இணையதளக் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 6,576 
 
 

ஆர்த்தி அலுவலக வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருப்பது போலிருக்கக் காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே…

“காபி குடிச்சிட்டு வரலாமா?” என்று கிஷோர் கேட்டான். அவனுடன் செல்ல ஆர்த்திக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றிச் சென்றாள். கிஷோர் இந்த அலுவலகத்தில் சேர்ந்த நாள் முதல் இவளையே சுற்றிச் சுற்றி வருகிறான். ஆனால், இவள் அவனைக் கண்டு கொள்வதே இல்லை.

“ஆர்த்தி, நான் பல தடவை கேட்டும் என் காதலை ஏத்துக்க மாட்டேங்கிற ஏன்?” என்றான் கிஷோர்.

“கிஷோர், நானும் பல தடவை உன்கிட்டச் சொல்லிட்டேன். ஏற்கனவே முகநூல் மூலமா பரத் என்பவரை காதலிக்கிறேன்னு. ஆனாலும், நீ ஏன் இப்படிப் புரிஞ்சிக்காம என் பின்னாடியே வர?” சலிப்பாக ஆர்த்திச் கேட்டாள்.

“ஆர்த்தி, அவனைப் பற்றி உண்மையான விபரம் எதுவும் உனக்குத் தெரியாது. இதுவரை அவனை நேரில் பார்த்தது கூடக் கிடையாது. அதுவும் அவன் உன்கிட்ட சொன்ன விபரங்கள் எல்லாம் உண்மையானு தெரியாம எப்படிக் காதலிக்க?” என்றான் கிஷோர்.

“இப்ப என்ன சொல்ல வர? கிஷோர்.” அவனின் பேச்சுப் பிடிக்காமல் சலிப்பாகக் கேட்டாள்.

“உனக்கு என்னைப் பற்றி எல்லா விபரமும் தெரியும். உன்னை ரெண்டு வருஷமா சுற்றிச் சுற்றி வரேன். ஆனால், என் காதலை ஏத்துக்க மாட்டேங்கிற. கண்மூடித்தனமா விரும்பறதுக்குப் பேர் காதல் இல்லை. உனக்கு நீயே வரவழைச்சிக்கிற ஆபத்து. உனக்கு அது புரியலையா? ஆர்த்தி, நான் சொல்றதைக் கேள். எதுவும் தெரியாத ஒருத்தன் கிட்டப் போய் உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்காதே.” பொறுமையாக எடுத்துச் சொன்னான் கிஷோர்.

“கிஷோர், போதும் நிறுத்து உன் அறிவுரையை. காதல்ன்னா என்னன்னு தெரியுமா? மனசும் மனசும் சேர்ந்ததுதான். மற்றதெல்லாம் அதுக்குப் பிறகுதான். நான் எப்படி அவரைக் காதலிக்கிறேனோ… அதே போல அவரும் என்னைக் காதலிக்கிறார். உண்மையான காதல்தான் எங்க ரெண்டு பேருக்குள்ளும் இருக்கு. ஆபத்து எதுவும் இல்லை. நீ நினைச்சது நடக்கலைன்னு என்னைக் குழப்புற எதுக்கு?” என்றாள் ஆர்த்தி.

கிஷோர் சொல்வதையும் புரிந்துக் கொள்ளவில்லை. தானும் நிதர்சனம் பற்றி யோசிக்கவில்லை. தான் செய்வது சரியென்றே நினைத்து அவனிடம் பேசினாள். காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள் அது ஆர்த்தி விஷயத்தில் உண்மையாகதான் இருக்கிறது.

“நாங்க ரெண்டு பேரும் அடுத்தவாரம் சந்திக்கப் போறோம். அவர் குடும்பத்தினர் எங்க கல்யாணம் பற்றிப் பேச என்னைக் கூப்பிட்டு வரச் சொல்லி இருக்காங்க. நான் பார்த்துப் பேசிய பின் எங்க வீட்டில் வந்து அவங்க பேசுவாங்க.” என்றாள் ஆர்த்தி.

கிஷோர்க்கு அவள் சொல்வது அதிர்ச்சியாக இருந்தாலும் வரும் ஆபத்தை உணராமல் ஏதும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இதில் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதற்றத்தை காட்டிக் கொள்ளாமல் அவளிடம் நயமாகப் பேசிப் பரத் வரச் சொன்ன வீட்டின் விபரங்களைத் தெரிந்து கொண்டான்.

பரத் வீட்டிற்கும் குறிப்பிட்ட தேதியில் ஆர்த்திச் சொன்னது போலவே சென்றாள். பரத்தை நேரில் பார்த்ததும் சற்று தடுமாறினாள். ஏனெனில் அவள் முகநூலில் புகைப்படத்தில் பார்த்துக் கற்பனை செய்திருந்த பரத்திற்கு நேர்மாறாக இருந்தான்.

பரத் அவளிடம் உருகி உருகிப் பேசி வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். வீட்டில் அவனைத் தவிர வேறு யாரும் இருப்பது போல் தெரியவில்லை. வீடு மிகவும் அமைதியாக இருந்தது.

“பரத், வீட்டில் யாருமில்லையா? நீ மட்டும்தான் இருக்க. எல்லோரும் இருப்பாங்கன்னு சொன்ன.” ஆர்த்திச் சந்தேகமாகக் கேட்டாள்.

“கோயிலுக்குப் போயிருக்காங்க பக்கத்தில்தான் இப்ப வந்திருவாங்க. நான் உனக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.” என்று பரத் உள்ளே சென்று சற்று நேரத்தில் குளிர்பானத்தோடு வந்தான்.

“ஆர்த்தி, இதைக் குடி. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க?” அக்கறையாகக் கேட்டான்.

“ம்ம்… நல்லா இருக்காங்க.” என்றவள் குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் அப்படியே சோபாவில் சாய்ந்தாள். ஒரு மணி நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தாள். தான் ஒரு அறையில் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்து எழுந்தாள். எதிரே பரத் சிரித்துக் கொண்டிருந்தான்.

“பரத், எனக்கு என்ன ஆச்சு? நீ ஏன் சிரிச்சிட்டு இருக்க? நான் எப்படி ரூம்க்கு வந்தேன்?” பயத்தில் ஆர்த்திக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உன்னை இங்க வரவச்ச வேலை சுலபமா முடிஞ்சு போச்சு. நீ ரொம்பச் சுலபமா என் வலையில் விழுந்துட்ட. என்னை ஒண்ணும் செய்ய முடியாது. ஏன்னா, இங்க நடந்த எல்லாத்தையும் காணொளியா பதிவு பண்ணிட்டேன். நீ ஏதாவது வம்பு பண்ண நினைச்ச இந்த வீடியோவை இணையதளத்தில் பரப்பிடுவேன்.” என்று மிரட்டினான் பரத்.

ஆர்த்தி அழுது அவனை மாறி மாறி அடித்தாள். “உன்னை நம்பி வந்ததுக்கு இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே.” என்று தரையில் அமர்ந்து அழுதாள்.

“இதென்ன? கதையா இருக்கு. நானா உன்னை நம்பச் சொன்னேன். நீயா கற்பனை வளர்த்துகிட்டு வந்த அதுக்கு நான் என்ன செய்ய? நீ என்னை நேரில் பார்த்தது கூடக் கிடையாது. எப்படி என்னை நம்பின?” தெனவாட்டாகச் சொன்னான் பரத்.

“கிஷோர் சொன்னதைக் கேட்காம வந்ததுக்கு இது தேவைதான். ஆபத்தை உணராம உன்னை முழுசா நம்பி வந்த எனக்கு இது தேவைதான். எல்லோர் முன்னாடி நான் எப்படி முழிப்பேன். நான் இப்படிப் போய் நிற்கிறதைவிடச் சாகுறது மேல்.” என்று அழுது பரத்தை திரும்பவும் அடித்தாள்.

“பரத்தை ஏன் இந்த அடி அடிக்கிற? உனக்கு ஒண்ணும் ஆகலை. ஆர்த்தி நீ நல்லாதான் இருக்க. பரத் மிகவும் நல்லவர். அவர் உன்னை ஒண்ணும் செய்யலை.” குரல் கேட்டு திரும்பிய ஆர்த்தி அங்கே கிஷோரும் ஒரு பெண்ணும் நிற்பதைக் கண்டு ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

“நீ ஏதும் ஆபத்தில் மாட்டிக்கக் கூடாதுன்னு உன்கிட்ட இருந்து வாங்கிய விபரங்கள் வச்சு ரெண்டு நாள் முன்னாடியே இங்க வந்துட்டேன். வந்த பிறகுதான் தெரிஞ்சது அவங்க உனக்கு நல்ல பாடம் கற்பிக்கதான் கூப்பிட்டு இருக்காங்கன்னு. பரத்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. இவங்கதான் அவரின் மனைவி இலக்கியா.” என்றான்.

“உன்னை மாதிரி பொண்ணுங்க இணையத் தளம் மூலமா தப்பானவங்ககிட்ட மாட்டிக்கிட்டுத் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக்கிறாங்க. அதுக்குக் காதல்ன்னு சொல்லிக்கிறாங்க. இந்த மாதிரி ஆபத்தை உணராம தப்பான வழியில் போய் மாட்டிக்கிட்டு அதற்குண்டான தண்டணையை அனுபவிக்கிறது பொண்ணுங்கதான் மத்தவங்க முன்னாடி அசிங்கப்பட்டு அவமானத்துடன் வாழனும்.” என்று இலக்கியாச் சொன்னாள்.

“தொழில்நுட்பங்கள் வளர்வது நம்ம வேலைச் சுமையைக் குறைக்க. செய்திகளை உடனே தெரிஞ்சிக்க. நம்ம அத்தியாவசிய தேவைகளைச் சுலபமா முடிச்சிக்கதான் அதே நேரம் அதில் நல்லது தீயது ரெண்டும் இருக்கு. பலர் நல்லதை விட்டுவிட்டு தீயதை மட்டும் பார்த்துப் போயிட்டு உன்னை மாதிரி ஆபத்தில் மாட்டிக்கிட்டு அதிலிருந்து மீள முடியாம உயிரையும் விட்டவங்க இருக்காங்க.” என்றான் பரத்.

“நீயே கொஞ்சம் யோசிச்சுப் பார். தப்பானவன்கிட்ட நீ மாட்டியிருந்தா உன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னு. எல்லோரும் பரத் போல் நல்லவங்களா இருக்கமாட்டாங்க. நீ தீயவங்ககிட்ட மாட்டியிருந்தா உன்னால் நிம்மதியா வாழ முடியுமா? என்றான் கிஷோர்.

“கிஷோர் பற்றி உனக்கு நல்லாத் தெரியும். அவருக்கும் உன்னைப் பற்றி நல்லாத் தெரிஞ்சும் புரிஞ்சும் வச்சிருக்கார். நீ ஆபத்தில் மாட்டிக்கக் கூடாதுன்னு முன்னாடியே இங்க வந்து உன்னைக் காப்பாற்ற நினைச்சிருக்கார். இப்படிப்பட்ட ஒருத்தரை நீ வேண்டாம்னு சொல்றியா? அவர் உன் மேல் வச்சிருப்பதுதான் உண்மையான காதல்.” என்றாள் இலக்கியா.

ஆர்த்தி அவனைப் பார்க்க கிஷோர் தன் இரு கைகளையும் நீட்ட அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *