அரியத்தின் அக்காவுக்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 9,142 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரியத்தின் அக்காவுக்கு,

எப்படி இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவோ நேரம் சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லை. கொஞ்ச நேரமென்றாலும் – நீ என்னுடன் பழகிய அந்த மகத்தான உணர்ச்சிகரமான நேரத்தைக் கொண்டு எப்படி உன்னை அழைக்கலாமென்று எனக்குப் புரியவில்லை. உன்னை அன்புள்ள சகோதரியென்று விளிக்கவும் என்னால் இயலும்; அன்புள்ள … என்று விளிக்கவும் என்னால் இயலும். உன் பெயரைச் சொல்லி உரிமையோடு அழைக்கவும் என்னா முடியும். ஆனால், நீ உன் பெயரை எனக்குச் சொல்லவில்லை. என்னை நீ எப்படிப் பாவித்தாய் – ஒரு உடன்பிறவாச் சகோதரனாகவோ அல்லது நீ உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவனாகவோ, அல்லது எப்போதோ ஒருமுறை சந்தித்து மறந்து விடக்கூடிய, எதுவித உறவுகள், பந்தபாசங்கள் அற்ற ஒரு மூன்றாம் மனிதனாகவோ – எப்படி நீ பாவித்தாய் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்படி நீ ஒருவித தொடர்பை வகுத்து என்னோடு பழகியிருந்தால் – அந்தத் தொடர்புக்கேற்ற – அந்தத் தொடர்பைப் பாதுகாக்கக்கூடிய – அந்தத் தொடர்பின் உணர்ச்சிகள் நிறைந்த குரலில் நான் உன்னை அழைத்திருக்க இயலும். அந்த மன நிறைவில் நான் நிம்மதி காண முடியும். நீ எப்படி என்னை அழைக்கிறா யென்பதல்ல எனக்கு முக்கியம்; இந்த உலகில் நான் வாழக்கூடிய நீண்டகாலத்தில் – ஒரு சில நேரப் பழக்கத்தில் என் மனதில் ஒரு உணர்ச்சியை ஒரு குளிர்ச்சியை, ஒரு கிறுகிறுப்பை ஏற்படுத்திய உன் உறவுதான் எனக்கு முக்கியம். அது எப்படியிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை.

ஆனால், நீ மொழியளவில் சொல்லக்கூடிய அல்லது எழுதக்கூடிய ஒருவித உறவுகளையும் ஏற்படுத்தாமல் – அதே நேரம் உன் உயிரினால், உணர்வினால் ஏதோ ஒரு உறவை ஏற்படுத்தியவளைப் போல கண்கள் கலங்க, குரலடைத்து நெஞ்சம் குலுங்க, பீறிட்டு வரும் அழு கையை வலிந்தடக்கி ஒரு செயற்கைப் புன்முறுவல் காட்டி, கரங்களைக் கூப்பி , ‘வணக்கம், வருகிறேன்’ என்று விடைபெற்றாயே?

நான் கண்கள் கலங்க, உணர்ச்சிகளை வெளிக்காட்டாது – மரமாய் – கல்லாய் தலையசைத்து விடை கொடுத்தேனே…?

எந்த உறவுக்கு இந்த உணர்ச்சி வரும்?

அந்த உறவை – அல்ல – அந்த உணர்ச்சிகளைத் தந்த உன்னுடைய உறவை நான் நாடி நிற்கிறேன். அதற்காக ஏங்குகின்றேன். அதனால் தான் இவ்வஞ்சலை வரைகின்றேன்.

இதை எழுத உட்கார்ந்த போதுதான், உன்னை எப்படி விளிப்பது என்ற பிரச்சனை ஏற்பட்டது. ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் நான் நீண்ட நேரம் சிந்தித்தேன். நீயும், நானும் பழகிய சூழல் மனத்தரங்கில் விரிய – நீண்ட பஸ் கியூவில் உனக்கும் எனக்குமிடையே கள்ளங்கப்பட மற்ற சின்னஞ்சிறிய சிறுமியாய் உன் தங்கை – அவள் தான் அரியம்; சிரித்த காட்சி என் மனத்தரங்கில் மின்னுகிறது.

அவளால் தானே உனக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவளால் தானே இந்த உறவு – பிரிய வேண்டு மென்று அறிந்திருந்துங்கூட, பிரியும் போது மனதில் வேதனைக் குமைச்சல் எடுக்குமென்றும் தெரிந்திருந்துங் கூட, அதாவது தவிர்க்க வேண்டிய உறவென்று புரிந்திருந்தும் தவிர்க்க முடியாத உறவாக ஏற்பட்டது.

அதனால் அவள் பெயரைக் கொண்டே, உன்னை விளிக்கிறேன். அரியத்தின் அக்காவே…என்று அழைப்பதிலேயே ஒரு மன நிறைவை – ஒரு உறவுத் தொடர்பின் உணர்ச்சி இழையைக் காண்கிறேன்.

அரியத்தின் அக்காவே…

நீ எங்கிருந்தாலும் எனது வணக்கங்கள் உன்னைச் சேரட்டும். ‘வாழ்க்கை ஒரு விபத்தென்று’ எங்கோ படித்த ஞாபகம். எமக்கு எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்களித் தொகுப்புத்தான் வாழ்க்கையென்றால், நீயும் நானும் சந்தித்ததும் ஒரு விபத்துத்தான். அந்த விபத்தின் விழைவாக என் நெஞ்சம் குமையக் குமைய, உன்னை நினைத்து வேதனையுடன் அழவைக்கிறாயே; அதுதான் என் வாழ்க்கையா? என் வாழ்நாள் முழுவதும் நான் உன் நினைவில் சித்திரவதைப்படத்தான் வேணுமா?

‘நாம் சந்திக்கின்றோம்; அன்பு செய்கின்றோம்; பிரிகிறோம்; ஒவ்வொரு மனித மனதின் சோக கீதமே இது தான்’ என்று ஒரு ஆங்கிலக் கவிஞன் பாடினானாம். அவனின் இந்த ஆத்மார்த்தமான – அழகிய கவிதை வரிகளை நினைத்து நான் உன்னை மறந்துவிடத்தான் முயல்கிறேன் உனது உறவை – அது எத்தகைய உறவென்றாலுங்கூட – அதை நாடி நிற்கும் என் மனதை – உள்ளத்தை – சித்தத்தை – இல்லை என்னையே வலிந்தடக்கத்தான் முயன்று முயன்று பார்க்கிறேன். எப்போதும் நான் அதில் தோல்வியையே காண்கின்றேன்.

உன்னை மறந்துவிட்டேனென்ற நினைவில், நான் வீதியில் நடை போடும் போது, அழகிய றோசாவில் நீ நின்று அழுகிறாய்; உன்னை மறந்துவிட்டேனென்ற நினைவில் ஏதாவது பாடலை நான் முணுமுணுக்கும் போது, அந்தப் பாடலில் இழையோடும் சுருதியாய் நீ நின்று உன் சோகக் குரலைக் கொடுக்கிறாய்; உன்னை மறந்துவிட்டே னென்ற நினைவில் நான் ஆண்டவனை வணங்கும் போது, வரங் கேட்கும் பாவனையில் நீ என்னைப் பார்க்கின்றாய்; உன்னை மறந்துவிட்டேனென்று நினைவில் நான் ஏதாவது படிக்க முயலும் போது, கண்களில் ஏதோ உணர்ச்சி மிளிர்வுடன் நீ நின்று பாடத்தை மறைக்கிறாய். என் நனவிலும் — கனவிலும், விழிப்பிலும், உறக்கத்திலும் நீயே நிறைந்து நின்று என்னை வாட்டுகின்றாய்.

அரியத்தின் அக்காவே…

உனக்குத் தெரியாமலே நீ ஏன் என் நெஞ்சத் திரையில் மின்னுகின்றாய். எனக்குத் தெரியாமலே நானும் உன் மனத்தரங்கில் இடம் பிடித்திருக்கின்றேனா. அப்படிப் பிடித்திருந்தால், அந்தப் பிடிப்பின் அர்த்தத்தில் – அந்த உறவுத் தொடர்பின் உணர்ச்சியில் – ஒரே ஒரு முறையாதல் உன் குரலையெடுத்து என்னை அழைக்கமாட்டாயா? அப்படி அழைப்பதின் மூலம் எப்படியாதல் ஏதோவொரு உறவுத்தொடர்பை என்னுடன் ஏற்படுத்தமாட்டாயா?

நீ அப்படிச் செய்யமாட்டாய்; அது எனக்குத் தெரியும்.

‘ஏன்’ என்ற கேள்விக் கொளுக்கியில் பிடித்துப் பின் நோக்கிப் பார்க்கிறேன்.

புலர்ந்தும் புலராத காலை வேளை; வைகறை – இளம் பனியின் மெல்லிய தூய்மையான குளிர்ச்சியில், சலசலத் தோடும் மாணிக்க கங்கையில் நீராடி, அந்தப் புனித உணர்வுடனே ஆண்டவனை வழிபட்டு, மீண்டும் எமது உத்தியோக வாழ்வு என்னும் இயந்திரமயமான வாழ்வை நோக்கிப் புறப்படுவதற்காக நானும், நண்பர்களும் பஸ் நிலையத்திற்கு வருகின்றோம். இரண்டு தினங்களாக, பச்சை பரந்து உயர்ந்திருக்கும் மலைச்சூழலில், வசந்தக் குறுகுறுப்பில் சிரிக்கும் மரச்சோலைகளில், மஞ்சளாய்ப் பூத்து மணத்து நிற்கும் கொன்றைமலர்ப் பரப்பில், சலசலத்தோடும் மாணிக்க கங்கையில், புதிய ஆலயத்தைத் தரிசித்த மனப்பக்குவத்தில், சாதிமத பேதமில்லாமல் மொய்த்து நின்ற சனக்கூட்டத்தில் – வாழ்ந்த வாழ்வை – அந்த இனிமையான வாழ்க்கையோட்டத்தை விட்டுப் போகிறோமே என்ற ஏக்கத்துடனேயே நானும் நண்பர்களும் பஸ் நிலையத்தில் நிற்கின்றோம்.

“இனி எப்போது நாம் கதிர்காமத்திற்கு வரப் போகிறறோம்” என்கிறான் நண்பன் பாலச்சந்திரன்.

“வாழ்க்கையில் தரிசிக்க வேண்டிய ஒரு தரிசனம் நன்றாக முடிந்து விட்டதே” என்று கூறி நிம்மதிப் பெரு மூச்சு விடுகிறான் வைதீகப் போக்குடைய நண்பன் பாலு.

“எமது இயந்திரமயமான வாழ்வை விட்டு, இதே போன்று அருமையான இயற்கைச் சூழலில், காலகாலமாக அமைதியாக வாழ எங்களுக்குக் கிடையாதா” என்று ஏங்கினான் என்னை நன்றாக அறிந்து கொண்ட என் அறை நண்பன் பரி என்கிற பரிபூரணானந்தன்.

நான் சிரித்தேன்; வெறுமே சிரித்தேன். ஒவ்வொரு மனித மனதிலும் எத்தனை எத்தனை விதமான ஏக்கங்கள். அந்த ஏக்கங்களின் தொகுப்புத் தானே வாழ்க்கை. வாழ்க்கை என்பதே ஏக்கங்களின் சிதறல்தானே என்ற அனுபவ ரீதியான உண்மையை மீண்டும் அசை போட்டு, வெறுமே சிரித்தேன்.

அழகு போர்த்துக் கிடக்கும் அந்தச் சூழலில் பச்சை போர்த்துக் கிடக்கும் மலைகளில் ஏறி உலாவ எனக்கும் ஆசைதான்; சலசலத்தோடும் மாணிக்க கங்கையில் எப்போதும் மூழ்கி மூழ்கிக் குளிக்கவும் ஆசைதான்; உடலை மெதுவாகத் தடவி இதம் கொடுத்து ஊடும் கொன்றைப்பூ வாசனை நிறைந்த தென்றலை நுகர எனக்கு என்றும் ஆசைதான். மாலை மங்கும் நேரத்தில் – மேற்கே உயர்ந்து நிற்கும் மரங்களுக்கப்பால், தங்கச் சூரியன் பளபளத்துக்கொண்டு – மர இடைவெளியினூடாக இடை யிடையே மஞ்சள் வெயிலைப் பரப்பிப் பூக்கோலம் போடும் போது அந்த அழகைப் பார்த்துப் பார்த்து கவிதை பாட எனக்குக் கொள்ளையாசைதான். வைகறையின் இளம் குளிரில் மாணிக்க கங்கையில் மூழ்கி, முருக சன்னிதானத்தில் நின்று, அருணகிரிநாதரின் திருப்புகழை உருக்கமாக மெல்லிய குரலெடுத்துப் பாட எனக்கு என்றும் ஆசைதான். மத்தியானத்தின் பின் மேகங்கள் திரண்டு இருள – காற்று பலமாக அடிக்க – மர இலைகளும் கொன்றை மரப் பூக்களும் பொலபொலவென்று உதிரபறவைகள் ஆரவாரம் செய்து கொண்டு பறக்க – மதிய உணவுண்ட களைப்பில் இராமகிருஷ்ண மடத்துப் பளிங்குத் தரையில் படுத்துக்கொண்டு – எமது பழைய ஏமாற்றமான சோக நினைவுகளில் மனத்தைச் செலுத்தி – உலகத்து அழகிய காவியங்களில் வரும் சோக கீதங்களை யெல்லாம் உணர்ந்து – நயந்து – அனுபவித்துப் படிக்க எனக்கு எப்போதுமே ஆசைதான்.

ஆனால் இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறாதென்று எனக்குத் தெரியும். அவ்வளவு தூரம் அந்த இயந்திர மயமான வாழ்வில் நாம் கட்டுண்டு இருக்கிறோம். அந்த வாழ்க்கையை உதறித்தள்ள எமக்குத் துணிவில்லை. துணி விருந்தாலும் எங்கள் குடும்பச் – சமூகச் சூழல் அதற்கு இடந்தரப் போவதில்லை.

எனவேதான் நான் வெறுமே சிரித்தேன். “என்ன புலவர்! ஒன்றும் பேசாமல் சிரிக்கின்றாய்” என்றான் பரி .

“என்னத்தைப் பேசிறது” என்றேன் நான். உனக்கும், எனக்கும் இடையில் நின்ற உன் தங்கை, அரியம் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னைச் சுட்டிக் காட்டி உன்னிடம் ஏதோ சொன்னாள். நீயும் என்னைத் திரும்பிப் பார்த்து; ஒரு அரைப்புன்னகை காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாய்.

‘உலகத்தில் பேசுவதற்குத்தான் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே’ என்று நீ உன்பாட்டிலேயே சொன்னது எனக்குக் கேட்டது.

“உலகத்தில் பேசுவதில் தான் வாழ்க்கை இருக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். மனிதன் தோன்றிய ஆதி நாளிலிருந்தே பேசிக்கொண்டு தானே இருந்திருப்பான். பேசிப் பேசிப் பேசியே தன் வாழ்வைக் கழித்திருப்பான். இன்னமுந்தான் அந்தப் பேசுகிற வாழ்க்கையில் அவனுக்குச் சலிப்போ, களைப்போ ஏற்படவில்லை போலிருக்கிறது” என்றேன் நான் என் நண்பனைப் பார்த்து.

அவன் மௌனமாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அப்போது நீ என்னை நன்றாகத் திரும்பிப் பார்த்து முழுதாகச் சிரித்தாய். உன் அதரங்களைப் பவ்வியமாகத் திறந்து ‘உண்மைதான்’ என்றாய். அப்போ நான் அர்த்தத்துடன் சிரித்தேன்; நீயும் சிரித்தாய்.

உன்னுடன் நான் சிரித்துக் கதைப்பதைக் கண்ட என் நண்பர்கள் ஏதோ உந்தலினால் உஷார் கொள்கிறார்கள். உலகத்து விடயங்கள் – நுட்பங்களை எல்லாம் தாங்கள் முற்றுமுழுதாக அறிந்தவர்கள் போலவும், பெரிய ஹாஸ்ய மன்னர்களைப் போலவும், அழகு இராசாக் களாகவும் தம்மை உருவகித்து பேசினார்கள். பலத்துச் சத்தமிட்டுச் சிரித்தார்கள். நீ மீண்டும் மௌனமானாய். அந்த அல்லோல கல்லோலத்தில், பஸ் நிலைய தூணொன்றுடன் மோதுண்டு நண்பன் பரியின் தலையில் காய மேற்பட்ட போது, எதுவித உறவுகள் பந்த பாசங்களற்ற ஒரு மூன்றாம் மனிதனைப் போல நீ அவனது காயத்தைப் பற்றி விசாரித்தாய்; உன்னுடைய தங்கையும் விசாரித்தாள்; உன்னுடன் வந்த உன் குடும்பத்தவர்கள் விசாரித்தார்கள்.

நீண்ட நெடு நேரத்தின் பின், மாத்தறை நோக்கிச் செல்லும் பஸ் வந்தது. உனக்கும் உன் தங்கைக்கும் நடுவில் பின்புறமாக நான் உட்கார்ந்து கொண்டேன். என் நண்பன் ஒருவன் பஸ்சின் பிற்பகுதியிலும், மற்ற இருவரும் பஸ்சின் முற்பகுதியிலும் உட்கார்ந்து கொண்டார்கள். எனக்கருகில் நீயும், உன் தங்கையும், உன் தாயும் உட்கார்ந்திருந்த படியால், எப்போதோ சந்தித்துப் பிரியும் மூன்றாம் மனிதனைப் போல உன் குடும்பம், சூழல், தொழில் என்பன பற்றி விசாரித்துக் கொண்டேன். பேச்சு வாக்கில் உன் தங்கையின் பெயர் அரியமென்றும், உனது ஊர் இலங்கையின் கீழ்ப்பகுதியிலுள்ள ஒரு எழில் கொழிக்கும் நகரமெனவும் அறிந்தேன்.

பஸ் தன் பயணத்தை ஆரம்பித்ததும் நான் என்னை மறந்த நிலையில் இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறி கொடுத்திருந்தேன். வரண்ட அம்பாந்தோட்டைப் பகுதியின் உப்பளங்களையும், பற்றைக் காடுகளையும், எங் காவது தென்படும் ஒற்றைப் பனை மரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நீர் நிலைகளில் தம்மை மறந்து படுத்துத் தூங்கும் எருமை மாடுகளையும், சிறிய நீர்க் குட்டைகளில் குளிக்கும் கிராமியப் பெண்களையும், சிங்களக் கிராமியப் பண்பாட்டின் உயிர் துடிக்கும் நீண்ட துண்டுச் சேலைகளை அணிந்து வீதியில் ஆங்காங்கே தென்படும் இளம் பெண்களையும் பார்த்து என்னை மறந்திருந்தேன்.

எப்போதாவது உன்னைத் திரும்பிப் பார்க்கும் போது, நீ சிந்தும் மோகனப் புன்னகையில் அப்போது ஓர் அர்த்தத்தை மெதுவாக உணரலானேன். அதனால், இயற்கையை மறந்து நான் உன்னையே பார்க்கத் தலைப் பட்டேன். நீ என்னைப் பார்த்துச் சிரிக்கும் போதெல்லாம் நானும் பதிலுக்குப் புன்னகை புரிய முற்பட்டேன். நீ சிந்திய புன்னகைகளின் அர்த்தத்தை நான் புரிந்து கொண்ட ரீதியில், உன்னோடு உறவுத் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற ஆதங்கத்தில் நான் தவிக்கலானேன். பேச்சைப் பற்றி நான் முன்னர் சொன்னதை நன்றாகப் புரிந்து ஆமோதிப்பது போல நீ வாயால் பேச முற்பட வில்லை. நானும் பேசவில்லை. நீ கண்ணால் ஏதோ பேசுவதாக நினைத்து, அந்தப் பேச்சின் சாரங்களை நான் எனக்குகந்த மாதிரிப் புரிந்து, அந்த ஆனந்தத்தில் திளைக்கலானேன்.

எப்போதோ ஒருமுறை சந்தித்து மறந்து விடக்கூடிய எதுவித உறவுகள் பந்த பாசங்களற்ற ஒரு மூன்றாவது ஆளாக பஸ் நிலையத்தில் என்னால் கணிக்கப்பட்ட நீ – பஸ் பயணத்தில் உணர்ச்சியும் உயிர்த் துடிப்பும் மிக்க உறவு கொள்ளக்கூடிய – உறவு கொள்ள வேண்டிய ஒருத்தியாக என் மனத்தரங்கில் இடம் பெற்றாய். அப்போது உன் உறவை நான் நாடி நின்றேன். அதற்காக ஏங்கினேன்.

நீண்டதூர பஸ் ஆதலால், வழியில் ஒரு பஸ்தரிப்பில் ஓய்வெடுப்பதற்காக பத்து நிமிடம் நின்றது. ஓய்வெடுப் பதற்காகவும் அந்தச் குழலை அவதானிப்பதற்காகவும் நானும் அவ்விடத்தில் இறங்கிச் சிறிது உலாவலானேன். அப்போது பஸ்சில் முன்பகுதியிலிருந்த வெளக்க அனுப வங்கள் மிக்க என் நண்பன் பாலச்சந்திரன், உன்னைப் பற்றி நான் எதிர் பாராத சங்கதிகளைக் கூறினான். நீ அவனுடன் கண்களால் பேசுவதாகவும், அவனை அடைய விரும் புவதாகவும் அவன் சொன்னான். என்னுடன் மட்டுமே ஏதோவோர் உறவை நாடி நிற்கிறாய் என நான் நம்பிய நீ, அவனுடனும் அப்படியான உறவை விழைகின்றாய் என ‘நான்’ அறிந்த போது என் மனம் துடித்தது. நான் என் மனத்தரங்கில் கட்டிய கோட்டைகள் சிதைந்தன. உன்னைப் பற்றி என் மனதிலிருந்த உயர்வான அபிப்பிரா யம் தவிடுபொடியானது. உன்னைப்போய் உணர்ச்சி களும், உயிர் துடிப்பு முள்ள ஒருத்தி யென்று நான் நினைத் ததை நினைத்து வெட்கினேன். பஸ்சில் ஏறிய போது மூன்றாம் மனித தோரணையில் உன்னுடன் பேசியதை – பேசாமலேயே இருந்திருக்கலாமென எண்ணத் தலைப்பட் டேன். அதனாலேதான், நீ அதே உணர்ச்சிகளுடன், அதே உயிர்த் துடிப்புக்களுடன், அதே மோகனத்துடன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நான் காணாதவன் மாதிரி, ஏதோ பெரிய யோசனைகளில் ஈடுபட்டிருப்பவன் மாதிரி நடிக்கலானேன்.

பஸ் பயணம் முடிந்து றெயிலில் நாங்களும் நீங் களும் ஒன்றாகவே பயணத்தைத் தொடர்ந்தோம். உன்னைப் பற்றி ஒரு மூன்றாம் மனிதரிலும் கீழான மதிப் புக் கொண்டிருந்தபடியால் நான் உன்னைக் கவனிக்கவுமில்லை; உன்னைப்பற்றி அக்கறை காட்டவும் இல்லை. நிமிரும் போதெல்லாம் உன்னைச் சந்திக்கக் கூடிய கோணத்திலிருந்து பஸ்சில் பிரயாணம் செய்த நான், நீ என்னைப் பார்க்கவோ, நான் உன்னைப் பார்க்கவோ முடி யாத கோணத்திலிருந்து றெயிலில் என் பிரயாணத்தைத் தொடங்கலானேன். நீ இருந்த இடத்திலிருந்து நெளிந்து வளைந்து குனிந்து பார்த்தது எனக்குத் தெரியும், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பெண்ணைப் பற்றி மற்றவர்கள் சொன்னதையும், பெண் என்பவள் பெரிய புதிர்தான் என்ற அணுபவ வார்த்தைகளையும் நான் அனுபவரீதியாகப் புரிந்துகொண்டனே என்று எண்ணி என் மனத்தில் கேலியாகச் சிரிக்கலானேன்.

அரியத்தின் அக்காவே…

நான் உண்மையாகவே உன்னைப் பற்றிக் கேலியாக நினைத்துச் சிரித்தேன். உனது புனிதத்தை உணராது சிரித்தேன். காலம், சூழல், சந்தர்ப்பம் என்பனவற்றுக் கேற்ப மாறும் சமுதாயச் சூழலில், பெண்களும் ஓரளவு சகசமாக எல்லோருடனும் பழக வேண்டுமென்று உணராமையால் – உன்னைத் தவறாக எடை போட்டு அதனால் என்னை நானே பாராட்டி, ஒருவித நக்கீர மிடுக் கில்’ நான் சிரித்தேன். அப்படிச் சிரித்தற்கெல்லாம் இப் போது நினைத்து நினைத்து, உருகி உருகி அழுகிறேன்.

றெயிலில் எனக்கோர் நண்பன் அறிமுகமானான். கொஞ்சம் துடுக்கும், துடிப்பும் மிக்கவனான அவன், உன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கலானான். உன்னிடத்திலவன் மயங்கிக் கிடந்தான். ‘என்னுடையதும், என் நண்பன் பாலச்சந்திரனுடையதும் சகாப்தம் முடிந்து அவன் சகாப்தம் ஆரம்பமாகிறது; பாவம்…ஏமாறட்டும்; நல்லாக ஏமாறட்டும்’ என நான் எனக்குள் நினைக்கலானேன். நான் விரும்பியிருந்தால் அவனை அவ்வாறு செய்யவிடாது தடுத்திருக்கலாம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அவன் வழியில் குறுக்கிட நான் முற்படவில்லை.

நீலக்கடலலைகள் ஓங்காரித்து சத்தமிட்டுக்கொண்டே இருந்தன. கடலுக்கும் ரெயில் பாதைக்குமிடையில் ஒழுங் காக அழகாக குளிர் நிழல் பரப்பி நின்ற தென்னஞ்சோலை கள் காற்றில் சலசலத்து களிநடம் புரிந்தன. என் முன்னால் இருந்த கண்ணாடி மனிதன் ஏதோ பரந்த யோசனையில் ஆழ்ந்திருந்தான். என் புதிய நண்பன் உன்னைப் பார்க்கக் கூடிய கோணத்திலிருந்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தான். எனக்குப் பக்கத்தில் முன்னும் பின்னுமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த இரு சிங்கள இளம் எழுத்தாளர்கள் அப்போது வெளியாகியிருந்த குணதாச அமரசேகராவின் நாவலொன்றைக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். நான் மௌனமாக இருந்தேன்.

என் புதிய நண்பன் உன்னையே பார்ப்பதைக் கண்ட நானும், நீ என்ன செய்கிறாய் என்று அறிவதற்காக உன்னைப் பார்க்க முற்பட்டேன். நான் உன்னைப் பார்க்க நெளிந்து திரும்புகையில், எனக்கு முன்னாலிருந்த சிங்கள எழுத்தாளன் உன்னைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு சங்கோசம் குறுக்கிட்டது. நீ என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாயென்பது எனக்குப் புலனாயிற்று. ஆனால், என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை.

அரியத்தில் அக்காவே…

நீ எவ்வளவு மனம் நொந்து போயிருப்பாய் என்பதை இப்போது நினைக்கும் போது என்னையே என்னால் ஆற்றமுடியாத துக்கம் பீறிடுகிறது. இப்போ ஏங்கி என்ன செய்ய முடியும்.

றெயிலில் கூட்டம் கூடியிருந்தது. என் புதிய நண்பன் உன்னைப் பார்ப்பதை விட்டு எங்கோ சென்றிருந்தான். நான் உன்னைப் பார்க்க முற்பட்டேன். கூட்டம் கூடியிருந்ததால் அது முடியவில்லை.

நாம் இறங்க வேண்டிய கோட்டை ஸ்டேசன் அண்மிய போது, உன்னருகில் நின்று என் புதிய நண்பன் என் பெயரைச் சொல்லிக் குரல் கொடுத்தான். அவனின் மனோநிலையை நினைத்து நான் மனதில் சிரித்துக்கொண்டேன்.

கோட்டையில் புகையிரதம் நின்றது.

ஒரு மாதிரியான சோக பாவனையில் நீ ‘வணக்கம் வருகிறேன்’ என்று விடைபெற்றாய்.

நான் பதிலுக்குத் தலையசைத்தேன்.

புதிய நண்பர் தவிர மற்ற நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம்.

நண்பன் பரி உன்னைப் பற்றிக் கதை கதையாகக் கூறினான். உன் பின்னாலிருந்து அவன் வெளியே ஜன்னலினூடாக தலையை நீட்டி உன்னோடு எத்தனை எத்தனையோ கதைகள் கதைத்தானாம்; நீ பரிசுத்தமான, புனிதமான பிறவியாம்.

என் புதிய றெயில் நண்பன் உன்னைப் பார்த்து ஏதோ கேட்டானாம்; வற்புறுத்தி வற்புறுத்திக் கேட்டானாம், நீ கண்கள் கலங்கி அழுதாயாமே; மௌனமாக ஏங்கிப் பெருமூச்சு விட்டாயாமே; ஆற்ற முடியாத சோகத்தில் சிலையாக மாறியிருந்தாயாமே.

நண்பன் அதற்கான காரணத்தை அறிய எவ்வளவோ முற்பட்டானாம், நீ அவனிடம் சொல்லவில்லையாம். நீ அவனிடம் சொல்லியிருக்கலாம். அவன் நல்லவன் மிகமிக நல்லவன்.

நீ ஏன் அழுதாய்? நீ ஏன் கண்ணீர் முத்துக்களைச் சிந்த விட்டாய்? நீ ஏன் ஏக்கப் பெருமூச்சு விட்டாய்? நீ ஏன் சோகச் சிலையாக மாறியிருந்தாய்…

இவற்றை அறியத்தான் நான் விழைகிறேன். நீ அழுதாயாமே – அதைக் கேட்கும் போது ஏன் என் கண்கள் கலங்க வேண்டும் – ஏன் என் நெஞ்சம் துடிக்க வேண்டும்; ஏன் நான் பேச முடியாதவனாக வேண்டும்; ஏன் நான் என்னையே மறக்க வேண்டும்.

நீ ஏன் அழுதாய் என்பதை அறியாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த உலகம் முழுவதுமே நீ அழுவது போன்ற பிரமையையே எனக்குத் தந்து நிற்கின்றது.

அரியத்தின் அக்காவே…

நீ ஏன் அழுதாய்?

அதை எனக்குச் சொல்லிவிடு. ஏதோவொரு உறவின் உணர்ச்சிகள் நிறைந்த குரலில் என்னை அழைத்துச் சொல்லிவிடு. நீ எப்படி அழைக்கிறாயென்பதல்ல எனக்கு முக்கியம். நீ ஏன் அழுதாய் என்பதை, ஏதோ வோர் உறவுப் பாசத்துடன் நீ எனக்குச் சொல்லுவதுதான் முக்கியம்.

உனது பதிலை, உறவு உணர்ச்சிகளுடன் கூடிய பதிலை என்றென்றும், கலங்கிய கண்களுடன், சோகம் குடிகொண்ட நெஞ்சுடன் எதிர்பார்த்து நிற்கும்…

இளங்கோ

– 1971, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *