“கமல்..அவுங்களப்பாத்தா உனக்கு பொறாமையா இல்ல?”
“பொறாமையில்ல மைனா…ஆச்சரியமா இருக்கு…அதிசயமா இருக்கு…”
“அவுங்க இரண்டு பேருக்கும் என்ன வயசு இருக்கும்னு நினைக்கிற…?”
“ஒரு எழுபது.. எழுபத்தஞ்சு…?“
“இந்த வயசிலேயும் எத்தன காதல்..? எவ்வளவு அன்பு…? கல்யாணம் ஆகி நிச்சயம் அம்பது வருஷம் இருக்கும் ‘”
எவ்வளவு முறை பார்த்தாலும் தெவிட்டாத காட்சி..
மைனாவும் கமலும் கடற்கரைக்கு வரும் நேரம்தான் அவர்களும் வருவார்கள்..
இரண்டு, மூன்று முறை ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி நடப்பார்கள்..
அப்புறம் அங்கு போடப்பட்டிருக்கும் மேடையில் கடலை நோக்கி அமர்ந்து கொள்வார்கள்…
அந்த மனிதர் ஏதாவது சிரிக்க சிரிக்க பேசுவார் போலும்.. அவரது மனைவி விழுந்து விழுந்து சிரித்த வண்ணம் இருப்பாள்..
அவர் கொறிப்பதற்கு ஏதாவது வாங்கி வருவார்…
சிலசமயம் அவளது வாயில் கடலையை உரித்து போடுவார்..
அவள் அவருடைய வாயைத் துடைத்துவிடுவாள்..
சிலநாட்கள் ஒன்றுமே பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
அபூர்வமாக அவள் அழுவதுண்டு..அப்போது அவளது கண்ணீரை அவர் துடைத்து விடுவதைப் பார்த்து கமலும் , மைனாவும் மெய் மறந்து நின்றுவிடுவார்கள்…
“கமல் நாம காதலிக்க ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் இருக்குமா…?
இப்பவே தாக்கு பிடிக்க முடியல.. எப்ப சண்ட வரும்னு சொல்ல முடியல.. இன்னும் கல்யாணம் கூட ஆகல..”
“அதுக்குள்ள விவாகரத்து ஆகாம இருந்தா சரி….”
“கமல்..எங்கப்பா, அம்மா நம்ம மேல படு கோவமா இருக்காங்க…”
“நீதான் எப்பவும் எம்மேல கோவமா இருப்ப.. ஏன் அவுங்களுக்கு என்ன வந்துது….?“
“நான் நம்ம திட்டத்த அவுங்க கிட்ட சொன்னேன்…
“உங்களுக்கெல்லாம் எங்க இருந்து இந்த ஐடியா எல்லாம் கிடைக்குது..?
இது என்ன அமெரிக்காவா..இல்ல லண்டனான்னு அப்பா கத்தறாரு கமல்…”
“இங்கேயும் இப்போ இதெல்லாம் சர்வசாதாரணம்னு சொல்றதுதானே…”
“உங்கவீட்ல எப்படி….?”
“நான் சொன்னாதானே….”
“திஸ் இஸ் டூ மச் கமல்….”
“அடுத்த வாரம் ஒரு தீர்மானம் எடுக்கணும்…இல்லைனா கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்…”
“எனக்கு பயம்மா இருக்கு கமல்….”
“எதுக்கு.? தனியா வீடு எடுத்து தங்கறதுக்கா…?”
“இல்லை… கல்யாணத்துக்கு…ரைட் நௌ ஐயம் நாட் ரெடி ஃபார் தி கமிட்மென்ட்…”
“நானும்தான்…!! அவுங்களுக்கு இதெல்லாம் புரியாது…”
சரி. .. கிளம்பலாம். வீட்ல தேடுவாங்க…”
அந்த வயதான தம்பதிகள் அப்போதே கிளம்பி போயிருந்தார்கள்…
***
மைனாவும் , கமலும் காதலர்களா என்றால் , ஆம் அல்லது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்…
என்ன? குழப்பமாக இருக்கிறதா..? அவர்களுக்கும்தான்….!
பெற்றோர்களின் தலையீடு இல்லாத, முழு சுதந்திரத்துடன் வாழும் இருபதாம் நூற்றாண்டு நவ நாகரீக யுவனும் , யுவதியும்..
யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள பூரண சுதந்திரம் பெற்றவர்கள்..
ஆனாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தயங்குபவர்கள்…
முப்பதில் இருப்பவர்கள்..
அதற்குள் பலபேருடைய திருமண வாழ்க்கையின் பிரச்சனைகளை பார்த்தவர்கள்..
திருமண பந்தத்தை ஒருவித பயத்துடன் எதிர்நோக்கி , துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாயிருப்பவர்கள்…
இருவருமே அலசி ஆராய்ந்து கடைசியில் மெட்ரிமோனியல் துணையுடன் இணைய தீர்மானம் எடுத்தவர்கள்..
ஐந்து வருடங்களாக பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்துக் கொண்டே இருக்கும் ஜோடிகள்…
திருமணம் இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது..
என்னதான் எதிர்பார்க்கிறார்கள்…?
“கமல்….என்னடா யோசிக்கிற ? அஞ்சு வருஷமாச்சு… இன்னமும் காதலிச்சிகிட்டேயா இருக்கப்போறீங்க…? “
“ஏம்மா.இது நல்லாத்தானே இருக்கு…எனக்கு இப்ப ஒரு ப்ரமோஷன் வந்தாலும் வரும்…நியூசிலாந்து போனாலும் போவேன்…அது தெரிஞ்சப்புறம்…!!!”
“நீயும் அஞ்சு வருஷமா எதையோ சொல்லி கல்யாணத்த தள்ளி போட்டுட்டே இருக்க..மைனாவ பிடிச்சிருக்கா இல்லியா…?”
“இது என்னம்மா கேள்வி….?”
***
“மைனா…நீ இப்படி கமலோட ஊர் சுத்தறது எனக்கு சுத்தமா பிடிக்கல..பிடிச்சு போனப்புறம் , சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே… என்ன பிரச்சனை..? கமல உனக்குப் பிடிச்சுத்தானே இருக்கு….”
“ம்ம்ம்… இன்னும் பேச வேண்டியது கொஞ்சம் இருக்கு…”
“அதெல்லாம் கல்யாணத்துக்கப்புறம் பேசிக்கக் கூடாதா…?’
“அதுதாம்மா பயம்மா இருக்கு..பசங்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி ஒரு மாதிரியும் அப்புறம் வேற மாதிரியும் இருப்பாங்கன்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் அடிச்சு சொல்றாங்க..!!!”
“அதுக்கு… கல்யாணம் பண்ணிகிட்டு சரியா வருமான்னு பாக்கப் போறீங்களா..?”
“இல்லம்மா..சொன்னா திட்டாத… இரண்டு பேரும் கொஞ்ச நாள் சேந்து வாழ்ந்து பாக்கலாம்னு…..”
“கமல் சொன்னானா….?”
“ஐய்யோ. அவனத் திட்டாத.. நான்தான்…!=!”
“அந்தமாதிரி ஏடாகூடமா ஏதாவது செஞ்ச..!”
“ஏம்மா வீட்ட விட்டு தொரத்திடுவியா…?”
“ஆமா..”
“அதான் நானே போறேன்னு சொல்றேனே….”
***
அழகிய அடக்கமான ஒரே படுக்கையறையுடன் கூடிய வீடு…குருவிக்கூடு போல…
இரண்டு சிட்டுக்குருவிகள்..
மைனாவும் கமலும்…..
பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி…. தனிக்குடித்தனம்…. திருமணத்துக்கு முன்பே ஒத்திகை….
“கமல்…சின்ன வீடானாலும் அழகா இருக்கில்ல… நீயும் நானும் மாத்தி மாத்தி சமைக்கலாமா ..? இல்ல சேந்து ஆளுக்கொரு டிஷ்…?.”
“ஆஸ் யூ விஷ்…ஆனா தனியா விட்டா நான் நல்லாவே சமைப்பேன்…”
“எனக்கு அவ்வளவா சமைக்க வராது..ஒண்ணு பண்ணலாம்.. வீக் டேஸ் நாம தனித்தனியாக பாத்துக்கலாம்..
சனிக்கிழமை வெளியே டின்னர்..
சன்டே இரண்டு பேரும் சேந்து..நீ எனக்கு கத்துக் குடு..ஓக்கேயா….?”
ஆரம்பத்தில் எல்லாம் ஓக்கேதான்…
“கமல் ஈரத்துண்ட படுக்க மேல வீசிப்போடாதன்னு எத்தன வாட்டி சொல்றது….?
நீ குளிச்சிட்டு வந்தா பாத்ரூம்ல கால வைக்க முடியல..ஒரே வழுக்கல்…
சமைச்சா மேடைய துடைக்க மாட்டியா..?
“மைனா! நேத்து நீ ஏ சி.ய அணைக்காமயே போயிட்ட.. நான் வர வரைக்கும் ஓடிட்டு இருந்தது.. எனக்கு கரன்ட் வேஸ்ட் பண்ணினா பிடிக்கவே பிடிக்காது…
உன் பெர்ஃப்யூம் வாசன எனக்கு ஒத்துக்கவேயில்ல…
உன் பூனைக்குட்டி ராத்திரி எம்மூஞ்சியெல்லாம் நக்கறது..கொண்டு எங்கியாவது தலமுழுகு….”
சின்னச்சின்ன ஊடல்கள் பெரிய சண்டையாகிவிடுமோ என்கிற பயம் பிடித்துக் கொண்டது..
ஒருநாள் மைனா நண்பர்களுடன் வெளியே போய்விட்டு வரும்போது இரவு மணி மூன்று…
“மைனா… திஸ் இஸ் டூ மச்… நான் உன்ன காணம்னு ரொம்ப பயந்து போய்ட்டேன்.. ஒரு கால் பண்ணி சொல்லமாட்டியா…?”
“ஒய் ஷூட் ஐ…? நான் என்ன பச்சக் குழந்தையா..? தொலைஞ்சு போறதுக்கு.?”
“நீ குழந்தையில்ல.. அதுதான் ப்ராப்ளமே..!!! ஏன் எனக்கு கேக்க உரிமையில்லையா….?”
“அப்போ.. கல்யாணம் ஆனாலும் இப்படித்தான் கேப்பியா…?”
“நீயும் சொல்லாம தான் போவியா…?”
ஒருவாரம் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை…
“ஏன் மைனா..ஆறுமாசத்திலேயே நமக்கு இப்பிடி இருக்கே.. எப்படி அந்த பீச் ஜோடி இத்தன ஆசையா , இன்னமும் ரொமான்ஸ் பண்ணிட்டு ஜாலியா இருக்காங்க..?
நம்மளால தாக்குபிடிக்க முடியும்னு நம்பறயா….?”
“கமல்… ஐடியா..!!! இந்த சனிக்கிழமை அவுங்க பீச்சுக்கு வரும்போ நாம அவங்களப் பாத்து,
“உங்கள் காதலின் ரகசியம் என்ன?ன்னு கேக்கப்போறோம்…ஓக்கேயா….?”
“ஓக்கே… டன்..”
***
இருவரும் வழக்கமாக உட்காரும் இடம் காலியாக இருந்தது..
“என்ன மைனா..? இன்னைக்குன்னு பாத்து ஆளக்காணமே..”
“உனக்கு எப்பவுமே அவசரந்தான்.வருவாங்க..
நாம இங்கியே வெயிட் பண்ணுவோம்…”
அந்த பெண்மணி இளநீல கைத்தறி புடவையும் , வெள்ளையில் நீல பூக்கள் போட்ட ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு சிரித்தபடியே அவர்கள் அருகில் வந்தாள்..
“மோகன்..இங்க பாருங்க..நாம எப்பவும் பாத்து ரசிப்போமே ..அந்த லவ் பேர்ட்ஸ்…இங்க உக்கார்ந்திருக்கு…”
பெரிதாக கலகலவென்று சிரித்தாள்..
“லதா…நீதானே அவுங்க கிட்ட பேசணும்னு சொல்லிக்கிட்டே இருப்ப….
“நான் மோகன்… இவுங்க லதா… என் பெட்டர் அண்ட் பிட்டர் ஹாஃப்”
என்று சொல்லி சிரித்தார்..
“நான் கமல்..இவ..என்னோட …”
கமல் தயங்கி தயங்கி முடிக்குமுன்…
“ அங்கிள்… எம் பேரு மைனா…நாங்க சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம்..இப்ப ‘லிவிங் டுகெதர்….”
“வாழ்த்துக்கள்… உக்காருங்க….!!”
“அங்கிள் உண்மையைச் சொன்னா , நாங்க உங்கள ரொம்பநாளா கவனிச்சிட்டே வரோம்…
இந்தவயசிலேயும் எவ்வளவு அன்னியோன்னியமா , ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா…காதலோட…..
வாழ்ந்தா இப்படித்தான் வாழணும்கிறமாதிரி…”
“தேங்யூ மை டியர்….லதாவுக்கும் உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப நாள் ஆசை…”
“ஆன்ட்டி… நீங்க தப்பா நினைக்கலன்னா ஒண்ணு கேக்கலாமா..? கொஞ்சம் பர்சனல் தான்..”
“எங்க வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.. தாராளமா என்ன வேணா கேக்கலாம்..இல்ல மோகன்….?”
“கண்டிப்பா….”
“உங்களுக்கு திருமணம் ஆகி சுமார் எத்தன வருஷம் இருக்கும்….?”
“சுமார் என்ன..சரியா சொல்றேனே…மூணு வருஷம் மூணு மாசம்…என்ன லதா. ?”
இருவரும் மயக்கம் போடாத குறைதான்…
“என்ன..? என்ன சொல்றீங்க அங்கிள்..?அப்போ நீங்களும் இவ்வளவு வருஷமா கல்யாணத்த தள்ளிப் போட்டுகிட்டேதான் இருந்தீங்களா…?
கமல்.. நமக்கும் எழுபது வயசில தான் கல்யாணம் ஆகுமா…?”
“மைனா…நீ ரொம்ப அவசரப்படாத…!!!
இதுக்குப் பின்னாடி பெரிய கதையே இருக்கு… இன்னைக்கு நேரமில்ல..
அடுத்த சனிக்கிழமை வீட்டுக்கு டின்னருக்கு வாங்க..
லதா ரொம்ப நல்லா சமைப்பா.. உங்களுக்கு கதைகேக்க பிரியம் இருந்தா அவசியம் வரணும்…”
“அங்கிள்.. ரொம்பவே ஸஸ்பென்ஸா இருக்கு…. எப்படி நோ சொல்ல முடியும்..? அதுவும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தன நாளாச்சு….?”
“ஆமா ஆன்ட்டி…. டன்….
“யூ ஆர் வெல்கம்….”
***
“ஆன்ட்டி.. எனக்கு பிடிச்சதா பாத்து சமைச்சிருக்கீங்களே…!! எப்பிடி..?”
“என்னோட ஃபேவரைட் டிஷ்ஷும் நிறைய இருக்கு..
ஆன்ட்டி யூ ஆர் சோ ஸ்வீட்…!!”
“அது தான் லதா..ஆளப்பாத்தே என்ன பிடிக்கும்னு கண்டு பிடிச்சுடுவா…
ஃப்ரூட் ஸாலடும் , பாஸ்த்தாவும் நான் செஞ்சது….!!”
“சரி. இப்ப நாம உங்க கதைக்கு வருவோமா…?”
முதல்ல யார் சொல்லப்போறீங்க..? “
“மோகன்தான் கதை சொல்றதில கில்லாடி.. ம்ம்ம்..ஆரம்பிங்க….”
“யாரும் குறுக்கு கேள்வி கேக்கக் கூடாது.அப்புறம் எனக்கு கன்ட்டினியுட்டி போய்டும்.. ஓக்கே…?
எனக்கு இருபது வயசுல திருமணம் பண்ணி வச்சாங்க..பெண் பாத்ததோட சரி..
ரஞ்சனி பாக்க அழகா இருந்தா.. கல்யாணம் ஆன ஒரு வாரம் அவுங்க அப்பா அம்மா கூடத்தான் நிறைய நேரம் இருப்பா…
நாங்க தனியா இருக்கிற சந்தர்ப்பம் ரொம்பவே குறைவு…..அந்த சமயமெல்லாம் வாயத்தொறந்து அதிகம் பேச மாட்டா…
“என்னடா மோகன்… ரஞ்சனி எல்லார் மாதிரியும் இல்லியே..உங்கிட்ட எப்பிடி இருக்கா…?“
“முதல்ல சிலபேர் அதிகம் பேச மாட்டாங்கம்மா.. போகப்போக சரியாய்டும்…”
ஒருவாரத்தில் அவளைக் கூட்டிக் கொண்டு மும்பாய் வந்தேன்..
வேலைக்கு கிளம்பும் நாள்…
“தனியாவா விட்டுட்டு போகப்போறீங்க…?
“ஏன்?பயம்மா இருக்கா…? பக்கத்து வீட்டு சுனிதாவ துணைக்கு கூப்பிட்டுக்கோ..ஒரு பயமும் இல்லை..
வாசல்ல இருபத்து நாலு மணிநேரமும் செக்யூரிட்டி.. கவலைப் படாத..
நான் போனதும் ஃபோன் பண்றேன்…”
அவளுக்கு தெரிஞ்ச வரைக்கும் ஏதோ சமைப்பா…சில நாள் அதுவும் கிடையாது..
ராத்திரி என்ன கட்டிப்பிடிச்சு “உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” ன்னு சொல்லிட்டு தூங்கிடுவா..
இரண்டு வாரத்தில வேற ரஞ்சனியா மாறுவான்னு எதிர் பார்க்கவேயில்ல..
கதவ தாழ் போட்டுட்டு வெளியே வரவே இல்ல..எத்தன கெஞ்சினாலும் சாப்பிடக்கூட வரமாட்டா…உள்ள எதையெதையோ தூக்கி எறியற சத்தம்…
முதல் முதலாக எனக்கு கொஞ்சம் பயம் வர ஆரம்பிச்சது..
இரண்டு நாள் கழிச்சு கதவு திறந்தது..
குளிக்காம , சாப்பிடாம…!!
“ரஞ்சனி.. என்னம்மா.. என்னாச்சு..?”
ஒன்றும் நடக்காத மாதிரி பழையபடி எல்லா வேலையும் செய்ய ஆரம்பிச்சா..
எப்போ குணம் மாறும்னே சொல்ல முடியாது..
ஆனா ராத்திரியானா என்ன கட்டிப்பிடிச்சாத்தான் தூக்கம் வரும்..
எனக்கு புரிஞ்சு போச்சு.. இவளுக்கு மனநிலை சரியில்லை..அப்பா அம்மாகிட்ட சொன்னா நிச்சயம் விபரீதமாகும்..
எனக்கு அவள் மேல பரிதாப உணர்ச்சியவிட அன்புதான் அதிகம் இருந்தது…
இவளுக்கு நிச்சயம் மருத்துவ உதவி தேவைன்னு தீர்மானம் பண்ணிட்டேன்..
பதிமூணு வருஷம் ஒண்ணா வாழ்ந்தோம்…
அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு..
“மோகன்…நம்மள ஏமாத்தி தலைல கட்டிஇருக்காங்கன்னு கூட புரிஞ்சுக்க முடியாத முட்டாளா நீ..அவள திருப்பி அனுப்பாம , பெரிய தியாகி பட்டம் வாங்கப் போறியா..?”
அப்பா என்னோட பேசறத நிறுத்திட்டார்..அம்மா மனசு உடைஞ்சு சீக்கிரமே போய்ட்டாங்க…
ரஞ்சினியோட வாழ்ந்தது பதிமூணு வருஷம் தான்.. ஒரு வாரம் உடம்பு சரியில்லாம படுத்தவதான்… எழுந்திருக்கவேயில்லை..
எனக்கு தனிமை பழகிப்போச்சு.
அறுபது வயசானப்புறம் உடம்பில தெம்பு குறைய ஆரம்பிச்சது.
‘மறுமலர்ச்சி ‘முதியோர் இல்லத்தில சேந்தேன்.. அங்கதான் லதாவோட நட்பு கெடச்சுது…..”
“அங்கிள்..யூ ஆர் சோ கிரேட்.. ரஞ்சனி எத்தனை பாக்கியசாலி….!!”
மைனா அழுது விட்டாள்….லதா கண்களும் கண்ணீரால் கலங்கியிருந்தது…
***
“ஆன்ட்டி..இனிமே அடிக்கடி உங்கள தொந்தரவு பண்ணப்போறோம்…
பிரியாணி…சான்ஸே இல்ல…!!!
“வாங்க நாம போய் உக்காரலாம்.. மோகன் எல்லாத்தையும் ஒழிச்சு வச்சிட்டு நமக்கு ‘டிஸர்ட்.’ எடுத்துட்டு வருவாரு..
“கமல்… போடா.. நீயும் உதவி பண்ணு…”
“என்ன.. ரகசியம் பேசப்போறீங்களா…?”
“ஒட்டு கேக்காத.போ…நீயும் அங்கிளும் ரகசியம் பேசுங்களேன்…”‘
மைனாவும் கமலும் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டார்கள் ..
“லதா இப்போ அவளோட கதைய சொல்லப்போறா .!!!!சைலன்ஸ்….!!”
***
“நான் பதினஞ்சு வயசிலேயே காதல்ல விழுந்தேன்… சலீம் என்னோட மூணு வருஷம் சீனியர்…ரொம்பவே புத்திசாலி..என்னோடது ரொம்ப ஆர்த்தடாக்ஸ் ஃபேமிலி.. நடுத்தரத்துக்கும் கீழ.. அவன் பெரிய பணக்காரன்..
எவ்வளவு கெஞ்சியும் இரண்டு வீட்டிலேயும் ஒத்துக்கல..
அஞ்சு வருஷம் காத்திருந்து வீட்ட விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…
சலீம் எம்மேல வச்சிருந்த காதல வார்த்தையால விவரிக்க முடியாது..
அத்தன சொத்துக்கும் ஒரே வாரிசு.. எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு என்னோட வரத் தயாரா இருந்தான்..
மூணு வருஷத்தில சுமன் பொறந்தான்..அடுத்தது ஜாஸ்மின்தான் வயத்திலன்னு சந்தோஷமா இருக்கும்போதுதான் ஒரு கார்விபத்தில சலீம் எங்க மூணு பேரையும் விட்டு நிரந்தரமா போய்ட்டான்..
அவனோட காதல் சாகவேயில்ல.. இன்னமும் கூட.. மோகன் என்னோட சேந்து ,சலீமையும் ஏத்துகிட்டார்…
லதா தேம்ப ஆரம்பித்தாள்…
மோகன் லதாவை தாங்கிப் பிடித்து தோளில் சாய்த்துக் கொண்டார்…
சுமனும் ஜாஸ்மினும் நல்லா முன்னுக்கு வந்து வாழ்க்கையில செட்டில் ஆனதும் நான் ….”
“ஓக்கே..நௌ ஐ குட் கெஸ்.. நீங்களும் அங்கிளும் ‘மறுமலர்ச்சி’ ல மீட் பண்ணிக் கிட்டீங்க…”
“யெஸ்..பசங்க என்ன வந்து பாக்கும்போதெல்லாம் மோகனையும் சந்திச்சு பேசுவாங்க..
அவுங்க பண்ணிவச்ச கல்யாணம்தான் நானும் மோகனும் லைஃப் பார்ட்னர் ஆகக் காரணம்.”
“ஆன்ட்டி…உண்மையிலேயே உங்க இரண்டு பேர்ல யார் அதிர்ஷ்டசாலின்னு தெரியல…
“கமல் எனக்கு எதிர்பார்த்த வாழ்க்கை அமையலங்கிறது ஓரளவுக்கு உண்மைதான்.. ஆனாலும் நாங்க வாழ்ந்த ஒவ்வொரு நாளும் எங்க இரண்டு பேருக்கும் நடுவுல காதல் இருந்தது சத்தியம்..
லதாவோட கணவன் இப்போ இல்லாட்டலும் அவன் மேல இருக்கிற காதல் சாகாது.. சாகவும் கூடாது…
நாம விரும்பற வாழ்க்கை எல்லோருக்கும் சுலபமா கெடச்சிடாது..
இன்ஃபேக்ட் பெரும்பாலான பேருக்கு நாம வாழ்க்கையில தோத்துட்டோமோன்னு தோணும்..
வேற துணையைத் தேடி ஓடத்தோணும்.. கடைசி வரை போராடணும்…
“மைனா… நீச்சல் கத்துக்கணும்னா தண்ணியக் கண்டு பயந்துகிட்டே எத்தன நாளைக்கு லைஃப் கார்ட் யூஸ் பண்ணிகிட்டே இருப்ப..?
யாரோட வாழ்ந்துட்டு இருக்ககோமோ , அவுங்களுக்கு உண்மையா இருந்தாலே போதும்..
சின்னச்சின்ன விஷயங்களுக்கு ஒத்து போகணும்னு அவசியமே இல்லை.நாம சந்திக்கப்போற பெரிய சவால்களுக்கு முன்னால இதெல்லாம் நத்திங்..
மத்தவங்க அனுபவம் உங்களுக்கு ஒரு வழிகாட்டியே தவிர அத வச்சு உங்க வாழ்க்கைய தீர்மானம் செய்யாதீங்க..
நீங்க வாழ்ந்து பாருங்க…!!!
உண்மையான காதலுக்கு அழிவேயில்ல…. !!!!!
ஒரு திருமணம் முறிஞ்சு போறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்..
ஆனா நெலச்சு நிக்கணும்னா அதுக்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும்..
ஆழமான காதலும், அசைக்க முடியாத நம்பிக்கையும்…
திருமணம் ஆன எல்லோருமே கடைசி வரைக்கும் சேந்து வாழுவாங்கன்னு யாராலேயும் சொல்ல முடியாது..
அதையே நெனச்சு தினம் தினம் பயந்து வாழற வாழ்க்கைக்கு அர்த்தமேயில்ல.
லெட்ஸ் கிராஸ் தி பிரிட்ஜ் வென் இட் கம்ஸ்…
“கமல்.. அடுத்த சாப்பாடு உங்க வீட்லதான்..”
“ஆனா.. ஒரு கண்டிஷன்..அது இல போட்டு சாப்பிடற கல்யாண சாப்பாடா இருக்கணும்..இல்ல மோகன்….?