ஒரு மாலை அரைகுறையாய் அழுதுகொண்டிருந்தது. வானத்திலிருந்து விழும்
ஒவ்வொரு துளியிலும் ஒரு தனிமை ஒட்டியிருந்தது. ஏதோ தங்களை முழுதாக
நனைத்து இன்பம் கொடுக்கமுடியாத அந்த கேவலம்கெட்ட மழையை பார்த்து அந்த
மரங்கள் காறித் துப்பிக்கொண்டிருந்தது. அந்த எச்சிலின் சிறுதுளிகள்
பாதையை விலத்தி என் தலையிலும் அவ்வப்போது வந்துவிழுந்தது. பகலிற்கோ அந்த நாளைவிட்டுப் போக மனமில்லை. இரவோ இரவோ தனது வருகையை பகலின்மேல் திணித்துக்கொண்டிருந்தது. எனக்கும் அந்த இரவுகளில் அத்தனை விருப்பம் இருந்ததில்லை. கனவுகளை கண்டபடி வெறுப்பவன் நான். அதனால் என்னவோ பகல் மட்டில் எனக்கு அத்தனை ப்ரேமம்.
திடிரென என் தொலைபேசிக்குள் இருந்து வண்ணம் வண்ணமாய் பட்டாம்பூச்சிகள்
பறக்கத்தொடங்கியது. அதேதான்! வைஷ்ணவி அந்த அழைப்பில்.. எத்தனை நாட்கள் எத்தனை பாடுகள் பட்டேன் இந்த ஒரு அழைப்பிற்காய்? ஜேசுவிற்கு அடுத்ததாய் அந்த கல்வாரியில் கண்டபடி அடிக்கப்பட்டவன் என்றால் அது நான்தான், அவள் நினைவுகளால். அவளுக்கு ஹலோ சொன்னதிலிருந்து பாய் சொல்லும்வரை நான் ஏதோ புவியீர்ப்புவிசை இல்லாத ஒரு மாய உலகத்தில் பறந்துகொண்டிருந்தேன்.
நீங்கள் ஆண்கள் வெட்கப்பட்டதை பார்த்திருக்கமாட்டீர்கள். அன்று அந்த
தெருவில் நின்ற அத்தனை மரங்களும் அதை பார்த்தன. ஒரு பெண்ணால் இத்தனை பரவசமா?
அந்த அழைப்பில் சொன்னதுபோல ஐந்தே நிமிடத்தில் எனக்கு முன் வந்துநின்றாள்
என் வைஷ்ணவி. அவளை வை என்றுதான் செல்லமாய் அழைப்பேன். அவ்வளவு செல்லங்களை அவள்மேல் கொட்டிவைத்திருந்தேன். நண்பர்களாய் இருக்கும் எங்களுக்கு இன்று காதலை ஆரம்பிக்கும் முதல் நாள். எத்தனை சந்தோஷம்.. நான் பாரமில்லா இதயத்தையும், பதட்டப்படாத மூளையையும் முதல் முதல் ஏந்தி பரவசம் கொண்டது அன்றுதான். அவள் அவ்வளவு அழகு. சுருண்ட முடி, சூட்சுமம் செய்யும் கண்கள், பித்தனாக்கி புத்தனையும் அலையவைக்கும் அந்த இதழ்கள், காமத்தை கக்கி என் மோகத்தை சூறையாடும் அந்த அங்கங்கள்.. அப்பப்பா.. இந்த பெண் ஒரு மந்திர தேவதை. புன்னகைத்தாள். நான் சுக்குநூறாகிப்போனேன். போதை பற்றி கேட்டிருக்கிறேன். ஆனால் அதை அனுபவிக்கும் பொழுது அத்தனை ஆனந்தம் அன்று. அதை அவளே கொடுத்தாள்.
என்னடா அப்பிடி பாக்குறே?
பின்னர் எப்படி பார்ப்பது. என்னை நீதானே இயக்கிக்கொண்டிருக்கிறாய். என்னை
தொட்டு என்னை சரிசெய்துகொள். முட்டி மோதும் ஏதோ ஒரு பிதற்றல்
பிரவாகத்திலிருந்து என்னை காப்பாற்றிக்கொள். என்னை அலையவைக்கும் அந்த
அனாமதேய எண்ணங்களிலிருந்து ஒரு விடுதலை கொடு. கொஞ்சம் அசையாமல் இரு, எதற்கு என் கண்களை அங்குமிங்குமாய் உன் தேகத்தின் மேல் அலைக்கிறாய்.
பத்து நிமிட பரவசம். பார்வைகளால் மட்டும் எத்தனை மணித்தியாலங்கள்
பேசிக்கொண்டிருக்க முடியும்? உண்மையைச்சொன்னால், பேச ஆசைதான், எதைப்பற்றி பேசுவது.. அவள் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றை சூட்சுமத்தை
அவிழ்த்துவிட்டால் அதன்பின் நான் எதுவும் எப்படியும் பேசுவேன். இதுதான்
அப்போதைய எனது நிலவரம். என் சிந்தனைகளை கற்சிதமாக கவ்விக்கொள்பவள் என் வை. அதனால் என் அழுக்கான சிந்தனைகளை அடிக்கடி என்னிடமிருந்து
அகற்றிக்கொள்வேன்.
என்ன எதாச்சும் பேசண்டா மண்டு!
உண்மைதான்.. நான்தான் ஆரம்பிக்கவேண்டும். பக்தன் கேட்காத வரங்களுக்கு ஏது
மதிப்பு? நானே பேசலாம். ஆனால், காதலை மட்டும் இப்பொழுதே கேட்டிட
வேண்டாம். காதல் எனக்கு கொடுக்கப்படட்டும்.
‘ம்ம்ம்.. சொல்லு வை.. பட் நீ இன்னைக்கு செமையா இருக்கே!’
அதை அவளிடம் நான் சொல்லியே ஆகவேண்டும் என என்னைக்கேட்க்காமல் என்
இரசனைகள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். விட்டுவிட்டேன். அவள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தாள். அழகிய ஒரு தேவதையின் நாவலை ஒலிவடிவில் கேட்பதைப்போன்ற ஒரு உணர்வு. அவள் குரலும் தேனாமிர்தம். எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்லை இங்கிருக்கும் மரங்களுக்குமா??
இருட்டு பட்டிரிச்சு.. வீட்டுக்கு போகணும்.. சாரி டா கொஞ்சம் கூடநேரம்
உன்கூட பேச முடியல.. பாய்.. கட்டாயம் வந்திடு..
அவள் மறைந்தாள். நானும் மறைய ஆரம்பித்தேன்.
என்னவோ மறு நாளும் அதே நேரம் அதே தெருவில் கொஞ்சம் நடக்கவேண்டும்போல் இருந்தது. எனக்காய் வந்ததுபோல் அன்றும் அதே சொட்டென்ற தூறல்.. அதே மரங்கள்.. என்னை எதற்காய் இப்படி பார்த்து சிரிக்கின்றன. மனிதர்களின் சிரிப்பு மீதான புரிதலே கடினம் அதற்குள் மரங்களின் சிரிப்பை புரிந்துகொள்வது அத்தனை இலகுவா என்ன!. அந்த மரம். அந்த மரத்தைக்
கண்டுவிட்டேன். நேற்று நானும் எனது வையும் சந்திக்க இடம்கொடுத்த அதே
மரம். கொஞ்சம் அங்கே அமர்ந்துவிட்டு போகலாம் என நெருங்கினேன்.
அப்பொழுதுதான் தெரிந்தது. நான் அப்படியொரு மடையன். நேற்று வைகொடுத்த அவள் திருமண அழைப்பிதழை அங்கேயே விட்டுவிட்டு போயிருக்கிறேன்.