அந்தக் காதல் காதலா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 22,807 
 
 

காதல் வெறும் உணர்வா? அல்லது, அது உண்மையான அனுபவமா?? இதெல்லாம் தெரியாத வயசு. ஆனால் காதல் வலையில் விழ ஆசை. மனசு கிடந்து தவித்தது! தாவணிக் கனவுகள் மாதிரி.

‘மச்சி, என் ஆளு இப்ப வருவா பாரு’ என்று எகிறிக் கொண்டே வந்த அம்பலவாணன். ‘இருடா கொஞ்சம் என் ராகினிகிட்ட போன் பேசி வந்துடரேன் என்ற வாசு.

இவை எல்லம் நடை பெறும் களம்- லஸ் நவசக்தி ஆபீஸ் கிட்ட, கச்சேரி ரோட்டில். காலம் அந்தக் காலம்! வீட்டில் போன் மட்டும் இருந்தது.டீ வீ இல்லை. பைக், கார் எதுவும் கிடையாது. பல்லவன் பஸ். பதினன்சு ரூபா பாஸ்! சைக்கிள் வைத்திருந்தேன். இந்த சைக்கிள் நான் வெளி மா நில வேலைக்குப் போன பின்னர், என் தந்தை அவருடைய பியூனுக்கு இலவசமாக கொடுத்து விட்டார்.

மற்ற பசங்க அவரவர் மனதை இன்னும் இறுக்கிப் பிழிந்து பார்த்துவிட்டு கோணலாக ஒரு சிரிப்பு சிரித்தார்கள். எனக்கு சிரிப்பை விட பொறாமை வந்தது. பெண் சினேகிதம் எதற்கு? திடீர்னு எப்படி சொந்தம் கொண்டாட வருகிறார்கள்? என்ன பற்று? யாராவது பார்த்தால்? எப்படி சமாளிப்பது? இது எதுவரை?

‘அம்பலவாணா, கொஞ்சம் எனக்கும் எப்படி நீ ஆளப் பிடிக்கலாம்னு சொல்லுடா.’

‘டேய்! உன்னால இது முடியாது. நீ வீட்டுக்குப் பயந்த பையன். நாளைக்கு என்ன வம்புல மாட்டி விட்டு என் பொயப்பும் பிடுங்கிக்கும். உங்கப்பா நேரா நம்ம காலேஜ் வந்து பிரின்சி கிட்ட பேசிடுவாரு. வாணாம். நா தம்தூண்டு கதை சொல்றேன். கம்னு கேட்டுகிணு நீ எஞ்சாய் பண்ணு இன்னா?

என் தலை ஆடியது. மனசு கேட்கவில்லை. வாசு வேற ஒரு மாதிரி பார்த்தான். எப்போதும் என் பக்கத்தில் பென்ச் மேட். சுய மரியாதை தை தை என்று குதித்தது.

‘ஏதாவது ஒரு இடியா சொல்லுடா! நான் உன்ன இதுல மாட்டிவிட மாட்டேன்.’ என் குரல் எனக்கே கெஞ்சலாகத் தோன்றியது.

நீதான் டைப்பிங்க் போறியே! அங்க எதுனாச்சும் டிரை பண்ணுமா! அதான் ஈஸி. ஆளை சொல்லு அப்பாலே நான் உனுக்கு ஐடியா சொல்றேன்.

அடுத்த நாள் டைப்பிங் கிளாஸ். வழக்கமா ஒரு மணி நேரம் எனக்கு லோயர் ‘அவர்’ . ஆனா நான் பாபு ஸாருடன் ரொம்ப நெருக்கம். எங்கப்பாவின் ஆபீஸ் விஷயமா டைப்பிங் அவர்தான் செய்து கொடுப்பார். எதிர்காலத்தில் நானே அந்த டைப்பிங்கை செய்து கொள்ள அவர் பணித்தார். தினமும் ஒரு மணிக்கு மேல் நான் டைப்பிங்க் பாடங்கள் படித்தேன்.

மங்களா, பாபு மாஸ்டரின் மகள்.

சார் இல்லையென்றால் கிளாஸ் மேற்பார்வைக்கு அவளோ அண்ணன் ரகுவோ வருவார்கள். அவளும் என்னை மாதிரி பியுசிதான். நல்ல அழகு என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் அவளை எனக்குப் பிடிக்கும். சில சமயங்களில் பாபு சார் காலேஜ் பாடங்கள் பற்றி அவளை என்னிடம் பேசச் சொல்வார்.மனசில் மெல்ல ஒரு ஆசை விரிந்தது. இவளை என் ஆளுன்னு சொன்னா எப்படி? – என்று.

அம்பலவாணன் தான் இப்போது காதல் குரு! அடுத்த நாள் அவனிடம் சொன்னேன். டேய்! கைல ஆள வச்சிகினு நீ இன்னாமா டான்ஸ் ஆடலாம்- தெரிமா? என்றான்.

அவன் சொற்படி அடுத்த நாள் முதல் டைப்பிங்கில் அதிக நேரம். பாபு சார் ஒன்றும் சொல்ல வில்லை.

மங்களா வந்தாள். சிரித்தாள் – பேசினாள் – இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்பதுபோல, அன்றிலிருந்து அவள் எனக்கு சொந்தமாகிவிட்ட மாதிரி ஒரு எண்ணம். என்னைப் பார்த்தால் அவள் விழிகளில் ஒரு சந்தோஷம் தோன்றும். நான் செல்லவில்லை என்றால் எப்படியாவது கேட்டு விடுவாள் ஏன் வரவில்லை என்று. எனக்கும் அவளைப் பார்க்காமல், அவளிடம் சில நிமிடங்கள் கூட ப் பேசாமல் இருப்பது மிகவும் வருத்தமாகத் தோன்றியது.

என்னடா பேசுவீங்க என்று அம்பலவாணன் கேட்டான் . . நிஜம்மா எதுவும் கிடையாதுடா. அவள் பக்கத்தில வந்தாலே எனக்கு என்ன பேசணும்னு புரிய மாட்டேங்குது.

மங்களா பக்கத்தில் நின்றாலே எனக்கு ஒரு உந்துதல். அவள் முகத்தில் என்னைப் பார்த்து பிரகாசம் வருகிறதோ?

அவர்கள் வீட்டில் மாங்காடு போனபோது நானும் கூடப் போனேன். பாபு சார் எக்சிபிஷன் போனபோது அவர்களுடன் நானும் போனேன் .

இதெல்லாம் பத்தாதுடா! அவள தனியா சினிமாக்கு கூட்டிட்டுப் போ அப்பத்தான் நான் ஒத்துக்குவேன் என்று அடம் பிடித்தான் என் குரு.

இங்கேதான் சிக்கல் வந்தது எனக்கு! அது எப்படி?

டைப்பிங் பரீட்சை முடிந்து எல்லாரும் ஒரு சினிமா போகலாம் என்று நான் ஐடியா போட்டு வைத்தேன். சிவகுமார், ஜிக்கி, ரகு, மங்களா எல்லாரும் இதில் என் கூட இருந்தார்கள்.

சினிமா போனோம். டைப்பிங்க் ஷார்ட் ஹேண்ட் எல்லோரும் ராம் தியேட்டரில் சினிமா பார்க்க முடிவானது.

என் பக்கத்து சீட்டில் ரகு, சிவகுமார் . ரகுவின் அருகில் மங்களா. ஏதாவது திரும்பும் சாக்கில் என்னைப் பார்ப்பாள். இடைவேளையில் காபி குடிக்கும்போது நானே சந்தர்ப்பம் அமைத்து அருகில் நின்றேன்.

என்னடா பேசினீங்க? ரெண்டு பேரும்? அம்பலவாணன் கேட்டான்.

ஒண்ணா காபி குடிச்சோம். காபிக்கு காசு நான் குடுத்தேன். அவள் ஒரு சிக்லெட் எடுத்துக் கிட்டாள். என்னிடம் தேங்க்ஸ் சொன்னாள்.

அப்புறம்? அம்பலவாணன் பறபறத்தான்.

அப்புறம் 12-B வந்தது. அவள் லஸ்ஸில் இறங்கினாள். நான் எஸ்டேட் போனேன்.

லூசுடா நீ! ஏதாவது உபயோகமா பேசி இல்ல கை பிடிச்சு சில்மிஷம் பண்ணி தூ! உன்னால முடியாது டா. அன்னிக்கே சொன்னேன்.

நான் என்னடா பண்ண? அதுதான் எனக்குப் பெரிசாப் பட்டுது.

இது நடந்து ஒரு மாதத்தில் பாபு சார் ஒரு நாள் சொன்னார் ., மங்களா மதுரைல படிக்கப் போறா. அங்க அவளோட மாமா எல்லாம் ஏற்பாடு பண்ணீட்டாராம். இங்க குயின் மேரீஸ விட அது பரவாயில்லை . பீஸ் அவரே கட்டுவார்..

எனக்கு திடீர்னு ஒரு கலக்கம் மனசில் . என் பொருளை என்னிடமிருந்து யாரோ திருடிச் செல்லுவது போல.

அவளுக்கு எப்படி இருக்கும்?

சேகர்! நான் மதுரை போறேன் தெரியுமா? ஆனந்தமாகச் சொன்னாள் மங்களா.

மங்களா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது என்றேன்.

ஏன்? அவள் கேட்டதற்கு என்னால் சொல்ல முடியவில்லை.

உன்னை நான் எப்படிப் பார்ப்பேன்? என்று கேட்டும் விட்டேன்.

சிம்பிள் ! மதுரை வா! இல்ல நான் மதராஸ் வரும்போது பார்க்கலாம். கள்ளமில்லாமல் சொன்னாள்.

என்னை மறந்து விடுவாயா? என்றேன்

நீ என்னை மறக்காமல் இருந்தால் நானும் மறக்க மாட்டேன். தெளிவாகச் சொன்னாள்.

மனசு அரற்றியது. ஓலமிட்டது. இவளைப் பார்க்காமல் நான் எப்படி இந்த இன்ஸ்டியூட் வருவேன்.

அந்தக் காதல் காதலா? வெறும் இனக் கவர்ச்சியா? நட்பா?

அவளை நான் காதலித்தேனா? அவள் என்னைக் காதலித்தாளா?

இன்றளவிலும் எனக்கு விடை கிடைக்கவில்லை.

மனசில் ஒரு மூலையில் இன்றும் மங்களா உலவி வருகிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *