(1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிரயாண அலுப்புத் தீரும்படி நன்றாகக் குளித்து விட்டு, காலைச் சாப்பாட்டையும் முடித்த பின்னர் கட்டிலிற் சாய்ந்தேன். கட்டிலுக்குடையவனான சிவலிங்கம் என்னிடம் அறைச் சாவியைக் கொடுத்து விட்டுக் கந்தோருக்குப் போய் விட்டான். சில வேளை ‘சோட் லீவ்’ போட்டுவிட்டு வந்தாலும் வருவான்.
பத்மாவும் இப்போது கந்தோருக்குச் சென்றிருப்பாள். நாலுமணிக்குப் பின்னர் தான் வீட்டுக்கு வருவாள். அதுவரையும் நான் பொறுத்திருக்க வேண்டும்.
இரவு ரயிலிலே, நல்ல ஜன நெருக்கடி. எத்தனை சன நெரிசலாக இருந்தாலும். மூன்றாம் வகுப்புப் பெட்டி யிலே தளத்திற் புதினப் பத்திரிகையை விரித்துவிட்டு, அனந்தசயனத்தில் ஆழ்ந்துவிடும் எனக்கு, இரண்டாம் வகுப்புப் பெட்டியிலே அப்படித் தூங்குவது அந்தஸ்துக் குறைவாகப் படவே நான் இரவு முழுவதும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டே யிருந்தேன். அதனால் இப்போது என் இமைகள் கனத்து அழுத்து கின்றன. ஆயின் நினைவுகளின் எவ்வலில் மனம் எங்கேயோ பறந்து செல்கின்றது. கடந்த கால நினைவுச் சருகுகள் குவிந்த ஒற்றையடிப் பாதையில், ஒவ்வோர் நினைவு அடியும் ஒவ்வோர் கதையாய்…
அக்கதைகள் இன்பம் பயப்பனவா, துன்பம் தருகின்றனவா? என்று எனக்கே விளங்கவில்லை. ஆனாலும் அவை மனத்துக்கு இதமாக இருக்கின்றன.
தலையைத் தலையணையில் வைத்து நீட்டி நிமிர்ந்து மல்லாந்து படுத்திருந்த நான், எழுந்து கட்டிலின் தலை மாட்டில், தலையணையைக் கட்டில் சட்டத்தோடு நீளவாட்டிற் சார்த்தி வைத்து, அதில் முதுகைக் கிடத்தி கட்டிற் சட்டத்திற் தலையை வைத்துக் கொண்டு மண்டும் படுக்கையில் நினைவலைகள் என்னை எங்கேயே இட்டுச் செல்கின்றன.
‘சாதாரணமாக எல்லாருக்கும் அனுப்புவதுபோல அழைப்பிதழ் அனுப்பிவிட்டு நான் இருந்திருக்கலாம். அச்செய்தியை நேரிலேயே தெரிவிக்கக் கொழும்புக்கு வந் திருப்பது தவறு’ என்பது என் நண்பன் சிவலிங்கத்தின் அபிப்பிராயம். அவன் காலையிலே சொன்னான்.
“ஒவ்வொரு மனிதனிலும் மறைந்து கிடக் கும் மிருக சுபாவம், ஓரோர் வேளை பீறிக் கொண்டு வெளிப்பட்டு விடுகின்றது. உன் திருமணச் செய்தியைப் பத்மாவிடம் தெரி விப்பதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது? அவள் தன் வாழ்வை நினைத்து, மீண்டும் ஒருமுறை பெருமூச்சு விடுவாள். அதை ரசிப்பதை – அதாவது பிறரின் துன்பத்தில் இன்பங்காணும் உன் மிருக சுபாவத்தைத் திருப்தி செய்வதற்காகவே, நீ உன் திருமணச்செய்தியை அவளிடமே நேரிற் சொல்ல வந்திருக்கிறாய்.” எவ்வளவு கொடூரமான வார்த்தைகள்?
இதே சிவலிங்கம் தான் மூன்று ஆண்டுகளின் முன்னால் என்னிடம் சொன்னான்.
“நீ பத்மாவை உண்மையாகவே நேசிப்பவனாயிருந்தால் அவளை மனைவியாக்கிக் கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடு. அவள் தன் குடும்பத்திற்காக வாழும் ஓர் ஆண்மகள். நம் சமுதாயத்தில் புரையோடி விட்ட குறைகள், எத்தனையோ பெண்களின் மென்மையான உணர்ச்சிகளைக் கொன்று அவர்களை ஆண் மகளாகவே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகக் கட்டுக்கோப்பின் அடிப்படையை மாற்ற முயற்சி செய்யாமல் நீ ‘காதல் கூதல்’ என்றெல்லாம் உளறுவது முட்டாள்த்தனம். இதனால் உனக்கோ அவளுக்கோ ஏதும் பயனில்லை”
“அதனால் பத்மாவிடம் அன்பு கொள்ளவில்லை என்று எண்ணுகிறாயா?”
“ஏன், அவள்கூட உன்னிடம் அன்பு கொண்டிருக்கலாம். ஆனால் அவள் அன்பைத் திருடுவதன் மூலம் நீ ஓர் ஏழைக் குடும்பத்திற்கே துரோகம் செய்கிறாய். உத்தியோகத்தை எதிர்பார்த்துக் கல்வி, அந்த உத்தியோகத்தின் காரணமாகப் ‘பொன் காய்த்த மரமாக’ வரும் பெண், அதற்கும் பின்னாற் பிள்ளைகள், குடும்பம் என்கிற தீராச் சுமை…
அதற்கும் பின்னால் அந்தச் சுமையே விசாரமாய்க் காலங்காலமாக விழுந்து விட்ட வழமையான தடத்தில் உன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் அதன் சக்கரங்களில் நசிபட வேண்டியவர்கள் பத்மாவின் குடும்பத்தினர் தான். பேசாமல் ஊருக்குச் சென்று கொழுத்த சீதனத்தோடு எவளையாவது கட்டிக் கொள்வதுதான் உன் வரையிற் புத்திசாலித்தனம்.”
சிவலிங்கம் எப்போதுமே இப்படித்தான் வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசுவான். பெரிய பெரிய புத்தகங்களைப் படித்துவிட்டு வாழ்க்கைத் தத்துவங்களை ஆக்ரோஷத்தோடு அவன் பேசினாலும் அவனைப் புத்தகப் பூச்சி என்று ஒதுக்கி லிடவும் முடியாது.
இன்று காலையிலும் அவன் அந்தக் கொடூரமான வார்த்தைகளைச் சொல்லிவிட்டுக் கந்தோருக்குப் போய் விட்டான்!
திறந்து கிடந்த ஜன்னலூடாக இரட்டைத் தட்டி பஸ் ஆடி அசைந்து புகையைக் கக்கிக் கொண்டு செல்வது தெரிந்தது. நிச்சயமாக அது 138ம் இலக்க பஸ். அந்த வண்டி கொம்பனித் தெரு, யூனியன் பிளேஸ் வழியாக நாரஹேன்பிட்டிக்குச் செல்கிறது.
இந்த பஸ்ஸில் தான் நானும் பத்மாவும் அவரவர் காரியாலயங்களுக்குச் செல்வோம். இன்றைக்கும் இந்த பஸ்ஸில் அவள் பிரயாணம் பண்ணலாம். செக்கச் செவேல் என்ற ஒற்றை நாடியான அவள் சரீரம் தன் செழுமை குன்றாது ஆசனத்திலமர்ந்திருக்கும். நேர் வகிட்டின் கீழே பிறை நெற்றியில் குங்குமத்திலகம் என் றைக்கும் போலப் பளிச்சிடும். ஒற்றை வடச் சங்கிலிகூட இன்றைக்கும் அப்படியே தானிருக்கலாம்.
இன்றைக்கும் அவள் வயதை இருபதும் மதிக்கலாம். இருபத்தெட்டும் மதிக்கலாம். ‘காலம் மதித்தற் கரியனளா யினும் கன்னியளாம்’ எனப் பாரதி கண்ட பெண்போல வயதேயறியாத அந்தப் புன்னகை, அது கூட அப்படியே இருக்கலாம். அவள் உத்தியோகங்கூட இன்னும் ஒருபடி உயராமல், அவள் அதே ‘ரைப்பிஸ்ற்’ ஆகவும் இருக்கலாம்.
நான் சிகரட்டைப் பற்ற வைக்கிறேன். அந்தச் சிறிய அறையிலே புகை மூட்டம் சூழ்கிறது. அந்தப் புகை மூட்டத்தின் நடுவே தீக்கொழுந்து போலப் பத்மா நெளிகிறாள்.
138ம் நம்பர் பஸ்ஸியிலே ஆறு மாதங்களாக அவள் என் சகோதரப் பயணி. கொழும்பு நெருக்கடியில், காலை யில் அவரவர் காரியாலயத்திற்குச் செல்லும் அவசரத்தின் இயந்திர கதியில் எல்லாருமே உணர்ச்சியற்ற சடங்களாய்க் காரியாலயம் என்ற நாழியரிசி விவகாரத்தில் ஏகாக்கிரஹ சிந்தையராய்ப் பயணஞ் செய்கையிற் காதலாவது மண்ணாங்கட்டியாவது?
ஆனால் ஆறாம் மாதத்தில் எனக்கு அந்த விபத்து ஏற்பட்டது!
சம்பளதினம். சக ஊழியராகிய நமசிவாயமும் ‘நானும் சைவக் கிளப்பிலே வழமைக்கு மாறாக ஏதேதோ பட்சணங்களை மேய்ந்து விட்டுக் கோப்பி குடித்து வெளி வருகையில் நமசிவாயம் சொன்னான்
“நான் கொம்பனித் தெருவுக்குப் போகவேண்டும். உங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றால் நீங்களும் என்னுடன் வரலாம்.”
என் ‘மடிக்கனம்’ அதற்கென்ன என்று சொல்ல வைத்தது. இருவரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு போனோம்.
மாதா கோயிலடியில் பஸ் விட்டிறங்கியதும் நமசிவா யம் நடக்கத் தொடங்கினார். கொழும்புக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அன்றுவரை என் காலடிகள் படாத முடுக்கிலே அவருக்குப் பின்னால் நானும் நடந்து கொண்டிருந்தேன். நடந்து கொண்டிருக்கையில் அவர் சொன்னார்.
“என் தாய் வழியில் ஒன்றுவிட்ட சின்னம்மா ஒருத்தி இங்கே இருக்கிறா. நான் அவவைச் சந்தித்து இரண்டு மாதங்களாகிவிட்டன. அவ நான் போகல்லியே என்று கோவிச்சுக் கொள்ளப் போறா”
“அதற்காகத்தான் என்னைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்தீர்களோ?” என்று கேட்டுச் சிரித்தேன் நான்.
நமசிவாயம் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னார். “எல்லாருக்கும் அவரவர் கஷ்டங்கள் தலைக்குமேலே இருக்கின்றன. இரண்டு மாதங்களாக எனக்கு இங்கே வர நேரமே கிடைக்கவில்லை. விதவை யாகி ஐந்து பிள்ளைகளோடு கஸ்ரப்படும் அவவுக்கு என்னால் அள்ளிக் கொடுக்க முடியாவிட்டாலும் அடிக்கடி விசாரித்துக் கொள்வது மனத்தெம்பையாவது கொடுக்கும்.”
நாங்கள் பேசிக் கொண்டே நடக்கையிற் தெரு விளக்குகள் ஏற்றப்பட்டு விட்டன. எண்ணெய் வற்றி அணையு முன்பாக எகிறித் துடிக்கும் நெய்விளக்கின் சுடர்போலக் கொழும்பு நகரம் உயிர்த் துடிப்போடு அலட்டிக் கொண்டிருந்தது.
விலை சரஸமான கீரையையும், காய்கறிகளையும் சட்டியிற் போடுவதற்குத் தயாராக அரிந்து வைத்து விலை கூவும் பெட்டிக்காரிகள், சந்திலே, ‘மாபிள்’ விளையாடும் சிறுவர்கள், நெல்லிக்காய், பலாக்கொட்டை மாங்காயத்துண்டு இவைகளை மிளகுப் பொடியோடு விற்கும் சுளகுக்காரிகள் … எல்லாரையும் கடந்து சந்தின் வளைவிலிருந்த வீட்டை.. அடைந்தோம்.
தெருக்கதவைத் தட்டியதும், ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண்ணொருத்தி வந்து கதவைத் திறந்து நமசிவாயத்தை வரவேற்றாள். அவர் குறிப்பிட்ட சின்னம்மாவாகத்தானிருக்கும் என்று எண்ணிக்கொண்டு நமசிவாயத்தின் பின்னால் நான்விறாந்தையில் ஏறினேன்.
பத்தடி நீளமான விறாந்தையில், உள் அறைக்குச் செல்லும் கதவு நிலைக்கு மேலாகப் பாலமுருகனின் படம் தொங்கிற்று. விறாந்தையின் நான்கு மூலைகளிலும் நான்கு கதிரைகள்.
நமச்சிவாயம் அமரச் சொன்னதும் நான் தெருவைப் பார்த்துக் கொண்டு கதிரையில் அமர்ந்தேன்.
திரைச்சீலையை நீக்கிக்கொண்டு “அண்ணர் வந்திருக்கிறார்” என்று உள்ளே குரல் கொடுத்த சின்னம்மா மூன்றாவது நாற்காலியில் அமர்ந்து கொண்டு “இரண்டு மாசமா இந்தப் பக்கமே உன்னைக் காணவில்லையே தம்பி” என்றாள்.
“நேரமேயில்லைச் சீனியம்மா” என்று நமசிவாயம் ‘சொன்னபோது, அவர் பேச்சில் மன்னிப்புக் கோரும் தோரணை மேலோங்கி நின்றது.
மௌனம். திரைச்சீலையைப் பிளந்து கொண்டு அவள் தோன்றி னாள். செக்கச் செவேல் என்ற ஒற்றை நாடியான சரீரம், நேர்வகிட்டின் கீழே பிறைநெற்றியிற் குங்குமத் தின் பளிச்! மார்பிலே ஒற்றைவடச் சங்கிலி. உணர்ச்சி யற்ற சடமாய்க் காரியாலயம் என்ற நாழியரிசி விவகாரத்தில் ஏகாக்கிரஹ சிந்தையனாய்ப் பஸ்ஸில் பயணம் பண்ணும்போது என்னைக் கவராத அவளது நீண்ட சாட்டைப் பின்னல், இப்போது என் மனதைச் சொடுக்கிற்று.
அவள் என்னைப் பார்த்துப் புன்னகை வேறு புரிந்தாள்!
“என் தங்கை. முனிசிப்பல் காரியாலயத்தில் ரைப்பிஸ்ராக இருக்கிறாள். பெயர் பத்மா” அவளை அறிமுகப்படுத்தி வைத்தார் நமசிவாயம்.
“பஸ்ஸிலே சந்தித்திருக்கிறேன்” என்றேன் கைகூப்பிக் கொண்டே.
“நானும் சந்தித்திருக்கிறேன்” என்று சொல்லி, மீண்டும் புன்னகை புரிந்தாள் பத்மா.
நமசிவாயம் தன் சின்னம்மாலோடு ஏதேதோ கதைத்தார். காலஞ்சென்றுவிட்ட தன் கணவரின் ஓய்வூதியம் முக்கிய விடயமாக இருந்தது. இடையிலே வீட்டோடு இருக்கும் இரண்டாவது மகள், பாட சாலைக்குச் சென்று கொண்டிருக்கும் மூன்றாவது புத்திரி, விபரந் தெரியாத சிறுவர்களான இரண்டு புத்திரர்கள்…
நான் திரைக்குள் மறைந்துவிட்ட சௌந்தர்யத்தை என் மனத்திரையிலே வரைந்து கொண்டிருந்தேன்.
மீண்டும் திரையைக் கிழித்துக் கொண்டு பத்மா தோன்றினாள். அவள் கைகளிலே தேநீர்த் தட்டு இருந்தது.
நமசிவாயமும் நானும் தேனீரைக் குடிக்கையிற் பத்மா கதவு நிலையில் ஒருக்கணித்துச் சாய்ந்து கொண்டு நின்றாள். கழுநீர் மலரோடு முதிரா இளைஞர் ஆருயிரையும் திருகிச் செருகப் பெண்களால் முடியுமாயிருந்தால் ஏன் தேனீரோடு அவள் அழகையும் சேர்த்துப் பருக என்னால் முடியாதா?
எட்டு மணிக்கு மேல் நாங்கள் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டோம்.
அன்றையச் சந்திப்பின் பின்னர் பஸ் பயணம் எனக்கு இனித்தது. அது வாழ்க்கைப் பயணமாகவே என்னுள் வளர்ந்தது. பத்மா தன் புன்னகையினாலும் சரளமான பேச்சினாலும் என் நம்பிக்கைக்கு வலுவூட்டினாள்.
ஆனால் மனதுட் கனிந்த ஆசையை விண்டு காட்டிய போதுதான் சிவலிங்கம் சொன்னான்.
“நீ பத்மாவை உண்மையாகவே நேசிப்பதாக இருந்தால், அவளை மனைவியாக்கிக் கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடு. அவள் தன் குடும்பத்திற்காக வாழ வேண்டிய ஒரு ஆண்மகள். நம் சமுதாயத் திற் புரையோடிவிட்ட – குறைகள், எத்தனையோ – பெண்களின் மென்மை யான உணர்ச்சிகளைக் கொன்று அவர் களை ஆண்மக்களாகவே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கி வைத்திருக் கின்றன. சமூகக் கட்டுக்கோப்பின் அடிப்படையை மாற்ற முயற்சி செய்யாமல் காதல் கூதல் என்றெல்லாம் உளறித் திரிவது முட்டாள்த்தனம்”
மனித மனத்தின் தனித்துவமான, மென்மையான உணர்வுகளைச் சிவலிங்கம் என்றைக்குமே ரசிப்பதில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அனுபவிக் காமல், எல்லாரும் இன்புற்று வாழும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பைத்தியக்காரத்தனமான முயற்சியில் தீவிர நம்பிக்கை கொண்டு மனத்தை இரும்பாக்கிக் கொண்டு வாழ்கிறான். அவனும் அவனது இரும்புத் தத்துவமும் வார்த்தைகளிலே வடித்துக் காட்டமுடியாத மெல்லிய நாதஸ்வர இசையாய், நாத ரூபத்தில் என் மனதில் நடத்தும் ஆலாபனையைக் கொன்றுவிடவில்லை.
நான் பத்மாவைக் காதலித்தேன்! சிவலிங்கம் காதலையே நையாண்டி பண்ணினான்.
நான் அவனது கேலியைப் பரிசோதித்துவிட எண்ணினேன்.
அன்று என் காரியாலயத்தை விட்டு ஒரு மணி முன்ன தாகவே புறப்பட்டு விட்டேன். அரை மைல் தூரம் சிந்தனையோடு நடந்து நகரமண்டபத்து பஸ் தரிப்பிற் தரித்துப் பத்மாவுக்காகக் காத்துக்கொண்டு நின்றேன்.
முகத்தில் அதே புன்னகையோடு பத்மா வந்தாள் அவளைக் கண்டதும் நான் சொன்னேன். “பத்மா உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்”
“பஸ்ஸுக்காக இல்லையா?”
“இல்லை. உன்னோடு சில நிமிடங்கள் தனிமையிற் பேச வேண்டும்.”
“நிமிடங்கள். என்ன. மணித்தியாலக்கணக்காகவே பேசிக் கொண்டிருக்கலாம்.”
“அப்படியாயின் இந்த நடு வீதியில் இல்லாமல் எங்காவது போய் இருந்து பேசுவோம்” என்று சொல்லிக் கொண்டே நான் நடந்தேன், பத்மாவும் ஆட்சேபிக்காமல் என்னோடு வந்தாள்.
என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது? என்றே எனக்குத் தெரியவில்லை. இருவரும் மௌனமாக நடந்து சென்று அருகேயுள்ள முனிசிப்பற் பூங்காவில் பெஞ்சில் அமர்ந்து கொண்டோம்.
“பேசவேண்டும் என்று அழைத்து வந்து ஏன் மௌன மாக இருக்கிறீர்கள்?”
எனக்கு உயிர் வந்தது. “பத்மா என்னை விளங்கிக் கொண்டிருப்பாய் என எண்ணுகிறேன்.”
“நீங்களும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.”
பட்டை தீர்த்த இரத்தினச் சுருக்கமான அவள் பதிலில் என் எதிர்காலக் கனவுகள் ஜாஜ்வல்லியமாக மின்னின. என் கற்பனா சுகத்தில் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தோன்றவில்லை. உணர்ச்சிப் போதை யில் அவள் கையை, தட்டச்சு இயந்திரத்தில் விளையாடும் அவள் மெல்லிய விரல்களைப் பற்றினேன்.
அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டு நீண்ட பெருமூச்செறிந்தாள்.
“ஏன்?”
“நான் என் குடும்பத்திற்காக-என் தங்கை, தம்பிகளுக்காக வாழவேண்டிய ஆண்மகள்.”
“அப்படியானால் எனக்காக…”
“உங்கட்காக எவளே ஒருத்தி பிறந்தேயிருப்பாள். அந்த எவளோ ஒருத்தியாக நான் இருக்கமுடியவில்லையே என்பது தான் என் வாழ்க்கை”
“ஏன் இருக்கக் கூடாது?”
“இதற்கு நான் ஏறகனவே பதில் சொல்லி விட்டேன்.”
“உன் குடும்பத்தினருக்காக மட்டுமல்ல. உனக்காகவும் வாழவேண்டும். அந்த வாழ்க்கையில் நான் உன்னோடு…”
“தனிப்பட்ட மனிதனின் அல்லது ஜீவராசியின் உயிர்ப்பாசத்தினால் நிகழும் அவஸ்தைதான் வாழ்க்கை இந்த வாழ்க்கை இந்த ஜன்மத்தில் எனக்குச் சித்திக்கமலே இருக்கலாம். ஆனால் தோற்றம், நிலைமை, முடிவு என்ற முக்கூறுகளின் இடைப்பட்ட வாழ்வை நான் விரும்பாவிட்டாலும் வாழ்ந்தே ஆகவேண்டும்.”
“தத்துவம் பேசுகிறாயா பத்மா?”
“தத்துவம்!” பத்மா வாய் விட்டுச் சிரித்தாள். என்னை-ஏன் இவ்வுலகையே கேலி செய்வதுபோலத் தோன்றிற்று அவள் சிரிப்பு! தன்பாட்டிற் சிரித்து முடித்து விட்டுப் பத்மா சொன்னாள்.
“சாதாரணத் தபாற்காரனின் மூத்த மகளாக நான் பிறந்தேன். இது என் தோற்றம். இரண்டு சகோதரிகளுக்கும், இரண்டு சகோதரர்களுக்கும் விதவைத் தாயாருக்கும் ஒருவேளைச் சோறாவது கொடுக்கும் ‘ரைப் பிஸ்ற்’ என்ற இயந்திரமாக நான் வாழ்கிறேன். இது என் நிலைமை. மறைவு என்ற மூன்றாங் கூறைப்பற்றி தான் கவலைப்படவில்லை. இந்நிலையிற் தனியொருத்தியான என் ஆசாபாசங்கட்கு இடங்கொடுக்கும்படி நீங்கள் என்னைக் கேட்கிறீர்கள். இது இப்போதைக்கு முடியாத காரியம் என்று நான் நினைக்கிறேன்.”
“உன் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்க மாட்டேனென்று எண்ணுகிறாயா?”
“அதைப் பற்றிய பேச்சே எழவில்லை. ஆனால் நீங்கள் வாழக்கையை விரும்புகிறீர்கள். நீங்களும் நானும் நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தில் மற்றவர்களைப் பற்றி எண்ண நேரமோ, அவகாசமோ, தகுதியோ கிடைக்காமலிருக்கலாம். மனமிருந்தாலும்கூட…”
“உன் உழைப்பிலிருந்து நான் ஒரு சதமும் எதிர் பார்க்க மாட்டேன்.”
“நீங்கள் இப்படிச் சொல்வர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்க்கையை விரும்பும் தாங்கள் எப் போதாவது ஒரு காலத்தில், என்னை மனைவியாக்கிக் சொண்டமைக்காக வருந்துவீர்கள் என்பதையும் திட்ட மாகச் சொல்கிறேன்.” “அப்படியானால் உன் முடிவு?”
“ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேனே” என்ற பத்மா, என் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து நின்று “வாருங்கள். நேரமாய்விட்டது. வீட்டுக்குப் போகலாம்” எனறபடியே நடந்தாள்.
தானும் எழுந்து நடைப்பிணமாக அவளைப் பின் தொடர்ந்தேன். ஒரு சில சுவடுகள் வைத்ததும் அவள் திரும்பி நின்று என் வலக்கையைத் தன் இரு கைகளாலும் பொத்திப் பிடித்தபடி “என் இயலாமைக்காக என்னை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த முடிவின் காரணமாக நீங்கள் என் வீட்டுக்கு வருவதையோ, என் னுடன் பேசுவதையோ நிறுத்திக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றாள். அவள் முகம் கலக்கம் அடைந்திருந்தது. சத்தியங் கேட்கும் தோரணையிலிருந்தது அவள் பேச்சு.
அவள் கோரிக்கையை மறுக்க முடியாதவனாய் “உன் விருப்பப்படியே நடப்பேன்” என்று உறுதியளித் தேன் நான்.
கலக்கமடைந்திருந்த அவள் முகம் என் உறுதியிற் தெளிவடைந்தபோது அம்முகத்தில் ஓர் ஆண்மை படர் வது போன்ற பிரமை தட்டிற்று எனக்கு.
அந்தச் சம்பவத்தின் பின்னர் நான் ஆறு மாதங்கள் தான் கொழும்பிலிருந்தேன். அதே 138ஆம் நம்பர் பஸ். வயதேயில்லாத அவள் புன்னகை. சரளமான பேச்சு.
எனக்குப் பதவி உயர்வு கிடைத்ததைப் பத்மாவுக்குத் தெரிவித்தபோது அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்!
பிரதமலிகிதராக. ஊருக்கு மாறிக் கொள்கையில் அவள் வீட்டுக்குச் சென்று பிரியாவிடை சொன்னபோதும் பத்மா புன்னகையுடன் என்னை வழியனுப்பினாள்.
திடீரென்று அறைக்குள் நுழைந்த சிவலிங்கம் “நித்திரை செய்வாய் என்று எண்ணிக கொண்டிருந் தேன். இத்தனை சிகரட்களும் நீ ஊதித் தள்ளியவை தானா? என்ன யோசிக்கிறாய்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.
“என் கதை இருக்கட்டும். கந்தோருக்குச் சென்ற நீ ஏன் இடையிலே வந்தாய்?” என்று எதிர்பாணந் தொடுத்தேன் நான்.
“என்ன இருந்தாலும் நீ என் நண்பன். மூன்று வருடங்களின் பின் மாப்பிள்ளைக் கோலத்தில் வந்திருக் கிறாய்? உன்னைத் தனியாக விடலாமா? என்று எண்ணிய நான் ஒருநாள் லீவு போட்டு விட்டு ஓடிவந்து விட்டேன், வா. வெளியே போகலாம்” என்றான் சிவலிங்கம்.
போகத்தான் வேண்டும். பத்மாவிடம் நேரிற் சென்று திருமண அழைப்பு விடுவதும் பிழை என்று விட்டாய். வெளியிற் சென்று கந்தோருக்குப் போன் செய்தாவது நான் அவளுக்குத் தெரிவிக்க வேண்டும்.” “முட்டாள்!” சிவலிங்கம் கத்தினான் நான் அதிர்ந்து போனேன். சில வினாடிகள் கழித்து சிவா சற்று ஆதுரத்தோடு சொன்னான். “ராசா, என்ன தான் இருந்தாலும் பத்மா ஒரு பெண். உன்னை நேசித்த-அல்லது உன் பாஷையிற் சொன்னால் உன்னைக் காதலித்த-ஆனால் கல்யாணஞ் செய்ய முடியாத நிலையிலிருந்த ஒரு பெண். உன் திருமணச் செய்தி அவள் இதயத்தில் உணர்ச்சிக் குமுறல்களைக் கிளப்பவே கிளப்பும். பல ஆடவர்களுக்கு இடையே போனில் அவள் தவித்துப் போய் விடுவாள். அதற்காகத்தான் வேண்டாம் என்கிறேன்.”
அவன் சொல்லியது எனக்கும் சரியாகவே பட்டது. உடையணிந்து கொண்டு அவனோடு புறப்பட்டேன். எங்கெங்கெல்லாமோ குஷியாக அலைந்துவிட்டுப் பகற் காட்சிக்கு ஒலிம்பியா படமாளிகைக்கு வந்து சேர்ந் தோம்.
ரிக்கற்றை எடுத்துக்கொண்டு சிவா சொன்னான். “நீ பார்க்க வேண்டிய படம். ஒஸ்கார் வைல்டின் ‘ஒரு லட்சியக் கணவன்’ என்ற கதை…”
படம் முடிவடைகையில் ஐந்து மணியாகி விட்டது. பட மாளிகையை விட்டு வெளியே வந்ததும் “நான் எப்படியும் பத்மாவைப் பார்த்துவிட்டே வரவேண்டும்” என்றேன் சிவாவிடம்.
“அப்படியானால் நீ இதுவரை படமே பார்க்க வில்லை. பத்மாவைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்திருக்கிறாய்” என்று கேலி செய்து கொண்டே “சரி போய் வா. உனக்காகச் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பேன்” என்று கூறி விடை கொடுத்தான் சிவா.
நான் பத்மாவின் வீட்டையடைந்தபோது பத்மாவும், அவள் இளைய தங்கையும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். என்னைக் கண்டதும் பத்மா-ஏன் அவள் தங்கையும் விழுந்து விழுந்து உபசாரம் பண்ணத் தொடங் கினார்கள்.
தங்கை உள்ளே சென்றபோது நானும் பத்மாவும் மட்டும் விறாந்தையிற் தனித்து விடப்பட்டோம். மூன்று வருடங்களுக்குப் பின்னரும் நான் அவளிடம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. நேர்வகிட்டின் கீழ்ப் பளிச்சென்ற குங்குமம். ஒற்றைவ… ச் சங்கிலி. முகத்தில் அதே புன்னகை.
“அம்மா எங்கே ?”
“கோயிலுக்குப் போயிருக்கிறா. வந்து விடுவா. ஏன்? என்னோடு தனியாய் இருக்கப் பயமாக இருக்கா?” அதே சரளமான பேச்சு.
“இனிமேற் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை .”
அவள் என்ன நினைத்தாளோ… தன் வழக்கத்திற்கு மாறாகச் சற்று நேரம் மௌனமாக-மௌனமாகவே இருந்தாள்.
“உன் மூத்த தங்கையும் அம்மாவோடு போய் வீட்டாளா?”
“இல்லை . அவளுக்குத் திருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்று விட்டாள்.” பத்மாவின் குரலின் முந்திய மிடுக்கு இல்லாமையை என்னால் உணர முடிந்தது. அதை உணர்ந்ததும் நான் நெடுமூச்செறிந்தேன்.
அவள் மீண்டுஞ் சொன்னாள். “அடுத்தவள் தன் படிப்பை முடித்துக் கொண்டு விட்டாள். அவளுக்கு எங்காவது ஒரு உத்தியோகம் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
“ஏன்? அவளையும் உன்னைப்போல ஓர் இயந்திரம் ஆக்கி விடவா?”
“இல்லை. இயந்திரமாக இருந்த நான் மனித உணர்ச்சிகளோடு வாழ்வதற்காக. அதாவது வாழ்க்கைக்காக.”
எனக்கு இதயத்தில் யாரோ சம்மட்டி கொண்டு அடித்ததைப்போல இருந்தது. பத்மா தொடர்ந்தாள்.
“என் மூத்த தம்பியும் ஏதோ ஒரு கப்பற் கம்பனியில் தனக்கென்று ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டு வீட்டான். ஒழுங்காகத் தாய்க்கமைந்த பிள்ளையாக இருக்கிறான். தங்கைக்கும் ஒரு உத்தியோகம் கிடைத்து. விட்டால் அதன்பிறகு நான் …”
பத்மா என் முகத்தை ஆவலோடு நோக்கினாள். அவள் கண்கள் எதற்கோ ஏங்கின.
“காலம் கடந்து விட்டது பத்மா . எனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அச்செய்தியை நேரிற் தெரிவிக்கத் தான் உன்னிடம் வந்தேன்” என்று நான் கூறுகையில் என் கண்கள் பனித்தன. தன் குடும்பத்தினர்க்காக வாழ்ந்த அந்த ஆண்மகனின் கண்ணீர் என் ஆண்மையைச் சித்திரவதை செய்தது. தாங்கிக்கொள்ள மாட்டாத வகை “நான் வருகிறேன் பத்மா” என்று சொல்லிவிட்டுத் தெருவிலிறங்கி வரைவாக நடந்தேன். என் மனம், நான் எப்போதோ படித்திருந்த கவிதையடிகளை முணுமுணுத்தது.
புண்பூத்தமேனி புகைபூத்த உள்ளமடா – அவள்
மண்பூத்த பாவம் நம் மதிபூத்த கோரமடா.
– தினபதி ஆண்டு மலர் 1972
– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை