ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 14,102 
 
 

அலுவலகம் வந்து இறங்கிய அரை நேரத்தில் மேசை மேல் இருந்த கைபேசி ஒலிக்க….. ‘வைஷ்ணவி’ என்கிறப் பெயரைப் பார்த்து, ‘இம்சை!’ என்று மனசுக்குள் அழுது, வலியுடன் அணைத்து நகர்த்தி வேலையைத் தொடர கணணியில் முகம் பதித்தான்; சிவாஷ்.

வைஷ்ணவி! பத்து நாட்களுக்கு முன்வரை இவன் உருகி உருகி காதலித்த நான்காண்டு காதலி. வாடா போடா என்று நட்பாக ஆரம்பித்து காதலாக முடிந்த உறவு. தற்போதைய இவன் அழுகை, வலி, விலகளுக்குக் காரணம்……

அன்றைக்கு இவன் அம்மா அபிராமி….காலத்தின் கட்டாயம் இவனுக்குக் கலியாணம் முடிக்கும் முடிவில் இருந்தாள் போல. ஞாயிற்றுக்கிழமை தாயும் மகனும் ஓய்வாக இருந்த நேரத்தில்…

“சிவா!. படிப்பை முடிச்சதிலேர்ந்து நீ அஞ்சு வருசமா கைநிறைய சம்பாதிக்கிறே. வயது 28 முடிந்து 29 தொடக்கம். இனியும் நீ சும்மா இருக்கிறதைப் பார்த்து நானும் சும்மா இருக்க கூடாது. என் கடமையை முடிக்கனும். இந்த வீட்டுக்கு மருமகள் வரனும். உனக்குக் கலியாணம் வேணுமா வேணாமா முடிவைச் சொல்லு ? ” கேட்டு தடாலடி அடித்தாள்.

“என்னம்மா இப்படி கேட்டுட்;டே. ?!” இவன் உள்ளுக்குள் மகிழ்ந்து வெளிக்குத் துணுக்குற்றான்.

“பின்னே என்னடா ! வயசுப் பையனுக்கு தகுந்த உன் நடைஉடை, பாவனை எல்லாம் சரி. எந்த குறையும் கிடையாது. ஆனா…. இந்தக் கலியாணம் என்கிற பேச்சை மட்டும் இதுவரை நீயும் என்கிட்ட எடுக்கலை நானும் கேட்கலை. இப்போ சொல்லு..? ஏன் மௌனம், எதுக்கு மௌனம். மனசுல எவளையாச்சும் நெனைச்சிருக்கியா, காதலிக்கிறீயா ? விபரம் சொல்லு ? ” வரிசையாக கேள்விகள் கேட்டு இவனை அதிரடித்தாள்.

சிவாஷிற்கு விழி பிதுங்கியது.

“எ….துக்கு இந்த திடீர் கிடிக்கிப்பிடி ? ” திணறினான்.

“உனக்குச் செவ்வாய்த் தோசம். இப்பவேத் தேடத் தொடங்கினால்தான் இரண்டு வருத்துக்குள்ள இந்த ஜாகத்துப் பெண்ணாய்த் தேடி உனக்கு முப்பது வயசுக்குள் கலியாணம் முடிக்க முடியும். முப்பதைத் தாண்டினால் யாருக்கும் பொண்ணு, மாப்பிள்ளைக் கிடைக்கிறது கஷ்டம். அதிலும் செவ்வாய் தோச சாதகத்துக்கு வரன் கிடைக்கிறது குதிரைக் கொம்பு. அதான் இந்த பிடி, அடம். பொண்ணு பார்த்து வைச்சிருக்கியா, எவளையாவது காதலிக்கிறீயா உண்மையைச் சொல் ? ”

இவனுக்கு, “இல்லே! இன்னும் இரண்டாண்டுகள் கழித்து முடிக்கலாம் !” என்று சொல்ல ஆசை. ஆனாலும்…. வலிய வரும்போது பிடித்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நினைத்தவன்…
“ம்ம்…..வைஷ்ணவி என்கிறப் பெண்ணை நாலு வருசமா காதலிக்கிறேன் !” உடைத்தான்.

“திருடா!” என்று சந்தோசப்பட்டு முகம் மலர்ந்த அபிராமி, “பொண்ணு உனக்கேத்த நிறம், உயரம், குணம், மனத்தில் அழகாய் இருப்பாளா ? ” ஆவலாய்க் கேட்டாள்.

“இருப்பாள். உனக்கும் பிடிக்கும்.”

“வயசு ? ”

“என்னைவிட ரெண்டு வயசு கம்மி. 26.”

“உன்னோட வேலையா ? ”

“இல்லே…. பக்கத்துக் கம்பெனி. என் சம்பளம். நாற்பதாயிரம்.!”

“சாதி ? ”

“தெரியலை.?…”

“அது தேவை இல்லே. அம்மா, அப்பா ? ”

“இருக்காங்க. ரெண்டு பேரும் அரசாங்கத்துல பெரிய அதிகாரியாய் இருந்து ஒய்வு.”

“சரி பரவாயில்லே. நல்ல இடமாத்தான் பிடிச்சிருக்கே. நாளைக்கு அவள் ஜாதகத்தை வாங்கி வா. செவ்வாய்த் தோசமா இருந்தால் உடனே முடிக்கலாம்.”

“அது இல்லேன்னா….? ”

“முடிக்க முடியாது.”

“முடிச்சா ?…”

“செத்துடுவாள்! ”

“அம்மா…ஆ…! ” அதிர்ச்சி, அலறினான்.

“ஆமாடா. இந்த தோசத்துக்கு மட்டும் அப்படியொரு கெட்டக்குணம். சாவு இல்லேன்னாலும் வாழ்க்கை கஷ்டம். இதை நான் சொல்லலை. சாதகம் சொல்லுது. அதனால்தான் எப்பேர்ப்பட்ட பெரிய பணக்காரனாய் இருந்தாலும். பணம், அந்தஸ்த்தெல்லாம் பார்க்காம அதுக்கு உள்ள வரனாய்த் தேடி முடிப்பாங்க. இது காலம் காலமாய் நடக்கிறது.” விலாவாரியாயச் சொன்னாள். சிவாவும் இதைக் கேள்விப் பட்டிருக்கிறான். ஆனால்….தன்னுடைய ஜாதகத்தில் இப்படியொரு வில்லங்கம் இருப்பது இன்றுவரை இவனுக்குத் தெரியாது. காரணம் அதைப் பற்றி அக்கரை இல்லை. ஜாதகம் என்பதில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை.

“சரி. என் சாதகத்துல செவ்வாய்த் தோசம் இருக்குன்னு உனக்கு எப்போ, எப்படித் தெரியும் ? ” கேட்டான்.

“இப்போதான்டா. உனக்கு வயசாகிப் போகுதே. கலியாணம் முடிக்கனும், அதுக்குக் கலியாணத்திசை வந்திருக்கா, வரலையான்னு தெரிய நான் வழக்கமாய்ப் பார்க்கிற சோசியரிடம் போய்ப் பார்த்தேன். உனக்குக் கலியாணத் திசை வந்திருக்குன்னு சொன்ன ஆள் இப்படி ஒரு குண்டையும்; போட்டார். அதான் பதறி துடிச்சி காரியத்தில் இறங்குறேன்.” சொன்னாள்.

“அம்மா! இந்த செவ்வாய்த் தோசமெல்லாம் சும்மா….”

“சும்மா இல்லேடா. உண்மை.!”

“அம்மா! இதைச் சரி செய்ய இந்தப் பரிகாரம்…..,அது இதுல்லாம் உண்டா ? ” தப்பிக்கக் கேட்டான்.

“அதெல்லாம் கூடாது. அந்தப் பொண்ணு ஜாகத்தை வாங்கி வா. செவ்வாய்த் தோசமாய் இருந்தால் ஜாம் ஜாம்ன்னு சீக்கிரம் கலியாணத்தை முடிப்போம். இல்லேன்னா மன்னிச்சுக்கோப்பா…அவளை மறந்துடு. காதல், அது இதுன்னு சொல்லி இந்த தோசத்தால ஒரு பொண்ணு உசுரு வீணாய்ப் போக வேணாம். உசுரு போகிற பிராப்தம் இல்லேன்னாலும்….கண்டிப்பா கடும் கஷ்டம் உண்டு. அது வேணாம்.” நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.

இதுதான் இவன் வயிற்றைக் கலக்கியது. இதையும் மீறி செயல்பட மனம் தடுப்பணைப். போட்டது.

வைஷ்ணவியிடம் விபரம் சொல்லி ஜாதகம் கேட்பதில் தப்பில்லை. கேட்டாள் கொடுப்பாள். தோசம் இருந்து திருமணம் என்றால் சந்தோசம், பிரச்சனை இல்லை.
இல்லை என்றால்…………..இந்தப் பிரிவு ? அதுதான் கஷ்டம்.

“சரி சிவா. இதனால் நமக்குச் சாவு, கஷ்டம் வேணாம். நாம நட்பாய்ப் பிரிந்து… ஆளாளுக்கு வரன் பார்த்து கலியாணம் முடிச்சி சந்தோசமாய் வாழ்றதுதான் சரி! ” என்று அவளாகச் சொல்லி பிரிந்து சென்று திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்தால்……நாம் அவளை மறந்து இன்னொருத்தியை மணந்து வாழ விருப்பமில்லாமல் கடைசி வரை தனி மரமாய் இருந்து வாழக்கையை முடிக்கலாம் என்பது சாத்தியம், சத்தியம்.

காரணம்…..? வைஷ்ணவி இவன் உயிருக்கு உயிரானவள். உயிரில் கலந்தவள். அப்படி என்கிற போது….இதுதான் முடிவு.

அது இல்லாமல், “வாழ்வோ சாவோ…..நாம் இணைவதுதான் சரி.” என்று அவள் முரண்டாய் இருந்தால்……சிக்கல்.!

தன்னைக் காதலித்தக் குற்றத்திற்காக ஒருத்தி உயிரை விடுதல், கஷ்டப்படுதல் எப்படி சரி. வீம்புப் பிடித்து, திருமணம் முடித்து…. அவள் பாதி வாழக்கையில் செத்துப் போனால்….திரும்பித் தன்னந்தனியாய் வாழ்தல் என்பது கொடுமை. மேலும்…..தன்னால்தான் அவள் இறந்தாள், இப்படி கஷ்டப்படுகிறாள், கஷ்டப்படுகிறோம் என்று வாழ்நாள் முழுவதும் சாட்டையடிப்பட்டு, நினைத்து வருந்தி சாவதென்பது கொடுமையிலும் கொடுமை. அதற்கு விட்டுக் கொடுத்தல் சரி. எதையும் அறிவிக்காமல் பிரிதல் சரி.! – தெளிவாகியது.
இதையெல்லாம் எவ்வளவுதான் விலாவாரியாக எடுத்துச் சொன்னாரும் வைஷ்ணவி சம்மதிக்க மாட்டாள். சொல்லாமல் வெறுத்து ஒதுங்கினால்தான் விலகுவாள். என்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அம்மா…! உயிருள்ளவரை மகனின் தனிமைப் பார்த்து வருத்தப்படும். அப்புறம்…அதுவே பழக்கமாகி….அது அவன் தலையெழுத்து என்று மாறி…. மண்டையைப் போடும். அப்புறம் என்ன ஓட்டல் சாப்பாடு. வயதாகிவிட்டால்…. முதியோர் இல்லம். இதுதான் நம் வாழ்க்கை! – என்கிற தீர்க்க முடிவிற்கு வந்தான்.

அதன் விளைவுதான் அம்மாவிடம் வேலை என்று பொய் சொல்லி, இவர்கள் தினச் சந்திப்பைத் தடுக்க….பத்து நாட்கள் தொடர்விடுப்பெடுத்து வீட்டை விட்டு வெளியே நகராமல் வைஷ்ணவி கைபேசியில் வந்தாலும் எடுக்காமல், பல்லைக் கடித்துக் கொண்டு தனிமைச் சிறையில் இருந்தான்.

வைஷ்ணவி தினம் பலமுறை கைபேசியில் வந்து ஒலிக்கும்போதும்….எடுத்து உண்மையைச் சொல்லி விடலாமா, உனக்கும் எனக்கும் ஒரு உறவுமில்லை ஒட்டுதலும் இல்லை என்று வெட்டி விடலாமா என்று மனசு துடியாய்த் துடிக்கும். புரிந்து கொண்டு அவள் விலகினால் பழி இல்லை. மாறாக, அவள் தவறாக முடிவெடுத்து….தற்கொலைக்குச் சென்றுவிட்டால்…..? ! அந்த பயம். வைஷ்ணவி இந்த ஊதாசினத்திலேயே வெறுத்து ஒதுங்கட்டும் என்று தொடாமல் இருந்தான்.

விடுப்பு வேலைக்கு வந்தும் இதோ தொடர் தொல்லை! பத்து நாட்களாக எப்படியோ அப்படியே இப்போதும் தொடாமல் ஒலித்த கைபேசியை அணைத்து தள்ளி வைத்து விட்டான்.
மணி 10.10.

நாலு இருக்கைத் தள்ளி உள்ள தலைமை மேசை மேலிருந்த தொலைபேசி ஒலித்தது.

இருக்கையில் அமர்ந்திருந்த ஆழ்வார் எடுத்தார்.

அடுத்த விநாடி, “சிவா! உனக்கு போன்!” என்று உரக்கக் கூவி ஒலிவாங்கியை அப்படியே மேசை மேல் வைத்து அவர் வேலையைத் தொடர்ந்தார்.

‘கைபேசி காலத்தில் தொலைபேசி! யார் ? ‘ யோசனையில் வந்து எடுத்து ஒலி வாங்கியைக் காதில் வைத்த சிவா, “ஹலோ!” என்றான்.

“சிவா! நான் உன் அலுவலகத்துக்கு எதிரே உள்ள பூத்லேர்ந்து பேசுறேன். வைச்சுடாதே.!” வைஷ்ணவி குரல்.

‘புத்திசாலி! கைபேசியை எடுக்காததால் தப்பிக்க முடியாமல், கழுத்தை நெரிப்பது போல் எதிரே வந்து தொலைபேசியில் தொடர்பு.’ – இவனுக்குப் புரிந்தது. அடுத்துப் பேசாமல் வைத்துவிட்டுப் போனாலும் ஆபத்து. உட்கார்ந்திருப்பவருக்கு ‘ஏன் ? ‘ சந்தேகம் எழும். ஆழ்வார் விஷயாளி….”என்னப்பா! காதலியோட காயா ? இல்லே…வீட்ல அம்மாவோட சண்டையா? ” கேட்டே விடுவார்.! உதைத்தது. அதற்குப் பயந்து…

“சொல்லு ? ” என்றான் மொட்டையாய்.

“மரியாதையாய் அரைநாள் விடுப்பு எழுதி கொடுத்து வெளியே வர்றே.! இல்லேன்னா அடுத்து நிமிசம் நான் அங்கே உன் இருக்கைக்கே வந்து என்னைக் காதலிச்சு கைகழுவறான்னு கத்தி; கலாட்டா செய்வேன். அந்த அவமானம் தேவைன்னா நீ அங்கேயே இரு. வேணாம்ன்னா உடனே நான் சொல்றப்படி வா.” கண்டிப்புக்குரலில் கட்டளை இட்டாள்.

சிவாவிற்கு இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே வேர்த்தது.

சண்டாளி செய்வாள்.! நினைக்கவே நடுங்கியது.

பேருந்து நிறுத்தத்தில் ஒருவன் இடித்தான் என்பதற்காக அவனைச் செருப்பைக் கழட்டி அடித்தாள்.

“என்னம்மா கண்ணு..!” என்று எகத்தாளமாய்க் கத்தி கலாட்டா செய்து கிண்டலடித்து சென்றவனை, “…..என்னடா மயிரு ? ” என்று காட்டமாகவே கூவி திருப்பி;த் தாக்கினாள்.

இந்தத் துணிச்சலுக்காவே சிவாவிற்கு அவள் மேல் ரொம்ப ஈர்ப்பு. இவள்தான் நம் காதலி, மனைவி…. முடிவில்….தன் காதலைச் சொன்னான். அவள் அதிரவில்லை. மாறாக…

“காதலிக்கிறீயா….காதலி! நானும் காதலிக்கிறேன். ஆனா… மவனே….பின்னால அது சொத்தை, இது சொத்தை, என் அம்மா சம்மதிக்கலை, ஆட்டுக்குட்டி சம்மதிக்கலை, நாம பிரியலாம் அது இதுன்னு சொல்லிச் சண்டித்தனம் பண்ணினே….அப்புறம் நான் மனுசியாய் இருக்கமாட்டேன். பத்ரகாளியை விட பெரியவளாகி உன் குரல்வளையைக் கடிச்சு குதறுவேன். நல்லா யோசிச்சு நாளைக்குச் சொல்லு.” சொன்னாள்.

இவன் இரவு முழுக்க யோசித்து, மறுநாள், “சரி” என்று வாக்கு கொடுத்தப் பிறகுதான் வைஷ்ணவி இவன் காதலையே ஏற்றுக் கொண்டு காதலித்தாள்.

‘அப்படிப்பட்டவள் இப்போது வந்து கண்டிப்பாய்க் கலாட்டா செய்வாள் என்பது சத்தியம்!’ என்று உணர்ந்த சிவா…அடுத்து யோசிக்காமல், “சார்! எனக்கு இப்போதிருந்து ஒரு முழு நாள் விடுப்பு வேணும். முக்கிய வேலை. அதான் போன்.!” சொல்லி ஆழ்வாரிடம் சொல்லி அவசரமாய் எழுதிக் கொடுத்துவிட்டு மாடி இறங்கி வெளியே வந்தான்.

எதிரே உள்ள தொலைபேசி நிலையத்திற்கருகிலேயே வைஷ்ணவி சுடிதாரில் தன் இரு சக்கர வாகனத்தோடு நின்றாள்.

இவன் சாலையைக் கடந்து அருகில் செல்ல…”வண்டியில் ஏறு!” உத்தரவிட்டாள்.

தயங்க…

“ஏறுடா..!” அதட்டி அமர்;ந்தாள்.

சிவா அமர… விரைந்தாள். வாகன விரட்டலிலேயே அவள் கோபம் தெரிந்தது.

பாரதி பூங்கா வெளியே வண்டி நிறுத்தி, ஏதும் போமல் கைதியாய் அவனை அழைதை;துச் சென்று சிமெண்ட் இருக்கையில் எதிரில் அமர்த்தி, ” இப்போ சொல்லு. பத்து நாள் ஏன் அலுவலகம் வரலை. என் கைபேசி அழைப்பை ஏன் எடுக்கலை. என் முகத்;தில் ஏன் விழிக்காமல் இருக்கே சொல்லு ? ” சரமாரியாக கேள்விகளை அடுக்கினாள்.

சிவாஷிற்குப் பேச வாய் வரவில்லை.

“இப்படி பேசா ஊமையாய் இருந்தால் என்ன அர்த்தம். உன் அம்மாவிடம் நம் காதலைச் சொன்னீயா ? ”

“ம்ம்.. ” ஈனஸ்வரத்தில் முணகினான்.

“சம்மதிக்கலையா ? ”

“ம்ம்…” மறுபடியும் அதே மெல்லிய ஒலி.

“வாயைத் திறந்து சொல்லு ? ” இவளிடமி;ருந்து அதட்டல் அதிகமாய் வந்தது.

“அ…ஆமாம்…..”

“அதுக்காத்தான் துரை இப்படி இடிஞ்சி உட்கார்ந்து பத்து நாள் விடுப்பெடுத்து துக்கம் கொண்டாடினீங்களோ ?!”

“……………….”

“இல்லே… வெளியில் பெண்ணு பார்க்கிற ஏற்பாடா ? ”

“அ…..தெல்லாம் இல்லே.”

“உண்மையைச் சொல்லு ? ”

“சத்தியமா இல்லே.”

“வீட்டிலேயே அடைஞ்சி இப்படி உம்மனா மூஞ்சியாய் இருந்தால் துக்கம் சரியாகி வழி கெடைச்சிடுமா ? என்ன முடிவு ? ”

“தெ…தெரியலை….”

“உன் அம்மா சம்மதிக்கலைன்னா என்ன.! நாமதான் வாழப்போறோம். வா கலியாணம் முடிப்போம்.!”

“அதில்லே வைஷ_ ! இது வேற சிக்கல் !”

“அது இல்லேன்னா வேற என்ன..? ”

“எனக்குச் செவ்வாய் தோசமாம்….”

“இருந்தாலென்ன ? ”

“செவ்வாய்த் தோசம் உள்ளவன் அந்தத் தோசம் உள்ளவளைத்தான் கலியாணம் பண்ணிக்கனுமாம். மாறி முடிச்சால்…அது இல்லாத அவள்; செத்துடுவாளாம்….”

“ஓ…! துரைக்கு அதான் பிரச்சனை. நான் செத்துடுவேன் என்கிற பயம். விட்டு விலகி என்னை வாழ வைக்க அக்கரை.”

“………………………”

“நான் இல்லாம உன்னால வாழ முடியுமா ? ”

“மு….முடியாது…”

“நான் உன்னை விட்டு விலகி வேறொருத்தனோடு திருமணம் முடிச்சி சந்தோசமாய் வாழ்ந்தால் நீயும் அப்படி திருமணம் முடிச்சு வாழ்வீயா ? ”

“மா….மாட்டேன்…”

“அப்புறம் என்ன மயித்துக்குடா இந்த வீண் குழப்பம், தயக்கம்? என்னாலேயும் அப்படி முடியாது. வா கலியாணம் கட்டிக்கலாம்.”

“வைஷ்ணவி…ஈ!” இந்த அதிரடி அழைப்பில் துணுக்குற்றான்.

“எதுக்குடா அலர்றே ? நீ மட்டும் நல்ல மனசாய் இருந்து நான் வாழனும். நான் கெட்ட மனசாய் இருந்து நீ கஷ்டப்படனும். ஏன் நானும் உன்னை மாதிரி இருக்கப்படாதோ?!…”

“அது இல்லே… வைஷ்ணு. நாம….”

“உனக்குச் சாதகத்துல நம்பிக்கை இருக்கா ? ”

“இல்லே.!”

“எனக்கும் இல்லே.”

“………………”

“சாவுக்குப் பயப்படறீயா ? ”

“எ…எனக்குக் பயமில்லே. ஆனா… நீ…”

“எனக்கும் துளி பயமில்லே.! ”

“அ….அதில்லே வைஷ_ இடையில் நீ செத்தா என்னாலும் வாழ முடியாது.”

“அப்போ நீயும் செத்துப் போ. என்னோடு உடன்கட்டை ஏறு.”

“………………………”

“உண்மைக்காதல்ன்னா அப்படித்தான்டா இருக்கனும். அதை விட்டுட்டு இப்படி உன் சாவுக்குப் பயந்தோ, என் சாவுக்குப் பயந்தோ ஓடி ஒளியறது கோழைத்தனம்.. இதையெல்லாம் மீறிப் பார்க்கத்தான் பாரதி ‘ரௌத்திரம் பழகு!’ சொன்னான். சொன்னதோடு மட்டுமில்லாமல் அந்தக் காலத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் போட்டு அதை செய்தும் காட்டினான். இதனால் ஜாதிக்காரங்க அவனைத் தள்ளி வைச்சி வாழ்க்கையில கஷ்டப்பட்டாலும்…இன்னைக்கும் அதனால் நிமிர்ந்து நிக்கிறான். நம்மை பேச வைக்கிறான்.”

“அ…..அது இல்லே. இது…” சிவாஷ் தடுமாறினான்.

“இதோ பார். காதலிச்சவங்க இப்படி ஜாதகத்தால பிரிஞ்சதைக் கேள்விப்பட்டிருக்குறீயா, இல்லே… பார்த்திருக்கிறீயா ? ”

“இல்லே. தெரியாது.”

“எனக்கும் அது தெரியாது. ஆனா… நான் உண்மையைச் சொல்றேன். இதுனாலேயும் எதுனாலேயும் நான் உன்னைப் பிரியவும் மாட்டேன். பிரிக்கவும் மாட்டேன். ஏன்னா…. நான் உன்னை உயிருக்குயிராய்க் காதலிக்கிறேன். நீ இல்லேன்னா நான் சாவேன். இனி நீ எந்த சால்சாப்பும் சொல்லாமல், உன் அம்மா, செவ்வாய்த் தோசத்துக்கெல்லாம் பயப்படாமல் கையில் தாலியோடு வந்து என் கழுத்துல கட்டி கலியாணத்தை முடி. சந்தோசமாய் வாழ்வோம்.”

சிவாஷிற்குத் தலை சுற்றி…விழி பிதுங்கியது.

“இதோ பார். இதையும் கேட்டுக்கோ. இதையும் மீறி நீ சும்மா இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன். என் வாழ்வு சாவு எல்லாம் உன்னோடுதான்னு நான் எப்பவோ தீர்மானம் பண்ணினதால. நாலு போரோட நான் மணப்பெண்ணாய் உன் வீட்டுக்கு வந்து உன்னைத் தாலிகட்ட வைப்பேன். இது நிச்சயம், சத்தியம்.!”

“வைஷ_……ஊ!”

“இதுதான் முடிவு, கடைசி. பேசப்படாது!” என்று வைஷ்ணவி அதிரடியாய் அறிவித்து எதிர்பாராத வண்ணம் அவன் உதடோடு உதவு வைத்து அவனைப் பேசவிடாமல் பூட்டினாள்.
செவ்வாய்த் தோச பயத்தால் சிவா உடலுக்குள் ஒண்டி, ஒதுங்கி, பதுங்கிக் கிடந்த தைரியமெல்லாம் இந்த அதிரடி பேச்சு, நடவடிக்கைகளால் திரண்டு வந்து அவன் கைகளைத் தாக்கி….வைஷ்ணவியை அணைக்கச் செய்ய…

காதலர்கள் அணைப்புகளைப் பார்த்த செவ்வாய்த்தோசம் அரண்டு அடித்து திரும்பிப் பார்க்காமல் ஓடியது.!

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஒரு உண்மைக் காதலும் உதவாக்கரை தோசமும்…

  1. அழகான கதை அற்புதம்.. காதல் ந இப்படி இருக்கனும் ..வாழ்த்துக்கள் ,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *