று வாங்கி வந்தவளுக்கு தங்கையின் உதாசீனம் சினத்தையும் ஏற்படுத்தியது. 

ஆனால், மனதளவில் வளரவே இல்லாத இவளுடன் என்ன பேசி, என்ன பயன்? 

அறை முழுதுமாகச் சிதறிக் கிடந்த பழங்களை வெறித்துப் பார்த்தவள், ஒன்றுமே சொல்லாமல், அறை வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

தமக்கையின் பார்வையைப் பின் தொடர்ந்த சாருபாலாவுக்கு, சாருமதி வாயில் புறமாக நடக்கத் தொடங்கியதும், அளவு மீறிவிட்டோம் என்று புரிந்து போயிற்று. 

சீற்ற மிகுதியில், அக்கா தன்னை அடியோடு விட்டுவிடுவாளோ என்ற பயம் வர, ஓடிப்போய்ச் சாருமதியின் கையைப் பிடித்து “அக்கா, மன்னித்துவிடுக்கா, ப்ளீஸ். என்னை விட்டுப் போகாதேக்கா. எனக்குக் கையில் பணமே இல்லையா? விடுதிச் சாப்பாடே பிடிக்கவில்லையா? உன்னைப் பார்க்கவும் வர முடியாதா? மனசே சரியில்லாமல்…. மனசு கஷ்டத்தில் ஏதோ கிறுக்கு மாதிரி நடந்துவிட்டேன். மன்னித்து விடுக்கா. நீ கூடக் கோபப்பட்டால், அப்புறம் நான் எங்கே போவேன்? அம்மா, அப்பா யாரும் இல்லாமல்..” என்று அவள் விகம்பி அழவும், பெரியவளுக்கு மனம் உருகிவிட்டது. 

மீண்டும் உள்ளே வந்து, துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.

செய்த தப்பைத் திருத்துகிறவளாகக் கீழே கிடந்த பழங்களைப் பொறுக்கிப் பைக்குள் இட்டு, மறுபடியும் மேஜைமேல் வைத்தாள் தங்கை. 

தமக்கை பேசாமவே இருக்கவும், சற்றுப் பொறுத்துப் பார்த்துவிட்டு, பாலா, தானே தொடங்கினாள். 

“இப்போது என்னிடம் நூறு ரூபாய் கூட இல்லைக்கா. இன்னும் ஒருவாரம், நான் இதில் கடத்த வேண்டும்! ஒரு ஐஸ்க்ரீம் வாங்கக்கூட முடியாது!” என்றாள் சோகமாக. 

“ஏன் அப்படி?. சம்பளம் வாங்கினாய்தானே?

“பெரிய பிசாத்து சம்பளம்? அதிலும் முன்னை விட ஐநூறு ரூபாய் குறைத்துவிட்டார்கள், இந்த வேலைக்கு இதுதான் ஊதியமாம். அக்கா, அத்தானிடம் சொல்லி, என்னைப் பழைய வேளையிலேயே போட ஏற்பாடு செய்யக்கா. தினு கூட, நான் ஸ்டைலாக பில் போட்டுப் பணத்தை வாங்கிப் போட்ட அழகே, தனி என்கிறான். இதில் சம்பளமும் கம்மியா? செலவுக்கும் பற்றாமல், மனதுக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதுக்கா” என்று குறைப்பட்டாள் சாருபாலா.

“அறையில் இன்னொருவரை வைத்துக் கொள்வதுதானே? வாடகை குறையுமே” என்று துணிகளை மடிப்பதிலேயே கவனமாகக் கேட்டாள் சாருமதி.

“போக்கா, யாரோ ஒருத்தியை இங்கே இருக்க விட எனக்குப் பிடிக்கவில்லை” என்றவள், தமக்கை மௌனமாக இருக்கவும், “வந்து பார்த்த இரண்டு பேரும், அறையை சுத்தமாக வைக்கவில்லை என்று போய்விட்டார்கள்” என்று உண்மையைச் சொன்னாள். 

மடித்து வைத்த துணி வரிசைகளைப் பார்க்கையில், சாருமதியால், இதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆனால், தன்னைத் திருத்தி கொள்வது தவிர, வேறு வழியே கிடையாது என்று, இந்தப் பெண்ணுக்கு எப்படிப் புரிய வைப்பது? 

தன் குறையை சொல்லிக்கொண்டே போனாள் சாருபாலா, “கையில் பணம் இல்லாமல் சமாளிக்கவே முடியாது என்று, தினு கூடச் சொன்னான், அக்கா. சோனா, சுரேஷ், சங்கர் எல்லோருமே, அப்படித்த சொல்லுகிறார்கள்…” 

இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல், இவளை இன்னமும் கெடுக்கிறார்களே!

எரிச்சலுற்று “எல்லாம் நன்றாகச் சொல்லுவார்களே, அப்படிச் சொல்லுகிறவர்களை செலவு பண்ணிக் காட்டச் சொல்லு” என்றாள் சாருமதி காட்டமாக, 

ஆனால் “செய்கிறார்கள், அக்கா, இப்போதெல்லாம் எனக்கும் சேர்த்து பல தடவை, தினுதான் பணம் கொடுக்கிறான். நான், பழைய இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும்போது, திருப்பிக் கொடுத்தால் போதுமாம். அப்புறம்.. அப்புறம், அவன் இன்னொன்றும் சொன்னான். வந்துக்கா, வந்து உனக்குத் திருமணமதான் ஆகிவிட்டதே, இனிமேல், அதை இல்லை என்று சொல்ல முடியாது இல்லையா? இவ்வளவு பணக்கார அக்காவை வைத்துக்கொண்டு, ஐந்துக்கும் பத்துக்கும் நான் கஷ்டப்படுவது, அவனுக்கே அசிங்கமாக இருக்கிறதாம். அவனுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே, அப்படித்தான்! அதே உணர்வு, எப்படித் தோன்றாமல் இருக்கிறது என்று, எல்லோருக்குமே ஆச்சரியம்! உனக்குக் கைச்செலவுக்கு கொடுக்கிற பணத்தை, உன் கணவருக்குத் தெரியாமல், என்னிடம் கொடுக்கலாமே. பணமாக அதிகம் கொடுக்க முடியாவிட்டாலும், ஏதாவது நகையைத் தொலைத்துவிட்டதாகச் சொல்லி தந்தால், அதை விற்று செலவைச் சமாளிக்கலாமே என்று, நல்ல நல்ல ஐடியா, தினு நிறையச் சொன்னான், அக்கா. செய்து பார்க்கலாமா? இப்போது நீ அணிந்திருக்கும் வளையல், மூன்று சவரனாவது. இருக்காது? பாதி விலைக்கு விற்றாலும்… ” என்று கண்கள் பளபளக்கச் சொல்லிக்கொண்டே போன தங்கையை, முகமறியாத அன்னியாளைப் போல வெறித்து நோக்கினாள் சாருமதி. 

சாருபாலாவுடைய நண்பர் குழாம் தவறானது, அவர்களோடு சேர்ந்தால், அவளும் எதையும் செய்வாள் என்று மோகனசுந்தரம் சொன்னானே! எவ்வளவு சரியாகக் கணித்திருக்கிறான்! 

இது எங்கே போய் முடியக்கூடும்?

– தொடரும்…

– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *