(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“குழந்தாய், நீ இன்று முதல் உங்கள் மாமன் வீட்டுக்குப் போகவேண்டாம். ஏதாவது விசேஷம் அம்மாவை அழைத்துக்கொண்டு போய் விட்டுச் சீக்கிரம் வந்துவிடு.”
இவ்வாறு தன் தகப்பனார் கூறுவாரென்று விசாகை கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இப்படித் திடீரென்று அவர் கூறுவதன் காரணமும் அவளுக் குப் புலப்படவில்லை. ‘மாமாவுக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபம் உண்டா?’ என்று யோசித்தாள். அவர் கள் இருவரும் எவ்வளவோ அன்யோன்யமாகப் பழகுபவர்களென்பதை அவள் நன்றாக அறிவாள். பல தலைமுறைகளாக இரண்டு குடும்பங்களும் விவாக சம்பந்தத்தால் பிணைக்கப்பட்டே இருந்தன. இந்தத் தலைமுறையில் இரண்டு குடும்பத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை எப்பொழுதையும் விட அதிகமாக இருந்தது. இரண்டு வீட்டாரும் ஒருவருக்கொருவர் மனங்கலந்து பழகினார்கள்.
இவ்வளவு நெருங்கிய தொடர்புடைய வீட்டிற் குப் போகவேண்டாமென்று தகப்பனார் கூறியதைக் கேட்ட அவளுக்கு ஆச்சரியம் உண்டாவதில் தடை யென்ன?
ஆச்சரியம் மட்டும் அன்று; அதற்குமேல் மற்றோர் உணர்ச்சி அவள் இதயத்தில் உண்டாயிற்று. அவள் தன் மாமன் வீட்டிற்குப் போவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. தன் மாமன் மகனோடு சம்பாஷிப்பதையும், தன் மாமன் மனைவியிடம் தான் கற்ற பாட்டுக்களைப் பாடிக் காட்டுவதையும் விசாகை மிக்க சந்தோஷகரமான செயல்களாகவே கருதினாள். ஆனாலும் அதற்கு மேற்பட்ட சந்தோஷத்தைத் தரும் காரியம் ஒன்று இருந்தது.
விசாகையின் மாமனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் தருமதத்தனென்பது. வியாபாரத் துறையில் சலியாத முயற்சியும் நல்ல அழகும் அறி வும் அவனிடம் இருந்தன. விசாகைக்கு அவன்பால் காதல் உண்டாயிற்று. அவனும் அதை உணர்ந்தான். அவளைக் காதலித்தான். இருவருடைய காதலும் வளர்ந்து வந்தன. உலகத்தோர் முன் கல்யாணக் கோலத்தில் வெளிப்படும் காலத்தை அவ்விரண்டு இளங் காதலர்களும் எதிர்பார்த்திருந்தனர். விசாகை தருமதத்தனைப் பார்ப்பதிலும் பேசுவதிலும் இன்பம் கண்டாள். அதனால் அடிக்கடி மாமன் மனை சென்று வந்தாள்.
அவ்விருவரும் காதல் கொண்டுள்ளதை இரண்டு குடும்பத்தினரும் அறிவார்கள். ஆதலின் அவர்கள் காதல் இடையூறின்றி விருத்தியாயிற்று. அது நிறை வேறுவதற்கு இம்மியளவேனும் தடையில்லை.
இந்த நிலையில் தன் வருங்கால வாழ்க்கையைப் பற்றிக் கற்பனை எவ்வளவு தூரம் செல்லுமோ அவ் வளவு தூரம் செல்லவிட்டுக் கனவு கண்ட விசாகைக்குத் தன் தந்தையார் போட்ட உத்தரவு இடி இடித்த மாதிரி இருந்தது.
“ஏன் அப்பா” என்று நடுங்கிக்கொண்டே கேட்டாள் விசாகை.
“நம்முடைய குடும்பத்தில் நம் முன்னோர்கள் எவ்வளவோ மானமாக வாழ்ந்து வந்தார்கள். பழி வந்தால் உயிரைக்கூட விட்டுவிடுவார்கள். இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குடிக்கெல்லாம் நாயகமாக நம் குடும்பம் விளங்கிவருகிறது. யாதொரு மாசு மறுவும் இன்றிப் பூர்ண சந்திரனைப் போல விளங்கிவரும் இந்தக் குடிப்பெருமைக்கு என் காலத்தில் பழி வரவே கூடாது.”
தன் தகப்பனாரா இப்படிப் பேசுகிறாரென்று விசாகை எண்ணினாள். ‘இதென்ன! பழி, குடிப் பெருமைக்கு மாசு – இவைகளெல்லாம் நான் ஒரு காலும் கேளாத வார்த்தைகள்’ என்று அவள் மனங் குழம்பினாள்.
“நான் தீர யோசித்துத்தான் சொல்கிறேன். நீ உன் மாமன் வீட்டிற்குப் போவதை அடியோடு நிறுத்திவிட்டாற்கூட நல்லது” என்று மறுபடியும் தகப்பனார் கூறினார்.
“அப்படியே செய்கிறேன்; ஆனால் நீங்கள் பழியென்றும் குடிப்பெருமைக்குக் கேடென்றும் என்னவோ கூறினீர்கள். நீங்கள் இவ்வாறு சொல்வதற்கு என்ன காரணம் என்று எனக்கு விளங்கவில்லையே.”
“குழந்தாய், நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நம்மேற் குற்றம் இல்லாவிட்டாலும் உலகம் பொல்லாதது. அதற்குப் பயந்து பெரிய மகான்கள் கூட வணங்கிப் போயிருக்கிறார்கள். எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.”
அவர் பேச்சு மூடுமந்திரமாகவே இருந்தது. விசாகைக்குப் பின்னும் கலக்கம் அதிகரித்தது; அவள் கண்களில் நீர் துளித்தது.
“அப்பா, நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை வெளிப்படையாகக் கூறி அதற்கேற்ற தண்டனை விதியுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒன்றுமே விளங்காமல் நீங்கள் என்னவோ சொல்கிறீர்கள். எனக்கு மிக்க வருத்தம் உண்டாகிறது.”
“ஒன்றும் இல்லையம்மா! நீ வயது வந்த பெண். நீ பிறர் வீட்டுக்குத் தாராளமாகப் போய்ப் பழகுவது நல்லதன்று என்று யாரோ சொன்னார்களாம். அப்படி ஒரு சொல் உண்டாகும்படி நாம் வைத்துக் கொள்ளக்கூடாதென்று எண்ணினேன்.”
அறிவுடைய பெண் அவள். அவளுக்கு விஷயம் விளங்கிவிட்டது. சந்திகளிலும் திண்ணைகளிலும் வம்பளக்கும் வீண் மனிதர்கள் தன்னைப்பற்றியும் தருமதத்தனைப்பற்றியும் ஏதேனும் தவறாகச் சொல்லியிருக்கக்கூடுமென்றும், அதைக் கேட்டே தன் தகப்பனார் இவ்வாறு கலங்குகிறாரென்றும் அவள் ஊகித்துக்கொண்டாள்.
விஷயமும் அதுதான். “என்ன இருந்தாலும், தாலி கழுத்தில் ஏறின பிறகல்லவா அவர்கள் புருஷனும் மனைவியும் ஆவார்கள்? அதற்குள்ளே இப்படிப் பழகுவதென்றால் அடுக்குமா?” என்று சிலர் சொன்னார்கள்.
“பெண்பிள்ளைகளுக்கு இவ்வளவு சுதந்திரம் தந்துவிட்டால் அப்புறம் மானம் மரியாதை எல்லாம் அதோகதிதான்” என்று சிலர் வம்பளந்தார்கள்.
“யார் என்ன கண்டார்கள்? விசாகை இன்னும் கன்னித்தன்மை கெடாமலே இருக்கிறாளென்பது என்ன நிச்சயம்?” என்றுகூடச் சிலர் பேசினார்கள்.
இந்தப் பேச்சுக்களில் சில காற்று வாக்கில் விசாகையின் தகப்பனார் காதிலே பட்டன. ‘மானமிழந்த பின் வாழ அறியாத’ குலத்திற் பிறந்த அவருக்கு அவை மனக்கலக்கத்தை உண்டாக்கின.
2
‘விசாகை கன்னிமாடம் புகுந்தாள்’ என்பதே காவிரிப்பூம் பட்டின முழுவதும் பேச்சு.
“அட்டா! என்ன உத்தமமான பெண் அவளைப் போய் எந்தப் பாவியோ அடாது சொன்னானாமே! அவன் நாக்குப் புழுத்துத்தான் போகும்” என்றார்கள் சிலர்.
விசாகை தன் குலத்தின் பெருமையை நிரூபிக்கும் பொருட்டு வாழ்வு முழுவதும் கன்னியாகவே இருக்கும் விரதத்தைப் பூண்டு கொண்டாள். யாராரோ தடுத்துப் பார்த்தார்கள். “என்னுடைய காதல் சிறந்தது. அது இந்த உடம்பை மட்டும் பொறுத்ததன்று. தருமதத்தன் என் காதலன். அவன்பால் உள்ள என் காதல் உயிரோடு சம்பந்த முடையது. அது பிறவிதோறும் தொடரும். இந்தப் பிறவியிலே நாங்கள் கணவன் மனைவியராக வாழாவிட்டாலும் அடுத்த பிறவியிலே நாங்கள் பிரிவின்றி வாழ்வோம். இந்த உறுதி எனக்கு உண்டு. என்னுடைய காதல் வயிரம் போன்ற தென்பதை இந்த உலகம் அறியட்டும். என் வாழ்வு முழுவதும் கன்னியாகவே இருப்பேன்” என்று அவள் சபதம் பூண்டாள்.
“பீஷ்மன் தன் தந்தையின் சுகத்தின் பொருட்டுப் பிரமசரிய விரதம் பூண்டானென்று கேட்டிருக் கிறோம். தன் குடிப்பெருமையைக் காட்ட இவ்வாறு விரதம் பூணும் வீரமகளைப்பற்றி நாம் கேட்டதில்லை. விசாகை வாழ்க” என்று நல்லோர் வாழ்த்தினார்கள்.
விசாகை காவிரிப்பூம்பட்டினத்தில் புத்ததேவன் திருக்கோயிலுக்கருகில் உள்ள கன்னிமாடத்தில் புகுந்தாள்.
தருமதத்தன் இதை உணர்ந்தான். தன் காதலி யின் வீர சபதம் அவனுக்குப் பெருமையைத் தந்தது. ஆனாலும் சொல்லமுடியாத வேதனை ஒன்று அவன் மனத்திலே குடி புகுந்தது. இனிமேல் விசாகையைக் காண முடியாதென்பதை எண்ணும் போது அவனுக்கு வாழ்க்கையிலேயே வெறுப்புத் தட்டியது. என்ன பைத்தியக்கார உலகம்! கிடைத்தற்கரிய ஓர் இனிய அழகிய மலரைப் பயன்படாமல் வாடிப்போகும்படி யல்லவா செய்துவிட்டது!” என்று பெருமூச்செறிந் தான். ‘இந்த ஊரிலே இருப்பது கூடப் பாவம்’ என்று அவனுக்குத் தோற்றியது. ‘ஏன்? இந்தச் சோழநாட்டிலே கூட அடிவைக்கக் கூடாது’ என்று எண்ணினான். இந்த எண்ணமே அவன் மனத்தை ஆட்கொண்டது. மிகவும் தீவிரமாக யோசித்தான் கடைசியில் பாண்டி நாட்டுக்குப் போய் மதுரையிலே வாழ்வதென்று நிச்சயித்தான். அவனும் வாழ்நாள் முழுவதையும் பிரமசாரியாகவே கழிக்கும் சபதத்தைப் பூண்டான்.
காவிரிப்பூம்பட்டினத்தைத் தொழுது துறந்து மதுரைக்குப் போனான். அவன் உள்ளம் மட்டும் விசாகையை மறக்கவில்லை. அவளது கன்னிக்கோலம் ஒரு தெய்வ விக்கிரகம் போல் அவனது இருதயத் தாமரையிலே இடங்கொண்டது. அதை அவன் நாள்தோறும் அன்பு மலரால் பூஜித்து வந்தான்.
மதுரையில் அவன் தன் தொழிலை நடத்தத் தொடங்கினான். அறிவாளி எந்தத் தீவாந்தரத்தில் இருந்தால் தான் என்ன? புகழும் பெருமையும் அவன் இருக்குமிடம் தேடி வந்து அடைகின்றன. தருமதத் தன் மதுரை வணிகர்களுக்குள் முக்கியமானவன் ஆனான். திருமகள் கடாக்ஷத்தை நிரம்பப் பெற்றான். அவனுடைய செல்வாக்குப் பெருகியது; புகழ் பரவியது. பாண்டிய மன்னன் அவனுக்கு எட்டி என்னும் பட்டம் அளித்துப் பாராட்டினான். ஆனாலும் அவன் மாத்திரம் திருப்தியை அடையவில்லை. தாமரை இலைத் தண்ணீரைப்போல் அவன் வாழ்ந்து வந்தான். பணமும், புகழும், மதிப்பும் அவனுக்குத் திருணமாகத் தோற்றின.
விசாகையோ தன் உள்ளத்துள்ளே தரும் தத்தனை வைத்துப் பூஜித்து வந்தாள் ; புறத்தே புத்த தேவனைப் பூஜித்து வந்தாள். காவிரிப்பூம்பட்டின வாசிகளுக்கு அவள் தெய்வமாகி விட்டாள்.
அவளுடைய கன்னி விரதம் அவளுடைய மதிப்பை ஆயிரம் பங்கு உயர்த்தி விட்டது. ‘விசாகையென்றால் தூய்மைக்கு அறிகுறி; விரதத்தின் உருவம்; வீர விளக்கு’ என்று காவிரிப்பூம்பட்டினத்தார் அவளைப் போற்றினார்கள்.
3
ஒன்று, இரண்டு, மூன்று – பத்து, இருபது முப்பது, நாற்பது வருஷங்களாகிவிட்டன. வீரப்பிரம சாரியாகிய தருமதத்தனுக்கு இப்பொழுது அறுபது வயது. அவன் மதுரையில் ஒரு திலகம் போல விளங்கினான். அறுபது வயது முடிந்த காலத்தில் அவனுடைய செல்வம் பெருகி விட்டது. அவன் இளமை தளர்ந்தது. ஆயினும் உள்ளக் கோயிலில் உள்ள காதலும் காதலியின் உருவமும் அன்று போல் இன்றும் வாடா இளமையோடு இருந்தன.
விசாகை கிழவியாகி விட்டாள். அவள் மயிர் நரைத்து விட்டது. கன்னிக் கோலத்தில் அவள் பழுத்து நின்றாள்.
“இவ்வளவு செல்வத்தை இதுவரையில் ஈட்டினோம். இனிமேல் இதைக் கொண்டு தருமம் செய்வதே நம் கடமை” என்று தருமதத்தன் நினைத்தான். ‘இனிமேல் காவிரிப்பூம்பட்டினம் செல்லலாம்’ என்ற எண்ணம் உண்டாயிற்று.
தருமதத்தன் தன் இருபதாம் பிராயத்தில் துறந்த தன் பிறப்பிடத்தை அறுபதாம் வயதில் வந்து மிதித்தான். அந்த ஊரை மிதித்தவுடன் அவனுக்குப் பழைய எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உண்டாயின. மதுரையில் தன் தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்த அவன் இப்பொழுது தனியனானான். அவர்கள் அவன் மதுரையில் இருந்தபோதே காலஞ் சென்றனர். தன் பழைய வீட்டிற்குத் தனியாக, மதுரையிலே சம்பாதித்த செல்வக் குவியலுடன் புகுந்தான்.
அன்று காவிரிப்பூம்பட்டின முழுவதும் திரு விழாப் பட்டபாடு பட்டது. தருமதத்தனை ஊரில் ஒரு குஞ்சுகூடப் பாக்கியில்லாமல் வந்து பார்த்தார்கள். யாவரும் நாற்பது வருஷத்துக்கு முன் நிகழ்ந்த கதையை, வீர சபதங்களை நினைந்து வியந்தார்கள். சிலர் கண்ணீர் வடித்தார்கள்.
தருமதத்தன் வந்தது விசாகைக்குத் தெரிந்தது. அவள் மனம் அவனைக் காண வேண்டுமென்று துடித்தது. ‘இனி உலகம் பழிக்க இடமில்லை. நாம் தனிமை தீர்ந்து ஒன்றுபட்டு வாழவேண்டும்’ என்று அவள் எண்ணினாள்.
தருமதத்தன் வீட்டு வாயிலில் பெருங் கூட்டம். மலர் மாலைகளும் வாசனைச் சுண்ணங்களும் குவிந்து கிடந்தன. விசாகை தருமதத்தனைப் பார்க்க வருகிறாளென்ற செய்தி தெரிந்ததும் ஊரே கூடிவிட்டது. இரண்டு தெய்வங்கள் உலகத்தில் ஒன்று சேர்ந்தால் எத்தனை ஆரவாரம் இருக்கும், அத்தனை ஆரவாரம்!
மகளிர் புறஞ்சூழக் கன்னித் தெய்வம், வீர விசாகை, தருமதத்தனது வீட்டுள் புகுந்தாள். தருமதத்தன் ஆவலோடு அவளை எதிர்பார்த்து நின்றான்.
இருவரும் சந்தித்தனர். ஒருவருடைய கண்கள் மற்றொருவருடைய கண்களைப் பருகின. நாற்பது வருஷங்களாகக் கொண்ட தாகம் ஒரு கணத்திலே தீருமா? பேசத்தான் வாய் வருமா?
அவர்கள் பார்வையினால், நாற்பது வருஷங்களாக வளர்த்து வந்த விரதக்கனலின் சோதி ஒன்று பட்டது. சிறிது நேரம் மௌனத்திலே யாவரும் மூழ்கினர்.
“தத்தரே, மீண்டும் இந்த மண்ணை மிதிக்க உமக்கு மனம் வந்ததா?” என்றாள் விசாகை.
“இனியும் நம்மைக் குறை கூறுவதற்கு இந்தக் காவிரிப்பூம்பட்டினம் அவ்வளவு முட்டாளாகவில்லை யென்ற நம்பிக்கையே என்னை மீண்டும் இங்கே வரச் செய்தது” என்றான் தருமதத்தன்.
“ஆம், இப்போது இந்த நகரம் விழித்துக் கொண்டது. நாம் தவறு செய்தால் கூட நம்மைக் கண்டிக்காது. தவறு செய்யவும் மார்க்கமில்லை. என்ன ஆச்சரியம்! என் உள்ளக்கோயிலில் நான் பூஜித்து வரும் உமது இளமை உருவம் எங்கே இப்போது இருக்கும் உமது உருவம் எங்கே! அந்த அழகெல்லாம் இப்பொது எங்கே போயின? ‘இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ!’ என் அழகும் இளமையும் போயின. ஆனாலும் என் காதல் இன்னும் உறுதி பெற்றே இருக்கிறது” என்றாள் விசாகை. புத்தமத ஆராய்ச்சியிலே ஊன்றிய அவள் அறிவு இளமையும் அழகும் நில்லா வென்பதை அனுபவத்தில் அறிந்தது. காதல், இளமைக்கும் அழகுக்கும் அப்பாற்பட்டதென்பதை அவள் நிலை வெளிப்படுத்தியது.
அன்று முதல் விசாகை கன்னிமாட வாழ்வை நீத்தாள். அந்தக் கன்னியும் அந்தப் பிரமசாரியும் ஒருங்கே இருந்து, தருமதத்தன் ஈட்டிய செல்வத்தைக்கொண்டு தருமம் செய்வதிலே பொழுது போக்கினார்கள்.
அவர்களுடைய உடல்கள் முதிர்ந்தன; இளமை அழிந்தது; ஆயினும் அவர்கள் காதல் மேலும் மேலும் முறுகி நின்றது. காதல் தெய்வத்திற்குத் தங்கள் இளமையைப் பலி கொடுத்த அக்காதலர்கள் பெருமையை இன்றும் நாம் அறியும்படி மணிமேகலை கொண்டாடுகின்றது.
– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை