ஆரம்பக் காதல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 20,459 
 
 

ஜெயராமனுக்கு வயது இருபத்தி ஐந்து. பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மார்க்குகள் வாங்கியவன். ஊர் குற்றாலத்திற்கு அருகிலுள்ள இலஞ்சி.

அவன் வேலை நிமித்தம் சென்னை வந்ததும், அவன் நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான்.

தனி அறை என்பது பெரிய விஷயம். மாதம் பத்தாயிரம் வாடகை. ஜெயராமன் இயல்பிலேயே மிகவும் தனிமையானவன். தவிர, பெரிய பண்ணையார் வீட்டுப் பிள்ளை என்பதால் இந்தப் பத்தாயிரம் வாடகை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல.

மறுநாள் காலையிலேயே வேலைக்குச் சேரப் புறப்பட்டான். அண்ணா சாலையில் அது ஒரு பெரிய மல்டி நேஷனல் டிவிஷன். முதல் வேலை; முதல் நாள்.

இதமான ஏஸியின் முதல் தளத்தில் ஜெயராமனை வரவேற்ற ஹெச்.ஆர் ஹரிணி, அவனை நான்காவது தளத்திற்கு லிப்டில் அழைத்துச்சென்று, ப்ராஞ்ச் மானேஜர் டேவிட்டிடம் கூட்டிச் சென்றாள்.

அவனை கை குலுக்கி வரவேற்ற டேவிட், “இவரை சுகன்யாவிடம் அறிமுகப்படுத்தி சீக்கிரம் வேலையை கத்துக்கச் சொல்லுங்க; உங்க ஹெச் ஆர் இண்டக்ஷன் புரோகிராமை அடுத்தவாரம் வச்சிக்குங்க…” என்றான்.

“வாங்க ஜெயராமன்…” ஹரிணி அவனை எட்டாவது தளத்தில் இருக்கும் சுகன்யாவிடம் லிப்டில் கூட்டிச் சென்றாள்.

சுகன்யா என்ற நவீனமான, பெருமிதமான பெயரை மனத்திற்குள் உச்சரித்துக்கொண்டே கல்லூரி ப்ரின்சிபாலைப் பார்க்கப் போகின்ற நூதனமான தன்மையுடன் ஹரிணியுடன் சென்றான் ஜெயராமன்.

மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்து புகுந்த ஹரிணியுடன் அந்த அறைக்குள் நுழைந்ததுமே ஜெயராமன் மொத்தமாகச் சிலிர்த்தான்.

ஓர் அன்னப் பறவைக்கு உரிய எழிலுடன் ஆசனத்தில் அமர்ந்து யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்த சுகன்யாவைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓர் அபூர்வமான ஜன்னல் அவனுக்குள் மிக விசாலமாகத் திறந்துகொண்டது.

ஷாம்பூவில் உலர்ந்த கூந்தல் தளர்வாகக் கொண்டையிடப்பட்டு, மெலிதான நீல வர்ண வலைக்குள் அழகாக பொருத்தப் பட்டிருந்தது. உதடுகளில் மிக மெலிதாக ரோஜா வர்ண லிப்ஸ்டிக். அழகிய நேர்த்தியான செவிகளில் நீலநிற எளிமையான இலைத் தோடுகள். புஜங்கள் தெரியும் படியான நீலநிற ஜாக்கெட்கூட செளந்தர்யம் சற்றும் பிசகி விடாமல் தைக்கப் பட்டிருந்தது.

மொர மொரப்பான நீலநிற வார்ணாஸிப் புடவையில் பேரிளம் பெண்ணாக சுகன்யா ஜொலித்தாள். அவளிடம் ஒரு கம்பீரம் தெரிந்தது. ஒரு வாத்ஸல்யம் நிறைந்த பெண்ணுக்குரிய மென்மை இருந்தது.

ஜெயராமனின் அற்புதமானதொரு பரிமாணம் அந்தச் ஷணமே தொடப்பட்டு விட்டது. தன்னுடைய அம்மா அன்னபூர்ணிதான் சுகன்யாவாகப் பிறந்து வந்திருப்பதாக உணர்வு வயப்பட்டு மயங்கினான். ஒரு பள்ளிச் சிறுவனுக்கு உரிய அறியாமை மிக்க பயபக்தியோடு தன்னை ஜெயராமன் வணங்கியதில் சுகன்யாகூட மெலிதாக ஆச்சர்யப்பட்டாள்.

ஹரிணி, ஜெயராமனை அறிமுகப்படுத்தி “சீக்கிரம் இவருக்கு வேலையை கற்றுக்கொடு சுகன்யா… டேவிட் இஸ் வெரி கீன்…” என்றாள்.

பிறகு இவனிடம் திரும்பி “ஆல் த பெஸ்ட்” சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

சுகன்யாவுக்கு அடுத்த மேஜையின் நாற்காலியில் அமர்ந்து வெகு நேரமாகியும் ஜெயராமனின் உணர்வுகள் சமனம் அடையவில்லை. ஓர் அன்னியோன்யம், அதே சமயம் ஒரு விகற்பமில்லாத தனித்திருப்பு ஆகிய இரண்டும் கலந்து நூதனத் தொகுப்பாகத் தோன்றிய சுகன்யாவை ஏறிட்டுப் பார்க்கக்கூட ஜெயராமனின் உணர்வுகள் ஏனோ சங்கோஜப் பட்டன.

அவனுள் மிக இறுக்கமாக மூடப் பட்டிருந்த; மறுக்கப் பட்டிருந்த ஒரு சதுக்கம் அவனுள் உண்மையாகவே திறந்துகொண்டது. கூண்டு திறக்கப் பட்டுவிட்ட ஒரு பட்சி அவனுக்குள் சிறகுகளை சிலிர்த்து விரித்தது !

பெண்ணின் அருகாமை என்ற உணர்வு பாலை வெளியாக அவனுள் பரந்து கிடந்ததே – அந்தப் பரப்பின் பிரம்மாண்ட சூர்யகாந்தி மலராக சுகன்யாவின் முகம் மலர்ந்து தெரிந்தது.

அவசரப் படாமல் இவளை மெதுவாக, மிகப் பக்குவமாக அணுகவேண்டும்…

பன்னிரண்டு வயதில் அம்மாவை இழந்த சோகத்திற்குப் பிறகு, இவள்தான் தான் சந்திக்கும் முதல் செளந்தர்யமான பெண்…

அம்மா…

பன்னிரண்டாவது வயதில் அம்மாவை இழக்க நேரிட்டபின், மீள முடியாத சோகமும், இழப்பும் ஜெயராமனை ஒரு பக்குவமில்லாத தனிமையில் ஆழ்த்திவிட, இரண்டு வருடங்கள் அவனுடைய கல்விகூட தடைப்பட்டது. மன நல நிபுணர்களிடம் அழைத்துப்போய், சில தீவிர சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகே அவனுடைய தினசரி வாழ்க்கையின் சராசரித் தன்மை இயல்பிற்கு வந்தது.

ஒரு மனிதனுக்கு அம்மாதான் அவனுக்கு மிக அருகில் பரிச்சயமாகிற, உறவாகிற, பாதுகாப்பாகிற முதல் பெண். அம்மா என்ற முதல் பெண்ணிலிருந்துதான் வேறு வேறு உறவின்முறை சார்ந்த பெண்களை நோக்கி விபத்து இல்லாமல் அவன் பெயர்ந்து செல்கிறான்.

ஓர் இரண்டுங்கெட்டான் பருவத்தில், வேறு உறவின் முறைகளைச் சார்ந்த பெண்களிடம் ஜெயராமனின் மனம் பரிவர்த்தனை அடையும்முன், அவனுடைய அம்மா என்ற முதல் பெண்ணை இழக்க நேரிட்டு விட்டதில்; அவனின் வாழ்க்கையில் பெண்ணே இல்லையென்ற பாவனை கனமாக மனதில் பதிந்துவிட்டது. அந்தக் கடின படிமமே திருமணம் என்ற அமைப்பின் மூலம் மட்டும்தான் தான் ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட வேண்டும் என்ற வினோதத் தன்மையை அவனில் அரும்பச் செய்திருப்பதை உணர்ந்து, அவன் தன்னை மிகவும் பக்குவப் படுத்திக்கொண்டான்.

ஜெயராமனுக்கு கல்வியும், உத்தியோகமும் பெரிய லட்சியங்கள் இல்லை. அவனது பெரிய செழிப்பான பண்ணையும்; இலஞ்சியும்; குற்றாலமும்; அருவிகளும்; மலைச் சரிவுகளுமே அவனுடைய உணர்வுகளுக்குப் போதும்.

தன்னுடைய சுபாவத்தில் நசுங்கிப் போய்விட்ட சில பரிமாணங்கள் மொத்த வீரியத்துடன் இயக்கமுற, தன்னுள் தேங்கிப்போன ஏதோ ஒன்று முழுமையாகத் திறந்துகொள்ள – தான் முழுமையான மனிதனாக எழுச்சி அடைதல் அவசியமானதாக ஜெயராமனின் அந்தரங்கம் சில வருடங்களாக அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது.

அத்தகைய எழுச்சி ஒரு நிகரற்ற பெண்ணின் மூலம்தான் நிகழ முடியும் என அவனுக்குள் ஒரு சோகம் கலந்த காதல் நிராதரவாகத் தளும்பிக் கொண்டிருந்தது. அந்த முகம் தெரியாத நிகரற்ற பெண்ணை இலஞ்சி கிராமத்து வயல்களிலோ, தோட்டங்களிலோ பார்க்கவே முடியாது என்று ஜெயராமன் நிச்சயமாக நம்பினான்.

திருமணம் புரிந்து கொள்வதற்காக ஒரு பெண்ணைப் போய்ப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. அவன் ஒரு வலிமையும், வாஞ்சையும் மிகுந்த பெண்ணைச் சந்திக்கவே விருப்பப்பட்டான். அது ஒரு அறிமுகமாக இல்லாமல் இயல்பான சந்திப்பாக நிகழ வேண்டும் என்று விரும்பினான். சந்திப்பே பரிவர்த்தனை.

அதனாலேயே ஜெயராமன் வேலையின் பொருட்டுச் சில வருடங்களுக்கு சென்னை போய் இருக்க விருப்பப்பட்டான்.

தற்போது வேலையும் கிடைத்து சென்னையும் வந்தாயிற்று; ஒரு எழிலான பெண்ணின் அருகாமையில், அவளிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு. ஜெயராமன் மிக ஏகாந்த மன நிலையில் திளைத்தான்.

முதல் நாள் என்பதால், ஹெச்.ஆர். ஹரிணி அவனை லஞ்சுக்கு தன்னுடைய டீமுடன் வெளியே அழைத்துச் சென்றாள்.

அடுத்த சில நாட்களில் சுகன்யா அவனுக்கு மிகத் தேவையானவற்றை தெளிவாகக் கற்றுக் கொடுத்தாள். சனிக்கிழமை அவர்களுக்கு ஹாலிடே. இருப்பினும் அன்று அவனை வரச்சொல்லி அனைத்தையும் முடித்தாள். வேலையைத் தவிர இருவரும் வேறு எதையும் பேசிக் கொள்ளவில்லை.

திங்கட்கிழமை…

சுகன்யா அலுவலகம் வரவில்லை.

ஜெயராமன் தவித்துப் போனான். மதியம் வரை பொறுத்திருந்தவன், அதே எட்டாவது தளத்தில் இருந்த மல்லிக்காவிடம் சென்று, சுகன்யாவைப் பற்றிக் கேட்டான். அவள் இவனை ஏற இறங்கப் பார்த்து, “உங்களிடம் சுகன் சொல்லவில்லையா… அவள் இங்க தற்காலிகமாகத்தான் உங்க சீட்டில் வேலையில் இருந்தாள். நீங்க நிரந்தரமாக இங்கு வேலைக்கு வந்ததும் உங்களுக்கு வேண்டியதை கோச் பண்ணிவிட்டு, கடந்த வார வெள்ளியன்று அவளுக்கு கடைசி நாள்; அன்றைக்கே வவுச்சர் பேமென்ட் கடைசியாக வாங்கிச் சென்றுவிட்டாள். இனி அவள் இங்கு வரமாட்டாள். வேறு வேலைக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கா…”

ஜெயராமன் சுத்தமாக அதிர்ந்தான்.

‘ஓ… கடந்த சனிக்கிழமை வந்ததுதான் அவள் தன்னைப் பார்த்த கடைசிநாள்…ஹாலிடே என்றாலும் கற்றுக் கொடுக்கும் கடமை தவறாது வந்திருக்கிறாள்…’

இரண்டு வாரங்கள் சென்றன.

ஜெயராமனால் சுகன்யாவை மறக்க முடியவில்லை. அவளையே நினைத்து நினைத்து உருகினான். பித்துப் பிடித்தவன் போல் ஆனான். அவளுடைய மொபைல் நம்பரை வாங்கி அவளிடம் பேசினால்தான் என்ன?

அன்று தைரியமாக ஹெச்.ஆர் ஹரிணியிடம் சென்று தனக்குச் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், சுகன்யாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி அவளுடைய மொபைல் நம்பர் கேட்டான்.

“ஓ காட்… அவளுக்கு ஹைதராபாத் கூகுளில் நிரந்தரமான வேலை கிடைத்து நேற்றுதான் ஹைதராபாத் போய் டியூட்டி ஜாயின் பண்ணினாள். சென்னை நம்பரை சரண்டர் செய்துவிட்டாள். வேலையில் செட்டில் ஆனதும் போன் பண்ணுகிறேன் என்றாள்… அவ எங்க பண்ணப்போறா? கூகுள் எப்பேர்ப்பட்ட கம்பெனி? நம்மையெல்லாம் இனி அவள் சுத்தமாக மறந்து விடுவாள்…”

ஜெயராமன் சோர்வுடன் தன் இருக்கைக்குத் திரும்பினான்.

அவன் மனம் குமைந்தது.

இந்தச் சில நாட்கள் பழக்கத்தில் ஒரு சராசரி சிநேக பாவத்துடன் கூடத் தன்னை அவள் மதிக்கவில்லை. தன்னைவிட அவளுக்குத் தன் கடமைதான் முக்கியம் என்ற அப்பட்டமான உண்மையை உணர்ந்தபோது அவன் மனம் மிகவும் கஷ்டப்பட்டது. தன் கடமையை நேர்மையாக முடித்துவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள். ஒரு பரஸ்பர மரியாதைக்குகூட அவள் தன்னிடம் எதையும் சொல்லவில்லை. அவள் தன்னிடம் எந்தவிதமான வாஞ்சையையும் வெளிப் படுத்தவில்லை. அவளைப் பற்றிய உயர்ந்த எண்ணங்கள் தன்னால் மட்டுமே தன்னுள் வளர்க்கப்பட்டு, அந்த எண்ணங்கள் வெறும் கானல் நீராகிப் போனது குறித்து மிகவும் வெட்கிப் போனான்.

பன்னிரண்டு வயதில் தன் அம்மாவை இழந்த பிறகு, தனக்கு அறிமுகமான முதல் பெண், மிகவும் பிடித்தமான பெண் தன்னை நிர்க்கதியாக விட்டு விட்டுச் சென்று விட்டாள் என்கிற உண்மை உரைக்கத் தொடங்கியதும், இனந்தெரியாத வேதனை அவனுள் பீறிட்டது. அவனுடைய ஆரம்பக் காதல் கருகிப்போனது.

டேபிளின் மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு சிறிது நேரம் குமுறி குமுறி அழுதான்.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆரம்பக் காதல்

 1. Dear Mr. Kannan,

  It is very heart touching and hurting.

  I think this is your own experience.

  Keep it up.

  Thank you.

  Best regards…..
  Kannan
  7061901800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *