தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த விவசாயி மகளான வெகுளிப்பெண் கனிகாவுக்கு டயர் பஞ்சரானதும் வேர்த்து கொட்டியது. இன்று முக்கியமான பல்கலைகழக தேர்வு எழுத வேண்டும். இந்த நேரத்துக்கு பேருந்தும் கிடையாது. ரோட்டில் போவோரை நிறுத்தி உதவி கேட்கலாமென்றால் யாரையும் காணவில்லை. அப்போது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் அணிந்து ஸ்கூட்டியில் ஒருவன் உரசுவது போல வந்து ரோடு கிரீச்சிட நின்றான்!
‘திருடனோ…?’ என பயந்து ஒதுங்கினாள். தலை கவசத்தை கழட்டியவன் “நீங்க தப்பா நினைக்கலேன்னா உங்க போன் நெம்பரை கொடுத்திட்டு என்னோட ஸ்கூட்டிய எடுத்திட்டு போங்க. நான் உங்க ஸ்கூட்டிய பஞ்சர் போட்டு சாயங்காலம் உங்க வீட்டுக்கே கொண்டு வந்து தர்றேன்” என்றான். அவனை எப்படி நம்புவது என சந்தேகம் கொண்டவள் தேர்வு பதற்றத்தில்
அவனது செல்போன் எண்களை சொல்லச்சொல்லி,தனது போன் மூலம் கால் செய்து பின் கிளம்பினாள்!
மாலை வீடு வந்ததும் அவனுக்கு போனடித்தாள். ஐந்து நிமிடத்தில் வந்தவன் பஞ்சருக்கு பணம் வாங்க மறுத்து “உங்க கையால சூடா ஒரு கப் காபி கொடுங்க போதும்” என்று காபி வாங்கி குடித்து விட்டு சென்று விட்டான்!
‘கடவுளே அனுப்பி நமக்கு உதவியவன்’என்று வந்தவனை உயர்வாக மனதில் எண்ணினாள் கனிகா. ஒரு வாரம் கழித்து கல்லூரி வாசலில் அவன் நின்றிருந்தான். இப்போது புது பல்சர் பைக். சிரித்தான். பதிலுக்கு இவளும் சிரித்தாள்!
“ஒரு சின்ன உதவி….” என்றவனை மேலிருந்து கீழாக கண்களில் அளந்த கனிகா, “என்ன..?” என்றாள் ஒருமையில். “இல்ல…உங்க கிட்ட நல்ல ராசி இருக்கு…உங்க ஸ்கூட்டிய நான் ஒரு நாள் வச்சிருந்த பின் என் வாழ்க்கையே மாறிடுச்சு..முதன்முதலா சொந்தக்காசுல சொந்தமா ஒரு பைக் வாங்கிட்டேன். இந்த பைக்ல நீங்க ஒரு ரவுண்டு என்கூட உக்கார ஒத்துகிட்டீங்கன்னா ஓகோன்னு வந்திடுவேன்” என்றான்!
யாருக்குத்தான் தங்களை புகழ்ந்தால் பிடிக்காது. அவளுக்கும் அவன் புகழ்ச்சி பிடிக்கவே சம்மதித்தாள். பைக்கில் அவன் பின் அமர்ந்து வலம் வந்தாள். செல்பி எடுக்க கேட்ட போது அவனோடு நெருக்கமாய் நின்று வெகுளியாக பற்கள் தெரிய சிரித்தும் வைத்தாள். கேக் பாக்ஸ் திறந்து பைக் மீதே கேக் வெட்டி கனிகாவுக்கு ஊட்ட வந்தவனை தடுத்த போது, கையில் கொடுத்து விட்டு அலுவலகத்தில் வேலை இருப்பதாக சொல்லிப்பறந்தான்!
கனிகாவுக்கு மனம் சிறகடித்தது. ‘சமயத்தில் உதவினான். ராசியானவள் என்கிறான்..’ இரவு தூக்கம் கொள்ளவில்லை. ஒரு மணிக்கு ‘ஏன் தூக்கம் கெடுத்தாய்….?’ என மெஸேஜ் கொடுத்தாள். பதிலில்லை. காதலில் விழுந்தவளாக கைகள் லேசாக நடுங்கியதை உணர்ந்தாள். போன் பண்ணினாள்!
“யாராம்மா நீ …?அவனோட எத்தனாவது காதலி..? அவனை நினைச்சு தூக்கம் வரலையா..? நான் சொல்லறதை கேட்டா முழு தூக்கமும் போயிடும். இந்த நேரத்துக்கு கூப்பிடறீன்னா,கண்டிப்பா லவ் தான். இன்னைக்கு புது பைக்கை ஆட்டைய போட்டுட்டான். ஸ்டேசன் லாக்கப்ல இருக்கான். இதோட நூறாவது திருட்டு. அதை அவனோட லேட்டஸ்டு காதலியோட கேக் வெட்டி கொண்டாடியிருக்கான். செல்பி போட்டோ காட்டினான். பெரிய குடும்பத்து பொண்ணு போலிருக்கு. பாவம் அந்த பொண்ணு வாழ்க்கை வீணாயிடக்கூடாதுன்னு அந்த செல்பி போட்டோவை போனிலிருந்து அழிச்சிட்டேன். இனிமே அவன் திருடவே கூடாதுன்னு தட்டினேன். மயக்கமானமாதிரி நடிச்சுக்கிடக்கிறான். ஆமா உன்பேரு…?”என்ற கணீர் குரலுக்கு பதில் சொல்லாமல் போனை கட் செய்தாள்!
உடல் மேலும் அதிகமாகவே நடுங்கியது. கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
இன்று காலையில் பார்த்த ராசி பலனில் “அஷ்டமத்து சனி அலைச்சல் கொடுக்கும்,காரியம் தடுக்கும்,ஏமாற வைக்கும், குரு நல்ல இடத்துல இருக்கிறதால கடவுள் அருளால் சேற்றில் ஒரு கால் வைத்தாலும்,மறு கால் வைக்காமல் பிரச்சினையிலிருந்து பின் வாங்கி தப்பித்து கொள்வீர்கள்”என்ற சோதிடர் வார்த்தையை டி.வி ராசி பலனில் காலை கேட்டது படியே தனக்கு கச்சிதமாக இரவு நடந்ததை எண்ணி “கடவுளே முருகா உனக்கு நன்றி” என கண்ணீர் மல்க சொல்லிக்கொண்டே புலியிடமிருந்து தப்பிய புள்ளி மானாக,உடல் சோர்வுற,உறக்கம் இமைகளை இறுக்க,உறக்கத்தின் பிடிக்குள் சென்றாள் கனிகா!