அவள் போகட்டும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 16,853 
 

அதோ, அவள் போகிறாள். போகட்டும்….. இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு இரு. அவள் வாழ்க்கையில் இனி நான் குறுக்கிட மாட்டேன்.

கண்களைத் தாண்டிச் செல்லும் பிரியாவை போ என்று புத்தி சொன்னாலும், போகாதே என்றல்லவா பாழாய்ப் போன மனசு சொல்கிறது. இந்த புத்திக்கும் மனசுக்கும் இடையில் நடக்கிற போருக்கு பலியானது கண்கள் தானா? என் கண்களில் இருந்து அருவியை ஒத்த கண்ணீர் பெருகுகிறதே!

கொஞ்ச நேரம் கழித்து, விரல்களால் கண்ணீரைத் துடைத்தேன். இனி அழக்கூடாது. இப்போது அழுதுக் கொண்டே யோசிக்கும் நான் அப்போதே யோசித்திருந்தால், எத்தனையோ இன்னல்களைத் தவிர்த்திருப்பேனே!

என் வாழ்க்கையின் திருப்புமுனையே இந்த ஆண்டு தொடக்கம் தான். அதாவது நான்காம் படிவ முதல் கட்டம். படிப்பைப் பொருத்தவரை நான் கொஞ்சம் மந்தம். அதனால் கடைசி வகுப்பில் தூக்கிப் போட்டு விட்டார்கள். அதனாலோ என்னவோ மற்ற வகுப்பு மாணவர்கள் என்னை மதிக்காதது போன்ற உணர்வு எனக்குள் எப்போதுமே இருந்து வந்தது. எதையாவது செய்து எல்லாருக்கும் ஹீரோவாக ஆகலாம் என்றும் தோன்றும். அந்த ‘ஏதாவது’ எது என்றுதான் தெரியாமல் இருந்தேன். ஹீரோவாக ஆகவேண்டும் என்று தோன்றியதே தவிர இந்த மக்கு மண்டைக்கு படிப்பு மட்டும் ஏறவில்லை. படிப்பின் மேல் நாட்டமும் சுத்தமாக இல்லை. அப்போது என் மனதில் இருந்ததெல்லாம் எல்லோரும் என்னைப் பார்க்க வேண்டும் , என்னைக் கண்டு வியக்க வேண்டும் என்றே தான் இருந்தது.

ஆனால் என்ன செய்வது? படிப்பைப் பொருத்தவரை நான் ஜீரோ. அதனால் மற்ற விஷயங்களில் ஏதாவது முயற்சி செய்யலாமே; கூடவே எனக்கேற்றார்போல் ஒரு கோஷ்டியும் இருக்கிறதே, வேரென்ன வேண்டும்?

ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் செல்வது நாங்கள் தான்; இரண்டே விஷயத்துக்காக. ஒன்று பிரச்சனையை ஆரம்பித்து வைக்க, அல்லது முடித்து வைக்க. சினிமாவில் வருகிற ஹீரோ போலவே மாறி விட்டேன்.

பொதுவாக என் வயதுப் பெண்பிள்ளைகளுக்கெல்லாம் சினிமாவில் வருகிற ஹீரோ மாதிரி இருக்கிறவன் மேல் உடனே ஈர்ப்பு வந்து விடும் என்று என் அனுபவத்தில் நான் கற்ற பாடம்.

அந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தவள், இன்று என்னை விட்டு போகிறாளே, இதே பிரியா தான்.

பிரியாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், சுமாரான அழகு. முதல் வகுப்பு மாணவி என்பதால் படிப்பைப் பற்றி கேட்கவே தேவையில்லை. மற்றபடி கொஞ்சம் வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள்.

என்னிடம் எதைப் பார்த்து அவளுக்கு ஈர்ப்பு வந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால், அவள் என்மேல் கொண்ட ஈர்ப்பே அவள்மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்படக் காரணமாகும்.

முதலில் என்னைப் பார்த்து ஹாய் சொல்லுவதும் ஹலோ சொல்லுவதுமாக இருந்தாள். அடிக்கடி பார்த்துப் புன்னகைப்பாள். பதிலுக்கு நானும் ஹாய் சொல்லுவதும் ஹலோ சொல்லுவதுமாகத்தான் இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் நெருக்கம் வளர்த்துக் கொண்டேன். அடிக்கடி அவளுடைய வகுப்புக்குப் போக ஆரம்பித்தேன்.

அங்கு இருக்கும் போதெல்லாம் நான் முதல் வகுப்பு மாணவர்களுடன் கலந்திருக்கிறேன் என்ற ஒரு பெருமை. அடிக்கடி அவள் வகுப்புக்குப் போவதால் அங்குள்ளவர்களின் வாயிலும் என் பெயர் அடிபடத் தொடங்கியது.

இது இப்படியே போக பள்ளி முழுக்க கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது. எனக்கும் பிரியாவுக்கும் இடையே காதல் என்பது தான் அந்தச் செய்தி. இதெல்லாம் புதிதாய் இருந்ததால் முதலில் கொஞ்சம் பயந்தேன்; ஆனால் பிடித்திருந்தது. பிரியா இதைப் பெரிது படுத்தாதது கண்டு அவளுக்கும் இது பிடித்திருக்கிறது போலும் என்றுதான் நினைத்தேன்.

எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.

நான்காம் படிவத்துக்கான அறையாண்டு பரிட்சைக்கு இன்னும் சரியாக மூன்று வாரங்கள் இருந்தன. எல்லாரும் பரிட்சைக்காக தீவிரம் காட்டிப் படித்துக் கொண்டிருந்த வேளையில் நானும் பிரியாவும் மட்டும் படித்த பாடில்லை.

பிரியா அடிக்கடி என்னுடைய வகுப்புக்கு வந்து விடுவாள். எனது கோஷ்டியும் அவளோடு சேர்ந்துக் கதையடித்துக் கொண்டிருக்கும்.

இதேபோல் ஒரு நாள் பிரியா வகுப்புக்கு வந்துச் சென்ற பிறகு, என்னுடைய நண்பன் தியாகு அருகில் வந்தான். “குரு, அவளும் உன்னைக் காதலிக்கிறாள் என்று நினைக்கிறேண்டா. அவள் உன்னிடம் பழகுகிற விதத்திலிருந்தே நல்லா தெரியுது. இப்பவாச்சும் நீ அவகிட்ட போய் உன்னோட லவ் மேட்டர சொல்லிருடா” என்றான்.

அவன் சொன்னது இன்னும் கூட அப்படியே மனதில் பதிவாகி இருந்தது. ஏனென்றால் இதற்குப் பிறகு தான் நான் பலப் பரீட்சையிலேயே இறங்கினேன்.

அப்போது அவன் கூறியதற்கு முதலில் தயக்கம் காட்டினேன். மனதில் ஆசை இருந்தாலும் தயக்கம் காரணமாக ஏதேதோ காரணங்களைச் சொல்லி சமாளிக்கப் பார்த்தேன். முதலில் அவள் குடும்பத்தையும் அவர்கள் குடும்ப வசதியைப் பற்றியும் சொன்னேன். பிறகு அவளது படிப்பைப் பற்றியும் என்னுடைய படிப்பைப் பற்றியும் சொல்லிப் பார்த்தேன்.

காதலுக்குக் கண்ணில்லை என்ற பழமொழியை எவன் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. அதையே இவனும் சொன்னான். அவனும் நிறைய தமிழ் சினிமா பார்ப்பவன் தானே.

ஓரிரு நாட்களில் பிரியாவிடம் என் காதலைச் சொன்னேன். அவளும் ஏதும் யோசிக்கவில்லை. சரியென்று ஒப்புக்கொண்டாள். இதுவரை அவளுடைய காதலன் என்னும் பாவனையில் சுற்றிக் கொண்டிருந்த நான், அன்று முதல் அவளது காதலனாகவே வலம் வந்தேன்.

அந்தச் சமயம், பிற்காலத்தில் என்ன நடக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவள் எதிர்காலத்தையோ என் எதிர்காலத்தையோ யோசித்திருக்க வில்லை. இன்னும் எத்தனையோ விஷயங்களை நான் யோசிக்க மறந்து விட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வயதில் எனக்குக் காதல் வேண்டுமா என்று யோசிக்கத் தவறிவிட்டேன்.

அவற்றை எல்லாம் அப்போதே யோசித்து இருந்திருந்தால் இன்றைக்கு இருவர் உள்ளத்திலும் இந்தப் புண் ஏற்பட்டு இருந்திருக்குமா?

ஆனால், அந்த நேரத்தில் நான் பெரியவனாகி விட்டது போல் ஓர் உணர்வு எனக்குள் ஊர்ந்தது. வாழ்க்கைப் பயணத்தின் அடுத்தக் கட்டத்தை மற்றவர்கள் அடைவதற்கு முன்னரே நான் எட்டிப் பிடித்து விட்டதைப் போல் இருந்தது. வாழ்க்கைத் துணையைத் தேடியது முதலில் நான்தான்; இந்த விஷயத்தில் மற்றவர்களை விட நான் பக்குவப் பட்டு விட்டேன் என்று மமதை தோன்றியது. இதெல்லாம் முற்றிலும் பருவக் கோளாறு என்று மணிரத்தினம் சார் சொல்லியது உண்மைதான் என்று இப்போதுதான் நான் உணர்கிறேன்.

இன்னும் ஓரிரு தினங்களில் அறையாண்டு சோதனை ஆரம்பமாகப் போகிறது என்ற எண்ணமே எங்கள் இருவருக்கும் இல்லை. எனக்கு தூரமாகவே இருந்த கல்வி இப்போது பிரியாவுக்கும் தூரமாகிக் கொண்டே போனது. அவள் தன் வகுப்பில் இருப்பதை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்தாள்.

கடமைக்காக பரிட்சை எழுதிவிட்டு பரிட்சை முடிவுகள் என்று ஒன்று வரும் என்பதையும் பொருட்படுத்த வில்லை.

விளைவு………..

அனைத்திலும் எனக்கு சரிநிகர் சமமான புள்ளிகளையே பிரியாவும் பெற்றிருந்தாள். அத்தனையும் சிகப்பு மார்க்குகள். நான் செய்த செயலுக்கு பலன் அப்போது தெரிந்த போதிலும் அதைக் கருதாமல் விட்டு விட்டேன். நன்றாகப் படித்துக் கொண்டிருந்தவள் இப்படி மோசமான ரிசல்ட்டை எடுக்க வைத்ததில் முக்கியப் பொருப்பு எனதென்று தெரிந்திருந்தாலும் அதனாலென்ன என்று இருந்து விட்டேன்.

ஆனால் விஷயம் இதோடு நின்றுவிட வில்லை. பிரியாவின் பரிட்சை முடிவுகள் அவள் வீட்டிலுல்லோருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தன் மகளின் கல்விநலன் மீது அக்கரை கொண்டவரான பிரியாவின் தந்தை ஆசிரியர்களை வந்து சந்தித்தார். ஆசிரியர்கள் மூலமாகவும் வகுப்பு சக மாணவர்கள் மூலமாகவும் பிரியாவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது.

எங்கள் விஷயம் பிரியாவின் தந்தைக்கு முழுவதும் தெரிந்து விட்டது. தன் மகள் இப்படி செய்துவிட்டாள் எனத் தெரிந்த எந்தத் தந்தைக்குத் தான் கோபம் வராது? தன் கல்விநிலை சரிந்திருக்க நான்தான் காரணம் என்று என் மீதும் ஆத்திரத்தோடு இருப்பதாக மறுநாள் பிரியா அழுது கொண்டே என்னிடம் சொன்னாள். அவளைப் பார்த்தாலே தெரிகிறது, வீட்டில் அவர் நையப் புடைத்துவிட்டார் என்று.

எனக்கு என்ன செய்வதென்று அந்த நேரத்தில் தோன்றவில்லை. அப்போதுதான் எனக்கு என் வீட்டு ஞாபகம் வந்தது. இந்த விஷயம் என் வீட்டுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் எனக்கு அப்போது தான் ஏற்பட்டது.

இதை சமாளிப்பதற்காக கொஞ்ச நாட்களுக்குச் சந்திப்பதில்லை என்று நாங்கள் முடிவு செய்துக் கொண்டோம். விஷயத்தைக் கொஞ்சம் ஆற விடுவோம் என்பதே எங்கள் நோக்கமாகும்.

ஒரு மாதம் வரை சந்திப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி பின் மருபடியும் இணையத் தொடங்கி விட்டோம். முடிந்த பரிட்சைக்காக அடுத்தக்கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கும் எண்ணம் அப்போதைக்கும் வரவில்லை.

அவள்மீது அதிகமான அன்பு வைத்து விட்டேன். அதனால்தான் என்னால் அவளை விட முடியவில்லை. அவள் மட்டும் என்னவாம். என்னைக் கொஞ்சமும் பிரிய மறுத்தாள். நாங்கள் இணைந்திருக்கும் நொடிகள் ஒவ்வொன்றும் இனிமையானதாகவே இருந்தன. இவையெல்லாம் எதிர்பாலரிடம் ஏற்படும் இயல்பான ஈர்ப்பு உணர்வு தான். இதில் காதல் எந்தளவு மறைந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று மணிரத்தினம் சார் முன்பதாகவே சொல்லியிருந்திருக்களாமே! சொல்லியிருந்தால் மட்டும் என்ன, கேட்டிருக்கவா போகிறேன்?

இதுவரைக்கும் பள்ளியில் நான் என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன்; என் படிப்பு எப்படி இருக்கிறது என்றுகூட கவலைப் பட்டதில்லாத என் பெற்றோர் பிரியா விஷயம் கேள்விப்பட்டதுமே எகிரிக் குதித்தார்கள். இந்த விஷயம் அப்பாவின் காதுகளுக்கு எப்படி நுழைந்தது என்றுதான் இன்றுவரை எனக்கு விளங்க வில்லை. விஷயம் தெரிந்தாலும் தெரிந்தது, அந்தியில் சாராயத்தை ஏற்றிக் கொண்டு காட்டுக் கத்தல் கத்த ஆரம்பித்து விட்டார்.

நான் செய்ததில் குடும்ப மானம் போனதாகக் கருதும் அவர், போதையில் ஒரு எஸ்டேட்டுக்கே கேட்கும்படி கத்தியதில் மானம் போனது தெரியவில்லை. ஆனால் எனக்கும் சூடு சுரனை இருக்கும் அல்லவா? அன்றையிலிருந்து நான் யாரோ, அவர் யாரோ……

எல்லாரும் எங்களை துற்றத் தூற்ற எங்கள் இருவருக்குமே வெறி மட்டும்தான் இருந்தது. எங்களுக்குள் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது. எங்கள் காதலுக்கு தடைபோடும் ஒவ்வொருவரையும் எதிரிகளாய் பார்த்தோம்.

“உங்களுக்குப் பெரியவர்கள் அளவுக்கு யோசிக்கும் பக்குவம் இல்லை. இன்னும் பதின்ம வயதில் தான் இருக்கிறீர்கள். முற்றாத பிஞ்சுகள் நீங்கள். எதையும் சரியான மனோதிடத்துடன் யோசித்து முடிவெடுக்க முடியவில்லை. அதனால்தான் ஒட்டுமொத்தமாக எல்லாரும் சொல்லும் ஒரே விஷயத்தை உங்கள் மனதில் கொண்டு சேர்க்க மறுக்கிறீர்கள்,” மணிரத்தினம் சார் கூறியதற்கு அர்த்தம் இப்போதுதான் புறிகிறது.

எல்லாருமே எதிரிகளாய் தெரிந்தமையால் யாரைப் பற்றியும் பெரிதாகப் பொருட்படுத்தியது கிடையாது. பெற்றவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு நாங்கள் வழக்கம்போல் தான் சுற்றிக் கொண்டிருந்தோம். காலம் போன வேகம் கூட எங்களுக்குத் தெரியவில்லை.

இதோ, இன்னும் ஒரு வாரத்தில் நான்காம் படிவ ஆண்டு இறுதிச் சோதனை. நான் திருந்திவிட்டேன் என்று தன் தந்தையிடம் சொல்லிவைத்திருந்த பிரியாவுக்கும் இது சோதனைக் காலம் தான். ஏதேதோ குழப்பங்கள்; பெற்றோரைப் பற்றிய பயம், எது படித்தோம் எது படிக்கவில்லை என்ற குழப்பம், எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் காதல் ஜெயிக்குமா என்ற குழப்பம். இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் எங்களை பரிட்சைக்குப் படிக்க விடவில்லை. என்னை விடுங்கள்; எந்த குழப்பமும் இல்லையென்றாலும் கூட என்னால் படிக்க முடியாது தான். ஆனால் பிரியாவின் நிலை அப்படியில்லை.

அவள் நன்றாகப் படிக்க வேண்டியவள். தேவையில்லாத ரணங்களையும் சுமைகளையும் அவள் மனதில் ஏற்றிவைத்து அவளுடையக் கல்வியை பாழ்பன்னினேனே, நான் உருபடுவேனா…? ஆனால் எல்லாம் காலம் கடந்துதானே உணர்கிறேன். இனியாவது அவள் முன்பைப் போல் படிப்பாளா?

அறையாண்டு சோதனையைப் போல் அல்லாமல் இம்முறை கொஞ்சம் சிரத்தை எடுத்துப் படித்தாள் பிரியா. தன் தந்தைக்கு பதில் சொல்லியாக வேண்டுமே! குறைந்தபட்சம் சிகப்பு மார்க்குகளைத் தவிர்த்தாக வேண்டும்.

தாமதமாகவே படிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்திருந்தாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டுப் படித்தாள். கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருந்த நானே அதற்கு சாட்சி. பார்த்துக் கொண்டிருந்த நான் பார்த்துக் கொண்டு மட்டும் தான் இருந்தேன். அவளோடு சேர்ந்து படிக்கும் எண்ணம் அப்போதும் கூட எழவில்லை.

ஒருவழியாக ஆண்டிறுதிச் சோதனையும் முடிந்தது. ஆனால் எங்களுக்கு சோதனையே இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது.

எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது. எல்லாம் சிகப்பு மார்க்குகள். எனக்கு மட்டுமல்ல, பிரியாவுக்கும் தான். அதைப் பார்த்து எனக்கு வருத்தம் ஏதும் தோன்றவில்லை. வழக்கமாகப் பார்ப்பது தானே.

ஆனால் பிரியாவுக்கு அது மிகவும் வருந்தத்தக்க விஷயம் தான். அவள் தேம்பித் தேம்பி அழுததிலிருந்தே எனக்கு நன்றாக விளங்கியது. இருந்தும் என்னால் என்ன செய்ய முடியும்? பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தேன்.

“குரு!!”

என்னை யாரோ அழைத்ததைத் தொடர்ந்து திரும்பிப் பார்த்தேன். விக்கி நின்றுக் கொண்டிருந்தான்.

“உங்க ரெண்டு பேரையும் மணிரத்தினம் சார் பாக்கனும்னு சொன்னாரு. க்லாஸ் முடிஞ்சதும் அவரைப் போய் பாருங்கள்,” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி பன்னினான்.

மணி சாரா? எங்களை எதுக்குக் கூப்பிடுறாரு? நிச்சயம் எங்கள் காதல் விவகாரம் பற்றியதாகவேதான் இருக்கும், என்று மெல்லிய மனவோட்டம் படர்ந்தது. பிரியா முகத்தைப் பார்த்தேன். என் மனதில் எழுந்தே அவள் மனதிலும் எழுந்திருக்க வேண்டும் என்று அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

கையைப் பிசக்கிக் கொண்டு மணிரத்தினம் சார் அறைக்குள் நுழைந்தோம்.

இதுநாள்வரை அவருடன் நேருக்கு நேர் கூட பேசியது கிடையாது. அப்போது தான் முதன் முறையாக நேருக்கு நேர் பார்க்கும் நேரம் வந்தது. அந்தப் பள்ளிக்குக் கடந்த ஆண்டு தான் மாற்றலாகி வந்தவர்.

நானே கூட அவரைப் பற்றி கொச்சை வார்த்தைகளால் நண்பர்களுடன் பேசியிருக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற நல்லுள்ளம் படைத்த மனிதர்களைச் சந்திப்பதே பாக்கியம்தான் என அப்போதுதான் உணர்ந்தேன்.

“வாருங்கள், முதலில் உட்காருங்கள்,” என்று முன்னே உள்ள இருக்கையைக் காட்டி அமரவைத்து சாந்தமான பார்வையை வீசினார். இவரும் எங்களை வைவதற்கே அழைத்திருக்கிறார் போலும் என்று ஆரம்பத்தில் எழுந்த சிந்தனையை அவருடைய சாந்தமான முகபாவனை தகர்த்தெறிந்தது.

முதலில் எங்கள் நலனை விசாரித்து, பின் எங்களுக்குள்ள உறவை விசாரித்து, பின்பு நடந்தவற்றையும் விசாரித்தார். எங்களுக்கும் பேச வாய்ப்பளித்த முதல் ஆள் அவர்தான். என் மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனையையும் அவர்முன் கொட்டினேன். என்னுடைய உணர்வுகள், தேவைகள், என்று அத்தனையும் சொன்னேன். எல்லாம் சொல்லி முடிந்ததும் இதயம் இலகுவாயிற்று. இனி அவர் சொல்லப் போகும் விஷயத்தை எளிதாக ஏற்கும் பக்குவமும் பிறந்தது.

காதல் என்றால் என்ன, ஈர்ப்பு என்றால் என்ன, என்ற இரண்டே விஷயத்தைப் பற்றி முதலில் எங்களுக்கு விளக்கினார். வயது முதிர்ச்சியை பொருத்து நாம் எடுக்கும் முடிவும் அமையும் என்றும் குறிப்பிட்டார். மெல்ல மெல்ல எங்களுக்கே நாங்கள் செய்த அனைத்தும் அறியாமையின் ஆதிக்கத்தால்தான் என்று புரிந்தது. வெரும் ஈர்ப்பைக் காதல் என்று தவறாகப் புரிந்துக் கொண்டிருந்ததை அப்போது உணர்ந்தோம்.

“இன்றைக்கு இவனை சிறந்தவன் என்று நினைக்கும் நீ, நாளை இவனைவிட சிறந்த இன்னொருவனைப் பார்த்து அவனைக் காதலித்திருக்கலாமே என்று எண்ணம் எழும்போது அது காதல் இல்லை, வெரும் ஈர்ப்பு என்று புரிந்துக்க் கொள்ளுங்கள்,” என்று அவர் சொன்னதும் எனக்கு சுறுக்கென்று பட்டது.

சுமார் அழகுள்ள பிரியாவைவிட இன்னும் அழகான பெண்ணைக் காதலித்திருக்களாமே என்று எனக்கே பல சமயம் தோன்றியிருக்கும் போது, கல்வியில் பல மடங்கு பின்தங்கியவன் நான்; வசதியிலும் அப்படித்தான்; அவளுக்கும் இது தோன்றியிருக்காது என்று என்ன நிச்சயம்? இப்படியிருக்க எங்கள் காதல் எத்தனை நாள் நிலைத்திருக்கும் என்று தோன்றியது.

இதற்கடுத்து, கல்வி, குடும்பம், என்று பல விஷயங்களை எடுத்துச் சொன்னார் அவர்.

சூரியன் உதிக்க இருள் மெல்ல மெல்ல விலகுவது போல அவருடைய தெளிவுரைகள் எங்கள் அறியாமையை மெல்ல மெல்ல விலக்கியது.

அறையை விட்டு வெளியே வந்ததும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நாம் பிரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவளுடைய கண்கள் சொல்ல, ஆமாம் அதுதான் நம் இருவருக்கும் நல்லது, எல்லாருக்கும் நல்லது என்று என் கண்கள் பதிலளித்ததை புரிந்துக்கொண்டாள். என்னைப் பிரிந்துச் செல்ல அவள் முதல் அடியை எடுத்து வைத்து விட்டாள்.

அதோ, அவள் போகிறாள். போகட்டும்… இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு இரு. அவள் வாழ்க்கையில் இனி நான் குறுக்கிட மாட்டேன்.

(இந்து பிரதிநிதித்துவச் சபை – மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 11வது சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

1 thought on “அவள் போகட்டும்

  1. அழகான வரிகள் ,But, என்ன மறுபடியும் இப்படி அழவைக்கதிங்க plz, /*ture line, ture story*/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *