அந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள்.
‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப்பின் தான் நீ”
1
சாவதாய் இருந்தால் நான் தான் முதலில்
என்னை பரிதாபமாக கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நண்பன். அவன் கொடுக்கமாட்டான் என்று தெரிந்துதான் அவனிடம் இதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துக் கொண்டிருந்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் எனது குரலை கடுமையாக்கிக் கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் அப்பொழுதும் மறுத்தான். எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. உண்மையில் சட்டையை பிடிக்காத குறை. அவனிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டேன். அவன் சற்று மனம் வெதும்பி போனான். அதன் பின் விளைவுகளைப் பறறி உனக்குத் தெரியுமா என்று வினவினான். எனக்கு அவன் பேச்சை வளர்த்துக் கொண்டே போவது சற்றும் பிடிக்கவில்லை. கோபத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. பின் என் இருப்பை அவன் புரிந்து கொண்டானோ என்னவோ கொடுத்து விட்டான். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவனிடம் இருந்தது அவ்வளவுதானாம்.
அவன் கொடுத்தது – 6 தூக்க மாத்திரைகள்
அவன் பெயர் – சரவணன்
தொழில் – மெடிக்கல் ரெப்
இன்னும் 30 மாத்திரைகளுக்கு என்ன செய்வது என்றுதான் அப்பொழுது புரியவில்லை.
2
அவ்வளவு தெளிவாக கேட்கவில்லையென்றாலும் என் சுயநினைவு தப்புவதற்கு சில கணங்களுக்கு முன் கேட்ட சில வார்த்தைகளை கோர்வைப்படுத்தி கூறிவிடுகிறேன்.
கடவுளே அதை நான் எப்படிக் கூறுவேன், அவர்……… அவர் என் தந்தை, அவர் சென்டிமென்டாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அது ஒரு நல்ல காமெடி, சுயநினைவு தப்புவதற்கு முன் என்னை சிரிக்க வைத்து விட்டார். அது….. அந்த வார்த்தைகள், ‘சாவதாய் இருந்தால் எல்லோருக்கும் தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொடு, எல்லோரும் சேர்ந்து சாகலாம்”
நான் என்ன செய்வது சிரிப்பதைத் தவிர. அவர் அப்படி பேசி நான் கேட்டதே இல்லை. 30 மாத்திரைகளை சேர்ப்பதற்குத்தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் 2 மாத்திரைகளுக்கு மேல் கேட்டால் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்.
அந்த டாக்டர் என் வயிற்றிலிருந்து மாத்திரைகளை எடுக்கும் முயற்சியில் நான் இன்னொரு முறை செத்துப் போனோன்.
ஐ.சி.யு. வில் இருந்த 3 நாட்களும் இந்த வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருந்தது.
‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப் பின்தான் நீ”
நான் மருத்துவமனையில் நிர்வாணமாய் இருந்த சமயத்தில், அவள் இன்னொருவனுடன் முதலிரவில் நிர்வாணமாய் இருந்திருக்கிறாள். என் மனம் விரும்பவதெல்லாம் இக்கதையின் தலைப்பை அவளுடைய கண்ணோட்டத்தில் நிஜமாக்க வேண்டும் என்பது தான்.