ஒரு காதல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 9,256 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அப்பொழுது நான் தூங்கவில்லை – தூக்கக் கிறக்கத்திலே தோன்றிய சொப்பனமாக இருக்கும் என்று அதைத் தள்ளி விடுவதற்கு.

உண்மையைச் சொல்லப் போனால் அப்போது நான் விழித்திருக்கவும் இல்லை; கண்களை மூடிக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்து கிடந்தேன், முதுகெலும்பு இல்லாத ஜீவன் மாதிரி நாற்காலியில் சரிந்து சாய்ந்தபடி.

அப்படி என்ன பலமான யோசனை என்றால், சுவையான கதை என்ன சொல்லலாம்; ஒரு கதை அவசியம் வேண்டுமே என்கிற வேதனைதான். பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயது பெண் பர்வதகுமாரி எனது சிநேகிதி. அவளை “ஓயாத தொல்லை” என்றே கூப்பிடவேண்டும். எப்போ பார்த்தாலும் “எனக்கு ஒரு கதை சொல், ஜோரான கதையாக ஒன்று சொல்” என்று அரித்துப் பிடுங்கும் சுபாவம் உடையவள் அவள்.

“எனக்குக் கதை சொல்லத் தெரியாது” என்று மழுப்பி அவளிடமிருந்து தப்பிவிட முடியாது. “ஊக்குங் உனககா தெரியாது? இவ்வளவு புஸ்தகங்கள் படிச்சிருக்கியே! இன்னும் படிச்சுகிட்டே இருக்கியே. உனக்கு கதை சொல்லத் தெரியாது என்றால் யார் நம்புவாங்க?” என்று சண்டை பிடிக்கும் பண்பும் அவளுக்கு உண்டு.

என்ன எழவாவது ஒரு கதையை சொல்லி அவளை அனுப்பினால்தான் அமைதியாகப் படிக்கவோ. சும்மா கண்மூடி மோனத்து இருக்கவோ இயலும். இல்லையெனில் கொசு, மூட்டைப்பூச்சி வகையரா மாதிரி அவளும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பாள்.

அன்றைக்கும் அவள் “கதை ஒரு கதை” என்று தொந்தரவு படுத்திவிட்டு, “நல்ல கதையாக ஒன்று யோசித்து வை. நான் அப்புறம் வாறேன்” என அறிவித்து விட்டுப் போனாள். அதைப்பற்றிய யோசனையில்தான் நான் ஈடுபட்டு இருந்தேன்.

விழிப்பும் தூக்கமும் தொட்டுப் பிடித்து விளையாட முயலும் இடை நிலை அது. மனம் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக் குட்டி மாதிரி துள்ளிக்கும்மாளம் போட்டு இஷ்டம் போல் திரியும். காதருகில் கூட யாரோ – அல்லது, எதுவோ “கொய கொய” என்று தெளிவில்லாக் குரலில் என்னென்னவோ பேசுவது போல் தோன்றும். அத்தகைய நிலையில்தான் நான் இருந்தேன்.

அப்பொழுதுதான் அது என் காதில் விழுந்தது. மிகத் தெளிவாகக் கேட்டது. யாரோ கலகலவெனச் சிரித்த ஒலி. வெண்கலப்பானையில் சில்லரைக் காசுகளைப் போட்டுக் குலுக்கி உலுக்கினால் எழக்கூடிய ஒலிநயம் கலீரிட்டது அந்தச் சிரிப்பிலே.

யார் அவ்விதம் சிரித்தது?

நான் கண்விழித்து மிரளமிரள நோக்கினேன்.

பழக்கமான, அழுது வழியும் சூழ்நிலைதான். புத்தகங்கள், தாள், பேனா, குப்பை கூளம், “சப்புச்சவரு” எல்லாம் அப்படி அப்படியே இருந்தன, யாரும் வந்து எட்டிப் பார்த்ததாகவும் தெரியவில்லை. பக்கத்து வீட்டுக் குறும்புக்காரப் பெண் பர்வதகுமாரியின் சிரிப்பும் அல்ல அது.

என் மனக்குறளியின் சித்து விளையாட்டாகத்தான் இருக்கும் என்று கருதி, மறுபடியும் “தூங்காமல் தூங்கி சுகம் பெறும்” நிலையில் அமர்ந்தேன். ஆனால், தூக்கம் என் கண்களைத் தழுவி என்னை மயக்க நிலையில் தள்ளிவிடவில்லை. இது நிசம்.

திரும்பவும் சிரிப்பொலி தெளிவாகக் கேட்டது. பெண் ஒருத்தி சிரித்த குரல்தான் அது.

நன்றாகப் பார்த்தும் பயனில்லை. யாரும் பார்வையில் படவேயில்லை. “ஏ குரங்கு! ஏட்டி பான குமாரி எங்கே ஒளிந்து நிக்கிறே?” என்று கத்தினேன்.

இப்போது கேலிச் சிரிப்பொலியோடு, கைகொட்டிக் கனித்ததால் எழுந்த வளைகளின் கலகலப்பும் சேர்ந்து ஒலி செய்தது. எனக்கு எதுவும் புரியவில்லை.

“ஹே கற்பனை வறண்ட கதைக்காரா! உனக்கு கதை எதுவும் உதயமாகாததில் வியப்பே இல்லை என்பது பாயசத்தில் உள்ள இனிப்பு போலவும், மிளகாய்ப் பொடியில் உள்ள காரம் போலவும், உப்பில் உள்ள கரிப்பு போலவும் நன்கு புலனாகின்றது…..”

இவ்வாறு அதிகப்பிரசங்கி தனமாக வாயாடும் வல்லமை பெற்றது யாரோ என்று நான் விழித்துக் கொண்டு இருக்கையில், “முன்னே செல்லும் தலை அலங்கார சிங்காரியின் கொண்டையில் கொலுவிருக்கும் மல்லிகை மணத்தை நுகர்ந்தாலும், இங்கே பூ வாசனை எப்படி வந்தது, செடியுமில்லை தோட்டமும் இல்லையே என்று முழிக்கும் பண்பு பெற்ற மக்கு பிளாஸ்திரியின் சரியான பிரதிநிதியே! நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா? என்ற பேச்சு “தொலைபேசி” மூலம் வரும் குரலிழை போல் இழுபட்டு மென்மையாய் ஒலித்தது என்னருகிலே.

யார் பேசுவது என்று புரிந்துக் கொண்டதும் எனக்கு வியப்பு அதிகமாயிற்று.

என் முன்னால் மேஜைமீது ஒரு வெண்கலப் பொம்மை இருந்தது. மிகுந்த அழகு என்று சொல்ல முடியாது. நானும் சில நண்பர்களும் ஊர் சுற்றி, அணைக்கட்டுகளைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய கோவிலைக் கண்டுகளித்துத் திரும்பிய சமயம், ஒரு இடத்தில் இந்தப் பதுமை விலைக்குக் கிடைத்தது. பலரும் பல பொருள்களை வாங்கினார்கள். சும்மா இருக்கட்டுமே என்று நான் இந்த பொம்மையை வாங்கி வந்தேன். அதனுள்ளே எப்பவாவது “விக்கிர மாதித்த வேதாளத்தின்” தாயாதி எதுவேனும் புகுந்துக் கொள்ளும்; பதுமை கதை சொல்ல முன்வந்து விடும் என்று நான் கண்டேனா?

எனது எண்ணங்களை உணரும் சக்தியைக்கூட அந்தப் பதுமை பெற்றுவிட்டதாகத் தோன்றியது.

“நான் ஏன் கதைசொல்ல ஆரம்பித்தேன் என்ற கவலை உனக்கு ஏன்? கதைசொல்வது யாராக இருந்தால் என்ன? கதை நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை கவனி அதுதான் முக்கியம்” என்று பதுமை பெரிய தனம் பண்ணியது.

இவ்வளவுக்குத் துணிந்துவிட்ட அது, நான் “வேண்டாம்” என்று சொன்னால் மட்டும், பேசாமல் இருக்கப்போகிறதா என்ன? அதனால், “சரிதான் உன் இஷ்டம்போலவே அளந்து தள்ளு!” என்றேன்.

“நான் ஒண்ணும் அளக்க வரவில்லை. இது நிஜமாகவே நடந்தது தெரியுமா?” என்றது பதுமை.

பெரிய கதாசிரியர்கள் முதல் இளம் கதைக்காரர்கள் ஈறாக, எல்லோரும் இப்படித்தான் முன்னுரை கூற ஆசைப்படுகிறார்கள் என்று கனைத்தது எனது மனக்குறளி,

“சந்திரன் என்கிற வாலிபனும், ஆனந்தவல்லி என்ற பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் ஆசையாக இருந்தாங்க” என்று பொம்மை தன் கதையை ஆரம்பிக்கவே, நான் ஏமாற்றம் அடைந்தேன்” என்று சொல்லத்தான் வேண்டும். அது இவ்வாறு திடுதிப்பென்று கதையை ஆரம்பிக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லை “ரொம்ப நாளைக்கு முன்னே ஒரு ஊரிலே…” என்றோ, முன்னொரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்” எனவோ அது பேசத் தொடங்கும் என்று நினைத்தேன்.

என் ஏமாற்றத்தைச் சமாளிப்பதற்காக நான் குறை கூறலானேன் “என்ன பேரு இது, ஆனந்தவல்லி என்று! வசந்தா, பிரேமா, ஹம்ஸா, சாரு, சுலோ, பத்மு என்ற ரீதியில் அழகா, நாகரிகமாகப் பெயர் வைக்கப்படாதோ அந்தப் பெண்ணுக்கு? என்று முணமுணத்தேன்.

“இதுமாதிரி ஊடே ஊடே நீ வால் தனம் பண்ணிக் கொண்டிருந்தால் நான் சொல்லவந்ததைச் சொல்ல மாட்டேன் ஆமாம்” என்று உறுதியாக அறிவித்தது பொம்மை.

அம்மா தாயே தெரியாமல் செய்து விட்டேன். இனி அவ்விதம் செய்யவில்லை என்று என் மனம் பேசியது.

“நான் அம்மாவுமில்லை, தாயுமில்லை ஆமா…” என்று அது முறைத்தது.

“தப்பு, தப்பு கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா?”

நீ பேசாமல் கம்முனு இருந்தால் போதும் என்று எச்சரித்துவிட்டு அது கதையைத் தொடர்ந்தது.

“ஆனந்தவல்லி அழகுன்னா அழகு அப்படியாப்பட்ட அழகு!”…

எப்படியாப்பட்ட அழகு? என்ற நினைப்பு தானாவே என் மனசில் தலை தூக்கியது. நான் என்ன செய்யட்டும்? எனது மனம் வெறிக் குரங்கு, ஒரு கணம் கூட சும்மா இருக்க முடியாதே அதனால்!

என் சந்தேகத்தை ஒடுக்க முயலுவதைப்போல பதுமை பேசியது.

“அவளைப் பார்த்தால் இன்னிக்கு பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம்னு தோணும். அவள் நடந்து போகிறபோது, மின்னல்கொடி துவஞவதுபோலிருக்கும். அவள் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்களை தாழ்த்திக் கொள்கிறபோது, கண்ணாடிமேலே சூரிய ஒளி பட்டுத் தெறிக்கிற மாதிரி பளிச் சென்று இருக்கும். அலைகள் நடனமிடும் சமுத்திரத்திலே நிலவொளி படரும் வனப்பு, தோட்டத்துச் செடிகளில் விதம் விதமான மலர்கள் பூத்துச் சிரிக்கும் கோலம், அந்தி வேளையின் மேலவானத்து அதிசய அழகு, வெண் மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நீல வானம் – இதெல்லாம் ஒரு தடவைக்கு ஒரு தடவை, பார்க்கப் பார்க்க புதுமையும் இனிமையும் வாடாத எழிலும் பெற்றிருப்பதாகத் தோன்றவில்லையா? அதேபோல் தான் ஆனந்தவல்லியும் அழகாய் அதிசயமாய், இனிமையும் இளமையும் நிறைந்த இன்பமாய்க் காட்சி தந்து கொண்டிருந்தாள்.

“பையன் சந்திரன் அவள் மீது ஆசை வைத்து அவள் நினைவாகவே அலைந்து திரிந்தது ஒரு அதிசயம் இல்லைதான். அந்த இளம் பெண்ணைக் காணக்கூடிய எந்த வாலிபனும் அவள்மீது மோகம் கொள்ளாமலிருக்க முடியாது. அவள் பார்த்தால், காணக் கிடைக்காத இன்பத்தையெல்லாம் இருவிழிக் கிண்ணங்களில் அள்ளி எடுத்து இந்தா என்று தருவதுபோல் இருக்கும். அவள் சிரித்தால் அபூர்வமான ஒளி உதயங்களைப் பிடித்துக் காட்டுவது போல தோன்றும். அவள் பேசினாலோ, இன்பக் கதைகளை – இன் சுவை கீதங்களை ~ எல்லாம் இசைப்பதுபோல் படும். அவளை அடிக்கடி பார்க்கவும், அவளால் அடிக்கடி பார்க்கப்படவும், அவளது பொன்னொளிச் சிரிப்பைப் பெறவும், அவளுடைய இனிய பேச்சுக்களைக் கேட்கவும் வாய்ப்பு மிகுதியாகப் பெற்றிருந்தவன் சந்திரன். அவன் அவளின் நினைப்பில் சொக்கிக் கிடந்ததில் வியப்புக்கு இடம் ஏது?

ஏது ஏது, இந்தப் பொம்மை சரியான பிசாசுப் பயல் பிள்ளையாக இருக்கும் போல் தோணுதே! என்று என் மனக்குறளி வியப்புக்குரல் கொடுத்தது.

“ஏய் நிறுத்து! இப்படி எல்லாம் என்னைப்பற்றி அகெளரவ மாக எண்ணினால் எனக்குக் கெட்ட கோபம் வரும்” என்று பதுமை முறைத்தது.

எண்ணுவது மனசின் இயல்பு அதுக்கு எப்படித் தடைபோட முடியும? “ஏ ஒன் சைத்தான் குட்டிதான் இது” என்று என் மனம் எண்ணியது. “இல்லை இல்லை இந்த எண்ணத்தை அழிச்சுப் போட்டேன்” என்றும் அது சேர்த்துக்கொண்டது.

அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற தெம்போடு ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்தபடி தலையை ஆட்டிய பதுமை கதையைத் தொடர்ந்தது.

சந்திரனும் தங்கமான பிள்ளையாண்டான். கண்ணுக்கு லெட்சணமாக இருப்பான். வம்பு தும்புக்குப் போகமாட்டான். அவனும் ஆனந்த வல்லியும் உறவுமுறையாக வேறு இருந்ததனால், ஊரிலே உள்ளவங்களும் உற்றார் உறவினரும் இரண்டு பேரும் சரியான ஜோடிதான், நல்ல பொருத்தம் சீக்கிரம் கல்யாணத்தை முடித்து வைத்துவிட வேண்டியது தான் என்று விளையாட்டாகவும், வினையாகவும் சொல்லுவது வழக்கம். சந்திரனும், ஆனந்தவல்லியும் கல்யாணம் செய்துகொண்டு இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்கு வேளையும் பொழுதும் வரட்டும் என்று காத்திருந்தார்கள். பெரியவர்கள் அவர்களை அப்படி காக்கும்படி வைத்து காலத்தை ஏலத்தில் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

“விதி, அதிர்ஷ்டம் என்பவற்றை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி – மனிதருக்குப் புரியாத, அவர்களால் புரிந்துகொள்ள முடியாத, மனித எத்தனத்துக்கும் மேலான சில சக்திகள் மனிதருடைய காரியங்களை பாதிக்கின்றன, மனித வாழ்க்கையை கண்டபடி எல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்று ஒவ்வொருவரும் எப்பவாவது எண்ணத்தான் செய் கிறார்கள். அப்படி எண்ணும்படி காலமும், வாழ்க்கையின் போக்கும் எல்லோரையும் தூண்டி விடுகின்றன.

சந்திரன் ஆனந்தவல்லி வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படுவானேன்? சந்தோஷமாகக் காலம் கழித்து வந்த அவர்கள் சந்தோஷத்தை நீடித்து அனுபவிக்க முடியாமல் போனது ஏன்? இதற்கெல்லாம் “விதி” என்கிற முடிவைத் தவிர வேறு திருப்திகரமான பதில் எதையும் கண்டுபிடிக்க முடியாது.

சந்திரனுடைய போதாத காலம்தான் அவனை ஒரு மாமரத்தின் மீது ஏறத் தூண்டியிருக்க வேண்டும். உயரத்தில் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு கனி. காதலியின் கன்னத்தின் கதுப்பையும் மினு மினுப்பையும் நினைவு படுத்திய அந்தப் பழத்தைக் கல்லால் அடித்து விழவைப்பதை விட, மேலே ஏறிப் போய் கையால் பறித்து எடுத்து வந்து அவளிடம் கொடுப்பதே சிறப்பானதாகும் என்று அவன் எண்ணியிருக் கலாம். மரங்களில் ஏறி இறங்குவதில் பெரிய சூரன் தான் அவன். ஆனால் அன்று விதி அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்ததை யார் தான் அறிவார்கள்?

ஆசைத் துடிப்போடும் அளவற்ற தன்னம்பிக்கையோடும் வேகமாக ஏறிய சந்திரன் அஜாக்கிரதையாகக் கால் வைத்ததனால் மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். அதிக உயரத்திலிருந்து விழுந்ததால் முதுகில் நல்ல அடி. ஒரு காலிலும் அடி உரிய முறையில் சிகிச்சைகள் நடந்தன. ஆனாலும் கால் ஊனமாகி அவன் நொண்டி ஆனது தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. சந்திரன் படுக்கையில் விழுந்து கிடந்த போதெல்லாம் ஆனந்த வல்லி கண்ணிர் வடித்து சோக சித்திரமாக மாறியிருந்தாள். அவன் குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததும் தான் அவள் உற்சாகம் பெற்றாள்.

ஆனால், சந்திரனின் உள்ளம் உற்சாக உணர்வைப் பறிகொடுத்து விட்டதாகத் தோன்றியது. அவன் சுத்தசுய நலமியாக இருந்திருந்தால் அவன் உள்ளம் வீண் வேதனையை வளர்த்திருக்காது தான். சந்திரன் ஆனந்தவல்லியிடம் புனிதமான அன்பு கொண்டிருந்தான். அவனுடைய ஆசை உயர்ந்தது. அதனால் அவன் தனது நிலைமையையும், தன்னோடு வாழ்க்கை முழுவதம் துணை சேர்ந்து அவளது வருங்காலத்தை குறை உடையதாகவும் நரக வேதனை பெற்றதாகவும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிற தனது ஆசைக் கிளியின் வாழ்வு பற்றியும் தீவிரமாகச் சிந்தித்தான். ”அன்பே, நீ என்னையே மணந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. நாம் வளர்த்த இன்பக் கனவுகள் எல்லாம் நிறைவேற முடியாதபடி காலம் வஞ்சித்து விட்டது. நாம் கட்டிய ஆசைக் கோட்டைகள் எல்லாம் ஆகாசக் கோட்டைகள் ஆகிவிடும். நொண்டியைக் கல்யாணம் செய்து கொண்டு நீ என்ன சுகம் காணப்போகிறாய்?” என்று அவளிடமே சொல்லிவிட்டான் சந்திரன்.

அவளுக்கு, அவன் நொண்டியானதை விட, இப்படிப் பேசியதுதான் அதிக வேதனை தந்தது. அவள் தன் பூங்கரத்தால் அவன் வாயைப் பொத்தினாள். இது மாதிரி எல்லாம் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?” என்று வேதனையோடு சொன்னாள்.

அவள் கெஞ்சியதற்கு இணங்கி, சந்திரன் அவ்வாறு பேசுவதை விட்டுவிட்டான். ஆனால் வேதனையோடு எண்ணி எண்ணி மணம் குமைவதை ஆசைக்கு இனியவள் கூடத் தடுத்துவிட முடியாது அல்லவா?

அவன் எண்ணி மனசைக் குழப்பிக் கொண்டான். எப்படிப் பார்த்தாலும், அவன் அவளுக்குச் சுமையாகத்தான் இருக்க முடியும் என்றே அவனது உள்ளம் உறுத்தியது. அப்படி வாழ்ந்து, அவளது இனிய வாழ்வையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதை அவன் விரும்பவில்லை. ஆகவே, தனது காதலி ஆனந்தவல்லிக்கு நல்லது செய்வதாக நம்பிக் கொண்டு சந்திரன் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து, தனது உயிரைத் தியாகம் செய்து கொண்டான். அவன் இரட்டைத் தியாகி இல்லையா? காதல் தியாகியான சந்திரன் உயிர்த்தியாகியும் ஆனான். இவ்வளவு தான் கதை என்று கூறி முடித்தது பொம்மை.

“எஹெஹெ! இதுவும் ஒரு கதையா!” என்று கனைத்தது என் மனக்குறளி.

“இதுக்கு என்னவாம்? இதில் காதல் இருக்கிறது. காதலின் உயர்வு தெரிகிறது. தனது அன்புக்கு உரியவளுக்கு இன்பம் அளிப்பது மட்டும் காதலின் நோக்கமல்ல; தன்னால் அவளுக்குத் துன்பமும் நீடித்த வேதனையும் ஏற்படும் என்று தெரிந்தால், அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தவிர்க்கவும் தூண்டும் உண்மையான காதல்….”

“காதலன் தற்கொலை செய்து கொண்டதால், காதலி சந்தோஷப்பட்டு விடுவாளாக்கும்? ஆனந்த வல்லிக்கு ஆனந்தமே இல்லாமல் செய்து விட்டாயே! எல்லோருக்கும் காதல் கதை பிடிக்கும் தான். ஆனால் எப்போதுமே கதை முடிவு இன்பமயமானதாக இருக்க வேண்டும். வாசகசிகாமணிகள் அதைத்தான் விரும்புகிறார்கள். உனது கதை பக்கத்து வீட்டுப் பன்னிரண்டு வயசுப் பெண்ணுக்குக் கூடப் பிடிக்காது!” என்றேன்.

“ஹ” ம்ப்!” என்று வெறுப்போடு குரல் கொடுத்தது பொம்மை. தனக்குக் கதை சிருஷ்டிக்க முடியாத வறட்சி ஏற்பட்ட நிலையிலும், மற்றவர்கள் கதையை மோசம், மட்டம், குப்பை என்று கண் மூடித்தனமாக விமர்சனம் செய்வதில் மகிழ்வு காண்கிற இலக்கிய பிரம்மாக்களின் கும்பலைச் சேர்ந்தவன் தானா நீயும்? போயும் போயும் உன்னைத் தேடிப் பிடித்தேனே எனது அற்புதமான கதையைச் சொல்வதற்கு!” என்று முனகியது மேஜை மீதிருந்த பதுமை.

அப்புறம் அது பேச்சு மூச்சு காட்டவே இல்லை.

அதையே பார்த்துக் கொண்டிருந்தேன், தூக்கமோ விழிப்போ அல்லாத “இரண்டுங் கெட்டான்” நிலையிலே இறங்கியிருந்த நான். “இப்படி ஒரு பொம்மை நம்மிடம் இருப்பது தப்பு. முதல் வேலையாக இதை எங்காவது ஒரு பாழுங் கிணற்றிலே போட்டு விட்டு வர வேண்டும்” என்று என் மனம் தீர்மானம் செய்தது.

– பரிதி 1965

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *