ஒரு ஆலமரம் காதலித்த கதை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 25,208 
 
 

பெயர் தெரியாத கிராமத்தில் ஊர் முழுக்க தெரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது.ஊரில் எந்தவொரு பிரச்சனையானாலும் பஞ்சாயத்து நடக்கும் இடமாக அது இருந்தது.நூற்றுக்கணக்கானோர் கூடும் பஞ்சாயத்தில் அந்த ஆலமரத்திற்கும் நாட்டாமையின் வெண்கல செம்பிற்கும் இருந்த காதலை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆம்,இருவரும் காதலித்து வந்தனர்.ஊரில் அடிக்கடி பிரச்சனை வரவேண்டும் என எதிர்முனை பிள்ளையாரிடம் ஆலமரம் எப்போதும் வேண்டிக்கொள்ளும்,அப்போதுதானே தான்காதலியை பார்க்கமுடியும்.இன்று பஞ்சாயத்து கூடியது இறந்துபோன மொக்கையின் ஒரு ஏக்கர் நிலமும் இரண்டு உழவுமாடுகளும் யாருக்கு என்ற அண்ணன்-தம்பி சண்டைக்காகத்தான்.மூத்தவன் எனக்குதான் இரண்டுமாடும் வேண்டும் என்கிறான்,இளையவனும் இதெல்லாம் சரிபட்டுவராது எனக்குதான் வேண்டும் என்கிறான்.இரண்டு பேருக்கும் சமமாக பிரிச்சுகொடுத்தாலும் ஒருமாட்டை வச்சு என்ன பண்ணபோறாங்கன்னு யோசிச்ச நாட்டாமை மாடு ரெண்டையும் தன்கிட்ட வித்துட்டு,வர்ற பணத்தை சமமா பிரிச்சு எடுத்துக்கணும்ன்னு தீர்ப்பு சொன்னார்.உண்மையில் இவங்க ரெண்டுபேருக்கும் ஒருபைசா கூட கொடுக்ககூடாது என ஆலமரம் நினைத்துக்கொண்டது.மொக்கையின் நோய்வாய்ப்பட்ட கடைசிகாலத்தில் இவர்கள் இருவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. எப்போதும் இந்த ஆலமரத்திண்ணையில் படுத்து புலம்பிக்கொண்டிருக்கும் மொக்கையை பார்த்தால் ஆலமரத்துக்கு பாவமாக இருக்கும்.தன்னால் முடிந்த உதவியாக தானாக அசைந்து தென்றலை அவன்மேல் அள்ளித் தெளிக்கும்.அவ்வளவுதான்.
மொக்கையின் நினைவிலிருந்து மீண்டு தன்காதலியைத் தேடியது ஆலமரம்.நாட்டாமையின் வலது ஓரத்தில் செம்பும் ஒய்யாரமாக இருந்தது.ஒவ்வொருமுறை பேசிவிட்டும் நாட்டாமை தண்ணீர் குடிக்க சொம்பினை தொடும்போதெல்லாம் ஆலமரத்துக்கு தாளாத கோபம்வரும்,காதலனாயிற்றே!

கண் எங்கிருக்கிறது என்று இதுவரை யோசிக்காவிட்டாலும் செம்பும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதாக ஆலமரம் நம்பியது.அந்த வெண்கல செம்பும் ஆலமரத்தின் மீது தீரா காதல் கொண்டிருந்தது.மரத்தின் இலை ஏதாவது ஒரு சந்தரப்பத்தில் தன்மீது உரசும்போது புதிதாக பிறந்ததாக உணர்ந்தது,

கடைசியில் பஞ்சாயத்து முடிந்து நாட்டாமையுடன் வந்த ஒருவன் செம்பினை எடுத்துச்சென்றான்.செம்பு தன்னைவிட்டு தூரம் செல்ல செல்லத்தான் தனக்கு கால்கள் இல்லை என்று ஆலமரம் வருந்தியது.செம்பினை கொண்டுசென்றவன் தடுமாறியபோது செம்பிலிருந்து சிந்தியநீர் தரையை நனைத்தது.யாருக்கு தெரியும் அது செம்பினுடைய கண்ணீராக கூட இருந்திருக்கலாம்!

அடுத்த சிலநாட்களுக்கு பஞ்சாயத்து எதுவும் நடக்கவில்லை.ஆலமரம் தன்மீது வந்தமர்ந்த சிட்டுக்குருவிகளிடமும், காக்கைகளிடமும் முதல்முறை ராசக்கா கண்மாய் விவகாரம் தொடர்பாக பஞ்சாயத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் தட்டுத்தடுமாறி சாய்ந்த செம்பினை தாங்கியபோது தனக்கும் செம்பிற்கும் காதல்அரும்பிய தருணத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தது.சீக்கிரமாக பஞ்சாயத்து நடந்தால் அடுத்த ஜென்மத்தில் மனிதனாக பிறந்து 1000 தோப்புக்கரணம் போடுவதாக பிள்ளையாரிடம் வேண்டியது.திடீரென அடுத்த ஜென்மத்தில் மனிதனாக மட்டும் மாற்றிவிடாதே என வேண்டிக்கொண்டது.சிலநாட்களுக்கு பிறகு மரத்தடியில் அமர்ந்து கதைபேசிய கிழவன்களை ஒட்டுகேட்டபோதுதான் நாட்டாமை ஊர்சொத்துகளை அபகரித்தது சர்க்காருக்கு தெரிந்து கைதுசெய்ய வந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டது ம்,அவர் குடும்பத்திற்கும் நாட்டாமை பதவி வகிக்க தடைவிதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

கொஞ்சநாளில் ஊர்மக்கள் மனுகொடுக்க ஊருக்குள் போலீஸ் ஸ்டேஷன் வந்தது.பஞ்சாயத்து என்ற பழக்கம் வழக்கொழிந்து போனது.இப்போதெல்லாம் ஆலமரத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.செம்பின் நினைவிலிருந்து மீளமுடியாமல் தவித்த ஆலமரமும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை.ஆலமரம் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் கண்ணம்மாள் சேலையில் தூக்குமாட்டிக் கொண்டதிலிருந்து ஆலமரம் பேய்மரமாகி விட்டது.நான் இராத்திரியில் நடந்துசென்றபோது கண்ணம்மா ஆலமரத்தில் உட்காந்துகொண்டு என்னை கைதட்டி கூப்பிட்டாள் என எவனோ கதைகட்டிவிட ஆறுமணிக்கு மேல் அந்த பக்கம்போகவே மக்கள் பயப்பட தொடங்கினர்.கண்ணம்மாவை விரட்ட ஏதேதோ பூஜைகள் செய்து மரம் முழுதும் ஆணிகளை அடித்துச்சென்றனர்.வலியால் அலறிய ஆலமரத்தின் குரல் ஏதும் அவர்களுக்கு கேட்டதாக தெரியவில்லை.பத்தாததுக்கு பிள்ளையார்கோயில் பூசாரியும் என் வருமானத்தை கெடுத்துவிட்டாயே என ஆலமரத்தை வசவு பாடிக்கொண்டிருந்தார்.

ஆர்ப்பாட்டமாக இருந்த வீதி அனாதையாகிப் போயிருந்தது.ஆலமரமும் இப்போது யாரிடமும் பேசுவதில்லை.முயன்றுபார்த்த சிட்டுக்குருவியும் அடுத்த மரம் தேடிச் சென்றுவிட்டது.பெரும்பாலான நேரங்களில் பிள்ளையாரும்,மரமும் தனித்துவிடப்பட்டிருந்தனர்.தன்னைவிட செம்பு என்ன கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறதோ என்றுதான் ஆலமரம் நொந்துக்கொண்டிருந்தது.

வருடங்கள் ஓடின….

இந்த ஊரில் இருக்க பிடிக்காமல் நாட்டாமை குடும்பம் வேறு ஊருக்கு சென்றுவிட்டது ரொம்பநாள் கழித்து வந்தமர்ந்த காக்கை சொல்லித்தான் ஆலமரத்துக்கு தெரியவந்தது.நட்சத்திரம் தெரியாத இரவில் பருவம் முடிந்து பெய்த மழையில் ஆலமரம் தன்பிடியை தளர்த்தி இத்தனை நாட்கள் தாங்கியதற்கு மண்ணிற்கு நன்றி சொல்லி வேரினை விடுவித்துக்கொண்டது.

ஆலமரத்தையே சாச்சுபுடிச்சேயா! என மழைக்காத்தைப் பற்றி பெருமைபேசிக்கொண்டிருந்தனர் பெருசுகள்,ஒருவழியாக புடிச்ச சனியன் விட்டு தொலைந்தது என நிம்மதி பெருமூச்சுவிட்டனர் கோயில் பூசாரி உட்பட பலர்.

இத்தனை நாட்களாக பலரை சுமந்து,சுவாசிக்க காற்றைக் கொடுத்து,சிறுசுகள் தொங்கிவிளையாட விழுதை தந்து,எத்தனையோ பஞ்சாயத்தில் கம்பீரமாக இருந்த மரம் ஆளில்லாத பிணமாக கிடந்தது.சின்ன பட்டையை கூட விட்டுவைக்க மனமில்லாத அந்த ஊர் மக்கள் கண்ணம்மா ஆவி இன்னும் சுத்திக்கிட்டு இருக்கு என ஆலமரத்தை தீண்டாமல் இருந்தனர்.ஒருநாள் இரவில் செங்கல் ஏற்றிவைத்துவிட்டு வந்த டிராக்டர் ஆளில்லாமல் கிடந்த ஆலமரத்தை பார்த்துவிட்டு அங்கொன்று இங்கொன்றாக வெட்டி முடிந்தவரையில் அள்ளிக்கொண்டு சென்றது.தொலைதூரம் சென்றபிறகு விடிவதற்கு கொஞ்சநேரமிருக்க சரியாக பூட்டப்படாத டிராக்டர் கதவிடுக்கின் வழியே ஆலமரத்தின் வெட்டிய கிளை ஒன்று சாலையில் விழுந்தது.சூரியன் கண்விழிக்க தொடங்கியபோது கொள்ளைப்புறம் போகவந்த சிறுமி குச்சிகளை பொறுக்கிக்கொண்டே வீதியில் கிடந்த ஆலமர கிளையினையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.வீட்டில் அடுப்பெரிக்க குச்சிக்காக காத்திருந்த பெண்ணும் சிறுமியின் கையிலிருந்த குச்சியை வாங்கி அடுப்பில் வைத்து எரிக்க துவங்கினாள்.

ஊரைவிட்டு சென்ற நாட்டாமையின் குடும்பம் இந்த ஊருக்கு வந்து குடிபோதைக்கு மகனை இழந்து,மருமகளையும் அவளது மகளையும் வைத்துக்கொண்டு நாட்டாமையின் மனைவி இங்கிருப்பதையும்,வறுமையின் பிடியில் காலையில் காபி குடிக்க வழியில்லாமல் ‘வரத்தண்ணி’ குடிப்பதையும்,தண்ணீர் காயவைக்க வேறுபாத்திரமில்லாமல் தன்காதலியான செம்பு அந்த அடுப்பில் தினமும் எரிந்துகொண்டிருப்பதையும் ஆலமரத்துக்கு யார் சொன்னார் என்று தெரியவில்லை ஒருவேளை மரத்தை சாய்த்த மழை சொல்லிச் சென்றிருக்கலாம்.

கொஞ்சம் கறுப்பானாலும் உன்அழகு சற்றும் குறையவில்லை என நினைத்துக்கொண்டே ஆலமரத்தின் கிளை எரிந்துக்கொண்டிருந்தது.செம்பிற்கு ஆலமரத்தை அடையாளம் தெரியவந்த சிலநொடியில் ஆலமரம் முழுதும் எரிந்துவிட்டிருந்தது.ஒருவழியாக நெருப்பாகவாது செம்பினை தொட்ட சந்தோஷத்தில் அந்த தண்ணீரில் செம்பின் கண்ணீருடன் ஆலமரத்தின் ஆன்மாவும் கலந்து சாந்தியடைந்தது…….

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு ஆலமரம் காதலித்த கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *