அதிகாலை ஐந்து மணி. வீட்டுக் கதவைத் கதவை யாரோ படபடவென்று தட்டிய சப்தம் பவானியைப் படுக்கையிலிருந்து துள்ளியெழப் பண்ணியது. பக்கத்திலிருந்த அலாம்குளொக்கில் மஞ்சள் நிறத்தில் நேரம் ஐந்து மணியென்று காட்டியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது.
யாராயிருக்கும் இந்த நேரத்தில் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாகக் கதவைத் தட்டுவது (இடிப்பது)?.
பக்கத்தில் படுத்திருந்த கணவர் உலகம் தலைகீழானாலும் அது தெரியாமல் குறட்டைவிடுபவர்;, அவரும் பட படவென கதவு தட்டுப்படும் ஆரவாரத்தில்.பவானி சட்டென்று துடித்தெழுந்ததின் அதிர்ச்சியில் கண்விழித்து,’ என்ன.. என்ன நடக்கிறது?’ என்று தூக்கக் கலக்கத்தில் கேட்டார்.
‘எனக்கு என்ன தெரியும்?…கெதியாய்க் கீழே போய் என்னெண்டு பாருங்கோ’.
அவள் அவரைப் பார்த்துச் சொன்னாள்,அவள் குரலில்,இந்த நேரத்தில் யார் இப்படிக் கதவைத் தட்டுகிறார்கள் என்ற பயம் அவரை அவசரப் படுத்தியது..
அவர் முணுமுணுத்துக்கொண்டு கீழே வந்தார்
அவளும் அவசரமாகத் தன் ட்ரெசிங்கவுணைப் போட்டுக் கொண்டு தடதடவென்று அவரைத் தொடர்ந்தாள். அடுத்த அறையிலிருந்த மகள் நித்தியாவும் கண்களைக் கசக்கிக் கொண்டு ‘ என்னம்மா நடக்கிறது’ என்று அரைகுறை நித்திரைக் குரலிற் கேட்டாள். ‘தெரியாது, யாரோ கதவைத் தட்டுகிறார்கள் போல கிடக்கு’. அவள் விரைந்தாள். நித்தியாவும் அவள் அணிந்திருந்த நைட் கவுணுக்கு மேல் ட்ரெசிங் கவுணைப் போட்டுக் கொண்டு தாய்,தகப்பனைத் தொடர்ந்தாள்..
கதவைத்திறந்தால் இருபோலிசார்,காலையிருளில் பூதங்கள் மாதிரி நின்று கொண்டிருந்தார்கள். வீpட்டுக்குக் கொஞ்ச தூரத்தில்,ரோட்டில் சிவப்பு லைட் போட்ட ஒரு போலிஸ்கார் நின்று கொண்டிருந்தது.
அதிகாலையில் வந்து போலிசார் கதவைத் தட்டினால் அவர்கள,;ஆழ்ந்த நித்திரைக் கலக்கத்திலிருக்கும் திருடர்களை,அல்லது கொலைகாரர்களை,அல்லது பயங்கரவாதிகளைப் பிடிக்கவருகிறார்கள் என்று அர்த்தம். அதுவுமில்லாவிட்டால், விபத்தில் இறந்து விட்ட உறவினர்கள் பற்றிய துக்கச் செய்திகளைச் சொல்லவருகிறார்கள் என்று தெரியும்
‘ ஐயைய்யோ எனது பையன்களுக்கு ஒன்றுமில்லையே’ அவள் போலிசாரிடம் கேள்வி கேட்டாள்.குரலில் பதட்டம் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
அவர்களின் ஒரு மகன் போர்மிங்காம் என்ற நகரில் வேலை செய்கிறான். அடுத்தவன் சினேகிதர்களுடன் ஸ்கொட்லாந்துக்க ஹொலிடேய் போயிருக்கிறான். அவர்களுக்கு ஏதும் விபத்து நடந்து விட்டதா?
போலிசார் அவளை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு’ நாங்கள் மார்ட்டின் ஹியுஸ் என்பவரைப் பிடிக்க வந்திருக்கிறோம் அவர் உங்கள் வீட்டில் மறைந்திருப்பதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன’.
ஆராய்ச்சிக் கண்களுடன் அலசும் போலிசாரின் கண்கள் தங்கள் முன்னால் பயத்தில் பேதலித்துப் போய் நிற்கும் அந்தக் குடும்பத்தை எடை போட்டன.
என்ன இவர்கள் சொல்கிறார்கள்? யார் இவர்கள் குறிப்பிடும் மார்ட்டின் ஹியுஸ்? அவனை நாங்கள் எங்கள் வீட்டில் மறைத்து வைத்திருக்கவேண்டும்?
கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.
‘யார் மார்ட்டின் ஹியுஸ்’கணவர் போலிசாரிடம் கேள்வி கேட்டார்.
போலிசார் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
‘மிஸ்டர் ஹியுஸைத் தெரியாத மாதிரி பாசாங்கு பண்ணவேண்டாம். அவர் உங்கள் வீட்டில் விருந்து சாப்பிட்டிருக்கிறார்’ போலிஸ்காரன் இறுக்கமான குரலில் சொன்னான். இவர்கள் ஒத்துழைக்காவிட்டால் அவர்களுடன் போலிஸ் காரில் வந்திருக்கும் ‘அதிரடிப்படையை’ இவர்கள் வீட்டுக்குள் அனுப்பி;த் தேடலைத் தொடங்க அவர்கள் தயங்கப் போவதில்லை என்பது அவர்களின் நடத்தையிலிருந்து வெளிப்பட்டது.
‘ பிளிஸ் ஆபிசர், தயவு செய்து நீங்கள் குறிப்பிடும் பேர்வளியை எங்களுக்கு எப்படித் தெரியும் என்ற சொல்லுங்கள்’ கணவர் தனது பதட்டத்தைக் காட்டாமல் கேட்டார் ஆனால் அவர் குரல் அசாதாரணமாக இருந்ததை அவர்கள் கவனித்தார்கள்.
‘ மிஸ்டர் ஹியுஸ் என்பவர் உங்கள் மனைவியுடன் ஒருகாலத்தில் ஒன்றாக வேலை செய்த லாரா மில்டன் என்பருக்குத் தெரிந்தவர். அவர் லாரா என்பருடன் உங்கள் வீட்டுக்கு உங்கள் மனைவியின் அழைப்பில் வந்திருக்கிறார்..எனவே உங்களுக்கு அவரைத் தெரியும். அவரை நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது’.
கணவர் மனைவியை முறைத்துப் பார்த்தார். ‘நீ தேவையில்லாமல் உனது ஆபிஸ் சினேகிதிகளுக்குச் சாப்பாடு போடுவதன் விளைவு இதா’? என்ற முறைப்பு அது. பவானிக்கு, போலிசார் தேடி வந்தவனை இப்போது ஞாபகம் வந்தது. லாராவின் சினேகிதனை, பவானிக்கு,’ மார்ட்’; என்று மட்டும் தெரியும் .மிஸ்டர் மார்ட்டின் ஹியுஸ் என்று தெரியாது.
அவள் தர்ம சங்கடத்துடன் போலிசாரைப் பார்த்து, ‘ எனக்கு அவர் பெயர் மார்ட் என்று என்னுடன் ஒருகாலத்தில் வேலை செய்த லாராவால் சொல்லப் பட்டது. அவர்கள் ஒன்றிரண்டு தரம் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.லாரா எப்போதோ வேறு வேலை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். அவளை நான் கனகாலம்; காணவில்லை. மார்ட்டை…சாரி மார்ட்டினை ஏன் தேடுகிறீர்கள்?;
பவானி உண்மை சொல்கிறாள் என்பது போலிசாருக்குத் தெரிந்ததோ என்னவோ,அவர்கள் அந்தத் தம்பதிகளை ஏற இறங்கப் பார்த்து விட்டு,’ அவன் தங்கள் குழந்தையைக் கடத்தி விட்டதாக அவருடைய பார்ட்னர் எங்களுக்குத் தகவல் தந்திருக்கிறார்.அதுதான் அவனைத்; தேடிக்கொண்டிருக்கிறோம். அவனைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக எங்களுக்கு அறிவிக்கவும்’.
‘யாரும் ஒரு தாயிடமிருந்து பிள்ளையைக் கடத்திக்கொண்டு வந்தால் அப்படியான ஒரு தரம் கெட்ட மனிதனை நாங்கள் மறைத்து வைத்திருப்போம் என்று நினைப்பது ஒரு வெட்கக்கேடான விடயம்’ நித்தியா போலிசாருடன் தர்க்கம் செய்தாள்.
அவளுக்கு இப்போது பதினாறு வயது. பெண்களின் சமத்துவம்பற்றிப் பல கேள்விககை; கேட்டுத் தாய் தகப்பனைக் குழப்புவள்.
போலிசார் தங்களுடன் அதிகாலையில் தங்கள் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும்; அந்த மொட்டழகை முறைத்துப் பார்த்தனர்.
‘நீங்கள் போலிசாரிடம் பொய் சொன்னால் என்ன நடக்கும் என்று உங்களுக்குப் புரியும்’ போலிசாரின் குரல் பரவாயில்லாமலிருந்தது. கதவைத் திறந்தபோது அவர்களிடமிருந்த அதிகார தோரணை கொஞ்சம் குறைந்திருந்தது. அந்தக் குடும்பத்தார் சொல்வதை அவர்கள் நம்புகிறார்கள் என்பது அவர்களின் தணிந்த குரலிற் பிரதி பலித்தது.
குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி சொன்னார்கள்.
போலிசார் போய்விட்டார்கள்.
நவம்பர் மாதக் கடைசி என்பதால்; விடிவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும்.
அதிகாலையில் வந்து தனது நித்திரை குழம்பிய ஆத்திரத்தில் பவானியின் கணவர் போலிசாரையும் திட்டியது மட்டுமல்லாமல்,லாரா போன்ற சினேகிதிகளை வைத்திருப்பதற்காகப் பவானியையம் திட்டி விட்டு இன்னொருதரம் படுக்கையில் விழுந்தார். அவர் ஏழமணிக்கு முதல் எழும்ப மாட்டார்.
பவானிக்கு இனி நித்திரை வராது. அவள் வழக்கமாகக் காலை ஐந்தரை மணிக்கு எழும்பிக் காலைக் கடன்கள் முடித்து, கடவுள் வணக்கம் செய்து விட்டுக் கணவருக்குச் சாப்பாடு தயாரிப்பவள்.
சமயலறைக்குள் வந்த நித்தியா,’ யாரம்மா இந்த மார்ட்டின் ஹியுஸ், அவனுக்கும் உங்களுடன் வேலை செய்த லாராவுக்கும் என்ன தொடர்பு, அவரின் பார்ட்னர் யார்?’ கேள்விக்கணைகள் தொடுக்கும் மகளை ஏறிட்டுப்பார்த்தாள் தாய்.
லாராவுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பா?
பவானி எப்படி அந்த விளக்கத்தை மகளுக்குச் சொல்வதாம்?
‘இப்போ..இதெல்லாத்தையும் பேசி அப்பாவின் நித்திரையைக் குழப்பாதே, நீ இதெல்லாத்தையும் தலையில போட்டுக் குழப்பாமல்ப் போய்ப் படு. நாளைக்கு ஆறுதலாகப் பேசுவோம்’ பவானி மெல்லமாகச் சொன்னாள் அதிகாலையில் அவளின் கணவரின் உறுமலைக்கேட்க அவள் தயாராகவில்லை.
நித்தியா ஏதோ முணுமுணுத்து விட்டு மேலே போய்விட்டாள்.
போலிசார் வந்து செய்த ரகளையில் பக்கத்து, முன்பக்கத்து வீட்டார்கள் தங்களை வேடிக்கை பார்க்கிறார்களோ எனறு பவானி அங்குமிங்கும் பார்த்தாள். நல்லகாலம்,அவர்களின் வீடுகளில் லைட் எரியவில்லை. இருளில் நின்று ஜன்னல்வழியாகப் பார்க்கிறார்களோ என்ற அவளுக்குத் தெரியாது. அவர்கள் கேட்டால் போலிசார் வீடுதவறி வந்ததாகச் சொல்லலாமா என்ற பவானி யோசித்தாள்.
பிரித்தானியப் போலிசார் வீடுதெரியாமல் வருவதாவது?
அதைப்பற்றி யோசித்துக் குழம்பிக்கொள்வதை விட பவானிக்கு,அவளுடன் வேலை செய்த லாரா மில்டன் பற்றிய யோசனை அவள் நினைவுகளை எங்கேயோ இழுத்துச் சென்றது.
லாரா மில்டன் பவானியின் ஆபிசில் ஒருகாலத்தில் அவளுடன் வேலை செய்த மிக அழகிய ஆங்கிலப்பெண்.
பவானி வேலை செய்த லோகல் கவர்ன்மென்டின் ஒரு பெரிய டிப்பார்ட்மென்டில் பலர் வேலை செய்த காலத்தில் பவானிக்கு லாராhவைத் தெரியும். காலையில் வேலைக்குப் போகும்போது தனது அழகிய சிரிப்பால் ‘குட்மோர்ணிங்’ சொல்லி வரவேற்பாள்
லண்டன் லோகல் கவர்ன்மென்ட் டிப்பார்ட்மென்ட் என்றபடியால்அங்கு பல நாட்டைச் சேர்ந்தவர்களும் வேலை செய்தனர்.பெரும்பாலனோர் சினேகிதமாக ஒருத்தருடன் பழகிக் கொள்வார்கள். தங்கள் போர்த் டே, திருமண வீடுகளுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்குமளவுக்குச் சில சினேகிதங்கள் வளரும்.
ஆபிசுக்குப் பலகார வகைகள்,கொண்டுவரும் ஒரு சில பெருந்தன்மையான பெண்களில் பவானியும் ஒருத்தி. ஆபிசில் யாருக்கும் பிறந்தநாள் என்றால் பவானியும் ஏகப்பட்ட சாப்பாட்டு வகைகளைச் செய்து கொண்டு போவாள்.
அதனால் பவானிக்குப் பலரின் சனேகிதம் கிடைத்திருந்தது. ஓன்றிரண்டுபேர் அவள் வீட்டுக்கும் வந்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒருத்தி லாரா மில்டன்
அவள் அழகி மட்டுமல்ல, தனது கல கல என்ற பேச்சால் அவள் பலரின் சினேகிதியானாள்.அவளுடன் பழகுபவர்களைக் கவர்வதிற் கைதேர்ந்தவள்
ஆபிசர்களின் ஓய்வறையில் பலதையும் பத்தையும் பற்றிப்பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலர் தங்கள் குடும்பத்தைப்பற்றி, குழந்தைகள், ,சினேகிதர்கள்,கணவர், பார்ட்னர், காதலர்கள் பற்றிப் பேசிக் கொள்வதும் சாதாரண நிகழ்ச்சி. பவானிக்கு இரு பையன்களும் ஒரு பெண்ணும.;பவானி எப்போதும் தனது குழந்தைகளைப் பற்றிப் பேசுவாள்.
ஆபிஸ் வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் ஒரு பல்கலைக்கழகத்திற்குப் போவது போன்றது என்று சில வேளைகளில் பவானி நினைப்பாள்.
அடிக்கடி டிப்பார்ட்மென்ட்டில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். சில வேளைகளில் அங்கு வேலை செய்யும் உத்தியோகத்தர்களை,அவர்களின் குறிப்பிட்ட உத்தியோகத்தின் மேன்பாடுகளை விரிவாக்கும் செமினார்களுக்கு அனுப்புவார்கள். அங்கெல்லாம் பலவிதமான மக்களைச் சந்திப்பதும் சில வேளைகளில் அவர்களிற் சிலருடன் மனம் விட்டுப் பேசும்போது தெரிந்து கொள்ளும் பல தரப்பட்ட கலாச்சார, பண்பாடுசார்ந்த விடயங்களும் பவானியைச் சிந்திக்கப் பண்ணும். அவள் இலங்கையில் படித்த ஒரு தமிழ்ப் பட்டதாரி.
கணவருடன் லண்டனுக்கு வந்து, உத்தியோக தேவைக்காகத் தன் ஆங்கில அறிவை மேம்படுத்தி, இன்று ஒரு லோகல் கவர்மென்ட் டிப்பார்ட்மென்டில் வேலை செய்கிறாள்.
லண்டனுக்கு வந்தபின், உலகின் பல்வேறு மக்களையும் ஒன்று படுத்திய ஒரு குடும்பம்போல் லண்டனின் அரச நிர்;வாகம் இயங்குவது, இனரீதியாகப் பாதிக்கப் பட்டு வந்த அந்த தமிழ்ப் பெண்ணுக்கு ஆச்சரியமாக, சந்தோசமாகவிருந்தது. ஆனாலும், லண்டனில் அவள் காணும் பல் வேறுபட்ட வாழ்க்கை முறை சில வேளை தர்ம சங்கடத்தைத் தந்தது.அவள் வாழ்ந்த கலாச்சாரக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைமுறைகள் அவளை வியக்கப் பண்ணின. பவானிக்கு,அந்தத் தர்ம சங்கட உணர்வுகளையுண்டாக்க லாராவும் ஒரு காரணம்ஃ
லாராவுடன் பழகத் தொடங்கியபோது. அவளுக்கு இருபத்திமூன்று வயதென்றும், பதினாறு வயதிலிருந்து அடிக்கடி தனது பாய்பிரண்டுகளை மாற்றிக் கொள்பவள் என்றும் அவள் பேச்சிலிருந்து தெரிய வந்தது.
பவானி தனது இருபத்தி நான்காவது வயதில்,ஓரளவுக்கு அவளுக்குத் தெரிந்தவரைத் தாய் தாய் தகப்பன் தெரிவு செய்ய அவரைத் திருமணம்; செய்து கொண்டு அடுத்த வருடம் லண்;டனுக்கு வந்தவள்.
‘வாழ்க்கையில் செற்றிலாக வேண்டும் என்ற ஆசையில்லையா?’ எனறு பவானி லாராவைச் சகோதர பாசம்; கலந்த ஆதரவுடன் கேட்டபோது, லாரா அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.
‘அப்படி ஒரு ஆசையும் இப்போதைக்குக் கிடையாது..வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்’ என்றாள்
வாழ்க்கையை அனுபவிப்பதா? ஏவ்வளவு காலத்துக்கு?
அப்படியென்றால் திருமணமான பெண்கள் வாழ்க்கையை அனுபவிக்கவில்லையா?
பவானிக்கு இந்த மேற்கத்திய, வாழ்க்கை, செக்ஸ் பற்றிய சித்தாந்தங்கள் சிலவேளை புரிவதில்லை.
இருவரும் ஒருநாள் மதியச் சாப்பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது, லாரா ஏதோ யோசித்துக் கொண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டும் வந்தாள்.
‘ என்ன பிரச்சினை..வேலையை விடப்போகிறாயா?’ பவானி கேட்டாள். அடிக்கடி தனது பாய்பிரண்டுகளை மாற்றுவதுபோல் தனது வேலையையும் மாற்றிக் கொள்பவள் என்று அவளைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் அறிவார்கள்.
லாராவைப் பற்றி ஓரளவு தெரிந்த பவானி. லாராவிடம் கேட்ட கேள்விக்கு,’ம்.ம் அக்காவின் பாய்பிரண்ட் மாதிரி ஒருத்தன் எனக்குக் கிடைத்தால் என்னைப்போல் சந்தோசப்படுபவர்கள் இந்த உலகத்தில் யாருமிருக்க மாட்டார்கள்’ என்ற பெருமூச்சு விட்டாள்.
லாரா ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்ற பவானிக்குப் புரிந்தது.
‘அப்படி என்ன பெரிய ஆணழகனா உனது தமக்கையின் காதலன்?’ பவானி அப்பாவித் தனமாகக் கேட்டாள். லாரா கனவுலகத்திலிருப்புதுபோல், கண்களை அரைகுறையாக மூடிக்கொண்டு,’ அவன் அழகன் மட்டுமல்ல..அறிவானவன்,..கவர்ச்சியானவன்.. பல நாடுகளுக்குப் போனவன்,பல கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டவன் நிறைய விடயங்கள் தெரிந்தவன். அவனுடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அவனோடு பழகும் எந்தப் பெண்ணுக்கும், வாழ்க்கையில் ஒருநாளாவது அவனுடன் இணையவேண்டும் என்ற ஆசை வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று கிசுகிசுத்தாள்.
பட்டப் பகலில்,ஆபிஸ் சாப்பாட்டு மேசையில் அக்கம் பக்கமெல்லாம் பலரிருக்கும்போது, லாரா தன் சொர்க்கலோகக் கண்ணோட்டத்தில் அவளின் தமக்கையின் காதலன் பற்றி விபரித்தது பவானிகுத் தர்மசங்கடமாகவிருந்தது.
‘லாரா நீ அழகான பெண் ஒருநாளைக்கு உனக்கு விருப்பமான ஒருத்தனைச் சந்திப்பாய்.அவன் உனது தமக்கையின் அற்புதக் காதலன் மாதிரியில்லாவிட்டாலும் உன்னை மனமார விரும்புவனாக, உன் அழகையும் கல கலவென்ற சினேகிதத் தன்மையையும் இரசிப்பவனாக இருப்பான்’ பவானி ஒரு தாய்போல் லாராவுக்குப் புத்தி சொன்னாள்.
அது நடந்து சில கிழமைகளின் பின் பவானி சுகவீனம் காரணமாக இரு கிழமைகள் வேலைக்குப் போகவில்லை. ஆபிசிலிருந்து ஒரு சிலர் அவளை வந்து பார்த்து குசலம் விசாரித்தனர். ஓரிருவர் ‘கெட் வெல்’ கார்ட் அனுப்பியிருந்தார்கள்.
‘நான் உனது வீட்டுக்கு வந்தால் உனக்குப் பிரச்சினையாயிருக்குமா?’ என்று போனில் கேட்டாள் லாரா.ஆங்கிலேயர்கள் அழையாத விருந்தாளிகளாக வருவது கிடையாது.
‘அப்படி ஒன்றுமில்லை.. நான் பெரும்பாலும் பழைய நிலைக்கு வந்து விட்டேன். அவர் வேலைக்கும் மகள் கொலிச்சும் போனபின் தனியாயிருக்க போரடிக்கிறது.’ என்று சொன்னாள் பவானி.
‘அப்படியானால்,நாளைக்க வரட்டுமா? அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயரும்,எனது சனேகிதியைப் பார்க்கப்போக லீவெடுத்திருக்கிறேன். அவள் மத்தியானச் சாப்பாட்டுக்கு வரச் சொன்னாள்.. அவளின் வீடு நீயிருக்கும் இடத்திலிருந்து அதிகம் தூரமில்லை.’ லாரா பட படவென்று சொன்னாள்.
பவானிக்கு அவள் வருவது பிடித்திருந்தது. ஓவ்வொருநாளும் ஒரு ஒழுங்கான வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நாட்கள் தன் பாட்டுக்கு, தனக்கு விருப்பமானவர்களைச் சந்திப்பது பவானியைச் சந்தோசப் படுத்தியது.
லாராவுக்கு பவானி ஆபிசுக்குக்கொண்டுபோகும் பலகார வகைகள் பிடிக்கும்.
பெரும்பாலான இளம் பெண்கள் தங்கள் எடையைச் சமநிலையில் வைத்திருக்க இனிப்பு வகைகளை எட்டிப்பார்க்காத காலகட்டத்தில், இந்திய இனிப்புகளை விரும்பிச் சாப்பாடும் லாராவை ஆச்சரியத்துடன் பார்த்தவர்கள் அநேகம்.
லாரா வந்தாள். தனியாக வரவில்லை. வாட்டசாட்மான ஒரு ஆணழகனை அழைத்துக் கொண்டு பவானியைப் பார்க்க வந்தாள். இந்த மாதிரி ஒரு கவர்ச்சியான மனிதன் இவளின் கரங்களை இணைத்துக்கொண்டு வரும்போது ஏன் லாரா தனது தமக்கையின் ‘அற்புதமான’ காதலர் பற்றிப் பெரு மூச்ச விடுகிறாள் என்பது பவானிக்கு விளங்கவில்லை.
அவனைப் பார்த்தால் பிரித்தானியாவில் சமுதாய படிநிலைகளில் தரம் பார்க்கும் இரண்டாம், மூன்றாம் வர்க்கத்தைச் சேர்ந்தவனாகத் தெரியவில்லை.
அதாவது பிரித்தானிய சமுக வரைவிலக்கணத்தின்படி அரச குடும்பமும் அவர்கள் சார்ந்த பிரபுக்கள் நில உடமையாளர்கள் முதற் தரம். இரண்டாவதாக, சமுதாயத்தால் மதிக்கப் படும் கல்வித் தகைமையுள்ள டாக்டர்கள்,பேராசிரியர்கள், அடுத்ததாகப் பணம் படைத்த வியாபாரிகள், தொழில் நுட்பவாதிகள், அடுத்ததாக, சரியான தொழிற் திறமையுள்ளவர்க்கள் கடைசியாக, அடிமட்ட வேலை செய்பவர்கள் என்று பார்க்கப் படுகிறது.
லாராவின் சினேகிதன் வாய்திறந்து பவானிக்கு ‘ஹலோ’ சொன்ன விதத்தில் அவன் லாராவை விட மிக மிக உயர்ந்த நிலையிலிருப்பவன் என்று பவானிக்குப் புரிந்தது.
அவன் பெயர் மார்ட் என்று அறிமுகப்படுத்தப் பட்டான் .பவானி தனது பெயரைச் சொன்னதும் பாவனி எனறு ஏதோ தடுமாறி உச்சரித்தான்.
பவானி கொடுத்த லட்டுவை ஏதோ வித்தியாசமான விதத்தில் பார்த்து விட்டு மெல்ல ஒரு கடி கடித்தான். பெரும்பாலான பிரித்தானிய இளம் தலைமுறையினர், இந்திய உணவுகளை விரும்புவர்கள் பிரித்தானிய தேசிய உணவுப் பட்டியலில் ‘ கறி;யும்’ இடம் பெற்றிருக்கிறது.
சனிக்கிழமைகளில் ‘வார விமுறைச் சந்தோசங்களில்’ இந்திய டான்டோரிக் கோழி மிக மிக முக்கிய இடம் வெற்றிருக்கிறது. சப்பாத்தியும் நாண்பிரட்டும் நுழையாத ஆங்கில வீடுகள் ஒருசிலவே.
மார்ட் பவானி கொடுத்த லட்டுவைப் புதினமாக ரசித்தான். இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்களுடன் அவனுக்கு அதிகம் பரிச்சயமில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
தனது சினேகிதன் இப்போதுதான் இந்திய உணவுகளில் பரிச்சயமாகிறான் என்று லாரா பெரிய சந்தோசத்துடன் பவானிக்கு அறிவித்தாள்.
ஓரு லட்டில்ப் பாதியாகச் சாப்பிட்டவன் இந்தியச் சாப்பாட்டில் இப்போதுதான் பரிச்சயப் படுகிறானாம்!
அவனை உன் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழையேன் என்று மறைமுகமகச் சொல்வதைப் புரியாத முட்டாளில்லை பவானி.
அவளை அவனுடன் சாப்பாட்டுக்கு அழைப்பது பிரச்சினையில்லை. ஆனால் அவள் கணவருக்கு, வெள்ளைக்காரப ;பெண்கள் ‘கண்ட பாட்டுக்கு’ சினேகிதர்களை அடிக்கடி மாற்றுவது மிகவும் கேவலமான விடயம். அவர் நித்தியா இருக்கும்போது ஆங்கில சினிமாப் படங்களையும் பார்க்கமாட்டார். மகளுக்கு முன்னாலிருந்துகொண்டு டி.வியில் வரும் முத்தக் காட்சிகளைப்பார்க்கத் தர்ம சங்கடப் படுவார். அவரைப் பொறுத்தவரையில் அதெல்லாம் ஆபாசமான விடயம். அப்படியானவர், லாரா வந்தால் அவளின் ‘பாய்பிரண்ட’ பற்றியும் எப்போது அவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கத் தயங்கமாட்டார்.ஆனாலும் லாரா மறைமுகமாகக் கேட்டுக்கொண்டபடியால் அவளை அவளின் சினேகிதனுடன், விருந்தாளியாக அழைத்தாள்
நித்தியா பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்த ஒரு சனிக்கிழமை, பவானி.எதிர்பார்ததுபோல் தனது சினேகிதன் மார்ட்டையும் கூட்டிக் கொண்டு வந்தாள் லாரா.
லாரா மிகவும் செக்ஸியாக உடுத்திருந்தாள்.அவனுடன் நெருங்கிக் கொண்டு கிட்டத்தட்ட அணைத்தமாதிரி உட்கார்ந்திருந்தாள்.
மார்ட் பவானியின் கணவருடன் அளந்து பேசினான் முன் பின் தெரியாதவர்களுடன் அதுவும் அந்நியருடன்,; வள வளவென்று பேசுவது பெரும்பாலான
ஆங்கிலேயர்களிடமில்லாத பழக்கம். மார்ட் என்ன வேலை செய்கிறான் .அவனுடைய பின்னணி என்னவென்று, சாதாரண தமிழர் அணுகலில் பவானியின் கணவர் துளைத்த கேள்விகளுக்கு அவனிடமிருந்து திருப்தியான பதிலில்லை என்பது பவானியின் கணவரின் அதிருப்தியான முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டாள்.
‘சரியான தலைக்கனம் பிடித்த இங்கிலிஷ்காரன்’ பவானியின் கணவர் அவனுக்குத் தெரியாமல் பவானியிடம் தமிழில் முணுமுணுத்தார். கல கலவென்ற லாராவின் சுபாவத்திற்கும் அவனது அடக்கமான( அகங்காரமான(?) போக்குக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
உறைப்பு குறைத்த, ஆங்கிலேயர்களுக்காகச் செய்யப்பட்ட இந்தியச் சாப்பாடுகள். லாரா ஒவ்வொரு தட்டிலுமிருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்தாள்.அவளுக்கு உறைப்பு ஒத்து வராது என்று பவானிக்குத் தெரியம். மார்ட் மரியாதைக்காக ஏதோ சாப்பிட்டான். வழக்கம்போல் அளந்து பேசினான், அளந்து சாப்பிட்டான், சரியான நேரத்தில் அவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்க லாரா,’குட்பை பவானி’ சொல்லி விட்டு நாகர்ந்தாள்.
போகும்போது அவனை இறுகி அணைத்தபடி லாரா மிக மிகச் சந்தோசமாகச் சென்றாள். அவன் அவளை முத்தமிட்டான். அவர்களின் இணைவும் அந்த நெருக்கமான முத்தங்களும் பாவனியின் கணவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள். பொது இடங்களில் காதல் கனிந்து முத்தமிட்டுக் கொள்ளும் வெள்ளையினத்தவரைக் கண்டால் உலகத்துப் பெண்களின் கற்பு காற்றில் பறந்துவிட்டதாகக் கவலைப் படுபவர் பவானியின் கணவர். அதுவும் தன் வீட்டு முற்றத்தில் நடக்கும் காமலீலையைச் சகிக்க அவரால் முடியவில்லை.
‘இவர்கள் இருவரும் இரு துருவத்தைச் சேர்ந்தவர்கள்..அழகான லாராவுக்கு இந்த அகங்காரம் பிடித்தவனில் என்ன வென்று காதல் வந்ததோ’ பவானியின் கணவர் மார்ட் என்பவனிலுள்ள தனது வேண்டாவெறுப்பைக் கொட்டினார்.
‘ அவன் அகங்காரம் பிடித்தவன் என்று ஏன் சொல்கிறீர்கள். முன்பின் தெரியாதவர்களுடன் ஆங்கிலேயர்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்று தெரியாதா?’ பவானி தன் அபிப்பிராயத்தைச் சொன்னாள்.
‘லாரா நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி, இத்தனை ஸ்மார்ட்டான மனிதனைக் காதலனாகக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும், இத்தனை கம்பீரமான ஆணழகனைக் கையில் வைத்துக்கொண்டு உனது அக்காவின் காதலன் பற்றிக் கனவு காண்பது ரொம்பவும் பைத்தியக்காரத்தனம் என்றும் லாரவுக்குச் சொல்லவேண்டும் என்று பவானி நினைத்தாள்.
அத்துடன்,இந்த மார்ட் என்பன் யார்? அவனின் பின்னணி என்ன என்று பவானி லாராவைக் கேட்கவும் நினைத்திருந்தாள் ஆனால் ஆபிசில் லாராவைக் கண்டபோது அவள் அவசரமாக எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தாள் அப்போது, தனது பேர்த்டே பார்ட்டிக்குத் தனது ஆபிசிலிருந்து சிலரைத் தனது வீட்டுக்கு அழைப்பதாகவும் பவானியும் கட்டாயம் வரவேண்டும் என்று சொன்னாள்..
லாரா இன்னொரு வேலை தேடிக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தியும் கசிந்ததால், இந்தப் பார்ட்டி ஒரு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்ற பவானி நினைத்தாள்.
‘இது உங்கள் ஆபிஸ் பெண்களின் பார்ட்டி நான் வரவில்லை’ என்று பவானியின் கணவர் சொல்லி விட்டார்.
ஆபிஸ் சினேகிதிகளுடன் லாரா வீட்டுக்குப்போய் ஒரு சில வினாடிகளில்,அங்கு நடக்கும் காட்சிகளைக் கண்டு பவானிக்குத் தலை சுற்றியது.
மார்ட் அங்கே இன்னொரு பெண்ணை நெருக்கமாக அணைத்து முத்தமிட்டபடி பேசிக் கொண்டிருந்தான்.
‘ஹலோ பவானி, இது எனது அக்கா டையானா இது அவளின் காதலன் மார்ட்’!
லாரா வெகு சாதாரணமான குரலில் பவானிக்கு அவர்களை அறிமுகம் செய்தாள்.
அக்காவின் காதலனா மார்ட்?
அன்று அவனுடன் பவானியின் வீட்டுக்கு லாரா வந்தபோது பகிரங்கமாகக் காதற் சேட்டை செய்ததெல்லாம் அக்காவின் காதலனுடனா?
பேயடித்தமாதிரி வெளிறிய பவானியின் முகத்தை மிக மிகக் கவனமாக அவதானித்த டையானா,’ நைஸ் ரு மீட் யு பவானி’ என்று கரம் கொடுத்தாள். மார்ட் வெறும் ஹலோ சொல்லிக் கொண்டான். பவானியின் வீட்டுக்கு வந்து லட்டு சாப்பிட்ட சினேகித பாவம் ஒன்றும் அவன் முகத்திற் கிடையாது.
பவானிக்குக் கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை.அவளுடன் வந்த ஆபிஸ் சினேகிதிகளிடமும் கேட்கமுடியவில்லை. லாராவையும் மார்ட்டையும் ஒன்றாகக் கணடிருந்தால்,அவர்களில் ஒருசிலரும் அப்படி ஆச்சரியமடைந்திருப்பார்களா?
இது என்ன ஒருத்தியின் காதலனை இன்னொருத்தி கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.நல்ல காலம் பவானியின் கணவர் வரவில்லை. வந்திருந்தால் அந்த மனுசன் ஏதோ தாறுமாறகத் திட்டத் தொடங்கியிருந்தாலும் ஆச்சரியமில்லை.
பார்ட்டி ஆரவாரமாக நடந்து கொண்டிருந்தது.
மேசையில் பல வகைக் குடிபானங்களும் சாப்பாடுகளும் வாரிக் கிடந்தன.
பவானி தனதுமனதில் சுவாலை விடும் ஆத்திரத்தைத் தணித்துக்கொள்ள ஆரேன்ஞ் சாற்றை அவசரமாகக் குடித்தாள்.
பார்ட்டி நடக்கும் வீட்டுத் தோட்டத்தில் பல தரப்பட்ட மனிதர்கள்.ஆண்கள் பெண்கள் கல கலவெனப் பேசிக் கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும், பாடலுக்கு ஆடிக்கொண்டும் பார்ட்டியை அமர்க்களமாக்கிக் கொண்டிருந்தார்கள்.லாரா தன் சினேகிதிகளுடன் ஆடிக்கொண்டிருந்தாள்
மார்ட் வெளியே போய் யாரோடோ பேசிக் கொண்டிருந்தான். பவானியின் பார்வை அவனில் பதிந்து கிடந்தது. லாராவையும் அவனையும் சுற்றி அவள் நினைவு வலைபோல் விரிந்து குழப்பியது.
‘ஹலோ பவானி’ குரல் வந்த திரும்பிய பவானிக்கு லாராவின் தமக்கை டையானா நின்று கொண்டிருந்தாள்.
டையானா,மிகவும் உயர்ந்த வளர்ந்த ஒல்லிப்பெண்.லாரா மாதிரி அழகு கொட்டாவிட்டாலும் அவளின் முகத்தில் ஒரு அலாதியான தாய்மை தவழும் அழகு.மரியாதை கொடுத்துப்பழகவேண்டும் என்ற உந்துதலைத் தன்பாட்டுக்கு வரப்பண்ணியது.
‘அவனுடன் எனது தங்கை உன் வீட்டுக்கு விருந்து சாப்பிட வந்ததாக அறிந்தேன்’ டையானாவின் குரலில் இருந்தது கோபமா அல்லது உனக்கு எனது தங்கையைப் புரியாது என்ற எச்சரிக்கையா?
பவானியால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
‘எனது தங்கை எனக்குச் சொந்தமானவற்றைத் தனதாக்கிக் கொள்ள நினைப்பதில் கெட்டிக்காரி’ டையானா பவானியின் மனதில் விரியும் குழப்பங்களுக்குப் பதில் சொல்வதுபோல் மெல்லமாகச் சொன்னாள்.
பவானி பதில் சொல்லத் தர்ம சங்கடப்பட்டாள்.
‘ தன்னுடன் வந்தது எனது அக்காவின் காதலன் என்ற கடைசி வரைக்கும் உனக்குச் சொல்லவில்லை என்பது நீ வந்தவுடன் உனது முகத்தில் வந்த அதிர்ச்சியிலிருந்து புரிந்து கொண்டேன’ டையானாவின் குரலில் சோகம். பவானி ஒன்றும் பேசவில்லை. அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஓரு தமக்கை, தனது காதலனைத் தன் தங்கை பறித்தெடுப்பதுபற்றிப் பேசுகிறாள்!
‘நான் எங்கள் மாமி சுகவீனமாகவிருந்ததால் சில கிழமைகள் வின்செஸ்டர் நகருக்கும் போயிரு;தேன். வெளி நாடுபோயிருந்த மார்ட்அந்த நேரம் லண்டனுக்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி அவனைத் தன்னுடையவன் மாதிரி மற்றவர்கள் நினைக்கப் பண்ணியிருக்கிறாள்’ டையானா, பவானி எதுவும் கேடகாமல் அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது டையானா எவ்வளவு தூரம் லாராவால் அவமானப் படுத்தப் பட்டிருக்கிறாள்,லாராவில் ஆத்திரமாக இருக்கிறாள் என்பதைப் பிரதிபலித்தது.
‘ டையானா, எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. நான் சுகமில்லாதிருந்தபோது என்னைப் பார்க்க லாரா வந்திருந்தாள். அவளுடன் வந்தது உன்னுடைய சினேகிதன் என்று தெரியாது.’பவானி மென்று விழுங்கினாள்.
‘ தெரிந்தாலும் நீ என்ன பண்ணலாம்.. யார்தான் என்னபண்ணலாம். அவள் அழகானவள், செக்ஸ் விடயத்தில் ஆண்கள் மிக மிகப் பெலவீனமானவர்கள் என்பது அவளுக்குத் தெரியும். அதிலும், வசதியான மார்ட் போன்றவர்கள் உலகம் தங்களுக்கான விளையாட்ட்டு மைதானமாக நினைக்கிறார்கள். வயது வந்த இருவர் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் உறவு வைத்துக்கொள்வதை யாரும் தடுக்கமுடியாது. …’டையானா பேசிக்கொண்டேயிருந்தாள் யாரிடமாவது தனது துக்கத்தைச் சொல்லியவேண்டும்போல் அவள் பவானியிடம் தனது வாழ்க்கையின் சிக்கலை அவிழ்த்துக்கொட்டினாள்.
மார்ட் தன்னை ஏனோதானோ என்று நடத்துவதானால் ஏன் டையானா அவனுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறாள்?
பவானிக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘ ஐ ஆம் சாரி டையானா’அதற்குமேல் என்ன சொல்வது என்று பவானிக்குத்தெரியாது.
பவானி வேலைக்குப்போய் லாராவைச் சந்தித்தபோது,லாரா எதுவுமே நடக்காததுபோல் வழமையான கலகலப்புடனிருந்தது பவானிக்கு அவளில் ஆத்திரத்தை மட்டுமல்ல ஒரு வித அருவருப்பையும் உண்டாக்கியது. பவானி லாராவுடன் முகம்கொடுத்துப் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கி விட்டாள்.
லாரா அதன்பின் சில நாட்களில் வேறு வேலை எடுத்துக்கொணடு போய்விட்டாள்.இவ்வளவு நடந்தபோதும் அவனின் முழுப் பெயர் மார்ட்டின் ஹியுஸ் என்று பவானிக்குத்; தெரியாது.
ஆனால் அக்காவின் காதலனைத் தன்னுடையவனாக்கும் தன்னலம் கொண்ட லாராவின் சுயநலம் பவானியை ஆத்திரம் கொள்ள வைத்தது.
சினிமாக்களில் வரும் ஒரு அழகிய நடிகளைத் தன் காதலனாகக் கற்பளை செய்வது ஒரு பெண்ணின் குழந்தைத்தனமான கற்பனையாகவிருக்கலாம்.ஆனால் ஒரு வயிற்றிற் பிறந்த உடன்பிறப்பின் அந்தரங்க உறவை அசிங்கமாக்கும் லாரா போன்றவர்கள் ஏதோ மனநோய் பிடித்தவர்களா என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டாள் பவானி.
இதுபற்றிக் கணவரிடமோ நித்தியாவிடமோ அவள் மூச்சு விடவில்லை. நித்தியா, லாராவைக் குற்றம் சொல்லாமல்,இருபெண்களின் அந்தரங்க ஆசைகளுக்குத் தீனிபோடும் மார்ட்டைத் திட்டுவாள். அல்லது, தாயினால் முழுக்கவும் அங்கிகரிக்கப்படாத ஆண்கள் தாங்கள் சந்திக்கும் பெண்களிடம் தங்களின் ஆளுமையை நிலைநிறுத்த எதுவும் செய்வார்கள் என்று விளக்கம் தரலாம்
பவானியின் கணவரோ ஒழுக்கமற்ற மேற்குலகத்தைப் பற்றிக் கதாப்பிரசங்கம் வைக்கத் தொடங்கி விடுவார்.
அதன் பின்?
இன்று அதிகாலையில் போலிசார் வந்து தொல்லை கொடுக்கிறார்கள்
‘இழவு பிடிச்ச சனங்கள் எப்படி வாழ்ந்து தொலைப்பது என்று தங்களையும் குழப்பி எங்களையும் குழப்புதுகள்’பவானியின் கணவர் காலைக்கடன்கள் கழிக்கமுதல் மற்றவர்களை (வெள்ளையர்களை)த் திட்டத் திட்டத் தொடங்கி விட்டாh.
பவானி அதிகம் பேச்சுக் கொடுக்காமல் தனது வேலைகளை முடித்து விட்டு ஆபிஸ் சென்றாள்.அவள் மிகவும் குழம்பிப்போயிருந்தாள்.
லாராவின் நெருங்கிய சினேகிதி வலரி பிரவுணை, மதியச் சாப்பாட்டு வேளை கன்டீனிற் கண்டபோது, காலையில் தங்களை போலிசார் விசாரிக்க வந்ததைப் பற்றிச் சொன்னாள்.
‘எங்கள் வீட்டுக்கும் வந்தார்கள்’ வலரி பிரவுண் பெண் எரிச்சலுடன் சொன்னாள்.
‘அது மட்டுமல்ல லாராவின் இன்னும் மூன்று சினேகிதிகள் வீட்டுக்கும் போலிசார் போயிருக்கிறார்கள்..ஒரேயடியாகப் பல வீடுகளை அதிரடிச் சோதனை செய்ய எவ்வளவு ஆயிரத்தைச் செலவளித்திருப்பார்கள் தெரியுமா, இதெல்லாம அந்த கர்வம் பிடித்த லாரவால் வந்த வினை லாராவின் காதல் விளையாட்டுகள் அவளுக்குச் சாதாரணமாகவிருக்கலாம் அதற்காக நாங்கள் ஏன் போலிசாரால் விசாரிக்கப்படவேண்டும்?’. வலரி பிரவுண் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தாள்.
‘என்ன நடக்கிறது என்று தெரியுமா?’பவானி பெருமூச்சுடன்; கேட்டாள்.
லாரா தனது இரகசியங்களை வலரி பிரவுணுக்குக் கட்டாயம் சொல்லியிருப்பாள் என்று பவானி நம்பினாள். வலரியின் கரட் கேக் சாப்பிடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவள் லாரா. இனிப்பை விரும்பும் இந்த இளம் பெண் இவ்வளவு கசப்பான விடயங்களைச்செய்வதைப் பவானியால் புரிந்து கொள்ள முடியாது.
‘ லாராவிடமிருந்து எப்படியும் மார்ட்டைப் பிரித்துத் தன்பக்கம் வைத்துக்கொள்ள டையானா ஒரு முட்டாள்த்தனமான காரியத்தைச் செய்தாள் அதுதான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம்’
‘என்ன முட்டாள்த்தனமான காரியம்?’ பவானி ஆர்வத்துடன் கேட்டாள்.
‘மார்ட் பெரிய நிலச்சொந்தக்காரர் பரம்பரையில் வந்தவன்.அவன் தாய்க்கு இவன் எந்தப் பெண்ணைப்பார்த்தாலும் அவள் தங்கள் அந்தஸ்துக்குச் சரியில்லை என்று ஒதுக்கி விடுவாளாம். அவன் அந்தக் கொடுமையில் சலித்துப்போய் அடிக்கடி பாரிஸ், வெனிஸ்,ரோம் என்று ஏதோ ஒரு இடத்துக்கு சந்தோசம் தேட ஓடிவிடுவானாம்.பாரிசில் அவனுக்கு ஒரு பிளாட்டும் வைத்திருக்கிறான். கப்பல் மாலுமிக்குக் கரை தட்டுமிடமெல்லாம் காதலிகள் இருப்பதுபோல் அவனுக்கும் பல சினேகிதிகள் பல நகரங்களில் இருக்கிறார்கள் போல கிடக்கு” வலரி தனது கோபத்தை மறந்து சிரித்தாள்.
அப்படியான அலைவு மனம் கொண்டவன் டையானாவிடம் என்னத்தைக் கண்டான.;? டையானாவைப் பார்த்தால் மிகவும் அடக்கமான், பண்பான வாழ்க்கையை நாடுபவளாகத் தெரிந்தாள். லாராவுக்கும் அவளுக்கும் எத்தனையோ வித்தியாசம் என்று பவானி தனக்குள் நினைத்திருக்கிறாள்.
பவானி தனக்குள் நினைத்ததை வலரியிடம் கேட்டாள்
‘என்னவென்று மார்டடின் டையானா போன்ற மிகவும் அமைதியான பெண்ணிடம் உறவு கொண்டான்?’
வலரி தான் வெட்டிக் கொண்டிருந்த கரட் துண்டை முள்ளுக் கரண்டியில் எடுத்தபடி, பவானிக்குப் பதில் சொன்னாள்..
‘ டையானா, பொதுச் சேவைகளில் அக்கறையுள்ளவள் ஆபிரிக்கக் குழந்தைகுளக்கான ஸ்தாபனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அவள் பாரிஸில் நடந்த மகாநாட்டுக்குப் போகும்போது விமானத்தில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அவளின் தாய்மையான குணம் அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவனுக்கு அவனின் தாயிடமிருந்து கிடைக்காத அன்பை டையானாவிடம் கண்டிருக்கலாம். அதைத்தொடர்ந்து காதல் வந்தது. அவளைப் பார்க்க அடிக்கடி லண்டன் வந்துபோனான்.
காதல்போதையில் டையானா போன்ற பெண் தனது குழந்தைக்குத் தாயாய் இருந்தால் சந்தோசப் படுவேன் என்று புலம்பியிருக்கிறான். டையானாவின் வாழ்க்கையில் தன்னலம் கொண்ட லாரா குறுக்கிட்டு மார்டடினுடன் தொடர்பு உண்டாக்கியதை அறுக்க, டையானா, மார்ட்டுக்குச் சொல்லாமல் தாய்மையடைந்து விட்டாள்.
உனக்குத் தெரியும்தானே, பெரும்பாலான ஆங்கிலேயர்கள் தங்கள் சந்ததி வளர்ச்சி பற்றி மிக மிகக் கவனமாக இருப்பார்கள். அவனுடன் கலந்தாலோசிக்காமல் டையானா கர்ப்பம் வந்ததைக் கேள்விப் பட்ட அவன் தாய் ஆத்திரத்தில் அவனைத் திட்ட, மார்ட் அவளுடன் தொடர்பை அறுத்துவிட்டானாம்’ வலரி தொடர்ந்தாள்.
‘இந்த அநியாயமெல்லாம் லாராவினால் வந்த வினை’ வலரி இன்னுமொருதரம் லாராவைத் திட்டினாள்.
‘குழந்தை பிறந்ததும், அம்மாவுக்குப் பிள்ளையைக் காட்டவேண்டும் என்று சொல்லிப் பிள்ளையைக் கொண்டுபோன மார்ட் பிள்ளையுடன் தலை மறைவாகி விட்டான்.இதெல்லாம் லாராவின் திட்டம் என்று டையானா நினைக்கிறாள்’ வலரி சொன்னாள்.
‘லாரா ஏன் டையானாவிள் குழந்தையைக் கடத்திச் சொல்லி அவனுக்குச் சொல்லவேண்டும்’; பவானி அப்பாவித்தனமாகக் கேட்டாள்.
‘ அய்யோ பவானி, உனக்கு லாராவைச் சரியாகத் தெரியாது. தனக்குப் பிடித்ததை எப்படியும் தனதாக்கிக் கொள்ளத் தயங்கமாட்டாள். பொல்லாதா தன்னலம் பிடித்த பேராசை கொண்ட சில அரசியல்வாதிகள் மாதிரி அவள் அழகாகப் பேசுவாள், நன்றாக நடிப்பாள். ‘உன்னை ஒரு பேயன் என்ற நினைத்துத்தானே உன்னுடன் கலந்தாலோசிக்காமல் டையானா கர்ப்பம் அடைந்தாள்.அவள் உன்னுடன் பழகுவதும்,உனக்குச் சொல்லாமல் கர்ப்பமானதும், உன்னிடமுள்ள பணத்தில் பங்கு போடத்தான்’ என்றெல்லாம் அவனுக்குச் சொல்லி அவனை லாரா மிகவும் குழப்பி விட்டாள். அவன் தன்னைத்தான் உண்மையாகக் காதலிப்பதாக இந்த லாரா எத்தனையோதரம் எனக்குச் சொல்லியிருக்கிறாள். அதுபோல் டையானாவுக்கும் சொல்லியிருக்கிறாள்’
வலரியின் குரலில் ஆத்திரம்.
‘என்னவென்று ஒரு தங்கை தனது தமக்கையின் வாழ்க்கையைக் கெடுக்கலாம்’ பவானி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.
‘ லாரா ஒரு சோசியோபாதிக் பெண்.அவளுக்கு எது பொய் எது உண்மை என்பதைப் பற்றிக் கவலை கிடையாது. தனக்கு விரும்பியதை எப்படியும் தடடிப் பறிக்கத் தயங்காதவள். உனக்குத் தெரியுமா பவானி, நீயும் நானும் லாராவுக்குத் தகுந்த அழகன் மார்ட் என்று சொன்னதாக டையானாவுக்குச் சொல்லியிருக்கிறாள். அவர்களைக் காதலர்களாக அங்கிகரித்து எங்கள் வீட்டுக்கு விருந்தினராக அழைத்ததாக டையானாவிடம் புழுகியிருக்கிறாள். அதுதான் டையானா போலிசாரிடம் எங்கள் பெயர்களைச் சொல்லியிருக்கிறாள். டையானாவைப் பொறுத்தவரையில் லாராவும் மார்ட்டும் தனது பிள்ளையுடன் உலகத்தில் ஏதோ ஒரு மூலைக்கு ஓடிவிடப்போகிறார்கள்,அதற்கு நாங்கள் உதவி செய்வதாக அழுகிறாளாம் என்ன பரிதாபம்’;
பவானி வாயடைத்துப்போயிருந்தாள்.இப்படியம் ஒரு காதலா அல்லது இது லாராவின் அடக்கமுடியாத காமவெறியா? அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இவர்களின் முக்கோண திசைக் காதலால் தாயின் அன்பும் அணைப்பும் பராமரிப்புமின்றிக் கடத்தப்பட்ட டையானாவின் குழந்தையில் பவானி பரிதாபப்படுவதைத் தவிர அவளால் வேறொன்றும் செய்ய முடியாது.அந்தக் குழந்தை தாயின் உண்மையான அன்பில்லாமல் வளர்ந்த இன்னொரு மார்ட்டினாக வளரலாம்.எத்தனையோ பெண்களுக்குத் துயர் கொடுக்கலாம். எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறதோ யார் கண்டார்கள்?
(யாவும் கற்பனையே)
நல்லா உறக்க சொன்னீா் ஆங்கிலேய கலாச்சாரத்தை
நல்ல இலங்கைத் தமிழ் நடை…….
இது கதையல்ல……..
நிகழ்வுகளின் பதிவு………
வாழ்த்துக்கள்……
நாடகத்தமான முடிவு இல்லாமல் நல்ல முடிவுதான்.
ஆனாலும், கதை முடிவடையாமல் தொக்கி நிற்பதாகவும் ஒரு உணர்வு தோன்றுவதையும் தடுக்க இயலவில்லை.
நல்ல நடை.
கிட்டத்தட்ட Cultural Conflict போல இரு கலாசாரங்களின் சலிப்பான சந்திப்பை அருமையாக கோடிட்டுக் காட்டி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மரு.கோ.பழநி .