ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களுக்கு குரல் கொடுத்தவனை போலொரு முகபாவத்துடன் தன் காரில் ஒலித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான் அகிலன். அவன் குரலை அவனே கேட்கா வண்ணம் அவன் காதுகளை கவசமிட்டது அந்த பாடலின் ஓசை. இதயம் துளைக்கும் புல்லாங்குழல் இசை காதை துளைத்துக் கொண்டிருந்தது அந்த காரில். கார் பயணத்தில் இசையை இப்படி உரக்க கேட்டு ரசிப்பது அவன் வழக்கம். அவன் கார் அந்த சாலையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க, அவன் எண்ணமோ எங்கோ அலைமோதிக் கொண்டிருந்தது. திடீரென சாலையில் ஒலித்த பலத்த சத்தம் அகிலனின் சிந்தனையை அந்த சாலைக்கு திருப்பியது. மின்னல் வேகத்தில் அவனை கடந்து சென்ற அந்த கார்தான் கீழே கிடக்கும் மோட்டார் வண்டியை இடித்து தள்ளி இருக்க வேண்டுமென அவன் புரிந்து கொண்டான். பொதுவாகவே பிறருக்கு உதவும் சுபாவம் அவனிடத்தில் தோன்றுவது அரிது. இந்தச் சுயநல உலகத்தில் பொதுநலம் பேண அவன் மட்டும் விதிவிலக்கா என்ன. இருந்தும் அன்றென்னவோ விபத்துக்குள்ளான ஆளை காண வேண்டுமென முடிவெடுத்தான்.
அகிலன் தன் காரை ஓரமாக நிறுத்தி அந்த மோட்டார் வண்டி விழுந்துள்ள இடத்தை அடையும் நேரம், அங்கே சில பேர் கூடியிருந்தனர். அவன் கண்களோ ரத்த வெள்ளத்தில் ஊறிக் கொண்டிருந்த இளைஞனை நோக்கியது. அணுவளவும் அசைவு இல்லை அந்த இளைஞனின் உடலில். மாநிறம், ஒல்லியான தேகம், எளிமையான உடை என அவனைக் காணும் பொழுது அவன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருக்கக் கூடும் என தீர்மானிக்க முடிந்தது. அருகில் இருந்தவர் யாரோ ஆம்புலன்சை அழைக்கும் சத்தம் அவன் காதில் விழுந்தது. புதிதாய் வாங்கியிருந்த தன்னுடைய ஆடம்பர காரில் அந்த இளைஞனை ஏற்றிச் சென்றால், அதிகபட்சம் 30 நிமிடத்திற்குள் மருத்துவமனையை அடைந்து விடலாம் என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தாலும், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கவே முடிவு எடுத்தான் அகிலன். அசையா உடலுடன் அங்கே வீழ்ந்திருக்கும் அவ்விளைஞனின் நிலைமை கூட இம்முடிவிற்கு காரணமாக இருக்கலாம். ஆம்புலன்ஸ் அவ்விடத்தை அடைந்து அந்த இளைஞனை ஏற்றி புறப்படும் வரை, அவ்விடத்தை விட்டு அசையவில்லை அவன். அவ்விளைஞனின் நிலையை அறியும் ஆவல் அகிலனை ஆம்புலன்சை பின்தொடர கட்டி இழுத்தது. இந்த நொடி இதுவே அவனுடைய அதி முக்கியமான வேலையாக கருதியவன் ஆம்புலன்சையும் பின்தொடர்ந்தான்.
***
“நீங்க அவருக்கு உறவா?”
டாக்டரின் கேள்விக்கு பதிலளிக்கும் பொறுமை அவனுக்கு இல்லை. அவனுக்கு தெரிய வேண்டியது அவ்விளைஞன் பற்றி.
“அவருக்கு என்ன ஆச்சு? நல்லா இருக்காரா?”
“மன்னிச்சிடுங்க. அவரை காப்பாத்த முடியல. வழியிலேயே அவர் உயிர் போச்சு. கொஞ்சம் முன்னுக்கு வந்து இருந்தா காப்பாற்றியிருக்கலாம்.”
மனம் ஒன்றைச் சொல்ல முகம் ஒன்றை வெளிகாட்டி விடாமல் தடுமாறினான். காப்பாற்ற முடியாத உயிர்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் வலுவற்ற காரணமாகவே தோன்றியது அகிலனிற்கு.
“அவரோட ஃபேமிலிக்கு சொல்லிட்டோம். அவங்க வந்துகிட்டு இருக்காங்க. நீங்க கிளம்பறதுனா கிளம்புங்க.”
“பரவால டாக்டர். நான் அவங்க வர்ற வரைக்கும் இங்கேயே இருக்கேன்.”
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த அகிலனின் மனது ஒருவிதத்தில் அமைதி கொண்டாலும், அந்த இளைஞனின் குடும்பத்தாரை காணப்போகும் நொடியை எண்ணுகையில் சற்றே பதற்றமாக இருந்தது. முதல் நாள் இரவு போதுமான தூக்கம் இல்லாததால் அங்கேயே சற்று கண்ணயர்ந்தாள். சுமார் அரை மணி நேரம் கழித்து அவன் காதில் விழுந்த ஒரு பெண்ணின் ஓளச்சத்தமே அவனை கண் விழிக்க வைத்தது. கண் திறந்த நொடி அவன்முன் நின்றவர் அவனுக்கு மிகவும் பரிச்சயமானவர். அவன் முன்னாள் காதலியின் தந்தை. கண்ணீர் மல்க அவர் பார்த்த பார்வைக்கான அர்த்தம் அவனுக்கு புலப்படவில்லை. எதிர்பார்க்காத ஒருவரை அங்கே பார்த்த அதிர்ச்சியில் அவன் உடலும் உள்ளமும் உறைந்தது.
“என்ன நடந்துச்சு. நீங்கதான் கூட வந்தீங்கன்னு டாக்டர் சொன்னாரு.”
“ஆமா சார். நான் எதார்த்தமா காரில் போய்க்கிட்டு இருந்தேன். என் கண் முன்னாடிதான் ஒரு கார் அவரை மோதி தள்ளி விட்டு வேகமாக போச்சு. கார் நம்பரை என்னால கவனிக்க முடியல. மன்னிச்சிடுங்க.”
“நீங்க எதுக்கு தம்பி மன்னிப்பு கேக்குறீங்க. இதுவரைக்கும் கூட இருந்ததுக்கு நான்தான் நன்றி சொல்லணும். எங்க தலையெழுத்து. இப்படி ஆகணும்னு இருக்குபோல.”
அவள் தந்தையின் புலம்பலை பொருட்படுத்தாமல் அவன் கண்கள் தேடியவளைப் பற்றி விசாரிக்கலானான்.
“அஞ்சலி?”
“குரல் கேட்கலையா? அவதான்.”
அவள் தந்தைக்கு வார்த்தைகள் தடுமாறின. அவர் நிலைமையை புரிந்துக்கொண்டு அவரை அருகில் உள்ள நாற்காலியில் அமர செய்தான் அகிலன்.
“என் மகள் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே. ஐயோ! அப்போவே அவ கல்யாணம் வேணாம்னு சொன்னா. நான்தான் கேட்காமல் நல்ல குடும்பம் அது இதுன்னு. வாழற வயசுல இப்படி ஒரு நிலமை.”
அவர் மேலும் புலம்ப, அகிலன் செவிகளில் விழுந்த வார்த்தைகள் அவன் இதயத்தை முள்ளாய் தைத்தன. அவனைப் பொறுத்தவரையில் அஞ்சலியின் இந்த நிலைமைக்கு முழுக்காரணம் அவனேதான். உலகிலேயே தலைசிறந்த காதலன் எனும் பட்டம் ஒன்று உண்டானால், அதனை தயங்காமல் அவனுக்கே வழங்கும் அளவுக்கு இனம்புரியாத காதலை வெளிப்படுத்தி அஞ்சலியை கவர்ந்தான் அவன். தன்னவளுக்காக சற்றும் தயங்காமல் எதையும் செய்யும் அவனால், மாற்றிக் கொள்ள முடியாமல் போன குணங்கள் என்றால் அது அவனுடைய முன்கோபமும் பிடிவாதமும்தான். அவனைத் திருத்த முயன்று பல முறை தோற்று இருந்தாலும், அஞ்சலி தளராமல் முயற்சித்தால், அவள் காதலின் துணையுடன். அகிலனின் செயலினால் தனக்கு ஏற்படும் விளைவுகளை ஏற்கும் பொருமை கொண்டவள், அதே செயல் தன் தந்தையை பாதிக்கும் பொழுது வெகுண்டு எழுந்தால். காதலா தந்தையின் பாசமா என்று ஒரு கேள்வி தோன்றும் போது, சற்றும் தயங்காமல் காதலை தியாகம் செய்தாள். நடைமுறை வாழ்வுக்கு அவர்களது கல்யாண வாழ்க்கை சரியாக அமையாது என்று அவனிடமே தெளிவுபடுத்தியவள், அகிலன் அதன்பின் பலமுறை முயன்றும் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதியில் கடினமாக பேசியே அகிலனின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். இன்று மீண்டும் அவன் வாழ்வில் அஞ்சலி, இம்முறை இன்னொருவன் மனைவியாக, சரியாக சொல்லவேண்டுமென்றால் விதவையாக.
அங்கே அஞ்சலியின் கூக்குரல் மருத்துவமனையையே அதிர வைத்துக் கொண்டு இருந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டு அவள் இருக்குமிடம் சென்றான் அவன். அவனைக் கண்ட நொடி இன்னும் வேகமாக அழுதாள் அவள். சில மாதங்களே நிலைத்த இல்லற வாழ்விலும் அவள் கணவன் அவளை அன்பாகவே கவனித்து இருக்க வேண்டும் என்பது அவள் அழுகையை கொண்டே யூகிக்க முடிந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல தூண்டும் அவனது எண்ணத்தை அடக்கிக் கொண்டு செய்வது அறியாமல் நின்றான்.
***
“நீங்க அவள பத்தி கவலைப்படாதீங்க. போய் பேசுங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம். உங்கள பத்தி முன்னாடி தப்பா புரிஞ்சிகிட்டிடேன். அவளுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி தரணும்னு ஆசையில அவ வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன். அத திருத்தி அமைக்க ஒரு வாய்ப்பு எனக்கு. ஒரு அப்பாவா என் பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரணும்னு ஆசைப்படறேன். உங்களை தவிர வேற யாராலும் அவளை நல்லா பாத்துக்க முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.”
அவள் தந்தையின் மனமாற்றத்தை எண்ணி மகிழ்வதா, இல்லை அஞ்சலியிடம் இதனைப்பற்றி பேசப்போவது எண்ணி பதற்றப் படுவதா என்று அறியாமல் தவித்தான் அகிலன். முதல்முறை அவளிடம் தன் காதலை சொல்லும் பொழுது இருந்த தைரியமும் வேகமும் இம்முறை அவனிடத்தில் இல்லை.
“இருந்தாலும் அவளோட மனசுல என்ன இருக்குன்னு தெரியல. என்ன பத்தி என்ன நினைக்கிறா? மறுபடியும் காதல், கல்யாணத்துக்கு எல்லாம் அவள் தயாராக இருக்காளான்னு எதுவுமே தெரியல. அவளோட கணவர் இறந்து இப்பதானே ஒரு வருஷம் ஆயிருக்கு.”
“இந்த ஒரு வருஷத்துல நான் உங்களை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். நீங்க மட்டும் இல்லனா எங்களால இவ்வளவு சீக்கிரம் இத கடந்து வந்திருக்க முடியாது. என்னோட மகளும் உங்கள புரிஞ்சிக்குவா. போய் பேசிப் பாருங்க.”
“அதுதான் பெரிய பிரச்சனை இப்ப. நான் நட்பாதான் உதவி பண்ணேன்னு நெனசிட்டானா? இப்ப அவ கூட பழகுற இந்த வாய்ப்பும் சுத்தமா இல்லாம போயிடும்.”
“அவ மேல எவ்ளோ அன்பும் அக்கறையும் காட்டுறீங்கன்னு எனக்கு தெரியும். கவலைப்படாம போய் பேசுங்க. அப்படி அவ ஏத்துக்கலனா அவகிட்ட நான் பேசுறேன். நான் சொன்னா கண்டிப்பா அவ கேப்பா. ஆனா எனக்கு தெரிஞ்சு அஞ்சலி உங்கள கண்டிப்பா ஏத்துக்குவா.”
முதல் முறை காதலை சொல்லும் பொழுது இருந்த சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இம்முறை இல்லை. அவன் வயதின் முதிர்ச்சி அவன் காதலிலும் தென்பட்டது. எதற்கும் தயாராகவே அவளறையின் கதவை தட்டினான்.
“திறந்துதான் இருக்கு. உள்ள வரலாம்.”
“நான் அகிலன்.”
“தெரியும். உள்ள வாங்க.”
அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவள் போல் இருந்தது அவளது பதில். கதவைத்திறந்து உள்ளே சென்றவன் அவள் வழக்கம்போல் கட்டிலில் அமர்ந்து புத்தகம் படிப்பதை கண்டு, அவள் அருகில் அமர்ந்தான். என்ன பேசப் போகிறான் என்பது பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு இருந்தாலும், அந்த நொடி, அனைத்தும் மறந்தது. பேசியே ஆக வேண்டிய நிலையில் ஏதோ ஒன்றை சொல்ல முற்பட்டான்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”
“நிறையவே பேசலாம். எனக்கு எந்த முக்கியமான வேலையும் இல்ல. சொல்லுங்க.”
“நான் முதல்ல உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அஞ்சலி.”
“இப்ப ஏன் திடீர்னு?”
“திடீர்னு இல்லை. எப்பயோ கேட்க வேண்டியதுதான். நான் பண்ணது எல்லாத்துக்கும்.”
“பழச பத்தி பேச வேணா அகிலன். அது எல்லாத்தையும் மறந்திடலாம்.”
“அதையேதான் நானும் சொல்றேன். உன் வாழ்க்கையில இதுவரை நடந்தது எல்லாமே பழசுதான். அதையும் நீ மறந்து வாழ்க்கைய இன்னும் சிறப்பா வாழனும்.”
“இல்ல அகிலன், என்னால எதிர்காலம் பத்தி யோசிக்க முடியல. தனியா எப்படி வாழ்க்கைய நகர்த்தனும்னும் தெரியல. பெரிய குழப்பத்தில இருக்கேன்.”
“நான் உன்கூடவே இருப்பேன். எப்பயும். நீ சம்மதிச்சா. மின்ன விட சிறப்பா பார்த்துப்பேன். நீ தனியா வாழ வேண்டிய அவசியமில்லை.”
அவள் கரத்தை தன் கரங்களில் அடக்கி எதிர்பார்த்த பதிலை அவள் கண்களில் தேடினான். அவன் ஏக்கப்பார்வை அஞ்சலியை பதில் பேச தூண்டியது.
“எனக்கு என்ன சொல்லணும்னு தெரியல. நான் எடுக்கற முடிவு என்னைக்குமே சரியா இருந்ததும் இல்லை.”
“இந்த தடவ என் முடிவை ஏத்துக்கோ. சரியா அமையும். என்ன நம்பு அஞ்சலி.”
குழப்பத்தில் இருந்த கண்கள் சிந்திய கண்ணீர் மட்டும் அரைகுறை சம்மதம் தெரிவித்தது. அவன் தோளில் சாய்ந்து அதனை உறுதியும் படுத்தினாள். அவன் வெகு நாளாக காத்திருந்த அந்த தருணம், இனி அவள் அவனுடையவள் என உறுதிப்படுத்தியது. இனியும் தாமதியாமல் அவளை கட்டி அணைத்து தன் காதலை வெளிப்படுத்தினான். உலகை மறக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கும் பாக்கியம் சில நொடியே மிஞ்சியது அவனுக்கு. அந்த நிமிடம் ஒலித்த அவனது கைத்தொலைபேசி ஓசை அப்புனித தருணத்தை கெடுத்தது. வெறுப்புடன் தன் தொலைபேசியை எடுத்து அழைப்பவரின் பெயரை பார்க்க முற்பட்ட அகிலனிற்கு, “பிரைவட் நம்பர்” எனும் எழுத்து சற்று பீதியை உண்டாக்கியது. அவளிடம் இருந்து சற்று தூரம் சென்று அந்த அழைப்பை எடுத்தான்.
“ஹலோ!”
“ஹலோ! ஒரு வருஷம் முன்னுக்கு நீ ஆள வெச்சு செஞ்ச கொலையை பத்தி உன்கிட்ட பேசணும். நேர்ல வா. இன்னிக்கி ராத்திரி எட்டு மணி. எங்கன்னு பிறகு சொல்றேன்.”
அவன் மறு வார்த்தை பேசுவதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அழைத்தவனின் குரலை வைத்து அது யாரென்று கணிக்கவும் இயலவில்லை. ஒரு நொடியில் பல சிந்தனைகள் அவனுள்.
யாரா இருக்கும்? போலீசே இதை வெறும் ஆக்சிடென்ட்னு கேஸ்ஸ க்லோஸ் பண்ணிட்டாங்க. இப்ப இது என்ன புதுசா பிரச்சனை, எல்லாம் கூடிவர நேரத்துல? சரி பரவால. அவ வேணும்னு எவ்வளவோ செஞ்சாச்சு, இதையும் பார்த்துக்கலாம்.
அகிலன் உறைந்து நிற்பதை கண்டவள், அவன் ஏதோ மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்தாள்.
“அகிலன்! ஏதும் பிரச்சனையா? முக்கியமான வேலை ஏதும் இருந்தால் போயிட்டு வாங்க. நாம பிறகு பேசிக்கலாம்.”
“கண்டிப்பா எந்த முக்கியமான வேலையும் இல்லை. இன்னும் சொல்லப்போனா, உன்ன விட எதுவும் பெருசு இல்லை எனக்கு.”
அஞ்சலி புன்னகைத்தாள். அந்த புன்னகை போதும் அவனுக்கு. அதை காணத்தானே இவை அனைத்தும்.