நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் அழகை வர்ணித்தார்கள். சுருண்ட கூந்தல், சிவந்த உதடு, மைதீட்டிய கண்கள், முத்துப்பற்கள், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி என்று சொன்னார்கள்.
உடனே நந்த குமார் ”செயற்கை அழகு செய்துகொள்ளும் பணக்க்காரப் பெண்கள் எனக்கு வேண்டாம், ஏழைப்பெண் என்றாலும் இயற்கை யான அழகுதான் மனதுக்கு இதமானது. சினிமா நடிகைகள் எல்லோருமே செயற்கையான அலங்காரத்தில்தான் ஜொலிக்கிறார்கள் . மேக்-அப் இல்லாவிட்டால் அவர்களை எதிரில் பார்க்கவே முடியாது. ஏழைப்பெண் என்றாலும் அலங்காரமில்லாத இயற்கை அழகிதான் என் மனைவியாகவேண்டும்”, என்று கூறி முடித்தான்.
அவனுடைய அப்பா, ”நந்து, உனக்கு நல்ல பெண் கிடைத்தால் சொல்லு, நானே செய்துவைக்கிறேன்”, என்றார்.
நந்து மனோரமா என்ற பெண்ணை ஒரு திரையரங்கில் சந்தித்து மோகித்தான். அவள் நல்ல அழகி. மனம்விட்டுப் பேசத் தயக்கமா யிருந்தது. நன்றாகவே பழகினாள். முறைப்படி பெண் கேட்க தன் தந்தையை அனுப்பிவைத்தான். மனோவின் தந்தையும் நல்லபடி வரவேற்று உபசரித்தார். கடைசியில், “உங்கள் குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நான் கொடுத்துவைக்கவில்லை. என் மகளுக்கு மணமுடிக்க எனக்கு பாக்கியமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்”, என்று கையெடுத்துக் கும்பிட்டார். நந்துவின் தந்தை செய்வதறியாது திரும்பிவந்தார்.
அதேநேரம் நந்து மனோவை சந்தித்தான். “நான் என் தந்தையை உன் தந்தையிடம் அனுப்பினேன். உன்னைப் பெண் கேட்கத்தான் போயிருக்கிறார். அடுத்த முகூர்த்தத்திலேயே நமக்குத் திருமணம் நடக்கும். உனக்குத் திருப்திதானே?” என்றான் நந்து.
“என்ன, என்னைப் பெண் கேட்கிறாரா? இது என்ன வேடிக்கை? ஒரு வார்த்தை என்னிடம் சொல்லிவிட்டு அனுப்பியிருக்கக்கூடாதா? என் தந்தை என்னவென்று சொல்வார்? மிகவும் வருந்துவாரே”.
“ஏன் மனோ? உனக்குத் திருமணம் நடந்துவிட்டதா? அல்லது, நிச்சயமாகிவிட்டதா? அல்லது நி விதவையா? எதற்கு உன் தந்தை வருந்தவேண்டும்? என்னை அவருக்குப் பிடிக்கவில்லையா? யாராவது மனம் வருந்தும்படி அவரை ஏசிவிட்டார்களா?”
நந்து மளமளவென்று கேள்விகளை அடுக்கினான்.
“இருங்கள் நந்து, நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ஆனால், ஒரு நல்ல சினேகிதமாகத்தான். உங்களை மணக்கமுடியாததற்கு வருந்துகிறேன்”.
“அதுதான் ஏன்? ஏன்? என்கிறேன். அதற்கு பதிலே சொல்லமாட்டாயா? உன் தந்தை ஏன் தடுப்பார்? அவருக்குப் பணத்தேவை ஏதாவது உண்டா?
“என் தந்த மிகவும் நல்லவர். என் விருப்பத்தை மிகவும் மதிப்பவர். எனக்கு நல்லதையே செய்பவர்”.
“மனோ, எனக்குப் பொறுமையேயில்லை. என்ன காரணத்தினால் என்னை மணக்க மறுப்பு சொல்கிறாய், சொல். நம், குலம் மதம் என்றுகூட எந்த வேறுபாடுமில்லையே?”
“என்னை நீங்கள் நிர்பந்திப்பதால் உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். யாரிடமும் நான் சொன்னதில்லை. நான் பெண் அல்ல என்பதுதான் காரணம். வேறு யாரிடமும் சொல்லவேண்டாம்”, என்றாள் மனோ.
– 1950இல் எழுதப்பட்டது]