கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 7,290 
 

கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை மீது விழ, ஒரு கணம் கண்ணிமைக்காமல் அதையே பார்த்து நின்றான் சங்கமேஸ்வரன். கிரில் செய்யப்பட்ட லோப்ஸ்டர், சோறும் கருதியாவும், வறுத்த டூனா துண்டங்கள், ரொட்டியும் மசூனியும், டெவில் செய்யப்பட்ட கோழிக்கறி, தொட்டுக் கொள்ள ரிஹாக்குரு, அப்பளம். குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மதுவகையின் பெயர் ப்ளாக்பெர்ரி சங்கிரியா என்று நினைவு வந்தபோது சங்கமேஸ்வரனுக்குத் தன்மேலேயே வியப்பாக இருந்தது. வந்து ஒரு வாரத்தில் நிறையத்தான் கற்றிருக்கிறோம். அது சரி, ஒரு மனிதனால் இத்தனையும் ஒருவேளையில் உண்டு முடித்து விட முடியுமா என்று அவன் சிந்திக்க முற்படுகையில் மேஜையின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதர் அவனை அழைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தார்.

“ஹே, பாய், பிரிங் மி எ ஹைனிக்கன்!”

“யெஸ் சார்,” என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று பாரை நோக்கிச் சென்றான். காக்டெயில் ஏதேனும் கலப்பதென்றால்தான் மேலாளர் விஜயசிங்கேயின் உதவி தேவை. பியர் வகைகளைக் கொண்டுவர பெயர் வாசித்து, தேர்ந்தெடுக்கத் தெரிந்தால் போதும். பாருக்குள் நுழைந்து, குளிர்பதனப் பெட்டியைத் திறந்து பியர் வரிசையில் ஹைனிக்கனைத் தேடிக் கொண்டிருக்கையில், பக்கவாட்டிலிருந்து தன்னை யாரோ பார்ப்பது போலிருந்தது. தன்னிச்சையாக வலப்பக்கம் திரும்பினான். மூன்றாவது விருந்தினர் அறையின் கதவு திறந்திருந்தது. குனிந்து நின்றபடி ஐனி மெத்தைக்கு உறைமாற்றிக் கொண்டிருந்தாள். தன் வேலையை நிறுத்தாமல், இவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கையசைத்தாள். அவளது கருப்பு வண்ண புருகா ஒரு பக்கம் நகர்ந்து கழுத்துக்குக் கீழே வெண்ணிற முக்கோணத்தைக் காட்டியது. இவன் மலர்ந்து புன்னகைத்துக் கையசைத்தான். அவனை அவளிடம் வருமாறு சைகை காட்டினாள். இவனும் சைகையிலேயே, ‘பொறு, வருகிறேன்’, என்று சொல்லி விட்டு, விருந்தினருக்கு பியர் எடுத்துச் சென்றான்.

ரிசார்ட்டிலிருந்து வெளியேறி, கடற்கரை மணலில் நடந்து குடிலை அடைவதற்குள், கடற்காற்று அவன் ஆடைகளுக்குள் புகுந்து குளிரேற்றி விட்டது. தீவுக்குள் அவன் முதலாளி கொடுத்த அறையில் தங்கியிருந்த போது இரவில் புழுங்கிக் காய்ந்தது. பகலில் மண்டை பிளக்கும் வெயிலில் அவன் செங்கல் அடுக்கி சிமெண்ட் பூச வேண்டும். இரவில் பத்து பேருடன் ஒற்றை அறையில் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ரிசார்ட்டிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஐனியும் இங்கு இருக்கிறாள். அவள் பணிபுரியும் இடத்தில் வேலை என்றால், அது மேகங்களில் உறங்குவது போலத்தான். அதற்கு என்ன வழி என்று அவளிடமே கேட்க வேண்டும்.

அந்த மனிதர் இருந்த குடிலுக்கு நேர் எதிரில் அமைந்த இன்னொரு குடிலில், இரண்டாவது விருந்தினர் அறையில் தங்கியிருந்த வெள்ளைக்காரப்பெண் தனியாக அமர்ந்து கோக் அருந்திக் கொண்டிருந்தாள். இவன் குடிலைக் கடக்கையில் இவனைப்பார்த்துப் புன்னகைத்தாள். இந்த மனிதருக்குப் பரிமாறிவிட்டு, அவளுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்க வேண்டும்.

குடிலுக்குள் நுழைந்தபோது அந்த மனிதர் ஃபோர்க்கால் வறுத்த டூனாவைக் கொத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு குத்துக்கும் வலது புஜத்தில் பச்சை குத்தப்பட்டிருந்த வல்லூறு நெளிந்து, அசைந்தது. எழுந்து நின்றால் கூரையை இடித்துக் கொள்வார் போல உயரம். நிமிர்ந்து இவனைப் பார்த்தபோது அவரது சாம்பல் நிறக்கண்கள் மினுங்கின. இருள் அடர்ந்து கொண்டே வர, தீப்பந்தங்களின் ஒளியில் கண்ணாடிக்குடுவைகளின் நிழல்கள் பூதங்களைப் போல மேஜை மீது அலைந்து கொண்டிருந்தன. கோழிக்கறியின் மணம் சங்கமேஸ்வரனுக்குப் பசியைத் தூண்டியது. டூனாவை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ள முடிந்ததில்லை. அதன் மணம் நினைத்தாலே குமட்டக்கூடியது. முதலாளி வீட்டில் இருந்தவரை தினம் டூனாதான். காலையில் ரொட்டி, மசூனி, மதியம் டூனாக் குழம்பும், சோறும், இரவு மீதமான குழம்பும், அதனுடன் ரொட்டியோ, சோறோ.

“ஹியர் யூ கோ, சார்,” என்று அவர் முன்னாலேயே பியர் பாட்டிலைத் திறந்து, கோப்பையில் நுரை ததும்ப ஊற்றினான்.

“நன்றி. நேட் என்று என்னை அழை. என் பெயர் நேதன் க்ராஸ்பி. உன் பெயர் என்ன?”

“சங்கமேஸ்வரன். நீங்கள் என்னை சங்கு என்று அழைக்கலாம்.”

கொமாரபாளையத்தில் சங்கமேஸ்வரன் என்ற பெயரில் உள்ளவர்களைத் தேடுவது, மாலத்தீவு ஜெட்டியில் டூனா மீனைத் தேடுவது போலத்தான். வருகைப்பதிவேடு எடுக்கும் ஆசிரியர் இந்தப் பெயரை உச்சரித்தால் நாலைந்து பேர் தலைதூக்குவார்கள். இனிஷியல் போட்டு அழைத்தால்தான் யார் எவரென்று தெரியும். கொமாரபாளையத்திலிருந்து பழைய பாலம் வழியாக காவேரி நதியைக் கடந்தால், பவானி பழைய பேருந்து நிலையத்தின் அருகில் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சங்கமேஸ்வரர் திருக்கோயில்தான் அந்தப்பகுதியிலுள்ள பல பையன்களுக்குப் பெயர்க்காரணம். காவேரி, பவானி, சரஸ்வதி (இது மட்டும் அந்தர்வாகினியாக ஓடுவதாக ஐதீகம்) என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கோயில் கொண்டதால் மூலவருக்கு அந்தப் பெயர். ஆனால் பையன்கள் எல்லாருமே பெயர் சுருங்கி சங்கு என்றுதான் அழைக்கப்படுவார்கள்.

“சங்கா- மேய்ஸ் – வா- ரான்” என்று சொல்லிப் பார்த்துக் கொண்டார். “எனக்குக் கடினம்தான். நான் உன்ன சங்குன்னே கூப்பிடுறேன்,” என்று சொல்லி நட்பாகப் புன்னகைத்தார்.

சங்குவும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

“சங்கு, எனக்கு ஒரு காரியம் செய்வியா? எதிர்குடிலில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் சென்று சொல்லு. அவளது இரவுணவு என் கணக்கில் என்று. அவளுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டு, அவளுக்குக் கொண்டு வா. செய்வியா?” என்றார். முடித்தபின், தலைதிருப்பி எதிர்க்குடிலைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“கண்டிப்பாக, நேட்,” என்றான், புன்னகை மாறாமல்.

எதிர்குடிலில் இருந்த பெண்ணின் பெயர் க்ளோரியா என்று அவனுக்குத் தெரியும். ஜியார்ஜ்யா நாட்டிலிருந்து வந்திருந்தாள். வந்து பத்து நாட்களாயிற்று. பகலில் பெரும்பாலும் அறைக்குள்ளேயோ, ஏதேனும் மேஜையில் அமர்ந்து கணிப்பொறியைத் தட்டியபடியோ இருப்பாள். வெயில் இறங்கியதும் கடலுக்கு நீந்தச் சென்று விடுவாள். சங்கு அவளிடம் அதிகம் பேசியதில்லை. ஐனிதான் அவள் அறையைத் தூய்மை செய்வதிலிருந்து, உணவு வழங்குவது, அவளுக்குத் துணையாக மக்கள் வசிக்கும் தீவுக்குள் சென்று வருவது என்று கூடவே இருப்பாள். க்ளோரியா சங்குவை விட உயரம். இளமையின் உச்சத்தில் திமிறும் வாளிப்பான உடல் வாகு. பொன்னிற முடி. பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும் மாசு மருவற்ற அழகிய நீள் வட்ட முகம். பளிங்கு குண்டுகள் போன்று கனவு மிதக்கும் கண்கள். சங்கு பலமுறை நீச்சல் உடையில் அவளைக் கண்டிருக்கிறான். திடமான, வழவழப்பான கெண்டைக் கால்களையும், தொடைகளையும் அவனையறியாது உற்றுப்பார்த்துக் கொண்டிருந்து விடுவான். அவள் அவன் பார்வையை சட்டை செய்யாமல், ஒரு புன்னகையை வீசி விட்டுக் கடந்து செல்வாள். இவனுக்கு ஒரே வெட்கமாகவும், தன் மீதே கோபமாகவும் இருக்கும். தலையிலடித்துக் கொள்வான். இன்னொரு முறை அவள் கண்ணில் படும்போது அவளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். ஆனாலும் அவள் தென்படும்போதெல்லாம் பார்வை மீண்டும், மீண்டும் அவள் மீதே மேய்ந்து கொண்டிருந்தது.

குடிலுக்குள் நுழைந்து நேட்டின் விருப்பத்தை அவளிடம் தெரிவித்தான். இதுதான் அவளுடன் பேசும் முதல் முறையாதலால் சற்றுத் தயங்கிப் பேசினான். ஆனால் அவள் இவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, இவன் சொன்னதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டாள். அவளும் அவனது பேரென்ன என்று கேட்டுக்கொண்டாள். தனது உணவு விருப்பத்தைத் தெரிவித்தாள். பீஃப் ஃபிரைடு நூடுல்ஸ், தந்தூரி சிக்கன், குடிப்பதற்கு லாங் ஐலண்ட் ஐஸ்டு டீ எடுத்து வரச் சொன்னாள். இங்கிருந்து நேட்டைப் பார்த்துக் கையைசைத்தாள்.

சமையலறைக்கு வந்து செஃப் ஷஹீதிடம் ஆர்டர்களைக் கொடுத்தான். விஜயசிங்கே வரவேற்பறை மேஜையில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். சங்கு அவரிடம் காக்டெயில் ஆர்டர் குறித்துச் சொன்னான். “ஓ! கேப்டன் ஆள் புடிச்சிட்டாரா! நீ பாரு தம்பி இன்னும் கொஞ்சம் நேரத்துல ரெண்டு பேரும் ஒரே குடில்ல உக்காந்து சாப்புடுவாங்க. நமக்கெல்லாம் இப்படி அமையுமா?”

உணவு தயாராக இருபது நிமிடங்களாவது ஆகும். சங்கு ஐனியைத் தேடிக்கொண்டு போனான். அவள் மூன்றாவது அறையின் குளியலறையில் புதிய துவாலைகளை வைத்துவிட்டு, பழையனவற்றைச் சேகரித்துக் கொண்டிருந்தாள்.

“எப்பவுமே வேலையிலேயேதான் இருப்பியா?” என்றான்.

“செய்யாம உட்கார்ந்துருந்தா மேனேஜர் ஏதாவது வேல சொல்லிக்கிட்டே இருப்பாரு. அதுக்கு நாமளே எதாவது செஞ்சிகிட்டு நேரத்த ஓட்டலாம்.” துணி மூட்டையைக் கீழே வைத்துவிட்டு, படுக்கையின் மீது அமர்ந்தாள். “உட்கார்,” என்றாள். சங்கு படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“யார் அவரு? எந்த ரூம்ல தங்கப் போறாரு?” என்றான். ஐனி சகலமும் அறிவாள்.

“அவர் அமெரிக்காக்காரர். இங்க தங்கறதுக்கு வரல. ஸ்னார்கெல்லிங் பண்ண வந்துருக்காரு. அவரோட சொந்த யாட்ல. இங்கருந்து ரீஃப் தாண்டி கடலுக்குள்ள நங்கூரம் போட்டு யாட் நின்னுகிட்டிருக்கு. இவரு நம்ம ரெசொர்ட் போட்ல இங்க வந்துருக்காரு. சாப்புட்டுட்டு கெளம்பிருவாரு. அந்தமான், ஸ்ரீலங்கா போய்ட்டு அப்படியே இங்க வந்துருக்காருன்னு மேனேஜர் சொன்னார்.”

“ஐனி, நீ எப்படி இந்த வேலக்கு வந்தே? எனக்கு இங்க வேல கெடைக்கனும்னா நான் என்ன பண்ணனும்?”

“நானா? நான் பத்தாவது முடிச்சவுடனே ஆன்லைன்ல அப்ளை பண்ணேன். உடனே இண்டர்வ்யூ பண்ணி, வேலைக்கு வரச்சொல்லிட்டாங்க. எங்க அம்மாதான் ஒத்துக்கவேயில்லை. எங்க தீவிலருந்து இந்த ரெசொர்ட்டுக்கு வர்றது பதிமூணு மணி நேரம் போட்ல வரணும். அம்மாட்ட சண்ட போட்டுதான் வந்தேன். நீ இந்தியன் இல்ல? உனக்கு ப்ரொசீஜர் எப்படின்னு தெரியலயே? மேனேஜர்கிட்ட கேட்டுப் பாரேன்.”

“அய்யோ, அந்த ஆள் எங்க ஓனர்கிட்ட போட்டுக் குடுத்துருவாருன்னு பயமாயிருக்கு,” என்றான். ஐனி அவனுக்கு மிக அருகில் அமர்ந்திருந்தாள். ரிசொர்ட்டு பெயர் பொறித்த இறுக்கமான சிவப்பு வண்ண டிஷர்ட் அணிந்து, அதன் மேல் புருகாவைத் தவழ விட்டிருந்தாள். புருகாவின் வட்ட விளிம்பிற்குள் அவள் முகம் மைவிழிக் கண்களுடனும், ரத்தச் சிவப்பில் பளபளக்கும் உதடுகளுடனும், இருகைகளாலும் அள்ளிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. மென்மையான, சற்றே மேல் நோக்கிய அந்தச் சிறுமூக்கை விரல் கணுக்களில் பிடித்து நிமிண்ட வேண்டும் போல. அவள் அணிந்திருந்த ஜீன்ஸூம் இறுக்கமாக இருந்தது. அவள் கால்களின், தொடைகளின் வடிவத்தைக் காட்டி நின்றது. ஐனி விரல்களை மடக்கி நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அப்படியே எழுந்து, அவளை இறுகக் கட்டியணைத்து உதடுகளில் முத்தமிட்டு விட்டால் என்ன?

ஐனி தலை நிமிர்ந்து சைகையில் என்ன என்று கேட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்திருப்பாள் போலும். இவன் புன்னகையுடன் ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.

“எங்கம்மாவும் நான் பிளைட் ஏறும் நாள் பயங்கரமா அழுதாங்க. நான் ஒரே பையன் அவங்களுக்கு. என்னவிட்டு அவங்க பிரிஞ்சதேயில்ல,” என்றான்.

சங்கமேஸ்வரன் பத்தாவது முடித்ததே அவனது அம்மாவின் போராட்டத்தில்தான். அவன் அப்பா பெருங்குடிகாரர். தறிபோடச் செல்வது, வாரக்கூலி வாங்கியவுடன் அதைக் குடித்து அழிப்பது என்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். வீட்டுச்செலவுக்கு அவர் தரும் காசில் நாய்க்குக் கூட சோறு வைக்க முடியாது. சங்குவின் அம்மா பகலில் எம்.என்.எம் தொழிற்சாலையில் எம்ப்ராய்டரி பிரிவில் வேலை பார்த்தும், மாலை வேளைகளில் வீட்டில் டஜன் கூலிக்குக் கர்சீஃப் தைத்தும் கணவனையும், மகனையும் போஷித்து வந்தாள். சங்குவின் படிப்பை நிறுத்தி விட்டு, தறி ஓட்ட அனுப்பச் சொல்லி அவன் அப்பா தகராறு செய்யாத நாட்கள் அரிது. மாலை வேளைகளில் குடித்து விட்டு வந்து ஏதோ ஒரு காரணத்தைப் பிடித்துக் கொண்டு அம்மாவை அடிக்க ஆரம்பித்து விடுவார். சங்கு சுவற்றோடு ஒட்டி, நெஞ்சு நடுங்க அந்தக் காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருப்பான். வசைச் சொற்கள் பொழிந்தபடி, அம்மாவின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தபடி முகத்தில் மாறி, மாறி அறைவார். அல்லையில் எட்டி உதைப்பார். அம்மாவிடம் இருந்து ஒரு எதிர்ச்சொல் எழாது. ஏங்க, விட்டிருங்க, முடியலங்க, பையன் பாக்கறாங்க, என்றுதான் திரும்பத் திரும்ப அரற்றிக் கொண்டிருப்பாள். அவ்வப்போது அவனுக்கும் ரெண்டு எத்து விழும். கோரைப்பாய் விரித்து, சுருண்டு படுத்து, அயர்ந்து உறங்கும் அம்மாவின் முகத்தை நள்ளிரவில் புரண்டு படுக்கையில் காண வாய்க்கும். உதடுகள் வீங்கி, கன்னங்கள் கன்னிச் சிவந்து, வற்றாது அழுத கண்ணீர் கண்களின் கீழே வழிந்து, காய்ந்த புகையிலை போலச் சுருங்கிக் கிடப்பாள். ஏன் அம்மா உனக்கு இந்த வாழ்க்கை? இந்த ஆளை விட்டுப்போய் வேறெங்காவது நாம் வாழ்ந்து கொள்ளலாமே என்று மானசீகமாக ஆயிரம் முறையும், நேரடியாகவே அவளிடம் பலமுறையும் கேட்டிருப்பான். ஆம்பள இல்லாத வீடு என்றால் ஊர் பழி சொல்லும். உனக்கு அது புரியாது. நீ உன் படிப்பை மட்டும் கவனி. உனக்கொரு வாழ்க்கை அமைந்தால் அது போதும் எனக்கு என்று அவன் வாயை அடைத்து விடுவாள்.

ஒரு நாள் அவனது அப்பா அந்தியூர் குதிரைச் சந்தைக்கும், குருநாதசாமி கோயிலுக்கும் சென்றவர் திரும்பவேயில்லை. ஆள் விட்டு சகல திசைகளிலும் தேடிப் பார்த்தாயிற்று. காவல்துறையில் புகார் கொடுத்து, இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சங்குவுக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது. இனி அம்மாவுக்கு அப்பாவின் சித்திரவதைக் கொடுமை இல்லை. வாழ்வில் முதல் முறையாக நம்பிக்கை ஒளிக்கீற்றைத் தரிசித்த மாதிரி இருந்தது. ஆனால் அம்மா முன்னிருந்ததை விடப் பெரிதும் தளர்ந்து விட்டாள். அவளது ஆத்மாவிலிருந்து ஆதாரமான ஏதோ ஒன்றை உருவி எடுத்ததைப் போல. ஒரே வாரத்தில் பத்து கிலோ எடை குறைந்தாள்.

சங்குவுக்கு ஐந்து வயது ஆகும் வரையிலுமே அவன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். அவள் நின்று கொண்டிருக்கையில் அவள் இடுப்பில் கை சுற்றி,மெத்து மெத்தென்று தலையணை போன்ற அவளது தொடையில் தலை சாய்த்துக் கொள்வான். அவள் தன் கையை அவன் மேல் போட்டு அவனை அணைத்துக் கொள்வாள். அந்த நிலை இவ்வுலகின் குரூரங்களினின்றும் விலகி அமையும் அடைக்கலம் என்றும், நான் என் அன்னையின் அணைப்புக்குள் பாதுகாப்பாக இருக்கின்றேன் என்றும் அவன் நினைத்துக் கொள்வான். தாயின் கையறு நிலையை எண்ணி பலமுறை தேம்பி அழுது அவளது புடவையை நனைத்திருக்கிறான். தாய்க்கோழியின் அடிவயிறு போல சூடு தந்த அவளது தொடைகள் இப்போது சதை வற்றிப்போய் கால்கள் குச்சிக் கால்களாகி விட்டன. எந்த நேரமும் உடைந்து நொறுங்கி விழக்கூடிய கண்ணாடிப் பாத்திரத்தைப் போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்மா.

மில்லில் வேலை செய்த சண்முகம் அண்ணன் மூலம் மாலத்தீவுகளில் அவனுக்கு இந்த வேலைக்கான வாய்ப்பு வந்த போது, அவனை வெளிநாடு அனுப்புவதில் அம்மா மிகவும் குறியாக இருந்தாள். நீ போ கண்ணு, இரண்டு வருஷம் சம்பாதிச்சா அப்புறம் அந்தக் காச வச்சு நீ எதாவது தொழில் செஞ்சு பொழச்சுக்கலாம். இல்ல மேல படிக்கலாம். அம்மாவால உன்ன படிக்கவைக்கிற அளவுக்கு சம்பாதிக்க முடியிலேயேடா என்று புலம்பினாள். சங்குவுக்கு அம்மாவை விட்டுப் போக மனதே இல்லை. அத்தை வீட்டில் அம்மா தங்கிக் கொள்வதாக ஏற்பாடான பிறகு ஒரு மாதிரி நிம்மதி ஏற்பட்டது. பிறகுதான் விமானம் ஏறினான்.

“எங்கம்மா என்ன அனுப்ப மறுத்ததுக்குக் காரணம் வேற. முஸ்லிம் பொண்ணுங்கள இப்படி ரிசொர்டுக்கு வேலக்கு அனுப்பினா கெட்டுப் போயிடுவாங்கன்னு பயம். கடல் நடுவுல தனித்தீவு, விடுமுறைக்கு வர்றவங்கள விட்டா கொஞ்ச பேருதான் உள்ள. என்ன வேணா நடக்கலாம், இல்லியா?” சங்கமேஸ்வரனைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தாள் ஐனி.

உணவு தயாராகி விட்டதைக் குறிக்கும் வகையில் ஷஹீது மணி அடித்தார். உணவைப் பெற்றுக்கொண்டு குடில்கள் நோக்கிச் சென்றபோது மேனேஜர் சொன்னதை போலவே நேட்டின் குடிலுக்கு க்ளோரியா இடம் பெயர்ந்திருந்தாள். இருவரும் நாட்பட்ட நண்பர்களைப் போல குலுங்கிச் சிரித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் மட்டும் எப்படி நொடிப்பொழுதில் நண்பர்களாகி விடுகிறார்கள்? அதுவும் அழகான பெண்களிடத்தில் கூட! கொமாரபாளையத்தில் ஓர் அழகான பெண் எதிர்ப்பட்டால் அவளைக் கண்கொண்டு பார்ப்பது கூடக் குற்றச்செயல் போல பாவிக்கப்படும். பதிலுக்கு அந்தப் பெண்ணின் சீற்றபார்வையில் குறுக நேரிடும்.

தன் உணர்வுகள் வெளித்தெரியக்கூடாதென்ற எச்சரிக்கையுடன், புன்னகையால் முகத்தின் உணர்வுகளை மறைத்தபடி, உணவுத் தட்டங்களை மேஜை மீது வைத்தான் சங்கமேஸ்வரன். நேட் மிகுந்த உற்சாகமாக இருந்தார். ஏற்கனவே அவர் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகளில் ஒவ்வொன்றிலும் கால் வாசி மட்டுமே உண்டிருந்தார். மேஜை மீதிருந்த எல்லா உணவு வகைகளும் குதறப்பட்டு அலங்கோலமாகக் காட்சியளித்தன. நேட் இவன் தோளில் கைவைத்தார்.

“சங்கு, உன் மேனேஜரிடம் சொல்லி விட்டேன். நீ இன்றிரவு என் யாட்டுக்கு வருகிறாய். எங்களுக்கு உதவி செய்வதற்காக. அவரிடம் கேட்டு என்னென்ன தேவையோ எடுத்துக் கொள். எனக்கு அரை டஜன் ஹைனிக்கனும், நாலைந்து மார்ல்பாரோ சிகெரட் பாக்கெட்டுகளும் எடுத்துக் கொள். உனக்கு, க்ளோரியா?”

“உன் பியரையும், சிகரெட்டுகளையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். போக எனக்கு ஒரு ஓல்ட்ஃபாரஸ்டர் பார்பன் ஃபுல் பாட்டில் எடுத்துவா. அதை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன், நேட்,” என்று சிரித்தாள் க்ளோரியா. “அப்புறம் நடுராத்திரியில் பசித்தால் என்ன செய்வது? உன் விருப்பத்துக்கு உணவும் ஆர்டர் பண்ணிவிடு.”

“பையனுக்கு விபரம் தெரியுமா என்று தெரியவில்லை. எழுதிக் கொடுத்து விடலாம்,”

க்ளோரியாவின் கன்னங்கள் தீயொளியில் மினுங்கின. மிக அருகில் அவள் நெஞ்சு ஏறித்தாழ்ந்து கொண்டிருந்தது.

நேட் அவர்களது இரவுத் தங்கலுக்குத் தேவையானவற்றை ஒரு காகித நாப்கினில் எழுதிக் கொண்டிருந்தார்.

“சங்கு, சங்கு, என்னைப் பார்! இதோ இந்தப் பட்டியலை விஜயசிங்கேயிடம் கொண்டு கொடு. எல்லாம் தயாரானதும் வந்து சொல். நாங்கள் இங்கேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருப்போம். அந்தப்பெண் வருவதையும் சொல்லியாகி விட்டதா, க்ளோரியா?”

“மேனேஜர் மதுபானத்தைக் கொண்டு வந்து கொடுத்தபோதே சொல்லிவிட்டேன்.”

“சங்கு, நீயும் அந்தப் பெண்ணிடம் சொல்லி கொஞ்சம் இரண்டு அறைகளுக்குத் தேவையான மாற்று பெட்ஷீட்களையும், தலையணை, துண்டுகளையும் எடுத்து வரச்சொல்லிவிடு. நீயும் என் யாட்டில்தான் இரவு தங்குகிறாய்.”

அவர் கொடுத்த பட்டியலை வாங்கிக்கொண்டு சென்றவன், வரவேற்பறையை அடையுமுன்னே, பாருக்கு முன்னால் இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டான். அவனால் நம்பமுடியவேயில்லை. இப்போதுதான் பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் நண்பர்களாகி விட்டார்கள். ஒரே படகில் இரவு தங்கவிருக்கிறார்கள். ஒரே அறையில்! அப்புறம் என்ன? அந்த ஆள் அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று விடுவானா? திருமணம் என்று எதாவது உண்டா அல்லது விரும்பும் வரை இணைந்திருப்பார்களா? அவன் மனதில் கேள்விகள் அலைமோதிக் குழப்பக் குப்பைகளை வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தது. அவனது பதின்வயது மனத்துக்குள் இந்தக் குழப்பங்கள் மூச்சுத் திணறுமளவுக்கு நிரம்பிவிட்டன.

ஐந்து வருடங்களுக்கு முன் பெண் எனும் வடிவம் இப்படி வினோதமான துன்பத்தை அளித்ததில்லை. அம்மா, அத்தை, பாட்டி, பக்கத்து வீட்டு அக்கா, சந்து வீடுகளுக்குள் விளையாடும் குட்டிப்பாப்பாக்கள் என்று எல்லாருக்கும் தனித்த அடையாளமிருந்தது. தன் வயதொத்த சிறுமியரிடம் போட்டியும், சண்டையும் போட்டிருக்கிறான். வன்மத்துடன் விலகி இருந்திருக்கிறான். ஆனால் ஐந்து வருடங்களாகப் பெண்ணின் இளம் உடல் மனதுள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. என்னேரமும் அதே நினைப்பு. பெண்ணில் என்ன உண்டு என்றறியும் ஆவல். ஆணினின்றும் பெண் எங்கனம் வேறுபட்டவள், எது என்னை அவளிடம் ஈர்க்கிறது என்று புரியாத திகைப்பு. வெள்ளைச் சட்டையும், நீலப்பாவாடையும், ரிப்பன் வைத்த ரெட்டைச் சடையுமாக, பொருட்படுத்தத்தகாத மெலிந்த தேகத்துடன் பள்ளியில் ஆறாவது வரை கூடப்படித்த பெண்கள் இரண்டு வருடங்களில் பொலிவும், மெருகும், வனப்பும் கூடி, தேவதைகளாக தாவணிகளில் வலம் வர ஆரம்பித்து விட்டனர். எதற்கெடுத்தாலும் குழைந்தனர்; வெட்கிச் சிவந்தனர். ஒவ்வொரு எட்டும் கணித்து, ஒயிலோடு இடையை இழைத்து நடந்தனர். குறிப்பாக பையன்கள் மத்தியில் தங்களை தேவதைகளெனவே நிறுத்திக் கொண்டனர். கூடப் படித்த பையன்களுக்கும் அப்பெண்களைக் கண்டால் இவனைப் போலவே உடலெங்கும் ஒரு குறுகுறுப்பு.

“என்னடா, இப்படி இருக்காளுக? பாத்தா எதோ பண்ணனும் போலவே இருக்கு. ஆனா நம்ப பக்கம் திரும்பிக்கூடப் பாக்க மாட்டிங்கறாளுக,” என்றான் மணி.

சங்கு எதுவும் பதில் சொல்லவில்லை. அவனுக்குள் ஓடுவதையெல்லாம் வெளியில் சொல்லிவிடவே முடியாது. தனியாக எழுதி அவன் மட்டுமே வாசிக்கலாம் என்றால் கூட மறுத்து விடுவான்.

“அதெல்லாம் அவங்க காட்ற சிக்னல புரிஞ்சுக்கத் தெரிஞ்சுக்கறவனுக்குத்தான் ஈசி. பாடத்துல எதோ சந்தேகம் கேட்கற மாதிரி வருவாளுங்க. ரெகார்டு வாங்கிக் குடுக்கச் சொல்லி கேப்பாளுங்க. நாமதான் புரிஞ்சுக்கணும். ஒரு வாட்டி கிருஷ்ண வேணியை பஜ்ஜிக்கடை சந்தில வச்சு கிஸ்ஸடிச்சுட்டேன். அவ எதுவும் நடந்த மாதிரி காட்டிக்கவே இல்லியே! அவங்களும் அதுக்குத்தான் ஏங்குறாங்க மாப்ள,” என்றான் முனிராஜ்.

“உந்தைரியம் எல்லாருக்கும் வருமா மாப்ளே, மச்சண்டா உனக்கு,” என்று அவன் தோளில் தட்டினான் மணி.

“தைரியம் கரெக்டு. மச்சமெல்லாமில்ல, இந்த ஊர்ல புள்ளிங்க கூட தனியா இருக்கற மாதிரி அமையறதே வரம். அதையெல்லாம் உபயோகப்படுத்திக்கணும் மாப்ள,”

அந்த தைரியம் சங்குவுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆசை மட்டும் எல்லாரையும் விடப் பெருகி நிறைத்துக் கொண்டிருந்தது. வாய்ப்பும் பெரிதாக அமையவில்லை. அமைந்த வாய்ப்புகளையும் அச்சம் தின்று துப்பியிருந்தது.

ஐனியும் வருகிறாள். ஐனி! இந்த இரவு அந்த வாய்ப்பைத் தரும் இரவா? தனிமையில் இன்று நேட்டின் யாட்டில் இருக்கப் போகிறோம். அவளும் இன்றிரவு படகிலேயே தங்கி விடுவாளா? எத்தனைப் படுக்கையறைகள் அப்படகிலிருக்கின்றன? இல்லை, தன்னை வெளியில் படுக்கச் சொல்லி விடுவார்களா? கேள்விகள் அவனை இறுக்கிக் கொண்டிருந்தன.

ஐனி உற்சாகமாக இருந்தாள். “நடு இரவில் யாட்ல இருந்து நடுக்கடலப் பார்க்கறது எவ்வளவு உன்னதமான அனுபவம் தெரியுமா? என் அண்ணன் எப்போதுமே அது பற்றியே பேசிக் கொண்டிருப்பான். தோழர்களுடன் கடலுக்கு அதிகாலை இரண்டு, மூன்று மணிக்குச் செல்வான். அந்த நேரத்தில் கடலோடு இருப்பதென்பது சிலிர்ப்பூட்டும் அனுபவம் என்பான். இன்று அதைக் காண எனக்கு வாய்த்திருக்கிறது,” என்றாள். பரபரப்பாக பெரிய துணிப்பைகளுக்குள் துவாலைகளையும், பெட்ஷீட்களையும் திணித்துக் கொண்டிருந்தாள். “க்ளோரியா அவள் அறையிலிருந்து குளியலுக்கும், ஒப்பனைக்குமான சாதனங்களையும் கொண்டு வரச் சொல்லியிருக்கிறாள்.” குளித்து, நீல வண்ண நீள் அங்கிக்கு மாறி ஒரு தூரிகையைப் போலிருந்தாள்.

சங்கு பொதுக் குளியலறைக்குச் சென்று அவசரமாகத் தலைக்குக் குளித்தான். சமையலறைக்குப் பின்புறம் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையில் வெளிர் நீல டிஷர்ட்டும், ஜீன்ஸூம் அணிந்து கொண்டான். ஈரம் காயாத தலைமுடியை பின்னோக்கி அழுந்த வாரிக் கொண்டான். கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கண்களை விரித்து, அகலப் புன்னகை செய்து தன்னை மலர்த்திக் கொண்டான்.

ஷஹீதிடம் சென்று உணவு வகைகளைச் சூடு குறையாத வண்ணம் பெட்டிகளுக்குள்ளும், மதுவகைகளையும் சேகரித்துக் கொண்டான். எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பார் பக்கம் வந்தபோது அங்கு ஐனி இல்லை. இவனுக்காகக் காத்திருப்பாள் என்று எதிர்பார்த்திருந்தான். சுற்றிலும் கண்களை ஓட்டிய போது யாருமே இல்லை என்று புரிந்தது. குடில் காலியாகி விட்டது. எல்லாரும் யாட்டுக்குக் கொண்டு செல்லும் படகுக்குப் போய்விட்டார்கள். ஓட்டமும் நடையுமாக ரிசொர்ட் ஜெட்டியை சென்று அடைந்தான். எதிர்பார்த்ததைப் போலவே நேட், க்ளோரியா, ஐனி மூவரும் படகுக்குள் இருந்தார்கள். நேட் க்ளோரியாவின் இடுப்பில் கைபோட்ட வண்ணம் கடலுக்குள் இருளில் எதையோ காட்டி, என்னமோ பேசிக் கொண்டிருந்தான். ஐனி படகின் விளிம்புக் கம்பியின் மீது கைகளை வைத்து, தலை சாய்த்து ஏதோ சிந்தனையில் இருந்தாள். படகோட்டி எஞ்ஜினை துவக்கி ஓடவிட்டிருந்தான். இவனிடமிருந்த பெட்டிகளையும், பைகளையும் வாங்கி உள்ளே வைத்து விட்டு, இவனுக்குக் கைகொடுத்து உள்ளே ஏற்றி விட்டான். படகு நகரத் துவங்கியது.

சங்கு ஐனிக்குப் பக்கத்தில் சென்று நின்றான். அவள் இவன் பக்கம் தலை திருப்பவில்லை. நிலவு நன்றாக மேலெழுந்து விட்டது. முக்கால் வாசி நிலவுதான். ஆனால் படகு சற்றே உள் நோக்கிச் சென்றதும் அதன் ஒளி பிரவாகமாய் எழுந்து பொழிந்து, படகு ஒரு தந்தத்தைப் போலக் காட்சியளியத்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு விட்ட படகெங்கும் அதன் ஒளி வழிந்து கொண்டிருந்தது. கடல் மவுனமாக நிலவை ஏந்திக் கொண்டிருந்தது. எல்லையற்ற அதன் பரப்பெங்கும் நிலவின் வெள்ளை நிழல். எஞ்ஜினின் விர்ர்ர் ஒலியைத் தவிர வேறெதும் ஒலிக்காத அமைதி. ஐனி அவ்வமைதியைப் பருகியபடி நின்றிருந்ததைப் போல் இருந்தது. சங்கு படகின் விளிம்புக் கம்பியைப் பிடித்தபடி, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். படகு அலைகளில் மெதுவாக ஏறி இறங்குகையிலெல்லாம் அவள் பக்கம் வலியச் சாய்ந்து அவள் மீது பட்டுக்கொண்டான். மென்மை; மிருது; சுகம். அவள் எதையும் பொருட்படுத்திய மாதிரித் தெரியவில்லை.

பத்து நிமிடங்களில் அந்தப் பயணம் முடிவுக்கு வந்துவிடும் என்று சங்குவின் ஆசை மனம் எதிர்பார்த்திருக்கவில்லை. சங்கு படகிலிருந்து பார்த்தபோது நேட்டின் யாட், தீவில் பார்த்த ஷரஃபுதீன் பள்ளிக் கட்டிடத்தை விட உயரமாயிருந்தது. அந்த இரவிலும் நிலவொளியில் அதன் தூய வெண்ணிறம் அதைச் சுற்றிலும் கடலுக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தது. த ரெட் ஈகிள் என்று அதன் வயிற்றில் பூதாகரமான எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அந்த எழுத்துக்களைத் தன் அலகில் கவ்விக் கொண்டு ஒரு சிவப்புக் கழுகு இறக்கைகளை விரித்து மேலெழுந்து கொண்டிருந்தது. யாட்டின் படிகளைக் கண்டு பிடிப்பதற்காக படகு அதை ஒரு முறை வலம் வந்தபோது அதன் நீளம் ஐந்து படகுகளுக்குச் சமமாக இருந்தது. இவ்வளவு பெரிய படகு இருக்கும்போது இந்த மனிதர் ஏன் ரிசொர்ட்டுக்கு வருகிறார் என்று ஆச்சரியப்பட்டான் சங்கு. அப்புறம் அவர் சாப்பிட்ட உணவு வகைகளையும், க்ளோரியாவையும் நினைத்துக் கொண்டான்.

சிவப்புக் கழுகில் எல்லா அறைகளும் வெள்ளை நிறம். அந்தப் பெரும் படகே நறுக்கி வைத்த முட்டையின் முழுவெண்கரு போலத்தான் இருந்தது. மொத்தம் மூன்று படுக்கையறைகள்.அதில் ஒன்றில் கழிப்பறையும், குளியலறையும் இணைக்கப்பட்டிருந்தது. அதில்தான் நேட்டும், க்ளோரியாவும் அன்றிரவைக் கழிப்பார்கள் என்று யூகித்துக் கொண்டான். கேளிக்கை மற்றும் உணவுக்கூடம் ஒன்று. பின்புறம் டெக்கில் வெள்ளையாய் விரிந்த பரப்பு வானை நோக்கியிருந்தது. மாலுமியின் காக்பிட் கூட சோஃபாக்கள், மஹோகனியில் செய்யப்பட்ட மேஜை, மூன்றடுக்கு சாண்டலியர், சுவற்றில் தொங்கவிடப்பட்ட தைல ஓவியங்கள் என்று ஆடம்பரமாக இருந்தது. படகெங்கும் கடல் மணம். பெரிய குளிர் பதனப் பெட்டி ஒன்று நடைபாதையில் இருந்தது, அதைத் திறந்து பார்த்தபோது, நீள, நீளமாய் பெருத்த பாரகுடா மீன்கள். அவற்றில் ஒன்றிரண்டு இன்னும் உயிரோடு இருந்தன.

விரைவிலேயே நேட்டும் க்ளோரியாவும் பெரிய படுக்கை அறைக்குள் சென்று விட்டார்கள். இவர்களை அடுத்தடுத்த அறைகளுக்குள் இருக்கச் சொல்லி விட்டார்கள். பெரிய படுக்கை அறைக்கு அடுத்த அறையில் இருந்த ஒற்றைக் கட்டிலில் சங்கு அமர்ந்திருந்தான். சிறிய அறை. படுக்கையை ஓட்டி இருந்த சுவற்றுக்கு அப்பால் இருந்த அறையில் ஐனி இருந்தாள். எதிரில் இருந்த மேஜை மீது இருந்த மின் விளக்கையும், அருகில் இருந்த உணவுப் பெட்டிகளையும், மதுபாட்டில்களையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான். இந்த இரவு இப்படியேதான் நீளுமா? பக்கத்து அறையில் அரசல் புரசலாக ஒலிகள் கேட்டன. ஐனி அறையிலிருந்து எந்த ஒலியும் இல்லை. உறங்கி விடுவாளா? அவளுக்கு இரவில் எந்த வேலையும் இல்லை. குறைந்தது கொஞ்ச நேரம் பேசிக் கொண்டாவது இருந்திருக்கலாம்.

கதவு தட்டப்பட்டது. வேகமாக எழுந்து சென்று திறந்தான். ஐனி! புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். “எப்படி இருக்கு உன்னுடைய அறை?” என்றாள்.

“ம், வசதியாத்தான் இருக்கு, தூங்க ஒரு பெட் இருக்கு, அது போதாதா?”

கழுத்தை நீட்டி, அறைக்குள் எட்டிப் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள். இவன் விலகி வழி விட வேண்டியிருந்தது. டிரெஸ்ஸருக்கு மேலே வைக்கப்பட்டிருந்த கப்பல் பொம்மையைக் கையில் எடுத்து ஆராய்ந்தாள்.

“உட்காரு,” என்றான். படுக்கைக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவன் படுக்கையில் அமர்ந்தான். அறைக்கதவு பாதி மூடியும், மூடாமலும், டெக்கின் வழியாக உள்ளே வந்த கடற்காற்றுக்கு முன்னும், பின்னும் ஆடிக் கொண்டிருந்தது.

“டெக்கில போய் கடல் பாப்பமா?” என்றாள்.

“திடீர்ன்னு கூப்பிட்டாங்கன்னா…. நீ வேணா போயேன்!”

“நீயும் வந்தா நல்லா இருக்கும்.”

காற்று பலமாக வீசியது. அறைக்கதவு பட்டென்ற ஒலியோடு மூடிக் கொண்டது. மார்புக்கூட்டில் எதுவோ மோதுவதை உணர்ந்தான். அவனது இதயம்!

“அதுக்குள்ள உள்ள போய்ட்டாங்க,” என்றான்.

“ரிசொர்ட்ல இதெல்லாம் சகஜம்.”

“எல்லாருமே இப்படித்தானா?”

“இப்படித்தானான்னா, எப்படி?”

“இல்ல, எதனால இவ்வளவு சுதந்திரம் இவங்களுக்கு?”

“அவங்க கலாசாரமே அப்படி. அப்புறம் தனிமை தரும் சுதந்திரம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா?”

“ஐனி…” என்றான். அவள் பார்வை அவன் முகத்தில் நிலைத்த போது, “ஒன்றுமில்லை,” என்றான்.

அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இருக்கையில் மெல்ல அசைந்து அமர்ந்தாள். அவள் அந்த இருக்கையில் மலர்க்கூடைக்குள் பூக்களைக் கொட்டியது மாதிரி நிறைந்து கிடந்தாள்.

சங்கு படுக்கையில் இருந்து எழுந்து அவளை ஒரு எட்டில் எட்டி விட்டான். இருக்கையின் கைகளில் தன் கைகளைத் தாங்கி, குனிந்து அவள் உதடுகளில் முத்தமிட்டான்.

“ஐனி அஹமது, ஐ லவ் யூ!”

மெல்லப் பின்வாங்கி, நிமிர்ந்து நின்று அவள் எதிர்வினைக்காகக் காத்திருந்தான்.

அவள் விழிகள் ஏறிட்டு அவனையே நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தன. நெஞ்சு ஏறித்தாழ்ந்து கொண்டிருந்தது. விரல்கள் பதற்றத்துடன் பிசைந்து கொண்டிருந்தன. அவள் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன் அறைக்குள் இருந்த இண்டர்காம் ஒலித்தது. அது ஐனியின் தலைக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்தது.

ஐனியின் முகத்தைத் தயக்கத்தோடு பார்த்த வண்ணம், அவளை நோக்கி நகர்ந்தான். அவள் விலகி வழி விட, முன்னேறி, தொலைபேசியை எடுத்தான்.

“சங்கு, எனக்குக் கொஞ்சம் விஸ்கியும், சிகரெட்டுகளும் எடுத்து வர முடியுமா?” க்ளோரியாவின் குரல். ரொம்ப அயர்ந்திருந்தாள் என்று பட்டது.

திரும்பி ஐனியைத் திருட்டுப் பார்வை பார்த்தான். அவள் அவனது படுக்கையில் அமர்ந்து விட்டிருந்தாள். இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இங்கயே இரு, வந்தர்றேன்,” என்றபடி, விஸ்கி, ஐஸ் துண்டங்கள், கோப்பை மற்றும் சிகெரெட்டுகளை ஒரு டிரேயில் அடுக்கினான். கனவு மிதக்கும் விழிகளின் வீச்சு என்பதைத் தவிர தன் மீதே ஊர்ந்து கொண்டிருந்த அவளது பார்வைக்கு என்ன பொருள் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை சங்குவுக்கு. கண்டிப்பாக அவளுக்கும் இது பிடித்திருக்கிறது. அவளும் என்னறையில்தான் இருக்கிறாள். இதோ வந்து விடுகிறேன் என்று பார்வையாலே அவளிடம் சொல்லி விட்டு, டிரேயை ஏந்திக் கொண்டு வெளியில் சென்று கதவை மூடினான். கதவு மூடுமுன் அவள் பார்வையைத் தன் மீது உணர்ந்தான்.

நேட்டும், க்ளோரியாவும் இருந்த அறையை நெருங்கி, கதவைத் தட்ட எத்தனித்தபோது, உள்ளிருந்து இருவரது குரல்களும் கேட்டன. கதவு தாழிடப்பட்டிருந்ததால் என்ன பேசிக்கொண்டார்கள் என்று சரியாகக் கேட்கவில்லை. ஆனால் பேசிக்கொண்டார்களா அல்லது ஒருவரை ஒருவர் கத்திக் கொண்டார்களா என்று ஐயமாக இருந்தது சங்குவுக்கு. க்ளோரியாவின் குரல் ஓங்கிக் கேட்டது. ஏதோ சண்டை போல இருந்தது. இப்போது தட்டலாமா என்று தயங்கியபடி நின்றான். சில கெட்ட வார்த்தைகள் காதில் விழுந்தன. க்ளோரியாவின் குரல் அழுகையினூடே ஒலித்த மாதிரித் தெரிந்தது. இவன் குழப்பமடைந்து இது ஓயட்டும் என்று நின்று கொண்டான். திரும்பித் தன் அறையை நோக்கினான். கதவு சாத்தியபடியேதான் இருந்தது. அவள் தனக்காகவேதான் காத்திருக்கிறாள். அறைக்கு முன் போடப்பட்ட ஸ்டூலில் உட்காரலாம் என்று நினைத்து நகர்ந்தபோது, அறைக்கதவு தடாரென்று திறந்தது.

கதவைத் திறந்தது க்ளோரியா. முழு நிர்வாணமாக இருந்தாள். உள்ளே நேட்டை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தாள். அத்தனையும் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள். கெட் லாஸ்ட் என்று உரக்கக் கூச்சலிட்டபடி பின்பக்கம் நகர்ந்து கதவை அறைந்து சாத்தினாள். சங்கு கால்கள் நடுங்க எழுந்து நின்றபோது, இவனது இருப்பை உணர்ந்து, பரபரவென்று நகர்ந்து வெளியில் அமைந்திருந்த கழிப்பறை ஒன்றைத் திறந்து, அதன் கதவுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அவள் கழிப்பறை நோக்கிச் சென்று தன்னை மறைத்துக் கொள்வதற்கு முன்னிருந்த சில கணங்களில் சங்கமேஸ்வரனுக்கு அவளது நிர்வாணமான பின் பாகத்தைப் பார்க்க முடிந்தது. பிருஷ்ட பாகங்களெங்கும் வரி வரியாய் சிவப்புக் கோடுகள், தொடைகளிலும் கீறி விட்டாற்போல் ரத்த வரிகள்.

க்ளோரியா தலையை வெளியே நீட்டி இவனைப் பார்த்தாள். “விஸ்கி ஊற்றிக் கொடு,” என்று கை நீட்டினாள்..

சங்கு அமைதியாக ஒரு கோப்பையில் விஸ்கி ஊற்றி, ஒரு ஐஸ் துண்டம் போட்டு அவளது நீட்டிய கையிடம் கொடுத்தான். வாங்கி ஒரு மிடறு விழுங்கினாள். தலை குனிந்து இவனைப் பார்த்தாள்.

“சங்கு எனக்கு ஒரு துவாலை எடுத்து வர முடியுமா?”

சங்கு டிரேவை ஸ்டூலில் வைத்து விட்டு ஐனியின் அறைக்கு ஓடினான். அங்கிருந்து ஒரு துவாலையை எடுத்து வந்து க்ளோரியாவிடம் கொடுத்தான். அவள் அதற்குள் விஸ்கியை முடித்து விட்டிருந்தாள். நேட் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்று சங்குவுக்கு யோசனையாக இருந்தது. அவன் ஏன் வெளியே வரவில்லை?

க்ளோரியா துவாலையை உடலில் சுற்றிக் கொண்டு நடைபாதைக்கு இடையில் உணவுக்கூடத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த மேஜைக்கு முன்னால் அமர்ந்தாள். பொன்னிறக் கூந்தல் கசங்கிக் கலைந்து, உடலில் துண்டு மறைக்காத பாகங்களெங்கும் கண்ணிச் சிவந்து, உரித்த கிழங்கு போலிருந்தாள். இன்னொரு விஸ்கி பரிமாறச் சொன்னாள். அவனிடமிருந்து ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டாள்.

“அந்த மனிதன் ஒரு மிருகம்,” என்றாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. விஸ்கியை மடக்கு,மடக்கென்று குடித்தாள்.

“ரிசொர்ட்டிலிருந்து போட்டை வரச் சொல்லியிருக்கிறேன். நான் இப்போதே புறப்படுகிறேன். ஐனியிடம் சொல். அவளும் என்னுடன் வந்தால் என் இந்த நிலைமையில் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்குமென்று. இல்லையென்றாலும் பரவாயில்லை. அந்த ஆளுக்குக் காலையில் படுக்கைகளைச் சரி செய்ய ஆள் இல்லையென்றால் கத்தப் போகிறான். அவள் வேலைக்கு ஏதாவது பிரச்னை வந்துவிடப் போகிறது. இங்கேயே இருப்பதானாலும் இருக்கட்டும்.”

அவள் ஏதோ தொடர்பின்றிப் பேசியது போல் இருந்தது.

“சங்கு, டு யூ ஹேஃவ் எ கர்ள்ஃப்ரண்ட்?”

இல்லையென்று தலையாட்டினான்.

“இன்னும் கொஞ்ச நாளில் ஒருத்தி உன் வாழ்க்கையில் வரக்கூடும். ட்ரீட் ஹர் வெல், வில் யு?”

சரியென்று தலையாட்டினான்.

“எந்த நாடு நீ? இங்கு எதற்கு வந்தாய்?”

சொன்னான்.

“லவ்லி!” அவள் கண்கள் விரிந்தன. “அம்மாவின் சொல்லுக்காக கடல் கடந்து பொருள் தேட வந்திருக்கும் மகன்!”

முழு விஸ்கி பாட்டிலையும், சிகரெட்டுகளையும் வைத்துவிட்டு அவனைப் போகச் சொல்லிவிட்டாள். போட் வரும் வரை அங்கேயே அமர்ந்திருக்க முடிவு செய்து விட்டாள் போலிருக்கிறது. கட்டிய துண்டோடே கிளம்பிச் செல்லப் போகிறாளா? நேட் அறைக்குள் இன்னொரு முறை நுழைந்து தன் துணிகளை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிந்தது. இவனையும் அனுப்ப விரும்பவில்லை என்றும்.

தன் அறைக்குச் சென்று கதவைத் திறந்தான். ஐனி அங்கு இல்லை. அவள் அறையிலும் இல்லை. டெக்கில் சென்று பார்த்தான். படகின் முனையில் ஏறி, விளிம்புக்கம்பியில் சாய்ந்து கொண்டு, கடலைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளது அங்கியும், புருகாவும் காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தன. இவனது இருப்பை உணர்ந்ததைப் போல தலை திருப்பி இவனைப் பார்த்தாள்.

“ஏன் இவ்வளவு நேரம்?”

“நேட்டுக்கும், க்ளோரியாவுக்கும் சண்டைன்னு நெனைக்கறேன். க்ளோரியா ரிசொர்ட்டுக்குத் திரும்பிப் பொறேன்னுட்டு, வெளியில உட்கார்ந்திட்டிருக்கு. முடிஞ்சா உன்னையும் வரச்சொன்னுது.”

சில கணங்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பயந்துட்டியா? அவங்கல்லாம் அப்படித்தான். எல்லாத்தையும் இப்படி திடீர் திடீர்னுதான் செய்வாங்க,” என்றாள். “இங்க வாயேன், இங்கருந்து கடலைப் பார். எப்படி இருக்குன்னு,” என்று அவன் ஏறி வருவதற்காகக் கை நீட்டினாள். அவள் கையைப் பிடித்து சங்கு மேலேறினான்.

அங்கிருந்து பார்த்தபோது கடல் மட்டுமே இருந்தது. கடற்காற்று முகத்தை வருடியது. நிலா தலைக்கு மேலே விடாது பொழிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் கண்மூடித் திறக்கையில் கடலுடன் தான் மட்டும் தனித்திருப்பதாகத் தோன்றியது. நங்கூரமிடப்பட்டிருந்த படகு மெல்ல தளும்பிக் கொண்டிருந்தது. அருகில் ஐனியுடன் இணைந்து தானும் ஒன்றாகி விட்டதைப் போலிருந்தது. இந்தக் கடலின் முன் நாம்தான் எவ்வளவு சிறியவர்களாக உணர்கிறோம்?

ஐனி அவனைத் தன் கையால் சுற்றி, அவன் தோளில் தலை சாய்த்தாள். “உன் கூடவே இருக்கணும் போல இருக்கு, சங்கு,” என்றாள். “நான் போகல, ராத்திரி இங்கயே தங்கிக்கறேன்,” என்றாள்.

சங்கமேஸ்வரன் என்கிற சங்கு அவளது மோவாயைக் கையால் தாங்கி, அவள் கண்களுக்குள் சில கணங்கள் பார்த்தான். பின் கண்களை மூடிக்கொண்டான். ஆழமாக சுவாசித்து தீர்க்கமாக மூச்சை வெளியே விட்டான். ஐனி எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்தபடியே இருந்தாள். சங்கு அவளது தோளில் கைவைத்து, அவளை ஒரு மலரைப்போலத் தன் வசம் இழுத்துக் கொண்டான். கண்கள் திறந்தபோது வானில் இதுவரை புலப்படாத நட்சத்திரங்கள் தெரிந்தன. கடல் அமைதியாக சிவப்புக் கழுகை அசைத்த வண்ணம் இருந்தது. வலதுபுறத்தில் எஞ்ஜினின் உறுமல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். மெல்லிய ஒளி உமிழும் ஒற்றை விளக்கொன்றைத் தொங்கவிட்டபடி, சிவப்புக் கழுகை நோக்கி அலைகளில் ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தது ஒரு சிறுபடகு.

– சொல்வனம் இதழில் July 2022, இதழ்-275.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *