ஒரு கவிதை தொகுப்பு!

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 22,382 
 
 

“சார்…! இந்தாங்க சார், என்னோட அஞ்சாவது கவிதை தொகுப்பு.” என்று ஒரு புத்தகத்தை நீட்டி “படிச்சு பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க!” என்று புன்னகைத்தான் விமல். இவனால் எப்படி இப்படி கவிதைகளை எழுதித்தள்ள முடிகிறதென்று வியப்பாக இருந்தது.

“நீ நிலா, நானும் நீயும் செல்வோம் தேவ உலா!” இப்படி, லா-லா என முடித்து, இயைபுத் தொடையை அவன் கையாண்ட வலிதாங்காமல் தமிழ்த்தாயின் மேனியெங்கும் புண்ணாகியிருக்கும் இந்நேரம். அவனுக்குள் காதல் பொங்கிப் பெருகுவதென்னவோ உண்மைதான். அந்தக் காதல் ஒருபோதும் அவனது கவிதைகளில் பொங்கவில்லை என்பதும்கூட உண்மை.

அவன் தரும் மொக்கை கவிதைகளை நான் ஒருபோதும் விமர்சித்ததே இல்லை. இப்போது உங்களிடம்தான் முதல்முறையாகக் குறைபட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு என்பதெல்லாம் அவனுக்குக் கொஞ்சம் ஓவர். அதுதான் உங்களிடம் சொல்லியே தீரவேண்டுமென்றாயிற்று.

அவன் கவிதைத் தொகுப்பை ஒவ்வொரு முறை என்னிடம் வந்து கொடுக்கும்போதும், அவன் கவிதைகளைப் பற்றி கருத்து சொல்லும்படி வற்புறுத்தும்போதும் எனக்கு என்னுடைய கவிதைக் காலங்கள் நினைவிலாடும். அப்படியென்றால் இப்போதெல்லாம் கவிதை எழுதுவதில்லையா என நீங்கள் கேட்கக்கூடும்! ஆம், அதிகமாக எழுதுவதில்லை. “கல்யாணம் முடிந்தபின் காதல் கவிதை என்ன வேண்டிகெடக்கு” இப்படி அலுத்துக்கொள்ளும் ஆளில்லை நான். இப்போது என் இரு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி அலுவலகப் பணிகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

எனக்கு ஒரு 25 வயதிருக்கும். என்னுடைய கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்தேன். முதலில் என்னுடைய கவிதைகள் அச்சிடத் தகுந்ததா என்று உறுதி செய்ய நினைத்தேன். கற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய, சில உள்ளூர் எழுத்தாளர்களிடம் சென்றேன். அவர்களில் பெரும்பாலானோர் கவிதையை வாசிக்கும் முன்னரே விமர்சிக்கத் துடித்தார்கள்.

“இந்த கவிதையை நான் வேறெங்கயோ படிச்ச மாதிரி இருக்குதே.”

“ஓ! இதுவா இதெல்லாம் அப்பவே புறநானூறுல சொல்லிட்டாங்க தம்பி!”

“தம்பி நீங்க இன்னும் நெறய படிக்கணும்!”

“நீங்க ஒரே உத்திய கையாள்றீங்க”

“இதே கவிதைய என்னுடைய நண்பர் ரெண்டு வரியில சொல்லிட்டாரு. வார்த்தைகள சிக்கனமா யூஸ் பண்ணப்பழகுங்க!”
இப்படிச் சொன்னவர்களெல்லாம் என்னுடைய அந்த கவிதைத் தொகுப்பை முழுமையாகப் படிப்பபதற்குள் திருப்பிக்கொடுத்தவர்கள்.

அவர்கள் சொல்வதெல்லாம் சரிதானோ?! இந்தக் கவிதைகளை அச்சிடாமல் விட்டுவிடலாமா?! மனதிற்குள் ஒரு சஞ்சலம் உண்டானது. அந்த சமயத்தில் எங்களது பக்கத்து வீட்டிற்கு தமிழாசிரியர் ஒருவர் புதிதாக குடிபெயர்ந்திருந்தார். அவரிடம் கவிதைகளைக் காண்பித்துப் பார்ப்போம் என்ற எண்ணம் தோன்றியது.

கவிதை நோட்டை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றேன். மேசையில் பாடம் சம்பந்தமாக ஏதோ குறிப்பெழுதிக்கொண்டிருந்தார். வாசலில் நின்ற என்னை வேண்டா வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தார். நான் கவிதை நோட்டைக் காண்பித்ததும் சட்டொன்று சிநேகமாகிவிட்டார். “நான் முழுசா படிச்சிட்டு நாளைக்குச் சொல்லட்டுமா?!” என்று அவர் கேட்ட தொனியில் ஒருவித மரியாதை தெரிந்தது. ‘கவிதைகளைப் படித்து முடித்த பிறகும் இதே மரியாதை கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!’ என்று என் மனம் எனக்குள் கேலிபேசியது.

“இந்தாம்மா… ராதே! கொஞ்சம் டீ எடுத்துட்டு வா!” குரல்வளையை சமையலறை நோக்கி திருப்பினார்.

“இல்ல சார் இருக்கட்டும், டீல்லாம் வேண்டாம்!”

“பரவால்ல தம்பி கொஞ்சம் குடிங்க!” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே உள்ளேயிருந்து ராதே டம்ளருடன் என்னை நோக்கி வந்தாள். வாத்தியார் என்னை முதலில் வேண்டா வெறுப்பாக பார்த்ததற்கான காரணம் அப்போது புரிந்தது. ‘ராதே’ அவ்வளவு அழகு! வயசுப் பொண்ணு வீட்ல இருக்கும்போது ஒரு புதிய இளைஞனை அப்படித்தானே எல்லா அப்பாக்களும் பார்ப்பார்கள்!

அவளை மீண்டும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்க்கலாம் என்ற ஆவல் இருந்தாலும் வாத்தியார் என்னைப் பார்த்தவாறு எதிரே அமர்ந்திருந்ததால், இயலவில்லை. அதற்குள் அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

மறுநாள் மாலையில் ஆவலுடன் வாத்தியார் வீட்டிற்குச் சென்றேன். இப்போது கவிதையை விட ராதே ஆவலுக்குக் காரணமாகியிருந்தால். அழைப்பு மணியை அழுத்தினேன். கதவுக்கே உரிய அந்த கீச்சுச் சத்தத்துடன் முப்பது டிகிரிவாக்கில் கதவு திறக்கப்பட்டது.

“அப்பா டீச்சர்ஸ் மீட்டிங்காக சென்னை போயிட்டாரு, வர்றதுக்கு நாலு நாள் ஆகும். நீங்க வந்தா உங்ககிட்ட சொல்ல சொன்னாரு.”

நுனி விரல்களும் அதிலிருந்த மருதாணி வண்ணமும் மட்டுமே எனக்குத் தெரிந்தன. மீதமெல்லாம் கதவுக்கு அந்தப் பக்கம் இருந்தன.

“ஓ அப்டியா! சரி… அப்போ நான் நாலுநாள் கழிச்சு வர்றேன்.” என்று சொல்லிவிட்டு இரண்டு படிக்கட்டுகள் கீழிறங்கினேன்.
“உங்க கவிதைகள்லாம் ரொம்ப நல்லாயிருக்கு” அவள் கூறியதும் எனக்கு சொல்வதற்கு பதில் ஏதும் சில விநாடிகளுக்கு கிடைக்கவில்லை.
கிட்டத்தட்ட அரைநிமிட இடைவெளிக்குப்பின்,

“ஓ… அப்படியா?! தேங்க்ஸ்!” என்றேன். அடுத்த சில விநாடிகளுக்கு இருவரும் மௌனத்தைப் பகிர்ந்துகொண்டோம்.

“சரி… நான் போகட்டுமா..?” என்று தயக்கத்துடன் கேட்டேன்.

“ம்… சரி!”

நான் வந்துவிட்டேன்.

“ச்சே… நீ ஒரு முட்டாள்டா!. அப்படியே கவிதைய பத்தி நைசா ஏதாவது பேச்ச வளத்து அவளப் பத்தி தெரிஞ்சிருக்கலாம்ல…!” என்று மறுநாள் என் நண்பன் தலையிலடித்துக்கொண்டது இன்னும் நினைவில் அப்படியே காட்சியாய் தெரிகிறது.

மறுநாள் நண்பர்களுடன் எங்கோ ஊர்சுற்றி விட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். கண்களைக் கொஞ்சம் கசக்கி விட்டு மீண்டும் பார்த்தேன். அது ராதேதான்…! என் அம்மாவுக்கு அடுப்பங்கறையில் ஏதோ அத்தை மகளைப் போல சமையலுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.

“அவங்க அப்பா ஊருக்கு போயிட்டாராம்; பாவந்தனியா இருக்குது புள்ள; அவங்க அத்தை கூட துணைக்கு படுத்துக்கறதுக்காக ராத்திரிதான் வருவாங்களாம். காலேஜ்ஜில இருந்து வந்ததுல இருந்து இங்கதான் இருக்குது” அம்மா சொன்னது எனக்குக் காதில் கொஞ்சமும் விழவில்லை.

தண்ணீர் குடிப்பதுபோல் அடுப்பங்கறைச் செல்லலாமா என யோசித்துக்கொண்டிருந்தபோது,

“என்ன கவிஞரே…! எங்க… ஃப்ரெண்ட்ஸோட வெளில போய்ட்டு வர்றீங்களா?!” பலநாள் பழகியவளைப் போல கேட்டபடியே என் அறைக்குள், என் முன்னே வந்து புன்னகைத்தாள் ராதே. அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு “ம்… ஆமா!” என்றேன்.

“சைட் அடிக்கப் போகும்போதெல்லாம்
வேலைக்குப் போகச் சொல்லி
முட்டுக்கட்டையாக இருந்த அப்பா,

வேலைக்குப் போனபின்
வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்கிறார்
பெண் பார்க்க!”
எனது கவிதையைச் சில சிரிப்புச் சத்தங்களோடு சொல்லிவிட்டு,

“நீங்க சைட்டடிக்க கட்டுசோறு கட்டிட்டு போவீங்க போலத் தெரியுதே!” என்று அவள் கேட்டவுடன் நானும் அவளுடன் லேசாக சிரித்து வைத்தேன்.

“உங்க கவிதைல ஒரு இளமை இருக்கு, நல்லாருக்கு!”

“தேங்க்ஸ்”

“வானத்தில் சிங்கநடையிட்டு ஏற வேண்டாம்
அது உச்சி மயிரை உரசிக்கொண்டிருக்கிறது! – செம வரிகள், எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.”

“ஆனா… இதெல்லாம் புதுசில்ல, அந்தக் கால சித்தர்களோட தாட்ஸ்தான்னு ஒரு எழுத்தாளர் சொன்னாரு”

“ஹலோ… கவிஞரே! யாருமே சொல்லாதத நாம சொல்லணும்னா, நீங்க ஆதாமாகவும் நான் ஏவாளாகவும்தான் இருக்கணும்.”

அவள் என்னைக் கவிஞரே என்று அழைக்கும்போதெல்லாம், வருங்காலப் பிரமதரே என்று தொண்டர்கள் புகழும்போது அரசியல் தலைவர்கள் சிலிர்ப்பதைப் போலச் சிலிர்த்துப் போவேன்.

“நான் அவ்வளவு படிக்குறதில்ல… பாரதி, கண்ணதாசன்… அப்படின்னு கொஞ்சங்கொஞ்சம் படிப்பேன்”

“கவிதை எழுதுறதுக்கு வாழ்வை ரசிக்குற மனசும் அத வார்த்தைல வெளிப்படுத்தும் திறமையும் இருந்தாப்போதும், இல்லையா..?!” என்று அவள் புருவத்தை இருமுறை உயர்த்திக்கொண்டே கேட்டபோது, நான் ஏதோ சொல்ல வந்தேன்…

அவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“கவிதைங்கறது வார்தைகளாக மாற்றப்பட்ட ஒரு அனுபவம்; ஒரு உயிர் அனுபவித்த தருணங்களின் வார்த்தை வடிவம். அத நீங்க நல்லாவே செஞ்சிருக்கீங்க. மெத்தப் படிச்சவங்க எத்தன பேரால கவிதை எழுதிட முடியும்?!”

இவள் என் வாழ்க்கை முழுவதுமாக என்னுடன் இருந்தால், நான் கவிதைத் தொகுப்பை அல்ல, ஒரு கவிதைத் தோப்பையே உருவாக்க முடியும் என்று தோன்றியது.

அந்த நாளுக்குப் பிறகு என்னைக் கொஞ்சம்கூடக் கேட்காமல், அவளை என் காதலியாக அறிவித்துக்கொண்டு திரிந்தது என் மனம். காதலை எப்படிச் சொல்வது என்று பலத்த யோசனையிலும் நண்பர்களுடன் கலந்துரையாடுவதுமாக இருந்தேன். “பேசாம கவிதையாவே சொல்லிடேன்…!” என்று எவனோ ஒருவன் போகிற போக்கில் சொல்லிச் செல்ல, கவிதை எழுதிக்கொண்டு சென்றேன்.

“என்ன கவிஞரே…! புதுசா ஏதும் கவித எழுதியிருக்கீங்களா?” சொல்லி வைத்தாற்போல் வந்துவிட்டாள் வீட்டிற்கு. எழுதிவைத்தக் கவிதையை தேடினேன்.

“ஆமா… நீங்க மார்பகம் பத்தி ஒரு கவித எழுதியிருந்தீங்கல்ல…” தயங்கிக்கொண்டே கேட்டாள் ராதே.

என் எல்லாக் கவிதைகளைப் பற்றியும் என்னிடம் விவாதித்திருந்த அவள், அந்தக் கவிதையைப் பற்றி இதுவரை என்னிடம் பேசியதில்லை. ஒரு பெண்ணால் அவள் நாணத்தைக் கடந்து அந்தக் கவிதையைப் பற்றி ஒரு ஆணிடம் வெளிப்படையாகப் பேசுவதென்பது அவ்வளவு சுலபமல்ல. நானும் அதனைப் புரிந்துகொண்டு, அவளிடம் ஏதும் கேட்கவில்லை.

ஒரு ஆணின் பார்வையில் பெண்ணின் மார்பகங்கள், அவன் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு பருவத்தைக் கடக்கும்பொழுதும் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது எனும் கற்பனையில் அந்தக் கவிதையை எழுதியிருந்தேன்.

அவள் கேட்டதைக் கண்டுகொள்ளாதவனாய், அவளுக்குக் கொடுக்க வேண்டுமென்று எழுதிய காதல் கவிதையை தேடிக்கொண்டே இருந்தேன். அவள் மீண்டும் அந்தக் கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

“ஓ..! அந்தக் கவிதையா?! உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?” அவளிடம் இயல்பாகவே கேட்டேன்.

“ம்…” என்ற ஒலிக்குப் பிறகு, சில நிமிடங்களுக்கு அவளிடமிடமிருந்து வார்த்தைகள் ஏதும் வெளிப்படவில்லை. என்னிடம் எதையோ கேட்டுவிட வேண்டும் என்ற பரிதவிப்பு அவளிடம் தெரிந்தது. அவள் மனநிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இயலவில்லை.

“அந்த வரிகள் உங்கள் கற்பனையா? இல்ல, அனுபவம் ஏதும் இருக்கா?” முகத்தை திருப்பிக்கொண்டு கேட்டாள்.

“எந்த வரிகள்…”

“ம்… அதான், உங்க கவிதைல நீங்க எழுதின வரிகள்தான்”

“அதான் எந்த வரிகள்”

ப்ச்…என்றவாறு என்னைப் பார்த்துக்கொண்டே வாய்க்குள்ளேயே எதையோ முனங்கினாள். தாவணியின் முனையை சற்று நேரம் கசக்கி, கோபத்தில் பின்னால் விசிறிவிட்டு,

“இவ்வளவுநாள் அலைக்கழித்த அது,
காதலி வந்ததும்
இவ்வளவுதானா என்றானது”

அந்த நீண்ட கவிதையின் இடையில் வரும் மூன்று வரிகளைச் சொல்லிவிட்டு, பதிலை நோக்கி அதே பரிதவிப்புடன் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அனுபவம் இல்லாம அதெல்லாம் எழுதமுடியுமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

நான் எதிர்பார்க்கவேயில்லை, அவள் தேம்பி அழும் சத்தம் கேட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அந்த வரிகளைக் கற்பனையில்தான் எழுதினேன் என்று அவளிடம் சொல்லி புரிய வைப்பதற்குள் பெரியபாடாக ஆகிவிட்டது.

இப்போதெல்லாம் கவிதைகள் என் மனதில் உதித்தவுடன், அதை எழுதுவதற்கு முன்னரே அவளிடம் சொல்லிவிடுகிறேன். “இரண்டு பிள்ளைகளுக்குப் பிறகும் உங்களுக்கு எப்படி காதல் கவிதை எழுத முடிகிறது, வேறேதும் புது அனுபவமா…?!” என்று செல்லமாக அவ்வப்போது பொய்ச் சந்தேகம்கொள்வாள்.

ம்… ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். என்னுடைய கவிதைகளை இதுவரை நான் அச்சிடவேயில்லை. அவையெல்லாம் அவளிடம் கூறப்பட்டு அப்போதே மோட்சமடைகின்றன.

எனது பெயர் ராஜா கண்ணன். என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவரட்டம், சிவகாசி அருகிலுள்ள செங்கமலநாச்சியார்புரம். நான் கோவையில் 'ஈஷா காட்டுப்பூ' எனும் ஆன்மீகம் சார்ந்த பத்திரிக்கையில் எடிட்டோரியலில் பணிபுரிகிறேன். அதுபோக, தினமலர் நாளிதளிலும் என்னுடைய கட்டுரைகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வெளியாகின்றன. தற்போது என்னுடைய கவிதை தொகுப்பை வெளியிடும் முயற்சியில் உள்ளேன். மிகச் சில சிறுகதைகளே எழுதியுள்ளேன் என்றாலும் தொடர்ந்து சிறுகதை எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளேன். குறும்படம் ஒன்றை…மேலும் படிக்க...

6 thoughts on “ஒரு கவிதை தொகுப்பு!

  1. ‘ஒரு கவிதை தொகுப்பு ‘ உங்கள் ரசனை,மிகவும் ரசிக்க வைத்தது. கற்பனையில்- ரசித்தவளே மனைவியாய் அமையச் செய்தது ,திருப்தியாக இருந்தது.

  2. கவிதை தொகுப்பு அழகான கதை ..
    அதிலும் கடைசியாக ” கவிதையை அச்சிடவில்லை அதனை அவளிடம் கூறும் போதே அவை மோட்சமடைகின்றன ” என்பது அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா .

  3. > நான் கவிதைத் தொகுப்பை அல்ல, ஒரு கவிதைத் தோப்பையே உருவாக்க முடியும்

    விழுந்து விழுந்து சிரித்தேன். மிக இனிமையான கதை. உண்மைக்கதையா ?

    1. சங்கர் சார்,
      வணக்கம் . கதையை ரசித்து பாராட்டியதற்கு நன்றி. இது முழுக்க உண்மையல்ல என்றாலும், உண்மையும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *